Wednesday 25 December 2019

ஏன் பிறந்தாய்


ஒருவன் கேட்டான் , பைத்தியம் பிடித்த பிசாசே என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றாய் , எதற்கு எங்கள் கண் முன்னே வந்து இப்படி தொங்கிக்கொண்டிருக்கின்றாய்

இன்னொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டது கையில் கொஞ்சம் சக்கரம் அது தருவதற்கு வக்கில்லை

மற்றொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டதோ பிணி நீங்கி சிறு சோறு அதற்கும் வக்கில்லை

அருகில் ஒருவன் கேட்டான் , இப்பொழுதாவது அன்புள்ள பிணங்களை எழுப்பி விட மாட்டாயா

பின்னாலிருந்து ஒருவன் கேட்டான் , இனி அவர் திரும்ப வந்து தேவராஜ்ஜியத்தை துவக்குவாறா , செரி நாம் துவக்குவோம்

மாக்டலீன் பதறி ஓடினாள் , தான் அவனின் வாய்மொழியில் கேட்டதை கூற

அம்மா அவன் காதுகளை பொத்திக்கொண்டு , அவன் இனியாவது தூங்க ஆனந்தத்தில்  தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள்.

கண்ணே நீ நிம்மதியாய் உறங்கு!

Saturday 21 December 2019

எதற்கும்

நண்பர்களே என்னை நம்பாதீர்கள் அதற்கு பாத்திரமானவன் இல்லை நான்.
சகோதரனே என்னைப்பற்றி நீ என்ன நினைகின்றாய் ?
குழந்தைகளே நீங்கள் பிறக்காமல் இருந்திருக்கலாமே ?
ஈசல் மக்களே என்னை காணுற்றவனாக ஆக்கிவிட மாட்டீர்களா ?
அன்னையே என்னைத்தேடாதே நான் உனைவிட்டு விலகி வந்து நாட்கள் ஆகின்றன.
மனைவிவே நீ என்னைப்போலவே இருந்துவிடு.
காலமே சற்றும் ஓவ்வெடுக்காமல் சீக்கிரம் முடிந்து விட மாட்டாயா ?

Sunday 24 November 2019

ஒரு குறிப்பு

ஒருவிதத்தில் பாரத்தால் இருவருமே ஒரே வழியில் பயணிக்க அனுப்பப்படடவர்கள்.
இருவருமே விசுவாசிகள். இருவருமே உடலை மையப்படுத்தி தன் வாழ்க்கையை நடத்த நினைத்தாலும் உடலைத்தாண்டிய ஒன்றை அவனிடம் கண்டுகொண்டிருக்கலாம் அது அவர்களை துணுக்குறசெய்திருக்கலாம்.ஒருவன் குழந்தையின் ராஜ்ஜித்தை கொண்டுவரநினைத்தான். இன்னொருத்தன் குழந்தையாகவே மாற நினைத்தானோ என்னவோ. இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் மஞ்சள் சூரியன் அவனை ஏற்கனவே குழந்தையாக்கிருந்தது. ஆனால் இன்னொருத்தனுக்கு காத்திருந்தது வெண்நிற  இரவுகள் அந்த காதல் அவனை குழத்தையாக்கியது அவன் அதனை கனவு மட்டுமே கண்டான் என்பது இன்னும் வருத்தத்துக்குரிய செய்தி.சொல்லப்போனால் இருவருமே சபிக்கப்படட வாழ்வை சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். நாம் சபிக்கப்படடவர்கள் என்பதை முழுதுமாய் உணர்ந்து அதன் மூலம் தன்னை பெருமை படுத்திக்கொண்டவன் என்று ஏனக்கு வெண்ணிற இரவுகளில் நடமாடியவை நினைக்க தோன்றும் ஆம் அவன் திமிர் பிடித்தவன்.

ஆனால் மஞ்சள் சூரியனோ அவனை சிந்திக்கவே  விடாமல் கழுத்து வளைத்தும் உற்றுநோக்கும் ஒரு சிறு குழந்தையை இல்லை அதன் கையில் இருக்கும் சூரியகாந்தியை போல் ஆக்கியது எனக்கென்னவோ இவனே எலும்பும் தோலுமாய் தொங்கும் நம் நண்பனின் கால்களை சிலுவையை யில் இருக்கும் போதே தாங்க இன்னும் தகுதியானவன்.

