தோற்றுவாய் :
நனவிலி வழி தெய்வகள் பிறந்துகொண்டே இருக்கின்றன , நாம் அவற்றின் தோற்றத்தை அறிய முற்படும் கணம் தோறும் அவை நம்மை விட்டு விலகியபடி வெகுதூரத்தில் நின்று கோரப்பல்காட்டி குருதி வெம்மையுடன் அபய முத்திரைக்காட்டி ஆழங்களில் மிதந்தலைகின்றன. மனிதனின் தோற்றத்திற்கு முன்பே தெய்வங்களின் இங்கு சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் தன் உணர்வினால் அதனை அறிந்தான் அவன் நனவிலி அவனுள் அதனை அடைகாத்துக்கொண்டிருந்தது போலும். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் அதே கன்னி இங்கு மதுரையை வெறிகொண்டு எரிந்து முலையறுத்து பின் சரண கோசம் எழும்ப அமைதியாகிறாள். ஆனால் அந்த தொடர்ச்சி முடியவில்லை. கொடுங்களூர் கோவிலில் எழுத்தாளர் காண்கையில் கன்னி வெம்மை சூடி நிற்கையில் கணவன் அங்கிருந்து விரட்டப்படுகிறான். அது முடிவிலா கால வெளியில் தன்னை உண்ணும் பாம்பென சுழல்கிறது முடிவின்மயை நோக்கி.
தெய்வங்களின் பிறப்பு மனிதனின் அறிய முடியாமை அல்ல அவன் அறிந்ததன்
விளைவே , தென்புலம் நோக்கி கடல் என்றும் எழுப்பும் ஒற்றைச்சொல் என் காதுகளில் "கன்னி கன்னி" என்றே கேட்கிறது. அந்த ஒற்றைச்சொல்லால் நானுருவாக்கிய தெய்வங்களும் சில இங்கே முன்பே முளைத்திருக்கலாம்.
யவரும் அறிந்திலர்!
நீர்
நீலம் தன் மௌன பார்வையால் இவ்வுலகத்தைபார்த்துக்கொண்டிருந்தது. அதன் பின்னால் இருந்த கருமைக்கு உணர்வுகள் இல்லை. ஆனால் நீலம் அதிலிருந்து உயிர்ப்பெற்று எழுந்து நின்றது அதுவே ஆதிசொல்லில் கடலென்றானது. மனிதன் அதனை அறியமுயன்றான் முயன்றான் முடியவில்லை பின்பு அதற்கொரு பெயரிட்டான் தொழுதான். தொழுதலே அவனின் முதல் கண்டுபிடிப்பு தொழுக என்மக்களே கூடித்தொழுக தனித்து தொழுக. ஊழ்கத்தில் தொழுக. ஊழி முடியும் வரைத்தொழுக.
நுதல் கண்வழி அவன் காணமுயல்கிறான் தன்னால் அறியமுடியாததை. நீலத்தில் மல்லாந்து காண முயல்கிறான் தன்னால் அறிய முடியாததை. ஆனால் அவளோ நானே அந்த அறியமுடியாமை என்னைத்தொழுக என்றாள் இருவரும் கைகூப்பினர். நீலநிறத்தாள் தன் ஒற்றைக்கால் தூக்கி நின்றாள் அவளே அறிந்த அறிய முடியாமை.
இருகால்களும் தரை இறங்கினால் , பிடிபடவில்லை.
வணங்குக நீலத்தை!
காற்று
காலங்கள் தன் கால்களில் வேகமாக ஓடுகின்றன. தெய்வங்கள் நீலத்தில் கண்சிமிட்டி சிரிக்கின்றன. உயிர்கள் தங்கள் வெப்பத்தைக்காத்துக்கொள்ள மறந்த தெய்வங்களை மறக்காமல் உச்சிக்கு செல்கின்றன. கூடவே அவர்களின் தொல்மொழி வருகின்றது வெளிச்சமில்லா இடத்திலும் தொடரும் நிழல் போல.
யாரின் வெறிக்கு யாரின் கோபத்திற்கு இங்கு இவர்கள்.
அனைவருமே கடலின் அல்குலில் முளைத்து கரை ஒதுங்கியவர்களே. தென் புலத்தில் தங்களின் நனவிலி கூட்டிக்கொண்டு வரும் நகரத்தினூடே அவர்கள் தங்கள் நீல நிறத்தாளை மறவாத பரதவர்களே. காற்றே எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பது அதுவே கடல் அலைகளை மீண்டும் மீண்டும் எழுப்பி கண்ணகைக்கு
"கன்னி கன்னி" என்றுரைக்கிறது. வளியே கன்னியரை உருவாக்குகிறது வளியே
காலம் அதுவே எங்கும் பரவி ஊழி வரை நீட்டிச்செல்கிறது. வளியை தொழுக.
மந்தண சொற்கள்
பதித்த சிலம்பணிந்த கண்ணகி தென் புலத்தை நோக்கி நிற்கையில் அவள் கேட்ட சொல்
யாருடையது , ஊழ் ஏன் அவளை தேர்ந்தெடுக்க வேண்டும் .
தேவந்தி பாடும்
பொழுது கண்ணகி என்ன நினைத்திருப்பாள். பெண்களின் தீரா தீர்க்கயியலா காமத்தையா ?
ஆம் அவை தெய்வங்களாகின்றன ஆனால் பேறறச்சீற்றமே பேரன்னையை உருவாக்கியிருக்கும் என
அறிந்திருப்பாளா ?இல்லை! அவளின் அகம் தன் வீடெனும் சிறைக்குள் இருந்தது அவள் எதையும்
அறிந்திருக்கவில்லை. காலம் காத்திருந்தது தன் உச்சத்தில் அடங்க.
அதன் தொடக்கம்
இன்னொரு சிலம்பொலியில் அதேசமவம் தொடங்கியிருந்தது.
காற்று வழி
வண்டுகள் தேன் நாடிச்செல்வது போன்றவன் கோவலன் அவனுக்கு வணிகம் ஓர் எல்லையின்
அவனுக்குட்பட்டது இல்லையெனத்தெரிகிறது அவன் விஷ்ணுபுரத்தின் திருவடியாய் என் ஓர்மைக்கு
வருகிறான். காற்றேயான இசை அவனை நிலையிழக்கச்செய்கிறது. அவன் காற்றிலோடி பறந்தாடி
பின்பு நிலம் அணைகையில் கைய்யில் கிடைத்தது யாழ். அதனை நெஞ்சோடணைத்து மீட்டுகிறான.
மாதவியுடன் அவன் இருக்கையில் அவனுள் இருப்பது காதலா காமமா இசையா இல்லை மொத்தமாய்
இன்பத்தின் ஆதி ஊற்றா. மனிதன் இன்பத்தை தேடியே ஓடுகிறான் செந்நா வேங்கை துரத்தவும்
பாம்பின் வளுவுடல் அகப்படவும் அவன் சொட்டும் தேனையே நோக்குகிறான்.
மொத்ததை
இழந்தும் களியாடி முடித்தும் அவன் கண்ணகியை நாடுகிறான். அவனுள் உறங்கும் வாணிபன்
விழித்து மாதவியை வெறுத்து ஒதுக்குகிறான். அவள் கற்பை நகையாடி வெறுப்புமிழ்கிறான்.
நாடுகாண அன்னை
கிளம்பினாள் தான் அன்னையாக. களி தொடங்கியது!
நிலம்
நிலமே மெய்
அதுவே அனைத்தையும் நிகழ்த்திக்காட்டும் பருப்பொருள். அதன் வழிகள் அனைத்தும் எவரும்
அறிந்திலர். தெய்வங்கள் நீல வழி பிறந்து காற்று வழி தவழ்ந்து அடைவது நிலத்தையே
மக்கள் நிலத்தில் ஊன்றி விண்ணை நோக்கி எழுப்பி தெய்வங்களை தொழுகின்றனர்.
தெய்வகளைத்தாங்கும் நிலத்தை தொழுக.
நிலமெலாம் கற்கள் முளைத்து எழுகின்றன , தீரா காமத்தை , புரியா காமத்தை
, அறிய இயலா காமத்தை எதிர்கொள்ளமுடியாமல் சிதைக்கப்பட்ட ஆன்மாக்களின் உடல்களுடன்
ஐவகை நிலமும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. நிலத்தின் தன்மை மாறுகின்றன முன்னும்
பின்னும் சுழன்று மனிதர்கள் அதனை தம் பொருட்டு மாற்றுகின்றனர். ஆனால் முளைக்கும்
அக்கற்களை மட்டும் விட்டொழிக்க முடியவில்லை. எல்லா மண்ணிலும் அதன் ரத்தம் தோய்ந்த
பற்களும் நிரம்பாத அல்குல்களும் ஊறிகிடக்கின்றன. அனைத்து தெய்வங்களும் தன் இளமுலை
மீது புரண்டெழும் வெய்யநீர் இல்லாமல் இல்லை. மண்ணில் புதைக்கப்பட்ட பின் அந்த
முலைகள் எங்கே செல்கின்றன ? குன்றுகளாய் ஒங்கிய மலைகளாய் பாலை மணல் வெளியாய் பனித்துளி பொழியும் விரிபுல்லாய்.
