Saturday 25 January 2020

கல்யாணி : புதுமைபித்தன் - வாசிப்பனுபவம்

கலியாணி சிறுகதை : http://www.sirukathaigal.com/குடும்பம்/கலியாணி/

சமகால இலக்கிய வாசகனுக்கு இது ஒரு சாதாரண கைவிடப்படலின் கதையாகவே உணர்த்தப்பட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் என் பார்வையில் இக்கதை இரு விதங்களில்  முக்கியமாக படுகின்றது.

1. விவரிப்பு முறை

இது ஒரு கைடப்படலின் கதையாக இருந்தாலும் அதில் அந்த ஊரின் பல கூறுகள் கதையின் போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

கதைக்கு தேவையானது ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவது , வாசகனை ஒரு நிகர் வாழ்க்கைக்கு கொண்டு செல்வது. அதற்காகவே இவை இருக்கின்றன. ஆனால் இவை புகுத்தப்பட்டவை அல்ல. இது இந்த ஒரு பத்தி கதைக்கு ஒட்டில்லாமல் இருப்பதாக தோன்றனால் , ஆனால் அதன் மூலமாகவே நான் கதைக்குள் செல்கிறேன். ஒரு சங்ககாலத்தில் குடிகளின் தற்போதைய நிலையை உணர்த்துகிறது.

"கோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி – இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது."

2. சங்ககாலம் முதல் இருக்கும் பெண்ணின் ஆற்றியிருத்தலையும் அதன் நீட்சியையும் காட்டுவது

கல்யாணி ஒரு சாதரண குடும்பத்தின் எழைப்பெண் , எல்லா ஏழைஒபெண்களுக்கும் இருப்பது போலவே அவளுக்கும் கல்யாணத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் கூறுகிறார் , ஆனால் அவள் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் உடல் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் காமம் அங்கு கவனிக்கப்படவில்லை. அதுவே எனக்கு கதையில் முக்கிய கூறாக இருக்கின்றது.

தொந்தி பெருத்து கனத்து குடுமி சரிந்து கிடக்கும் சுப்புவையர் மன்மதன் இல்லை. அவளின் காமத்தை ஒரு பொருட்டாக மதிக்காத அவர் மூத்தாளை கல்யாணியுடன் சேர்த்து கூறி அவளின் நிலையை அவர் நொடிக்கொருமுறை நிறுவிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் அவர் மூத்தாளையும் எந்த அளவுக்கு நடத்தினார் என்பதில் சந்தேகமே. அவர் அவளையும் அப்படியே நடத்தியிருப்பார் என்றே உற்தியாக மனம் எண்ண முயல்கிறது. அவரின் கைப்படலையே அவள் சிலாகிக்கும் அளவுக்கு இருக்கின்றது கல்யாணியின் கையறு காமம்.

காமம் என்பது என்றறியாத ஒருவர் இருக்கும் நிலையில் காமமாகவே உருவானவனாய் வருகிறான் சுந்தர் சர்மா. அவளை அதுவரை வெளிச்சத்தில் பார்க்காத அவள் , வெளிச்சத்தில் கண்டதும் காமுறுகிறான். அவளை எங்கெல்லாமோ கூட்டிச்செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறான். அதும் காமத்தினாலேயே. வீட்டில் அவன் கல்யாணியை தழுவிச்சென்றபின்பு அவள் அழுகிறாள் , அவளின் கொழுநனுக்கு மோசம் இழத்ததாக வருந்துகிறாள். அதற்காகவே விடியும் முன்பு நதிக்கு குளிக்கச்சென்று வர விளைகிறாள். ஆனால் விதி அவளை அவனுக்கு காட்டுகிறது பின்பு மறுகரையில் ஒரு உருவம் போல அவன் சென்றுவிடுகிறான். ஆனால் அவளின் காமம் அங்கும் தனிமையிலேயே நிற்கின்றது. வேண்டுமானால் அவளுக்கு அங்கு நதிகரையோரமாக ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் கோவில் கொண்டுள்ள கன்னியம்மன் துணைக்கு வரலாம். ஆண்கள் வர வாய்ப்பில்லை.

Monday 20 January 2020

பத்மவியூகம் : வாசிப்பு அனுபவம்

பதம்வியூகம் சிறுகதை : https://www.jeyamohan.in/43970#.XiYjH8hKhPY

போர் இரைக்காக காத்திருக்கும் ஒரு சிலந்தி வலை போன்றது அதனை உருவாக்குவது ஒரு தனிச்சிலந்தியல்ல. அதில் சிக்கிக்கொள்ளும் அனைத்தும் அதன் வீரியமோ அதன் தன்மைகளோ அதன் முடிவிலா சுழற்சியோ ஏதும் தெரியாமல் அதனுள் முயங்கிக்கொண்டே இருக்கின்றன. அத்தனை அழிவுக்குப்பின்னும் எரிந்துகொண்டேயிருப்பது அன்னைகளின் அடிவயிற்று நெருப்பு மட்டுமே அதற்கு பதில் சொல்ல முடியாத கையறு நிலையிலேயே விதி நம்மை வைத்திருகின்றது.

