Friday, 24 September 2021

புதிர் - சிறுகதை

 பார்வதிபுரம் சாணலின் குளிர்ந்த பச்சை நிற நீரில் மூழ்கியவாறு காதுகளில் அதன் சிறுமியின் கொலுசையொத்த சலங்கையொலியை கேட்டவாறு நீருக்குள் அமிழ்ந்திருந்தேன். தனிமையில் அந்த நீர் என்னை ஆற்றுப்படுத்தும். எண்ணங்களற்ற கேள்விகளற்ற குழந்தையொன்றைப்போல சாடி ஓடி நீந்தி குளிக்க அனுமதிக்கும். நீண்ட காரை பெயர்ந்த படித்துறையில் படிகளைத்தாண்டி நீரின் இழுப்பில் மூழ்காத நகராத இலையென அதன் மேல் மிதந்தேன். இருளில் கரைகளிலும் கவிந்த மரங்கள் பச்சையிளந்து கருத்து இலையசைத்து எனக்கு காதுகொடுத்தன. மரங்ககுக்கிடையில் தெரிந்த பாதி கடித்த வெண்மையில் சாம்பல் திட்டுகளுடன் நிலா சல்லடைபோன்ற மேகத்தினுள் ஒளிர்ந்தது. பெயரற்ற பறவையொன்றின் சத்தம் மரங்களின் கிளைக்கு கிளை தாவி அடுத்த படித்துறையில் குளிப்பரவர்களை கவர்ந்து நகர்ந்தது. நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்று தாழ்ந்த்ய் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தது. நீரின் மென்மையான அரவணைப்பில் தட்டிக்கொடுப்பில் என்னைக்கொடுத்து கிடக்கையில் நீருக்குள் யாரோ பொறுமையின்றி இறங்கும் சத்தம் கேட்டது. சுதாகரித்து என்னை சாதரணமக்கி மூணு முங்கு போட்டபின் படியேறி சோப்பை எடுத்து தேய்த்துக்கொண்டிருந்தேன். 


சாணலில் இறங்கும் மனிதனின் உடல் தொப்பையுடன் ஆனால் உறுதியாக இருந்தது. குலுங்காத தொப்பை அங்கு எதோ கருங்கல் ஒன்றை கட்டிவைத்திருப்பதைப்போல பிரம்மையை உண்டாக்கியது. 

ஆடைகளை அவிழ்த்து போட்டு நீரில் சற்றும் கரிசனமின்றி முக்கி எடுத்து படிக்கல்லில் போட்டு தேய்க்க ஆரம்பித்தான். தனிமை கலைந்த வெறுப்பில் அமர்ந்திருந்தேன். வலது கரையோரம் சென்ற வண்டியின் வெளிச்சத்தில் படித்துறையின் ஓரமாய் குந்தியிருந்த மெலிந்த சிறுமியின் உருவம் தெரிந்தது. ஒரக்கண்ணால் பார்த்ததில் அவள் முகம் எலும்பெடுத்து கன்னங்கள் குழிந்து சதைப்பற்றில்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இடைக்கிடை பார்த்துக்கொண்டனர் ஆனால் பேசிக்கொள்ளவில்லை. துணிகளை பிழிந்து வைத்துவிட்டு அவன் நீர்க்குள் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். அவர்களை கவனிக்காதது போல காட்டிக்கொள்ள ஏதுவா முதுகுகாட்டி நீரின் குளுமையை உடலில் உணர்ந்தவாறு தலைமட்டும் வெளியே தெரிய நின்றிருந்தேன். 


கரையோரமிருந்த சிறுமியின் குரல் அசாதாரணமாய் நடுவயதை கடந்த பெண்ணின் குரல் போலிருந்தது "வாங்குன கடனெல்லாம் எப்பொ அடைக்கதா உத்தேசம். எதாவது யோசன இருக்கா இல்ல மாடு கணக்க இருந்துரலாம்னு நெனப்பா" என்றாள். தூரமாய் வந்த வண்டியும் வெளிச்சம் அருகில் வரவும் தலையை மட்டும் திருப்பி அவளை கவனித்தேன் அழுக்கடைந்த அல்லது சாம்பல் நிற சட்டையும் சிவப்பு பாவாடையும் அணிந்திருந்தாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீரில் கைகளை அளைந்து உடலில் வழியவிட்டான். கடுப்பானவள் "லேய் கேக்கது காதுல விழுகா இல்லையா மாடு...கருமத்த மாடு"


அவன் "கேக்கு கேக்கு…" என்று ஒரு முறை முங்கி எழுந்து "எல்லாத்துக்கும் கணக்கிருக்கு" என்றவாறு மீண்டும் முங்கி எழுந்து நீரை கொப்பளித்து துப்பினான்.


