மழை பெய்து முடித்த தடம் அந்த மரங்கள் நிறைந்த குன்றின் உச்சியிலிருந்த கற்கோயில் சுவரின் அடர் கரும்பச்சை பாசிகளில் தொங்கி நின்றது. நான்கு மூலை தூண்களில் நின்ற நிலையில் பாசிபிடித்த ஊர்த்துவ வினாயகர் சிலைகள் விதவிதமாக அபிநயம் பிடித்த நின்றன. அதன் தும்பிக்கைகளில் நீர் சொட்டு விழுந்து தரையில் பூவென விரிந்து நடுவில் சூல்தண்டு நீண்டு மறைந்தது. குன்றில் கிழக்கே மலையின் நாக்கென நீண்ட பாறைத்துண்டில் அமர்ந்திருந்தவன் கரும்பரப்பு அலையாக வானில் படர்ந்து நின்ற மேகங்களின் வளைவு குழிவுகளில் தெரியும் உருவங்களையும் அவை அடையாளமற்று மாறுவதையும் உன்னித்தான். அவை ஒன்றையொன்று பிடித்து இழுத்து கூட்டாமாக்கி மற்றொரு கூட்டத்தை மோதி காத்தி கூப்பாடு போட்டன. அமைதியாக திரும்பி கருவறைக்குள் தெரியும் பெரும் கல்லாலான அமர்ந்த வினாயகர் சிலை உண்மையிலேயே அங்கொரு களிறு அமர்ந்திருந்து அவன் முதுகை பார்த்திருக்கும் உணர்வை அடைந்தான். நால் திசைகளிகளிலும் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போன குழந்தைகளின் விளையாட்டு கட்டிடங்கள் போல பாதி உடைந்தும் சரிந்தும் ஓரிடத்திலிருந்து தூக்கி எறிந்த துண்டுகள் போல கிடந்தன. அவை எவற்றின் அடையாளங்கள் யாருடைய அடையாளங்கள் என்றவன் யோசிக்கும் போது பெருத்த இடியொன்று அவன் நினைப்பை கலைத்துவிட்டது. கருப்பு முழுக்கால்சட்டை மஞ்சள் அரைக்கைட்சட்டை குளிர்ந்த காற்றில் பறக்க அசையானல் கிடந்த சுருள் தலைமயிரை கோதிவிட்டு சரிசெய்தான். அவன் அமர்ந்திருந்த கல்லிலிருந்த குழியில் தங்கிய நீரில் கை நனைத்து முன்நெற்றி முடியை சுருட்டி ஒட்டவைத்தான். எழுந்து நின்று குளிர் காற்றை உடலுக்குள் நிறைத்து கீழிருக்கும் செங்குத்தான பள்ளத்தின் வழி தன் உடல் விழுந்து சிதறுவதை கணக்கிட்டு ஈசலென கைகளை விரித்து கண்களை மூடி உடலை வளைத்து சாய்க்கும் போது மேகங்கள் அவனை கண்டது போல அவனுக்காக தங்கள் நெஞ்சுவிரித்து நீரை பொழிந்தது. அவனுடல் சாய்ந்து இறப்பை நோக்கி நகரும் போது மழைத்துளியொன்று கைகளில் வீழ்ந்து என்னமோ காரியம் சொன்னது
சாவுணர்ச்சி மனத்தில் உதித்த கணம் அவன் ஹம்பிக்கு செல்ல வேண்டுமென முடிவு செய்து விட்டான். அந்த நிலத்தின் கதையோ வரலாறோ அவனறியாதது ஆனால் அதன் அர்த்தமற்ற வெறுமையான உடைசல்கள் நிறைந்த வெளி அங்கு என்னமோ தனக்காக காத்திருப்பதாக உணர்ந்தான். ஒழுகினசேரி சந்திப்பில் முதன் முதலாக எம் ஜி ஆரின் கழுத்துவரையுள்ள சிலையை கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து கூடியிருந்த சொற்ப கூட்டத்தில் ஆயிரம் பேர் முன்னால் பேசும் தோரணையுடன் அப்போதைய எம் ஜி ஆரின் உடையான வெள்ளை வேட்டி வெள்ளை முழுக்கைசட்டை வெள்ளை கம்பளி தொப்பியென பேச ஆரம்பித்தான் "ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளெ , உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்" தன் உடல் அசைவில் கழுத்தின் வளைவில் குரலில் என் எல்லாவற்றிலும் அவரை பிரதிபலிக்குமாறு தன்னை மாற்றிக்கொண்டான்.
"கொல்லைக்கி போகும்பொ குத்த வைக்கத கூட எம் ஜி ஆர் ஸ்டைலலுன்னு சொல்லிட்டு திரியான்" என்று அம்மையப்பன் பிள்ளை சொல்வதை அவன் காதுகொடுத்து கேட்டதில்லை.
