Monday 28 December 2020

இருள்

தினமும் மாலை வீடு திரும்புகையில் வரும் குறுகுறுப்பு

காலையில் செய்து முடித்த அலுவல் வேலை 

அப்பா அம்மாவிற்கு வாங்கிய மாத்திரைகள்

அணைத்து இறுக்கும் மனைவி

மதியம் தின்ற பாறை துண்டு மீன்

அடிக்கும் உச்சி வெயில் 

குளிர்ந்தணைக்கு உச்சி நிலா

ஆடும் அணில் வால்

வெயிலில் காயும் நீர் காக்கை

கை கால் மூட்டு வலி

நிற்காமல் ஓடும் கடிகாரம்

செருப்பிலெழும் செம்புழுதி

அனைத்தையும் உண்டு விழுங்கும் குழந்தை 

உருவமற்று ஒரு முறையும் செதுக்கிய உருவத்துடன் மறுமுறையும் அலையும் மேகங்கள்

இவையனைத்தும் ஓர் இருண்ட அறையில் வடிவ பேதமற்று நிற்கையில் கைகொண்டு நான் அளைந்து எடுக்க ஒன்றுமில்லை

வெறும் இருள் தேவையற்ற பொருளற்ற இருள் அறிந்து கொள்ள முடியா இருள்

வெளிச்சம் வந்தது மீண்டும் காலையில் மேற்சொன்ன அனைத்தும் உயிர் பெற்றன அர்த்த பூஷ்டியுடன் 

Thursday 24 December 2020

தளிர்

 தளிர் பாதங்கள் நடந்து நடந்து தோய்ந்திருக்கின்றன.


பாலையின் வெம்மையில் அவை பிளவுண்டு மணல் புகுந்து தவிக்கின்றன


அவை நீர் நிறைந்த தடாகமொன்றை தேடியலையும் பாலைப்பாம்பென தடங்களுடன் ஊர்கின்றன 


முந்தெய காலத்து தளிர் பாதங்கள்.


எங்கு சென்றால் அந்த விடாய் தீர்ந்து குளிர்ந்து அந்த பிளவுகள் மூடுமென அவனுக்கும் தெரியவில்லை


பாதைகள் சிக்குண்டு கிடக்கின்றன


நெடுந்தொலைவில் தெரிந்த பொன் கூடாரத்தை நோக்கி நடந்தன தளிர் பாதங்கள்


விடாய் தீரும் எத்தனிப்பில் நடை ஓட்டமாக பாதங்கள் புடதியில் மணலை வாரியடித்தன


வழியில் முன்பே எரிந்து கருத்த எலும்புகளின் நுனிகள் பதைப்பைக்கொடுத்தன


இப்பொழுது மிக அருகில் தெரிந்தது உயர்ந்த பொன் கூடாரமான நெருப்பு நா


நாவின் இரட்டை பிளவுகள் ஆசைந்து துடித்து கொஞ்சலுடன் அழைத்தன அவன் பெயர் சொல்லி


"மண்ணில்  மரியாளின் உதிரத்தில் விந்துவேறி பிறந்த என் மகனே வா என்னருகில்...."


நிற்காமல் ஓடி மறுபக்கம் வருகையில் முழு நிர்வாணமாக நின்றான்.


அந்த தடாகம் இன்னும் வெகு தூரத்தில் விடாய் தீர்க்க அவன் வருவானென எண்ணி கண்ணீர் வடித்தது.

Sunday 13 September 2020

பறவையில்லை

மலைகள் சிறுத்து குறுகி நின்றன

நான் மேலே பறக்கையில்

நதிகள் வெருண்டு தன் கோட்டு நீருக்குள் ஒளிந்தன

நான் மேலே பறக்கையில்

சிதறிய பொம்மைகளேன கட்டிடங்கள் ஆவென்றன

நான் மேலே பறக்கையில்

ஆனால் தரையிறங்கி வந்தாகவேண்டும்

இறக்கைகள் சுருக்காமல்

மெங்காலடியெடுத்து வைக்காமல்

இறங்கி நிற்கையில் முன்புபோல் அவையில்லை

தற்பொழுது என் தலைக்குமேல் பறக்கும் குருவிக்கு மட்டுமே தெரியும்

அவற்றின் என்றுமுள உருவம்

நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்

பாவம் நான் பறவையில்லையே!

Friday 11 September 2020

முரட்டு மகிழ்ச்சி

 சுழலும் பைக்கின் நடுவாய் முழுநிலா

அடுத்த நொடி தேய்ந்தடங்க தாமதமின்றி

வலி உருக்கிட குறுகியோடும் பின்மண்டை குருதி

அதில் முகர்ந்தலையும் வண்ணத்துப்பூச்சி

மொட்டைத்தலை வருடும் மென்காற்று

அவன் குருதி நக்கும் அவன் வளர்ப்பு நாய்

கிடப்பவனை அவனே பார்க்க

நாயும் அவனும் குருதிச்சிதற விசும்பளந்தாட

முற்றிலும் முரட்டு மகிழ்ச்சி

Saturday 22 August 2020

சாத்தியமே

கடவுள் ஒளிந்திருக்கும் இடம் நிரம்பியுள்ளது

தேடுவது சாத்தியமே

கிடைப்பதும் சாத்தியமே

எனக்கொன்றும் உனக்கொன்றுமாய்

கோடித்துளிக்கடவுள்

தேடிக்கிடைக்கையில்

அவன் கைகளில்

நூறாவது காலி கொக்ககோலா டின்

அன்றைக்கான நூறாவது கடவுள்

கிடப்பதும் சாத்தியமே

தேடுவதும் சாத்தியமே

உனக்கும் எனக்கும்

Friday 21 August 2020

நிசப்தம் - சிறுகதை

1.

"யவட்டி இவ , சொன்ன நேரத்துக்கு அங்க போகாண்டாமா நல்ல ஆட்டிட்டு வந்துட்டா , சவத்தெழவு" என்று பொங்கினார் பேருந்துக்குக்காத்திருந்த மேஸ்திரி

"டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று காற்றை உறுமிய படியே சென்றன இருசக்கர வாகனங்கள்.

"காலைல அம்மைட்ட செரியான அடி கேட்டியா" என்றான் ஒரு சிறுவன்.

"பொறவு" என்றான் கூட வந்தவன்

"பொறவென்ன நைஸா  ஒர்ருவாய அடிச்சுமாத்திட்டு வந்தாச்சி"

"கிரீட்ச் கிரீட்ச்" என்றது பறவை

"ஆய்ய்ய்ங்க் ஆய்ய்ய்ய்ங்க்" என்றது இடுப்பில் இருக்க மறுத்த குழந்தை

"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று மரம் காற்றுக்கு உறுமியது.

"சிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று சருகுகள்  சாலையில் உருண்டன.

"ம்ம்ம்மா....." என்று கதறியவாறே கன்று பசுவை நோக்கி துள்ளிச்சென்றது.

இவையனைத்தும் நடந்து கொண்டிருக்க , அமைதியாக மரத்தின் பின் தனித்திருந்தது பேருந்து நிழற்குடை. அதன் மூலையில்  கூரையை பார்த்துக்கொண்டிருந்தது பிறந்து சில தினங்களே ஆண் குழந்தை. அருகில் ஓர் சூலி நாய் குட்டிப்போட காத்து படுத்திருந்தது. குழந்தை தன் கைகால்களை ஆட்டியது ஆனால் ஒலி எழுப்பவில்லை இன்னதென்று எதையும் கேட்டு உற்று நோக்கவுமில்லை , அதனால் இருக்கும் தடம் சுற்றியிருந்த எவருக்கும் தெரியவில்லை. நாய் அவ்வப்போது குழந்தையை நக்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை நக்கி முடிந்ததும் குழந்தை மெல்ல தன் உதடுகள் விரிய புன்னகைத்துக்கொண்டிருந்தது.

பின்னொருநாள் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணொருத்தி அவனுக்கு தினமும் முலைகொடுக்க ஆரம்பித்தாள். "மண்டைக்கு வழியில்லாத கேஸாக்கும்" என்று ஊர்மக்கள் அப்பெண்ணை கூறிவந்தனர். அவளை அவன் "ம்மா" "ம்மா" என்று  அடித்தொண்டை அதிர்வாய் மட்டுமே அழைத்தான். எட்டு வயது வரை அவன் முலையருந்த்தியதாக ஊர் மக்கள் கூறியிருந்தர். பத்து வயது வரை அவன் பேசியது "ம்மா" என்ற ஒற்றைசொல்லாகவே இருந்தது. மொழி அவனுள் அவ்வழியே விளைவு கொண்டிருந்தது.

அவள் இறந்த பிறகு அவனை பிற மனிதர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. இடுங்கிய தெருக்கள் நிரம்பிய அந்த ஊரில் நாய்களுடன் அவன் வளர்ந்தான் , அன்னைகள் இட்ட குப்பையமுதம்  தின்று சென்றது வாழ்க்கை. உணர்ச்சிகளற்ற மிருகம் போலிருந்தவனை சில சமயம் கயிற்றில் கட்டிப்பொட்டு கூவிச்சிரித்தனர் அவன் வயதொத்த சிறுவர்கள். பலபுலனில்லா அவனை அனைவரும் முண்டன் என்று அழைத்தனர்.

மெலிந்து இறக்கும் தருவாயில் "ம்மா ம்மா" என்று கதறியவனின் குரல் கேட்டு அவனை அருகிலிருந்த சில காட்டுநாயக்கன் தெரு மக்கள்  நெருங்கித்தூக்கினர். நல்ல உடல் வலிமையுடன் அவன் இருந்திருந்தானெனில் அவனுக்கு முலைகொடுத்த அப்பெண்ணைத்தவிர எவரையும் அவன் அணுக விட்டிருக்கமாட்டான். அவளின் பால்முலை வாசனையை அதன் ஸ்பரிசத்தை தவிர எதையும் அவன் அணுக விட்டதில்லை.

"மக்கா லே பாக்க எலும்பாட்டுருக்கா அனா மொரட்டு கனம் கேட்டியா" என்று ஒருவன் சலித்துக்கொண்டான்.

பக்கத்து ஊர் குன்னுவெளை தேவாலயத்தின் திண்ணையில் கொண்டு கிடத்தியவுடன் இடுப்பிலிருந்த துண்டை அவிழ்த்து  வியர்வையை துடைத்துக்கொண்டனர்.

"சாமீ....சாமீ....." என்று பாதிரியாரை அழைத்தான் ஒருவன்

"என்னடே இந்நேரத்துல வந்துருக்கீங்க , ஆருக்காது பிரசவமா" என்று கேட்டவாறு அங்கி சலசலக்க வந்தவர் முண்டனைப்பார்த்ததும். "இதாராக்கும் எங்கயோ பாத்தாமாரிலா இருக்கு" என்று குனிந்து பார்த்தார்.

கூட்டத்தில் ஒருவன் "இவன் நம்ம முண்டன் சாமீலா" என்றான் சிரித்தவாறே "பயலுக்கு காது கேக்காது கண்ணு முளி கிடையாது பேச்சும் வராது கேட்டெளா , ஆனா பய முகத்த பாத்தா அத்தன ஐசோர்யம்" என்றான்.

பாதிரியார் குனிந்து பார்த்தார். முண்டன் "ம்மா ம்மா" என்று முனங்கினான். "இந்த பயல எங்கனையாவது ஆஸ்பத்திரிக்கு  கூட்டிட்டு போனும் சாமீ தீர சுகமில்ல" என்றான் கூட்டத்தில் இன்னொருவன்.

அடுத்த நாள் விழித்ததும் அவன் ஆஸ்பத்திரியில் யாரையும் நெருங்க விடாமல் அங்குகிங்கும் ஓடி காயங்களுடன் மயக்கமாக படுத்திருந்தான்.

2.

வெண்மையில்லா கருமணி மட்டுமே நிரம்பியிருக்க மூடா இமைகள் ,  சிறுத்த காதுகள் , கீழ் உதடு பெருத்து வாய் பெரிதாய் அதன் முடிவில் முடிவிலா மடிப்பு, வயாதான நாயின் விரிந்த நாசி , குழிந்த கன்னங்கள் , முன் வழுக்கை , நீண்ட கை கால்முட்டி வரை அவன். அவனை உற்றுபார்த்தபடி அவள் அந்த படிப்பறையின் வாசலிலேயே நின்றிருந்தாள். அவன் அவள் நிற்கும் திசையைப்பார்த்ததும் அவனருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் சென்றமர்ந்தாள்.

இருவரும் தங்கள் கைகளைத்தொட்டு பேச ஆரம்பித்தனர். ஒவ்வொரு தொடுதலுக்கும் ஒவ்வொரு ஆங்கில எழுத்து என்ற வீதத்தில் நீர்த்திவலைகள் தெறிக்கும் அருவியென வார்த்தைகள் விழுந்து கொண்டெயிருந்தன. விலகி நின்று பார்ப்பவர்களுக்கு அது இரு குழந்தைகள் அவர்களுக்குள் மட்டும் முயங்கும் ஒரு விளையாட்டு போலிருக்கும்.

"எனக்கு நேரம் கொடுத்ததற்கு நன்றி அதிக நேரம் எடுத்துக்கொள்ளமாட்டென்" என்றாள் காயத்ரி

"நான் ஒரு பொருள் அல்ல , அது உனக்கு தெரிகிறதா"

"இல்லை எங்களுக்கு நீ ஒரு மூலப்பொருள்" என்றாள். இருவரும் சிரித்தனர். அவன் சிரிப்பு நிற்காத விக்கல் போலிருக்கும் முதலில் கேட்பவர்களுக்கு.

"உனக்கு தெரியுமா நீதான் உலகிலேயே உன்னைப்போலவே இருக்கும் ஒரே ஒருவன் என்று" 

"நான் உங்களைப்போல அல்ல என்பதும் எனக்கே தெரியும், " என்றான் நாற்காலியில் இருந்து எழுந்தவாறு

அவளும் கலவரத்துடன் எழுந்தாள்.

அவன் புன்முறுவலுடன் அமர்ந்து "நான் இங்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்றன , உங்களைப்போன்றவர்கள் நேற்று வந்து நாளை செல்ல போகிறவர்கள். என்னை ஓர் அரிய கருவியின் பாவத்துடன் அணுகுகிறார்கள். அதிலும் நீதான் முதல் பெண். அவர்களிடம் எனக்கு எந்த அக்கறையுமில்லை ஆனால் உங்களிடம் எனக்கு சில கேள்விகள் கேட்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கின்றது. கேட்கட்டுமா ? ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று சிரித்தான்.

மகிழ்ச்சியில், "நான் மட்டும்தான் ஆய்வு செய்கிறேன் என்று நினைத்தேன் தவறுதான் , கேளுங்கள்" என்றவாறு தன் மற்றொரு கையில் மடிக்கணிணியை குறிப்பெடுக்க எடுத்துக்கொண்டாள். அவள் கண்கள் இளமைக்கே உரித்தான குறும்புடன் காட்டுச்செடியின் இலையில் தங்கிய நீர்த்துளி போல தழும்பியது.

"எதைத்தேடி இங்கு வந்தாய்"

"நாங்கள்  மொழியியல் ஆய்வு மாணவர்கள் ,  மொழியின் ஆதி அதாவது அதன் வரிவடிவமும் ஒலி அமைப்பும் இணைந்து அதன் தோற்றத்திலிருந்து இப்போதிருக்கும் ஒழுங்கமைவுக்கு வந்த பரிணாமத்தை தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்"

"நல்லது , குறிப்பாக என்னை எதற்கு பார்க்கவந்தீர்கள்"

"மனித உயிர் அனைத்திற்கும் அதன் பரிணாம வளர்ச்சியில் மொழியும் ஒரு பகுதியாக வந்து சேர்ந்திருக்கின்றது என்பதை நான் நம்புகிறேன்" தயங்கி பின் யோசித்து "அந்த பரிணாமத்திற்கு நம் புலன்களே காரணம் என்ற பட்சத்தில் பார்க்கவோ , கேட்கவோ , பேசவோ முடியாத உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்யாசமே உங்களைத்தேடி வந்ததன் காரணம். என் ஆராய்ச்சியில் புதிய திருப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்"

"நல்லது , இதே கேள்வியுடன் எனைப்பார்க்க நாம்சாம்ஸ்கி வந்திருக்கிறார்  இன்னும் பலரும் சரி அது இருக்கட்டும். அடுத்த கேள்வி , இயலாமையை வெறுப்பைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நம்மால் இயலாதது என்று எதுவும் இல்லையென்றே நினைக்கிறேன் , என்ன அதனை செய்ய அல்லது அடைய கடின உழைப்பு அவசியமாகின்றது. வெறுப்பு நம் இயலாமையில் இருந்து பிறக்கின்றது , நம்மை தகர்க்கும் , நம் இயலாமையை உணர்த்தும் செயலை செய்யும் அனைத்தையும் நாம் வெறுக்கிறோம்"

"என் குறைகளை இயலாமையை என்ன நினைக்கிறாய்"

"நீங்கள் ஒரு, உங்களுக்கு" என்றவாறு தயங்கினாள் பின் தொடர்ந்தாள் "புலன்களை இழப்பவன் தன் மனதை ஆழ்வதற்கு அதனை கட்டுப்படுத்துவத்துவதற்கு இயற்கையிலேயே தகுதி வாய்த்தவன் , அது ஒரு வரம் என்று நான் நினைப்பதுண்டு , உலகின் அனைத்து புராணங்களிலும் நாம் மீண்டும் மீண்டும் காண்பது இதையே அருந்தவம் செய்வது ஒருவன் தன் புலங்களை அடக்கவே. அதன் பின்பே அவர்கள் கடவுளை காண்கின்றனர். நீங்கள் முற்பிறவியில் செய்த காரியங்களால் இங்கு புலன்களின்றி கடவுளின் அருகில் அமர்ந்திருக்கிறீர்கள்" என்று அவளின் குமிழுதடுகள் விரிய சிரித்தாள்

"நல்லது , உனக்கு எனக்கு வரும் கனவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"கனவுகள் வசீகரமானவை என்று எங்கோ பாடித்த ஞாபகம் , கனவுகள் மனிதனில் உருவாகும் ஒரு மாபெரும் கலைப்படைப்பு என்று நினைக்கிறேன் மொசார்ட்டின் இசைக்கோர்ப்பும் வான்கோவின் வண்ணங்களும் சேர்ந்தது போல. உளவியல் முறையில் நான் அவற்றை அணுகி அதன் பலங்களை அவதானித்திருக்கிறேன் என் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். ஒரே விதமான கனவுகள் பல உருவெளிகாட்சிகளுடனும். பல விதமான கனவுகள் ஒரே விதமான  உருவெளிகாட்சிகளுடனும் வருவதாக எனக்குத்தோன்றும். ஆனால் சில கனவுகள் மட்டும் திரும்ப திரும்ப வருகின்றன. அவை ஒழுங்கற்ற ஒழுங்கில் அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

உங்களுடைய கனவுகள் உருவெளிக்காட்சிகளற்ற ஒலிகளற்ற கருமை நிரம்பியதாய் இருக்கும். உங்கள் நனவிலியில் இருக்கும் வாசனை சுவையைத்தவிர உங்களுக்கு கனவில் ஏதும் வராது அல்லவா"

அதற்கு பதில் சொல்லாமல் "காமம் என்பது உனக்கென்ன" என்றான்.

