Saturday 26 January 2019

துயரம் எனும் உருண்டை

துயரம் தன் மொத்த உருவத்தையும் உருண்டையாக்கி உட்புகுந்துவிட்டது.
தன்னைத்தானே துயரம் என்று அறியாத அத்துயரம் உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் உள்ளிருந்து அத்துயரம் கால் நீட்டி வெளியே வந்தது.
ஏதும் எட்ட முடியாததொரு உயரத்திற்கு சென்று திரும்பும் தைரியம் இருந்தது அதற்கு.
சாத்தானின் கைவசம் கையளிக்கப்பட்ட அத்துயரம் கைநீட்டி அனைவரையும் அழைத்தது.
கைகொடுக்க ஒன்றும் இல்லாத சமயத்தில் பாழாய்ப்போன மலை உச்சியில் ஒன்றுமில்லாமல் தொங்கியது.
அத்துயரத்தின் நிழல் ஆதி துயரத்தின் மேல் விழுந்து எழுந்தது.
உட்புகுந்த துயரத்தை மீண்டும் தாங்கிக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி நடந்தாள்





Sunday 20 January 2019

தனிமை

                                                                                                                                                               
Red Beard Chobo
கிணற்றுக்கரையில் அவள் உட்கார்ந்திருந்தாள் மென்மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

எங்கும் பேரமைதி நிரம்பியிருந்தது.
கையிலிருந்த பொம்மையை கிணற்றில் தள்ளி துணை செய்தாள்.
இதுவே கடைசி இனிமேல் உனக்கு எதும் இல்லை என்று அம்மா பொரிந்தாள்.
அப்பா கிணற்றை எட்டிப்பார்த்து முறைத்தார்.
அன்றுதான் அவள் தலை தூக்கிப்பார்த்தாள்,
அவன் அங்கும் தனிமையிலேயே இருந்தான்.
அவளுக்குள் அவள் பொங்கிச்சிந்தும் குழாயடி குடமாக மாறினாள்
புழுதி கிளப்ப வண்டி கிளம்பியது.
மாதம் ஒருமுறை அவளை ஏங்கி அவன் ஊளையிட்டான்.

Tuesday 8 January 2019

அழுகிய பழங்கள்

மூக்கொழுகும் அழுகிய பழங்களை கண்டதுண்டா
அவை தேவையற்றவை என்று தெருவில் தூக்கியெறியப்பட்டவை
தோல் சுருங்கி பாதி காற்று போக மீதமிருப்பவை
அவை சாப்பாட்டு மேசையின் நடுவே அலங்கரிக்க வைக்கப்படுவதில்லை
சாலையில் அவரவர் கால் பட்டு சிலசமயம் அங்கேயே கூழாகியும்விடுகின்றன
அந்த அழுகல் வாடையின் அருகில் யாரும் உட்காருவதில்லை.
ஆனால் பச்சைப்பழங்களை பார்க்கையில் அதன் கண்கள் எரிவதை நான் பார்த்ததுண்டு ஒரு நாள் பேருந்தினுள் மொத்த பிரபஞ்சமும் புறக்கணித்த போதும் அழுகல்கள் முன்னும் பின்னும் நடந்தவாறே புலம்பிக்கொண்டிருந்தன. வீட்டிற்கு சென்றதும் முதலில் கண்ணாடியின் முன் நின்று முகத்தைப்பார்த்தேன் அழுகத்தொடங்கிய முகத்தில் சற்றே மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தது.




காதுகள்


அன்றொரு நாள் அவள் குட்டிப்பாவாடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு மென் மழைச்சாரலின் சாயல் எடுத்துக்கொண்டிருந்தாள். புற்களின் நுனிகள் மேகத்திற்கு போட்டியாக பெய்தமழையை திரும்பதர காத்திருந்தன. புற்களின் நடுவில் நீண்ட கட்டிப்புல் போல எட்டிப்பார்த்தன இரு காதுகள். அது அவளைப்பார்த்தது அவளும் அதைபார்த்துவிட்டாள். கணநேரத்தில் பூமியில் இருந்து ஆகாயத்திற்கு சென்று மீண்டும் வந்து சேர்ந்தாள். மழைவிழுங்கிக்கொண்டிருந்த அது அந்த பூகம்பத்தால் பயந்து அழுது உருண்டோடியது. அவள் முதலில் சிரித்தாலும் பின்பு அழுதாள். சிலுவையின் முன் மண்டியிட்டு மன்றாடினாள். கனவில் அந்த காது உருவத்தின் குடும்பம் தன் அம்மாவிடம் சொல்லி சண்டையிட்டனர் அந்த குட்டி காதுகளில் அடிபட்டிருந்தது. திரும்ப அவள் அந்த மின்விளக்கு கம்பத்தின் அருகில் செல்கையில் தன் ஐந்து வயது அண்ணனை அழைத்துச்செல்வதற்கு மறப்பதில்லை. அண்ணனும் ஒரு கைபார்த்து விடலாம் என்று சட்டைக்கையை மடக்கி விட்டுக்கொண்டான்.