Friday 12 June 2020

குமாஸ்தா - சிறுகதை


ஒன்று :
பதற்றமற்றிருந்தான் , அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதனை பல முறை செய்திருந்தாலும் அதற்கான திட்டமிடுதல் ஒழுங்கான முறையில் இருப்பதாக தோன்றும் , ஆனால் அதனை செயல்படுத்தும் கணம் முற்றிலும் வேறோரு தளத்தில் மனம் இயங்குகிறது என்பதை அறிந்திருந்தான். இந்த முறை அந்த செயல் நடக்கும் கணத்தில் தான் முழுவதுமாய் இருப்பதில் பயிற்சி பெற்றவனாய் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஆனால் அதொரு பாவனைதான் என்பதை உள்ளூர அறிந்திருந்தான். வெளியூரிலிருக்கும் அந்த நவீன பல்பொருள் அங்காடியின் ஒவ்வொரு பொருளாக எடுப்பதும் பின் அதன் விலையைப்பார்ப்பதுமாயிருந்தான். அவன் திருட வந்திருப்பது அவனைத்தவிர அனைவருக்கும் தெரிந்து விட்டது போலிருந்தது அவனது செய்கைகள். ஆனால் அவனை உண்மையாகவே ஒருவரும் கவனிக்கவில்லை. சூதாட்டத்தின் ஒரு முனையில் தான் இருப்பதாகவும் மறுமுனையில் கடை ஊழியர்களும் அவர்களுக்கு காசள்ளிக்கொடுப்பவனாய் முதலாளியும் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தான். இது போன்ற சூழ்நிலைகளில் அவன் அங்கில்லாமல் ஒரு அமைதியான நதிக்கரையோரமாகவோ அல்லது யாருமில்லா அறையில் நிர்வாணமாய் இருப்பதாகவும் நிதானமாக தன் கை கால்களை இயங்கவிடுவான். "என்ன சார் வேணும்" என்றான் ஒரு ஊழியன் "இல்ல அது...கருப்பா ஒரு சீப்பு" என்றான் ஸ்டாலின் "காஸ்மெடிக்ஸ் முதல் மாடி சார்" என்று கூறி அந்த ஊழியன் நகர்ந்தான். "நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் , பயம் அது மட்டுமே நீ , சீ வெட்கமாக இல்லையா உனக்கு , ஒரு சாதரண மனிதன் உன்னை பயமுறுத்தி விட முடியும் , உன்னை என்னவெல்லாமொ நினைத்தேன். உதவாக்கரை" என்று முனங்கினான். அருகில் அந்த ஊழியன் அவனைப்பார்த்தான். "என்ன ?" என்றான். அவன் கண்களில் அதிகாரமிருந்தது. "ஒண்ணுமில்ல சார்" என்று பதற்றத்துடன் பழைய பொருட்களை தூசிதட்ட ஆரம்பித்தான். அதே அதிகாரத்தொனியில் வாய்க்குள் ஏதுமில்லாமல் வெறுமென முனங்கினான். அந்த ஊழியன் அடிபணிந்தவனாய் அடிமைச்சிரிப்பு சிரித்தான். மீண்டும் அவனை திரும்பிப்பார்க்காமல் ஸ்டாலின் படியேறி முதல் மாடிக்குச்சென்றான். அங்கு யுவதிகள் மட்டுமே பணியிலமர்த்தப்பட்டிருந்தனர். அவன் படியேறி அந்த அறைக்குள் நுழைந்ததும். "வெல்கம் சார் , என்ன வேணும்" "நான் பாத்துகுறேன்" என்றான் அவள் எதும் சொல்லவில்லை. விலகிச்சென்று அங்கிருந்த தன் தோழியிடன் அவனைக்காட்டி கண்ணடித்து , "இவன்லாம் கஸ்டமரு" என்று சிரித்தாள் "நான் இங்கு வந்திருப்பது எதற்கென்று இவர்களுக்கு தெரியாது தெரிந்தால் என்னை அடித்து துவைக்கலாம் , அடித்து முடித்தவுடன் பரிதாபத்துடன் என் கையில்லாத