நகரத்தின் நடுவில் நூற்றுக்கணக்கான கைகள் உடல் முழுவதும் முளைத்த ஒற்றை பனைமரம் அவற்றின் மூலம் தன்னைத்தானே தற்காத்துக்கொண்டு மிகுந்த பயத்துடன் நின்றதை தன் மாடி அறையிலிருந்த துருபிடித்த இரும்பு கம்பிகள் கொண்ட ஜன்னல் வழி பார்த்தபடி பழைய இற்றுப்போன நாற்காலியொன்றில் கையில் பிடித்த பேனாவுடன் அசோகன் அமர்ந்திருந்தான். தலையில் மாட்டப்பட்ட விளக்குடன் நின்ற கம்பம் கொடுத்த வெளிச்சம் மரத்தின் பின் பக்கமாக ஓர் மங்கலான ஒளிவட்டத்தை உருவாக்கியிருந்தது. சோர்ந்து கருத்து உணர்ச்சியற்று கிடந்த அவன் முகத்தில் அந்த வெளிச்சம் ஓர் படலம் போல தங்கியது. பேனா முனையால் மேசையில் ஸ்ருதி பிடித்து தட்டி அதில் எண்ணங்களை ஓடவிட்டபடி சத்தம் வராமல் முனங்க ஆரம்பித்தான். நீலம் கலந்த சுண்ணாம்பு பல இடங்களில் பெயர்ந்து விழுந்த அந்த வீட்டில் அவனிருந்த நாற்காலிக்கு பின்னால் மற்றொரு ஜன்னல் வெளிச்சமின்றி இருந்தது. கஷ்டப்பட்டு சுழன்ற மின்விசிறியின் சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. குப்பைகளென எதும் இல்லாவிட்டாலும் தூசுபடிந்து மூலையில் ஒட்டடைபிடித்து கிடந்தது. அவன் கற்பனையில் அச்சமயம் உருவாகியிருந்த காட்சி ‘தூய அப்பழுக்கற்ற நீர் கண்ணாடிப்பரப்பென நகர்ந்து கொண்டிருக்க அதன் மேல் கட்டப்பட்டிருந்த கல்லாலான பாலத்தின் நின்றபடி அந்த நடுத்தர அகலமிருந்த கால்வாயின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து காற்றிற்கு இலைகளை வலிக்காமல் உதிர்ந்து நீரில் மிதக்கவிட்டபடி நிற்கின்றன” என்பதாயிருந்தது. ஆனால் எழுதியிருந்தது ‘கருத்த சாக்கடையொன்றின் ஓரமாய் அமர்ந்து போக்கு காட்டிய பெருச்சாளியின் வால் நுனியை பிடிக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் அவன்’ என்றிருந்தது அசோகனுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அதை தொடர்ந்து எழுத மனமில்லாமல் நாற்காலியை பின்னுக்குத்தள்ளி எழுந்து சிறிய அறையில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான்.
வீடு சலித்துப்போகவும் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தான். சில்லிட்ட நீண்ட் கருங்கற்கள் பாவப்பட்ட தரையில் வெறும் காலில் எலும்பெடுத்த உடலில் போர்த்தப்பட்ட மேல் சட்டையும் பேண்ட்டும் படபடக்க எங்கு செல்வதென ஓர் இலக்கில்லாமல் நடந்தான். தோள் வரை வளர்ந்த மயிர் காற்றுக்கு ஏற்றவாறு அலைந்தது. பாதையிலிருந்த மின் விளக்குகளின் வெளிச்சம் அவனை இருளிலிருந்து மறைத்து மீண்டும் கைவிட்டது. எதிரில் தெரியும் இருளிடம் பேச முற்பட்டவன் போல முனங்க ஆரம்பித்தான் “இதில்லாமல் அதில்லை. அதில்லாமல் இதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அழித்தொழித்து இன்னொன்றை கைவிட இவர்களுக்குத்தான் என்ன உரிமை இருக்கிறது” பாதையின் ஓரமாய் படுத்திருந்த ஆடொன்று அவனை தலைதுக்கிப்பார்த்து காதுகளை விடைத்து பின் மீண்டும் படுத்துக்கொண்டது. அதன் கண்களை கவனித்த அசோகன் தொடர்ந்து அதனிடம் பேச ஆரம்பித்தான்.