அவள் பதற்றமின்றி "நான் உருவாக்கிவைத்து நான் முயங்கி நான் வெளிவரயிலா வெளியே காமம். புலன்கள் அனைத்தும் மோதிக்கொள்ளும் உச்சமே காமம் இதை போகிக்கும் புலங்களில்லா உலகில் திளைப்பதே காமம்  என்பதை ஞானிக்கும் வைத்துக்கொள்ள்லாம்" என்றாள்

"உணர்ச்சிகள் என்பது உனக்கென்ன"

"புலன்களின் முயக்கத்தால் நாம் சேகரித்துவைத்துள்ள அனைத்தும் நம் மூளையில் உள்ளன , அதனை பல சூழ்நிலைகளில் மீண்டும் முயங்க விட்டு நம் நனவிலி உருவாக்குவதே உணர்ச்சிகள்"

"நீ ஆய்வு செய்வதாக தெரியவில்லை , கற்பனை மட்டுமே செய்கிறாய்"

"ஆய்வு என்பதன் தொடக்கம் கற்பனைதானென்று நினைக்கிறேன்"

"நீ ஒரு பெண் இல்லையா"

"சந்தேகமா"

"உன்னை தொட அனுமதிப்பாயா"

அனுமதிக்கு காத்திருக்காமல் , அவளின் தலை மீது இரு கைகளையும் வைத்தான்.

"மென்வெம்மையுடைய தலை , கூந்தல் அடர்த்தியில்லாமல் மிருதுவாக நெளிந்திருந்தது. பெரிய நெற்றியின் கீழே இலை நரம்புகளென வளைவும் மென்மையுமாய் புருவங்கள். அங்குகிங்கும் ஓடித்துடிக்கும் அறியா ஒளிக்கோளங்கள். பெரும் அதிர்வுகளுடன் வளைந்த தடித்த பெரிய மூக்கு. இடக்கன்னத்தில் சிறிய குழியான தளும்பு. மென் மீசை மயிர்கள். கீழே கருஞ்சுழல்" பயத்தில் கையை வெடுக்கென்று எடுத்து விட்டான்.

அமைதியாக இருந்த அவள் "என்னவாயிற்று எதாவது பிரச்சனையா" என்றாள் அவன் கைகைளை அழுத்தி.

"இல்லை எனக்கு எப்பொழுதும் வரும் கனவு ஞாபகம் வந்தது. கனவில் நான் ஒரு பெண்ணை பெரிய வெளியென அறிவேன் ஆனால் அவளின் யோனியின் அருகில் சென்றதும் பயந்து விளித்துக்கொள்வென். உன் உதடுகளைத்தொட்டதும் அந்த யோனி ஞாபகம் வந்துவிட்டது"

அதிருப்தியாக இருந்தாலும் அவள் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. "நண்பர்கள் அழைக்கின்றனர். இது வெறும் சந்திப்புக்கான தொடக்கும் மட்டுமே. நாம் நாளை சந்திப்போம்" என்றவாறு எழுந்தாள்.

அறையின் வாசலில் நின்று அவன் செய்ககையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தலையயை மட்டும் திருப்பி பார்த்ததும் அகப்பட்டுவிட்டதைப்போல நடக்கலானாள்.

3.

"இன்று நான் கேள்விகளை கேட்கலாமா" என்றாள் காயத்ரி.

அந்த கைவிடப்பட்ட பூங்கா கல்லூரியின் இறுதியில் மரங்கள் ஒன்றோடொன்று இறுக அணைத்தபடி நின்றிருந்தன. பெரிய ஆலமரம் ஒன்று நடுநாயமாக வேர்ப்புடைப்புடன் விழுதுகள் தொங்க நின்றது. அதைச்சுற்றி புதர்கள் மண்டிய நடைபாதை. அவன் மரத்தில் இருந்த பெரும்பொந்தில் போய் அமர்ந்து கொண்டான். அவள் அதிலிருந்த ஓர் வேர்புடைப்புல் அமர்ந்தாள்

"இங்கு ஏன் வரச்சொன்னீர்கள்"

"நான் தனிமையை விரும்புகிறேன்,  நேற்று நிறைய கேள்விகேட்டுவிடேன்  அதற்கு என்னை மன்னியுங்கள் , இன்று நீங்கள் கேட்கலாம்"

"தனிமையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்"

"தனிமை என்பதற்கு உங்களுக்குள் ஏற்கனவே ஓர் அர்த்தம் இருக்கலாம். ஒரு வேளை இப்படி , மனிதர்களற்ற இடம் , சப்தமற்ற இடம் , மலை உச்சி , தனித்த அறை இப்படி பல. சரியாக சொல்லவேண்டும் என்றால் உங்களை பாதிக்காத ஒலிகள் அல்லது மொழிகள் மட்டும் அலையும் வெளியே தனிமை."

"ஒலிகள் சரி அது என்ன மொழிகள்" என்றாள்

"மனிதன் தனக்கான மொழிகளை கண்டுகொண்டான். அப்படியிருக்க பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் தனக்கேயான பரிணாம வளர்ச்சியில் வந்து இங்கு நம் முன்னே நிற்கின்றன அல்லவா , அப்படியேனில் அவற்றின்  ஒலிகள் நமக்கு தெரியாத ஒரு லிபியல்லவா. நீங்கள் நடந்து வரும் பொழுது நரம்புகளேன பிணைந்திருக்கும் பெரிய சிறிய வேர்களில் தொகையை மிதித்து வந்திருக்கலாம். அவை தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன" சட்டென அவளின் கையை விடுவித்து வானத்தை உற்று நோக்கினான்.

வெண்மேகங்கள் வேகமாக நடந்து பின் ஓடிச்சென்று கொண்டிருந்தன. சிட்டுக்குருவிகள் புதர்களுக்குள் மழைத்துளியென சென்று தடமின்றி மறைந்தன. மரங்கள் தென்றலுக்கு ஏற்றாற்போல மெதுவாக இலைகளை உதிர்த்தபடி ஆடியன. அதில் ஒரு பழுத்த இலை மெல்ல காற்றில் தவழ்ந்து அவன் மடியில் விழுந்தது.  உடம்பு திடீரென்று அதிர , மேல் சட்டை நனையுமளவிற்கு வியர்க்க தன்னைத்தானே சமாதாப்படுத்த முயன்றான். அவள் இதனை கவனித்துவிட்டாள்.

"மொழி உங்களுக்குள் எப்படி உருவானது , அதனை நீங்கள் அறிந்ததுண்டா"

தன் பதற்றத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் "மொழி ஒரு கொடிய மிருகம் போல என்னை வாலால் அடித்து துரத்தியிருக்கின்றது. நான் அதன் முன் மண்டியிட்டு அழுதிருக்கிறேன். கோபத்தில் கத்தியிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முலைகொடுக்காமல் விலக்கியதில்லை. என இயலாமையை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒரு வினாடியில் நீங்கள் படிக்கும் புரிந்து கொள்ளும் வார்த்தைகாக நான் ஒரு மணி நேரம் பொறுத்திருந்த காலம் என்னுள் இருகின்றது. அப்பொழுது நான் மருத்துவமனையில் இருந்தேன். உங்களுக்கு ஹெலன் கெல்லர் பற்றி தெரிந்திருக்கும் அவருக்கு வார்த்தைகளை உலகின் பருப்பொருளுடன் இணைப்பதில் இருந்த அதே பிரச்சனை எனக்கும் இருந்தது. அவருக்கு கிடைத்த அன்னா போல எனக்கு பாதிரியார் சிவம் கிடைத்தார். அவரே எனக்கு உருகொடுத்தார். கைகளைப்பிடித்து எனக்கு பருப்பொருட்களை அறிமுகப்படுத்தினார். பின் அதொரு விளையாட்டானது"

"மனிதன் சிந்திப்பது மொழியிலேயே , அவன் தன்னுள் சேர்த்துவைக்கும் அனைத்துமே மொழியின் வடிவிலேயே உள்ளது. அதனை பின் தொட்டெடுக்கவும் மொழி தேவைப்படுகிறது. அப்படியிருக்கையில் சிறுவயதில் எப்படி உங்களால் சிந்திக்க முடிந்தது"

"என் சிந்தனை இயங்கியது பசி , காமம் மற்றும் கோபம் பொருட்டே. அவற்றை  என்னால் உணர முடியும் அதற்கு நான் ஒரு பெயரும் கொடுத்திருந்தேன்."

அந்தச்சொல்லை  உச்சரிக்க வாயைக்குவித்தான். ஆனால் ஒலியெழவில்லை அதிர்வாய் காற்றில் கலந்தது "ம்மா..."

"அம்மா" என்றாள் காயத்ரி.  அறிந்திருந்த ஒன்று அவள் முன் பூதாகரமாய் நிற்பதை உணர்ந்தாள்.

"ஆம் அதுதான்" என்றான் அவன்

"அதன் பிறகு நான் கற்றது பாதிரியாரிடம் இருந்தே. ஆரம்பத்தில் எல்லா சொற்களின் இறுதியிலும் நான் 'ம்மா' என்று உச்சரித்ததாக அவர் சொல்லுவார்."

"எப்பொழுதிலிருந்து நீங்கள் கற்காத மொழியை புரிந்துகொள்ள ஆரம்பித்தீர்கள்"

"நான் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை அதனை நான் கண்டைந்தேன். என்னில் இருக்கும் பலவற்றில் ஒன்றை நான் அறிந்து கொண்டேன். நம் கைகால்களை தொட்டு உணர்வது போல அவையும் நாம்தானே! குரங்குகளின் மரபிணுவில் மொழியின்  கூறுகள் இருப்பதாகவும். அதன் பரிணாம வளர்ச்சியே நாம் கொண்டுள்ள மொழியாக கூறுகின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. தமிழ் வார்த்தைகளை பாதிரியார் தொடுமுறையில் கற்றுக்கொடுக்கையில் அதன் அர்த்தங்கள் என்னுள்ளிலிருந்து மேலெழுந்து வந்தன. கடலாழம் நாம் அறிய முடியாதது என்பார் பாதிரியார். அதனை பூரணமாக உணர்ந்திருக்கிறேன்"

"நீங்கள் கற்ற முதல் தமிழ் வார்த்தை"

"லிங்கம் , என் குறியை முதலாக காமத்தில் தொட்ட கணம் இந்த வார்த்தை என்னுள் ஓடியது. அதனைப்பற்றி நான் கேட்கவே பாதிரியார் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தினார். வார்த்தைகள் அதன் பின் எனக்குள் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றேடுத்தன. ஆனால் அது சமஸ்கிரத வார்த்தை என்பது பின்பே எனக்கு தெரிந்தது. ஆப்பிரிக்காவில் அழிந்துபோனதொரு மொழியைக்கூட நான் கண்டடைந்துகொண்டேன். அதனை அறிந்தவன் இந்த கணத்தில் இந்த பிரபஞ்சத்தில் நான் மட்டுமே"

"வண்ணங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? , அதனை எப்படி உணர்கிறீர்கள் ?"

"வண்ணங்களை நான் அறிந்ததில்லை , உணர்ந்திருக்கிறேன். நான் அதனை வெறும் வார்த்தைகளாக மட்டுமே அறிந்து வைத்திருந்த பொழுது அவை என் உணர்ச்சிகளுடன் தொடர்புற்றிருந்தன. என் தனிமையை கருப்பு  , உறக்கத்தை வெண்மை , மகிழ்ச்சியை பொன் , காமத்தை பச்சை , கோபத்தை சிவப்பு என்று என் மனம் எனக்கு அறிவித்திருந்தது. நான் அறிய முடியாமல் இருப்பது இசையை மட்டுமே. அதன் கட்டுமானத்தை மொழிகளில் சிந்திக்கும் பொழுது எனக்கு பிடிகிடைக்கவில்லை ."

வண்டொன்று அவனது தலையைச்சுற்றி ரீங்காரமிட்டது. பதறி எழுந்து கைகளை முன்னும் பின்னும் ஆட்டி அதனை பிடிக்க முயன்றான். அவன் முகம் பரிபூரண மகிழ்ச்சியிலிர்ருந்தது.

"என்னவாயிற்று" என்றாள்

"அதன் சிறகடிப்பு"

"அது கேட்கிறதா"

"ஆம்"

"உங்கள் கைகளை நான் இப்பொழுது தொடவில்லை , ஆனால்" என்றாள் ஆச்சரியத்துடன்

"நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது கூடவே அதன் இசை" என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த மரம் காற்றிற்கு திசைகள் கடந்து சுழல  , இலைகள் உதடுகளென துடிதுடித்துச்சிரித்தன. அதனை உணர்ந்தவனென அதனை மேல் நோக்கி உற்றுப்பார்த்தான். அவன் ஒளியற்ற கண்கள் சுழன்றன. புருவங்கள் மேலெழும்பி புன்னகைத்தான்.

கால்கள் உறுதியுறாத குழந்தையின் நடைபோல அவன் முன்பு வந்த ஓடுபாதையில் ஓடினான்.

4.

ஜன்னலுக்கு கீழ் இருந்த மேசையில் அழுக்கு ஒரு வழுவழுப்பான தோல் போல எண்ணைப்பிசுக்குடன் படர்ந்திருந்தது. அதன் மீதிருந்த தொட்டறியும் புத்தகங்களின் அசைவின்மை அவன் சிலகாலமாக எதையும் படிக்கவில்லை என்பதை காட்டியது. கணினி முன் இருந்த தொடு முறை விசைப்பலகை மேல் சிலந்தி ஒன்று தன் எட்டு காலகளை எடுத்து வைத்து நடக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தது. அது அமர்ந்திருந்த திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த அறை வெளிச்சம் வருவதற்கு வாய்ப்பில்லாததாய் நிலத்துக்கு கீழேயிருந்தது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வெற்றிடம் உருவாக்கும் வண்ணம் மூடப்பட்டிருந்தது. தன்னை உண்ணும் விலங்கின் கண்களை அரவணைப்புடன் பார்க்கும் மிருகம் போலவனிருக்க அந்த அறை அவனை தின்றுகொண்டிருந்தது. அதைவிட்டு வெளியெ வந்து சில நாட்களாகின்றன என்பது அவனுக்கு தெரியாமலில்லை. உணவு இல்லாமல் உறங்கும் குளிர்கால விலங்கு போல அவன் விழித்திருந்தான். கண் இமைகள் கனத்து விழிகள் ஆழமானதொரு பாசிபடர்ந்த குட்டை போன்றிருந்தது. மேஜையுடன் கூடிய இருக்கையில் இருந்து எழும்பும் போதெல்லாம் கால்கள் இருக்கும் உணர்வுபோய் தடுமாறும். அணிந்திருந்த மேல் சட்டையும் ஜீன்சும் கூட தூசிப்பிடித்திருந்தது. மொத்தத்தில் அவன் ஒரு பாழடைந்த உடைந்த ஜன்னல் கதவுகளுடைய வீடு போல இருந்தான் ஆனால் உயிரிருந்தது.

இன்று பௌர்ணமி , அவனுள் அவனுக்காகவே உருவாக்கியிருந்த நிலவின் இருளொளி முகத்தில் உயர்ந்த ஜன்னல் வழி வழிய அமர்ந்திருந்தான். தெருவில் நாய் ஒன்று அடிவயிற்றிலிருந்து மொத்த சக்தியையும் தன் தொண்டைக்கு திரட்டி ஊளையிட்டது. பதற்றம் தொற்றிக்கொள்ள "அவை கேட்டுக்கொண்டேயிருக்கின்றன" என்று நினைத்தவனாக தலையை இரு கைகளால் பற்றிக்கொண்டான்.

கதவு தட்டப்படும் அதிர்வை முதுகில் உணர்ந்தவனாய் அந்த திசையை நோக்கி திரும்பினான். வந்தவள் அவன் அருகே வந்து தன் கைகளால் அவன் கைகளை பிடித்து தொடுதல் முறையில் பேச ஆரம்பித்தாள். அவன் கைகளை சற்று அழுத்தியவாறே "ஏன் இப்படி தனியாக வந்து உன்னை சுயவதைசெய்துகொள்ள வேண்டும்" என்றாள்

அவன் அதற்கு பதில் ஏதும் கூற முற்படவில்லை. அமைதியான அறையின் தனிமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் "என் அறையே அதனுள் தனிமையாக இருக்கின்றது" என்றவாறு அவன் கைகளை விடுவித்துக்கொள்ள முற்பட்டாள்.

"நிசப்தம் , நான் அதனை இழந்து விட்டேன். அதன் தூய்மை என்னை விட்டு விலகிவிட்டது" என்றான். அவன் ஒளியிழந்த கண்கள் பனி வெம்மை கொண்டது பொல துளிகளை உதிர்த்தது.

அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் எதிர்புறம் இருந்த சுவரின் மூலையில் பல்லி ஒன்று அமைதியான அறையில் பலத்த  சப்தமொன்றை எழுப்பியது. இருவரும் அதன் தியைநோக்கி திரும்பினர்.

"உனக்கு அந்த சப்தம் கேட்கிறதால்லவா , நான் பேசுவதும் கூட" என்றாள் ஆச்சரியப்பட்டவளாக.

 "அந்த நாளுக்குப்பிறகு பிரபஞ்சத்தின் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது. தொடக்கத்தில் அதிதூய இசையைப்போலலிருந்தது. பரவசம் உச்சத்திலேயே கழிந்தன நாட்கள். மெல்லிய தென்றலென இருந்தது பின் பேரோலம் கொண்டு  துழன்றடித்தது. அதன் விளிம்பில் விட்டுவிட மன்மின்றி தொற்றிக்கொண்டேன். அதும் என்னை விடவில்லை. பல்லிகளின் நாய்களின் குருவிகளின் சிலந்திகளின் ஏன் மரங்களின் செடிகளின் மொழியை என்னால் உணர முடிகிறது" மரணம் அவனெதிரில் நேரமில்லாமல் காத்திருப்பதைபோல பேசிக்கொண்டிருந்தான "ஆனால் அவை மனம் இசையால் இயங்குகிறது , அவை மொழிவதேயில்லை. அந்த இசையில் அவை லயித்திருக்கின்றன. நம் மனம் மொழியால் இயங்குகையில் அவை இசையில் இயங்குகின்றன. என்ணங்களை இசைக்கோர்ப்பாக சேர்க்கமுடிந்தால்" கண்காண ஒன்றில் லயித்திருந்த அவனை அவள் தொட்டு இறக்கி வைத்தாள். "ஆம் அதொரு பேரிசையின்பம். ஆனால் அதன் மறுபுறம் தொடர்ந்து உச்ச ஸ்தானியில் நிறுத்தாமல்  இயங்கும் தருணம் உண்டு அதுவே பேரோலம்" 

பதறியவனாக "என்னால் முடியாது இனி நான் உலகுடன் தொடர்பற்றிருப்பதே எனக்கும் உங்களுக்கும் நல்லது" என்று நாற்காலியில் இருந்து எழ முற்பட்டு தவறி விழுந்தான். அதன் எதிரே இருந்த விட்டிலை நொடிப்பொழுதில் கவ்வியவாறு பல்லி மீண்டும் கத்தியது. விழுந்தவன் எழாமல் அந்த அதிர்வு வந்த திசையையே நோக்கிக்கொண்டிருந்தான்.