தம்பி , புற்றுநோய் அப்பா , கல்யாணமாகாத அக்கா ஆகியவர்களை நினைத்து மனம் கனிந்து ஒரு நூறு ரூபாய் தரலாம். நான் முறைத்த அந்த ஊழியன் என்னை கால்களில் போட்டு மிதிக்கலாம் , இந்த பெண் என்னைப்பார்த்து இரண்டு மிதி கூடுதலாக கொடுக்கச்சொல்லலாம். சட்டை கிழியாலாம் , போலீஸ் வரலாம். ஆனால் மடையனே இது அனைத்தும் நடக்க நீ அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். அது வாலசலின் அருகில் தான் உள்ளது. மேல் மாடியிலிருந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய். பயந்தாங்கொள்ளி. ஆம் அவள் என் முகத்தில் வழியும் வியர்வையைப் பார்த்து சிரிக்கிறாள். சிரிக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு ஓடிய பிறகு இவர்கள் வாழ்க்கையில் நான் ஒரு திருடனாக என்றுமே இருப்பேன். மறக்கமுடியாதவன் நான். நாளை அலுவலகம் செல்ல வேண்டும் பாதியில் வைத்த கோப்புகள் அப்படியே உள்ளன மேனேஜர் கேட்கும் முன் அதனை அவர் மேசையில் வைப்பது நல்லது. முகத்தை துடைத்துக்கொள்வதும் நல்லது" என்று நினைத்தவாறு அவன் முன்பு சொல்லிய அதே கருப்பு சீப்பை எடுத்துக்கொண்டான். "இது பொண்ணுங்க யூஸ் பண்றது சார்" "தெரியுது" என்றான். மீண்டும் அவளின் முகத்தில் அதே சிரிப்பு. "நான் இவர்களின் கண்களில் கோமாளியாக தெரிகிறேனா ? , நான் எதையும் செய்பவன் , எடுத்துக்கொண்டு ஓடும் பொழுது , உங்களின் கண்படாமல் நான் மறைந்து சென்ற பிறகு நீங்கள் சொல்லலாம் 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள ஓடிட்டானே' 'சரியான திருடனா இருக்கானே' 'கைல சிக்கட்டும் பாத்துக்குவோம்' 'அவன நான் அப்பொவே பாத்தேன் முளியே சரியில்ல, அப்பவே சொல்லிருபேன் , நாம கொஞ்சம் சூதுவாது தெரியாதவனா போய்ட்டோம்' கடைசியாக சொன்னவனின் பைகளில் காப்பிப்பொடி டப்பாவோ பருப்பு பாக்கெட்டோ ஒளித்து வைத்திருப்பான் கள்ளன்." என்று நினைத்துக்கொண்டான். படிகளில் இறங்கி பில் போடப்படடும் இடத்திற்கு சென்றான். முகத்தில் முன்பிருந்த அதே அதிகாரத்தோரணையை வரவழைத்துக்கொண்டான். அவன் மார்புகள் தெளிவாகத்தெரிய அதனை பில் போடுபவன் கனவிக்க ஸ்டாலின் சுதாகரித்துக்கொண்டான். வியர்வையால் நனைந்திருந்த சட்டையை சரிசெய்துகொண்டான். "அம்பது ரூபா சார்" என்றான் பில் போடும் ஊழியன். ஸ்டாலின் வாசலில் இருந்த பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் சொன்னது இவன் காதில் விழவில்லை. "சார் அம்பது ரூபா" கைகளில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ரூபாய் தாளை கடை முதலாளியிடன் கொடுத்து பெட்டியை நெருங்கினான். பெட்டியை எடுத்துக்கொண்டு ஓட நினைக்கும் கணம். கடை முதலாளி "சார் மீதி ? " என்றார். அனைத்தையும் மறந்தவனாக "சும்மா சார் பாத்தேன் , நான் அந்த சீப்பு வாங்க வந்தேன் , காசு குடுத்துட்டேன் , பில் கூட இருக்கு" என்று கையிலிருந்த பில்லை நீட்டினான். "மிச்ச காசு சார் , அம்பது ரூபா . பெட்டி உங்களுதா" என்றார் கடை முதலாளி. "இல்ல..