போரின் விளக்கங்களற்ற தொடக்கமும் முடிவையும் பற்றி கதை பேசுகிறது.
பெரும் விதவைகளை உருவாக்கிவிட்ட குருசேத்திரத்தின் பிறகு நீர்க்கடன் கொடுக்கின்றனர். அங்கு வரும் ஒரு அன்னையின் விழி வழி கதை நகர்கிறது. சுபத்திரை , அவள் யார் ? போரின் பொருட்டு கவர்ந்து வரப்பட்ட ஒரு சாதாரண பெண். ஆனால் அவளுள் மோகம் துவண்டெளவே அவள் அர்ச்சுனனுடன் வந்தாள். ஆனால் அவள் முதலாமத்தவள் இல்லை என்று தெரிந்ததும் அதன் அத்தனை ஆற்றலும் அடங்கி அந்த கணமே அவனின் பயத்தை அவனின் உடல் மட்டுமேயான காமத்தை என்ணி அவள் வெறுக்க ஆரம்பித்து விட்டாள். அது கங்கை கரையிலேயே தொடங்குகிறது.

அவள் மகன் இறந்து விட்டான் , ஆனால் தன்னால் அழ முடியாது. தான் ஒரு மகாராணி , அழுவதற்கு தகுதியானவள் இல்லை. அவளின் முகமுடி திறக்கா தருணங்களே அதிகம். அவள் அண்ணனிடமும் வியாசனிடமும் தான் அவள் திறந்து உடைகிறாள். அர்ச்சுனனிடம் ஒரு போதும் இல்லை.

விஷ்ணுபுரம் நாவலில் சங்கர்ஷணன் கூறும் அதே வார்த்தைகளை சுபத்ரையும் கூறுகிறாள். அந்த இறப்பு ஒரு நடக்கா சம்பவமாக இருவரும் உணர முற்படுகின்றனர். அந்த கனவிற்குள் உலாவ அவர்களால் முடியும். ஆனால் அது ஒரு கணம் மட்டுமே அதன் பிறகு அந்த வாள் அவள்கள் வயிற்றில் பாய்ந்து துளாவும்.

அன்னைகள் தங்கள் மகனுக்கு மட்டுமே அன்னைகளாக வாழ முற்படுகின்றனர். திரௌபதியின் மகன்கள் இறந்தலில் சுபத்ரையின் வயிறு குளிரவும் செய்கிறது. அர்ச்சுனனிடன் திரௌபதியின் மகங்கள் இறந்ததை குத்திக்காட்டி அவளால் இம்சையின் இச்சையை அதிகப்படுத்தவும் முடிகிறது. அவளுக்குள் இருக்கும் பேரன்னையை உணர்த்த கிருஷ்ணனின் பேச்சு அவளுக்கு தேவைப்படவே செய்கிறது. அதன் பிறகே அவள் திரௌபதியின் விரிகுழல் கோலத்தை கண்டதும் மனம் பதைக்கிறாள்
உள்ளூர அவள் வேண்டியது என்றுமே தன் அண்ணனின் கனிவுடன் கூடிய வாழ்க்கையின் விரிவைத்தான். அதன் மூலம் அவன் தன்னைத்தானே சாகடிக்காமல் இருப்பது போல அவளாலும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவளுக்கு கொடுக்கின்றது.

சிறு மனித மனம் என்றுமே தான் எதிர்பார்த்தது நடக்கும் படி பிரபஞ்சத்திடன் கைகூப்பி வேண்டுகிறது. ஆனால் அதுவோ நான் நீ கூறும் எதற்கும் கட்டுப்படாதவன். என் எல்லை எனக்கே தெரியாது என்று இரக்கத்துடன் பார்க்கின்றது

பத்மத்தினுள் இருக்கும் இரு புழுக்களை பார்க்கையில் முதலில் அவள் தன்னை மறந்து அபிமன்யுவின் கடந்த காலத்தில் திளைக்கிறாள். பின்பு தன் வஞ்சத்தை அவனுள் திணிக்கப்பார்கிறாள் இறுதியில் அவள் பத்மவியூகதை விளக்கிக்கூறுவதற்குள் அது மூடியும்விடுகிறது.

எதும் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்று தேற்றியவாறே தன் அழும் தங்கையை அழாதே என்று கூட்டிச்செல்கிறான்.

