"இவன் நம்ம அப்பாப்போலதான இருக்கான்" என்று சித்தியைப்பார்த்து அம்மா கேட்டாள்.
"எனக்கு அப்படி ஒண்ணும் தோணல்ல" என்றாள் சித்தி
"நீ என்னத்தட்டீ கவனிக்க , நல்ல பாரு நீள மூஞ்சி , மாநெறம் , ஒடுங்குன வயிறு , விரிஞ்ச நெஞ்சு , அந்த கண்ண பாருட்டீ" கூறிமுடித்ததும் அம்மாவின் கண்கள் விரிய தலையில் கைவைத்து திர்ஷ்டி கழித்தாள். மூன்று சொடக்குகள் விழுந்தன. "அவ்ளோ கண்ணு பட்டுருக்கு" என்றாள்.
"பாத்தா அப்புடித்தா தெரியுது. ஆனா மக்கா உனக்க அம்ம இல்லாத்த ஒண்ண உருவாக்கிருவா" என்றாள் சித்தி என்னைப்பார்த்து.
"ஆமா நான்தான் இல்லாத ஒண்ண உருவாக்குகேன். போட்டீ"
"அம்மா , உங்க கூத்துல என்ன இழுக்காதீங்க , எனக்கே நான் நம்ம யேக்கியம்ம ஆச்சி சாடைதாண்ணு தோணுகு. உங்களுக்கு மட்டும்தா உங்க அப்பா தெரியாரு" என்றேன்
அம்மா வாழைத்தண்டை அரிவாள்மனையில் நறுக்கிக்கொண்டே "நல்ல முத்துன தண்டாயிருக்கு , ஒரு வாழத்தண்ட வாங்க தெரியல உங்கொப்பனுக்கு" என்றாள் என்னிடம்.
"ஆமா....நல்ல முத்துன காயாட்டுலா இருக்கு. நல்லா அவச்சி விட்டுட்டான்" என்றாள் சித்தி.
"புக்க தூக்கிட்டு போவத்தா தெரியும் , ம்ஹும் வேற ஒண்ணுத்துக்கும் ஆகாது" சம்பந்தமேயில்லாமல் "அவன் கால் விரல பாருட்டீ. சுண்டுவிரல் அப்டியே அப்பாதா" என்றாள் அம்மா
சித்தி என் முகத்தை பார்த்தாள். அம்மா சொல்வதை மறுப்பது நான் அம்மாவையே மறுப்பது போன்றது. நான் "தாத்தாவ மாரிதானம்மா பேரனும் இருப்பான்"
"இவ என்னத்தல அவர பாத்தா , எல்லாம் ஒரு நெனப்புதா. கூட இருந்து அஞ்சி புள்ள பெத்தவ நானு எனக்கே அவருக்க முன்னும் பின்னும் முழுசா தெரியாது." என்று தூங்கிக்கொண்டிருந்த ஆச்சி எழுந்தமர்ந்தாள்.
"நீ என்னத்த எங்கப்பாவ பாத்த , நான் தான வீட்டுல மொத புள்ள அதுனாலயே அப்பாக்கு என்னதா புடிக்கும். நான் அவரு நெஞ்சில கெடந்தவளாக்கும். சின்ன பிள்ளையா இருக்கும்போ என்ன அந்த சாலிச்சி வீட்டுக்கு கூட்டிட்டுலாம் போயிருக்காரு. அவ்ளோ பிரியம்"
"சீ....இதுல உனக்கு பெரும வேறையா , அங்க போய்கிடந்து வந்தவன் தான உங்கப்பன் , அவன மாரி இன்னொருத்தன் வாராண்ணு பெரும வேற படுகியா"
"இவ ஒருத்தி , பெருமயில்ல அது ஒரு சந்தோசம், எங்கப்பா எங்கூட இருக்காருண்ணு"
"அவன் கூடயிருந்து என்ன புண்ணியம் , அஞ்சி பைசாக்கு பிரயோஜனமில்ல. ஏட்டீ இவ்ளொ சொல்லுகியே உங்கப்பன் இருந்தப்போ நீதான வேலைக்கு போயி குடும்பத்துக்கு சோறு போட்ட. பொறவு எதுக்கு அவன் வேட்டிய புடிச்சி தொங்கிட்டுருக்க."