"உனக்க கணக்குதான் தெரியுமே. முடிவே இல்லாத கணக்கு. உனக்கு இருக்க ஒரே தெறம எந்த எந்த வழிலலாம் கடம் வாங்கலாம் , அதுலர்ந்து எப்புடிலா தப்பிக்கலாம்னுங்கிறது தான" என்றாள். அவள் குரல் கட்டையான ஆண்குரல் போலிருந்தது.


"நான் வாங்கி வாங்கி எனக்க குண்டிக்கடியிலையா வச்சேன்" என்று அவளை பார்க்காமல் என்னை பார்ப்பது எனது தெரிந்தது. நான் கண்டுகொள்ளாதது போல அமைதியாக நீருக்குள் முங்கிக்கொண்டேன். 


"ஆமா எனக்கு அட்டியலும் ஆரமுமா போட்டு அழகு பாத்தபாரு. இந்தா கழுத்துல கெடக்கே இந்த இத்துப்போன இதுதான் கடைசி. மிச்சத்த எல்லாம் பணயம் வச்சி திண்ணு தீச்சாச்சு"


"ஜீவிக்கணும்னா அதுக்குண்டான வழிய கண்டுடிக்கணும். தொழில் யாவாரம்னு வந்தா செலவில்லாம வெறும் சம்பாத்தியம் மட்டும் வருமா" ஆரம்பத்திகிருந்தே அவன் குரல் தனிந்து தவறு செய்து அதற்கான காரணம் சொல்லும் சிறுவனின் குரல் போலவே இருந்தது.


"போட்ட மொதலாவது வரணும்ல. அதுக்குண்டான வழிய ஒருட்ரிப்பாவது செஞ்சிருக்கியா. வாய் கிழிய பேச மட்டும் வந்துட்டா"


"நீதான கேட்ட"


"திண்டுக்கு முண்டு பேசுனா கோவம் வரும் பாத்துக்க. கட்டிட்டு வரதுக்கு முன்னாலயே இதெல்லாம் செரி செஞ்சிட்டுத்தான இறங்கிருக்கணும்"


என்னை சாட்சியாக வைத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனயை தீர்த்துக்கொள்ள முயல்வது போலிருந்தது அவர்களின் பேச்சு. நான் அமைதியாக நீரில் எழும்பி அமிழும் அலைகளில் அவர்களின் பேச்சை இணைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். 


"உனக்க பேருல தான அந்த வீட்ட வாங்கி போட்டேன்"


"ஆமா அதும் கடத்துலதான கெடக்கு"


"உனக்கு பண்டுவம் பாத்து வாங்குன கடமாக்கும் அது. உனக்க உடம்ப நீ நல்லா பாத்துகிட்ட இந்த கடம் வந்துருக்காதுல்ல. தேவயில்லாத செலவு" என்று சலித்துக்கொண்டான்.


"ஆமா எனக்கு சீக்கு வந்து. நானா வருத்தி வச்சதில்ல. நீயும் உனக்க தள்ளையும் சேந்து எனக்கு உண்டாக்கி வச்சது. உனக்க கொட்டாரத்துக்கு வரதுக்கு முந்தி எனக்க தேகத்துல ஒரு ரோகமும் கெடையாது"


"இல்ல தெரிதாமத்தான் கேக்கேன்..எனக்கு வெளங்கல"


"ஆமா உனக்க அம்மதான் காரணம். எல்லாத்துக்கும்." என்று நிறுத்தி மூச்சு வாங்கினாள். மூச்சு விடுவது சம்பந்தமான எதோ நோய் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். சிறிய மூச்சி மொடுமையா இருமலில் போய் நின்றதும். அவன் அமைதியானான். நிலவு கீழ் வானம் நோக்கி இறங்கியிருந்தது. கரு மேகங்கள் சூழ அது நடுவில் தனியாக மிதந்தது. அமைதியாக சில நிமிடங்கள் கடந்ததும் அவன் "பிள்ளயில்லன்னு எனக்க அம்ம சொல்லி பாக்க போயித்தான இந்த ரோரம் உனக்கு இருந்ததே நமக்கு தெரிஞ்சி. அதுக்கு எங்கம்ம என்ன செய்வா" என்றான்


அவள் அந்த பேச்சை தொடராமல் "மொத்தமா எவ்வளவு கடமிருக்கும் அத சொல்லி கணக்கு போடுவொம். நீ எவ்வளவுதான் உனக்கு கும்பில போட்ருக்கண்ணுதான் பாப்பமே" என்றாள் பழைய கடுகடுப்பான குரலுடன்.


