Saturday 25 September 2021

ஒளிரும் கூழாங்கல் - சிறுகதை

மலையடிவார செக்போஸ்டில்  ஜீப் மறிக்கப்பட்டபோது முன் சீட்டில்  அமர்திருந்த கண்ணன் நெற்றியில் பெருகி வந்த வியர்வையை வடித்துவிட்டு ஜன்னலின் வெளியே  மலையின் உச்சியை பார்க்க முயன்றான். எழுந்து நின்ற மலையின் உச்சி தெரியாமல் சூரியனின் செஞ்சூட்டு கதிர்கள் முகத்தில் அறையவும் தலையை ஜீப்புக்குள் நுளைத்துக்கொண்டான். தோள் தொட்டு நெருங்கி அமர்ந்திருந்த  மெலிந்த சதையற்ற எலும்புக் கிழவர் பழுத்த உயிரற்ற கண்களை சுருக்கி "வெக்க என்னமா அடிக்கி செய்" என்று சட்டையை உதறி கழுத்துக்குள் காற்றடித்து அவனைப்பார்த்து சிரித்தார்.  வலப்பக்கமிருந்த பெண்ணிடம் பற்களில்லாமல் உள்பக்கமாய் மடிந்திருந்த உதடுகளை விரித்து என்னமோ சொல்ல வாய் திறக்கவும் அவளின் வெளித்தள்ளி முறைத்த கண்களைக் கண்டு மருண்டு வெளியே பார்ப்பதாய் பாவனை காட்டி அவளிடமிருந்து சற்றே விலகி அமர்ந்துகொண்டார்.


கண்ணன் பேருக்கு சிரித்து மீண்டும் வெளியே பார்க்க ஆரம்பித்தான்.  கிழவர் பேச்சுக்கொடுக்க நினைத்து "தம்பி நாரோயிலோ" என அவன் முகத்தையே பார்த்தபடியிருந்தார். அவன் "இல்ல வெளியூரு" என்றதும் "கள்ளம்…நாரோலியிலுன்னு மூஞ்சில எழுதி ஒட்டிருக்கே" என்று சிரித்தார். அதற்கு என்ன பதி செல்வதென தெரியாமல் வளைந்து மலையேறி செல்ல ஆரம்பித்த பாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்களை அவை காற்றில் உதிர்த்த நீள் இலைகளின் சுழிவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கிழவர் மறுபடியும் அந்த பெண்ணை இடித்தபடி நெருங்கி அமர்ந்து நெளிந்தார்.


உருளைக் கற்களை தரையில் போட்டு மேடு பள்ளமாக்கப்பட்ட சாலை வண்டியிலிருந்த அனைவரையும் குலுக்கியெடுத்து. சக்கரத்தில் பிதுங்கிய பொடிக்கற்கள் தெறித்து பக்கவாட்டு பள்ளத்தாக்கில் விழுந்து தடமின்றி மறைவதை தானே விழுவதாக கற்பனை செய்த போது அசைந்து கொடுத்த கிழவர் என்னமோ கேட்க கண்ணன் கண்மூடி பதில் சொல்லாமலிருக்கவும் அவர் அந்தக் குலுக்கத்திலும் எப்படியோ தூங்க முயல்வது போல கண்களை மூடிக்கொண்டார். சுழன்று மேலேறிச்சென்ற சாலை ஓரிடத்தில் சமதளமாகி நேராக ஓட ஆரம்பித்ததும் இருபக்கமும் அடுக்கி வைக்கப்பட்ட நெளியும் பச்சை ஆபரணமென தேயிலைச்செடிகள் வரிசையாக வெண் பனிக்குள் நீரில் அமிழ்ந்த நிலையிலிருந்தன. 


தேயிலையின் மருந்து வாடை வந்ததும்  மூச்சை நெஞ்சுக்குள் இழுத்துவிட்டதில் உடல் சமநிலைக்கு வந்து உயிர் மீண்டதைப்போலிருந்தது. சதைகள் அடித்துக்கொள்ளும் ஓர் ஒலி அவன் பார்த்துக்கொண்டிருந்த காட்சியிலிருந்து விலக்கியது. "கிழட்டுநாயே , வயசாச்சேன்னு கிட்ட அமுந்து இருந்தா நீ பாவாடைக்குள்ளா நோண்டுவியா" என்றவள் நிறுத்தாமல் செவிட்டில் மேலும் இரண்டடி அடித்து "எலும்பெடுத்த நாயி , தூக்கி பிடிச்சிட்டு வந்துட்டான் சவம்" என்றவள் அங்கு இடம் அமைத்துக் கொடுத்த ட்ரைவரையும் அடிக்க கை ஓங்கினாள். அதிலிருந்த பொறுமை அவனை தெரிந்தவனாய் காட்டியது. வண்டி முன்னோக்கிச்செல்ல செல்ல எதுவுமே நடக்காதது போன்ற பாவனையை எல்லாரும் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


குறுகிய கிளைகள் கொண்ட சில்வர் ஓக் மரத்தில் கொண்டை குருவியொன்று வந்தமர்ந்த வேகத்தில் பறந்து மற்றொன்றில் அமர்ந்து “க்ரீட்…க்ரீட்” என்றது.  அந்த பறவையை அவன் நண்பன் ஆனந்தன் முதல் முறை அங்கு வந்திருந்த போது  “பலவட்டற பறவ , ஒழுங்கா மனுசன் வெளிக்கி போக முடியுதா” என அடையாளப்படுத்தியிருந்தான். 


வண்டி நின்றதும் எல்லோரும் இறங்கி விட கிழவர் அவனை அணுகி பற்களில்லா வாயில் எச்சில் தெறிக்க குழறி "இதே அந்த ட்ரைவர் கை வைக்கட்டும் சத்தமில்லாம கண்ணு சொருகி கெடப்பா. தேவிடிச்சி. எனக்கிட்ட ஞாயம் பேச வந்துட்டா..தூ" என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கையிலிருந்த சாக்குடன் வளைந்த முதுகை தாங்கிப்பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார். 


கண்ணன் அமைதியாக ட்ரைவரிடம் “அக்காமேடு” என்றதும் வேண்டா வெறுப்பாக வண்டி முக்கி கரும்புகையிட்டு தார் சாலையிலியிருந்து மண் சாலையிலேறியது. அந்த சாலை முட்டி நின்ற இடத்தில் முழுதாய் வளர்ந்த தனித்த மிளா, கழுத்தில் சிலிர்த்து நின்ற சாம்பல்  மயிர்ப்பிசிறுடன், இலையென நரம்புகள் புடைத்த காதுகள் துடிதுடிக்க அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு பின் கண்டுகொள்ளாமல் குறுவால் சுழல இடப்பக்க சரிவுக்குள் மறைந்தது. அவனை இறக்கிவிட்டு வண்டி சென்றதும் காட்டின் இரையும் அமைதியில் தனியாக நின்றான். வலப்பக்கமாய் மேலேறிச்சென்ற ஒற்றையடி மண் பாதையில் தனியாக நடக்க ஆரம்பித்தான். பாதையின் மேல் வளைந்து நின்ற இருபக்க மரக்கிளைகள் கவிந்து இறந்த விலங்கின் விலா எலும்புக்கூடு போலிருந்தது. மேலேறிச் செல்லச்செல்ல சுவாசம் தடைபட்டு உடலே இதயமென துடித்து மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுத்ததும் அங்கிருந்த கருத்த பெருங்கண் போன்ற குழிகொண்ட அடிமரத்தின் சாய்ந்துகொண்டான். பெருமூச்சுவிட்டு திரண்டு வந்த எச்சிலை துப்பி தலை தூக்கி பார்த்ததும் தெரிந்த மரப்புடைப்புகள் இரண்டும் , எதிரிலிருந்த நீண்ட கிளையொன்றை பார்த்து சிலிர்த்து நின்றது தெரிந்தது. அவை ஞாபகத்தட்டில் இடறிய ஓர் நினவை மேலே கொண்டு வந்தது. கண்களை மூடிக்கொண்டான்.


*


"கண்ணா , இந்தா மொலையும் கொலையுமா ஒண்ணு , எதுத்தால குஞ்ச புடிச்சிட்டு இன்னொண்ணு" என்று அந்த மரங்களை கருணா சுட்டிக்காட்டி இடுப்பில் கைவைத்து மூச்சு வாங்க நின்றான். மலை ஏறியதின் தடம் அவர்களின் ஒவ்வொருவரின் உடலில் தெளிவாகத் தெரிந்தது.


முலைகளெனன பெருத்து நின்ற மரத்தின் பொருமலில் ஆனந்தனும் , மாரியும் தொங்கினர் , எதிரேயிருந்த மரத்தின் கீழே புடைத்து நீண்டு நின்ற குறி போன்ற கிளையில் கருணா தொங்கி அதனை ஆட்டியபடி "இந்தா வாரார் ஐயப்பா , அந்தா வாரார் ஐயப்பா. ஆடி வாரார் ஐயப்பா.. , ஓடி வாரார் ஐயப்பா..." எனப் பற்களை காட்டி சிரித்தபடி பாடினான்.


ஈரம் தோய்ந்த வழுவழுப்பான பாதையில் நின்றிருந்த கண்ணன் இதனை பார்த்தபடி களைப்பு நீங்க சிரித்து , ஓரமாக அமர்ந்து தோள் பையை திறக்க ஆரம்பித்தான் "இங்கையே சோத்த தின்னுட்டு கெளம்பீறுவோம்" என்றதும் மற்றவர்கள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.


"ரொம்ப நாளாவே இந்த மாரி ஷோ பத்தூட்டெ சாப்புடணும்னு ஆச" என்ற கருணா இரு மரங்களையும் பார்த்தபடி ஏற்கனவே பிசைந்து வைத்திருந்த சோற்றை வாயில் திணித்து "கருத்த குஞ்சொண்ணு குலுங்குது , குலுங்குது" என்று கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி பாடினான்.


ஆனந்தன் "பெருத்த மொல ரெண்டு குகுங்குது , குலுங்குது" என்றதும் மாரி எழுந்து நின்று அவன் மார்பில் கைகளை வைத்து உடலை குலுக்கி ஆடினான்.  


"எனக்கெல்லாம் சோறு திங்குத இடத்துலையே டெய்லி ஷோதான் நடக்கு. போர்வைய போத்தி படுத்துட்டு எங்க வீட்டு அடுக்களைல பாத்துட்டுத்தான் இருக்கேன். அடுப்புத் திண்டுக்குமேல சித்தியும் சித்தப்பாவும் உருண்டு நெளியத பாக்காம இப்பொல்லாம் ஒறக்கமே வாரதில்ல. அதுக்குன்னு டெய்லியுமா யம்மா!" என்று பெருமூச்சு விட்டான் ஆனந்தன்


"உனக்க அப்பனும் அம்மையும் செய்யதையும் ஒளிஞ்சி நிண்ணு பாக்க வேண்டியதான ?" மூச்சு வாங்கியபடி கத்திய கண்ணனின் பேச்சை மாற்ற "லேய் கண்ணா , நீதாம்ல கோம்பையனா இருக்க. மாரியெல்லாம் அதுல கரகண்ட்டுட்டான். போன வாரம் கூட ஒருத்திய சைக்கிள்ள வச்சு நம்ம காலேஜ் தெர்மல் லேபுக்கு பொறத்தால இருக்க முக்குக்குள்ள கூட்டிட்டு போனான் தெரியுமா?" என்றான் கருணா.