அவனும் கத்த ஆரம்பித்தான் "ஆஆஆஆ" "ஊஊஊஊஊ"  "இஇஇஇஇ" "ஈஈஈஈஈ" "ஓஓஓஓஓஓ" என்று ஒவ்வொரு ஒலிக்கும் இடைவெளி விட்டு அதிர்வாய் அவன் குரல்வளை ஏறி இறங்கியது. கைகால்கள் விறைத்து நெளிந்தான் அவன் உடம்பெங்கும் வியர்த்திருந்தது. மூச்சு அடங்குவதாயில்லை. வாயில் இருந்து பதைபோன்ற எச்சில் வழிந்ததும் புயல் ஓய்ந்த மரம் போல கிடந்தான். சன்னதம் வந்த சாமியாடி போலிருந்தான் அவளுக்கு. பல்லி தடம் தெரியாமல் மெல்ல ஊர்ந்து மறைந்துவிட்டது.

அவனை தூக்கி பிடித்து நாற்காலியில் அவளும் அதேபோன்று  பதற்றத்துடன் அவனை உட்கார வைத்தவளாக "ஏதும் அடிபடவில்லையே , என்ன ஆயிற்று தண்ணீர் கொண்டு வருகிறேன்" என்று அவன் கையை தொட்டு பேசியவளாக செல்ல முயன்றாள். அவள் கையை வலுவாக அழுத்தியவாறு சிறிது நேரத்தில் தெளிந்தவனாக "எங்கே அந்த பல்லி" என்று கோவம் கொண்டவனாக அந்த அதிர்வு வந்த திசை நோக்கி அதனை கொல்ல முயன்றான்.

"இல்லை நீ சென்று விடு இது எனக்கு சரியாக படவில்லை எனை அவை எங்கோ கூட்டிச்செல்கின்றன. அதன் பரந்த வெளி எனக்கு பதற்றத்தை அளிக்கின்றது , தெளிவாக தெரிகின்றது அதிலிருந்து என்னால் வெளிவர இயலாது. நான் யோசித்து அதனை ஆட்கொள்ளவில்லை  என்னை வந்தடைகின்றது. கசண்டாஸ்கி சொன்னது போல "என் மூளைய பற்றிக்கொண்ட பருந்து" போன்றது அது. ரத்தம் வழியும் நிணத்துடன் தலையை தொட்டு தொட்டு நான் அலைகிறேன். இன்புறும் வண்டின் விளைவுடனே நான் அதனை அணுகினேன் ஆனால் அது அவற்றையெல்லாம் தாண்டி எங்கோ இருக்கின்றது. அந்த பூச்சியின் அழுகுரலை அந்த பல்லியின் திருப்தியை என்னால் உணர முடிந்தது. உண்மையாக சொல்கிறேன் அது என் கற்பனையல்ல அவைகளின் குரலை கேட்டேன் எனை நம்பு , போதும் போதும் நிறுத்துங்கள்" என்று கூறி தரையில் விழுந்து கைகளையும் கால்களையும் கவிழ்த்துப்போட்ட வண்டு போல ஆட்டி கதறினான்.

5.

எங்கும் இருள் நிரம்பியிருந்தது , ஆனால் அதனுள் அதன் பருப்பொருட்களை அடையாளம் காணமுடிந்தது. அங்கு அதிர்வுகளே இல்லை ஆனால் அவை உருவாக்கிய பருப்பொருட்கள் இருந்தன. அதன் நெளிவுகளை அவனால் தன் கைகளைக்கொண்டு தொட முடிந்தது அதன் வாசனையை அவனால் நுகர முடிந்தது. கருமைக்குள் கருமையாய் விரிந்திருந்த மாபெரும் உலகமொன்று அவன் முன் படர்ந்து கிடந்தது. அதன் ஒவ்வொரு பொருளையும் அவன் தொட்டறிந்தான் அதன் மடிப்புகள் அதன் திண்மையை அதன் நீர்மையை அதன் குளிர்ச்சியை அதன் வெம்மையை அதன் ருசியை அதன் அதி வாசனையை அனைத்திலும் முயங்கி எழுந்தான். அவ்வுலகத்தின் உச்சி முதல் பாதம் வரை அவன் அறிந்த ஒன்று பொலிருந்தது. அதன் உச்சியில் நீர்மையுடன் விழுந்திருந்த கருமை கீழே குழிந்த இரு நீர்மைகள் நகர்ந்தால் ஓங்கிய நிலத்தில் முன்னும் பின்னும் அலைகளிக்கும் வெம்மையான காற்று பின் தேன் தடாகத்தின் திறப்பு குனிந்தால் ஓங்கிய வழுக்கிச்செல்லும் இரு குவைகள் வழி வழியும் அமுத நீர்மை தாண்டினால் பரந்த பொருளற்ற வெறுமை அதன் சிறிய பள்ளம்  முடிகையில் இருந்தது ஓர் சுழல் கால் வைக்க வேண்டாம் என்று எண்ணும் கணம் உள்ளே விழுந்தேன்.

பின்பு அவன் எழுந்து நடமாடமுடியாமல் போனது. இறக்கும் வரை அதன் அவசியமற்றுக்கிடந்தான் 

விளிம்பிலிருந்து நகர்ந்து புயலின் நடுப்புள்ளியில் நிற்பதை காலமற்று உணர்ந்திருந்தான். பிரபஞ்ச நிசப்தம்.

Monday 17 August 2020

ஊர் கதை - குறுங்கதை

இருள் பரவ ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிறது. மயங்கிவழியும் நீலம் வானில் விரவியிருக்கும் பதினோறு மணி. பாதிபடித்து வைத்திருந்த நாவல் மடியிலிருக்கிறது. இந்தியர்களுக்கு காட்டமான மால்புரோ சிகரேட் ஒன்றைப்புகத்தாலொழிய என்னால் விழித்திருக்க முடியாது. கண்களின் இரப்பை கனத்து இமைகள் மூடக்காத்திருக்கிறன.ஒரு நடை சென்றால் தூக்கம் கலையலாம். வழக்கமாக செல்லும் பாருக்கு வெளியே பெயர் தெரியா நண்பர்கர்களிடம் வெறும் வணக்கம் வைத்து எதாவது உதிரிச்சொற்கள் பேசலாம்.

குப்பைக்கூழங்கள் அற்ற தெருக்களில் எரித்த சிகரேட்டின் துண்டுகள் மட்டும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டு பாதி எரிந்த பிணங்கள் போல கிடக்கின்றன. என் கையில் சாகக்காத்திருக்கும் ஒருவன். ஸ்வீடனில் கோடைக்காலம் முடியப்போகிறது. பகல் குறைந்து இரவின் ஆட்சி தொடங்கும் பொழுது பகலின் துகள்கள் பனியாய் மொழியும். அறையிலிருந்து தெருவில் இறங்கி பத்தடி தூரத்தில் இருக்கிறது அந்த பார். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு கூட்டம் அதிலிருந்து வெளியேறி புகைவிட்டு பழைய இருக்கைகளில் அமர்ந்து கொள்ளும். சிகரேட் இல்லாமலே சென்று யாரிடமோ ஒன்று கடன் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் எனக்கு உகந்ததல்ல , நான் கொடுப்பவன். முழுப்போதையிலுருப்பவர்களும் கருப்பு அகதிகளுமே அதிகமாக சிகரேட் கடன் வாங்குகிறார்கள். பதின் வயது சிறுவர்களும் - பார்ப்பதற்கு பீமனைப்போலிருந்தாதும் - நம்மிடம் கேட்பதுண்டு.

லைட்டர் எடுக்காமல் வந்து விட்டேன். நண்பர்கள் யாரிடமோ கேட்டுக்கொள்ளலாம் என்றால் அங்கு ஒரு குடிகாரனுமில்லை. பின்னானிலிருந்து ஒரு குரல்.

"பெங்காலியா" என்றது உதிரி ஆங்கிலத்தில். கட்டையான உருண்டை வடிவம். சிவந்த இந்திய நிறம். தூரத்தில் அவனை பார்த்திருந்தாலும் கவனிக்காதது போலிருந்தேன்.

"இல்லை நான்" என்று முடிப்பதற்குள்

"இந்தியனா ? , வேறு எப்படியும் இருக்க வாய்ப்பில்லை" என்றான். அவன் ஆங்கிலம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. குள்ளமாக இருந்த அவனை எனக்கு கீழே பாதாளத்தில் பார்ப்பது போலிருந்தது. நான் கேட்காமலேயே லைட்டரை எடுத்து எனக்கு பற்ற வைத்தான். அவன் முன் ஸ்டைலாக புகை விட வேண்டும் என்று நினைப்பு எனக்கிருந்தது.

"நான் பங்களாதேஷி , எங்கு வேலைப்பார்க்கிறாய்" என்று சகஜமாக பேச்சுக்கொடுத்தான். எனக்கு சாதரணமாகவே அகதிகளுடன் பழக வேண்டும் என்ற நினைப்பிருந்தாலும். அவர்களைக்கண்டால் நான் விலகி விடுவதே என் இயல்பாக இருக்கின்றது. அப்படி நெருங்கி அறிந்து கொண்ட இங்கு குடியேறி அமர்ந்து விட்ட இலங்கை தமிழர்களின் கொண்டாட்டம் ஏனோ என்னில் ஒரு சந்தோஷமின்மையை கொடுத்தது.

"நான் ஐடி , உங்களுக்கு தெரிந்திருக்கும் , ஹெச் அண்ட் எம். அங்குதான் வேலைப்பார்க்கிறேன். எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறீர்கள்" என்றேன். அவனைப்பார்ப்பதும் பின்பு மேகமில்லாத வானைப்பார்த்து புகை விடுவதுமாயிருந்தேன்.

பதில் சொல்ல விருப்பமில்லாததைபோல "ஏழு வருடங்களாக இங்கிருக்கிறென். டீ சென்றலில் வேலைப்பார்க்கிறேன்" என்றான்.

அவன் கேட்காமலேயே " நான் இரண்டு வருடமாக இங்கிருக்கிறேன்" என்றேன். பேசி முடித்தவுடன் ஒரு சிரிப்பை நான் இயந்தரத்தமாக பழகிவிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எதாவதொரு கிளீனராகவோ. ரெஸ்ட்ராண்டிலோ வேலைப்பார்ப்பான். நம் அளவிற்கு சம்பளம் வர வாய்ப்பிலை பாவம்தான்.

"நீங்கள் அந்த கட்டிடத்திலிருந்து வருவதைப்பார்த்தேன்" 

"ஆம் அங்குதான் தங்கியிருக்கிறேன்" இருவரும் புன்னகைத்துக்கொண்டோம். நல்லதாகப்படவில்லை ஒருவேளை என்னுடைய அறையில் தங்க முயல்கிறானோ. எங்கு தங்கியிருக்கிறாய் என்ற கேள்வியை அவனிடம் கண்டிப்பாக கேட்கக்கூடாது.

"ஹிந்தி தெரியுமா"

"இல்லை தெரியாது நான் தென் தமிழகத்தவன் , ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும் , ஹமாரா , துமாரா , கானா கேலியே" ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னேன். சிரித்ததில் அவன் விட்ட புகை மூக்கிலிருந்து வந்தது. 

"எங்களூரில் ஐம்பது சதமானம் பேர் பெங்காலி பேசுவார்கள் , ஹிந்தி தெரிந்தால் அங்கு கண்டிப்பாக பிழைக்காலம். எல்லாருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும். தென்னிந்திய மக்களுக்கு ஹிந்தி தெரியாதென்பது எனக்கு தெரியும்" என்று நக்கல் சிரிப்பு சிரித்தான். நானும் அதில் இணைந்து கொண்டேன்.

"உங்களுக்கு தென்னிந்திய நண்பர்கள் இருக்கிறார்களா"

"இருக்கிறார்கள்" என்று சிரித்தான். என்னில் , தமிழ் தெரியுமா ? உலகிலேயே பழைய மொழி என்று பிரஸ்தாபிக்கும் எண்ணம் வந்தது கேவலம்தான்.

பங்களாதேஷ் என்றதும் கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வியைக்கேட்டுத்தான் ஆக வேண்டும் "பிரம்மபுத்திரா உங்களூரில் ஓடுகிறதா" 

"ஆம் நீளமான அகலமாக நதி , வளம் கொடுப்பவள். ஆற்றின் கரையோரமாக இருந்தது எங்கள் கிராமம். விவசாய நிலம் ஆற்றங்கரையிலிருந்து தூரத்திலிருந்தது" கண்கள் எங்கோ கனவில் மிதந்து கரைசேர விரும்பா ஒற்றைப்படகேன அலைகின்றன. சிந்திக்கும் போது வரும் எழுத்து எழுத நினைக்கும்பொழுது வந்து தொலைப்பதில்லை.

"ஊருக்கு செல்வதுண்டா"

"இல்லை அங்கு எதுமில்லை"

"வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்வது நல்ல அனுபவமில்லையா. வெளிநாட்டிலிருந்து வரும் மிடுக்குடன் செல்லலாமில்லையா"

அவன் சிரித்துக்கொண்டான். பதில் பேசவில்லை.

"அடுத்த மாதம் நான் செல்கிறேன். நண்பர்கள் காத்திருக்கிறார்கள். உறவினர்களும்" என்று பாட்டிலை கைகளில் காட்டினேன்.

அதற்கும் சிரித்தான். அதே அமைதி

"சரி , பிறகு சந்திக்கலாம். தாக்" என்றான்

நானும் "தாக்ஸமீகேன்" என்று நன்றி கூறினேன்.

தென் கிழக்காக செல்கிறான். இங்கிருந்து அதே திசையில் பிரம்ம புத்திரா ஓடுகிறது. அட கைகளை காற்றில் ஆற்றலை போல நெளிக்கிறான்.

நல்ல ஊர்க்கதை ஒன்று எழுதலாம் , ஓடு ஓடு.

Saturday 1 August 2020

வசந்தகாலம்

குளிர்காலம் , பறவைகள் செல்கின்றன இடம்விட்டு
காலம் மெல்லவே கடக்கின்றது
முட்டைகள் உடைபட்டு குஞ்சுகள் புணர்திருக்கும்
குஞ்சுகளைத்தேடி வரும் அன்னை 
உலகின் மறு எல்லையில் மீண்டும் சந்திக்கின்றன
அன்னைகள் குஞ்சுகள் புணர
மீண்டும் அடுத்த ஜென்மத்தின் வலசை
ஓர் வசந்தகாலம்

Thursday 2 July 2020

கடுவா - சிறுகதை

என்னுடைய சிறுகதை பதாகை இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது.