அவன் பேசியது தனக்குத்தானே கதை சொல்வது போன்ற தோரணையிலிருந்தது ‘பச்சை விரிந்த காட்டில் வெயில் படாத ஈரம் கொவுந்த நிலத்தில் கால்கள் புதைய நடந்தது அந்த சாம்பல் நிற ஓநாய். மயிர் ஆங்காங்கே சடைபிடித்து அழுக்கடைந்து பின்னிக்கிடந்தது. அதன வாயச்சுற்றி ஈக்கள் சுற்றியலைந்தன. நட்பார்ந்த பாவமற்று வால் சுழலாமல் தடித்து தொங்கி நிலத்தில் எதைய் ஆராய்ந்தது. பிளந்த வாயில் ஓரம் தெரிந்த கூர்முனைப்பற்கள் வழி கோளையாக எச்சில் வடிந்தது. எதையோ தேடியலைந்த அதன் கால்கள் நிற்கவும் மூக்கின் நுனிகள் துடிக்க அறிந்து கொண்டதின் ஆணவம் தலைக்கேற வெறிபிடித்தது போல ஓடியது. வேகமெடுத்த கால்கள் காற்றில் கரைய உடல் மட்டும் அந்தரத்தில் பறப்பது போலிருந்தது அதன் ஓட்டம். அதன் முன்னால் ஓடிய தவிட்டு நிற முயல் நிண்ட காதுகள் மட்டும் நிலத்திற்கு மேல் தெரிய அதன் கோலிக்குண்டு கண்கள் உணர்ச்சியற்று கண்குழியிலிருந்து உருண்டு விழுந்துவிடும் என்பது போலிருக்க அதன் கால்கள் ஓடுவது போலில்லாமல் பின்னங்கால்கள் நிலத்தில் பதிய இலை நுனியீருந்து விழுந்து தெறித்த ஒற்றை நீர்த்துளியென குத்திதோடியது. காதுகள் நொடிக்கொருமுறை திருப்பி பின்னால் வரும் ஓநாயின் பாதையை கணித்து திசை மாறு போக்கி காட்டியது. ஓநாயின் உடல் வியர்வையால் நனைந்து சக்தியற்ற நிலையை நோக்கி செல்லும் கணம் அந்த முயல் எதிலோ தடுக்கி தலைகுப்பற விழுந்து எழும்முன் அதனை கவ்விய வாயின் ஓரப்பற்கள் வழி சூடான இளங்குருதி வழிந்தது. தூரமாய் நின்று இதனைத்தையும் கவனித்த காட்டு ஆடொன்று நினைத்துக்கொண்டது, அந்த முயல் இல்லையேல் ஓநாயில்லை’
நடந்து நடந்து இப்பொழுது நீண்டு ஆனால் குறுகி கிடந்த கடற்கரையின் அருகில் வந்துவிட்டான். விண் தாரகைகள் மெல்ல தூக்கம் கலைந்து எழுந்து நின்று கண்சிமிட்டி அவனைப்பார்த்து சிரிக்கையில் மேகங்களுக்கிடையில் மறைந்த நிலவின் ஒளி நிலத்திலறையாமல் ஏங்க்கித்தவித்தது. ஒன்றன் பின் ஒன்றாய் நீண்ட கழுத்தில் அல்லது இடுப்பின் அணியும் வெள்ளை ஆபரணமென கரையை அறைந்த அலைகளில் தெரிந்த குமிழ் கண்கள் அவனை உற்றுப்பார்க்கவும் அதனிடம் பேச ஆரம்பித்தான் அது இன்னொரு கதை போலிருந்தது “நீலக்கடலின் நடுவிலிருந்த பாறையொன்றில் தொற்றி ஏற முயன்ற சிறுமி மூச்சுவாங்க அதிலிருந்த சிறு பிளவை கையில் பற்றி அலைக்கு இசைந்து தண்ணீர் குடிக்காமல் மிதந்தாள். கரை தெரியா அவ்விடத்திற்கு வேண்டுமென்றே த்னையே நீந்தி வரவேண்டுமென முடிவெடுத்தவள் நெஞ்சில் இருந்தது கோபம் ஆற்றாமை இழப்பு. வருவெனெனச்சொன்னவன் வருவானென எண்ணி கரையில் நின்று சலித்து அழுது எழுந்து கண்முன் விரிந்து கிடந்த கடல் அலையில் முதல் காலெடுத்து