"நீ பாத்தியாக்கும் , சும்மா படம் போடத கேட்டியா" கண்ணனின் குரல் மாறியிருந்தது.


"அவன் முஞ்ச பாரு , வெக்கமாம். சீ" என்று கையில் கிடைத்த சிறு கல்லெடுத்து மாரியின் மேலெறிந்தான்.


"அதெல்லாம் சொகம்" என்று மாரி கண்களை மூடி "சொகங்கண்ட நாயிதான் எத்தன கடி பட்டாலும் பொட்டைக்கி பொறந்தால தெருத்தெருவா அலையுமாம்" என்றான்.


கண்ணனைத் தவிர அனைவரும் அதனை ஆமோதிப்பது வாயில் திணித்திருந்த பருக்கைகள் தெறிக்க சிரித்தபடி தலையாட்டினர். மாரி நாயைப்போல தலைதூக்கி அடித்தொண்டையில் ஊளையிட்டான்.


"பத்து பொட்டைக்கி பொறத்தால போனாலும் ஒரு ஓட்ட தானே. எழுவது ஓட்டையா இருக்கு ?" என்ற கண்ணனின் முகம் சுருங்கியிருந்தது


"வெப்ராளப்படாதடே , உனக்கு எங்கன , எந்த ஓட்டைல சொருவனும்னே தெரியாது. பொறவு இங்க என்ன வியாக்கியானம் பேச வந்துட்ட. போ , போயி அந்த மரத்த பாத்து கைல புடிச்சிட்டு வா" என இளித்தான் ஆனந்தன். அவர்கள் சிரித்த ஒலி காட்டின் ஒலிகளுக்கிடையில் இலையசைவென இயல்பாக ஒலிக்க கண்ணன் அமைதியாக தலை குனிந்தவாறு அந்த இரு மரங்களையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான்.


தின்று முடித்து ஒருவருக்கொருவர்  பேசிச்சிரித்து மேடேறி நின்றதும் அவர்கள் கால்களினடியில் சுழன்ற கோரைப்புற்கள் ஈரம் தாங்கி காற்றின் இசைவுக்கு ஏற்றபடி சுழன்றாடடி , நெளிந்தலைந்தன. கீழே வளைகோடென நீண்டு கிடந்த நதியின் கரையில் ஒன்றிரண்டு வீடுகள் பறவையின் எச்சம் போல் ஒட்டியிருந்தன.


அதுவரை அமைதியாக வந்த கண்ணன் கருணாவை நெருங்கி "உண்மையாவே ஆனந்தன் நெறைய பிள்ளைகள ஓத்துட்டானா ?" என்றதும் கருணா சிரிப்பை அடக்கியபடி "அவன் கிழிச்சான். இப்புடிச்சொன்னா ஒரு இதுன்னு சொல்லிட்டு திரியான் சவம். பிள்ளைகள்ட பேசவே வழிகெடயாது நாயிக்கி , இதுல பெரிய மனுசம் மாரி பேச்சு பேசுகான்"


"அப்போ , நீ ஓத்துருக்கியா ?" என்ற கேள்விக்கு  கருணா வாய்திறக்காமல் உதட்டின் ஓரம் வளைய ஒற்றைப்புருவம் உயர்த்தி புன்னகைத்தான். 


கெண்டைச்சதைகள் வலியெடுக்க இறங்கிய பள்ளத்தாக்கில் தெளிந்து ஓடிய நதியின் கரையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் போய்ச் சேர்ந்தவுடன் மற்றவர்கள் படுத்துவிட புடைத்து நின்ற பாறை முகடுகளின் முகம் மட்டும் உயர்த்தி மூச்சுவாங்க அனுமதித்த நதியின் கரை நோக்கி காரணமற்ற எக்கத்துடன் கண்ணன் நடந்தான்.


புற்கள் செறிந்த கரையில் முட்டுமடக்கி அமர்ந்து மலையின் விளிம்புகளை பார்த்தபடி இருக்கையில் இடுப்புவரை நீரில் முங்கி எதிர் கரையில் தனியாய் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலில் ஓர் அடர்ந்த நிழலென , தன் கற்பனையென நினைத்து உற்றுப்பார்த்தான்.. 


அவள் மலைப்பெண்களை போல் கருப்பில்லாமல் சிவப்பாய் பெயர் தெரியாமல் முன்பு தின்ற பழத்தின் நடுப்பகுதியின் நிறமாயிருந்தாள். உடுத்தியிருந்த சேலையில் அப்படியே மூழ்கி ஒரு முறை எழுந்ததும் வெயில் அடையும் மஞ்சள் ஒளிக்கதிர்கள் அவளுடம்பில் படிந்த நீர்த்துளிகளில் தெறித்து சிதறி உருவாக்கியிருந்த மாயமொன்றை கண்டு நிலைதப்பி உடல் நடுங்க நின்றான். நேரடியாக இல்லாமல் மலைகளை கவனிப்பதைப்போல பாவனை செய்து ஒரு கணம் அவளைக் கண்டதும் திரும்பிக்கொண்டான்.


நீரில் இறங்கியதும்  மூச்சு முட்டுவது போல உணர்ந்தவன் , நீரில் மூழ்கி சுற்றியிருந்த நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உயர்ந்த  உடலில் வெம்மையை தணிக்க முயன்றான்.  நீரின் குழுமை தறிகொட்டுப்போன எண்ணங்களை ஒரு புள்ளியில் குவித்தது. தலைக்கு மேல் முன்னும் பின்னும் உயர்ந்து  விளிம்புகளில் மஞ்சளும் உடலில் கருநீலமும் கொண்ட மலைகள் அவர்கள் இருவரையும் கண்டும் காணதாய் இருப்பதாக உணர்ந்து வெட்கி உடலைக் குறுக்கிக் கொண்டான். அவளும் அவன் எண்ணங்களை அறிந்தவள் போல நீரையள்ளி முகத்தில் தெறித்தும் வாயிலள்ளி பீச்சியும் விளையாடினாள். பொன் கதிர்கள் விலகி இருள் சூழ்ந்ததும் எந்த கணத்தில் என தெரியாத ஓர் கணத்தில் வானில் தாரகைகள் நிரம்பி சிமிட்டி அவர்களுக்கான விண் சமைத்தன. அவள் இருளிலும் அந்த பழம் போலவே ஒளிர்ந்தாள். கால்களுக்கடியில் பெரிய பல உருவ கூழாங்கற்கள் மேடு பள்ளங்களை உருவாக்கி அவனை சருக்கி விழ வைத்தன. அவள் அசையாமல் நதிக்குள் முளைத்த ஆணிவேர் ஆழம்வரை சென்ற மரமென அசையாமல் அங்கேயே நின்றாள். மெல்ல விழுந்து எழுந்து அவளருகில் செல்லலும்பொழுதுதான் தெரிந்தது நீரில் சலசலக்கும் சிரிப்பொலி எதற்கோ கொஞ்சி அனுமதி கொடுப்பதுபோல் இருப்பது. அவன் அவளருகில் சென்று புன்னகைக்க முயன்றான் ஆனால் வாய் கோணி இளிக்கவே முடிந்தது. அவள் புதிதாக ஒருவனை குளியலில் அரையாடையுடன் காணும் பாவனையின்றி சிரித்தாள். 


அவள் அவனருகில் கிசுகிசுக்கும் ஒலியில் "இங்க எதுக்கு வந்தது" என்றாள். 


அவன் குரல் திணறியது "இல்ல சும்மா ஃப்ரெண்ட்சோட வந்தோம். இ.பி ஆபிஸுல ஆள் பழக்கம் உண்டு" என்று ஒரு முறை வழிந்து சென்ற நீரில் மூழ்கினான். அதைப்பார்த்து அவள் வாய்விட்டு சிரித்தது காரணமில்லாமல் சிரிப்பதாக தோன்றியது. நீர் அவனை ஓர் உயிர் போல தழுவி தேற்றியது. உள்ளெ அவள் கால் விரல்கள் தனித்தனியாக பிரிவுகளுடன் தெளிவாக தெரிந்தன. அவ்விரல்கள் பெரியதொரு கல்லின் மேல் சுருங்கி மடிந்து இறுகி நின்றன. அதை தொட மனம் துடிக்கவும் என்னவோ தடுத்து நீரின் மேல் வந்தான். 


"உள்ள என்ன செஞ்சது" என்றாள் ஒருவித கிளர்ச்சியுடன். 


"நா… சும்மா மூச்சு பிடிச்சி பாத்தேன். எவ்வளவு நேரம் நிக்கலான்னு" என்று இளித்தான்.


"நான் நல்லா பிடிச்சி நிக்கும்" என்று பெருமையாக சொன்னாள். அக்கணம் அவள் சிறுமியாக தெரிந்ததை பின்பு பலமுறை நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அப்பொழுது அதனை அவன் கவனிக்கவேயில்லை. சொல்லப்போனால் இவை அனைத்துமே அவன் மீண்டும் எண்ணி எண்ணி உருவாக்கிக்கொண்டதாகக்கூட இருக்கலாம். 


மேகங்கள் முயங்கி இரண்டும் எழுப்பிய ஒலியில் வெண்ணிற கீற்றாக மின்னல்கள் அவர்கள் அருகில் நிலத்தை புணர்ந்தன. இருவரும் பயத்தில் நடுங்கினர். ஆனால் மழை பெய்யவில்லை. அவள் "பயந்துட்டேன்" என்றதும் தேற்றுவதைபோல வாயைக்குவித்து ஒண்ணுமில்லை என சைகையில் காட்டினான். அவளுக்கும் அது பயமில்லாமலாக்கியது என நம்பினான்.. 


அதற்கு அடுத்தநாள் அதே போல் அவனும் அவளும் காலம் மயங்கி இரவிற்கு வழிவிடும் நேரம் சந்தித்தனர். அவர்கள் நீரினுள் இருக்கையில் அவன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தடுக்கவில்லை. இருவரும் சிரித்துக்கொண்டனர். நீரில் விண்பார்த்து விழித்து கிடக்க மேகம் மூடி நிலம் நனைத்து பொசுங்கியது. நதியில் கலக்கும் முன் சில துளிகளை தங்களுக்குள் வாங்கிக்கொண்டு அதன் சுவை குளிர் அடி நாவில் பட சிலிர்த்து விழுங்கினர்.