Saturday 20 June 2020

அப்பா - சிறுகதை


"இவன் நம்ம அப்பாப்போலதான இருக்கான்" என்று சித்தியைப்பார்த்து அம்மா கேட்டாள். "எனக்கு அப்படி ஒண்ணும் தோணல்ல" என்றாள் சித்தி "நீ என்னத்தட்டீ கவனிக்க , நல்ல பாரு நீள மூஞ்சி , மாநெறம் , ஒடுங்குன வயிறு , விரிஞ்ச நெஞ்சு , அந்த கண்ண பாருட்டீ" கூறிமுடித்ததும் அம்மாவின் கண்கள் விரிய தலையில் கைவைத்து திர்ஷ்டி கழித்தாள். மூன்று சொடக்குகள் விழுந்தன. "அவ்ளோ கண்ணு பட்டுருக்கு" என்றாள். "பாத்தா அப்புடித்தா தெரியுது. ஆனா மக்கா உனக்க அம்ம இல்லாத்த ஒண்ண உருவாக்கிருவா" என்றாள் சித்தி என்னைப்பார்த்து. "ஆமா நான்தான் இல்லாத ஒண்ண உருவாக்குகேன். போட்டீ" "அம்மா , உங்க கூத்துல என்ன இழுக்காதீங்க , எனக்கே நான் நம்ம யேக்கியம்ம ஆச்சி சாடைதாண்ணு தோணுகு. உங்களுக்கு மட்டும்தா உங்க அப்பா தெரியாரு" என்றேன் அம்மா வாழைத்தண்டை அரிவாள்மனையில் நறுக்கிக்கொண்டே "நல்ல முத்துன தண்டாயிருக்கு , ஒரு வாழத்தண்ட வாங்க தெரியல உங்கொப்பனுக்கு" என்றாள் என்னிடம். "ஆமா....நல்ல முத்துன காயாட்டுலா இருக்கு. நல்லா அவச்சி விட்டுட்டான்" என்றாள் சித்தி. "புக்க தூக்கிட்டு போவத்தா தெரியும் , ம்ஹும் வேற ஒண்ணுத்துக்கும் ஆகாது" சம்பந்தமேயில்லாமல் "அவன் கால் விரல பாருட்டீ. சுண்டுவிரல் அப்டியே அப்பாதா" என்றாள் அம்மா சித்தி என் முகத்தை பார்த்தாள். அம்மா சொல்வதை மறுப்பது நான் அம்மாவையே மறுப்பது போன்றது. நான் "தாத்தாவ மாரிதானம்மா பேரனும் இருப்பான்" "இவ என்னத்தல அவர பாத்தா , எல்லாம் ஒரு நெனப்புதா. கூட இருந்து அஞ்சி புள்ள பெத்தவ நானு எனக்கே அவருக்க முன்னும் பின்னும் முழுசா தெரியாது." என்று தூங்கிக்கொண்டிருந்த ஆச்சி எழுந்தமர்ந்தாள். "நீ என்னத்த எங்கப்பாவ பாத்த , நான் தான வீட்டுல மொத புள்ள அதுனாலயே அப்பாக்கு என்னதா புடிக்கும். நான் அவரு நெஞ்சில கெடந்தவளாக்கும். சின்ன பிள்ளையா இருக்கும்போ என்ன அந்த சாலிச்சி வீட்டுக்கு கூட்டிட்டுலாம் போயிருக்காரு. அவ்ளோ பிரியம்" "சீ....இதுல உனக்கு பெரும வேறையா , அங்க போய்கிடந்து வந்தவன் தான உங்கப்பன் , அவன மாரி இன்னொருத்தன் வாராண்ணு பெரும வேற படுகியா" "இவ ஒருத்தி , பெருமயில்ல அது ஒரு சந்தோசம், எங்கப்பா எங்கூட இருக்காருண்ணு" "அவன் கூடயிருந்து என்ன புண்ணியம் , அஞ்சி பைசாக்கு பிரயோஜனமில்ல. ஏட்டீ இவ்ளொ சொல்லுகியே உங்கப்பன் இருந்தப்போ நீதான வேலைக்கு போயி குடும்பத்துக்கு சோறு போட்ட. பொறவு எதுக்கு அவன் வேட்டிய புடிச்சி தொங்கிட்டுருக்க." "இருந்தாலும் எங்கப்பால்லா , அவருக்க சூழ்நில செரியில்ல , அதுக்கு அவர் என்ன செய்வாரு , கூடவே சுத்துன ஆசாரி , சாமியாடி. எல்லாவனும் சேந்துதான அப்பாவ நாசப்பொட்டயா ஆக்கிட்டானுங்க" "ஏட்டீ , எவன் மூத்தரத்த குடிக்க சொன்ன உங்கப்பனுக்கு எங்கட்டீ போச்சி அறிவு. வீட்டுல நாலு பொம்பள பிள்ளைய இருக்குண்ணு ஒரு நினைப்பில்லாம ரோட்டுல கெடந்தவன். பழச மறந்துறாதட்டீ , உன் கல்யாணத்தணைக்கி செத்து கெடந்தவனாக்கும். நீ உங்கப்பா மாரி வா மக்கா" என்றாள் என்னைப்பர்த்து. "நா ஒண்ணும் மறக்கல்ல , மூத்த பிள்ளைக்கு சரியா கல்யாணம் செஞ்சி வைக்க வழியில்லையேனு நினப்புலயே குடிச்சிருக்காரு. அவர மனசரிஞ்சி ஒரு வாய் ஏச கூட முடியல. செத்து போன மனுசனையாவது நிம்மதியா இருக்க விடுங்க" அம்மாவின் அப்பா புராணத்தை எப்படி நிறுத்துவதென்பது ஆச்சிக்கு நன்றாகவே தெரியும். ஆச்சி கூறியது உண்மையே அம்மாவின் கல்யாணத்தன்று காலை கருக்கல் நேரத்தில் வில்லுக்குறி தாண்டி பத்மநாபபுரம் வரும் வயல் வழியில் ஒரு ஓடையில் கிடந்ததாக அந்த ஊர்மக்கள் தாத்தாவை தூக்கிக்கொண்டு வந்தனர். உடம்பில் எங்கேயும் ரத்தக்கறையோ வீக்கமோ இல்லை. வாய் மட்டும் ஒரு பக்கமாக இழுத்திருந்தது. உடல் நீலம் பிடித்து ஆனால் கண்கள் பறவைகளின் கண்களைப்போலைருந்ததாகவும் ஆச்சி சொன்னாள். தற்கொலை என்று ஊர் கூறி , அம்மா இன்னொரு ஜாதியில் கல்யாணம் செய்ய துணிந்ததே காரணம் என்றது. ஒரு புறம் அவளே தாத்தவை கொன்றதாகவும் வதந்திகள் ஊர் வாய்களில் மெல்லப்பட்டிருந்தை நான் இப்பொழுது கூட கலைவாணர் தெருவில் நடக்கும் பொழுது கேட்க முடியும். ஆனால் உண்மையில் அவர் குடிந்திருந்தார் அப்பொழுது அவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. ஓடையில் இருந்த கூழாங்கல் தலையில் இடித்திருக்கலாம். வெட்டு வந்து கைகால் இழுத்ததினாலேயே வாய் ஒரு பக்கமாக் இழுத்திருந்தது. சித்திகள் மணநாளை வருடம் தோறும் கொண்டாடும் பொழுது அம்மா அமைதியாக அரங்கில் தாத்தா படத்தின் முன் நின்றிருப்பாள். எதோ மன்றாட்டு போல அவள் உடலும் தலையும் உதறிக்கொண்டேயிருக்கும் , ஒரு நாளில் பலதடவைகள் அவள் அப்பா சுடலையாண்டி பிள்ளையை பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அந்த அப்பாவைபோல நான் இருக்கிறேன் எங்கிறாள். முற்றிய வாழைத்தண்டை நறுக்குவது என்பது பசையை இரு கைகளால் தொட்டு ஒட்டிக்கொண்டு பின் எடுக்க முயற்சிப்பது போன்றது. வட்டமாக ஒரு சிறிய துண்டை வெட்டிய இடத்தில் வலைபோன்றதொரு பிசின் பிரிந்துவரும். அதனை சுருட்டி விரலில் மோதிரமாக்கிகொள்ள வேண்டும். அம்மா அதனை ஒரு இயந்திரத்தைப்போல வேகமாக செய்துகொண்டிருந்தாள். "மணி இன்னும் சாப்ட வரல்லயா ?" என்றாள் ஆச்சி "வர நேரம்தான் , அந்த அந்தோணி முதலாளிக்கி உழச்சி போட்டே காலம் போகுது. அவன் கொடுக்க நூறு ஓவா சம்பளத்த என் கைல கொண்டு வந்து கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணு நெனப்பு. பொறவு இந்த புக்கு. வீட்டப்பத்தி ஒரு நெனப்பிருக்கா. இவன் கெட்டி ஒரு சந்தோசமுண்டா" "ஏட்டி , இப்பொ திங்க சோறு அவனுக்க ரத்தமாக்கும் அத மரக்காண்டாம். உன்ன ஒரு பவுனில்லாம கட்டிக்கிடுதேன்னு வந்து உங்கப்பண்ட கேட்டவனாக்கும் மணி. ஆத கொஞ்மேனும் நினச்சுப்பாக்கணும் கேட்டியா. பருவத்துல நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்கும்பவே நமக்கு வெங்கன சாமான் வாங்கிக் கொடுத்தது மணியாக்கும். வெறும் மரிச்சீனிக்கெழங்கு திண்ணது மறந்து போச்சோ" ஆச்சிக்கு மூச்சு வாங்கியது எழுந்தமர்ந்து சீலையை விரித்து மார்பை மறைத்துக்கொண்டாள். "நீ மூத்த மக உன்ன கரயேத்திட்டா குடும்பம் ஒரு லெவலுக்கு வரும்ணு நெனச்சுதானட்டீ மணி உன்ன கேட்டதே. இல்லாம வேற சாதிக்கு கொடுக்க நானும் சம்மதிச்சிருப்பனா. அப்ப கூட எதும் எடுத்து சொல்லாம குடிச்சி செத்தான். அவனயைம் மணியையும் சேத்து வச்சி பேசாத சொல்லிட்டேன். ஜீவிக்கதுக்கு ஒரு வழிய கொடுத்தவன தப்பா பேசாதட்டீ. நாக்கு அழுவிறும்" "கொள்ளாம் , பெரிய கதாநாயகன மாரி ஆக்காண்டாம். அவரு அந்தளவுக்கொண்ணும் கெடையாது. அம்மைக்கு ஊருக்கு பயந்து என்ன மூணு வருசம் கட்டாம இருந்த ஆளாக்கும். பொம்பளதான நீ , உனக்கு தெரியும்ல என்ன என்னல்லாம் ஊர்ல பேசுனானுங்கண்ணு. இருந்தும் உனக்க மருமகன்தான் பெருசு. நானாக்கும் யேக்கியம்மைக்ககூட குடும்பம் நடத்துனேன் , நீ கெடையாது. அம்மைய எயித்து பேசாம. அம்மைக்கு சப்போட் பண்ணி என்ன மட்டம் தடுதவனாக்கும் உமக்க மணி. இவ்வளவு புஸ்தகம் படிச்சா காணாது வீட்ல என்ன ஏதுண்ணு கவனிக்க தெரியணும்" "எனக்க மணி ராமர்லா , ஒன்னத்தவுர ஒருத்திக்கு பின்னால போயிருப்பானா. உங்க தாத்தா தெருவுக்கு ஒண்ணுலா வச்சிருந்தாரு. அந்த நூஸு ஊருக்குள்ள பாதள சாக்கட மாரிலா நாறிக்கெடக்கு. தோண்டியெடுத்தா வந்துட்டேயிருக்க அட்சய பாத்துரமாக்கும்" என்றாள் என்னைப்பார்த்து. "அந்த மூணு வருசதுத்துக்கு இடைல மொறப்பொண்ணு ஒண்ண கட்டிவக்க பூரா வேலையும் நடந்துச்சி , உமக்க மணி அப்பொ பொத்திக்கிட்டுதா நின்னாரு. நல்ல யட்சி கணக்க நாயர்ல வந்தவொடன வெள்ளாடிச்சி வேணாமுண்ணு போகபாத்தாரு உனக்க உத்தம ராமரு. எனக்க அப்பா சாலிச்சியா இருந்தாலும் வாக்கு குடுத்துட்டமேண்ணு கண்ணு கணக்கா பாத்துக்கிட்டாரு. எல்லாத்துக்கும் மேல பாஞ்சாலி ஆச்சி செஞ்ச வேல , அந்த சாலிச்சிக்கே கட்டி வச்சிருந்தா இதொண்ணும் நடந்திருக்காது. செரி இவ்வளோ பேசுகியே , அப்ப எதுக்கு எங்கப்பா கூடகிடந்து அஞ்சு பிள்ள பெத்த" என்று கூறி அம்மா மூச்சுவாங்கினாள். சித்தியும் நானும் அமைதியாக கேட்டுக்கொண்டேயிருந்தோம். இருவரும் மூச்சு வாங்கி பேசி முடிக்கும் பொழுது வாழைத்தண்டு நறுக்கி முடிக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டு அம்மா அடுக்களைக்குள் சென்றாள். பின்னால் எழுந்து சென்ற சித்தி "அவியலுக்கு தேங்கா அரக்கவா" என்றாள். ஆச்சி அதன் பிறகு எதும் பேசவில்லை இரவு அனைவரும் தூங்கியபின் , வீட்டின் முன்னிருக்கும் புதர் மண்டிய களத்தைப்பார்த்த படி ஆச்சி கால்நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகில் நான் படுத்திருந்தேன். திடீரென்று "எதுக்கு அந்தாளுக்கு அஞ்சு புள்ள பெத்தேண்ணு தெரியல" அழுதிருந்தாள். நான் பதில் கூறும் முன் கண்களை துடைத்துக்கொண்டு "ஆனா ஆளு மன்மதனாக்கும். நடையும் கெம்பீரமும் , மீசையும் இப்பொ நெனைக்கும் போதே எனக்கு புல்லரிக்கி. பின்னாலயே எல்லாம் கிறங்கி வந்து விழும். பொருக்கி எடுப்பாரு உங்க தாத்தா. உங்கப்பாலாம் கிட்ட நிக்க முடியாது" என்று சிரித்தாள் அது அவள் கூறியது விளையாட்டல்ல என்பது போலிருந்தது. "ஒரு விஷயம் சொல்லுகேன் யார்ட்டையும் சொல்லபபிடாது" என்றாள். இல்லை என்பது போல தலையாட்டினேன். "தாத்தா குடிச்சி விழுந்து சாகல , ஆளு அவராவே விழுந்து செத்துருக்காரு. துண்டு சீட்டுல ஊரு பேச்ச கேக்க முடியாதுண்ணு எழுதிருந்தாரு. உங்கம்மைக்கும் தெரியும் , ஆனா எனக்கு தெரியாதுண்ணு நெனச்சிட்டுருக்கா. நீ உங்கப்பா மாரியே வா" அதன் பிறகு அவள் ஒன்றும் கூறவில்லை அப்படியே மடங்கி படுத்துக்கொண்டாள்.

Wednesday 17 June 2020

ரயில் - சிறுகதை


மொத்தம் மூன்று நிறுத்தங்கள் இருக்கின்றன. கடினமான காரியம். இது நிலத்துள் ஒருபுறம் புகுந்து மறுபுறம் எழுந்து இரைபிடிக்கும் பாம்பு. மொத்தம் முப்பது நிமிடங்கள். தூங்க முடியாது கண்களுக்குள் பாம்பு நெளிகிறது. நடுப்புள்ளியொன்றில் நின்று தலை கிறுகிறுக்கிறது. சுவாசிக்க முடியாத பஞ்சு இருக்கைகளின் மணம். இப்பொதே இப்போதே வாந்தி எடுத்துவிடுவது எனக்கு நல்லது. முயற்சித்தால் வராது. அந்த எண்ணத்தை முற்றிலும் தவிர்க்க நினைக்கும் கணம் மீண்டும் பழைய வீரியத்தும் மூளையை பற்றிக்கொள்ளும். அடிவயிறு அழுத்த தொடர்ந்து பெருமூச்சுகள். மூச்சு முட்டுவது போல தோன்றி பின் வியர்த்து ,  அதிகமாக உமிழ்நீர் சுரக்கின்றது. ஏறுவதற்கு முன் அந்த ஆப்பிள் பன்னை குத்தித்திணிக்கமல் இருந்திருக்கலாம் , பொங்கி வெளியே வருகிறது. இந்த சிவப்பு பொத்தானை அழுத்தி இறங்கிவிட்டால்தான் என்ன , வண்டி நின்றால் அதை அழுத்திய என்னிடம் ஆயிரக்கணக்கில் கேட்கலாம். ஒரு வேளை நின்றுகொண்டு சென்றால் தலை சுற்றாதோ. எழுந்து பார்ப்போம். இல்லை இன்னும் அதிகமாக , இந்த ரயிலே என்னை மையமாகக்கொண்டு சுழல்கிறது. தினமும் இதே பிரச்சனை. அலுவலகத்திலிருந்து என்னறைக்கு செல்ல இது ஒன்றே நேரவிரமில்லாத வழி.

இவர்கள் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சிறிது தள்ளி நின்றாவது போய் பேசலாம். காது மடலில் தொங்கிக்கொண்டு ஊளையிடுகிறார்கள். கண்களை இறுக்க மூடிக்கொள்வோம். வண்ணங்கள் ,  நீலம் அதில் கலக்கும் மஞ்சள் அதிலிருந்து பிறக்கும் பச்சை பின் இளஞ்சிவப்பு. அருகில் ஒருவன் அமர்ந்துவிட்டான். இனி கண்களை மூடமுடியாது. அவனின் பெருத்த இடுப்பு என் கைமூட்டில் தட்டி குலுங்கிறது. எப்படியிருக்கிறான் , அழுக்கடைந்த மெல்லிய குளிரங்கி , அதனை கோடைக்கால மாதங்களில் கூட சிலர்  அணிந்தே திரிகின்றனர். வெள்ளை ஷூக்கள். நடுமூக்கில் சிறுவளையம். காதுகளில் என்கை நுழையும் அளவுள்ள வளையம். சுருக்கங்கள் நிறைந்த நெற்றி , பல நாள் தாடியுடன். கைகளில் காசு குறைந்த பீர் புட்டிகள். வறுமை நிரம்பிய இந்நாட்டுக்காரனின் அனைத்து உருவ லட்சணகளும் இவனிடம் உள்ளது. ஆ.....அவன் வியர்வை நெடி. வியர்வை இந்த நாட்டில் குளிரங்கிகளுடன் கலந்து புதுவிதமானதொரு வாசனையை உருவாக்குகிறது. என் மூக்கு அதனை உணரும் முதல் கணம் துணுக்குற்று அதனை விரும்பும் ஆனால் இரு நொடிகளில் குமட்ட ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது.

எதிரில் இருக்கும் பெண் நான் அவளை கவனிப்பதை பார்த்துவிட்டாள். இங்கு ரயில்களில் பேருந்துகளில் பொதுயிடங்களில் மனிதர்களை நேருக்கு நேர் பார்ப்பது கூட குற்றம். எல்லார் காதுகளிலும் புழுபோன்ற வஸ்து நெளிந்து கைப்பேசியுடன் இணைந்துள்ளது. வேறோரு உலகத்துடன் இணைக்கிறது , இங்கு இதைத்தான் பார்க்க ஆளில்லை. நான் அவளை பார்ப்பதை கவனித்த  பின் அதனை கவனிக்காததாய் தன் கைப்பேசியை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் இப்பொழுது எதிலொன்றிலாவது கவனத்தை செலுத்தியாக வேண்டும். இல்லை  குமட்டல் பின் வாந்தி புரண்டெழுந்து வரும். கையிலிருக்கும் புத்தகத்தை படிக்கலாம் என்றால் அதன் படங்களும் எழுத்துக்களும் விரிந்து பெருத்து பின் சுருங்கி மறைகின்றன. இடது கண்ணின் ஓரம் மங்கல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒற்றைத்தலைவலி , சீ இதற்கு நான் இன்று தயாராகவேயில்லை. கவனி எல்லவற்றையும் கவனி. வண்டி நின்றது முதல் நிறுத்தம். மடக்கியிருந்த கைவிரல்களில் ஒன்றை மட்டும் நீட்டி எண்ண ஆரம்பித்தேன்.

எதிரில் இருப்பவள் யார் , ஆம் அவள் பெண் அல்ல. மூதாட்டி. எங்களூரில் இவள் அவ்வை. சிவந்த சுருங்கிய முகம் , கண்களில் மஸ்காரா , செயற்கை இமைகள். அடிக்கும் உதட்டுச்சாயம். முன் வழுக்கை விழுந்த எலிவால் கேசத்தில் இளநீலநிறம். கால்களில் நேற்றோ இன்று காலையோ அடித்த சிவப்பு நகப்பூச்சு. நான் அதனை பார்த்துக்கொண்டிருந்த பொழுது கால்களை இருக்கையின் அடியில் இருட்டுக்குள் மறைத்துக்கொள்கிறாள். வண்டியின் குறுக்கு வெட்டு பாதியின் மறுபுறமிருக்கும் ஒருவனுக்கு கைகாட்டுகிறாள். அவன் அவளை கண்டும்காணாமல் தலையை திருப்பிக்கொள்கிறான். நான் அந்த செயலை கவனிப்பதை அவள் பார்த்துவிட்டாள். அவமானமாக உணர்ந்திருப்பாள். மிண்டும் அவள் நகங்களை பார்க்க முயல்கிறேன். இப்பொழுது ரயில் இருண்ட குகைக்குள் செல்கிறது பாதளத்திற்குள் செல்லும் பாம்பு. மூச்சு முட்டுகிறது. என்னை சுற்றிலும் காற்று இன்னும் அழுத்த மடைகிறது. அவள் எழுந்தாள். அடுத்த நிறுத்தம் வருகிறது என்று தானியங்கி ஒலிப்பான் கூறுகிறது. ஆ அவள் என்னைப்பர்த்து சிரிக்கிறாள் , இல்லை அது அவளின் வாய் அமைப்பு. வாயின் இருபுறமும் சுருங்கி மடங்கியுமிருப்பதால் இயல்பாகவே சிரிப்பது போல தோன்றுகிறது. வண்டி நின்றது அவள் இறங்கிச்சென்றுவிட்டாள். ஜன்னல் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டேயிருந்தேன் , ஒருரேயொருமுறை திரும்பிபார்த்தாள். சிரித்தாள்.

கதவுகள் மூட வண்டி  குலுங்குகிறது. ஆ....புளித்த ஏப்பம். வாய்வழியாக வரும் காற்று மூக்கில் மணக்கிறது. அந்த மணத்திற்கு என் உடம்பே அதிர்கிறது. மீண்டும் குமட்டல். இந்த வண்டி சீக்கிரம் என்று சேர்ந்துவிடாதா.