"இருந்தாலும் எங்கப்பால்லா , அவருக்க சூழ்நில செரியில்ல , அதுக்கு அவர் என்ன செய்வாரு , கூடவே சுத்துன ஆசாரி , சாமியாடி. எல்லாவனும் சேந்துதான அப்பாவ நாசப்பொட்டயா ஆக்கிட்டானுங்க"
"ஏட்டீ , எவன் மூத்தரத்த குடிக்க சொன்ன உங்கப்பனுக்கு எங்கட்டீ போச்சி அறிவு. வீட்டுல நாலு பொம்பள பிள்ளைய இருக்குண்ணு ஒரு நினைப்பில்லாம ரோட்டுல கெடந்தவன். பழச மறந்துறாதட்டீ , உன் கல்யாணத்தணைக்கி செத்து கெடந்தவனாக்கும். நீ உங்கப்பா மாரி வா மக்கா" என்றாள் என்னைப்பர்த்து.
"நா ஒண்ணும் மறக்கல்ல , மூத்த பிள்ளைக்கு சரியா கல்யாணம் செஞ்சி வைக்க வழியில்லையேனு நினப்புலயே குடிச்சிருக்காரு. அவர மனசரிஞ்சி ஒரு வாய் ஏச கூட முடியல. செத்து போன மனுசனையாவது நிம்மதியா இருக்க விடுங்க"
அம்மாவின் அப்பா புராணத்தை எப்படி நிறுத்துவதென்பது ஆச்சிக்கு நன்றாகவே தெரியும். ஆச்சி கூறியது உண்மையே அம்மாவின் கல்யாணத்தன்று காலை கருக்கல் நேரத்தில் வில்லுக்குறி தாண்டி பத்மநாபபுரம் வரும் வயல் வழியில் ஒரு ஓடையில் கிடந்ததாக அந்த ஊர்மக்கள் தாத்தாவை தூக்கிக்கொண்டு வந்தனர். உடம்பில் எங்கேயும் ரத்தக்கறையோ வீக்கமோ இல்லை. வாய் மட்டும் ஒரு பக்கமாக இழுத்திருந்தது. உடல் நீலம் பிடித்து ஆனால் கண்கள் பறவைகளின் கண்களைப்போலைருந்ததாகவும் ஆச்சி சொன்னாள். தற்கொலை என்று ஊர் கூறி , அம்மா இன்னொரு ஜாதியில் கல்யாணம் செய்ய துணிந்ததே காரணம் என்றது. ஒரு புறம் அவளே தாத்தவை கொன்றதாகவும் வதந்திகள் ஊர் வாய்களில் மெல்லப்பட்டிருந்தை நான் இப்பொழுது கூட கலைவாணர் தெருவில் நடக்கும் பொழுது கேட்க முடியும். ஆனால் உண்மையில் அவர் குடிந்திருந்தார் அப்பொழுது அவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. ஓடையில் இருந்த கூழாங்கல் தலையில் இடித்திருக்கலாம். வெட்டு வந்து கைகால் இழுத்ததினாலேயே வாய் ஒரு பக்கமாக் இழுத்திருந்தது.
சித்திகள் மணநாளை வருடம் தோறும் கொண்டாடும் பொழுது அம்மா அமைதியாக அரங்கில் தாத்தா படத்தின் முன் நின்றிருப்பாள். எதோ மன்றாட்டு போல அவள் உடலும் தலையும் உதறிக்கொண்டேயிருக்கும் , ஒரு நாளில் பலதடவைகள் அவள் அப்பா சுடலையாண்டி பிள்ளையை பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அந்த அப்பாவைபோல நான் இருக்கிறேன் எங்கிறாள்.