பெருமழை நதியில் கலந்து அதை ஒருவிதமான தன்னிலை அற்றதாய் ஆக்கிக்கொண்டிருந்தது. அனைத்தும் மறைந்து மழையின் கனத்த கால்கள் மட்டுமே தெரிந்தன. அவன் கரைமேலிருக்கும் புற்கள்  மேல் சாய அவள் அவனை அணைத்து தழுவிக்கொண்டாள். நீர்க்கோடுகள் உடல்களில் வழிய இருவரும் கற்கள் உரசி உருண்டு முயங்கி அங்கு நடந்து முடிந்த மாயமொன்றை உணர்ந்து நிமிர்ந்து கிடந்து நீர்த்துளிகளை மீண்டும் விழுங்கி சிரிக்க ஆரம்பித்தனர். பெருக்கெடுத்த நதியில் ஒற்றை கூழாங்கல் உலகின் மற்ற அனைத்தின் ஒளியையும் தன்னுள் கொண்டும் தணிந்து ஒற்றைக்கண் என ஒளிர்ந்தது. அவளை , அந்த தருணத்தை , மழையை , குளிரை முதுகில் , குறுகுறுக்கும் புல் நுனியை அந்த கூழாங்கல்லாக கற்பனை செய்தான். அவன் மனம் எதையோ அடைந்ததாக நினைத்து பொங்கி ஓடிக்கொண்டிருந்த செந்நிற ஆற்று நீரைப்போல் ஓடிக்கொண்டிருந்தது


*


வாயின் ஓரமாய் வழிந்த கோளையை துடைத்துக்கொண்டு எழும்பும் போது இருள் பரவ ஆரம்பித்திருந்தது. வரிசையாக நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் தனிமையில் உறைந்து நிற்க அதன் காலடியில் நீண்டு கிடைந்த ஒற்றையடிப்பாதையில் அவன் நடந்தான். மேகம் இறங்கி கைகளால் அதனை பிடித்து உருட்டி சட்டைக்குள் பொதிந்து வைத்துவிடலாம் என்பதைப்போல் அந்த பாதை முழுவதும் நிறைந்து கிடந்தது. பள்ளத்தாக்கின் சரிவைக்கடந்து இறங்கியதும் கற்களற்ற நதி சிமெண்ட் பாளத்தின் மேல் அழுக்கடைந்து  தன் தடத்தை விட்டு உள்ளிறங்கி வேறுருகொண்டு மெலிந்த பாம்பென ஊர்ந்தது. அவன் முன்பு நிமிர்ந்து கிடந்த புற் கரையை கண்டுபிடிக்க முயன்று கிடைக்காமல் அதுபோன்ற ஒன்றை கண்டடைந்து படுத்துக்கொண்டு விண்ணை நோக்கினான். மேகங்கள் விலக அந்நிலமும் வெளியும் மாயங்களின்றி வெகு சாதாரணாமாக நீண்டு கிடந்தது. மலையுச்சிகள் பொருளற்ற சிமெண்ட் சிற்பங்களைப்போல காட்சியளித்தன. அவனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மீண்டும் வந்த வழிக்கே கிளம்ப ஆரம்பித்தான். 


மலையிறங்கி , வடசேரி சந்தைக்கருகில் ராஜேஷ் தியேட்டருக்குப்பின் இருந்த இடுங்கிய முடுக்கின் வழி நடக்கும் போது செருப்பின் வழி சாக்கடை தெறித்து அவன் பிடரியில் அடித்தது. முதலும் கடைசியுமாக இருந்த வீட்டின் கதவை தட்டவும். வெளுத்து மெலிந்த பெண் கையில் ஓர் குழந்தையை வைத்துக்கொண்டு வெளியே ஓட தயாராய் இருக்கும் சிறுவனை கால்களால் தடுத்தபடி நின்றாள். அவன் முகத்தில் வெறுமையை கண்டதும் அவளும் முகத்தில் அதை தரித்துக்கொண்டதும் சிறுவன் அவர்களை ஏமாற்றிவிட்டு காண்காணாமல் ஓடிவிட்டான். 


அன்றிரவு பிள்ளைகள் உறங்கியபின் வெம்மையான கட்டிலில் மின் விசிறிகள் அதிரும் ஒலிக்கடியில் புழுங்கிய நாற்றமெடுக்கும் அறையில் தன்னுடலை அவளுடலுடன் எதையோ செய்து எதையோ தேடிக்கண்டடையும் வேகத்தில் தேய்த்துக்கொண்டிருந்தான். உடல் தளர்ந்து வீழ்ந்ததும் இருவரும் எதிரெதிர்ப்பக்கமாய் திரும்பி படுத்துக்கொண்டனர். தினமும் செய்வதுபோல கண்களை மூடியபடி அந்த ஒளிர் கூழாங்கல்லை எண்ணங்களில் பரவ விட்டு மெல்ல குறியை வருடினான். காட்டின் குளிரின் நீரின் மழையின் முகமாய் அவள் முகம் திரண்டு விரிந்த கண்களில் கூழாங்கல்லின் ஒளி பிரதிபலித்தது. எல்லாம் முடிந்த பின் மனம் சற்றே நிம்மதியுடன் மகிழ்ந்திருந்ததில் சீரான முச்சுடன் உறங்கினான்.


ஆழ்ந்த உறக்கத்தில் முகத்தில் பட்ட மூச்சுக்காற்றால் கண்விழித்து எதிர்நோக்கியதில் தெரிந்த அவள் முகம் அவன் முன்பு நதியின் கரையில் கண்ட முகத்தில் சாயலின் மிச்சங்கள் அனைத்தையும் இழந்து வெறுமையுடன் ஒருபக்கமாய் சூம்பி கருத்துப்போன மாதுளை போலிருந்தது. அதன் பிறகான அன்றிரவில் உறக்கமின்றி விழிக்கும்படி “எங்கே அந்த கூழாங்கல்லை தவறவிட்டோம்” என்ற கேள்வி காதுக்குள் நுளைந்த சிறுபூச்சியென பெரும் சத்தம் கொடுத்து ஊர ஆரம்பித்தது. 

Friday 24 September 2021

புதிர் - சிறுகதை

 பார்வதிபுரம் சாணலின் குளிர்ந்த பச்சை நிற நீரில் மூழ்கியவாறு காதுகளில் அதன் சிறுமியின் கொலுசையொத்த சலங்கையொலியை கேட்டவாறு நீருக்குள் அமிழ்ந்திருந்தேன். தனிமையில் அந்த நீர் என்னை ஆற்றுப்படுத்தும். எண்ணங்களற்ற கேள்விகளற்ற குழந்தையொன்றைப்போல சாடி ஓடி நீந்தி குளிக்க அனுமதிக்கும். நீண்ட காரை பெயர்ந்த படித்துறையில் படிகளைத்தாண்டி நீரின் இழுப்பில் மூழ்காத நகராத இலையென அதன் மேல் மிதந்தேன். இருளில் கரைகளிலும் கவிந்த மரங்கள் பச்சையிளந்து கருத்து இலையசைத்து எனக்கு காதுகொடுத்தன. மரங்ககுக்கிடையில் தெரிந்த பாதி கடித்த வெண்மையில் சாம்பல் திட்டுகளுடன் நிலா சல்லடைபோன்ற மேகத்தினுள் ஒளிர்ந்தது. பெயரற்ற பறவையொன்றின் சத்தம் மரங்களின் கிளைக்கு கிளை தாவி அடுத்த படித்துறையில் குளிப்பரவர்களை கவர்ந்து நகர்ந்தது. நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்று தாழ்ந்த்ய் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தது. நீரின் மென்மையான அரவணைப்பில் தட்டிக்கொடுப்பில் என்னைக்கொடுத்து கிடக்கையில் நீருக்குள் யாரோ பொறுமையின்றி இறங்கும் சத்தம் கேட்டது. சுதாகரித்து என்னை சாதரணமக்கி மூணு முங்கு போட்டபின் படியேறி சோப்பை எடுத்து தேய்த்துக்கொண்டிருந்தேன். 


சாணலில் இறங்கும் மனிதனின் உடல் தொப்பையுடன் ஆனால் உறுதியாக இருந்தது. குலுங்காத தொப்பை அங்கு எதோ கருங்கல் ஒன்றை கட்டிவைத்திருப்பதைப்போல பிரம்மையை உண்டாக்கியது. 

ஆடைகளை அவிழ்த்து போட்டு நீரில் சற்றும் கரிசனமின்றி முக்கி எடுத்து படிக்கல்லில் போட்டு தேய்க்க ஆரம்பித்தான். தனிமை கலைந்த வெறுப்பில் அமர்ந்திருந்தேன். வலது கரையோரம் சென்ற வண்டியின் வெளிச்சத்தில் படித்துறையின் ஓரமாய் குந்தியிருந்த மெலிந்த சிறுமியின் உருவம் தெரிந்தது. ஒரக்கண்ணால் பார்த்ததில் அவள் முகம் எலும்பெடுத்து கன்னங்கள் குழிந்து சதைப்பற்றில்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இடைக்கிடை பார்த்துக்கொண்டனர் ஆனால் பேசிக்கொள்ளவில்லை. துணிகளை பிழிந்து வைத்துவிட்டு அவன் நீர்க்குள் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். அவர்களை கவனிக்காதது போல காட்டிக்கொள்ள ஏதுவா முதுகுகாட்டி நீரின் குளுமையை உடலில் உணர்ந்தவாறு தலைமட்டும் வெளியே தெரிய நின்றிருந்தேன். 


கரையோரமிருந்த சிறுமியின் குரல் அசாதாரணமாய் நடுவயதை கடந்த பெண்ணின் குரல் போலிருந்தது "வாங்குன கடனெல்லாம் எப்பொ அடைக்கதா உத்தேசம். எதாவது யோசன இருக்கா இல்ல மாடு கணக்க இருந்துரலாம்னு நெனப்பா" என்றாள். தூரமாய் வந்த வண்டியும் வெளிச்சம் அருகில் வரவும் தலையை மட்டும் திருப்பி அவளை கவனித்தேன் அழுக்கடைந்த அல்லது சாம்பல் நிற சட்டையும் சிவப்பு பாவாடையும் அணிந்திருந்தாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீரில் கைகளை அளைந்து உடலில் வழியவிட்டான். கடுப்பானவள் "லேய் கேக்கது காதுல விழுகா இல்லையா மாடு...கருமத்த மாடு"


அவன் "கேக்கு கேக்கு…" என்று ஒரு முறை முங்கி எழுந்து "எல்லாத்துக்கும் கணக்கிருக்கு" என்றவாறு மீண்டும் முங்கி எழுந்து நீரை கொப்பளித்து துப்பினான்.


"உனக்க கணக்குதான் தெரியுமே. முடிவே இல்லாத கணக்கு. உனக்கு இருக்க ஒரே தெறம எந்த எந்த வழிலலாம் கடம் வாங்கலாம் , அதுலர்ந்து எப்புடிலா தப்பிக்கலாம்னுங்கிறது தான" என்றாள். அவள் குரல் கட்டையான ஆண்குரல் போலிருந்தது.


"நான் வாங்கி வாங்கி எனக்க குண்டிக்கடியிலையா வச்சேன்" என்று அவளை பார்க்காமல் என்னை பார்ப்பது எனது தெரிந்தது. நான் கண்டுகொள்ளாதது போல அமைதியாக நீருக்குள் முங்கிக்கொண்டேன். 


"ஆமா எனக்கு அட்டியலும் ஆரமுமா போட்டு அழகு பாத்தபாரு. இந்தா கழுத்துல கெடக்கே இந்த இத்துப்போன இதுதான் கடைசி. மிச்சத்த எல்லாம் பணயம் வச்சி திண்ணு தீச்சாச்சு"


"ஜீவிக்கணும்னா அதுக்குண்டான வழிய கண்டுடிக்கணும். தொழில் யாவாரம்னு வந்தா செலவில்லாம வெறும் சம்பாத்தியம் மட்டும் வருமா" ஆரம்பத்திகிருந்தே அவன் குரல் தனிந்து தவறு செய்து அதற்கான காரணம் சொல்லும் சிறுவனின் குரல் போலவே இருந்தது.