எனக்கு பின்னால் கம்பிக்கருவியின் இசை பயந்த புள்ளேன காற்றில் விருட்டென்று வருகிறது. திரும்பிப்பார்க்க வேண்டாம். சுருதி மீட்டப்படாத தந்திகள். அந்த இசை கீழ்த்தரமாக இருந்த போதிலும் அதை இசைப்பவன் அந்த சுருதி மாற்றத்தை தாண்டி அதன் ஆத்மாவை கடத்த முயல்கிறான். என்னருகில் வந்து விட்டான். கருத்த மேல் கோட்டு வெள்ளை உள்சட்டை , கருத்த டை மற்றும் கால் சட்டை. டையை திணித்து நேர்த்தியாக வைத்திருக்கிறான். கிராமங்களில் இருக்கும் துணிக்கடைக்கு பொம்மையாக நிற்கவைக்கும் அவ்வளவுக்கு நேர்த்தி. உருண்டையான ஆனால் கட்டான உடல். உருண்டை சிரியன் முகம். ஆங்காங்கே தெரியும் நரை ஆனால் அவன் கேசம் கருப்பல்ல , ஒரு மாதிரி செம்பழுப்பு. சிறிய உருண்டையான மூக்கு. சோகைபிடித்த ஆனால் பிரியமான கண்கள். ஒவ்வொரு செயலுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே ஒவ்வொருவராய் பார்க்கிறான். கையிலிருந்த தந்திக்கருவி செவ்வக வடிவில் மரத்தில் தட்டையாக ஒருமுறமிருந்து மறுபுறம் கம்பிகளால் இழுத்துக்கட்டப்பட்டிருந்தன. கைகளில் வைத்திருத்த குச்சியால் தட்டி தட்டி இசையை ஏவி விடுகிறான். ரயில் ஒருபுறம் செல்ல மறுபுறம் அந்த இசை மறுபுறம் தாவிச்செல்கிறது. தெரிந்த பாடல் ஆனால் நினைவில் கொண்டுவர முடியவில்லை. என்னைப்பர்த்து சிரிக்கிறான். கைகளில் ஒரு காலி காப்பிக்கோப்பை. அதிலிருக்கும் சில்லறைகளை குலுக்கி என்முன் வந்து சிரிக்கிறான். எதும் கொடுக்கப்போவதில்லை என்பது எனக்கே தெரியும். கையில் சில்லறைக்காசில்லை என்பது என் சாக்கு. என்னை தாண்டி செல்கிறான். அதே சிரிப்பு. குட்டையான உருவத்துடன் , பொம்மைப் படங்களில் வருவது போல நடந்து செல்கிறான்.

அருகில் உட்காருவதற்கு இடமிருந்தும் நின்றுகொண்டிருந்த சுவீடன் மக்கள். இதுவும் உடற்பயிற்சியென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. என் எதிரிலிருக்கும் அனைத்தையும் மறைத்துக்கொண்டு இவர்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கிறது. தீவிரமாக பேசும்பொழுதும் அவர்களின் குரல் அமைதியாக ஒலிப்பது கடவுளின் கிருபைதான். நானெல்லாம் பேசுவதேன்றாலே கத்துவதுதான். அவர்களின் பின்னொரு கருப்பன் கதவில் சாய்ந்து நிற்கிறானே. மிடுக்கான உடம்பு , உள்ளே சிவந்த வெளியில் கருத்த தடித்த கீழ் உதடு. அமைதியான முகம் , எப்பொழுதும் பதுங்குக்குழிக்குள் இருக்கும் குருவிக்குட்டி போல. என்ன பேசுகிறான் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் எங்களூர் கோலப்பனின் அச்சிவன். ஜிகு ஜிகுக்கும் உடைகள். அவனுக்கு பொருந்தவில்லை. ஆனால் அவன் விருப்பத்துடன் அணிந்திருப்பது போலிருக்கிறது.

இந்த நடுவயது சுவீடன்காரர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எவன் பேசுகிறான் என்றே தெரியவில்லை. ஒரு கூட்டம் ஒற்றை மனதாய் போசுவதுபோலிருக்கிறது.

"இவர்களை நாம் உள்ளே விட்டோம் அதும் ஒரு மனிதாபிமானத்துடன். மரியாதைக்கு பிழைப்பு நடத்த வேண்டும். வெறும் ஊளை ஜனங்கள். இந்த அகதிகளின் வரத்தை தடுக்க அரசு ஒன்றும் செய்வதில்லை. ஓரளவுக்கு இருக்கும் பொழுது நமக்கு பாதிப்பில்லை. அதுவொரு முட்டாள்தனமான செயல்"

"நாடு முழுவதும் பரவிவிட்டனர் , அவர்களின் நிலத்தப்போலவே நம் நிலத்தையும் மாற்றிவிடுவார்கள் ஒட்டுண்ணிகள்"

"தெருக்களில் , அங்காடிகளில்  இவர்களே நிரம்பியுள்ளனர் , நாம் சற்று தள்ளியே நிற்க வேண்டும்"

"இந்த ரொமேனிய அகதிகள் பிச்சை எடுக்கின்றனர் கூட்டம் கூட்டமாக. கொடுக்காவிட்டால் முறைக்கிறார்கள். அதுதான் அரசு எல்லாம் கொடுக்கிறதே , அதற்கு மேல் இவர்களுக்கு என்ன பிச்சை வேண்டியிருக்கிறது"

"நம் அரசு இவர்களை அனுமதிக்கிறது , ஆனால் அவர்களுக்கு தேவயானதை கொடுக்கவில்லை. இவர்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதில் இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது"

"எது ,  கடைகளில் புகுந்து துப்பாக்கி காட்டி திருடுவது நல்ல குணமில்லையா!"

"நான் அப்படி சொல்லவில்லையே , அவர்கள் தவறு செய்கிறார்கள் அதற்கு நம் அரசும் ஒரு காரணம் என்றுதான் சொல்கிறேன்"

"பிச்சை எடுப்பதைகூட நான் மன்னிக்க முடியும் , எனக்கு தோன்றும் பொழுது கொடுக்கிறேன். ஆனால் திருட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது"

"ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் உனக்கு தெரியுமா அவர்கள் தெருவில் தூங்குகிறார்கள்"

" ஆதுதான் பார்க்கிறோமே. அரசை குறைகூறி என்ன புண்ணியம். அவர்களால் முடிந்ததைதான் செய்ய முடியும். ஏன் நீ உன் கைகாசு அனைத்தையும் கொடுத்துவிடேன் பிரபுவே"

"கொடுப்பேன் , காலம் வரும் பொழுது"

"இருக்கலாம். நாம் இவர்களுக்கு போரிலிருந்து சுதந்திரம் கொடுத்தோம். வாழ வழி செய்தோம். ஆனால் இங்கு கொள்ளையடிக்கிறார்கள். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை"

"நாம் சர்வதேச அளவில் முதல் பத்து இடத்திற்குள் இருக்கிறோம் தெரியுமா"

"எதில் ?"

"ஆயுதங்கள் விற்பதில் , சிரியாவிற்கு நம் சரக்கு அதிகம் போயிருக்கும். நாம் இங்கு அமைதியாக இந்த ஒட்டுண்ணிகளின் நடுவில் வாழ்வோம். நாம் சொகுசாக இருப்பதற்கு துப்பாக்கி செய்கிறோம்"

"நேற்று நாம் கால்பந்தாட்டத்தில் ஒரு இந்தியனைபோல விளையாடித்தோற்றொம். அடுத்த அடி எடுத்து வைக்க ஒவ்வொருத்தனும் பிதாவிடம் அனுமதி கேட்பார்கள் போல. சுத்த சோம்பேறிகள்"

அவர்கள் பேசியதில் ஒரு விசயத்தை விட்டுவிட்டனர். ரொமேனியா ஐரோப்பாவில் இருப்பதாலேயே அந்நாட்டு அகதிகளை கொஞ்சமும்  கவனிக்காமல் அப்படியே விடுகிறது சுவீடன் அரசு. தங்கள் நாட்டினரின் வரிப்பணம் அவர்களுக்கு செலவளிக்கப்பட விருப்பமில்லை. இதனை பேசிக்கொண்டிருந்த இவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. ஆனால் அகதிகளின் மனநிலையை அறிந்து கொள்ள அவர்கள் என்னிடம் பேசியிருக்க வேண்டுமே. இவர்களிடம் நிற வெறுப்போ அகதிகளிடமான வெறுப்போ இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அது நேரடியாகயில்லை. வேலை இல்லாதவனே பிச்சை எடுக்கிறான். இவர்கள் ஐ எம் 2015  என்ற சமூக வலைதள இயக்கத்தை மறந்திருக்கலாம். ஆனால் அகதிகளாகிய நாங்கள் அதனை மறக்க முடியாதல்லவா.

ஆ....வண்டி நின்றுவிட்டது , ஓ.....அவன் விழுந்திருப்பான் அந்த இசைகருவியிலிருந்து வரும் இனிய அதிர்வொலி. தட்டுத்தடுமாறி இறங்கிவிட்டான். நீங்கள் அந்த கலைஞனை தீண்டாமல் செல்லுங்கள். அவனும் ஓர் ஒட்டுண்ணியல்லவா. எதிரில் பெட்டியின் கடைசியில் ஒரு அரேபியக்குடும்பம். செழிப்பாக உள்ளது. இந்த குழந்தைகளின் கருவிழிகள் அவர்களின் மிருதுவான மென் சிவப்பு நிறத்திற்கு துடிப்பாகத்தெரிகிறது. அருகில் இருக்கும் இளம்பெண் பேரழகி. சில அகதிகளுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. ஆனால் பலருக்கு இது கடலில் கலந்த உப்புப்பரலை கண்டுபிடித்து விடலாம் என்று காத்திருப்பது போல. வினோதம் என்னவென்றால் தேடுபவன் இவர்களில்லை.

வண்டி கிளம்பிவிட்டது , அருகில் ஒரு கருப்பின குடும்பம். ஒரு பெரிய பெண் மற்றம் ஒரு குழந்தை. மூக்கிற்கு கீழுள்ள பள்ளம் விரிந்து தட்டையாகவுள்ளது. பெரிய மூக்கு துவாரங்கள் ஆனால் சப்பையான மூக்கு. என் எதிரில் அந்த குழந்தை. மினுங்கும் கருப்பு எருமையின் பின் தசைத்தோல் சிறிய ஒளியில் ஜொலிக்கும் அது போன்றது. தலை சிறிய பல பின்னல்களாக சிலிர்த்துக்கொண்டு நின்றது. விரிந்த கண்களால் என்னை கைகாட்டி குமிழுதடுகளால் சிரிக்கின்றது . அவளின் அம்மாவாக இருக்காலம் அவளை அழைத்துக்காட்டி மீண்டும் சிரிக்கிறது. என் பையிலிருந்த கெய்ஷா சாக்லேட்டை கொடுக்கலாம். ஆனால் அவள் வாங்கிக்கொள்வாளா ? . நானும் சிரித்துக்கொண்டே அதனை அவளிடம் கொடுத்தேன். அம்மாவைப்பார்த்தது, அவள் தலையசைத்ததும் வாங்கிக்கொள்கிறாள். அந்த அம்மா என்னிடம் உதிரி ஆங்கிலத்தில் என்னவெல்லாமோ பேசுகிறாள் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் ஒரு துண்டு பிரசுரத்தைக்கொடுத்தாள். அதில் "ஜீசஸ் காலிங்" என்ற எழுத்துக்களுடன் மேலே ஏசு கைகள் விரிய நிற்கிறார். எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களை அரவணைத்துக்கொள்கிறேன்.

வண்டி நின்றவுடன் அந்த குடும்பம் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். நண்பர் கொடுத்த புத்தகம் கையிலிருக்கிறது. "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" 

அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டு. இரவு என்ன சமைக்கலாம் என்று யோசித்தால் நல்லது.