வைக்கையில் அவளுக்கிருந்த எண்ணம் தன்னை கொண்டு போய்விடும் இந்த நீலத்தில் அமிழ்ந்துவிடவேண்டும் என்பதுதான். மெல்ல அவளணிந்த பச்சைநிற பொன் சரிகைவைத்த பாவாடை சட்டை நீரில் நனைந்து கழுத்தருகில் நீரில் விளிம்பு வரவும் பயம் தொற்றிக்கொண்டது. கரையை நோக்க்கி தள்ளிய அலை மீண்டும் உள்ளிழுக்கவும் மூழ்கினாள். இரண்டு முறை அந்த நீரின் மேல் தோலை கிளித்து வெளிவந்த பின் நினைவிழந்தவள் மூன்றாம் முறை வெளிவரும் போது கைக்கு அகப்பட்டது அந்த பாறையின் விளிம்பு. அதைப்பிடித்து மேலேறி வழுக்கி பின் சுதாகரித்து உயிர் காத்து நின்றாள்.பாறையின் நடுவிலிருந்த ஒற்றை காலடியில் தன் காலை வைத்து அளவெடுப்ப்பது போல பார்ப்பது போல தானும் நின்றாள். மேகங்கள் விலக நிலவு அவளையும் கரையோர தெருவில் முட்ட குடித்து வேட்டி விலகி கொட்டை தெரிய கிடந்த அவனையும் பார்த்து நினைத்துக்கொண்டது அவனில்லாமல் அவளில்லை’
கரை மணலில் நிலவொளியால் நீண்டு கிடந்த அவன் நிழலானது நடக்கும் போது மணல் பரப்பால் அது வளைந்து நெளிந்ததைப்பார்த்து நடந்தான். முதுகுக்கு பின்னால் ராட்சச உருவமொன்று ஐந்தாறு தென்னைகளை அடுக்கி வைத்ததைப்போல நிறபதை உனர்ந்து திரும்பிப்பார்க்கவும் அவன் நினைத்ததைப்போல ஐந்தாறு அடுக்குமாடி குடியிருப்புகள் தலை முதல் கால்வரை கண்களுடன் ஒளி தந்து நின்றன. அந்த கண்களை உற்றுப்பார்த்து அதனுடம் பேச ஆரம்பித்தான் ‘அந்த கட்டிடங்களின் நடுவே தலையின் மயிரைப்பிரித்தது போல சென்ற குண்டுகுழியற்ற மென்மையான விளக்குளால் ஒளிகொடுத்த சாலையில் நடந்து சென்றான் அந்த பெயரில்லாதவன். பசிப்பதற்கு முன்பே தின்று பழகியவன் தன் கனத்தை கால்களை எடுத்து வைத்து அந்த கட்டடத்தின் பெரிய இரும்பு கதவைத்தாண்டி வெளிவரும் போது நாய் குதறிப்போட்ட செத்த கோழியின் உடலைக்கொண்டிருந்தவன் கைகளில் ஓர் கனத்தை பையை தூக்க முடியாமல் தூக்கி பெயரில்லாதவன் அருகில் வைத்து தன் கைகளை மழைநீரை ஏந்தும் குழந்தையென குழித்துப்பிடித்து என்னவோ காற்றில் முனங்கினான். பொதுவாக யாருக்கும் எதும் கொடுக்காத பெயரில்லாதவனின் கைகள் மெல்ல சட்டைப்ப்பையில் தொட்டுத்தடவி எடுத்து அவன் கைகளில் வைக்கவும் இதற்கு எந்த மனிதனாலும் குனிய முடியாது என்பது போல அவன் குனிந்ததை பெயரில்லாதவன் ஏற்றுக்கொண்டானா என்பது சந்தேகம் தான். ஆனால் அவன் மகிழ்ந்திருந்தான். தன் உடல் காற்றில் எடையற்றதாகி மனம் கிளுகிளுக்க மிதந்தான். குனிந்தவன் அப்பொழுதும் அப்படியே நிற்பதையும் அதை உணர்ந்ததும் அங்கிருந்து நகர்ந்து சென்ற பெயரில்லாதவனியும் அந்த கட்டிடத்தின் கண்கள் முழுதாய் கண்டு முடித்த பின் நினைத்துக்கொண்டது இவனில்லாமல் அவனில்லை.