"போட்ட மொதலாவது வரணும்ல. அதுக்குண்டான வழிய ஒருட்ரிப்பாவது செஞ்சிருக்கியா. வாய் கிழிய பேச மட்டும் வந்துட்டா"


"நீதான கேட்ட"


"திண்டுக்கு முண்டு பேசுனா கோவம் வரும் பாத்துக்க. கட்டிட்டு வரதுக்கு முன்னாலயே இதெல்லாம் செரி செஞ்சிட்டுத்தான இறங்கிருக்கணும்"


என்னை சாட்சியாக வைத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனயை தீர்த்துக்கொள்ள முயல்வது போலிருந்தது அவர்களின் பேச்சு. நான் அமைதியாக நீரில் எழும்பி அமிழும் அலைகளில் அவர்களின் பேச்சை இணைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். 


"உனக்க பேருல தான அந்த வீட்ட வாங்கி போட்டேன்"


"ஆமா அதும் கடத்துலதான கெடக்கு"


"உனக்கு பண்டுவம் பாத்து வாங்குன கடமாக்கும் அது. உனக்க உடம்ப நீ நல்லா பாத்துகிட்ட இந்த கடம் வந்துருக்காதுல்ல. தேவயில்லாத செலவு" என்று சலித்துக்கொண்டான்.


"ஆமா எனக்கு சீக்கு வந்து. நானா வருத்தி வச்சதில்ல. நீயும் உனக்க தள்ளையும் சேந்து எனக்கு உண்டாக்கி வச்சது. உனக்க கொட்டாரத்துக்கு வரதுக்கு முந்தி எனக்க தேகத்துல ஒரு ரோகமும் கெடையாது"


"இல்ல தெரிதாமத்தான் கேக்கேன்..எனக்கு வெளங்கல"


"ஆமா உனக்க அம்மதான் காரணம். எல்லாத்துக்கும்." என்று நிறுத்தி மூச்சு வாங்கினாள். மூச்சு விடுவது சம்பந்தமான எதோ நோய் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். சிறிய மூச்சி மொடுமையா இருமலில் போய் நின்றதும். அவன் அமைதியானான். நிலவு கீழ் வானம் நோக்கி இறங்கியிருந்தது. கரு மேகங்கள் சூழ அது நடுவில் தனியாக மிதந்தது. அமைதியாக சில நிமிடங்கள் கடந்ததும் அவன் "பிள்ளயில்லன்னு எனக்க அம்ம சொல்லி பாக்க போயித்தான இந்த ரோரம் உனக்கு இருந்ததே நமக்கு தெரிஞ்சி. அதுக்கு எங்கம்ம என்ன செய்வா" என்றான்


அவள் அந்த பேச்சை தொடராமல் "மொத்தமா எவ்வளவு கடமிருக்கும் அத சொல்லி கணக்கு போடுவொம். நீ எவ்வளவுதான் உனக்கு கும்பில போட்ருக்கண்ணுதான் பாப்பமே" என்றாள் பழைய கடுகடுப்பான குரலுடன்.


"அது செட்சுமிக்கு ஒரு பத்து , அணஞ்சபெருமாளுக்கு நுப்பத்தாறு , வெண்ணக்கட செட்டியாருக்கு இருவது. அப்படியே சேத்து மொத்தமா ஒண்ணு , ஒண்ண்ர வரும்" 


"எதைவாது ஒழுங்கா சொல்லத்தெரியுதா. இதுல ஓவிவ மயிரா எல்லா பிசினஸும் செய்யணும்"


"நீ வாங்குன அறுவது. குழுல வாங்குனேல்லா அது என்ன கணக்குமோ" எழுந்து படித்துறையில் நின்றவாறு துவட்ட ஆரம்பித்தான். அவன் வயிறு குலுங்காமல் அசைந்து கொடுத்ததை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.


"அது நான் வாரக்குழு இப்பொ அசலு எவ்வளவோ களிஞ்சிருக்கும்"


"எவ்வளொ களிஞ்சிருக்கும்"


"அதொரு பத்து"


"மிச்ச அம்பதாயிரம் கெடக்குல்லா"


"நான் தீத்துட்டுத்தான் இருக்கேன்"


"செரி செரி" என்று துண்டை அடித்து உதறினான். சாணலினுள் நான் மட்டும் இருப்பது ஆசுவாசுமாய் இருந்தது. ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காமல் இருக்க முடியவில்லை. 


"இன்னும் அஞ்சி நாளைல கடைய தொறக்கணும். அதுக்கு பலசரக்கு கேஸு எல்லாம் எடுக்கணும். தெரிஞ்ச ஓணர் அட்வான்ஸ் இல்லாமல் கடைய தந்தாரு" எனும் போது அவன் குரல் கனத்து ஒலித்தது


"என்னமாஞ்செய்யி" என்றவள் வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


அவன் "குழுல கேட்டு ஒரு பத்தயிரம் வாங்கித்தாயேன். இதான் கடைசி" என்றதும் "அதானே பாத்தேன். இந்த சோலி வேண்டாம் மக்ளே" என்றாள்.


"ஒருத்தன் முன்னேற என்னமாம் சப்போட் உண்டா என்று நானிருக்க்கும் திசை பார்த்து சொன்னான். 


" அந்தாளு உனக்க அம்மைக்கி மத்தவனா. உனக்கு சப்போட்டுக்கு வர" என்று சிரித்தாள். அவனும் சிரித்தான்.  


இது இப்படி முடியக்கூடாதென்று மனம் அரற்றியது. மனதிற்குள் அவனுடம் சொல்வது போல "அடி அடியவளை" என்றேன். 


"நைட்டுக்கு என்னத்த வைக்கப்போற" என்றபடி அவன் அவளை இடித்து தள்ளிக்கொண்டு அவர்கள் வந்திருந்த பைக்கின் அருகில் நகர்த்திச்சென்றான்


"கை காலெல்லாம் நல்லா ஒளையிது" என்றாள் தரையை பார்த்தவாறு


"அப்போ முக்கு கடைல அம்மைக்கி தோசையும் நமக்கு புரோட்டாவும் வாங்கிட்டு போவமா"


"உனக்க அம்மைக்கி என்னவாம் வாங்கு. எனக்கு கோழிப்பொரிப்பு வேணும்" என்று கொஞ்சலாக சொன்னாள்.


அவன் "வாங்கிருவோம்" என்றதும் வண்டி கிளம்பும் சத்தம் எனக்கு கேட்டது. 


என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எதும் புரிபடாமல் கதை நான் நினைத்தற்கு நேர் எதிராய் முடிந்திருக்கிறது. ஒரு வேளை கல்யாணம் செய்துகொண்டால் புரிபடும் போல எனும் எண்ணம் உதித்தது. பெயரில்லாத பறவை மீண்டும் அவனருகில் வந்து சத்தமிட்டு மின் மறைந்து போனது. அந்த சத்ததின் பொருளை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.


பனிப்பொழிவு - சிறுகதை

 வெறுமையின் தூய்மை நிரம்பிக்கிடந்த அந்த அறையின் நடுவில் ஒற்றை நாற்காலையில் கால்களை குறுக்கி நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஒற்றை வாசலுடையை அறையின் வலதும் இடமும் இரண்டென நேரெதிராக கண்ணாடி ஜன்னல்கள் திரைகளற்று ஒளியை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் அறைமுழுவதும் நிரப்பியன. அணிந்திருந்த தடித்த கோட்டை குளிருக்காக மேலும் கைகளால் இறுக்கி அணைத்து காற்று புகாதவாறு அடைக்க முயன்றபடி அறைக்குள் எங்கிருந்து குளிர் நிரம்பி வருகிறதென என்ணியவாறு மூலைமுடுக்கெல்லாம் இடிக்கு பயந்த மரப்பொந்திலிருக்கும் ஓர் ஆந்தையைப்போல  தேடிக்கொடிருந்தான். வெண்பனித்தூவல் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்பால் மெல்லிய தென்றலுக்கு ஏற்ற ஏற்ற இறக்கத்துடன் சரிந்து பொளிந்து கொண்டிருந்ததை கவனிக்கவோ ரசிக்கவோ விடாதபடி குளிர் அவனை வாட்டியெடுத்தது. அப்போது அறைக்கதவு சத்தமின்றி திறக்க உள்நுளைந்தவன் குளிருக்கான கோட்டு ஏதுமின்றி ஓர் கருப்பு நிற ஸுவட்டரும் அதுனுள் உள்சட்டையின் காலர் மட்டும் தெரியுமாறு அணிந்திருந்த சட்டையுடன் வளித்து வாரப்பட்ட பொன்னிற தலைமயிரை கலைந்து விடாமல் ஒருமுறை அழுத்தி தேய்த்துவிட்டவாறு அந்த நாற்காலியின் அருகில் வந்து நின்றான்.


“குளிர்காலத்தின் கடைசி பன்னிப்பொழிவாக இருக்க வாய்ப்பிருக்கிறது இல்லையா யோன்ஸ்” என்று ஜன்னலில் அருகில் சென்று வெளியேதெரியும் காட்சியை ரசித்தவனாக "நான் ஆபீசர் ஆண்ரியாஸ்" என்றான்


“இருக்கலாம் அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது” என்று நிறுத்திய யோனஸ் அந்த அமைதியை விரும்பாதவனைப்போல தொடர்ந்தான் “போன வருடம் மிட் சம்மர் விழாவிற்காக டைரிஸ்டா தேசியப்பூங்காவினுள் ஓர் ஏரியின் கரையோரமாக அமர்ந்து அவர்கள் நட்டுவைத்திருந்த கம்பத்தை சுற்றி பெண் குழந்தைகளும் பெண்களுமாக சுற்றிவந்து பாட்டுபாடி அதனை ஓர் நாடகம் போல நடத்திக்காட்டிக்கொண்டிருந்தனர். அது நான் பிறந்ததிலிருந்து கண்ட காட்சிதான் ஆனால் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருக்கும் வாத்துக்குஞ்சை கழுத்தைபிடித்து தூக்கி நீரில் முக்கி அதன் ஈனக்குரலை ரசித்து பின் புற்களுக்கிடையில் வளர்ந்திருந்த பாறையின் முகட்டில் ஓங்கி அடித்து அதன் சூடான குருதி மணிக்கட்டில் வழிவதை பார்த்து ரசித்தது. தூக்கி எறியப்பட்ட அந்த குஞ்சின் உடல் இறக்கைகள் பியிந்து கிடந்ததை தனக்கே காட்டி எக்காளமிட்டு மீண்டும் சிரித்தது. சகிக்க முடியாத ஓர் கொலைவெறியாட்டம் நடந்து முடிந்ததை அறிந்து ரசித்த அந்த குழந்தையின் கண்களை நான் எல்லா குழந்தைகளிடமும் காண்கிறேன். உலகிலேயே நான் பயப்படுவது அந்த மாதிரியான நீல நிறக்கண்களை மட்டுமே. அவை நஞ்சு கலந்து பிறக்கும் போதே குடுக்கபடுகிறது” என்று நிறுத்தி வரண்ட உதடுகளை நாவல் ஈரமாக்கி “எனக்கு தண்ணீர் வேண்டும்” என்றான்.