Friday 12 June 2020

குமாஸ்தா - சிறுகதை


ஒன்று :
பதற்றமற்றிருந்தான் , அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதனை பல முறை செய்திருந்தாலும் அதற்கான திட்டமிடுதல் ஒழுங்கான முறையில் இருப்பதாக தோன்றும் , ஆனால் அதனை செயல்படுத்தும் கணம் முற்றிலும் வேறோரு தளத்தில் மனம் இயங்குகிறது என்பதை அறிந்திருந்தான். இந்த முறை அந்த செயல் நடக்கும் கணத்தில் தான் முழுவதுமாய் இருப்பதில் பயிற்சி பெற்றவனாய் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஆனால் அதொரு பாவனைதான் என்பதை உள்ளூர அறிந்திருந்தான். வெளியூரிலிருக்கும் அந்த நவீன பல்பொருள் அங்காடியின் ஒவ்வொரு பொருளாக எடுப்பதும் பின் அதன் விலையைப்பார்ப்பதுமாயிருந்தான். அவன் திருட வந்திருப்பது அவனைத்தவிர அனைவருக்கும் தெரிந்து விட்டது போலிருந்தது அவனது செய்கைகள். ஆனால் அவனை உண்மையாகவே ஒருவரும் கவனிக்கவில்லை. சூதாட்டத்தின் ஒரு முனையில் தான் இருப்பதாகவும் மறுமுனையில் கடை ஊழியர்களும் அவர்களுக்கு காசள்ளிக்கொடுப்பவனாய் முதலாளியும் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தான். இது போன்ற சூழ்நிலைகளில் அவன் அங்கில்லாமல் ஒரு அமைதியான நதிக்கரையோரமாகவோ அல்லது யாருமில்லா அறையில் நிர்வாணமாய் இருப்பதாகவும் நிதானமாக தன் கை கால்களை இயங்கவிடுவான். "என்ன சார் வேணும்" என்றான் ஒரு ஊழியன் "இல்ல அது...கருப்பா ஒரு சீப்பு" என்றான் ஸ்டாலின் "காஸ்மெடிக்ஸ் முதல் மாடி சார்" என்று கூறி அந்த ஊழியன் நகர்ந்தான். "நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் , பயம் அது மட்டுமே நீ , சீ வெட்கமாக இல்லையா உனக்கு , ஒரு சாதரண மனிதன் உன்னை பயமுறுத்தி விட முடியும் , உன்னை என்னவெல்லாமொ நினைத்தேன். உதவாக்கரை" என்று முனங்கினான். அருகில் அந்த ஊழியன் அவனைப்பார்த்தான். "என்ன ?" என்றான். அவன் கண்களில் அதிகாரமிருந்தது. "ஒண்ணுமில்ல சார்" என்று பதற்றத்துடன் பழைய பொருட்களை தூசிதட்ட ஆரம்பித்தான். அதே அதிகாரத்தொனியில் வாய்க்குள் ஏதுமில்லாமல் வெறுமென முனங்கினான். அந்த ஊழியன் அடிபணிந்தவனாய் அடிமைச்சிரிப்பு சிரித்தான். மீண்டும் அவனை திரும்பிப்பார்க்காமல் ஸ்டாலின் படியேறி முதல் மாடிக்குச்சென்றான். அங்கு யுவதிகள் மட்டுமே பணியிலமர்த்தப்பட்டிருந்தனர். அவன் படியேறி அந்த அறைக்குள் நுழைந்ததும். "வெல்கம் சார் , என்ன வேணும்" "நான் பாத்துகுறேன்" என்றான் அவள் எதும் சொல்லவில்லை. விலகிச்சென்று அங்கிருந்த தன் தோழியிடன் அவனைக்காட்டி கண்ணடித்து , "இவன்லாம் கஸ்டமரு" என்று சிரித்தாள் "நான் இங்கு வந்திருப்பது எதற்கென்று இவர்களுக்கு தெரியாது தெரிந்தால் என்னை அடித்து துவைக்கலாம் , அடித்து முடித்தவுடன் பரிதாபத்துடன் என் கையில்லாத தம்பி , புற்றுநோய் அப்பா , கல்யாணமாகாத அக்கா ஆகியவர்களை நினைத்து மனம் கனிந்து ஒரு நூறு ரூபாய் தரலாம். நான் முறைத்த அந்த ஊழியன் என்னை கால்களில் போட்டு மிதிக்கலாம் , இந்த பெண் என்னைப்பார்த்து இரண்டு மிதி கூடுதலாக கொடுக்கச்சொல்லலாம். சட்டை கிழியாலாம் , போலீஸ் வரலாம். ஆனால் மடையனே இது அனைத்தும் நடக்க நீ அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். அது வாலசலின் அருகில் தான் உள்ளது. மேல் மாடியிலிருந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய். பயந்தாங்கொள்ளி. ஆம் அவள் என் முகத்தில் வழியும் வியர்வையைப் பார்த்து சிரிக்கிறாள். சிரிக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு ஓடிய பிறகு இவர்கள் வாழ்க்கையில் நான் ஒரு திருடனாக என்றுமே இருப்பேன். மறக்கமுடியாதவன் நான். நாளை அலுவலகம் செல்ல வேண்டும் பாதியில் வைத்த கோப்புகள் அப்படியே உள்ளன மேனேஜர் கேட்கும் முன் அதனை அவர் மேசையில் வைப்பது நல்லது. முகத்தை துடைத்துக்கொள்வதும் நல்லது" என்று நினைத்தவாறு அவன் முன்பு சொல்லிய அதே கருப்பு சீப்பை எடுத்துக்கொண்டான். "இது பொண்ணுங்க யூஸ் பண்றது சார்" "தெரியுது" என்றான். மீண்டும் அவளின் முகத்தில் அதே சிரிப்பு. "நான் இவர்களின் கண்களில் கோமாளியாக தெரிகிறேனா ? , நான் எதையும் செய்பவன் , எடுத்துக்கொண்டு ஓடும் பொழுது , உங்களின் கண்படாமல் நான் மறைந்து சென்ற பிறகு நீங்கள் சொல்லலாம் 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள ஓடிட்டானே' 'சரியான திருடனா இருக்கானே' 'கைல சிக்கட்டும் பாத்துக்குவோம்' 'அவன நான் அப்பொவே பாத்தேன் முளியே சரியில்ல, அப்பவே சொல்லிருபேன் , நாம கொஞ்சம் சூதுவாது தெரியாதவனா போய்ட்டோம்' கடைசியாக சொன்னவனின் பைகளில் காப்பிப்பொடி டப்பாவோ பருப்பு பாக்கெட்டோ ஒளித்து வைத்திருப்பான் கள்ளன்." என்று நினைத்துக்கொண்டான். படிகளில் இறங்கி பில் போடப்படடும் இடத்திற்கு சென்றான். முகத்தில் முன்பிருந்த அதே அதிகாரத்தோரணையை வரவழைத்துக்கொண்டான். அவன் மார்புகள் தெளிவாகத்தெரிய அதனை பில் போடுபவன் கனவிக்க ஸ்டாலின் சுதாகரித்துக்கொண்டான். வியர்வையால் நனைந்திருந்த சட்டையை சரிசெய்துகொண்டான். "அம்பது ரூபா சார்" என்றான் பில் போடும் ஊழியன். ஸ்டாலின் வாசலில் இருந்த பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் சொன்னது இவன் காதில் விழவில்லை. "சார் அம்பது ரூபா" கைகளில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ரூபாய் தாளை கடை முதலாளியிடன் கொடுத்து பெட்டியை நெருங்கினான். பெட்டியை எடுத்துக்கொண்டு ஓட நினைக்கும் கணம். கடை முதலாளி "சார் மீதி ? " என்றார். அனைத்தையும் மறந்தவனாக "சும்மா சார் பாத்தேன் , நான் அந்த சீப்பு வாங்க வந்தேன் , காசு குடுத்துட்டேன் , பில் கூட இருக்கு" என்று கையிலிருந்த பில்லை நீட்டினான். "மிச்ச காசு சார் , அம்பது ரூபா . பெட்டி உங்களுதா" என்றார் கடை முதலாளி. "இல்ல..மறந்துட்டேன். நன்றி" என்றவாறு கடையிலிருந்து வெளியேறினான். பீதியுடனிருந்த அவன் முகம் இப்பொழுது விளரி , செம்பளுப்பாக மாறியது "சீ , இதற்கு நான் யாரையாவது வலுக்கட்டாயமாக பிடித்து கால்களை நக்கலாம் , எல்லா இடங்களிலும் பயம் , எங்கயாவது தைரியமாக எதாவது செய்திருக்கிறாயா , ஒன்றுக்கும் லாயக்கில்லை , தரையில் இருக்கும் பீ. எல்லாரும் மிதித்து செல்லலாம் அவர்களின் முகத்தில் அருவருப்புடன்" வெயில் எரித்தது. அவனும் எரிந்துகொண்டிருந்தான். அருகில் நடந்து சென்ற ஒருவன் அவனை கவனிப்பதை உணர்ந்ததும். சாதரணமாக முகத்தை மாற்றிக்கொண்டான். அருகில் சென்றவனைப்பார்த்து அவனால் சிரிக்கக்கூட முடிந்தது. ஆனால் அது ஒரு நொடிதான். மீண்டும் அதே எரிதல். " திரும்பிச்சென்றால்தான் என்ன ? , இந்த முறை கண்டிப்பாக எடுத்துவிடலாம் , தவறுகள் ஒரு முறைதான் நடக்கும். முகத்தை சாதாரணமாக்கு , சிரி , இனி போவோம்" என்றவாறு மீண்டும் அதே கடைக்குச்சென்றான். முதலாளி இருந்த இடத்தில் காலி நாற்காலியிருந்தது. அந்த ஊழியனில்லை. பில் போடுபவனுமில்லை. அவன் கடையில் முன்பு பொருள் வாங்க வந்திருந்த ஒருவன் எதோ ஒரு பொருளை இன்னும் தேடிக்கொண்டிருந்தான். மாடியில் சென்று பார்க்காலாம் என்று நினைத்தவனாக படிகளில் ஏறினான். அங்கு அந்த பெண்ணிருந்தாள். "என்ன சார்" என்றாள் "நான் பாத்துக்கிறேன்" என்றான். அவள் மீண்டும் முன்பு நின்றிருந்த அதேயிடத்தில் போய் நின்று கொண்டாள். அவன் பொருள் எடுப்பது போல பாவனையுடன் மீண்டும் தேட ஆரம்பித்தான். "நின்று கொண்டேயிருக்க வேண்டும் , கொடுமையான வேலைதான். நான் பரவாயில்லை அமர்ந்திருக்கலாம். சாதரண வாழ்வு. இதில் வரும் சம்பாத்தியத்தை வீட்டிற்கு கொடுப்பாள். காதுக்கு புதிதாக கம்மல் வாங்குவாள். அதன் குலுக்கத்தைப்பார்த்து எவனாவது காதலிப்பதாக சொல்வான். பிறகு கல்யாணம் மீண்டும் அவளைப்போன்றே ஒரு குழந்தை மீண்டும் இதே போன்றதொரு வேலை கால்கடுக்க மீண்டும் நிற்பானோ நிற்பாளோ. நாம் எல்லோரும் புராதான மரம் போன்றவர்கள் நின்றுகொண்டேயிருப்போம் மாற்றமில்லாமல்." அவளிடமிருந்து பார்வைவை விலக்கியவாறு. "அது இருக்கட்டும் இருவர் மட்டுமே கடையில் இருக்கின்றனர். இது சரியான கணமில்லை. மற்ற ஊழியர்களுமில்லை. காத்திருக்கலாம் , ஆனால் எவ்வளவு நேரம். ஜெஸ்டின் பசியோடிருப்பான். சாப்பிட வாங்கிவருவதாக சொல்லியிருக்கிறேன். நேரமானால் ஜூலி என்னை இரண்டாக பிளந்தேவிடுவாள். சீக்கிரம் செல்ல வேண்டும் ஆனால் எப்படி?. ஜூலிக்கு எதாவது ஹேர்டை வாங்கிச்செல்லலாம். ஆம் அவள் முடி நரைத்துக்கொண்டே வருகிறது, என்னுடையதும்தான். அடித்து முடித்ததும் அவள் இளமை துளிர் விடும். பழைய நினவுகளில் புணரலாம். புணர்வதும் இப்பொழுது சலிப்பாகிவிட்டது. நேரப்போகென்று வேண்டுமானல் புணரலாம்" என்று நினைத்துக்கொண்டான். "நீ சாப்புட போயிட்டுவாம்மா , சீக்கிரம் வந்துரு" கீழிருந்து கேட்டது முதலாளியின் குரல். "அவள் போகும் முன் நான் அதை செய்ய வேண்டும். என்னைப்பார்த்து சிரித்தவளல்லவா அவள்." என்று நினைத்தவாறு படியில் அவளுடன் இறங்கினான். அவளைப்பார்து சிரித்துக்கொண்டான். அது கள்ளமில்லாமலிருந்தது. "என்ன சார் எதாச்சும் மறந்துட்டீங்களா" என்றார் முதலாளி சுற்றி பார்த்தவன் அங்கு அந்த ஊழியர்களும் , முன்பிருந்த வாடிக்கையாளரும் இருந்ததைப்பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான். "இனி நான் தொடங்குவேன்" கையிலிருந்த ஹேர் டை பாக்கெட்களை பில் போடுபவனிடம் கொடுத்தான். அவன் பில்லை ஸ்டாலினிடம் கொடுத்து முதலாளியிடம் பொருளை கொடுத்தான். அவர் கைகளில் காசைக்கொடுத்து , பொருளை வாங்கியவுடன் டைல்ஸ் தரையில் ஒருமுறை வழுக்கி விழுந்து அந்த பெட்டியைப்பற்றிக்கொண்டு வேகமாக வெளியே ஓடினான். பின்னாலிருந்து குரல்கள் கேட்டன. யாரோ ஒருவன் துரத்திக்கொண்டு வரும் செருப்பு சத்தம் கேட்டது. திரும்பிப்பார்க்கவேயில்லை. சாலையில் இருவர் மீது மொதி விழாமல் சென்றுகொண்டிருந்தான். ஆனால் அந்த செருப்புச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. தொந்தி குலுங்கிக்கொண்டேயிருந்தது. மூக்குக்கண்ணாடி விழுந்து விடாமல் கைகளால் பிடித்துக்கொண்டே ஓடினான். அந்த கடையிருந்த பிரதான சாலையைத்தாண்டி இடப்பக்கம் திரும்பி பின் வலப்பக்கம் திரும்பி ஒரு சிறிய தெருவிற்குள் நுழைந்தான். அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டு மூச்சு வாங்க பலமுறை எச்சில் துப்பிக்கொண்டேயிருந்தான். ஒருமுறை துப்பியது அவன் கால்களிலேயே விழுந்தது. தெருவில் கிடந்த பேப்பர் ஒன்றினால் அதனை துடைத்துக்கொண்டு. ஜெஸ்டினுக்கு சாப்பாடு வாங்க ஒரு சாதாரண கடைக்குச்சென்றான். இரண்டு : "எதுக்கு இப்டி ஓடுறாரு" என்றார் முதலாளி "என்னனு தெரியல , கைல அந்த பெட்டி அவர் வரும் போது கொண்டு வரல" என்றாள் அந்த பெண் "அப்போ யாரோடதையோ தூக்கிட்டு போய்ட்டானா" என்றான் ஸ்டாலின் முதலில் பார்த்த ஊழியன் "மொதல்ல கேக்கும்போது அது அவரோடதில்லனு சொன்னாரு" "திருட்டுப்பய , நல்லா பிளான் பண்ணி தூக்கிட்டு போய்ட்டான் , நான் மொதல்லயே நெனச்சேன் , அவன் முளியே சரியில்ல. சும்மா பொருள தேடுறது மாதிரி பாவன காட்டிட்ருந்தான்" என்றான் உண்மையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில். "நம்ம கடைல யாரோடாதானு தெரியலயே" என்றார் முதலாளி "இல்ல அவர் கடைக்குள்ள வரும்போதே கொண்டு வந்தாரு. அவரேதான் அங்க வச்சாரு. எதுக்கு அத எடுத்துட்டு ஓடுனாருன்னு தெரியல" என்றார் பொருள் வாங்க வந்திருந்தவர். "அத எடுத்துட்டு எதுக்கு இப்டி லூசு மாதிரி ஓடுனான் அந்தாளு" என்றார் முதலாளி "இல்ல சார் , நான் பாத்தேன் அது வேற ஒரு கஸ்டமரோடது. ரெகுலர் கஸ்டமர்தான். மறந்து வச்சிட்டு போயிருக்கலாம். வந்து கேட்டா என்னத்த சொல்ல. எவனும் தொரத்தாமலேயே இந்த ஓட்டம் ஓடும் போதே தெரியல. கண்டிப்பா திருட்டுதான். அதுல என்ன இருந்துச்சோ" என்றான் அந்த ஊழியன். "இல்ல சார் அவர பாத்தா அந்த மாதிரிலாம் தெரியல. என்ன பாத்து ரொம்ப நார்மலா சிரிச்சுட்டுதான் போனாரு. வேற பிரச்சனையா கூட இருக்கலாம்." என்றாள் அந்த பெண். மூவரும் பொருள் வாங்க வந்திருந்தவரைப்பார்த்தனர். "கொண்டு வந்த மாதிரிதான் எனக்கு ஞாயபகமிருக்கு , இந்த பொருளுக்கெல்லாம் பில்ல போடுறீங்களா. எனக்கு டைம் ஆச்சு" அவசரப்படுபவரைப்போலிருந்தார்.பொருட்களை வாங்கி வெளியே வந்ததுமே அவருக்கு சமாதானம் ஆகியது. மூன்று : ஸ்டாலின் குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த விடுதிக்குச்சென்றான். வெளியூருக்கு குடும்பத்துடன் செல்லும் பொழுதெல்லாம் இதே போன்றதொரு சாதாரண அறையை எடுக்க வேண்டாமென ஜூலி சொல்லியும் அவன் கேட்பதில்லை. வியர்த்து ஈரமாகியிருந்த சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டிவிட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். சாம்பார் சாதாம் ஆறிவிட்டிருந்தது. இரண்டு உருண்டைகளில் ஜெஸ்டின் அதனை முடித்து கைகளை நக்கிக்கொண்டிருந்தான். "இன்னிக்கி இவன் செஞ்ச வேலைய நீங்க கேக்கணுமே" என்றாள் ஜூலி "அம்மா வேண்டாம்" என்றான் ஜெஸ்டின். அதற்குள் அவன் முகம் சிறுத்துவிட்டிருந்தது ஸ்டாலின் சாப்பிட்டவாறே என்ன என்றான். "கீழ தெருக்கடைல ஒரு பென்சில கடக்காரருக்கு தெரியாம எடுத்துட்டான் , அத அவரும் பாத்துட்டாரு. அவரும் சிரிச்சுட்டே அத இவன் கைல கொடுத்துருக்காரு, எங்கிட்ட வந்து குடுத்தான். எனக்கு என்ன சொல்லனு தெரியல." ஸ்டாலின் முகம் சிவந்தது. எச்சில் கையுடன் எழுந்து அவன் முகத்தில் மாறி மாறி அறைந்தான் . ஜெஸ்டின் அலற ஜூலி ஸ்டாலினை தடுக்க முயன்றாள். ஆனால் அவளால் தடுக்க முடியவில்லை. அவனை தள்ளிவிட்டு மிதித்தான். பின் சுவரின் ஓரமாய் சாய்ந்து குந்தி அமர்ந்து கைகளைக்கொண்டு தலையைத்தாங்கி அழுதான். ஜீலியும் ஜெஸ்டினும் அழுது ஓய்ந்த பின்னரும் ஸ்டாலின் அழுது கொண்டேயிருந்தான் இரவு பேருந்தில் ஊருக்கு புறப்படும் நேரம். அந்த பெட்டியைத்திறந்தான் அதில் அவனது இரு உடைகள் இருந்தன. "இந்த பெட்டிய மாத்தணும் சீக்கிரம் , எவ்வளவு நாள்தான் இதையே வச்சி ஓட்டுறது" என்றாள் ஜூலி.

Friday 29 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 3 : நெப்போலியன்


ஒருவன் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்து அவனால் அடைய முடிந்த உச்சநிலையை அடையும் பொழுது அதும் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த மனதின் எழுச்சியிலிருந்து உருவாகிவருபவன் என்றால் அவன் அந்த சமூகத்தில் ஓர் ஆழ்ந்த அடையாளத்தை பதித்து விடுகிறான். நெப்போலியன் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கூட்டுமனதின் எழுச்சியாக வந்தது அங்கிருந்த பெரும் படைப்பாளிகளின் படைப்புகளில் வருவதில் ஆச்சரியமில்லை. ஆனால் ரஷ்யாவின் இரு பெரும் படைப்பாளிகளான டாஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும் இரு வேறு புள்ளிகளில் நெப்போலியனை அணுகுகிறார்கள்.

வரலாறு அதன் போக்கில் நகர்கிறது அதற்கு ஒரு சரியான வழிமுறைகளோ அல்லது முன்னே இழுத்து விடப்பட்ட ஆட்டு மந்தைகளின் நேர்க்கோட்டு பாதைகளோ இல்லை. அதன் சம்பவங்களின் தொடரானது நாம் நினைக்கும் ஓர் தனிமனிதனின்  சிந்தனை ஓட்டத்தாலில்லை. அதன் ஆதி அல்லது சக்தி  அறியமுடியாதது. அப்படியானால் பாதிக்குமேற்பட்ட பிரஞ்சுப்படைகளின் இறப்பிற்கும் , பிரஷ்யாவின் , ஆஸ்த்ரியாவின் தோல்விக்கு , மாஸ்கோ எரிக்கப்பட்டதற்கு காரணம் யார் ? , அந்த தனிமனிதன் இல்லையெனில்  அது எங்கிருந்து பிறக்கிறது. இந்த கேள்வியை நாம் கேட்டுக்கொண்டோமானால் நாம் டால்ஸ்டாயின் நெப்போலியனை நெருங்கி மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து விலகி உணர்ந்துகொள்ளலாம்.

இந்த அணுகுமுறையிலேயே டால்ஸ்டாய் நெப்போலியனை நெருங்குகிறார். முழுமையான தன் அகங்காரம் கொண்டவன் என்றொ , புரட்சியை உருவாக்கியவன் என்றோ , குன்றாத வீரன் என்றோ , ஐரோப்பாவின் ரட்சகர் என்றோ , சத்தியத்தை நிலைநாட்டவந்தவன் என்றொ அவர் நினைக்கவில்லை. அவன் ஒரு பிரபஞ்ச ஆலமரத்தின் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு பச்சை இலை என்ற அளவில் மட்டுமே சேர்த்துக்கொள்கிறார். அவர் நாவல் முழுக்க எழுப்பும்  கேள்விகள் நெப்போலியன் மீது உலகம் அப்பொழுது கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிறது. அல்லது டால்ஸ்டாயின் சித்தாந்தம் அதனை ஏற்க மறுக்கிறது.

நெப்போலியன் எனும் மாவீரன் என்ற கருத்திற்கு டால்ஸ்டாய் பின்வறுமாறு கூறுகிறார் , "போலந்திலும் பிரஷ்யாவிலும் தன் மாவீரத்தினால் வென்றவன் ஏன் ருஷ்யாவில் தோற்று பின்வாங்க வேண்டும் , எங்கே அந்த வீரம் எங்கு சென்றது மற்றும் பிரஞ்சு தேசத்தின் சமுதாய முன்னேறத்திற்காக தர்மத்தின் வழி உருவாகி வந்தவன் ஏன் மற்ற தேசங்களில் கொலைக்களங்களை உருவாக்க வேண்டும்". இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அவர் நெப்போலியனை ஒரு சாதாரண சிப்பாய்க்கும் வித்தியாசம் இல்லை என்பதை நிறுவுகிறார். இந்த தகவல்கள் அனைத்தும் ஆசிரியர் நேரடியாகவே வாசகனுடன் பகிர்கிறார். ஒரு கட்டுரை வடிவத்தில் , இது நாவலுக்கு ஒரு தடை என்ற போதிலும் அனைத்து வரலாற்று ஆசிரியர்களின் நோக்கையும் விலக்கி ஒரு முழு புதிய பாதையை நம் முன் வைக்கின்றது. (காந்தி இந்த போக்கை முற்றிலும் உணர்ந்தவர் என்றே எண்ணத்தோன்றுகிறது. வரலாற்று ஓட்டத்தில் தன் நிலை என்ன என்பதை உணர்ந்த ஒரு தீர்க்கதரிசியாக அவர் எல்லா போராட்டங்களிலும் பங்காற்றியுள்ளார்)

நெப்போலியன் கூறும் உத்தரவுகள் பாராடினோவில் போர்க்களத்தை சென்று சேரும்பொழுது அவர் கூறியதற்கு நேர்மாறாக பிரகடனப்படுத்தப்படுகிறர்து. ஆனால் அதே ஆள் ஆஸ்டர்லிஜ்ஜில் கூறிய உத்தரவுகள் மூலமாகவே அவர்கள் வெற்றிபெற்றனர் எங்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள் இந்த முரண்பாடை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதில் எங்கு நெப்போலியனின் மாவீரம் உள்ளது என்பதே அவரின் கேள்வி.

நீட்சேவின் அதிமனிதன் என்னும் கருதுகோள் அவருக்கு ஒரு நிரூபிக்கமுடியாத உண்மையே. ஒரு தனிமனிதன் மொத்த வரலாற்றின் ஓட்டத்தை கைகொள்வான் என்பது ஒரு குழந்தை வேண்டுமானால் நம்பும் ஆனால் நான் அதற்கு ஆளில்லை என்பது போல கூறுகிறார் டால்ஸ்டாய்.

தாஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிகாவை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அவன் செய்யும் குற்றம் கொலை , அதன் நோக்கம் என்று அவன் தன்னை அறிவுறுத்திக்கொள்வது "அவள் ஒன்றிற்கும் உதவாத பேன் போன்றவள். அவளால் இந்த உலகத்திற்கு தொல்லை மட்டுமே. ஒரு நல்ல செயலுக்காக அவளை நான் கொன்றேன் இதில் என்ன தவறிருக்கிறது" இதற்கு அவனுக்கு  உந்து சக்தியாக இருப்பது நெப்போலியன் எனும் கருதுகோள். அவனின் மாவீரம் ,  செய்த போர் , கொன்றோளித்த மக்கள் எல்லாமே ஒரு நல்ல செயலை , ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவே. இதை அவன் பலமாக நம்புகிறான். அதுவே அவனை கொலை செய்ய தைரியப்படுத்துகிறது , மனசாட்சியும் அதை ஏற்றுக்கொள்கிறது.

இதை நாம் உலகின் அனைத்து மாவீரர்களின் ரத்தக்கறைக்கு சமானப்படுத்த முடியும். ஸ்டாலின் ,  மாவோ , ஹிட்லர் என்று அனைவரும் விரும்பியது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது என்பதுதான். ஆனால் அவர்கள் கைகள் ரத்தக்கறைகளுடன் இருக்கின்றன. ஒரு வேளை நெப்போலியன்  , ஸ்டாலின் , ஹிட்லர் அனைவருக்கும் ஒரு சிறு தருணம் , தன் மனசாட்சியைத்திறக்கும் சோனியா போன்றோரு பேரொளி கைகளில் கிடைத்திருந்தால் அவர்கள் தங்கள் அகங்காரக்கண்கள் குருடாக மனம் திறந்த்திருக்குமா! என்று எத்தனிக்கிறார்.