முதிரா முலை
கண்ணகியை முதிர்ந்த கண்ணுடையாளாய் நீலி கைப்பிடித்து நடத்துகிறாள் , ஆடி பிம்பபாய்
அவள் பார்ப்பதனைத்தும் அவளையே , விலகிச்செல் எனச்சொல்ல அவளால் இயலாது , நீலியும்
அவளே. அவள் நீங்கினால் நீங்குவது அவளின் ஆதிமுதலே கடல் அளித்த கட்டற்ற தன்மையுமே.
ஒளிரும்
கண்களூடன் புன்னைக்காடுகளின் வழி செல்கலையில் நீலி நன்னுள் உறையும் கண்ணகியையும்
கண்ணகி தன்னுள் உறையும் நீலியையும் கண்டுகொள்கின்றனர். கோவலன் வெறும் அந்த ஊழிக்கு
துணைபோகும் ஒரு சிறு குச்சியே அதனை அவன் அறியும் கணம் இறுதி வரை வருவதில்லை. அது
ஆண்களின் அவலம் அல்லவா ?
வீடுதாண்டி காடு
வந்தாள் , தன் நிலையை எய்யும் எண்ணங்களுடன் , அவள் கற்புக்கரசியா ? சான்றோர்
போற்றும் மனைப்பெண்ணா ? அவள் கூறுவதையே கேட்போமே "மண்புழு போல ஊண்பன
அனைத்தும் உடலில் தெரியும் என்றால் இங்கு கற்புக்கரசிகள் உண்டா சான்றொர்தான் உண்டா
? ஒரு வேளை அவளுக்கு அந்த கட்டற்ற தன்மை கிடைத்தால் என்ன செய்வாள் அங்கு நாம்
அகத்தில் கூட்டிப்பெருக்கி உருவாக்கியுள்ள கண்ணகி இல்லை. கண்ணகி சொல்வாள் "கோவலனே எனக்கு நீ
வேண்டாம் சிறகொடிந்த சிறு புறாவே உன்னால் என்னை நிறைக்க முடியாது தள்ளி நில் ,
நான் செல்கிறேன் காலமற்ற நீல வெளியில் நாவாய் ஏறி. அங்கு எந்த ஆணும் இல்லை ஆனால்
எல்லா ஆண்களும் உள்ளனர்"
ஆம் நிலம் ஒரு
ஞானப்பாதை , அதனை கால்களால் அலைந்தே அடைய முடியும் , நீலி தன் கைய்யில்
குத்தூசியுடன் கண்ணகியின் மூளையுடன் அறுவை செய்கிறாள் அது சிகிச்சை அல்ல ஒரு
வகை உணர்த்துதல்.
"யாக்கை
என்பது நாய்நரி உண்ணும் எலும்பும் தோலும் அல்லாவா" எங்கிறாள் நீலி , ஆம் அது
கண்ணகிக்காவே எந்த ஆண் நிரப்பினாலும் அது நிரம்பாததே அதை யாக்கையால் நிரப்ப
முடியாது. அதனை கண்ணகி ஆடிமுன் நிண்று கண்டு கொள்கிறாள். தன்னை தான் உணர்ந்த கணம்
அவள் துணுக்குறுகிறாள் , கோவலனிடன் தஞ்சம் புகமுயல்கிறாள்.
நெய்தல்
கன்னி! கன்னி! அந்தச்சொல்
திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. நீரர மகளிராக இளமுலை முதிரா கன்னி இரவு கண்டது
யாரை ? யாருக்கு அவள் இறந்து கருத்துரைக்கிறாள் ? யாரை அவள் கைகூப்பி தனக்கு
துணையழைக்கிறாள் ?
கடலும் நிலமும்
சேர்ந்தவளே நீரர மகளிர் அவள் கடல் நோக்கி அழைக்கும் நிலக்கன்னி. அந்த அழைப்பென்பது
கட்டற்ற காமத்தை பிச்சிக்குள் நிறைத்ததா ? அவள் கணவன் அதனை அந்த நீலமாக
அறிந்துகொண்டானா ? அவனுள் அவள் நிரப்பிய ஊகிக்க முடியாத அந்த காமமே அவனுள்
ஏற்படும் நிலைமாற்றங்களா ?
கண்ணகி காணும்
முதல் தெய்வம் அவளே. குறுக்கொலும்பில் எழும் சிலிர்ப்பல்ல அது , அங்கு விழும் இடியடி உறைக்கவே அவள் மயங்குகிறாள்.
மணலால் ஆன மணல்
துகள்கலாகிய தெய்வங்கள் , கொட்டிச்சரிந்து கிடக்கும் தெய்வங்கள். கைவிடப்பட்ட
தெய்வங்கள். ஆம் தெய்வங்கள் மனிதர்களை மனிதர்களிடம் நடித்துக்காட்டுகின்றன.
முத்துகள்
அல்குல்களா ? அதனை வெண்ணி கண்டுகொண்டாளா ? அதனை தன் தோழிக்கு காட்டினாளா ? அது
ஆண்களின் மறத்தை தொலைத்து பூத்தும்பி தேடி இசையெழுப்பி அலையவைத்ததா ? அம்முத்துகளை
பெண்களே பெண்களுக்கு காட்டினரா ?
மறம் தோய்ந்த நாட்டினை நிலைநாட்ட வெண்ணி முலைகள்
எறியப்பட்டன , எறிந்த முலைகளில் மட்டும் ஏன் பால் கொட்ட வேண்டும் ? அது பால்
அல்ல , அது குருதி தன்னை இழந்ததன் குருதி ஆனால் அது வெண்ணிறத்தில் நெய்தல் எல்லம்
பரந்து மணலானது. ஆம் அவள் வெண்குருதியே நெய்தல் வெளி (இந்தியாவில் ஆப்பிரிக்கவில்
பெண்களின் யோனிகளின் நுனி வெட்டப்படு அவர்களின் காமம் அடக்கப்படுகின்றன இன்றும்.)
மறம் அல்ல ஆணின்
தேவை அவனின் பயமே கற்புகரசிகளை அவர்களின் கேள்வியேயில்லாமல் உருவாக்க முயல்கிறது.
அதன் விளையே ஊருக்கு ஊர் , தெருவுக்கு தெரு முத்தாரம்மங்கள்.
தேவியே எங்களை
மன்னித்தருளுகுக. ஆண்கள் பாபப்பட்டவர்கள்.
மருதம்
தழைகளை
உண்டுதான் இங்கு பயிர்கள் வாழ இயலும் , மள்ளர் கூட்டமும் வாழ்கின்றது.
நிறையின் சிறையே
அனைத்திலும் முன் சிறை என்று தன் முன் பேயிருக்கொண்டு நீலி காட்டினாள்.
திணைவிதைத்து
அன்னையின் அரவணைப்பில் இருந்த மள்ளர்கள் பேராச்சியின் சிதறலில் மீன்வாடை
பரதவர் துரத்த மருதம் நோக்கி வந்தனரா ?
எந்நிலமும்
எம்மக்களுக்கும் நிரந்தரம் இல்லை ஆனால் தெய்வங்களைத்தவிர. இங்கும் கன்னியின் கதை
யவருக்கும் தெரிவதில்லை. ஆதியும் அந்தமும் அற்றவளாகவே அவள் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ளாள்.
ஆதம் ஈவா ,
அத்தன் ஈவாள் என்பது ஒரு பெருங்கனவு போல பொருள்கூறமுடியா காட்சிகளுடனும்
கண்ணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அவை திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும்
சன்னதம் கொள்ளும் பொழுது படமெடுத்தாடும் பாம்பு போல எழுந்து தலை தூக்கி நிற்க
அதனடியில் நாம் தொடுக்க முடியா பேருவகையுடன் பேரச்சத்துடனும் கண்ணீர்மல்க
நிற்கிறோம். ஆதிமுதல் மொழியேன்று ஒன்றும் இல்லை , அனைத்து மொழிகளும் ஒரே நிலத்தில்
முளைத்தெழுந்து விழுது பரப்பி நிற்கும் ஓற்றைபேராலமரமே. அதன் விழுதுகளும்
இலையளவும் எண்ணிக்கையும் வேறு ஆனால் தன் அடி மரமும் நிலம் புடைத்த வேர்களும் ஒன்றே
என்றறிக.