“இதோ” என்றவாறு வெளியே சென்றவனை அவனால் கவனிக்க முடியவில்லை. அந்த கண்களை மீண்டும் மீட்டுருவாக்கி ஓர் ஓவியம் போல தன்முன் கொண்டுவந்து நிப்பாட்டினான். 


ஆண்ரியாஸ் தண்ணீர் குப்பியுடன் திரும்ப அந்த அறைக்குள் வந்தபோது யோனஸ் ஜன்னல் கண்ணாடியில் முகத்தை ஒட்டி வெளியே பார்த்தபடி குளிரால் முகம் ஒரு பக்கமாய் மறத்துப்போக அதனை விரலால் வருடியபடி நின்றான். 


"பனி படர்ந்த சூழல் நம்மை இயற்கையை தரிசிக்க வைத்துவிடுகிறது. இங்கிருக்கும் அனைத்தும் இறைவனின் வடிங்களாக காட்சிதருவது நமக்கு ஆன்மவிடுதலை அல்லவா" என்று கண்களை மூடி பிரார்த்துப்பது போல முனங்கினான்.


"இருக்கலாம். ஆனால் இதோ இந்த வெண்மையான இறைவனை பிரதிபலிக்கும் பனிப்பொருக்குகள் ஒளியை தமக்குள் பொதிந்து வைத்து இருளிலும் ஒளியை கொடுப்பதாக தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள். புகை மண்டிய வண்டிகளும் மனிதர்களும் இந்த பாதைவழியாக சென்று சென்று இதன் நிறத்தை கருப்பு சாக்கடையின் நிறமாக இன்னும் ஒரு நாளில் மாற்றிவிடுவார்கள். அங்கு நீங்கள் என்னதான் கற்பனை செயதாலும் அழுக்கைத்தவிர வேறெதும் வர முடியாது" என்று நிறுத்தி வெது வெதுப்பான நீரை உடலில் நிரப்பிக்கொண்டான். அடர்ந்த சுருள் போன்ற தாடியில் வழிந்த நீர்த்துளிகள் அதனுள் புகுந்து மறைந்து கொண்டன. நீண்ட முகம் ஒரு வாரம் கிடைக்கும் நல்ல தூக்கத்தில் பொலிவு பெற்றுவிடும் தன்மை கொண்டிருந்தது. கருமை படர்ந்த கண்களை உயர்த்தி மேலாக வளர்ந்து நின்ற ஆண்ரியாஸின் கண்களை பார்த்தவாறு "நான் தங்கியிருந்த அறை செவ்வக வடிவ ஐந்து தள கட்டிடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்தது. அறையின் வாசலில் நின்று பார்த்தால் அந்த கட்டிடம் ஒன்றுமில்லாத பெட்டி போலவும் அதன் மேல் விளிம்பொன்றில் நான் நின்று எட்டிப்பார்ப்பதைப்போல் இருக்கும். அங்கிருந்து மேல் நோக்கினால் வானம் முழுவதுமே அந்த செவ்வகவடிவ சட்டத்திற்குள் அடங்கிவிடுவாதாய் தோற்றம் தரும். இந்த நாட்டில் எல்லா வருடம் போல அந்த வருடமும் எட்டு மாத குளிர்காலாமும் மற்ற காலங்கள் மீதமிருக்கும் நாங்கு மாதங்களில் வந்து சென்றன. அந்த எட்டு மாதங்களில் வானம் மற்ற நிறங்களில்லாமல் சாம்பல் நிறம் மண்டிக்கிடப்பதும் பயந்த சூரியன் எட்டிக்கூட பார்க்காமல் பதுங்கி என்றாவது ஒரு நாள் பேருக்கு வந்து செல்லும். அப்போது ஊரே 

கொண்டாட்டம் கொண்டு தறிகேட்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் தெருவெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்" எண்ணங்கள் எங்கோ விலகிச்செல்வதாக உணர்ந்து மேல் கோட்டை உடலோடு அழுத்திவிட்டு தொடர்ந்தவனை ஆண்ரியாஸ் தடுத்து "நீங்கள் தங்கியிருந்த இடம் எப்படி?" என்று கேட்டான்


"என் அறையின் கீழே குடியிருந்தவர்கள் ஓர் இணை. அவர்களுக்குள் சண்டை பெருத்து தூக்கி எறியப்படும் பொருட்கள் என் அறையின் தளத்தில் வந்து மோதி எழுப்பும் சத்தத்தால் தூக்கம் கலைந்து நீண்ட ஜன்னல் வழி தெரியும் கருத்த ஒளியற்ற வானை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பேன். தூக்கம் இனிமேல் பிடிக்கப்போவதில்லை என்பது தெரிந்ததும் சாதாரணமாகவே புகைக்ககும் எண்ணம் எழுந்து வந்தது. கதவைத்திறந்ததும் குளிர்ந்த காற்று கனமான திரையைப்போல என்னை அணைத்து தள்ளியது. அந்த தளத்தின் சிவந்த மாடி கைப்பிடியை பிடித்தவாறு சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்ததும் நெடி 

திட உருவம் கொண்டு மூக்கை அடைத்ததும் அருகில் வந்து நின்றவளை கவனிப்பதற்கும் சரியாக இருந்தது. என்ன சொன்னாள் என்பதை நான் சரியாக சொல்ல முடியாது ஆனால் அதன் பொருள் இப்படித்தான் இருந்தது. என் காதலன் என்னை துன்புறுத்துகிறான் கன்னங்களில் அடித்து கன்றியிருக்கிறது. என்னை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறான். ஆனால் நான் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் நீ புகைவிடுவதை பலமுறை கவனித்துள்ளேன். கைகளில் அதன் இருப்பும் சாம்பலை தட்டும் அழகும் என்னை கவர்ந்தது. நீயும் என்னை காதலிப்பாயா ? அதை என்னுடைய பழைய காதலனிடம் சொல்லி என்னை விடுவிப்பாயா என்பதாயிருந்ததும். முழிதாய் பார்க்காத அவளை நான் காதலிப்பதாக ஒத்துக்கொண்டேன். அவள் காதலன் என்னை ஓர் உயிருள்ள ஜந்துவாகக்கூட மதிக்காமல் ரத்தம் வர அடித்து நொறுக்கும் போது அவள் ஒதுங்கி நின்று வேண்டாம் என்பது போன்ற முக பாவனையில் அழுது அவனை தடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் உதடுகளின் ஓரத்திலும் இடது கண்ணின் ஓரத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகையொன்று உதித்ததை நான் கவனிக்க தவறவில்லை. அவள் கண்களும் நீலமாய் பறவையின் கண்களைப்போல் இருந்தது இப்போது ஞாபகம் வருவது ஆச்சரியம்தான்" என்று தண்ணீருக்காக கைகாட்டினான். 


குப்பியை கொடுத்திவிட்டு ஆண்ரியாஸ் பேச ஆரம்பித்தான் "இதற்கும் உங்கள் அறையில் செத்துக்கிடக்கும் உன் அம்மாவிற்கும் என சம்பந்தம். எதற்காக அதைச்செய்தாய் அதனை நீ சொல்லலாம் அல்லவா" என்று அவன் தோளில் கைவைத்தான்


"அவளுக்கு வயது ஐம்பத்தியாறு. ஆனால் பார்ப்பவர்களுக்கு பாதி திறந்த மார்பும் குட்டைப்பாவாடையும் பெரிய கருப்புக்கண்ணாடியும் உதட்டுச்சாயமும் அவள் வயதை மறைத்து இளம் பெண்ணினுடையதைப்போல காட்சியளிக்கும். அதற்கான நடையை அவள் பயின்றிருந்தாள். காலையில் அவள் தூங்கி எழுவதற்கு முன் அவள் படுக்கைக்கு அருகில் நின்று முகத்தை அதில் வரிவரியான சுருக்கத்தை தொங்கிய கைத்தசைகளை பார்த்து நின்றிருப்பேன். புரண்டு படுக்கும் போது அவை அங்குமிங்கும் குலுங்குவது ரசமான காட்சி" என்று வாய்மூடி சிரித்தான். 


ஆண்ரியாஸ் "எதற்கு சிரிக்கிறாய்" என்றதற்கு பதில் சொல்லாமல் சிரிப்பை அடக்கி பேசத்தொடங்கினான் "அவளுக்கு ஓர் ஆண் நண்பன் சிக்கினான். அசாதாரண உடம்புடன் பார்ப்பவர்கள் பயப்படுவது போல கூர்மையான பழுப்பு கண்களுடன் எப்போதும் யாரையாவது அடிக்க தாயாராய் இருப்பது போல மோவாயைத்தூக்கி நடப்பது இவள் அதில் முத்தம் கொடுப்பதும் எனக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அவன் ஓர் வேட்டை நாயைப்போல என்னை பார்த்த இடங்களிலெல்லாம் என்னை ஆடாக பாவனை செய்து துரத்தினான். ஒரு நாள் சாம்பல் வானில் காலை என்பது தெரியாத பொழுது எங்களின் வீட்டின் முன் யாரென்றே தெரியாத ஒருவன் அவளை போட்டு அடித்து நொறுக்கினான். நான் கதவிடுக்கு வழி அவள் அலறுவதை பார்த்து நின்றிருந்தேன். அவள் காதலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தானென நினைத்த போது எங்கிருந்து வந்தான் என்று தெரியாமல் நான் மலங்க விழித்துக்கொண்டிருந்த போது அவளை விடுவித்து அடித்து நொறுக்க ஆரம்பித்தான். கீழே விழுந்து எழுந்த அவள் வீட்டுக்கதவை திறக்கவும் அது மூக்கில் அடிக்க நான் விழுந்து எழுந்தேன். அவள் என்னை எதும் சொல்லவில்லை ஆனால் அவள் பார்வை செத்த அழுகிய உடலை பார்ப்பதைப்போல் இருந்தது. அதன் பிறகு நான் அவள் வீட்டுக்கு செல்வதில்லை" யோனஸின் முகம் அவன் கடைசியாய் சொன்ன அவள் அம்மாவின் முகத்தைப்போல இருந்ததாய் ஆண்ரியாஸ் நினைத்தான்.


மஞ்சல் விளக்குகள் ஒளிர்ந்த  அறையில் இருவரும் ஜன்னல் கண்ணாடியின் முன் நின்று மறுபுறம் தெரிந்த கருத்த இறுகிப்போன பனிக்கட்டிகளை பார்த்தவண்ணம் இருவரும் நின்றனர். ஆண்ரியாஸ் "போகலாமா" என்றதும் யோனஸ் "அதற்கென்ன தாராளமாய்" என்றதும். இருவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.


"தெளிந்த வானில் முழுநிலா பொழிகிறது" என்றதனை மூச்சால் உடம்பிற்குள் நிரப்ப முயன்றவனப்போல பெருமூச்சைவிட்டான் ஆண்ரியாஸ்


"எனக்கு இருளாகவே தெரிகிறது" என்ற யோனாஸின் தலை குனிந்தேயிருந்தது.