தாஸ்தாவெஸ்கி நீட்சேயின் அதிமனிதன் என்னும் கருத்தை நம்புகிறார். ஆனால் அதன் மற்றோருபக்கத்தைப்பார்க்கும் பொழுது அது அழுக்கடைந்து பிணவாடையுடன் கிடக்கின்றது. அந்த மனிதனுக்கு நான் ஒரு ஒளியைக்கொடுத்தால் என்னவாகும் என்று எண்ணிப்பார்க்கிறார்.

Wednesday 27 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 2 : தந்தையை கடத்துதல்


மரபென்பதை நாம் வரையறுக்க முயலும் போதோ அல்லது வரலாறு என்பதை நாம் எழுத நினைக்கும்போதோ நாம் முன்னோர்களை தேடிச்செல்கிறோம். அப்படி நாம் தேடிச்செல்லும் போது முதலில் கண்டடைவது நம் பெற்றொர்களையே அங்
கிருந்து தான் நாம் நம் வந்தவழியை பின்னோக்கி பார்க்கமுடியும். நான் எப்படிப்பட்டவானாக இப்பொழுது உருவாகியிருக்கிறேன் என்று நோக்கும் பொழுது என் தந்தையின் பயம் , கோபம்  , அனைத்தையும் உடனே நம்பும் தன்மை சகித்தல்  போன்ற சிலகுணங்கள் அதும் அச்சுபிசகாமல் அப்படியே இருப்பதைக்காண முடிகிறது. இத்தனைக்கும் என் அன்னை நான் ஒருபொழுதும் என் தந்தையைப்போல் வரக்கூடாது என்றே கூறியிருக்கிறாள் நானும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளேன். ஆனால் என் இருபத்தெட்டுவயதில் நான் அடையக்கூடாதென்று நினைத்த இடத்தயே வந்து சேர்ந்துள்ளேன்.

ஓடைகள் இணைந்து ஒரு சிறு பாசிபிடித்த பழங்கால குளத்தில் தங்குவது போல் நான் அங்கு சென்று தங்கியிருக்கிறேன். போரும் வாழ்வும் நாவலில் வரும் தந்தைகள் தன் குழந்தைகள் மீது அவர்களின் ரேகைகளை பதித்துவிடுகிறார்கள். அது சிலசமயம் அழியாமல் இருக்கிறது அல்லது அதன் நேரெதிர்திசையில் வளர்ந்து சென்றடைகிறது.

வயோதிக பால்கோன்ஸ்கியின் குணங்கள் மேரி , ஆன்ட்ரூ ஆகிய இருவருக்கும் கடத்தப்படுகிறது. மேரி அவளின் தந்தையிடம் இருந்து விலகி வர நினைக்கிறாள். அவரின் கோபம் ஒருவரையும் மதிக்காத தன்மை , தன் கருத்தை ஒப்புக்கொள்ளவைத்தல் என்ற அனைத்திற்கும் எதிர் தரப்பாக ஆன்மீக வழியில் அனைவரையும் நேசிக்கவும் பிரார்த்திக்கவும் , சன்யாசம் செல்லவும் நினைக்கிறாள். அவளின் வீட்டிலுள்ள அடிமைகள் அனைவரும் அவளிடன் சகஜமாக பழகுமாறு ஓர் சூழ்நிலையை உருவாக்குகிறாள். ஆனால் அதற்கு நேர்மாறாக ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸிடம் அவன் சரியாக படிக்காமல் பராக்கு புத்தியுடன் இருப்பதற்காக அவனை அடித்து துன்புறுத்தவும் வெறுப்பது போல காட்டிக்கொள்ளவும் செய்கிறாள். இது அவளிடன் தன் தந்தையின் குணங்கள் மாறாமல் அப்படியே இருப்பதைக்காட்டுகிறது. அதற்காக குற்றவுணர்ச்சியடைகிறாள்.

வயோதிக பால்கோன்ஸ்கி இறப்பின் பொழுது தன் இளமைகாலங்களை நினைத்துப்பார்க்கிறார். அது தன் போர் திறனை , ஆழுமையை பற்றியதாக இருக்கிறது, இதனை ஆன்ட்ரூவின் போர் சார்ந்த எண்ணங்களையும் அதில் தான் செய்ய வேண்டிய அசாத்தியங்களையும் தொடர்புபடுத்தலாம். தன் தந்தையின் கீழ் வேலை செய்யும் பொழுது அவர் நெப்போலியன் ருஷ்யாவிற்குள் நுழைந்ததை சுட்டிக்காட்டும் பொழுது தன்னை அவமதிப்பதாகவும்  கேலிசெய்வதாகாவும் அவர் போல் ஆகவவில்லை என்று குத்திக்காட்டுவது போலவும் உணர்கிறான்.

மாஸ்கோ கவர்னரிடம் வயோதியக பால்கோன்ஸ்கி கொடுத்த கடிதத்துடன்  செல்கிறான் வேலைகாரன் அல்பாட்டிச். அவனைச்சுற்றி பெண்கள் அவன் செல்வதினால் பிரஞ்சுக்காரரர்களிடன் அகப்பட்டுக்கொள்ளுவான் எனும்பொழுது "ஓ பெண்கள் பெண்கள் , சகித்துக்கொள்ள முடியாதவர்கள்" என்று சலித்துக்கொண்டு வயோதிகர் சொல்வது போலவே சொல்லிச்செல்கிறான். மொத்தமாகவே அவரை அவன் பிரதியெடுத்துக்கொள்கிறான். தெய்வங்கள் மனிதர்களில் சன்னதம் கொள்வது போல. அவர் அல்பாட்டிச்சை ஆட்டிவைக்கிறார்.

அடுத்த தலைமுறையில் வரும் ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸ் தன் தந்தையின் பெயரைக்காப்பாற்றுவதாகவும் அவரைப்போலவே அவன் ஆகப்போகவதாகவும் சத்தியம் செய்கிறான்.

ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பவன் நிக்கலஸ் ராஸ்டோவ். தன் வியாபாரம் அறியாத , சோம்பேறியான , அனைவரையும் நம்பும் , ஏமாறும் தந்தை மொத்த சொத்தையும் இழந்து குடும்பம் கடனால் சரிந்து நிற்கும் பொழுது நிக்கலஸின் மனைவி மூலம் கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைக்கிறான். விவசாயிகளை நம்பும் அவன் வீட்டு வேலைகார அடிமைகளை ராணுவத்துக்கு அளிக்க தாயாராக இருக்கிறான்.ஆனால் விவசாயிகளை மதித்து அவர்களில் ஒருவனாக ஆகிறான். விவசாயத்தின் நுட்பங்கள் அறிந்து அவர்களை சரியாக வழிநடத்துகிறான். சொத்துகளை அதிகரிக்கிறான். தன் தந்தையின் கடன்கள் அனைத்தையும் அடைக்கிறான். தந்தையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகனாகவே அவன் வருகிறான். அவரின் ரேகைகளை வலுவாக அவன் அழித்துவிடுகிறான்.

தந்தையின் நிழல் படியாதவர்கள் எவரும் இருப்பதில்லை. அது இருளிலும் மந்தமாக நம் கூடே வருவது. 

Monday 25 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 1 : உயிர்த்தெழுதல்

நம் இறப்பிற்கு பின் நம் சிந்தனைகள் என்னவாகும் , அதற்கு அர்த்தமென்ன. அவை வந்து சென்ற பின் நம்மில் நடக்கவிருந்த மாற்றங்கள் தடைபட்டு காலம் ஒரு புள்ளியில் சுவற்றில் முட்டி நிற்கிறது. அதனை நாம் கண்டுபிடிக்க இறந்தவர்களை உயிர்த்தெழச்செய்வதெ ஒரே வழி. அப்படி இறந்து உயிர்த்தெழுந்து வந்தவரில் முதன்மையானவர் கிறிஸ்து. அவர் இறப்பிற்கு பின் அந்த சாவின் நொடியில் அறிந்தவற்றை நம் முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறார். கசண்டாஸ்கி நம் முன் காட்டுவது அதுவே. சிலுவையில் தொங்கும் அவன் அந்த அரைவினாடியில் சாத்தானிடம் கையகப்படுத்தப்பட்டு மீண்டும் வந்து நிற்கிறான். நம்மிடம் கூற ஆயிரம் கதைககளுடன். டால்ஸ்டாய் அவரது படைப்புகளில் இந்த உயிர்த்தெழுதலை முக்கியமான கதாபாத்திரங்களுக்கு ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார். ஆன்ட்ரூ  இரண்டு முறை உயிர்த்தெழுந்து வருகிறான். ஒவ்வொருமுறையும் அவன் நம்மிடன் ஒரு உச்ச நிலையை சாவின் விளிம்பில் அடைந்ததை கடத்துகிறான். நட்டாஷா தான் செய்த தவறுக்காக விஷமருந்தி அதே போல சாவின் விளிம்பிற்கு செல்கிறாள். அன்னா கரீனினாவின் அன்னாவும் அதே நிலையையே அடைகிறாள். இதுவே சாவிற்கு பிறகான வாழ்க்கை

ஆன்ட்ரூவின் உயிர்த்தெழுதல் : 


வாழ்க்கையில் தான் செய்ய நினைத்ததை அவன் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கான காரணத்தை செய்ய முடியாமல் இருக்கும் ஒருவன் தான் குடும்பம் என்ற ஒரு சிறையில் இருப்பதாக உருவகித்துக்கொள்கிறான். பியரிடம் நாவலின் தொடக்கத்தில் பேசும் பொழுது அவன் கூறுவது அதையே. பியரை அந்த சிறைக்குள் செல்லவேண்டாம் என்று அவன் எச்சரிக்கவும் செய்கிறான். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சென்று அடைவது இறுதியில் அந்த குடும்பத்திடமே. அந்த செயல் மூலம் தனக்கு பேரும் புகழும் தனக்கான ஒரு இடமும் கிடைக்கும் என்பதை அவன் கற்பனை செய்து கொள்கிறான். 

மொத்த போரின் திசையை தான் மாற்றப்போவதாகவும் அதற்காவே தான் போரில் பங்கேற்பதாகவும் அவன் நினைத்துக்கொள்கிறான். அதற்காக குட்டுஜோவிடன் தான் ஆஸ்திரியாவின் துரோகச்செய்தியை குடுத்து அதன் மூலம் அதன் மொத்த புகழையையும் அடைய நினைக்கிறான். போரின் மொத்த உருவமும் அதில் தன் பங்கும் அவருக்கு கிடைக்கப்போகும் பதக்கங்களுமே அவன் கண்முன் அச்சமயத்தில் வருகின்றது மாற்றாக ருஷ்யாவின் மதிப்போ வீரர்களின் உயிரோ அல்ல. ஆனால் அவன் அந்த செய்தியைக்கொண்டு போய் கொடுக்கும் பொழுது அதற்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் குட்டுஜோவ் அதனை அப்படியே விட்டுவிட்டு சாதாரண விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

ஆஸ்டலிட்ஜ்ஜில் தான் கொடியோடு முன் சென்று போரிடுவதும் அந்த ஒரே நோக்கத்திற்காகவே நான் , என் பெருமை , என் பதக்கங்கள். அதை நான் அடைவேன் ருஷ்யாவை காப்பாற்றுபவன் நானே!

ஆனால் எல்லாவற்றிற்கும் மாறாக அவன்  சேறு நிறைந்த மூடு பனியாலான அந்த நிலத்தில் குண்டு பட்டு வீழ்ந்து கிடக்கையில் , வானத்து மேகங்கள் தன் மாயஜாலத்தைக்காட்டுகின்றன. அதுவே அவனின் முதல் சாவின் விளிம்பு. அவன் அகங்காரத்தின் மறுபக்கத்தில் திறந்திருப்பது மொத்த பிரபஞ்சத்தின் பேரழகு. அத்தனை அழகை தன் மொத்த அகங்காரத்தில் மேல் விரிந்திருக்கும் அழகை அவன் காண்கிறான். அவை அமைதியாக பவித்ரமாக அந்த நாளை அவனுக்கு கொடுக்கிறது. ராபர்ட் ஃப்ரோஸ்டின் இந்தக்கவிதையை நினைத்துக்கொள்கிறேன்.

"The way a crow
Shook down on me
The dust of snow
From a hemlock tree

Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued."

இது ஒரு சிறு திறப்பாகவே அவன் வாழ்வில் அந்த நொடியில் சாவின் முன் அகங்காரம் அடங்க கிடக்கிறான். நெப்போலியன் அவனை ஒரு வீரமுள்ள அதிகாரியாக விமர்சிக்கிறான்.இந்த நொடியில் அவன் இறந்திருந்தால் அவன் சாவிற்கான மதிப்பு வாசகர்களுக்கு உச்சநிலையிலேயே இருந்திருக்கும். ஆனால் டால்ஸ்டாய் ஆன்ட்ரூவை உயிர்த்தெழ வைக்கிறார்.

யதார்த்தத்தில் ஒரு மனிதனை ஒரு சிறந்த பரிசுத்தமான கணம் முற்றிலும் மாற்றி அவனை வேறு ஒருவனாக  கட்டமைப்பது என்பது நடக்காதது என்பதை டால்ஸ்டாய் பலமாக நம்புகிறார்.

அவர் இறந்ததாக வந்த செய்திகளின் நடுவே பால்ட்ஹில்ஸில் பால்கோன்ஸ்கியின் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவருடைய குழந்தை பிறக்கும் அந்த நாளில் அவர் மீண்டும் வருகிறார். அங்கு அவர் வாழ்ந்த காலத்தில் போர் முனையில் அவர் கண்ட அந்த பெரும் அழகை  நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அது அவருக்கு தோன்றிய எண்ணம் தானா என்று வாசகர்களுக்கு தோன்றுமளவுக்கே இருக்கிறார்.

லிசா இறந்ததும் அவருக்கு வருவது குற்றவுணர்ச்சியின் பெரும் நிழல் மட்டுமே . தன்னை ஏன் கைவிட்டீர் என்று லிசா கேட்பது போலவே அவருக்கு அந்த கல்லறையின் முன் நிற்கையில் தோன்றுகிறது. அந்த குற்றவுணர்ச்சி அவரின் குழந்தையை பேணிப்பாதுகாப்பது அதன் பின் அதனை நல்ல முறையில் வளர்ப்பதுமே தன் லட்சியமென நினைக்க வைக்கிறது. அவர் மீண்டும் குடுப்பத்திற்கே வந்து சேர்கிறார். முதல் சாவு அவரை குடும்பத்தில்  இணைக்கிறது. 

நான் வாழ்கிறேன் யாருக்கும் துன்பம் கொடுக்காமல் , அதுவே சிறந்த வாழ்க்கை. தான் ,  குடும்பம் என்று குறுகிய வட்டத்திற்காக வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை. அண்டை அயலார் , நாடு , தேசபக்தி என்பதெல்லாம் ஏதும் இல்லை. என்று பியரிடம் கூறிகிறான்

தனது தந்தை ஒரு திருடனை தூக்கில் போட்டிருந்தாலும் தன் தந்தையின் மனநிலைக்காகவே வருத்தப்படுவேன் என்றும் அந்த கொலைக்காக நான் குற்றயுணர்ச்சி அடைவதில்லை என்றும் கூறுகிறான். இந்த மனநிலையை அவனின் குடும்பம் சார்ந்த குற்ற உணர்ச்சியிலிருந்தும். தன் தந்தையின் நிலையிலிருந்துமே அடைகிறான். அடிமைகளை விடுவிப்பதும் கூட தான் என் தந்தையைப்போல ஆகிவிடக்கூடாது என்பதற்காவே எங்கிறான் (அடிமைகளின் சொந்தகாரர்களே அந்த அடிமைகளால் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆன்ட்ரூவின் கருத்து. அதாவது அண்டை அயலாரை நேசிக்கவும் முடியாமல் சவுக்கால் அடித்து அதற்கு மானசீகமாக வருத்தப்படும் பிரபுக்கள்). 

ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால் , அவர் வாழ்ந்து வந்த இடத்திற்கு போனபார்ட் வந்தாலும் தான் ராணுவத்தில் சேர்வதில்லை என்று கூறிய ஆன்ட்ரூ மீண்டும் தன் போர் சம்பந்தமான காரியங்களில் முழு நேரத்தையும் செலவளிக்கிறான் அதற்கான சட்டங்களை இயற்றுகிறான். அதன் மூலம் மீண்டும் ராணுவத்தில் தன் நிலையை உறுதிசெய்ய நினைக்கிறான்.

தன் முதல் சாவின் பிறகு பழைய வாழ்க்கைக்கு  (குற்றவுணர்ச்சியும் , செயலற்ற தன்மையும் கடந்த வாழ்க்கை) இரு விஷயங்கள் மூலமாக ஆன்ட்ரூவால் செல்ல முடிகிறது. பியரின் எதிர்காலத்தின் மீதான மற்றும் கடவுளின் மீதான நம்பிக்கையின் அவனுக்கு வாழ்தலின் அன்பு செய்தலின் எல்லாவற்றிற்கும் மேலிருக்கும் கடவுளின் மேல் நம்பிக்கைக்கொள்ள வைக்கின்றது அவன் மீண்டும் அந்த பரந்த பவித்ரமான வானத்தை ஆஸ்டர்லிஜ்ஜில் பார்த்த அதே வானத்தை உணர்கிறான். 

மனிதனை நடத்துவது அல்லது இயக்கும் அந்த பெரும் சக்தி எது ? செயல் என்பது மட்டுமே. செயலற்ற அனைத்தும் உயிரற்றவையாகவே கருதப்படுகிறது. அதன் மூலம் அவை அடைவது அதை நான் செய்தேன் என்ற அகங்காரம். அதுவே ஆன்ட்ரூவையும் இயக்கிவந்தது. செயலற்ற பட்டுப்போன ஓக் மரம் போன்ற அவன் நட்டாஷாவின் வீட்டை விட்டு திரும்பியதும் தன்னுள் இருக்கும் வசந்தகால மலர்களைக் கண்டுகொள்கிறான்.  பியர் தன் சொத்துகள் அனைத்தையும் நல்லது செய்கிறேன் என்று வீணாக்கியபொழுது  (பியர் முழுக்க முழுக்க ஒரு சோம்பேறி), ஆன்ட்ரூ அதனை செய்தார் முறைப்படி திட்டமிட்டு அடிமைகள் விடுவிக்கப்பட்டனர் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  

மீண்டும் ஒரு ராஜ தந்திரிக்கான எல்லா தகுதிகளும் தனக்கு இருப்பதாக நினைக்கிறான். அந்த போரில் ருஷ்யா தோற்றதற்கு காரணம் சரியான போர் சட்டங்கள் இல்லாததே காரணம் என்று அவன் நம்புகிறான். அதனை சரி செய்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவன் இருவரை சந்திக்க நேரிடுகிறது. ஸ்பெரான்ஸ்கி உள்நாடு மந்திரி மற்றும் அராக்சீவ். அரக்சீவை சந்திக்கும் அந்த தருணம் எய்டன் பக்கிகாமை சந்திக்கும் (வெள்ளையானை - ஜெயமோகன்) தருணத்தை நினைவுறித்தியது. ஆன்ட்ரூ அவரை சந்திக்கும் பொழுது தான் காத்திருக்க வைக்கப்பட்டதையும் அவமதிக்கப்பட்டதையும் நினைத்து வருத்தமடைகிறார். ஆனால் ஸ்பெரான்ஸ்கி அவரை ஈர்த்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்ட்ரூ அவரைப்போலவே ஆக வேண்டும் அதுதான் உயர்ந்த லட்சியமாக இருக்கமுடியும் என்று கற்பனை செய்கிறான். ஆனால் அவர் சாதரண நேரத்தில் அந்த மிடுக்கும் அறிவாற்றலும் அற்றவராக தோன்றும் பொழுது அவரை வெறுக்கிறான். நான் நினைத்த மனிதன் இவர் அல்ல என்றே நினைக்கிறான்.அவன் இன்னதாக ஆகவேண்டும் என்று நினைத்த எண்ணம் மீண்டும் தலைதூக்கியது.