ரிஸ்வன் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்யும் போது கூட இறுக்க் பிடித்த அரைக்கை சட்டையும் அதில் கைக்குட்டையொன்றை கட்டி சுருள் முடியில் கர்லிங் விட்டு கரண்டை கால் தெருயுமாறு கால்சட்டையும் அணிந்தே ஆப்பமும் கடலை கறியும் பரோட்டாவும் மட்டன் சால்னாவும் பரிமாறுவான். முதலாளி ரிஸ்வான் "லேய் தம்பி இந்த ஜெம்பர அவுத்து பொட்டுட்டு நல்ல் சட்டையொண்ண போட்டுட்டு திரிய கூடாதாடே , கண்ணுகொண்டு பாக்க முடியகயாக்கும்" என்பார் அவன் "நீங்க போடுத சட்டையும் வேட்டியும் கூடத்தான் ஆணுமில்லாம பெண்ணுமில்லம இருக்கு...எனக்கொண்ணும் தோணல்லியே...அங்க முக்குல ஒருத்தன் புரோட்டா கேட்டான் கொடுக்க போட்டுமா" என்று பொரிந்து விடுவான்.
"லேய் மக்கா...அந்த வேசத்த அவுத்து போட்டுட்டு திரியமுடே , அதாலதான் உனக்கு சாக்காலம் பாத்துக்க , வேலையுக் கூலியும் இல்லாம கும்பட்டம் ஆடுகது மாரி திரி , உனக்க மத்தவனா வந்து கும்பிய நெறப்பான், அறுதப்பயல" என்று அவன் அம்மா விசாலம் அழுது மூக்கைச்சிந்தி ஒற்றையறை இருண்ட வீட்டின் மூலையில் சிந்துவாள்.
சோற்றை கவளங்களாக விழுங்கி அடுத்த கரண்டி சோற்றை ஆப்பையில் அள்ளி போடும் போதுபோது நாளை என்ன கலர் சட்டை போடலாம் என்பதே ஓடும். விசாலம் புழுங்கி அழுது சுவற்றோடு ஒட்டிப்பல்லியென கிடப்பதை பரிதாபமாக பார்த்து திரும்பி படுத்துக்கொள்வான்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது முதன் முதலாக எம் ஜி ஆரை நாகராஜ கோயில் திடலில் வைத்து பார்த்தான். முந்தைய நாள் இரவு அவர் வருவதாக கூட்டம் கூடியது. "ஆராம்பளி தாண்டியாச்சாம்" " லேய் தேராப்பூரு" "அங்கொருத்தன் வள்ளியூருண்ணு சொன்னான்" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாலிந்து பேர் கூடி பேசினர். காத்திருந்து காத்திருந்து கடைசியில் மக்கள் இரவு மேடையைப்பார்த்து ஏக்கமாக அங்கேயே படுத்தனர். ஆண்கள் வேட்டியை விரிக்க பெண்கள் சேலைத்தலைப்பால் கொசு கடிக்காமல் குழந்தைகளை மூடி கிடந்தனர். அவனும் அந்த கூட்டத்தில் ஓர் மூலையில் தூங்கிப்பொனான். விடிந்து அவர் வந்து சேரும் போது மக்களிடம் எந்தவொரு எதிர்ப்போ சலிப்போ களைப்பொ தெரியவில்லை. கூட்டம் ஒற்றை உடல் கொண்டு உயிராகி ஓர் குரலில் அவரை வரவேற்றது. அவன் அவரைப்பார்த்து வான் தொட்டு நிற்கும் மலையொன்றின் அடியில் நின்று குதூகலித்து அதன் உச்சியை கற்பனை செய்தான்.
புதிய கட்சியில் அவனை சேர்த்துக்கொள்ளவில்லை. கட்சிக்கூட்டங்களில் அவனை மேடையில் பாட்டுக்கு ஆட அவரது வசனங்களை பேச வைத்தனர். வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்கவே முடியாத வரம் போல அதனை ஏற்று பவனை செய்ய ஆரம்பித்தான். தெருவில் வேலை செய்யுமிடத்தில் கோவில் கொடைகளில் அவனை எம் ஜி ஆர் என்ற அடை பொழியுடம் கூப்பிட ஆரம்பித்தனர். அவனும் அந்த அழைப்பிற்கு அவரின் உடல் மொழியிலேயே பதிலும் சொல்வதை வழக்கமாக கொண்டான். சில சமயம் அது போன்ற கூட்டதினுள் நுளைந்து அவன் "நான் உங்கள் விட்டு பிள்ளை, இது ஊரறிந்த உண்மை" எனும் போது கூட்டம் விசிலடித்து கைத்தட்டும் சத்தம் அந்த மலையடிவாரத்தையும் உச்சியையும் ஞயாபகப்படுத்தும்.
அவன் கெஞ்சி கேட்டதன் பேரில் அவர் வரும் கட்சிக்கூட்டதில் அவனை அவருக்கு அறிமுகப்படுத்துவதாக சொல்லி கட்சியினர் சமாளித்து வைக்கவும் அவர் மேடையேறி வரவும் சரியாக இருந்தது.