அப்படியானால் இன்னொன்று - சிறுகதை

நகரத்தின் நடுவில் நூற்றுக்கணக்கான கைகள் உடல் முழுவதும் முளைத்த ஒற்றை பனைமரம் அவற்றின் மூலம் தன்னைத்தானே தற்காத்துக்கொண்டு மிகுந்த பயத்துடன் நின்றதை தன் மாடி அறையிலிருந்த துருபிடித்த இரும்பு கம்பிகள் கொண்ட ஜன்னல் வழி பார்த்தபடி பழைய இற்றுப்போன நாற்காலியொன்றில் கையில் பிடித்த பேனாவுடன் அசோகன் அமர்ந்திருந்தான். தலையில் மாட்டப்பட்ட விளக்குடன் நின்ற கம்பம் கொடுத்த வெளிச்சம் மரத்தின் பின் பக்கமாக ஓர் மங்கலான ஒளிவட்டத்தை உருவாக்கியிருந்தது. சோர்ந்து கருத்து உணர்ச்சியற்று கிடந்த அவன் முகத்தில் அந்த வெளிச்சம் ஓர் படலம் போல தங்கியது. பேனா முனையால் மேசையில் ஸ்ருதி பிடித்து தட்டி அதில் எண்ணங்களை ஓடவிட்டபடி சத்தம் வராமல் முனங்க ஆரம்பித்தான். நீலம் கலந்த சுண்ணாம்பு பல இடங்களில் பெயர்ந்து விழுந்த அந்த வீட்டில் அவனிருந்த நாற்காலிக்கு பின்னால் மற்றொரு ஜன்னல் வெளிச்சமின்றி இருந்தது. கஷ்டப்பட்டு சுழன்ற மின்விசிறியின் சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. குப்பைகளென எதும் இல்லாவிட்டாலும் தூசுபடிந்து மூலையில் ஒட்டடைபிடித்து கிடந்தது. அவன் கற்பனையில் அச்சமயம் உருவாகியிருந்த காட்சி ‘தூய அப்பழுக்கற்ற நீர் கண்ணாடிப்பரப்பென நகர்ந்து கொண்டிருக்க அதன் மேல் கட்டப்பட்டிருந்த கல்லாலான பாலத்தின் நின்றபடி அந்த நடுத்தர அகலமிருந்த கால்வாயின்  இருபுறமும் மரங்கள் வளர்ந்து காற்றிற்கு இலைகளை வலிக்காமல் உதிர்ந்து நீரில் மிதக்கவிட்டபடி நிற்கின்றன” என்பதாயிருந்தது. ஆனால் எழுதியிருந்தது ‘கருத்த சாக்கடையொன்றின் ஓரமாய் அமர்ந்து போக்கு காட்டிய பெருச்சாளியின் வால் நுனியை பிடிக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் அவன்’ என்றிருந்தது அசோகனுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அதை தொடர்ந்து எழுத மனமில்லாமல் நாற்காலியை பின்னுக்குத்தள்ளி எழுந்து சிறிய அறையில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான். 


வீடு சலித்துப்போகவும் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தான். சில்லிட்ட நீண்ட் கருங்கற்கள் பாவப்பட்ட தரையில் வெறும் காலில் எலும்பெடுத்த உடலில் போர்த்தப்பட்ட மேல் சட்டையும் பேண்ட்டும் படபடக்க எங்கு செல்வதென ஓர் இலக்கில்லாமல் நடந்தான். தோள் வரை வளர்ந்த மயிர் காற்றுக்கு ஏற்றவாறு அலைந்தது. பாதையிலிருந்த மின் விளக்குகளின் வெளிச்சம் அவனை இருளிலிருந்து மறைத்து மீண்டும் கைவிட்டது. எதிரில் தெரியும் இருளிடம் பேச முற்பட்டவன் போல முனங்க ஆரம்பித்தான் “இதில்லாமல் அதில்லை. அதில்லாமல் இதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அழித்தொழித்து இன்னொன்றை கைவிட இவர்களுக்குத்தான் என்ன உரிமை இருக்கிறது” பாதையின் ஓரமாய் படுத்திருந்த ஆடொன்று அவனை தலைதுக்கிப்பார்த்து காதுகளை விடைத்து பின் மீண்டும் படுத்துக்கொண்டது. அதன் கண்களை கவனித்த அசோகன் தொடர்ந்து அதனிடம் பேச ஆரம்பித்தான்.


அவன் பேசியது தனக்குத்தானே கதை சொல்வது போன்ற தோரணையிலிருந்தது ‘பச்சை விரிந்த காட்டில் வெயில் படாத ஈரம் கொவுந்த நிலத்தில் கால்கள் புதைய நடந்தது அந்த சாம்பல் நிற ஓநாய். மயிர் ஆங்காங்கே சடைபிடித்து அழுக்கடைந்து பின்னிக்கிடந்தது. அதன வாயச்சுற்றி ஈக்கள் சுற்றியலைந்தன. நட்பார்ந்த பாவமற்று வால் சுழலாமல் தடித்து தொங்கி நிலத்தில் எதைய் ஆராய்ந்தது. பிளந்த வாயில் ஓரம் தெரிந்த கூர்முனைப்பற்கள் வழி கோளையாக எச்சில் வடிந்தது. எதையோ தேடியலைந்த அதன் கால்கள் நிற்கவும் மூக்கின் நுனிகள் துடிக்க அறிந்து கொண்டதின் ஆணவம் தலைக்கேற வெறிபிடித்தது போல ஓடியது. வேகமெடுத்த கால்கள் காற்றில் கரைய உடல் மட்டும் அந்தரத்தில் பறப்பது போலிருந்தது அதன் ஓட்டம். அதன் முன்னால் ஓடிய தவிட்டு நிற முயல் நிண்ட காதுகள் மட்டும் நிலத்திற்கு மேல் தெரிய அதன் கோலிக்குண்டு கண்கள் உணர்ச்சியற்று கண்குழியிலிருந்து உருண்டு விழுந்துவிடும் என்பது போலிருக்க அதன் கால்கள் ஓடுவது போலில்லாமல் பின்னங்கால்கள் நிலத்தில் பதிய இலை நுனியீருந்து விழுந்து தெறித்த ஒற்றை  நீர்த்துளியென குத்திதோடியது. காதுகள் நொடிக்கொருமுறை திருப்பி பின்னால் வரும் ஓநாயின் பாதையை கணித்து திசை மாறு போக்கி காட்டியது. ஓநாயின் உடல் வியர்வையால் நனைந்து சக்தியற்ற நிலையை நோக்கி செல்லும் கணம் அந்த முயல் எதிலோ தடுக்கி தலைகுப்பற விழுந்து எழும்முன் அதனை கவ்விய வாயின் ஓரப்பற்கள் வழி சூடான இளங்குருதி வழிந்தது. தூரமாய் நின்று இதனைத்தையும் கவனித்த காட்டு ஆடொன்று நினைத்துக்கொண்டது, அந்த முயல் இல்லையேல் ஓநாயில்லை’


நடந்து நடந்து இப்பொழுது நீண்டு ஆனால் குறுகி கிடந்த கடற்கரையின் அருகில் வந்துவிட்டான். விண் தாரகைகள் மெல்ல தூக்கம் கலைந்து எழுந்து நின்று கண்சிமிட்டி அவனைப்பார்த்து சிரிக்கையில் மேகங்களுக்கிடையில் மறைந்த நிலவின் ஒளி நிலத்திலறையாமல் ஏங்க்கித்தவித்தது. ஒன்றன் பின் ஒன்றாய் நீண்ட கழுத்தில் அல்லது இடுப்பின் அணியும் வெள்ளை ஆபரணமென கரையை அறைந்த அலைகளில் தெரிந்த குமிழ் கண்கள் அவனை உற்றுப்பார்க்கவும் அதனிடம் பேச ஆரம்பித்தான் அது இன்னொரு கதை போலிருந்தது “நீலக்கடலின் நடுவிலிருந்த பாறையொன்றில் தொற்றி ஏற முயன்ற சிறுமி மூச்சுவாங்க அதிலிருந்த சிறு பிளவை கையில் பற்றி அலைக்கு இசைந்து தண்ணீர் குடிக்காமல் மிதந்தாள். கரை தெரியா அவ்விடத்திற்கு வேண்டுமென்றே த்னையே நீந்தி வரவேண்டுமென முடிவெடுத்தவள் நெஞ்சில் இருந்தது கோபம் ஆற்றாமை இழப்பு. வருவெனெனச்சொன்னவன் வருவானென எண்ணி கரையில் நின்று சலித்து அழுது எழுந்து கண்முன் விரிந்து கிடந்த கடல் அலையில் முதல் காலெடுத்து வைக்கையில் அவளுக்கிருந்த எண்ணம் தன்னை கொண்டு போய்விடும் இந்த நீலத்தில் அமிழ்ந்துவிடவேண்டும் என்பதுதான். மெல்ல அவளணிந்த பச்சைநிற பொன் சரிகைவைத்த பாவாடை சட்டை நீரில் நனைந்து கழுத்தருகில் நீரில் விளிம்பு வரவும் பயம் தொற்றிக்கொண்டது. கரையை நோக்க்கி தள்ளிய அலை மீண்டும் உள்ளிழுக்கவும் மூழ்கினாள். இரண்டு முறை அந்த நீரின் மேல் தோலை கிளித்து வெளிவந்த பின் நினைவிழந்தவள் மூன்றாம் முறை வெளிவரும் போது கைக்கு அகப்பட்டது அந்த பாறையின் விளிம்பு. அதைப்பிடித்து மேலேறி வழுக்கி பின் சுதாகரித்து உயிர் காத்து நின்றாள்.பாறையின் நடுவிலிருந்த ஒற்றை காலடியில் தன் காலை வைத்து அளவெடுப்ப்பது போல பார்ப்பது போல தானும் நின்றாள். மேகங்கள் விலக நிலவு அவளையும் கரையோர தெருவில் முட்ட குடித்து வேட்டி விலகி கொட்டை தெரிய கிடந்த அவனையும் பார்த்து நினைத்துக்கொண்டது அவனில்லாமல் அவளில்லை’