இரண்டாவதாக அவன் உயிர்த்தெழுவது பாராடினோ போரின் பிறகு. வெளிநாட்டிற்கு சென்று வந்த பொழுது நட்டாஷா தனக்கான நிச்சயதார்த்த பந்தத்தில் இருந்து விலகியதாகவும் அனடொலுடன் அவள் செல்ல முற்பட்டதும் அவனுக்கு தெரிகிறது. அவன் துருக்கி போர் முனைக்கு செல்ல நினைக்கிறான் அங்கு குராகினை டூயலுக்கு அழைப்பது வரை கற்பனை செய்கிறான். இந்த முறை அவன் போருக்கு செல்ல நினைப்பது குராகினை பழிவாங்குவது என்ற ஒற்றை நோக்கமே.

தன்னை பாராடினோ போர் முனையில் ஒரு சிறிய படையின் தலைவனாக இருக்க அனுமதிக்குமாறு குட்டுஜோவுடன் கேட்கிறான். போர் அடுத்த நொடிக்கான ஆச்சரியத்தை ஒளித்து வைத்துள்ளது. அதன் வழி தன் படைவீரர்களுடன் இயங்கும் ஆன்ட்ரூ , பழைய பிரச்சனைகள் அனைத்தையும் மறக்கிறான்.  ஆனால் போரின் முந்திய இரவு வரும் கனவில் இனிமையான நட்டாஷாவை காண்கிறான் குராகின் இன்னும் உயிரோடு இருப்பதை நினைத்ததும் தன்னைச்சுற்றி நெருப்பு பிடித்ததைப்போல எழுகிறான்.

அன்று பியருடன் நடக்கும் பேச்சு நாவலின் ஒரு உச்சகட்டம். கொலை செய்வதே போர் , போர் அற்பர்களும் சோம்பேறிகளும் பொழுதுபோக்கிற்காக செய்யும் வேலை என்று கூறும் அவன் , அதில் தான் ஒரு பகுதி என்பதை அவன் அறிந்தே இயங்குவது போலுள்ளது.  கொலைகளுக்காக ஆலயங்களில் செய்யப்படும் பூஜைகள் அவனை அலைக்களிக்கின்றன. தான் நல்லது எது கெட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் அதனால் இதற்கு மேல் வாழ்வதற்கு அறிந்துகொள்வதற்கு ஏதுமில்லை என்கிறான். ஆனால் தன் குடும்பம் துரத்தப்பட்டதையும் தந்தை இறந்ததையும் நினைக்கும் பொழுது அவன் பிரஞ்சுக்கைதிகளை கொல்லவேண்டும் எங்கிறான். கூடவே குராகினும் கொல்லப்பட வேண்டியவனே.

போரின் ஆரம்பத்தில் பீரங்கிக்குண்டில் அடிபட்டு ஆன்ட்ரூ வீழ்கிறான். அவனைச்சுற்றி அந்த மாமிசப்பிண்டங்கள் அவனும் அதில் ஒன்றாய். இங்கு அவன் சாவின் விளிம்பில் இருக்கையில் அவன் அருகில் வருவது அனடோல். அவனுக்காக வருந்தும் ஆன்ட்ரூ "நேசிப்பவர்களையும் வெறுப்பாவர்களையும் ஒன்று போல் நாம் நேசிப்போம்" என்ற கிறிஸ்துவின் வரியைச்சொல்லி மூர்ச்சையாகிறான். (ஆன்ட்ரூவும் அனடோலும் காயம்பட்டு கிடக்கும் இடம் விரான்ஸ்கியும் கரீனனும் அன்னா இறக்கும் தருவாயில் சேர்ந்து இருக்கும் இடம் போன்றது) 

மீண்டும் பிழைக்கும் ஆன்ட்ரூ நட்டாஷா , மேரியுடன் தன் கடைசி நாட்களை கழிக்கிறான். தன் ஒளியென நினைக்கும் நட்டாஷா அவன் அருகில் இருக்கும் பொழுது அதற்காக சந்தோஷமடைகிறான்.  மேரி அழும்பொழுது அவளின் துக்கத்தை புரிந்துகொள்ளுகிறான்.

அவனில் இறப்பின் அறிகுறி தோன்றுவதற்கு முந்தைய நாள் வரும் கேள்வி "அன்பு என்றால் என்ன ? , வாழ்க்கையும் மரணமும் அன்பினால் இயங்குவதாக  , அன்பெனும் பிரபஞ்சத்தில் தான் தன்னை இணைத்துக்கொள்ள போவதாக நினைக்கிறான். "ஆகாயத்து பறவைகள் விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை" என்கிறான். அங்கு அழுவதற்கு எதுமில்லை!. ஆனால் அதுவெறும் கனவு வெளியாகவே இருக்கின்றது. இறப்பதற்கு முன் ஆன்ட்ரூவின் பார்வை "தான் இன்னும் செய்ய எதும் உள்ளதா" என்பது போலிருப்பதாக அந்த அறையில் இருப்பவர்களுக்கு தெரிகிறது.

கடைசியில் அந்த மரணம் அவனை பற்றிக்கொள்கிறது. ஆன்ட்ரூவின் இறப்பும் உயிர்த்தெழுதலையும் பின்வருமாறு கூறலாம் ,  

"தான் எனும் அகங்காரத்தில் இருந்து , குடும்பம் , தன்னை வெறுப்பவர்கள் என்று அனைவரையும் நேசித்து பின் அன்பெனும் பிரபஞ்சத்தில் துளியென கலந்து கிறிஸ்துவின் கைகளுக்கிடையில் இருக்கும் தவறவிடப்பட்ட ஆடாகிறான். அதனால்தான் சாகும் பொழுதும் தான் அறியமுடியாத ஒன்று இன்னும் எஞ்சியிருப்பதாகவே நினைக்கிறான்"

அவன் தவறவிடப்பட்ட ஆடு.

நட்டாஷா உயிர்த்தெழுதல் :




பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் இப்படி சொல்கிறார் " டால்ஸ்டாயில் தேவதைகள் பெண்களாகிறார்கள் ,  தஸ்தாவஸ்கியில் பெண்கள் தேவதைகளாகிறார்கள்". இந்த கருத்தை ஒட்டியே நான் நட்டாஷாவை அணுக முயல்கிறேன்.

நட்டாஷா கதாபாத்திரமானது பெண்களின் சபலம் , மற்றவர்களை ஈர்த்தல் (வழிய விடுதல்) , காதல் , அன்பு எனும் குணங்களின் வழியே இறுதியில் தன் பூரணத்தன்மையை அடைகிறது. இது ஏற்கனவே ஆசிரியர் அன்னா கரீனினாவின் அன்னா மூலம் முயன்ற ஒரு கதாபாத்திரமே. அன்னா ஒரு கட்டத்தில் நின்று விடுகிறாள். ஆனால் நட்டாஷா அதனை தாண்டி ஓர் முழுமை நிலையை அடைகிறாள். ஆனால் இருவருக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் அன்னாவிற்கு ஒரு குழந்தை இருக்கின்றது ஆனால் நட்டாஷா திருமணத்திற்காக காத்திருக்கும் ஒரு கன்னி.

நட்டாஷாவை ஒளியின் வடிவமாகவே பியரும் , ஆன்ட்ரூவும் , டெனைசாவும் காண்கின்றனர். அவள் பூரண அழகுடையவள். வசந்த கால செடி போன்றவள். சிறு காற்றிற்குக்கூட ஓரிடமென்றில்லாமல் ஆடுபபள். மகிழ்ச்சி ஒன்றையே தன்னகத்தே கொண்டவள் அவளை சுற்றியிருக்கும் அனைவரும் அதனை அடைவர். அதற்காக எங்கும் பாராட்டப்படுபவள்.

சிறுமியாக அவள் போரிஸை காதலிப்பதாக நம்புகிறாள். ஆனால் அது தன்னை என்றும் கட்டுப்படுத்தாது , நான் சுதந்திரமானவள் என்பதை சோனியாவிடம் கூறுகிறாள். மாறாக சோனியா தன் காதலை கூறும் பொழுது அது அசாதாரணமாக அவளுக்கு இருக்கின்றது. அவளுக்கு அழியாத மாறாத காதல் என்பதில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை.

நட்டாஷா பூரணமான அழகுடையவள். அந்த அழகு அவளையறியாமல் மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்கும்படி செய்கிறது. டெனைசாவ் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கும் பொழுது அவளுக்கு அது வெறும் கிளுகிளுப்பாகவே இருக்கின்றது. அதற்காவே அவள் ஆண்களை ஈர்க்க நினைக்கிறாள். பியரிடமும் அவள் அதையே செய்கிறாள். நட்டாஷாவுக்கும் அவள் அம்மாவிற்கும் இருக்கும் உறவு இங்கே கருத்தில்கொள்ளப்பட-வேண்டும். தன் அந்தரங்களை அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறாள்.
அவள் அம்மாவும் அதே போன்றதொரு மனநிலையில் தன் குட்டிக்காலத்தில்  இருந்திருக்கலாம்.

சக்ரவர்த்தியுடனான நடன அரங்கில் ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அவள் அழுதே விடுகிறாள். (கிட்டி அன்னாவை பார்த்து அடையும் அதே போன்றொதொரு பதற்றம்) ஆன்ட்ரூ அவளை அங்கு பூரண அழகென உணர்கிறான். அவளை ஆட ஆன்ட்ரூ அழைப்பதில் இருந்தே அவர்கள் இருவரின் காதல் தொடங்கிவிட்டது. தன்னை காப்பாற்றிய தன் மரியாதையை நிலை நிறுத்திய ஒரு ஆணிடம் பெண் தன்னை சமர்ப்பிப்பது போல. ஆன்ட்ரூ தன் காதலை தெரிவித்ததும் அவள் அதனை தன் காலமில்லாத காதலாக உணர்கிறாள். ஆன்ட்ரூ வெளிநாடு சென்று ஒரு வருடத்தில் வருவதாகவும் அவர்களின் நிச்சயதார்த்தம் ரகசியம் , அவள் அவனுக்காக காத்திருக்க வேண்டாம் , இன்னொரு ஆணை இந்த இடைவெளியில் விரும்பினால் அவனையே விவாகம் செய்துகொள்ளலாம் என்றும் கூறி செல்கிறான். அந்த காலமில்லா காதலினால் தான் காத்திருப்பதாக நட்டாஷா அவனிடன் நம்பிக்கை கூறுகிறாள். ஆனால் அது சாத்தியமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்திருக்கும்.

ஆன்ட்ரூ கூறிய காலத்தில் வராததால் அவள் வருத்தத்தில் இருக்கிறாள் (இந்த அத்தியாயத்தை டால்ஸ்டாய் "நட்டாஷாவின் காதல் ஏக்கம்" என்றே தலைப்பிடுகிறார்) அனடோல் தன் அழகை பூஜிப்பதும் , தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் கெஞ்சுகிறான். அவன் அழகில் அந்த சபலத்தில் அவர்கள் இருவரும் முத்தமிடுகின்றனர். தான் தவறு இழைத்ததுபோல குற்றவுணர்ச்சி அடைகிறாள். பின் அது தவறில்லை என்று தன்னை நம்பவைத்துக்கொண்டாள்.

இந்த நிலையில் அனடோலுடன் விவாகம் செய்து கொண்டு வெளி நாடு செல்ல முயன்று கடைசி தருணத்தில் அது இல்லாமலாகிறது. அவமானம் ,  குற்றவுணர்ச்சியில் விஷம் குடிக்கிறாள். ஆன்ட்ரூவுடனான அவள் உருவகித்த காலமில்லா காதல் அவளை வதைக்கிறது. தன் மகிழ்ச்சியனைத்தும் இழந்த நிலையில் சாவின் விளிம்பிற்கு செல்கிறாள். .
பியர் அவளின் மாஸ்கோ வீட்டில் அவளிடம் "நீ பரிசுத்தமானவள் , களங்கமற்றவள். நான் விவாகம் செய்யாமல் இருந்திருந்தால் உன்னை" என்று அதனை முடிக்காமல் நிறுத்தி வெளியேறிவிடுகிறான். அதன் பிறகே அவள் சரியாகிவருகிறாள். அவள் எதிர்பார்த்தது ஆன்ட்ரூவின் மன்னிப்பு ஆனால் பியரின் அந்த வார்த்தைகள் மற்றும் அவனின் காதல் அவளை மீண்டும் உயிர்பெற்றெள செய்கிறது.

மாஸ்கோ எரிக்கப்பட்ட பின்பு ராஸ்டோவ்கள் அதனை விட்டு செல்கையில். காயமடைந்த இனி பிழைபதற்கில்லாத நிலைமையில் ஆன்ட்ரூ அவளுடன் பயணம் செய்கிறான். அவள் அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை தேற்ற முயற்சிக்கிறாள். அங்கும் அவள் அவனுக்கு ஒளியின் வடிவமாகவே தெரிகிறாள். ஆன்ட்ரூ இறந்த பின்பு தனக்கு காதல் அன்பு என்பது இனிமேல் இல்லை என்று உணர்கிறாள்.

நட்டாஷா குற்றமும் தண்டனையும் சோனியா போல ஆகியிருக்கலாம் ஒரு வேளை ஆன்ட்ரூ படுக்கையைலேயே கிடந்திருந்தால். ஆனால் அவன் இறந்துவிட்டான். நட்டாஷாவின் வாழ்க்கை பிறகு இருக்கும் மகிழ்ச்சியில் நுழைகிறது. பியர் தன் காதலை போருக்கு பின் வெளிப்படுத்தியதும். அவனை விவாகம் செய்து கொள்கிறாள் , குழந்தைகள் பெறுகிறாள். தாதி வேண்டாம் என்று அவளே தாய்ப்பால் கொடுக்கிறாள் கணவன் வீட்டில் இல்லைவென்றால் தவிக்கிறாள். அவன் தன் கைக்குளேயே வைக்க நினைக்கிறாள். இவையனைத்தையும் செய்பவள் காதலில் நம்பிக்கையில்லாத , காதலை நம்பிய , பின் சபலப்பட்ட நட்டாஷாதான்.

நட்டாஷாவின் அம்மா நாவலின் இறுதியில் சொல்கிறாள் " எனக்கு முன்பே தெரியும் அவள் விவாகம் செய்துகொள்வாள். அவள் ஆசைப்பட்டது ஒரு கணவனையே". ஒரு ருஷ்ய பெண்ணின் மகிழ்ச்சியான வாழ்வு அதுவே நட்டாஷா ஆசைப்பட்டது.

மகிழ்ச்சியான் குடும்பங்களில் தேவதைகள் வாழ்கிறார்கள். நட்டாஷா அங்கு வாழ்ந்தாள் மகிழ்ச்சியாக!

Friday 24 April 2020

மாயப்பொன் வாசிப்பனுபவம்

பொன்னிறம் எங்கும் பொன்னிறம் ஆம் நான் கண்டுகொண்டேன் என் வானில் அது ஜொலிக்கிறதுஅதன் நடுவில் நூல் கட்டியது போல சுழல்கிறதுபொன் விண்மீன்கள் அதே போல சுழல்கின்றனகைக்கு எட்டமுடியாத தூரத்தில் அவை சுழல்கின்றனஆனால் நான் அந்த பொன்னை உருக்கி வழிந்தோடவிடுகிறென்கைக்கு அகப்பட்டு மீண்டும் மீண்டும் அது நழுவி வலகி செல்கிறதுபொன் என்னை சூழ்ந்து கொண்டு உள்ளில் வெறுமையை நிரப்பியதுஅடங்கா வெறுமையுடன் அதை ஊளையிடும் தனித்த ஓநாயென நான்.வெறுமை தனிமை முட்ட முட்ட குடித்தேன்

பின்னொரு நாள் பொன்னுருகியோடும் வயல் வெளியின் நடுவிலிருந்த ஒற்றைபாதைவழி நடந்தேன்பாதையின் இறுதியில் பொன்னிறமாக என் தேவன் சிவுலையில் நின்றிருந்தான்பொன் புன்னைகையுடன்என் அவையங்கள் அனைத்தையும் அறுத்தேன்மஞ்சள் குருதி வழிந்து என் கால்கள் பிசுபிசுத்தன.

மாயப்பொன் கதை படித்ததும் தோன்றியது என் அன்புக்குரிய வான்கோஊறிவரும் சாராயத்தில் அதன் தேவ பதம் வராமல் துடிக்கும் நேசையன் தேடி ஓடி மறுமுறை அந்த கடைந்தெடுத்த அமிர்தம் கிடைக்கையில் அவன் காதுகளில் மூச்சதிர நிற்கிறான் கொடும்புலிவெறுமையுடன் அவன் இருந்து விடுவானோ என்று நான் ஏங்கும் சமயத்தில் கொடும்புலி அவை ரசித்து உதிரம் குடுத்ததுஆ சந்தோஷம் சந்தோஷம்.

அதி அற்புத கலைஞர்கள் துறவு செல்கின்றனர்அனைத்தையும் துறந்து தன் மூதாதையர் அடைந்த நான் அடையக்கூடிய இயற்கைக்கு நிகரான கடவுளுக்கு நிகரான நிலையை அடைய முயற்சிக்கின்றனர்ஒன்று முடிந்ததும் இதுவல்ல அடுத்தது முடிந்ததும் இதுவும் அல்லசுயவதையுடன் அலையும் குண்டுபட்ட போர்வீரனைப்போல நான் எங்கு எதற்கு பின்பு நான் இங்கு அதற்கே அன்று அடங்கா மனத்துடன் அவர்கள் அலைகின்றனர்.
ஒருவேளை கொடும்புலி அவன் அருகில் அமர்ந்து தன்னைப்போலவே நீயும் என்று அங்கீகரித்ததா ? இல்லை கேள்விக்கிடமில்லை அங்கீகரித்திருக்க வேண்டும் அதுவே என்னிலையில் நிம்மதிதுறவு செல்பவர்கள் நீங்கள் அடைவதை அல்ல உங்களால் அடைவவே முடியாததை அடைகின்றனர்.