"அது செட்சுமிக்கு ஒரு பத்து , அணஞ்சபெருமாளுக்கு நுப்பத்தாறு , வெண்ணக்கட செட்டியாருக்கு இருவது. அப்படியே சேத்து மொத்தமா ஒண்ணு , ஒண்ண்ர வரும்" 


"எதைவாது ஒழுங்கா சொல்லத்தெரியுதா. இதுல ஓவிவ மயிரா எல்லா பிசினஸும் செய்யணும்"


"நீ வாங்குன அறுவது. குழுல வாங்குனேல்லா அது என்ன கணக்குமோ" எழுந்து படித்துறையில் நின்றவாறு துவட்ட ஆரம்பித்தான். அவன் வயிறு குலுங்காமல் அசைந்து கொடுத்ததை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.


"அது நான் வாரக்குழு இப்பொ அசலு எவ்வளவோ களிஞ்சிருக்கும்"


"எவ்வளொ களிஞ்சிருக்கும்"


"அதொரு பத்து"


"மிச்ச அம்பதாயிரம் கெடக்குல்லா"


"நான் தீத்துட்டுத்தான் இருக்கேன்"


"செரி செரி" என்று துண்டை அடித்து உதறினான். சாணலினுள் நான் மட்டும் இருப்பது ஆசுவாசுமாய் இருந்தது. ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காமல் இருக்க முடியவில்லை. 


"இன்னும் அஞ்சி நாளைல கடைய தொறக்கணும். அதுக்கு பலசரக்கு கேஸு எல்லாம் எடுக்கணும். தெரிஞ்ச ஓணர் அட்வான்ஸ் இல்லாமல் கடைய தந்தாரு" எனும் போது அவன் குரல் கனத்து ஒலித்தது


"என்னமாஞ்செய்யி" என்றவள் வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


அவன் "குழுல கேட்டு ஒரு பத்தயிரம் வாங்கித்தாயேன். இதான் கடைசி" என்றதும் "அதானே பாத்தேன். இந்த சோலி வேண்டாம் மக்ளே" என்றாள்.


"ஒருத்தன் முன்னேற என்னமாம் சப்போட் உண்டா என்று நானிருக்க்கும் திசை பார்த்து சொன்னான். 


" அந்தாளு உனக்க அம்மைக்கி மத்தவனா. உனக்கு சப்போட்டுக்கு வர" என்று சிரித்தாள். அவனும் சிரித்தான்.  


இது இப்படி முடியக்கூடாதென்று மனம் அரற்றியது. மனதிற்குள் அவனுடம் சொல்வது போல "அடி அடியவளை" என்றேன். 


"நைட்டுக்கு என்னத்த வைக்கப்போற" என்றபடி அவன் அவளை இடித்து தள்ளிக்கொண்டு அவர்கள் வந்திருந்த பைக்கின் அருகில் நகர்த்திச்சென்றான்


"கை காலெல்லாம் நல்லா ஒளையிது" என்றாள் தரையை பார்த்தவாறு


"அப்போ முக்கு கடைல அம்மைக்கி தோசையும் நமக்கு புரோட்டாவும் வாங்கிட்டு போவமா"


"உனக்க அம்மைக்கி என்னவாம் வாங்கு. எனக்கு கோழிப்பொரிப்பு வேணும்" என்று கொஞ்சலாக சொன்னாள்.


அவன் "வாங்கிருவோம்" என்றதும் வண்டி கிளம்பும் சத்தம் எனக்கு கேட்டது. 


என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எதும் புரிபடாமல் கதை நான் நினைத்தற்கு நேர் எதிராய் முடிந்திருக்கிறது. ஒரு வேளை கல்யாணம் செய்துகொண்டால் புரிபடும் போல எனும் எண்ணம் உதித்தது. பெயரில்லாத பறவை மீண்டும் அவனருகில் வந்து சத்தமிட்டு மின் மறைந்து போனது. அந்த சத்ததின் பொருளை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.


No comments:

Post a Comment