மொழியற்ற மனம்
எங்கனம் இயங்கும் அதற்கு அறிவதற்கு என்ன இருக்கும். ஆதிமொழியில் முயங்கும்
சுற்றும் தவிக்கும் மூப்பன் சாத்தன் அறிவது இறுதியில் என்ன ? "யாதும் ஊரே
யாவரும் கேளீர்" என்ற வரிகள் மட்டும் அல்லவா! அதுதானே மொழி அவன் முன்
காட்டும் நிர்மூல தரிசனம். அங்கு அச்சொல் அப்பாணனுக்குரியது அல்ல மூதுமூப்பன்
சாத்தனுக்குரியது. மொழி அத்தருணத்திற்காகவே அவனை எல்லாவற்றையும் தாண்டி மீண்டும்
புகாருக்கு வர வைத்தது.
கன்னிகள்
கவர்ந்து செல்லப்படுகின்றனர். ஆண்களின் மறத்தைகாட்ட கிடைத்த பொருட்கள் இரண்டு
நிலம் , பெண். இரண்டையும் கவரந்து கொண்டே இருக்கின்றனர் காலம் முழுவதும்.
கற்பு இருக்க
இயலுமா , அன்பு தன் தன்மையில் வழுவுமா ? இரண்டும் ஒன்றில் ஒன்று இணைந்தது இல்லையா
? மறமே பெண்கள் மனதைக்கவரும் சாவியல்லவா ? பின் எங்கு போய் அன்பை எடைக்கு வைக்க.
மறமற்றவன் ஆண் இல்லையெனில் , கற்பற்றவள் ? ஆம் அன்பிருக்க இயலாது. வேறு வழியில்லை
நம்பிக்கை வைக்க வேண்டும் அன்பிருக்கிறது.
காணூற்றவளானாள்
மருதி , தான் யாரென்றும் தன் நிலை இதுவென்றும் தன் தேவை இதுவென்றும் நான்
யாருக்கும் உணர்த்த வேண்டியதுல்லை. என்னில் தடங்கள் இல்லை என்னில் அழுக்குகள்
இல்லை என்னில் நானே இல்லை ஆம் நாம் அனைவரும் காற்றாகுவோம்.
கோவலன் என்ற
பெயரில் ஆண்கள் பழிவாங்கப்படுகிறார்கள். ஆம் சொற்களில் கண்ணகியின் சொற்களில்
நீலியின் சொற்களில்.
கண்ண்கி "அறம் எங்குமே
பொதுவானதே பெண்களுக்கில்லாத அறம் இருந்தும் இறந்தும் என்ன பயன் எனக்கொன்றும்
பெரிதாகத்தெரியவில்லை ஏனெனில் நான் பெண் என் அறம் வேறு. அன்பு கோவலனே ஆண்கூட்டமே
உங்கள் கண்ணீர் அதற்கு பதில் சொல்ல இயலாது . நாங்கள் விற்கப்பட்டுகிறொம்
உங்களிடன் இருந்து , அதுவே எங்களுக்கு சுதந்திரம். இதற்கு உங்களிடம் பதில்
இருக்கின்றதா ?"
கோவலனின் நடுங்கும் விரல்களே அதற்கு பதில். சில சமயம் தோன்றுகிறது
கோவலனிடத்தில் வேறொரு வீரன் அங்கிருந்தால் கண்ணகி அந்த கணமே இரண்டு
துண்டாகியிருப்பாளோ ? ஆம் கோவலன் இல்லையேல் கண்ணகியும் இல்லை! இளம் மருமகள்
சொன்னது போல இதுவும் கண்ணகியின் நல்லூழே.
கோவலனையும்
வணங்குக!
கள் இசை வெறி
ஆட்டம் அதனடியில் உழல்வதே கோவலன் அறிந்தது அவன் எதற்கும் தீங்குநினைக்காத
தன் இன்பம் மட்டும் நாடும் ஒரு தேன் பருகவரும் சிறு சிட்டு. காண்கிறான்
விழாக்கோலத்தை. மகவாக அவனை அங்கு இட்டுச்செல்கிறாள் கண்ணகி. உடல் கடல் அலைகள்
பாறைகளை முட்டி நிற்க கண்ணகி காண்கிறாள் மீண்டும் அதன் கட்டற்ற தன்மையையும்
நீலப்பெருவிழிகளையும்.
நாகங்கள்
இருட்டைக்காட்டுகின்றன. அங்கு கண்ணகி கணிகையாகிறாள் கணிகைகள் அனைவரும்
கண்ணகியாகின்றனர். எதிர் எதிர் ஆடி ஆனால் அது தலைகீழானது. பல்லாயிரம் முகங்களை
முயங்கிக்காட்டுவது.
புணர்வதே நாகம்
, அதன் சுழற்சி அதன் வேகம் அதன் கட்டற்ற தன்மை அனைத்துமே ஆண்கள் கணிகையிரடம்
வேண்டுவது , அவையும் புறச்சேறியில் வைத்தே வழிபடப்படுகின்றன அதனுடன் பின் எல்லா
தெய்வங்களுடனும் இணைந்துமுள்ளன.
காமமே
வணங்கப்படுகிறது. ஆம் மூடிவைக்கப்பட்ட கட்டற்ற காமமே , வேறெதுவும் அற்ற காமமே. அது
பெரும் மரத்தடியில் தனித்திருக்கையில் நம்மை பயமுறுத்த்துகின்றன. கண்ணகி
நாகங்களின் மேல் கீழ் அடுக்குகளை அறிந்திருப்பாளா? அதன் விதிகளற்ற புணர்ச்சியை ?
நாகங்களை
காமத்தை வணங்குவோம்!
கடல் தாண்டி
வந்த மக்கள் குலம் தன்குலம் என்றறியாமல் ஏழு குலங்களாக பிரிந்தனர் அகண்ட
நிலத்தில். பின் தங்களை தாங்களே விலை கொடுத்து வாங்கி அவர்களை அவர்களே இழிசனம்
என்று சொல்லதலைப்பட்டனர். வேடிக்கை என்னவென்றால் தாயை மகனும் மகனை தாயும்
இழிபிறப்பே என்று நம்பினர்.
நீலியின்
வஞ்சிரிப்பு கோவலனின் , பாகுகனின் பெருமையை நினைத்தா ? இல்லை அவர்களறியாத அல்லது
அறிந்து கொள்ள மறுக்கும் ஒரு பதிலையா?
ஆம் அது
கண்ணகியின் சிரிப்பென்றும் அறிக!
நீலி
கண்ணகியிடன் கூறுகிறாள் "ஆம் இது நீ நினைப்பது போல தேர்ந்து உருவாக்கப்பட்ட
குலப்பிரிவுகள் அல்ல , தானே பிறந்து தானே உண்டு தானே உயிர் கொண்டு வாழும்
ஒரு தனித்த காட்டு விலங்கு போன்றது. அதன் வாழ்வை அதுவே அறியாதது. ஆனால் அது ஒரு
நாள் கொல்லப்படவே வேண்டும்"
மனிதன் தன் உணவு
தேடியே நிலம்விட்டு நிலம் செல்கிறான். உற்பத்தி அவன் மேல் நிலை. வேட்டையும்
உழவுமாய் அதன் இரண்டாம் நிலை. அடர் காட்டில் காடாய் இருப்பது கடை நிலை.
சொற்களற்ற
காரணங்களற்ற ஆனால் ஆயிரம் காரணம் கொண்ட அத்தெய்வம் அக்கடைநிலையிடமே
உயிர்பெற்றுள்ளது. ஆனால் அதனை உருவாக்கியவன் ஒரு ஆண் என்பதில் எனக்கு எந்த ஐயமும்
இல்லை. அடர் காடுகளில் குரங்கு மாந்தர்கள் அக்கால்தடைத்தை சுற்றி சுற்றி
நெஞ்சிலறைந்து தீ மூட்டி தொழுவதை எங்கனம் எப்படி நான் பொருள் கொள்ள முடியும் ஆம்
அவள் காரணங்களற்றவள்.
நுகம் இன்றி
மேழி இல்லை. அதுவே மனிதனை மேல்கீழாய் பிரிக்கின்றது. உற்பத்தி அறிவே மனிதனின்
முதல் வெற்றியும் தோல்வியும். அக்காலத்திற்கு முன் அனைவரும் சமமான மாமன்னர்களெ
அல்லவா!
சொல்லே ஞானம் ,
கோடிமுறைச்சொல்லப்பட்ட ஒற்றைச்சொல்லே நிர்வாணம். சித்தார்த்தன் அமர்ந்தது நுகமற்ற
மேழியினை உருவாக்கும் பொருட்டே. ஆனால் அவன் அறிந்தது ஒரு பேராலமரம். ஒவ்வொரு
இலையும் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு காடும் ஒவ்வொரும் பிரஞ்சமும் அதன் ஒர் இலையே. அந்த
ஒற்றை மரத்தின் விளைவே நாம் அனைத்தும் என்றறிக! நாமும் அந்த மரமா ? அதனை
ஆலமர்செல்வன் அறிந்திருப்பானா ?