Saturday 26 October 2019

குருதிப்பால்

ஓ வானத்து மழை மேகங்களே என் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதா.
ஓ மரங்களில் ஆடும் பறவைகளே என் குழந்தையின் கிறீச்சிடல் கேட்கிறதா
ஓ ஆழத்து மண் உயிர்களே என் குழந்தையின் பாதத்தடம் தெரிகிறதா.
கடவுள்களின் தொகையே கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.
என் அன்னையின் குருதிப்பால் மூடி நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

தயவு செய்து எங்குழந்தையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கால்களில் விழுகிறேன்.

Tuesday 22 October 2019

முப்பரிமாணம்

கனரக வாகன சாலையின் சப்தத்தில் நான் சப்தமில்லாமல் நடந்திருந்தேன். வழிக்காட்டி பலகைகள் இல்லா சாலையில் வாகனங்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கி சுற்றிக்கொண்டிருந்தன.
நான் வெறித்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலம் எனை பிடித்து தள்ளியது.
ஆறு பக்கம் கண்ணாடியுடைய அறையினுள் , நான் கண்டடைகிறேன் எனை எங்களை அவளால்.

Friday 18 October 2019

கதை

அந்த தூய மிருகம் உங்கள் காதுகளை நக்கிக்கொஞ்சி பின் நடக்கும் போது அதன் வால் பிடித்து பின்சென்று விடுங்கள்.
அவை அழைத்துச்செல்லும் காடு நீங்கள் ஊகிக்க முடியாத துக்கம் மறுக்க முடியாத மகிழ்ச்சி தவிர்க்க முடியாத தனிமை கொண்டது.
ஆனால் அதுவே நாம் என்றும் கனவுகளில் கடவுளர்களிடம் வேண்டுவது. சென்றுவிடுங்கள் நண்பர்களெ எப்பொழுதும் அவை வாலாட்டி நம்முன் வருவதில்லை.

Sunday 2 June 2019

அதிர்ஷ்ட விளக்கு

வானம் மண்ணின் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்தது.
நான் அனுபவித்து நடந்து சென்றிருந்தேன். துணைக்கு என்னுடன் கோடி மனங்களுடன்.
கூட்டத்திலிருந்து தனித்த  நகக்கண் அளவுள்ள பறவை ஏவுகணைகள் இடைவெளி வழி
அதிர்ஷ்டம் விளக்கு காட்டிட பறந்து சென்றிருந்தது.
பிறகொரு நாள் வீட்டினில் தனிமையில் அமர்ந்து பாத்திரம் கழுவுகையில் பிரார்த்திக்கிறேன்
"அவன் பத்திரமாக பறந்து சென்றிருக்க வேண்டும்" 

Saturday 30 March 2019

அலைகள்

அதன் வடிவமற்ற வடிவத்தை நான் கவனிப்பதுண்டு அதனை பகுத்தறிய முனைந்ததுண்டு.

நான் தனிமையில் இருக்கையில் காண்கிறேன் நீரின் மேல் மிதந்து சென்ற அவள் கோடி கால்தடங்களை.

அதன் சிரிஷ்டி கர்த்தா என் நீண்ட பெருமூச்சுகளின் சிறு சலனங்களோ?

Wednesday 20 March 2019

எதிரே

தட்டையான முழு நிலவின் அடியில் என்ன இருக்கும் என்று நான் துழாவியதுண்டு .
பச்சையும் நீலமும் கலந்த வண்ணம் மெல்லிய சலனத்துடன் அசைந்து கொண்டிருக்கும்.
ஆனால் அதன் அடியில் தான் கரிய இருட்டும் பள்ளிலித்துக்கொண்டிருக்கின்றது.
அதன் வெண்மை நிஜம் தானா ?
இது நகைப்புக்குரியதா ?

ஒற்றை மெழுகுவர்த்தி

ஆம் நாம் இங்கு தனிமையிலே இருக்கின்றோம்.

கோடி தூரம் தாண்டி எங்கோ ஓர் எல்லையில் ஓர் உயிர் நமக்காக எங்காதா என்ற தனிமையின் வெறுமையில்.

ஒவ்வொரு அணுவும் அதற்கே உன்டான தனிமையில் சுழல்கிறது.

என்றும் தனிமையின் குதூகலத்தில் தெரியும் வெண்பந்து இன்று எனக்காவோ இல்லை அதற்காவோ கரிய வானில் ஒற்றை மெழுகுவர்த்தி போல வழிகிறது.