கங்கைக்கரையில் தொடங்கிய அபிமன்யுவின் வாழ்வு அதிலேயே மீண்டும் முடிந்து தொடங்குகிறது. தன்னால் ஏதும் செய்ய முடியாத கங்கையன்னை இரக்கமுடன் கருணையுடன் ஊழி தோறும் தன் மதலைகளுக்கு முலைகொடுத்து அணைத்துச்செல்கிறாள்.

Friday 17 January 2020

சொல்

நம் கண் அறியாமல் பாலை மணலில் அப்பாம்பு ஊர்ந்து செல்கின்றது.
அதனை நாம் உணரமுடியும் ஆனால் தடுக்க முடியாது.
அவை நம் கட்டுப்ப்பாடின்றி எல்லையின்றி ஊர்ந்து செல்கின்றது.
அதன் இரை கிடைத்த பின்னரும் அவை ஊர்வது நிற்பதில்லை.
அதன் அடுத்த இரை தேடி அவை ஊர்கின்றன.

மனம் கொண்டவர்களே , எங்கிருந்து நாம் காணும் அத்தனை தீமைகளும் விளித்தெழுந்து உயிர் கொள்கின்றன ?
அதன் பிளந்த பிசுபிசுப்பான இரட்டை நாக்கில் அல்லவா ?

Sunday 12 January 2020

கடவுளின் தேடல்

மனிதன் வாழ்வது நம்பிக்கையின்பால் தான் கட்டியெளுப்பிய இந்த நிலத்தில் மீதே. அதன் அடித்தளம் நகரும்போதெல்லாம் அவன் சந்தேகங்களுக்கும் அலைச்சலுக்கும் உள்ளாகிறான். அந்த நம்பிக்கையின் உச்சக்கட்டமே கடவுள் உருவகம். நம்மை படைத்து காத்து நமக்கு கேட்டதைகொடுத்து நம்மேல் நிற்கும் ஒரு ஆற்றல். அதன் வடிவங்கள் பல. சாதரண மனிதனுக்கு கடவுளின் தேவை அவ்வளவே. அதன் நிலை பிறளும் போது ஏற்படுதே நாத்திக மனநிலை. விஞ்ஞானி கோவிந்த் நமக்கு அந்த நிலையிலேயே அறிமுகம் ஆகிறான். விஞ்ஞானி என்ற பட்சத்திலேயே எல்லா சக நிகழ்வுகளுக்கும் காரணம் மனிதன் என்று ஒத்துக்கொள் எனும் நிலைக்கு அவனை தள்ளுகிறது. அது தன் கைகளில் இல்லை என்பதை உணரும் தருணத்தில் இறுதியில் கூறுகிறான் "கடவுள் இல்லைனு யாருங்க சொன்னது இருந்தா நல்லாருக்கும்" அது அவனுடைய அவநம்பிக்கையில் இருந்து அவன் சந்தேகிக்கவே வழி இல்லாத ஒரு ஆற்றலை எதிர் நோக்கிச்சொல்லும் பாதை , அல்லது ஒரு கண நேர உணர்வெழுச்சி.

ஆம் இது தசாவதாரம் திரைப்படத்தின் அனுபவங்கள் , என்னளவில் அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருந்து வந்துள்ளது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. ஆனால் அதன் கதை சொல்லி தன் வழியில் போகுற போக்கில் சில கதாபாத்திரம் வழி சொல்லிச்சென்ற தருணங்களை மட்டும் குறிப்பிட நினைக்கிறேன். இதனை இலக்கியம் வழி பலர்  சொல்லிச்சென்ற பின்னனும் அதன் கூறு முறையும் அதன் தொகுப்பு முறையும் இந்த திரைப்படத்தை முக்கியமான ஒன்றாக மாற்றுவதாக நினைக்கிறேன். 

தலித் மக்களில் ஒருவராக மண்ணிற்காக போராடும் பூவாராகன்.தலித் அரசியலை தமிழ் வெகுஜன மக்களிடம் பேசிய அல்லது அதற்கு முயன்ற முதல் திரைப்பட கதாபாத்திரம். தலித்துக்களின் சுடுகாடு இல்லாமலாக்கப்படும்பொழுதும். பட இறுதியில் பாட்டி தன் மடியில் வைத்திருக்கும் நிலையில் அவள் பெருமாளை கவனிக்க வில்லை அது ஒரு பொருட்டே அல்ல அவளுக்கு. தன் மகன் கரு நீல மணிவண்ணன் நீலக்கடலில் பள்ளி கொண்டிருக்க அங்கு தீட்டு இல்லை அவனே அவள் கடவுள். முக்கியமாக ஒரு தலித் அங்கு கடவுளாக்கப்படுகிறான். அது ஒரு குறியீடாக என்னுள் நின்றது.