மறந்துட்டேன். நன்றி" என்றவாறு கடையிலிருந்து வெளியேறினான். பீதியுடனிருந்த அவன் முகம் இப்பொழுது விளரி , செம்பளுப்பாக மாறியது "சீ , இதற்கு நான் யாரையாவது வலுக்கட்டாயமாக பிடித்து கால்களை நக்கலாம் , எல்லா இடங்களிலும் பயம் , எங்கயாவது தைரியமாக எதாவது செய்திருக்கிறாயா , ஒன்றுக்கும் லாயக்கில்லை , தரையில் இருக்கும் பீ. எல்லாரும் மிதித்து செல்லலாம் அவர்களின் முகத்தில் அருவருப்புடன்" வெயில் எரித்தது. அவனும் எரிந்துகொண்டிருந்தான். அருகில் நடந்து சென்ற ஒருவன் அவனை கவனிப்பதை உணர்ந்ததும். சாதரணமாக முகத்தை மாற்றிக்கொண்டான். அருகில் சென்றவனைப்பார்த்து அவனால் சிரிக்கக்கூட முடிந்தது. ஆனால் அது ஒரு நொடிதான். மீண்டும் அதே எரிதல். " திரும்பிச்சென்றால்தான் என்ன ? , இந்த முறை கண்டிப்பாக எடுத்துவிடலாம் , தவறுகள் ஒரு முறைதான் நடக்கும். முகத்தை சாதாரணமாக்கு , சிரி , இனி போவோம்" என்றவாறு மீண்டும் அதே கடைக்குச்சென்றான். முதலாளி இருந்த இடத்தில் காலி நாற்காலியிருந்தது. அந்த ஊழியனில்லை. பில் போடுபவனுமில்லை. அவன் கடையில் முன்பு பொருள் வாங்க வந்திருந்த ஒருவன் எதோ ஒரு பொருளை இன்னும் தேடிக்கொண்டிருந்தான். மாடியில் சென்று பார்க்காலாம் என்று நினைத்தவனாக படிகளில் ஏறினான். அங்கு அந்த பெண்ணிருந்தாள். "என்ன சார்" என்றாள் "நான் பாத்துக்கிறேன்" என்றான். அவள் மீண்டும் முன்பு நின்றிருந்த அதேயிடத்தில் போய் நின்று கொண்டாள். அவன் பொருள் எடுப்பது போல பாவனையுடன் மீண்டும் தேட ஆரம்பித்தான். "நின்று கொண்டேயிருக்க வேண்டும் , கொடுமையான வேலைதான். நான் பரவாயில்லை அமர்ந்திருக்கலாம். சாதரண வாழ்வு. இதில் வரும் சம்பாத்தியத்தை வீட்டிற்கு கொடுப்பாள். காதுக்கு புதிதாக கம்மல் வாங்குவாள். அதன் குலுக்கத்தைப்பார்த்து எவனாவது காதலிப்பதாக சொல்வான். பிறகு கல்யாணம் மீண்டும் அவளைப்போன்றே ஒரு குழந்தை மீண்டும் இதே போன்றதொரு வேலை கால்கடுக்க மீண்டும் நிற்பானோ நிற்பாளோ. நாம் எல்லோரும் புராதான மரம் போன்றவர்கள் நின்றுகொண்டேயிருப்போம் மாற்றமில்லாமல்." அவளிடமிருந்து பார்வைவை விலக்கியவாறு. "அது இருக்கட்டும் இருவர் மட்டுமே கடையில் இருக்கின்றனர். இது சரியான கணமில்லை. மற்ற ஊழியர்களுமில்லை. காத்திருக்கலாம் , ஆனால் எவ்வளவு நேரம். ஜெஸ்டின் பசியோடிருப்பான். சாப்பிட வாங்கிவருவதாக சொல்லியிருக்கிறேன். நேரமானால் ஜூலி என்னை இரண்டாக பிளந்தேவிடுவாள். சீக்கிரம் செல்ல வேண்டும் ஆனால் எப்படி?. ஜூலிக்கு எதாவது ஹேர்டை வாங்கிச்செல்லலாம். ஆம் அவள் முடி