முற்றிய வாழைத்தண்டை நறுக்குவது என்பது பசையை இரு கைகளால் தொட்டு ஒட்டிக்கொண்டு பின் எடுக்க முயற்சிப்பது போன்றது. வட்டமாக ஒரு சிறிய துண்டை வெட்டிய இடத்தில் வலைபோன்றதொரு பிசின் பிரிந்துவரும். அதனை சுருட்டி விரலில் மோதிரமாக்கிகொள்ள வேண்டும். அம்மா அதனை ஒரு இயந்திரத்தைப்போல வேகமாக செய்துகொண்டிருந்தாள்.
"மணி இன்னும் சாப்ட வரல்லயா ?" என்றாள் ஆச்சி
"வர நேரம்தான் , அந்த அந்தோணி முதலாளிக்கி உழச்சி போட்டே காலம் போகுது. அவன் கொடுக்க நூறு ஓவா சம்பளத்த என் கைல கொண்டு வந்து கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணு நெனப்பு. பொறவு இந்த புக்கு. வீட்டப்பத்தி ஒரு நெனப்பிருக்கா. இவன் கெட்டி ஒரு சந்தோசமுண்டா"
"ஏட்டி , இப்பொ திங்க சோறு அவனுக்க ரத்தமாக்கும் அத மரக்காண்டாம். உன்ன ஒரு பவுனில்லாம கட்டிக்கிடுதேன்னு வந்து உங்கப்பண்ட கேட்டவனாக்கும் மணி. ஆத கொஞ்மேனும் நினச்சுப்பாக்கணும் கேட்டியா. பருவத்துல நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்கும்பவே நமக்கு வெங்கன சாமான் வாங்கிக் கொடுத்தது மணியாக்கும். வெறும் மரிச்சீனிக்கெழங்கு திண்ணது மறந்து போச்சோ" ஆச்சிக்கு மூச்சு வாங்கியது எழுந்தமர்ந்து சீலையை விரித்து மார்பை மறைத்துக்கொண்டாள். "நீ மூத்த மக உன்ன கரயேத்திட்டா குடும்பம் ஒரு லெவலுக்கு வரும்ணு நெனச்சுதானட்டீ மணி உன்ன கேட்டதே. இல்லாம வேற சாதிக்கு கொடுக்க நானும் சம்மதிச்சிருப்பனா. அப்ப கூட எதும் எடுத்து சொல்லாம குடிச்சி செத்தான். அவனயைம் மணியையும் சேத்து வச்சி பேசாத சொல்லிட்டேன். ஜீவிக்கதுக்கு ஒரு வழிய கொடுத்தவன தப்பா பேசாதட்டீ. நாக்கு அழுவிறும்"
"கொள்ளாம் , பெரிய கதாநாயகன மாரி ஆக்காண்டாம். அவரு அந்தளவுக்கொண்ணும் கெடையாது. அம்மைக்கு ஊருக்கு பயந்து என்ன மூணு வருசம் கட்டாம இருந்த ஆளாக்கும். பொம்பளதான நீ , உனக்கு தெரியும்ல என்ன என்னல்லாம் ஊர்ல பேசுனானுங்கண்ணு. இருந்தும் உனக்க மருமகன்தான் பெருசு. நானாக்கும் யேக்கியம்மைக்ககூட குடும்பம் நடத்துனேன் , நீ கெடையாது. அம்மைய எயித்து பேசாம. அம்மைக்கு சப்போட் பண்ணி என்ன மட்டம் தடுதவனாக்கும் உமக்க மணி. இவ்வளவு புஸ்தகம் படிச்சா காணாது வீட்ல என்ன ஏதுண்ணு கவனிக்க தெரியணும்"
"எனக்க மணி ராமர்லா , ஒன்னத்தவுர ஒருத்திக்கு பின்னால போயிருப்பானா. உங்க தாத்தா தெருவுக்கு ஒண்ணுலா வச்சிருந்தாரு. அந்த நூஸு ஊருக்குள்ள பாதள சாக்கட மாரிலா நாறிக்கெடக்கு. தோண்டியெடுத்தா வந்துட்டேயிருக்க அட்சய பாத்துரமாக்கும்" என்றாள் என்னைப்பார்த்து.