கரை மணலில் நிலவொளியால் நீண்டு கிடந்த அவன் நிழலானது நடக்கும் போது மணல் பரப்பால் அது வளைந்து நெளிந்ததைப்பார்த்து நடந்தான். முதுகுக்கு பின்னால் ராட்சச உருவமொன்று ஐந்தாறு தென்னைகளை அடுக்கி வைத்ததைப்போல நிறபதை உனர்ந்து திரும்பிப்பார்க்கவும் அவன் நினைத்ததைப்போல ஐந்தாறு அடுக்குமாடி குடியிருப்புகள் தலை முதல் கால்வரை கண்களுடன் ஒளி தந்து நின்றன. அந்த கண்களை உற்றுப்பார்த்து அதனுடம் பேச ஆரம்பித்தான் ‘அந்த கட்டிடங்களின் நடுவே தலையின் மயிரைப்பிரித்தது போல சென்ற குண்டுகுழியற்ற மென்மையான விளக்குளால் ஒளிகொடுத்த சாலையில் நடந்து சென்றான் அந்த பெயரில்லாதவன். பசிப்பதற்கு முன்பே தின்று பழகியவன் தன் கனத்தை கால்களை எடுத்து வைத்து அந்த கட்டடத்தின் பெரிய இரும்பு கதவைத்தாண்டி வெளிவரும் போது நாய் குதறிப்போட்ட செத்த கோழியின் உடலைக்கொண்டிருந்தவன் கைகளில் ஓர் கனத்தை பையை தூக்க முடியாமல் தூக்கி பெயரில்லாதவன் அருகில் வைத்து தன் கைகளை மழைநீரை ஏந்தும் குழந்தையென குழித்துப்பிடித்து என்னவோ காற்றில் முனங்கினான். பொதுவாக யாருக்கும் எதும் கொடுக்காத பெயரில்லாதவனின் கைகள் மெல்ல சட்டைப்ப்பையில் தொட்டுத்தடவி எடுத்து அவன் கைகளில் வைக்கவும் இதற்கு எந்த மனிதனாலும் குனிய முடியாது என்பது போல அவன் குனிந்ததை பெயரில்லாதவன் ஏற்றுக்கொண்டானா என்பது சந்தேகம் தான். ஆனால் அவன் மகிழ்ந்திருந்தான். தன் உடல் காற்றில் எடையற்றதாகி மனம் கிளுகிளுக்க மிதந்தான். குனிந்தவன் அப்பொழுதும் அப்படியே நிற்பதையும் அதை உணர்ந்ததும் அங்கிருந்து நகர்ந்து சென்ற பெயரில்லாதவனியும் அந்த கட்டிடத்தின் கண்கள் முழுதாய் கண்டு முடித்த பின் நினைத்துக்கொண்டது இவனில்லாமல் அவனில்லை.


அசோகன் அடுக்குமாடி குடியிருப்பை தாண்டியிருந்த பழைய பாறையை பெயர்த்து எடுத்த பெரும் கற்களால் கட்டப்பட்ட குட்டை கோபுர சர்ச்சின் வாசலின் நின்றான். அதன் சிறிய குனிந்து மட்டுமே செல்லக்கூடய அளவுள்ள மரக்கதவுகளை அதில் தொங்கிய இருப்பு வளையத்தைப் பிடித்து இழுத்து திறக்க முயன்றான். கைகளிலிருந்து நழுவிப்போன வளையத்தால் இரண்டடி பின்னால் சென்று விழுந்ததில் அங்க்கிருந்த சரல் கற்கள் கைமுட்டில் சிராய்த்து ரத்தம் வராமல் விட்டது. எழுந்து நிற்கவும் கண்ணில் பட்டது அந்த கதவில் சிறிய உருவங்களுடன் செதுக்கப்பட்டிருந்த மரச்சிற்பங்க்கள் குனிந்து அதனருகில் சென்று உற்று நோக்கவும் ஓர் கதை போல் தெரிந்த சிற்பத்தில் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்திருந்த ஓர் பேரீச்ச மரத்தின் பழங்களிடம் பேச ஆரம்பித்தான் ‘சந்தையில் முட்டி மோதி தேவையானதையும் தேவையில்லாத்தையும் வெயில் உறைத்து வியர்வை வழியும் உடலுடன் வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டிருந்தனர் மக்கள். கூட்டம் சலசலக்க மக்கள் விலகி சந்தையின் நடுப்பகுதியை எதற்கோ விட்டுக்கொடுப்பதைப்போல விட்டுக்கொடுத்து அதைச்சுற்றி வட்டம் பிடித்து நின்றனர். ஒருவர் மற்ற்வர் காதில் வாயின் மேல் கைவைத்து என்னமோ ரகசியம் சொல்லி கண்களால் ஏற எறங்க பார்க்கும் இடத்தில் கிடந்த பெண்ணின் ஆடைகள் கிளித்தெறியப்பட்டு உடலில் பூசப்பட்டிருந்த வண்ண வரைகள் அழிக்கப்பட்டு விழிநீர் வழிந்த தடம் தெரிய அவள் வீசியெறியப்பட்டாள். அவளை சூழ்ந்து நின்ற நாலைந்து பேர் குனிந்து கற்களை எடுத்து எறியவும் எதோ விளையாட்டுதான் என்பது போல சுற்றியிருந்த மக்கல் அனைவரும் தங்கள் சத்தை காண்பிக்க ஆழுக்கொரு கல்லை எடுத்து எறிந்தனர். அவள் முகத்திலும் நெஞ்சிலும் வயிற்றிலும் கால்களுக்க்டையிலும் குறிவைத்து ஒவ்வொருவராய் எறிந்தனர். அவள் அழுவதற்கு கூட சத்தில்லாதவளாய் உடல் குறுகி தரையில் சுருட்டி வைத்த பழைய பாயென கிடந்தாள். அவள் னெற்றியிலிருந்து வடிந்த ரத்தம் அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த ஒரு நோஞ்சானின் கால்களில் படும்படி அவனே வந்து நின்று கொண்டான். அவள் கம்புக்கூட்டில் கைவைத்து தூக்கி நிறுத்தி என்னவோ சொல்லலாமென்று திட்டத்துடன் வந்தவனுக்கு ஏமாற்றமாய் அவளால் எழுந்து அமரக்கூட முடியவில்லை. அவன் கால்களை பற்றிக்கொண்டு பழைய நிலமையிலேயே கிடைந்தாள். அவன் தன் சக்க்தியனைத்தையும் திரட்டி சத்தனான குரலில் உங்களில் பாவம் செய்யாத ஒருவன் எவனோ அவன் மட்டும் கல்லை எறியக்கடவன் என்று சொல்லி எதையோ சாதித்த பெருமித பார்வையுடன் கூட்டத்தை பார்த்தான். இருந்தும் ஒன்றிரண்டு கற்கள் வந்தததையடுத்து கடவுள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறால் அவரிடமிருந்து எதும் தப்பாது என்றது கற்கள் நின்றன. அவன் கண்கள் களியில் துள்ளின. விழுந்து கிடந்தவளை தூக்கி நிப்பாட்டி தன் தோளில் சாய்த்தவாறு நடத்தி சந்தயை விட்டு தூரமாய் கூட்டிச்சென்றான். மக்கள் உண்டாக்கியிருந்த வட்டம் இப்பொழுது காணாமல் போய் மீண்டும் தேவையானதையும் தேவையில்லாத்தையும் வாங்க ஆர்மபித்தனர். ஓரமாய் இதையனைய்த்தையும் ஓர் மேட்டில் நின்று வேடிக்கை பார்த்திருந்தவன் இந்த கூட்டமில்லாமல் அவனில்லை அவனில்லாமல் இந்த கூட்டமில்லை என்று நினைத்துக்கொண்டான்


இப்பொழுது அசோகன் அவன் வீட்டின் அருகிலிருக்கும் பனைமரத்தின் மூட்டில் நின்றவாறு அதன் உச்சி ஒலைகளையும் உடலில் முளைத்த கைகளையும் பார்த்ததும் இந்த மரமும் அதனை சுற்றியிருக்கும் நகரமும் உள்ளார்ந்த  ரகசியமானதோர் உறவைக்கொண்டுள்ளதாக தோன்றியது. 


வீட்டிற்குள் நுளைந்ததும் அவன் எண்ணங்களை ஓர் கதையாக்க முடியுமா என நாற்காலியில் அமர்ந்து கதையின் தலைப்பிலிருந்தே ஆரம்பித்தான். அது இப்படி அமைந்தது ‘அப்படியானால் இன்னொன்று’

அவன் - சிறுகதை

மழை பெய்து முடித்த தடம் அந்த மரங்கள் நிறைந்த குன்றின் உச்சியிலிருந்த கற்கோயில் சுவரின் அடர் கரும்பச்சை பாசிகளில் தொங்கி நின்றது. நான்கு மூலை தூண்களில் நின்ற நிலையில் பாசிபிடித்த ஊர்த்துவ வினாயகர் சிலைகள் விதவிதமாக அபிநயம் பிடித்த நின்றன. அதன் தும்பிக்கைகளில் நீர் சொட்டு விழுந்து தரையில் பூவென விரிந்து நடுவில் சூல்தண்டு நீண்டு மறைந்தது. குன்றில் கிழக்கே மலையின் நாக்கென நீண்ட பாறைத்துண்டில் அமர்ந்திருந்தவன்  கரும்பரப்பு அலையாக வானில் படர்ந்து நின்ற மேகங்களின் வளைவு குழிவுகளில் தெரியும் உருவங்களையும் அவை அடையாளமற்று மாறுவதையும் உன்னித்தான். அவை ஒன்றையொன்று பிடித்து இழுத்து கூட்டாமாக்கி மற்றொரு கூட்டத்தை மோதி காத்தி கூப்பாடு போட்டன. அமைதியாக திரும்பி கருவறைக்குள் தெரியும் பெரும் கல்லாலான அமர்ந்த வினாயகர் சிலை உண்மையிலேயே அங்கொரு களிறு அமர்ந்திருந்து அவன் முதுகை பார்த்திருக்கும் உணர்வை அடைந்தான். நால் திசைகளிகளிலும் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போன குழந்தைகளின் விளையாட்டு கட்டிடங்கள் போல பாதி உடைந்தும் சரிந்தும் ஓரிடத்திலிருந்து தூக்கி எறிந்த துண்டுகள் போல கிடந்தன. அவை எவற்றின் அடையாளங்கள் யாருடைய அடையாளங்கள் என்றவன் யோசிக்கும் போது பெருத்த இடியொன்று அவன் நினைப்பை கலைத்துவிட்டது. கருப்பு முழுக்கால்சட்டை மஞ்சள் அரைக்கைட்சட்டை குளிர்ந்த காற்றில் பறக்க அசையானல் கிடந்த சுருள் தலைமயிரை கோதிவிட்டு சரிசெய்தான். அவன் அமர்ந்திருந்த கல்லிலிருந்த குழியில் தங்கிய நீரில் கை நனைத்து முன்நெற்றி முடியை சுருட்டி ஒட்டவைத்தான். எழுந்து நின்று குளிர் காற்றை உடலுக்குள் நிறைத்து கீழிருக்கும் செங்குத்தான பள்ளத்தின் வழி தன் உடல் விழுந்து சிதறுவதை கணக்கிட்டு ஈசலென  கைகளை விரித்து கண்களை மூடி உடலை வளைத்து சாய்க்கும் போது மேகங்கள் அவனை கண்டது போல அவனுக்காக தங்கள் நெஞ்சுவிரித்து நீரை பொழிந்தது. அவனுடல் சாய்ந்து இறப்பை நோக்கி நகரும் போது மழைத்துளியொன்று கைகளில் வீழ்ந்து என்னமோ காரியம் சொன்னது


சாவுணர்ச்சி மனத்தில் உதித்த கணம் அவன் ஹம்பிக்கு செல்ல வேண்டுமென முடிவு செய்து விட்டான். அந்த நிலத்தின் கதையோ வரலாறோ அவனறியாதது ஆனால் அதன் அர்த்தமற்ற வெறுமையான உடைசல்கள் நிறைந்த வெளி அங்கு என்னமோ தனக்காக காத்திருப்பதாக உணர்ந்தான். ஒழுகினசேரி சந்திப்பில் முதன் முதலாக எம் ஜி ஆரின் கழுத்துவரையுள்ள சிலையை கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து கூடியிருந்த சொற்ப கூட்டத்தில் ஆயிரம் பேர் முன்னால் பேசும் தோரணையுடன் அப்போதைய எம் ஜி ஆரின் உடையான வெள்ளை வேட்டி வெள்ளை முழுக்கைசட்டை வெள்ளை கம்பளி தொப்பியென பேச ஆரம்பித்தான் "ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளெ , உங்களுக்கு  என் அன்பான வணக்கங்கள்" தன் உடல் அசைவில் கழுத்தின் வளைவில் குரலில் என் எல்லாவற்றிலும் அவரை பிரதிபலிக்குமாறு தன்னை மாற்றிக்கொண்டான். 