ஆற்றியிருக்கும்
பெண்கள் அச்சமூட்டுபவர்கள் , அவர்களின் அழுகைக்கு எந்த ஆணின் பதிலும் பொருள்
தராது. திரும்பி வந்த முது பார்ப்பணன் மகதியிடன் கேட்ட மன்னிப்பு வறண்ட மண்ணில்
ஊற்றப்பட்ட பெரும் கடல் போன்றது , அது அனைத்தையும் உள்ளிறுத்துக்கொள்ளும். அதனுள்
அத்துணை வெறுமை பொங்கி வழிகிறது. ஆம் துறவவென்பது விட்டுச்சொல்வது மட்டும்
அல்ல விட்டுச்செல்லப்படுதலும் என்றறிக.
கதவுக்கு
பின்னால் இருக்கும் அந்த தாழைத்திறக்காமல் சித்தார்த்தன் அழிவற்ற காலத்தை எதிர்பார்த்தது
அச்சமல்லவா ? அன்னையரை அவன் மனம் ஏன் ஏற்கவில்லை அதும் அச்சமல்லவா ? வெறுமை
நிரம்பிய அப்பாழ்வெழிச்சுனை அன்னையின் அமுதெனும் ஒளியில் நிரம்பும் என ஏன் அவன்
உணர மறந்தான்? இல்லை மறுத்தானா ? சித்தார்த்தன் புத்தனாகவும் ஞானகுருவாகவும்
ஆகியபொழுது யசோதரையும் பிரசாபதியும் தெய்வங்களாகியிருந்தனர். ஆம் அவை அனைத்தும்
அல்லற்பட்டு ஆற்றாது ஆழுத கண்ணீர் அல்லவா ?
சிற்றோடையில்
கலந்த தன் கொழுநனை தேடி கடல் சென்று கடலாகிறாள் ஆதிமந்தி. நஞ்சுறையும் சொல்லணிந்த
சிறுவேலமுள் தேடி கண்ணகி சென்றாள் அதனைத்தொடுவதை கோவலன் தடுத்தான், அதனால் ஆபத்து
அவனுக்குத்தானோ? ஆனால் நீலி கீழே தள்ளிநின்று செய் செய் என்றிருப்பாளே ? ஆம்
அகச்செயலால் கடந்து விடு கண்ணகி அனைத்தையும். கடந்து செல்ல இன்னும் பாதை உள்ளது.
குறிஞ்சி
இன்கள் நிரம்பிய
காடு , கண்ணகிக்கு கள் புதிது காட்டின் கட்டற்ற காமம் புதிது , அனைத்தையும் பெரும்
புணர்ச்சி இயக்கமாக காடு அவள் முன் காட்டி நடித்தது. அக்காட்டின் ஓங்கி உயர்ந்த
மலை உச்சியில் ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்து காட்டைப்பார்க்கையில் தன்
உடம்பாலான காட்டில் ஒளிவிழி முகமும் திண்தோள்களும் விரிந்த மார்பும் கொண்டு காடாக
உறைந்து அவளே கிடந்தாள். அன்னையே காமமா ? காமம் இன்றி அன்னை இல்லையா ?
கொண்டாட்டம்
எங்கிருந்து பிறகின்றது , அதன் ஊற்று எது இன்னொருவனின் அழிவா ? வெற்றி என்பது யாது
இன்னொருவனின் தோல்வியா ? ஆம் அதனையே அனைத்து மறக்குலங்களும் ஆணையெனச்செய்கின்றன.
எரியும் பொருள் தீர்ந்த அங்கு எரியும் இல்லை எரிபொருளும இல்லை. புகைச்சல் மட்டுமே உள்ளது.
மக்கள் எங்கணமோ
நிலை பிறழ்வதிலேயே தெய்வங்கள் பேயுருகொள்கிறன. அத்தெவ்வங்களின் ஆணையேற்று நிலம்மாறி
செல்கின்றனர். அனைத்து குலக்கதைகளும் தங்களுள் பிறிதன்றி இதையே சொல்கின்றன.
ஆறுமுகன் கோவலனுள் இருக்கும் ஒரு அரசனை தூண்டுகிறான் , தன்னை வணங்க தன்னை பணிய தன்
மறத்திற்கு இணங்க. ஆனால் மீண்டும் கீழிறங்கி யாழை எடுத்து காட்டின் ஓதையின்
கூதலின் இசையை அதனில் கோற்க விளைகிறான். அவனே கோவலன்.
அனைவர்
கதைகளிலும் அனைவரும் கெட்டவர் தம்மைத்தவிர. குலக்கதைகள் ஒருவகை பொய் நிறைந்த மெய்.
உற்பத்தியற்ற மலை வேட்டுவர் கீழிறங்கி கொள்ளையிடுவதை தங்கள் குல வழக்கமாக அதனை ஓர்
அறமாகவே எண்ணினர். அதை தடுக்கும் பொருட்டே நிறை கன்னி வள்ளியை காடு
காணச்செல்கையில் கவர்கிறான் குமரன் முருகன்.
அடைந்தவை இருக்க பிறவற்றை அடையக்கோருவதே மனம்
கொடுக்கும் உந்துதல் , அதுவே தேவை அதுவன்றி உலகில்லை என்பதே அதன் நியதி. வள்ளி காடுவிட்டு
நாடு செல்வதும் அதன் பொருட்டே. கீழிறங்கையில் தெரிகிறது அவளின் இடம் எதுவென்று
அவள் அடைந்தது ஒன்று அடைகையில் இழந்தது இன்னொன்று. அடைந்தவற்றால்
சிறையுண்டிருப்பதே நிறை. எதையும் அடையாமலே இருப்பது ?
முடிவிலா
இப்பெரும் விளையாட்டில் பெண்களின் கைகொண்டு நிற்கும் ஆண்கள் அடைவதில்லை
ஆளப்படுகிறார்கள் எதன் பொருட்டென்றே தெரியாமல்.
பெரும் யானை
மத்தகமென இருக்கும் பாறையினில் செந்திற தீற்றலென அல்குல் விரித்து நிற்கிறாள்
கன்னி. மலைகளெல்லாம் பூத்து இலைளனைத்தும் பொங்கி நிற்கையில் கன்னி பூப்படைகிறாள்
குறிஞ்சிக்குலங்கள் அவளை போற்றுகின்றன.
கண்ணகி எல்லா
கன்னியர் முன் நிற்கையிலும் அவள் கேட்பது அந்த ஒற்றைச்சொல்லையே. அந்த சொல் கன்னி ?
நெருப்பு ? நீ ? நாம் ? கண்ணகி சொல்லியறியாத அச்சொல். ஆனால் அவள் அகம் அறிந்த சொல்.
பாம்பாட்டியின்
கைய்யிலிருக்கும் கோலைப்போன்றது காமம் அதனை உற்று நோக்கி நாம் நெளிகின்றொம் அதன்
பெருவிசை நம்மை இமைக்காகணங்களில் ஊன்றி நிற்க வைக்கின்றது. காமம் எங்கு
தொடங்குகிறது எங்கு முடிகிறது ? எதனைத்தேடி அதன் தொடக்கம் ? எதன் அடிப்படையில்
அதன் முடிவு ? நாம் தேடுவதை அடைவதே அதன் முடிவா ? இல்லை நம் முன் இருக்கும் நம்
ஆடியின் தேவையை அடைவதே அதன் முடிவா ? கோவலன் காமத்தின் கையாட்டத்தில்
நடிக்கத்தெரிந்த தேர்ந்த நடிகன். மாதவியின் முகத்தை மாட்டிக்கொள்கிறான் அவளும்
கோவலனின் முகத்தை மாட்டிக்கொண்டாள். இருவரும் அவர்களுக்காகவா தொடங்கினர் ?
இருவரும் பிறிதொருவரின் தேடல் முடிந்ததுமா அடங்கினர் ? நம் கையிலிருக்கும் பெரும்
மந்திரக்கோலை நம் முன்னே நீட்டி ஆட்டுகிறொம். நாமே அந்த பாம்பாட்டியும்
பாம்புமா ? அந்த பாம்பாட்டியை இயக்கும் மையவிசை எங்குள்ளது ?
மாதவி நடிக்க
நினைத்தது கற்புக்கரசிகளின் உடலை. அதனை அவள் அடைந்தாளா ? ஆம் அந்நடிப்பை
தேர்வுறகற்றாள். ஆனால் அது யாருக்காக. சம்பாபுரித்தெய்வத்தை பிரதியெடுக்கவா ?
கணிகையரின் கன்னித்தெய்வமாகவா ? காப்பியங்கள் அனைத்தும் பொய்யென்றாகிறது , அவள்
மனதின் தழல் எரிந்து கோவலனை மீண்டும் மீண்டும் எரிக்கையில்.
சம்பாபுரித்தெய்வம்
கூர் பற்களும் தழல் கூந்தலும் கொண்டு புகார் நகரில் யாருக்காக காத்திருக்கின்றனர்.