அசோகன் அடுக்குமாடி குடியிருப்பை தாண்டியிருந்த பழைய பாறையை பெயர்த்து எடுத்த பெரும் கற்களால் கட்டப்பட்ட குட்டை கோபுர சர்ச்சின் வாசலின் நின்றான். அதன் சிறிய குனிந்து மட்டுமே செல்லக்கூடய அளவுள்ள மரக்கதவுகளை அதில் தொங்கிய இருப்பு வளையத்தைப் பிடித்து இழுத்து திறக்க முயன்றான். கைகளிலிருந்து நழுவிப்போன வளையத்தால் இரண்டடி பின்னால் சென்று விழுந்ததில் அங்க்கிருந்த சரல் கற்கள் கைமுட்டில் சிராய்த்து ரத்தம் வராமல் விட்டது. எழுந்து நிற்கவும் கண்ணில் பட்டது அந்த கதவில் சிறிய உருவங்களுடன் செதுக்கப்பட்டிருந்த மரச்சிற்பங்க்கள் குனிந்து அதனருகில் சென்று உற்று நோக்கவும் ஓர் கதை போல் தெரிந்த சிற்பத்தில் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்திருந்த ஓர் பேரீச்ச மரத்தின் பழங்களிடம் பேச ஆரம்பித்தான் ‘சந்தையில் முட்டி மோதி தேவையானதையும் தேவையில்லாத்தையும் வெயில் உறைத்து வியர்வை வழியும் உடலுடன் வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டிருந்தனர் மக்கள். கூட்டம் சலசலக்க மக்கள் விலகி சந்தையின் நடுப்பகுதியை எதற்கோ விட்டுக்கொடுப்பதைப்போல விட்டுக்கொடுத்து அதைச்சுற்றி வட்டம் பிடித்து நின்றனர். ஒருவர் மற்ற்வர் காதில் வாயின் மேல் கைவைத்து என்னமோ ரகசியம் சொல்லி கண்களால் ஏற எறங்க பார்க்கும் இடத்தில் கிடந்த பெண்ணின் ஆடைகள் கிளித்தெறியப்பட்டு உடலில் பூசப்பட்டிருந்த வண்ண வரைகள் அழிக்கப்பட்டு விழிநீர் வழிந்த தடம் தெரிய அவள் வீசியெறியப்பட்டாள். அவளை சூழ்ந்து நின்ற நாலைந்து பேர் குனிந்து கற்களை எடுத்து எறியவும் எதோ விளையாட்டுதான் என்பது போல சுற்றியிருந்த மக்கல் அனைவரும் தங்கள் சத்தை காண்பிக்க ஆழுக்கொரு கல்லை எடுத்து எறிந்தனர். அவள் முகத்திலும் நெஞ்சிலும் வயிற்றிலும் கால்களுக்க்டையிலும் குறிவைத்து ஒவ்வொருவராய் எறிந்தனர். அவள் அழுவதற்கு கூட சத்தில்லாதவளாய் உடல் குறுகி தரையில் சுருட்டி வைத்த பழைய பாயென கிடந்தாள். அவள் னெற்றியிலிருந்து வடிந்த ரத்தம் அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த ஒரு நோஞ்சானின் கால்களில் படும்படி அவனே வந்து நின்று கொண்டான். அவள் கம்புக்கூட்டில் கைவைத்து தூக்கி நிறுத்தி என்னவோ சொல்லலாமென்று திட்டத்துடன் வந்தவனுக்கு ஏமாற்றமாய் அவளால் எழுந்து அமரக்கூட முடியவில்லை. அவன் கால்களை பற்றிக்கொண்டு பழைய நிலமையிலேயே கிடைந்தாள். அவன் தன் சக்க்தியனைத்தையும் திரட்டி சத்தனான குரலில் உங்களில் பாவம் செய்யாத ஒருவன் எவனோ அவன் மட்டும் கல்லை எறியக்கடவன் என்று சொல்லி எதையோ சாதித்த பெருமித பார்வையுடன் கூட்டத்தை பார்த்தான். இருந்தும் ஒன்றிரண்டு கற்கள் வந்தததையடுத்து கடவுள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறால் அவரிடமிருந்து எதும் தப்பாது என்றது கற்கள் நின்றன. அவன் கண்கள் களியில் துள்ளின. விழுந்து கிடந்தவளை தூக்கி நிப்பாட்டி தன் தோளில் சாய்த்தவாறு நடத்தி சந்தயை விட்டு தூரமாய் கூட்டிச்சென்றான். மக்கள் உண்டாக்கியிருந்த வட்டம் இப்பொழுது காணாமல் போய் மீண்டும் தேவையானதையும் தேவையில்லாத்தையும் வாங்க ஆர்மபித்தனர். ஓரமாய் இதையனைய்த்தையும் ஓர் மேட்டில் நின்று வேடிக்கை பார்த்திருந்தவன் இந்த கூட்டமில்லாமல் அவனில்லை அவனில்லாமல் இந்த கூட்டமில்லை என்று நினைத்துக்கொண்டான்
இப்பொழுது அசோகன் அவன் வீட்டின் அருகிலிருக்கும் பனைமரத்தின் மூட்டில் நின்றவாறு அதன் உச்சி ஒலைகளையும் உடலில் முளைத்த கைகளையும் பார்த்ததும் இந்த மரமும் அதனை சுற்றியிருக்கும் நகரமும் உள்ளார்ந்த ரகசியமானதோர் உறவைக்கொண்டுள்ளதாக தோன்றியது.
வீட்டிற்குள் நுளைந்ததும் அவன் எண்ணங்களை ஓர் கதையாக்க முடியுமா என நாற்காலியில் அமர்ந்து கதையின் தலைப்பிலிருந்தே ஆரம்பித்தான். அது இப்படி அமைந்தது ‘அப்படியானால் இன்னொன்று’
No comments:
Post a Comment