நரைத்துக்கொண்டே வருகிறது, என்னுடையதும்தான். அடித்து முடித்ததும் அவள் இளமை துளிர் விடும். பழைய நினவுகளில் புணரலாம். புணர்வதும் இப்பொழுது சலிப்பாகிவிட்டது. நேரப்போகென்று வேண்டுமானல் புணரலாம்" என்று நினைத்துக்கொண்டான். "நீ சாப்புட போயிட்டுவாம்மா , சீக்கிரம் வந்துரு" கீழிருந்து கேட்டது முதலாளியின் குரல். "அவள் போகும் முன் நான் அதை செய்ய வேண்டும். என்னைப்பார்த்து சிரித்தவளல்லவா அவள்." என்று நினைத்தவாறு படியில் அவளுடன் இறங்கினான். அவளைப்பார்து சிரித்துக்கொண்டான். அது கள்ளமில்லாமலிருந்தது. "என்ன சார் எதாச்சும் மறந்துட்டீங்களா" என்றார் முதலாளி சுற்றி பார்த்தவன் அங்கு அந்த ஊழியர்களும் , முன்பிருந்த வாடிக்கையாளரும் இருந்ததைப்பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான். "இனி நான் தொடங்குவேன்" கையிலிருந்த ஹேர் டை பாக்கெட்களை பில் போடுபவனிடம் கொடுத்தான். அவன் பில்லை ஸ்டாலினிடம் கொடுத்து முதலாளியிடம் பொருளை கொடுத்தான். அவர் கைகளில் காசைக்கொடுத்து , பொருளை வாங்கியவுடன் டைல்ஸ் தரையில் ஒருமுறை வழுக்கி விழுந்து அந்த பெட்டியைப்பற்றிக்கொண்டு வேகமாக வெளியே ஓடினான். பின்னாலிருந்து குரல்கள் கேட்டன. யாரோ ஒருவன் துரத்திக்கொண்டு வரும் செருப்பு சத்தம் கேட்டது. திரும்பிப்பார்க்கவேயில்லை. சாலையில் இருவர் மீது மொதி விழாமல் சென்றுகொண்டிருந்தான். ஆனால் அந்த செருப்புச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. தொந்தி குலுங்கிக்கொண்டேயிருந்தது. மூக்குக்கண்ணாடி விழுந்து விடாமல் கைகளால் பிடித்துக்கொண்டே ஓடினான். அந்த கடையிருந்த பிரதான சாலையைத்தாண்டி இடப்பக்கம் திரும்பி பின் வலப்பக்கம் திரும்பி ஒரு சிறிய தெருவிற்குள் நுழைந்தான். அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டு மூச்சு வாங்க பலமுறை எச்சில் துப்பிக்கொண்டேயிருந்தான். ஒருமுறை துப்பியது அவன் கால்களிலேயே விழுந்தது. தெருவில் கிடந்த பேப்பர் ஒன்றினால் அதனை துடைத்துக்கொண்டு. ஜெஸ்டினுக்கு சாப்பாடு வாங்க ஒரு சாதாரண கடைக்குச்சென்றான். இரண்டு : "எதுக்கு இப்டி ஓடுறாரு" என்றார் முதலாளி "என்னனு தெரியல , கைல அந்த பெட்டி அவர் வரும் போது கொண்டு வரல" என்றாள் அந்த பெண் "அப்போ யாரோடதையோ தூக்கிட்டு போய்ட்டானா" என்றான் ஸ்டாலின் முதலில் பார்த்த ஊழியன் "மொதல்ல கேக்கும்போது அது அவரோடதில்லனு சொன்னாரு" "திருட்டுப்பய , நல்லா பிளான் பண்ணி தூக்கிட்டு போய்ட்டான் , நான் மொதல்லயே நெனச்சேன் , அவன் முளியே சரியில்ல. சும்மா பொருள தேடுறது மாதிரி பாவன காட்டிட்ருந்தான்" என்றான் உண்மையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில். "நம்ம கடைல யாரோடாதானு தெரியலயே" என்றார் முதலாளி "இல்ல