உலக அரசியலைப்பற்றி வெகுஜன மக்களிடன் பேசிய முதற்படமும் அதுவே என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஜனாதிபதிக்கு உப்பின் வேதியல் பொருள் தெரியவில்லை ஆனால் அவருக்கு அணுகுண்டு போட உத்தரவிடும் அதிகாரம் இருக்கின்றது. இறுதிகாட்சியில் ஜப்பானும் அமெரிக்காவும் மோதிக்கொள்வது நாடகியலாகா திணிப்பாக இருந்தாலும் அதுவும் நம் மக்களுக்கு புதிதே. சாதரணமாக புஷ் அந்த "பயோ ஆயுதம்" இருக்கும் விமானத்தை இந்தியா செல்லட்டும் அப்படியே விட்டுவிடு என்ற தோரனையில் சொல்லும் காட்சி போகுற போக்கில் வந்து செல்கின்றது.  அமெரிக்காவோ அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு அமைப்பும் எடுக்கும் சாதரண முடிவுகளே அவை போன்றவை. முஸ்லீம்கள் அனைவரும் நம் அதிகாரத்தின் தளத்தில் பொது மக்களின் தளத்தில் எங்கு நிற்கின்றனர் என்பதையே கலிஃபுல்லா கான் கதாபாத்திரம் வழி காட்டுகிறார்.

கடவுள் மூலமே தொடங்கும் இக்கதை கடவுளிலேயே முடிகின்றது. ஆண்டாள் கதாபாத்திரம் இன்னொரு பக்கம் இருந்து தீட்டு என்று பேசும் பொழுது கோவிந்த் அதனை தன் கிண்டலாக பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் அதனை சொல்லியே கடக்கிறான். ஆனால் பெரியார் அடையாத ஒரு வேளை தன்னுள் மறைத்த ஒரு நிலையாகவே படத்தில் இறுதியில் கோவிந்த் சொல்லும் வசனம் "கடவுள் இருந்தால் நால்லாருக்கும்" என்பது போல தோன்றுகிறது.

"உங்க பாட்டி மாதிரிதா உன்னோட கடவுளும் , ரெண்டு பேருக்கும் உள்ள ஒன்னும் இல்லை" கடவுளின் , தற்செயல்களின் தொடர்ச்சியை அறிய இயலா மனம் கொள்ளும் ஒரு கோபமே கடவுள் மறுப்பு. சொல்லப்போனால் நாத்திகர்களே சிறந்த ஆத்திகர்கள் ஆக வரம் பெற்றவர்கள்.

Friday 10 January 2020

என்னவாய் இருக்கிறீர்

மனிதர்களே நீங்கள் எனக்கு அன்னையாய் இருக்கிறீர்களா ?
நண்பனாய் இருக்கிறீர்களா ? குருவாய் இருக்கிறீர்களா ?
தெய்வமாய் இருக்கிறீர்களா ? வாழ்வாய் இருக்கிறீர்களா ?
புழுவாய் இருக்கிறீர்களா ? வளமையாய் இருக்கிறீர்களா ?
என்னவாய் இருக்கிறீர்கள் சொல்லுங்கள். 

அதற்கு முன் நான் உங்களுக்கு என்னவாய் இருக்கிறேன் அதுவே நீங்களும் எனக்கு மறக்க வேண்டாம்.

Saturday 4 January 2020

முட்டை ஓடு

நீல நிற முட்டையின் அடிப்பாகமே என் கண்ணிற்கு தெரிகின்றது.
உள்ளே குஞ்சுகளாகிய நாம் நம் மானஸீகமான ஓட்டினுள் கட்டுண்டு கிளர்ச்சியென அலைகின்றோம்.
வெளிமுட்டையை உடைத்து வெளிவந்தாலும் உள் முட்டை கனத்து உள்நோக்கி குடைகின்றது 
எப்போது நாம் உடைக்கபோகின்றோம் இதற்கு முன் எவரும் உடைத்துள்ளனரோ ?   

Wednesday 1 January 2020

பயம்

நான் பயப்படுவது வேப்பமரத்து பேய்களுக்கோ

முருங்கைமரத்து பிசாசுகளுக்கோ

இன்னபிற வேதாளங்களுக்கோ அல்ல ,

புராதான நகரங்களில் முதிர்ந்த மனிதர்களின் முகங்களின் ,

வெம்மை பொங்கும்  கண்களையே
அடைத்து சீறும் தன் மூச்சுகளையே
அவர்களின் தளர் நடைகளையே.

பார்க்காதபடி சென்றாலும் கனவுகளிலும் அவை என்னை அச்சுறுத்துகின்றன.