Friday 15 February 2019

காலாதீதம்

தைரியமாக குதிக்கின்றேன் தினம் மலை உச்சியில் இருந்து.
கொடுங்காற்று சிதறடிக்கின்றது.
பேடியின் உச்சத்தில் நான் இருக்கின்றேன்.
கீழே அகளாபாதாலத்தில் கூரிய மூக்கு மலையும்.
பரந்து விரிந்து கிளை பரப்பிய கண்ணிமை மரங்களும்.
குறுக்கும் மறுக்கும் ஒடும் துல்லிய நதியும்.
போதையின் உச்சததில் குப்புற விழுகின்றேன்.
விழுந்த நொடியைவிட விழுகின்றதே காலாதீதம்.

பெண்டுலம்

நிலை கொள்ளாமல் அவள் இங்கும் அங்கும் பெண்டுலமாடிக்கொண்டிருந்தாள் தண்ணீர் தொட்டிக்கு பின்னால் ஒழிந்திருந்து எட்டி பார்க்கும் குழந்தையின் இரு கண்களுடன்.

முடிவற்ற கால வெளியில் நானும் அந்த பெண்டுலத்தை பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன் கீழே விழுந்தது விடாமல்.

Thursday 7 February 2019

புகுதல்

அன்றொரு நாள் நான் இருட்டினில் தனியாய் மின் விளக்கொளியில் நடந்ததுகொண்டிருந்தேன்.

முரட்டு வாகனங்கள் முட்டி மோதிக்கொண்டு செல்கையிலும் பேரமைதி.

நீலம் பாய்ந்து உடம்பெங்கும் குளிர்ந்தது.

வீட்டு வாசலில் அவளும் தனியாய் அதே அமைதியுடன்.

முதலில் புரியவில்லை பின்பு  எல்லாம்  புரிந்தது , கருவறை புகுந்ததில்.

சோப்பு நுரை

விளங்காத வார்த்தைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றேன் என்றுமே கிடைக்காததொரு பதிலைத்தேடி.

நான் எங்கும் இருக்கும் உயிர் தானா இல்லை உயிரே அற்ற ஜடப்பொருளா?.

அடங்காப்பேர் இருப்புடன் அலையும் நான் வெறும் சொற்குவியலில் கிடக்கும் கசக்கி எறியப்பட்ட காலி பைதானோ?

ஒன்று மட்டும் மிகத்தெளிவாக உள்ளது என்னதான் பேசி கிழித்தாலும் வெறும் சோப்பு நுரை தான் உச்சந்தலையினுள் உள்ளது , அதுவே நிதர்சனம்.


Sunday 3 February 2019

கழுத்துப்பட்டி

Joyeetajoyart (Instagram)
கனவுகள் என்றுமே நாம் நினைத்தைப்போல் இப்படி சொல்லலாம் நாம் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை.
சொர்க்க வாசலில் இருவரும் கைக்கோர்த்து நடப்பது போலவோ தனித்த சாலையில் இரு பக்கங்களிலும் மரங்கள் நடுவே நடப்பது போலவோ நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் நடந்தது என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். 
என் வீட்டில் அவள் தூணில் சாய்ந்து கையில் தட்டுடன் சம்மணம்போட்டு உட்கார்ந்து  கீரையோ என்னவோ நறுக்கிக்கொண்டிருந்தாள் உள்ளாடையுடன். அதே பச்சை மேல் சட்டை. 
கருத்த தடித்த அழகிய தொடைகள் அதில் தளும்புகளுடன் வெண்புள்ளிகள் நடுக்காட்டில் சமவெளியில் முளைத்த புற்களின் பசுமையுடன் இருந்தது. மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டே அவளின் கைகள் முயங்கிக்கொண்டிருந்தது. தோளில் உள்ளாடையின் பட்டி தெரிந்தது அதை மூட அவள் நினைக்கவில்லை. 
ஆனால் என் முழு சிந்தனையும் அதிலேயேதான் இருந்தது என்பது மறுநாள் எழுந்ததும் எனக்கு நன்றாகவே தெரிந்தது.