அவள் ஆழம் ஏன் எந்த ஆண் மகனாலும் அறிய இயலவில்லை ? பின்பு தெரிந்தது கணிகையரின்
வஞ்சமே காமம். சம்பாபுரித்தெய்வத்தின் பலிபீடத்தில் ஆண்கள் எரிவது அக்காம நெருப்பிலேயே.
ஆம் தெய்வங்களுக்கு ஆண்கள் இங்கு அவியாக்கப்படுகிறார்கள்.
ஆனால் இவை
அனைத்தும் கண்ணகி தன்னுள் எண்ணி நடித்து முடித்த ஒரு நாடகமாகக்கூட இருக்கலாம்.
ஏனெனில் இவை மாதவியைப்பற்றி நீலி சொன்னதே.
மனிதனின்
பேராசையே மேழியா ? அவன் அறிவே ஆசையின் பொருட்டா ? அவனுக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனை
வாழ்வதா இல்லை ஆழ்வதா ? ஆதி மனிதனின் வேலும் கம்பும் எப்பொழுது இன்னொருவனை நோக்கி
திரும்பியது ?
ஆம் அச்சமே காரணம். ஆலமர் செல்வன் சொன்னது உண்மையே. அதன் காரணமான
விளைவே அதன் ஆதி.
கைவிடப்படலின் ,
ஆற்றாமையின் , தீரா காமத்தின் , பேரிழிவின் , புலம்பலின் , அறத்தின் , பேரறத்தின்
சன்னதங்கள் முயங்கும் வெளியாகின்றது ஐவகை நிலமும். தெய்வங்கள் நம் முன் வந்து
காட்டியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படியாவது நாம் சமாதானமும் பதிலும்
குடுப்போமாக. அதன் மொழி நமக்கு புரிவதில்லை. அதன் நோக்கம் புரிவதில்லை. ஆகவே அதனை
தொழுவோம், என்மனித மக்களே!
அறிதலின்
ஆழத்தில் திளைத்தவர்கள் திரும்பியிருக்கினறனரா ? புத்தனோ , மாகாவீரரோ ஏசுவோ
அனைவரும் அந்த வாவினைத்தேடி வந்தவர்களே. கோவலன் அதற்கு ஒன்றும் விதி விலக்கல்ல.
அவன் பேரழகின் திகட்டலையும் , இருளின் காமத்தின் அழகின்மையயும் கண்டு வெறுமையுன்
உச்சத்தில் நிற்கையில் அவன் எண்ணுவது மீண்டும் பருப்பொருள் நிரம்பிய தன் அக
உலகத்தையே. உள்ளே சென்றவர்கள் மீண்டதில்லை என்று அணங்கு கூறுகையில் அவன் கையில்
அவன் அறியா ஒரு ஒளிரும் கண காலமே உள்ளது அதனை அவனால் யாருக்கும் கொடுக்கவும்
முடியாது. பிறகெப்போதும் அது அவனுக்கானதும் அல்ல.
தெய்வங்கள்
பிறப்பதில்லை இறப்பதுமில்லை அவைகள் சன்னதம் மட்டுமே கொள்கின்றன. கோவலன் வழி கண்ணகி
வழி அவை சன்னதம் கொண்டு தம் வேலை முடிந்ததும் மலையேறி அமர்ந்து விடுகின்றன. கோவலன்
முப்பிறவியிலும் , பின் பிறவியிலும் காண்பது தன் சன்னதம் கொண்ட தெய்வங்களையே
அவர்கள் நடிக்கத்தேர்ந்தெடுக்கும் உடல்கள் மட்டுமே நம்முடையது என்பது ஒரு ஏமாற்றம்
அல்லவா தன் இன்மையை உணரும் கணம் அல்லவா ?
விருப்பருள்
வாவியில் அவன் எதையும் கேட்கவுமில்லை எதனையும் இழக்கவும் இல்லை. உள்ளே
மாட்டிக்கொண்ட கிழகோவலன் வெளி வர அவன் ஏதும் செய்யவில்லை. கோவலனின் ஓட்டம் கண்டு
கிழகோவலன் ஏக்கத்துடன் நிற்கிறான், எதையாவது எடுத்துக்கொண்டு என்னை விடுவிக்க மாட்டாயா என்ற ஏக்கத்துடன்.
கண்ணகி எந்த
கன்னி தெய்வத்தையும் வணங்குவதில்லை. அவர்களின் பார்வைகள் சந்தித்துக்கொள்கின்றன.
சொல்லறியா வார்தைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. மென் புன்னகை காற்றில்
தவழவிடப்படுகிறது. தெய்வங்கள் அனைத்தும் அவளிடத்தில் வந்து தம் கதைகளை பகிர்ந்து
கொள்கின்றன. கன்ணகியும் தம் கதையின் புரிய இயலா தொடக்கத்தை வியந்து நடக்கிறாள்.
அவன்தான் அந்த ஒருவன் , அவனை
காண்டால் சொல்லியனுப்புங்கள் எங்கிறாள் ஒற்றைவிரல் காட்டி பாலையன்னை. விழிநீர்
வற்றும் பாலை கண்முன் விரிந்து கிடந்தது. வெந்த பாலையே அன்னையின் மறுகையில்
இருக்கும் செந்தழல்.
பாலை
மதுரையின் பாலை
வெண் மணல்துகள்களுடன் சிறு சிறு குன்றுகளாக அங்குமிங்கும் பரவியிருக்கவில்லை. இவை
செந்நிறம் கொண்ட மணல் பாழ். வெண் மண் அல்ல இது கால்புதையும் சிதறிபறக்கும்
தெருப்புத்துளிகள். ஆம் பாலை தன் தனி அறத்துள் இயங்குகிறது அங்கு நீங்கள்
கண்ட அறங்கள் அனைத்தும் செயலற்று வாய்பிழந்து நிற்கையில் , செயலற்ற தன்னால்
உருவாக்க இயலாதவற்றை உதிரம் வழிய தன்வழி எடுத்து தன்னுள் அடக்கிக்கொள்ளும் உரிமை
அன்னைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெந்தாய் தன் குட்டியை உதிரம் வழிய விழுங்கும்
போது எழுந்த கண்ணகியின் கொடுஞ்சிரிப்பு தன்னுள் விழித்தெழுந்த பாலைக்கொற்றவையின்
பெரும் கருணையே.
காலமே கருணை ,
காலமே அன்னை!
அப்படியெனில்
காலம் தன் கருணையின்பால் மக்களை போர் கொண்டோ பேரழிவு கொண்டோ கூட்டம் கூட்டமாக
உயிர்களை எண்ணிலடங்காமல் உண்டு செரித்து கொலை விழி கொற்றவையைப்போல் நிற்கின்றதா ?
காலத்திற்கு
அறம் உண்டா ?
குருதி
குடிக்கும் அன்னைகள் வேண்டுவது என்ன ?அவர்கள் குருதி குமரியன்னையின் கால்களில்
படிந்திருக்கையில் அவள் எண்ணுவது என்ன ?
எயினரிடம்
சாலினி வடிவில் அன்னை உதிரவிடாய் கேட்பது தன் வாழ இயலா குழந்தைகளை தானே
எடுத்துக்கொள்வது தானா ? அதும் அன்னையின் கருணைக்குட்பட்டதா ? இல்லை அன்னைகளின்
கன்னிகளின் கோபத்தின் , ஆண்களின் ஆழ் மனதனின் குற்ற உணர்வா ?
எங்குமே பெண்கள்
பலிகொடுக்கப்படுவதில்லை , கன்னிகளின் உதிரத்தில் வீழ்ந்து முளைத்த ஆண்களே
அவர்களின் தழைகள். கன்னிகள் அதனை மீண்டும் வேண்டும் என்றபோது உண்கிறார்கள். ஏன்
என்று கேட்கவியலா பாவம் ஆண்களின் மேல் பாறைகளின் மேல் முளைத்த பாசியென
படர்ந்துள்ளது. உள்ளிருக்கும் பாறைகளை எவரும் அறிந்திலர்.
அன்னைகள்
உருவாவதில்லை அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தங்கள் நிலையழிந்து மனமழிந்து பின்
சொல்லழிந்து பேற்றத்தின் பிடியில் நிற்கையில். ஆனால் எந்த ஒரு அறமும் அதன்
எதிர்தரப்பின் பக்கம் நிற்கையில் பெரும் அற வீழ்ச்சியல்லவா ? அதனை நாம் எப்படி
ஏற்றுக்கொள்வது , சகித்துக்கொள்வது ? அறம் பொதுவானது அல்ல அது சார்புடையடதே.
கன்னிகள் உருவாக்கப்படும் எயினர் குலத்தில் , முதிர்ந்த கன்னிகள் ஓநாய்
குதர வீழ்கையில் தோன்றுகிறது. அவர்கள் சுட்ட சட்டியை போன்றவர்கள் கறிச்சுவை
அறிவதில்லை. தெய்வங்கள் கறிச்சுவை அறியாதவை. நீலியும் கண்ணகியும் கூட அதற்கு விதி விலக்கல்ல.