"கொல்லைக்கி போகும்பொ குத்த வைக்கத கூட எம் ஜி ஆர் ஸ்டைலலுன்னு சொல்லிட்டு திரியான்" என்று அம்மையப்பன் பிள்ளை சொல்வதை அவன் காதுகொடுத்து கேட்டதில்லை.


ரிஸ்வன் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்யும் போது கூட இறுக்க் பிடித்த அரைக்கை சட்டையும் அதில் கைக்குட்டையொன்றை கட்டி சுருள் முடியில் கர்லிங் விட்டு கரண்டை கால் தெருயுமாறு கால்சட்டையும் அணிந்தே ஆப்பமும் கடலை கறியும் பரோட்டாவும் மட்டன் சால்னாவும் பரிமாறுவான். முதலாளி ரிஸ்வான் "லேய் தம்பி இந்த ஜெம்பர அவுத்து பொட்டுட்டு நல்ல் சட்டையொண்ண போட்டுட்டு திரிய கூடாதாடே , கண்ணுகொண்டு பாக்க முடியகயாக்கும்" என்பார் அவன் "நீங்க போடுத சட்டையும் வேட்டியும் கூடத்தான் ஆணுமில்லாம பெண்ணுமில்லம இருக்கு...எனக்கொண்ணும் தோணல்லியே...அங்க முக்குல ஒருத்தன் புரோட்டா கேட்டான் கொடுக்க போட்டுமா" என்று பொரிந்து விடுவான். 


"லேய் மக்கா...அந்த வேசத்த அவுத்து போட்டுட்டு திரியமுடே , அதாலதான் உனக்கு சாக்காலம் பாத்துக்க , வேலையுக் கூலியும் இல்லாம கும்பட்டம் ஆடுகது மாரி திரி , உனக்க மத்தவனா வந்து கும்பிய நெறப்பான், அறுதப்பயல" என்று அவன் அம்மா விசாலம் அழுது மூக்கைச்சிந்தி ஒற்றையறை இருண்ட  வீட்டின் மூலையில் சிந்துவாள்.


சோற்றை கவளங்களாக விழுங்கி அடுத்த கரண்டி சோற்றை ஆப்பையில் அள்ளி போடும் போதுபோது நாளை என்ன கலர் சட்டை போடலாம் என்பதே ஓடும். விசாலம் புழுங்கி அழுது சுவற்றோடு ஒட்டிப்பல்லியென கிடப்பதை பரிதாபமாக பார்த்து திரும்பி படுத்துக்கொள்வான். 


பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது முதன் முதலாக எம் ஜி ஆரை நாகராஜ கோயில் திடலில் வைத்து பார்த்தான். முந்தைய நாள் இரவு அவர் வருவதாக கூட்டம் கூடியது. "ஆராம்பளி தாண்டியாச்சாம்" " லேய் தேராப்பூரு" "அங்கொருத்தன் வள்ளியூருண்ணு சொன்னான்" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாலிந்து பேர் கூடி பேசினர். காத்திருந்து காத்திருந்து கடைசியில் மக்கள் இரவு மேடையைப்பார்த்து ஏக்கமாக அங்கேயே படுத்தனர். ஆண்கள் வேட்டியை விரிக்க பெண்கள் சேலைத்தலைப்பால் கொசு கடிக்காமல் குழந்தைகளை மூடி கிடந்தனர். அவனும் அந்த கூட்டத்தில் ஓர் மூலையில் தூங்கிப்பொனான். விடிந்து அவர் வந்து சேரும் போது மக்களிடம் எந்தவொரு எதிர்ப்போ சலிப்போ களைப்பொ தெரியவில்லை. கூட்டம் ஒற்றை உடல் கொண்டு உயிராகி ஓர் குரலில் அவரை வரவேற்றது. அவன் அவரைப்பார்த்து வான் தொட்டு நிற்கும் மலையொன்றின் அடியில் நின்று குதூகலித்து அதன் உச்சியை கற்பனை செய்தான். 



புதிய கட்சியில் அவனை சேர்த்துக்கொள்ளவில்லை. கட்சிக்கூட்டங்களில் அவனை மேடையில் பாட்டுக்கு ஆட அவரது வசனங்களை பேச வைத்தனர். வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்கவே முடியாத வரம் போல அதனை ஏற்று பவனை செய்ய ஆரம்பித்தான். தெருவில் வேலை செய்யுமிடத்தில் கோவில் கொடைகளில் அவனை எம் ஜி ஆர் என்ற அடை பொழியுடம் கூப்பிட ஆரம்பித்தனர். அவனும் அந்த அழைப்பிற்கு அவரின் உடல் மொழியிலேயே பதிலும் சொல்வதை வழக்கமாக கொண்டான். சில சமயம் அது போன்ற கூட்டதினுள் நுளைந்து  அவன் "நான் உங்கள் விட்டு பிள்ளை, இது ஊரறிந்த உண்மை" எனும் போது கூட்டம் விசிலடித்து கைத்தட்டும் சத்தம் அந்த மலையடிவாரத்தையும் உச்சியையும் ஞயாபகப்படுத்தும்.


அவன் கெஞ்சி கேட்டதன் பேரில் அவர் வரும் கட்சிக்கூட்டதில் அவனை அவருக்கு அறிமுகப்படுத்துவதாக சொல்லி கட்சியினர் சமாளித்து வைக்கவும் அவர் மேடையேறி வரவும் சரியாக இருந்தது.


"அண்ணே இந்த ஒரு மட்டம் ஏத்தி விட்டுரு….அந்தா வந்துட்டாரு...நானும் வாரம்ணே"


"அங்க பொல கோமாளி...இருக்க இடத்துல இருக்கணும்...தூர போல நாயே" என்று நெஞ்சில் கைவைத்து தள்ளியதில் சரிந்து விழுந்தான். அழுகை வந்தது. ஆனால் அதும் அவரை மேடையில் பார்க்கும் வரைதான். பிறகு நடந்ததெல்லாம் மேடையிலிருக்கும் ஒன்றிற்கு கீழே ஆடியில் ஆடும் அதன் பிம்பமே.


விசாலம் இறந்த பிறகு வீட்டில் தனியானன். அதில் ஓர் மகிழ்ச்சி இருக்கவே செய்தது.அவளிடம் மட்டுமே தனக்காக வருந்தியிருக்கிறான். இனிமேல்  அவனுக்கு தடையொன்றுமில்லை.

கோமாளி என்ற பெயர் எப்படியோ அவனுடைய எம் ஜி ஆர் பெயருடன் இணைந்து எம் ஜி எம் ஆனது. கூட்டமான இடங்களில் பஸ் ஸ்டாண்டில் அவனை என் ஜி கே எனும் போது புரியாமல் விழித்தான். "என்னடே அது எம் ஜி கே" என்று டீக்கடை செல்வத்திடம் கேட்டதற்கு "போல கோமாளி" என்று சிரிக்கவும் அங்கிருந்த கூட்டம் மொத்தமாக சேர்ந்து வாய் பிழந்து தொடையிலடித்து "யம்மா...யம்மா" என்று சிரித்தனர். 


ஒரு நாள் நடுயிரவில் வயலின் நடுவிலிருந்த மண் சிலை மாடனின் முன்னிருந்த மரக்கம்பத்தை சுற்றி அமர்ந்து பெயர் புரியாத சாராயமொன்றை அவனுடன் சேர்த்து நாங்கு பேர் குடித்துக்கொண்டிருந்தனர். தலை கிறங்கி தலை மேல் விரிந்திருந்த அரசின் கிளைகள் சுழன்று வட்டமடிக்கவும் கைகளை தலைக்குப்பின் கட்டி மண் நெரு நெருக்கும் நிலத்தில் படுத்தான். 


"லேய் மக்கா நீ எப்பொம்ல மாறப்போற" என்று விக்கலெடுக்க ஆரம்பித்தன் சுந்தரம்.


"நா என்ன மயித்துக்குடே மாறனும்...உனக்க அப்பனுக்கிட்ட போயி சொல்லு" என்று தலையை மட்டும் தூக்கி கேட்டு மீண்டும் சாய்த்துக்கொண்டான்


"உனக்க சட்டைய பாரு , பேண்ட பாரு , அந்த குருட்டு கண்ணாடிய 

வேற போட்டுட்டு திரிய"


"அது உனக்கு புரியாதுடே" எனும் போது வாய் குழறியது


சுந்தரம் பீடியை இழுத்துவிட்டு "எனக்கு எல்லாந்தெரியும்… மாப்புள வேசம் போட்டா மாப்புள ஆகிர முடியாது மக்கா...அதத்தான் சொல்லுகேன்" என்றான்


சுற்றும் மரக்கிளைகளின் இடைவழி தெரியும் நிலவை பார்த்துக்கொண்டே " நா வேசம் போடலடே…"


"அப்போ இது என்னது" என்று சட்டையை பிடித்து இழுத்தான் ராஜன்


"சட்டைல கைவைக்காத மக்கா...பொறவு பாத்துக்க" என்று அவன் எழுந்தமர்ந்தான் 


ராஜன் எழுந்து ஆடி அவனைப்போல நடித்துக்காட்டி "தொட்டால் பூ மலரும் தொடாம கோமாளி மலர்வான்" என்று கைகளை தட்டி பாடினான். 


அவனுடல் சுருங்குவதைப்போல் உணர்ந்து எழுந்து நிற்கமடியாமல் மரக்கம்பத்தை பிடித்துக்கொண்டான். மனம் அழுகையை வெளிக்காட்ட மறுத்து "உகலம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக" என்று பாடி அவரைப்போல ஓடி ஆடி அங்கிருந்த வாய்க்காலில் சறுக்கி விழுந்து காலை வரை கிடந்தான். 


முதல்முறை அந்த வரண்ட நிலத்தின்  உருவை பெயரை டீவியில் தூர்தர்ஷனில் பார்த்த கணம் அந்த நிலத்தின் அடி முதல் முடிவரை  தான் மல்லாக்க படுத்து நிமிர்ந்து கிடப்பதாக உணர்ந்தான். அங்கிருந்த சிறு குன்றுகளில் உயர்ந்த ஒன்றில் இருக்கும் உடைந்த கற்கோவிலை பார்த்ததும் அங்கு செல்வதாக அன்றிரவே முடிவு செய்தான்.