அவர் கடைக்குள்ள வரும்போதே கொண்டு வந்தாரு. அவரேதான் அங்க வச்சாரு. எதுக்கு அத எடுத்துட்டு ஓடுனாருன்னு தெரியல" என்றார் பொருள் வாங்க வந்திருந்தவர். "அத எடுத்துட்டு எதுக்கு இப்டி லூசு மாதிரி ஓடுனான் அந்தாளு" என்றார் முதலாளி "இல்ல சார் , நான் பாத்தேன் அது வேற ஒரு கஸ்டமரோடது. ரெகுலர் கஸ்டமர்தான். மறந்து வச்சிட்டு போயிருக்கலாம். வந்து கேட்டா என்னத்த சொல்ல. எவனும் தொரத்தாமலேயே இந்த ஓட்டம் ஓடும் போதே தெரியல. கண்டிப்பா திருட்டுதான். அதுல என்ன இருந்துச்சோ" என்றான் அந்த ஊழியன். "இல்ல சார் அவர பாத்தா அந்த மாதிரிலாம் தெரியல. என்ன பாத்து ரொம்ப நார்மலா சிரிச்சுட்டுதான் போனாரு. வேற பிரச்சனையா கூட இருக்கலாம்." என்றாள் அந்த பெண். மூவரும் பொருள் வாங்க வந்திருந்தவரைப்பார்த்தனர். "கொண்டு வந்த மாதிரிதான் எனக்கு ஞாயபகமிருக்கு , இந்த பொருளுக்கெல்லாம் பில்ல போடுறீங்களா. எனக்கு டைம் ஆச்சு" அவசரப்படுபவரைப்போலிருந்தார்.பொருட்களை வாங்கி வெளியே வந்ததுமே அவருக்கு சமாதானம் ஆகியது. மூன்று : ஸ்டாலின் குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த விடுதிக்குச்சென்றான். வெளியூருக்கு குடும்பத்துடன் செல்லும் பொழுதெல்லாம் இதே போன்றதொரு சாதாரண அறையை எடுக்க வேண்டாமென ஜூலி சொல்லியும் அவன் கேட்பதில்லை. வியர்த்து ஈரமாகியிருந்த சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டிவிட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். சாம்பார் சாதாம் ஆறிவிட்டிருந்தது. இரண்டு உருண்டைகளில் ஜெஸ்டின் அதனை முடித்து கைகளை நக்கிக்கொண்டிருந்தான். "இன்னிக்கி இவன் செஞ்ச வேலைய நீங்க கேக்கணுமே" என்றாள் ஜூலி "அம்மா வேண்டாம்" என்றான் ஜெஸ்டின். அதற்குள் அவன் முகம் சிறுத்துவிட்டிருந்தது ஸ்டாலின் சாப்பிட்டவாறே என்ன என்றான். "கீழ தெருக்கடைல ஒரு பென்சில கடக்காரருக்கு தெரியாம எடுத்துட்டான் , அத அவரும் பாத்துட்டாரு. அவரும் சிரிச்சுட்டே அத இவன் கைல கொடுத்துருக்காரு, எங்கிட்ட வந்து குடுத்தான். எனக்கு என்ன சொல்லனு தெரியல." ஸ்டாலின் முகம் சிவந்தது. எச்சில் கையுடன் எழுந்து அவன் முகத்தில் மாறி மாறி அறைந்தான் . ஜெஸ்டின் அலற ஜூலி ஸ்டாலினை தடுக்க முயன்றாள். ஆனால் அவளால் தடுக்க முடியவில்லை. அவனை தள்ளிவிட்டு மிதித்தான். பின் சுவரின் ஓரமாய் சாய்ந்து குந்தி அமர்ந்து கைகளைக்கொண்டு தலையைத்தாங்கி அழுதான். ஜீலியும் ஜெஸ்டினும் அழுது ஓய்ந்த பின்னரும் ஸ்டாலின் அழுது கொண்டேயிருந்தான் இரவு பேருந்தில் ஊருக்கு புறப்படும் நேரம். அந்த பெட்டியைத்திறந்தான் அதில் அவனது இரு உடைகள் இருந்தன. "இந்த பெட்டிய மாத்தணும் சீக்கிரம் , எவ்வளவு நாள்தான் இதையே வச்சி ஓட்டுறது" என்றாள் ஜூலி.

No comments:

Post a Comment