நேபாளத்தில்
குமாரி தேவி இன்றும் வழக்கத்தில் இருக்கின்றாள் அதே நுதல் விழியுடன். சாக்கிய
குலம் அவளை தேர்ந்தேடுக்கின்றது , அவளது புனிதம் சோதிக்கப்படுகிறது , அவள் அல்குல்
முதலில் பொங்கியதும் அவளில் தூய்மை கலைக்கப்பட்டு பின் சாதாரண பெண்ணாக அவள்
ஆகிறாள். ஆனால் அவளை தேர்ந்தெடுக்கும் முறையில் முக்கியமானது சிறிய உள்வாங்கிய
அல்குல்
கண்ணகி ஆண்களை
பொருட்படுத்துவதில்லை அவள் கவனம் முழுவதும் ஒவ்வொரு இனத்தின் பெண்கள் என்று கூட
சொல்லக்கூடாது , கன்னிகள் இடத்திலேயே உள்ளது.
தெய்வமாக்கப்பட்ட பின் குருதி வடியும் இரு தலைகள் அங்கே உருண்டுகிடந்தன , குமரியன்னை அதனை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன்னிலையில் இருந்து விடுவித்து வீடுபுக இயலா நிலை கண்ணகியை அலைக்களிக்கிறது. அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும்? அவர்கள் ஏன் அங்கு ஒரு பழைய கற்சிலையைப்போல தங்கள் வாழ்க்கையை வாழவியலாமல் சபிக்கப்பட்டு கிடக்க வேண்டும். அன்னையின் கருணை அவளின் தாய்மை ஒரு சாபம். ஆம் இயற்கை கொடுத்த சாபம். அதுவே அவர்களின் சுதந்தரமின்மை அதுவே அவர்களின் கற்போடிருக்க ஆதி காரணம். ஏய் இயற்கையே ஏன் அன்னையை பிறக்கும் போதே சிறையினுள் வைத்தாய்.
எத்தனையோ அன்னைகளின் எலும்புகள் புதைக்கப்பட்டது பாலையின் மணல்வெளி. மண்ணுக்கு கீழே அன்னையரின் உலகம் ஒன்று உறங்கவியலாமல் வெம்மையை கக்கிக்கொண்டே இருக்கின்றது. அத்றகு எத்தனை ஆண்களின் குருதிப்பெருக்கும் காணாது. அவை விழுந்ததும் உறிஞ்சிக்கொள்ளப்படும். ஆம் அது நிரப்பமுடியா விடாயே.
முல்லை
நீலியும்
கண்ணகியும் , கோவலனை இரவலனுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் மாதவியும் கோவலனும் ,
தங்களுக்கு வேண்டியதை தாங்கள் கூறிக்கொள்கின்றனர். மாதவியின் கற்பை , அவள்
ஆற்றாமையை அவன் நினைத்து கண்ணீர் உகுக்கிறான். அவளும் தன்னைப்பற்றி ஒரு சொல்
கேளாமல் அவனின் இரு பெரும் முதியவர்களையும் கண்ணகியையும் பற்றி கண்ணீர்
உகுக்கிறாள். இதில் எது மெய் எது பொய் ? மகிழ்ச்சி தான் வாழ்கையின் சாரமா ? அப்படி
இருக்கையில் அறிதல் அம்மகிழ்ச்சியை கொன்றழிகின்றதே.
ஆம் அது தனி
மனிதனின் , ஒரு குழுவின் மகிழ்ச்சி. மானுடத்தின் மகிழ்ச்சியின் பால் செல்ல அறிதல்
அவசியமாகிறது. எனினும் ஒரு செயலால் மானுடம் முழுதும் மகிழ்ச்சி அடைவதில்லை. அப்படி
ஒரு அறச்செயல் இங்கு இல்லவேயில்லை. மானுடம் முழுவதிலும் பேரின்பம் என்பது தொலைக்காத
பொருளைத்தேடுவது போன்றது அது கிடைப்பதேயில்லை ஆனால் அந்த தேடுதல் மட்டும்
முடியாதது.
பெரும்
தர்மத்தின் முன் தனி மனித உணர்வகளுக்கும் ஆறுதலுக்கும் இடமில்லை ஆனால்
அதொருஅறிவார்ந்த விஷயமும் இல்லை. கோவலனுக்கு தேவைப்பட்டது ஆறுதலான சில வார்த்தைகள்
அது கண்ணிகியிடம் இருந்து இனிமேல் வரப்போவதில்லை. அவள் நீலியின் சாயலை முழுதாக
எடுத்தாகிவிட்டது , கண்ணகி கொடுக்கும் அருள்வாக்கு நீலியின் கூற்றே. கண்ணகிக்கு
அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டன. நீலி புன்னைமரத்தடியில் அடங்கிவிட்டாள்.
பெண்கள்
அனைவரின் அகத்தினுள்ளும் அனல் நா துடிக்க மடங்கி எழுந்து கொண்டிருக்கின்றது. அதனை
அணைக்க ஆண் தன் உயிர் மெய் அனைத்தையும் கொடுத்தாக வேண்டும். அது அவனறியா முன்வினை.
கண்ணகி கோவலனை தின்று கொண்டிருந்தாள் , அவள் பசிக்கு இறந்த அனைத்து அன்னையினரின்
பசிக்கு. கண்ணகியின் சொற்கள் அதன் தீ நாக்கு தீண்ட தீண்ட கோவலனின் மெய்
எரிகின்றது. கோவலன் கொல்லப்படுவதும் கண்ணகி எழுவதற்கான ஒரு காரணம் மட்டுமே. அவனை
கண்ணகி ஏற்கனவே சிதையில் நிறுத்தி தொடர்ந்து அவியாக்கிக்கொண்டிருந்தாள்.
இசை கோவலனை கூட்டிச்செல்லும் பாதையின் முன் தடங்கள் இருப்பதில்லை. அவன் சென்ற தடங்கள் அதில்
பதிவதுமில்லை. அவனறியா ஒன்று அவனை முலையருந்த தலை தடவி அழைத்துச்செல்கிறது. அவன் ஏதுமறியா மதலை. கைய்யிலிருக்கும் கோவலன் காண்பது முலை இரண்டாகி அதிரும் நாணுடன்
இருக்கும் யாழே. அவன் அறிந்தது விண்ணிலிருந்து பால் மழை பொழியும் அந்த யாழ்
மட்டுமே.
காதலுக்காக
காத்திருப்பவர்களுக்கு காலமே இல்லை. கண்ணன் நப்பின்னையை ஏன் விட்டுச்டென்றான்.
அவளை அவன் புணர்ந்து செல்வதற்காகவே வந்தானா ? அப்படியெனில் அவன் ஏன் திரும்ப வர
வேண்டும். வந்தவன் ஏன் நிழலென செல்ல வேண்டும். என்னக்கொன்று புரியவேயில்லை. ஆணகள்
தன்னிலையில் யார் ? அவர்களுக்கு என்னதான் வேண்டும் ? நப்பின்னை காத்திருக்கையில்
அவன் ஏன் விலகிச்சென்றான்.
என்னதான் பதில்
சொன்னாலும் கண்ணன் விட்டுச்சென்றது சென்றது தான். காலம் சென்றுவிட்டது. நப்பின்னை
மாதவியை உணர்த்துகிறாள் , அவள் நினைத்தது அவன் வருவான் என்று , அவன் வந்தும்
விட்டான் ஆனால் அங்கு மகிழ்ச்சயில்லை. தன்னை இன்னதென உணர்ந்தவள் இப்பொழுது அது
உண்மைவென தெரிந்தும்விட்டாள். நரைத்தாடிக்கிழவன் சொன்னான் "மகிழ்ச்சியான
குடும்பங்கள் அனைத்தும் ஒரே போல் இருக்கின்றன துன்பப்படும் குடும்பங்கள் அனைத்தும்
வெவ்வேறாக இருக்கின்றன" ஆனால் இங்கு நம் நிலத்தில் என்னமோ எல்லா பெண்களும்
ஒரே போல கைவிடப்பட்டு சபிக்கப்பட்டு ஆற்றியிருந்து தன் அவன் வந்தும்
மகிழ்ச்சியில்லாமல் வென்றிருக்கின்றனரோ ?
இவையனைத்தும்
கணிக்கப்பட்டவையா ? இல்லை அது ஊழி தோறும் நடக்கும் ஒரு அன்றாடச்செயலா ? அங்கு
யாருமறியா ஒன்றை இப்பொழுது கோவலன் மட்டுமே அறிந்துள்ளான். மதுரை மீண்டும்
எரிக்கப்படடும்.
எரி
எரிவதனைத்தும்
அழிகின்றது , எரியும் கூட. குலங்கள் அனைத்தும் தன்னுள் தனக்கு இழைக்கப்பட்ட
துரோகத்தை எண்ணி எண்ணி வஞ்சினம் கொண்டு காத்திருக்கின்றன. அக்குலங்களின் ஆழத்து
அடியில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது அதனை அணைக்க அனைவரும் முயல்கின்றனர்.