Saturday 26 January 2019

துயரம் எனும் உருண்டை

துயரம் தன் மொத்த உருவத்தையும் உருண்டையாக்கி உட்புகுந்துவிட்டது.
தன்னைத்தானே துயரம் என்று அறியாத அத்துயரம் உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் உள்ளிருந்து அத்துயரம் கால் நீட்டி வெளியே வந்தது.
ஏதும் எட்ட முடியாததொரு உயரத்திற்கு சென்று திரும்பும் தைரியம் இருந்தது அதற்கு.
சாத்தானின் கைவசம் கையளிக்கப்பட்ட அத்துயரம் கைநீட்டி அனைவரையும் அழைத்தது.
கைகொடுக்க ஒன்றும் இல்லாத சமயத்தில் பாழாய்ப்போன மலை உச்சியில் ஒன்றுமில்லாமல் தொங்கியது.
அத்துயரத்தின் நிழல் ஆதி துயரத்தின் மேல் விழுந்து எழுந்தது.
உட்புகுந்த துயரத்தை மீண்டும் தாங்கிக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி நடந்தாள்





Sunday 20 January 2019

தனிமை

                                                                                                                                                               
Red Beard Chobo
கிணற்றுக்கரையில் அவள் உட்கார்ந்திருந்தாள் மென்மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

எங்கும் பேரமைதி நிரம்பியிருந்தது.
கையிலிருந்த பொம்மையை கிணற்றில் தள்ளி துணை செய்தாள்.
இதுவே கடைசி இனிமேல் உனக்கு எதும் இல்லை என்று அம்மா பொரிந்தாள்.
அப்பா கிணற்றை எட்டிப்பார்த்து முறைத்தார்.
அன்றுதான் அவள் தலை தூக்கிப்பார்த்தாள்,
அவன் அங்கும் தனிமையிலேயே இருந்தான்.
அவளுக்குள் அவள் பொங்கிச்சிந்தும் குழாயடி குடமாக மாறினாள்
புழுதி கிளப்ப வண்டி கிளம்பியது.
மாதம் ஒருமுறை அவளை ஏங்கி அவன் ஊளையிட்டான்.

Tuesday 8 January 2019

அழுகிய பழங்கள்

மூக்கொழுகும் அழுகிய பழங்களை கண்டதுண்டா
அவை தேவையற்றவை என்று தெருவில் தூக்கியெறியப்பட்டவை
தோல் சுருங்கி பாதி காற்று போக மீதமிருப்பவை
அவை சாப்பாட்டு மேசையின் நடுவே அலங்கரிக்க வைக்கப்படுவதில்லை
சாலையில் அவரவர் கால் பட்டு சிலசமயம் அங்கேயே கூழாகியும்விடுகின்றன
அந்த அழுகல் வாடையின் அருகில் யாரும் உட்காருவதில்லை.
ஆனால் பச்சைப்பழங்களை பார்க்கையில் அதன் கண்கள் எரிவதை நான் பார்த்ததுண்டு ஒரு நாள் பேருந்தினுள் மொத்த பிரபஞ்சமும் புறக்கணித்த போதும் அழுகல்கள் முன்னும் பின்னும் நடந்தவாறே புலம்பிக்கொண்டிருந்தன. வீட்டிற்கு சென்றதும் முதலில் கண்ணாடியின் முன் நின்று முகத்தைப்பார்த்தேன் அழுகத்தொடங்கிய முகத்தில் சற்றே மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தது.




காதுகள்


அன்றொரு நாள் அவள் குட்டிப்பாவாடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு மென் மழைச்சாரலின் சாயல் எடுத்துக்கொண்டிருந்தாள். புற்களின் நுனிகள் மேகத்திற்கு போட்டியாக பெய்தமழையை திரும்பதர காத்திருந்தன. புற்களின் நடுவில் நீண்ட கட்டிப்புல் போல எட்டிப்பார்த்தன இரு காதுகள். அது அவளைப்பார்த்தது அவளும் அதைபார்த்துவிட்டாள். கணநேரத்தில் பூமியில் இருந்து ஆகாயத்திற்கு சென்று மீண்டும் வந்து சேர்ந்தாள். மழைவிழுங்கிக்கொண்டிருந்த அது அந்த பூகம்பத்தால் பயந்து அழுது உருண்டோடியது. அவள் முதலில் சிரித்தாலும் பின்பு அழுதாள். சிலுவையின் முன் மண்டியிட்டு மன்றாடினாள். கனவில் அந்த காது உருவத்தின் குடும்பம் தன் அம்மாவிடம் சொல்லி சண்டையிட்டனர் அந்த குட்டி காதுகளில் அடிபட்டிருந்தது. திரும்ப அவள் அந்த மின்விளக்கு கம்பத்தின் அருகில் செல்கையில் தன் ஐந்து வயது அண்ணனை அழைத்துச்செல்வதற்கு மறப்பதில்லை. அண்ணனும் ஒரு கைபார்த்து விடலாம் என்று சட்டைக்கையை மடக்கி விட்டுக்கொண்டான்.