"அந்த மூணு வருசதுத்துக்கு இடைல மொறப்பொண்ணு ஒண்ண கட்டிவக்க பூரா வேலையும் நடந்துச்சி , உமக்க மணி அப்பொ பொத்திக்கிட்டுதா நின்னாரு. நல்ல யட்சி கணக்க நாயர்ல வந்தவொடன வெள்ளாடிச்சி வேணாமுண்ணு போகபாத்தாரு உனக்க உத்தம ராமரு. எனக்க அப்பா சாலிச்சியா இருந்தாலும் வாக்கு குடுத்துட்டமேண்ணு கண்ணு கணக்கா பாத்துக்கிட்டாரு. எல்லாத்துக்கும் மேல பாஞ்சாலி ஆச்சி செஞ்ச வேல , அந்த சாலிச்சிக்கே கட்டி வச்சிருந்தா இதொண்ணும் நடந்திருக்காது. செரி இவ்வளோ பேசுகியே , அப்ப எதுக்கு எங்கப்பா கூடகிடந்து அஞ்சு பிள்ள பெத்த" என்று கூறி அம்மா மூச்சுவாங்கினாள்.
சித்தியும் நானும் அமைதியாக கேட்டுக்கொண்டேயிருந்தோம். இருவரும் மூச்சு வாங்கி பேசி முடிக்கும் பொழுது வாழைத்தண்டு நறுக்கி முடிக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டு அம்மா அடுக்களைக்குள் சென்றாள். பின்னால் எழுந்து சென்ற சித்தி "அவியலுக்கு தேங்கா அரக்கவா" என்றாள். ஆச்சி அதன் பிறகு எதும் பேசவில்லை
இரவு அனைவரும் தூங்கியபின் , வீட்டின் முன்னிருக்கும் புதர் மண்டிய களத்தைப்பார்த்த படி ஆச்சி கால்நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகில் நான் படுத்திருந்தேன். திடீரென்று "எதுக்கு அந்தாளுக்கு அஞ்சு புள்ள பெத்தேண்ணு தெரியல" அழுதிருந்தாள். நான் பதில் கூறும் முன் கண்களை துடைத்துக்கொண்டு "ஆனா ஆளு மன்மதனாக்கும். நடையும் கெம்பீரமும் , மீசையும் இப்பொ நெனைக்கும் போதே எனக்கு புல்லரிக்கி. பின்னாலயே எல்லாம் கிறங்கி வந்து விழும். பொருக்கி எடுப்பாரு உங்க தாத்தா. உங்கப்பாலாம் கிட்ட நிக்க முடியாது" என்று சிரித்தாள் அது அவள் கூறியது விளையாட்டல்ல என்பது போலிருந்தது. "ஒரு விஷயம் சொல்லுகேன் யார்ட்டையும் சொல்லபபிடாது" என்றாள். இல்லை என்பது போல தலையாட்டினேன். "தாத்தா குடிச்சி விழுந்து சாகல , ஆளு அவராவே விழுந்து செத்துருக்காரு. துண்டு சீட்டுல ஊரு பேச்ச கேக்க முடியாதுண்ணு எழுதிருந்தாரு. உங்கம்மைக்கும் தெரியும் , ஆனா எனக்கு தெரியாதுண்ணு நெனச்சிட்டுருக்கா. நீ உங்கப்பா மாரியே வா" அதன் பிறகு அவள் ஒன்றும் கூறவில்லை அப்படியே மடங்கி படுத்துக்கொண்டாள்.
No comments:
Post a Comment