அதற்கு ஒரு காரணமாய் மதுரையை எரிக்க கண்ணகி தன் இடக்கால் சிலம்புடன் பாலைவிட்டு
முல்லையில் மாதிரியிடத்து வந்து அடங்கியுள்ளாள்.
குலங்கள்
உருவாகிவந்தது குடிநெறியின்பால் மட்டுமே , அவற்றை அவை விட்டுக்கொடுக்க முயலவில்லை.
போரில்லா மதுரையில் ஊட்டும் உண்ணாட்டமும் இல்லா மறவர் அதனை தங்கள் குடிநெறியென
செய்ய தலைப்பட்டனர்.
பழையன் கோப்பெருந்தேவியிடம் "அரசனின் ஆசனம் வாள் வேல்
வில் அம்பு எனும் நாங்கு கால்களால் ஆனது" என்கிறான். வலிமை மனிதனின்
இயல்பான ஆற்றல்களில் ஒன்று , அவை இல்லையேல் மனிதன் பிழைத்து எழுந்து வந்திருக்க
இயலாது. அதனை தம் குல நெறியாக கொண்டவர்களே மறவர். வலிமையே ஆற்றல் அதுவே அவர்களின்
அறம் அதுவே அரசை வழி நடத்தும் , மக்களை கட்டுப்படுத்தும் என்பது அவர்களின்
நம்பிக்கை. இது முன்பு எப்போதோ நடந்த ஒரு சம்பவம் இல்லை மனிதயினம் தோன்றியதில்
இருந்து சமகாலம் வரை அனைத்து சர்வாதிகாரிகளின் மூளையில் சுருங்கி எழுந்து அவர்களை
செயல்படுத்தும் ஓர் அழுகிய புழு. ஆனால் மறவர்கள் கருகழல் கொற்றவைக்கு பயம்
கொண்டவர்கள். தாங்களின் குடி அறம் பிறழ்ந்தது என்றால் , அவள் ஆணையிட்டப்படி
மண்ணும் மனிதரும் எரிந்து கரிந்தொழிய வேண்டியதுதான் என்றும் அதுவே அறம் என்றும்
நம்பத்தலைப்பட்டனர்.
நம் சமகாலத்தில்
அந்த பேறறம் எங்குள்ளது ? அதனை நடைமுறைப்படுத்த அவள் வெகுண்டெழுந்து வந்து
காத்தருள வாய்ப்பிருகின்றதா ?
அனைத்து
மகாராணிகளும் தங்களுக்குள் இருக்கும் சாதாரண கோப்பெருந்தேவிகளை மறைக்க
முகக்கவசமிட்டு சுற்றுகின்றனர். அவள் பழையன் குட்டுவனை உள்ளூற வெறுத்தாள் ,
அவளுக்குள் இருக்கும் சிறுமியை அவன் வெறுத்ததே அதற்கு காரணம். ஆனால் அவன் கோவம்
கொண்டு சிலம்பெங்கே என்று கேட்கையில் "தந்தையே" என்கிறாள். மற்ற
தருணங்களில் மறக்குடித்தலைவராகவே அவனை விளித்தாள்.
மனிதன் தன்னை
மனதிற்குள் பூட்டி வைப்பன். எங்கே எந்த அணி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும்
தெரிந்த வெளியே காட்டிக்கொள்ளாத , ஆபாசமாக ஏன் இவ்வாறு இருக்கிறாய் என்று கேட்க
முடியாத விந்தை. பழையன் அணிந்த முகமுடிக்கு ஏற்றால்போல கோப்பெருந்தேவியும் அணிந்து
கொள்வாள். அது ஒரு முறைபடுத்தப்பட்ட்ட எழுதப்படாத ஒரு மந்தணம் போன்றது.
கோவலன்
கொல்லப்படப்போவது அவளுக்கு முன்பே தெரியுமா ?
"உங்கள்
ஊழும் என் ஊழும் ஒன்றே" என்று அவள் கூறுவதின் அர்த்தம் என்ன.
தன் பேற்றம்
நிறையுற கோவலன் ஒரு ஏவலாளா ? அப்படியே இருந்தாலும் கோவலன் அதனை மனமுடன்
ஏற்றுக்கொண்டிருப்பானா ?
அனைத்து
குலநெறிகளையும் கேள்விக்குரியதாக்குகிறது இரவலர் அன்னையின் கொலை." இம்மையில்
கொடுத்து மறுமையில் சேர்க்கும் வணிகனே நாங்கள் ஒன்றும் நீ கொள்ள வந்த பொருள் அல்ல
உன் மறுமைக்காக சேர்ப்பதற்கு அறிந்துகொள்" என்று சூழுரைக்கின்றது ஓர் இரவலனின்
குரல். ஆம் கோவலன் மறுமைக்காக சேர்த்து வைத்ததிருந்தது தெருவில் கோடிட்டுச்சென்ற
அந்த அன்னையின் உதிரமணிகளையே! பின் ஓடிச்சென்ற அவளின் குழந்தைகளின் அழு குரல்களையே!
அன்னைகள்
அன்னைகள் எங்கும் தலைவிரிக்கோலத்துடன் மதுரையை சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களின்
கேள்விக்கு எவரிடத்திலும் எந்த பதிலும் இல்லை. நீலக்கடல் பயந்து நடு நிலம் நோக்கி
நிலம் அமைத்த மக்களை அன்னை பெருங்கோபத்துடன் தன்னுள் புகுத்திக்கொள்ள பல கோடி
அன்னையரின் வழி சன்னதம் கொண்டு நுழைந்தாள். அங்கு சான்றோர் இல்லை அறவோர் இல்லை
எனவே கண்ணகியெனும் பேரன்னை அரிமாவின் உறுமலென வந்தாள்.
எரியின்அடுத்த
காதைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல முடியவில்லை அவை ஒரு கனவு போல உள்ளன அதனை நான்
என்னுள் எப்பொதும் வைத்திருக்ககூடிய மறவாத கனவாகியுள்ளன.
கண்ணகி
"மெய்யிற்பொடியின் விரிந்த கருங்குழலும் கையில் சிலம்பும் கண்ணில்
வெய்யநீருமாய்" வந்தது
முலை தரித்தது
சிலம்புடைத்தது
அமைச்சர்
அறத்தினைச்சொன்னது. "அறமே அன்னை நீ முலையறுந்தும் குழந்தை , நீ அறம்
பிழைத்தால் உன்னை வீசியெறிவாள்"
பழையனின் அழியா
மறம்.
"உரைசால்
பத்தினி ஊர்முதன்மை கொள்ள அரைசியற் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகத்தொல்பதி மதுரை
எரியுண்டு அழிந்தது"
இறுதியாக ஒன்று
, சமகாலத்தில் நடந்த சம்பவம் உறுத்திக்கொண்டே இருக்கின்றது. உக்ரைனில்
போலீசின் முன் நிராயுதமாக சென்று மகவிடம் கூறும் அம்மையைப்போல "ஆயுதங்களை கீழே
போடுங்கள்" என்று ஒரு அன்னைக்கூட்டம் போராட்டம் நடத்தியது. அதில் பலர் பின்
குண்டடிகளுடன் வீடு திரும்பினர் சிலர் திரும்பவேயில்லை. இது அன்னைகளுக்கான உலகமா
இன்றும். பேராச்சியின் கோபக்கூக்குரலை அதன் அறத்தை ஏற்கும் பணியும் மனம் நம்
ஆண்களுக்கு இன்றும் உள்ளதா ? இருப்பது போல தெரியவில்லை.
வான்
உரை வகுத்தது
"சொல் பருவடிவ நாங்கு பூதங்களேனில் , அறியமுடியா பொருளே வான் என்றறிக!"
முலையறுத்த
கன்னி மலையேறி அமர்ந்திருந்தாள். வஞ்சினம் உரைத்த கன்னிகள் இனி மகவு ஈன்று
அமுதூட்டுவதில்லை என்று முலையறுகின்றனர். அன்னைகள் அனைவரும் அமுதூட்டுவதில்லை
என்றால் மகவுகள் ஏது ? அச்செயல் ஒரு பழிவாங்குதல் போல , இனி இவ்வுலகம் விருத்தி
அடையாமல் அடங்கட்டும் என்று சூழுரைப்பது போல. அதனாலேயே புது மதுரை
உருவாக்கப்பட்டதும் அனைவரும் அத்தனை பலிகளுக்கு பின் "இனி உன் வருகை எங்கள்
ஊரில் வராமலிருப்பதாக" என்று கூக்குரலிட்டு வேண்டுகின்றனர் , குருதியில்
நனைந்து குளிர்ந்து அதன் தடம் மாறாத கொற்றவையில் நுதல் விழியில் முன்!