"அண்ணே இந்த ஒரு மட்டம் ஏத்தி விட்டுரு….அந்தா வந்துட்டாரு...நானும் வாரம்ணே"
"அங்க பொல கோமாளி...இருக்க இடத்துல இருக்கணும்...தூர போல நாயே" என்று நெஞ்சில் கைவைத்து தள்ளியதில் சரிந்து விழுந்தான். அழுகை வந்தது. ஆனால் அதும் அவரை மேடையில் பார்க்கும் வரைதான். பிறகு நடந்ததெல்லாம் மேடையிலிருக்கும் ஒன்றிற்கு கீழே ஆடியில் ஆடும் அதன் பிம்பமே.
விசாலம் இறந்த பிறகு வீட்டில் தனியானன். அதில் ஓர் மகிழ்ச்சி இருக்கவே செய்தது.அவளிடம் மட்டுமே தனக்காக வருந்தியிருக்கிறான். இனிமேல் அவனுக்கு தடையொன்றுமில்லை.
கோமாளி என்ற பெயர் எப்படியோ அவனுடைய எம் ஜி ஆர் பெயருடன் இணைந்து எம் ஜி எம் ஆனது. கூட்டமான இடங்களில் பஸ் ஸ்டாண்டில் அவனை என் ஜி கே எனும் போது புரியாமல் விழித்தான். "என்னடே அது எம் ஜி கே" என்று டீக்கடை செல்வத்திடம் கேட்டதற்கு "போல கோமாளி" என்று சிரிக்கவும் அங்கிருந்த கூட்டம் மொத்தமாக சேர்ந்து வாய் பிழந்து தொடையிலடித்து "யம்மா...யம்மா" என்று சிரித்தனர்.
ஒரு நாள் நடுயிரவில் வயலின் நடுவிலிருந்த மண் சிலை மாடனின் முன்னிருந்த மரக்கம்பத்தை சுற்றி அமர்ந்து பெயர் புரியாத சாராயமொன்றை அவனுடன் சேர்த்து நாங்கு பேர் குடித்துக்கொண்டிருந்தனர். தலை கிறங்கி தலை மேல் விரிந்திருந்த அரசின் கிளைகள் சுழன்று வட்டமடிக்கவும் கைகளை தலைக்குப்பின் கட்டி மண் நெரு நெருக்கும் நிலத்தில் படுத்தான்.
"லேய் மக்கா நீ எப்பொம்ல மாறப்போற" என்று விக்கலெடுக்க ஆரம்பித்தன் சுந்தரம்.
"நா என்ன மயித்துக்குடே மாறனும்...உனக்க அப்பனுக்கிட்ட போயி சொல்லு" என்று தலையை மட்டும் தூக்கி கேட்டு மீண்டும் சாய்த்துக்கொண்டான்
"உனக்க சட்டைய பாரு , பேண்ட பாரு , அந்த குருட்டு கண்ணாடிய
வேற போட்டுட்டு திரிய"
"அது உனக்கு புரியாதுடே" எனும் போது வாய் குழறியது
சுந்தரம் பீடியை இழுத்துவிட்டு "எனக்கு எல்லாந்தெரியும்… மாப்புள வேசம் போட்டா மாப்புள ஆகிர முடியாது மக்கா...அதத்தான் சொல்லுகேன்" என்றான்
சுற்றும் மரக்கிளைகளின் இடைவழி தெரியும் நிலவை பார்த்துக்கொண்டே " நா வேசம் போடலடே…"
"அப்போ இது என்னது" என்று சட்டையை பிடித்து இழுத்தான் ராஜன்
"சட்டைல கைவைக்காத மக்கா...பொறவு பாத்துக்க" என்று அவன் எழுந்தமர்ந்தான்
ராஜன் எழுந்து ஆடி அவனைப்போல நடித்துக்காட்டி "தொட்டால் பூ மலரும் தொடாம கோமாளி மலர்வான்" என்று கைகளை தட்டி பாடினான்.
அவனுடல் சுருங்குவதைப்போல் உணர்ந்து எழுந்து நிற்கமடியாமல் மரக்கம்பத்தை பிடித்துக்கொண்டான். மனம் அழுகையை வெளிக்காட்ட மறுத்து "உகலம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக" என்று பாடி அவரைப்போல ஓடி ஆடி அங்கிருந்த வாய்க்காலில் சறுக்கி விழுந்து காலை வரை கிடந்தான்.
முதல்முறை அந்த வரண்ட நிலத்தின் உருவை பெயரை டீவியில் தூர்தர்ஷனில் பார்த்த கணம் அந்த நிலத்தின் அடி முதல் முடிவரை தான் மல்லாக்க படுத்து நிமிர்ந்து கிடப்பதாக உணர்ந்தான். அங்கிருந்த சிறு குன்றுகளில் உயர்ந்த ஒன்றில் இருக்கும் உடைந்த கற்கோவிலை பார்த்ததும் அங்கு செல்வதாக அன்றிரவே முடிவு செய்தான்.
No comments:
Post a Comment