ஏன் எல்லா
தெய்வங்களுக்கும் கொடை கொடுக்கும் நாள் முழு நிலநாவு நாளாக இருக்கவேண்டும் ? அதன்
முழுமைத்தன்மையா ? அதன் நிறை சூலித்தன்மையா ? இல்லை அதன் புரிந்து கொள்ள முடியாத
ஏற்றத்தாழ்வுகள் பெண்ணின் மாதவிடாயை ஒத்திருப்பதாலா ? ஆனால் கொலை தெய்வங்களுக்கு
முற்றிரவு நாளே உகந்ததாக கடைபிடிக்கப்டட்டுள்ளது. அப்ப்டியெனில் கருவுறா ,
அனைத்தையும் அழிக்கும் ஒற்றை முலையன்னை வெளிச்சமில்லா இருட்டா ?
பொழிகள் நிறைந்த
கொடுங்கோளூரில் இருந்து சேரன் தன் பெரும்படகேறி கிளம்புகிறான் , அன்னையை தரிசிக்க.
மலை முகடுளில் தெரியும் ஒளி யாருடையது ? அது மலையே அன்னையாக விரிந்து கிடக்க அவள்
இடக்கால் பெரியவிரலில் தொங்கும் நீல மணிக்கல்லா ? போகும் வழி முழுக்க அன்னையரின் கதைகள்
சன்னதன் வந்த சாமியாடிகளின் உடல் வழி கண்டு வெறுண்டு நிற்கிறான் சேரன். இரத்தம்
கேட்டு அன்னைகள் மலைக்குலங்களை தன் குறைகளை தீர்ப்பதாக மக்கள் நினைக்கின்றன.ஆனால்
அவைதான் தன் அவர்கள் மூலம் குறைகளை தீர்த்துக்கொள்கின்றன.
வானமென
விரிந்திருக்கிறாள் கன்னியன்னை , அவள் பெருஞ்சினமெடுத்து சன்னதம் வழி வந்து மழையென
பொழிந்து மலையாளும் மக்களின் நனவிலி வழி தொல் மொழியுரைத்து சிலம்பெடுத்தாடும்
காதையிது.
அன்னையர்
அனைவருமே வெவ்வேறு பெயர்களுடன் முலையரிந்து ,
சிலம்பெடுத்தாடுகின்றனர்.
குறச்சியரின்
காரியன்னை ,
பணியர்களின்
கருங்காளி நல்லம்மை ,
குறும்பரின்
காரி , கண்ணியென இருட்டுக்கும் , வெளிச்சத்துக்கும்
மெலே
செங்குன்றத்தில் கலையமர் செல்வி.
ஆனால் மலையேறும்
தோறும் குருதி குடிக்கும் காரியன்னை , கருங்காளி கருப்பு வெள்ளை காரியாகவும்
கண்ணியாகவும் பிரிகின்றாள். அதி உயரத்தில் கலையமர் செல்வி பெருங்கருணையாக ,
பேறறமாக விரிந்த தாமரை மலருடன் வெண்ணிலா உலாவா வீற்றிருக்கின்றாள்.
சாத்தனார்
கூறியது போல "ஆதியன்னையை எவரும் அறிந்திலர் , அவளை மாந்தர் உணர்ந்தனர் ,
அவளின் தோற்றம் அறியமுடியா பெரும் வான். அது கருமை.
"காற்றில் இறகென.
ஆனால் அதனை கொண்டு செல்ல்லும் திசை புடவியறியும்" குரூரமான உண்மையாக
அழுத்துகின்றது இச்சொற்சொடர். வானவன் மாதேவியைப்பற்றி ஜெயமோகனின் நினைவு இன்று படிக்க
நேர்ந்தது. ஆம் நாம் அனைவரும் கைக்கேட்டா ஊகித்தறியா ஊழின் கைகொண்டு நடக்கும்
குழந்தைகள். அவள் நமக்கு கைவண்டியில் இனிப்புகள் வாங்கித்தரலாம். தள்ளிவிட்டு
தனித்து நிற்கலாம். கட்டியணைத்து முத்தமிடலாம். ஆனால் அவளை அறியயிலாது. நாம்
வெறும் கனவுகளின் வழி நடக்க பணிக்கப்பட்டவர்கள். இல்லையெனில் காப்பியங்களில் வாழ
சமைக்கப்பட்டவர்கள். நம்மிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை.
மணிமேகலயை அங்கு
வரைந்தவர் யார் ? அவன் நனவிலியினுள் அது உறங்கிக்கொண்டிருந்ததா ? மணிமேகலையிடன்
அந்த குகை ஓவியம் கூறிய சொல் என்ன ? கன்னி ? நீ ? நாம் ?. அது ஒற்றைச்சொல்லுக்குள்
அடங்குவதா ? இல்லை அவைதான் விரிந்து காப்பியங்களை படைக்கின்றனவா ? . அடிகள் அதனை
கேட்பதில்லை அவள் இன்னதென்று கூறுவதும் இல்லை. ஒருவேளை அந்த ஒற்றைச்சொல்லையே அவர்
காப்பியமாக படைக்க எண்ணினாரோ ?
வெறுமையில்
இருந்து உலகம் பிறக்கின்றது. தன் முன் விரிந்து நிற்கும் வெறுமையை கண்கொட்டாமல்
தினமும் நோக்கி நிற்கிறாள் அவள். அதிலிருந்து நம்மை பிறப்பிக்கிறாள். மீண்டும்
நீலம் பாய்ந்து நாம் அவளுள் சென்று அடைகிறோம். வந்து செல்லும் அலைகள் போல இதொரு
முடிவிலாத சுழற்சி. ஆனால் அதன் மையம் அவள்.
வலியோரின்
எளியோரின் மெழியறியா குழவிகளின் நனவிலிகளில் மென்காலெடுத்து , பின் கோரப்பல்காட்டி
நிற்பது அன்னையே. உறங்கும் உயிர்களின் நனவிலிகளில் உறங்காமல் அலைவது எங்கள் அன்னையே.
வஞ்சியில்
அன்னைக்கு கோவில் கட்டி பூஜைகள் நடந்து முடிந்த பொழுது அன்னை கடலைநோக்கினாள் ,
புலையர் குல கன்னி வழி கலைமான் மீதேறி அன்னை வருகிறாள். மீண்டும் அன்னையின்
பிறப்பு. அவள் மீண்டும் மீண்டும் எங்கோ பிறந்து கொண்டே இருக்கிறாள். அன்னைகளின்
முழுக்கதையையும் அக்கன்னி தன் அகக்கண்வழி காண்கிறாள். அவள் பூப்படைந்து , முதல்
ரத்தம் வெளிவருந்து , முதற்கரு அவளுள் சூல்கொள்ள விளைவதன் வழி தெய்வமொன்று
பிறக்கின்றது.
தடமழிந்து
புதிது புதிதாய் அன்னையின் வடிவம் மாறி மாமங்கலை கோவிலில் வந்து நிற்கின்றாள்.
கொலைவெறி கொண்டு அன்னைகள் மதுரை நோக்கி செல்வது போல புலையர் கன்னி வழிகாட்ட
அன்னைகள் அணிநிரைத்து செல்கின்றனர். "இய்யே இய்யே" ஆண்கள் கூவ , வீரர்கள்
மறையோர்கள் வழிவிட்டு தலை தாழ்த்தினர்.
காலிடுக்கு விழி
வழி நீலம் புன்னகைக்க , நுதல் விழி வழி எரித்து விழுங்குகிறாள்.
நீலம்
புன்னகைக்க ,
"மிடிமையும்
அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை
புகுந்தன, கொன்றவைபோக் கென்று
நின்னைச்
சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச்
சரணடைந்தேன்!"
நுதல் விழி வழி
எரிக்க ,
"வெடிபடு
அண்டத்து இடிபலதாளம் போட வெறும்
வெளியில்
இரத்தக்களியோடு பூதம் பாட
பாட்டின் அடிபடும் பொருள் உன் அடிபடும் ஒலியிற் கூட
களித்தாடும்
காளி சாமுண்டி கங்காளி அன்னை அன்னை"
வெளியெங்கும்
அன்னைகள் கூடிச்சிரித்திருந்தனர்.
முடிவு
அன்னையை
அறிந்திலர் எவருமிலர் , எழுத்தில் பதிக்காத மேலோர் எவரும் இலர். அன்னைக்கு எங்கும்
ஒரே முகமா ? இல்லை எல்லா முகங்களும் நமக்கு ஒரே முகங்களா ? வான் கோய்ஸ்
கண்டது குறுமபரன்னையின் முகத்தை மட்டுமே அது மகவுடன் தன் மீட்பருடன் அவனுக்கு முன்
தெரிந்திருந்த ஓர் உலகத்தில் நிலம் தொட்டு வான் நோக்கி வளர்ந்திருந்தாள்.
அன்னைகள்
உருவாக்கப்படுவதில்லை , அனைவரின் மூலமும் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.
கருமையில் மெல்ல விரிந்த நீலம் ஒரு புன்னகை!
No comments:
Post a Comment