Wednesday 26 December 2018

சூரர்கள்

அவர்கள் இருவருக்கும் அபாயகரமான வேலைகள் தினமும் தரப்படுகின்றன.
கணநேரத்தில் மலை உச்சிக்கு ஏறுவது
ஆயிரம் கிலோமீட்டரை அரை வினாடியில் கடப்பது
உத்திரத்தில் தலைகீழாக நடப்பது
நெருப்பில் சீறிப்பாய்வது.
அவர்கள் தங்களை போன்றே இருக்கும் பெரிய உருவங்களை கண்டு பரிதாபப்பட்டதுண்டு
ஏனோ அவர்களுக்கு இவ்வனைத்து சக்திகளும் கைவந்ததில்லை.
அவன் பிஞ்சு கைகளில் இருக்கும் வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் ஏதும் செய்யலாம் ஆனால் அவன் இஷ்டப்படி மட்டுமே.

Tuesday 18 December 2018

கனவு போல் : 12/17/2018 : செரொஷாவின் அழுகை


தன் அம்மையின் தலை தன் கண் முன்னே துண்டிக்கப்படுவதை  யாரும் விரும்புவதில்லை. ஆனால் அது அவனுக்கு நேர்ந்தது. அவள் ஒரு பதினாங்கு வயது சிறுவனுடன் ஓடிப்போய் திரும்பியிருந்தாள். செரொஷாவின் அப்பா அவளின் தலையை ஆடு வெட்டும் நீண்டகத்தி ஒன்றால் ஒரே வெட்டில் துண்டாக்கினார். முதலில் அவளை விடாப்பிடியாக அழைத்து வந்து வீட்டின் திண்ணையில் இருந்த மேசை மீது நின்று கொண்டே குனியவைத்து கத்தியை ஓங்கினார். ஒரேயொரு கணம் அவள் கண்கள் செரொஷாவை சந்தித்தது. அவள் அப்பாவிற்கு எந்த எதிப்பும் காட்டவில்லை. அவள் கண்களை செரொஷாவால் அவள் புடதியிலும் காண முடிந்தது அது அவனிடமோ அப்பாவிடமோ எந்த வித பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. எங்கோ இந்த உலகத்திற்கு சம்பந்தம் இல்லாத இரு கண்கள் சாவை மட்டும் விரும்பும் வேறெதையும் நாடாத அந்த கண்களை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது அவன் தன் முன்னால் இருந்த நிலைக்கண்ணாடியில் தன் மீசை முளைக்காத முகத்தில் அழுத அழுதுகொண்டிருக்கும் சிவந்த கண்களை பார்த்தான். அவளுக்காக அழ அந்த அறையில் அவன் ஒருத்தனே இருந்தான். அவன் அழுததை யாரும் கவனிக்கவில்லை அம்மையும் கவனிக்கவில்லை. ஒரு முறை அவன் நண்பன் தன் அம்மா அழகாக இருப்பதாக கூறியுருந்தான் அதை அவன் பெருமையுடன் நினைத்திருந்தான். தன் நண்பன் அழகாக இருப்பதாக அம்மா கூறியதையும் நினைத்துப்பார்த்தான். நிலைக்கண்ணாடியில் அவன் அழுகை நின்றது துண்டிக்கப்பட்ட தலை திண்ணையில் குதியாட்டம் போட்டது. அவள் உடல் சரிந்தது.டிசர்ட் போல இருந்த ,வெள்ளையும் நீலமும் கோடிட்ட உடுப்பு அவிழ்ந்து அவளின் முலைகளில் பால் சொரிந்தது. செரொஷா மண்டியிட்டு .அதையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

Monday 17 December 2018

வெப்ராளம்


எங்களூரில் பாழடைந்த தேவாலயம் ஒன்று இருந்தது.
மக்கள் இரவு நேரத்தில் அங்கு செல்வதில்லை.
பாதி திறந்த தேவாலயக்கதவு வழி அங்கி சலசலக்க பின்தொடரும் நிழல் போன்ற உருவத்தைக்கண்டு ஜன்னி கண்டவர் பலர்.
அன்றொரு நாள் பெரும் பனி பொழிந்து வானும் மண்ணும் இணைந்து தட்டையானதொரு உலகம் உருவாகியிருந்தது.
கல்லறை தோட்டத்தை தாண்டி நான் நடக்கும் பொழுது அவர்கள் சொன்ன அதே நிழல்  பனிப்பொருக்குகள் சிதற என்னை நோக்கி வந்தது. 
சிக்குபிடித்த தலையும் தாடியும் குழிவிழுந்த மார்புடன் கிழிந்த அங்கியுமாக அவன்  ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்காத குறைதான். அழுது தீர்த்தான். அழுகை நின்றதும் நான் கேட்டேன் ஏன் இந்த வெப்ராளம் என்று. எனைப்பார்க்க யாரும் வருவதில்லை எனக்கு பயமாக இருக்கின்றது என்றான்.
நானும் அவனை தோளோடு சேர்த்து அரவணைத்து என் வரவேற்பறையின் வலதுபுறம் சூரியனைப்பார்த்தவாறு வைத்து விட்டேன். பின்புதான் அவனுக்கும் சமாதானம் கிடைத்திருக்கும். 

Sunday 16 December 2018

பெரிய குழந்தைகள்




குழந்தைகள் ஆச்சரியத்தை கைவிடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் நான் அவ்வளவு பெரிய குழந்தைகளை பார்த்தது இல்லை.
அன்று எங்களூரில் பனிப்பொழிவு இரவு பகல் பாராது அந்த குழந்தைகள் தங்கள் பல்லாயிரம் கைகளை விரித்தபடி பனி வாங்கிக்கொண்டிருந்தன.
எவையும் சிலிர்த்து பனியை விலக்கிக்கொள்வதே இல்லை சோர்ந்து போவதும் இல்லை
இரவுகளில் அங்கு முயல் குஞ்சுகள் வருவதுண்டு பனியுடன் குழந்தைகளியயும் விழுங்கிவிடுகின்றன
ஆனால் மீண்டும் குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கும் பனி வாங்க தயாராய்

Saturday 15 December 2018

கனவு போல : 12/14/2018


ஜன்னலோ கதவோ என்று தெரியாது ஓரளவுக்கு ஞயாபகம் இருப்பது அதுதான் , இல்லை செரி தான் அது கதவுதான் அதன் அருகில் சப்பணங்கால் இட்டு அமர்ந்து வெள்ளை நிற தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எதனை ? அது கேள்விக்குரியது. சூரியன் மறையும் அந்தி வேளை நான் ஒரு நிக்கரும் அரைக்கை வெள்ளை சட்டையும் அணிந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை அது ஒரு சிறிய ஆனால் தூய்மையான் ஆறை. ஆள் உயரத்திற்கு என் வாயிலிரிந்து முடி வந்தது எடுக்க எடுக்க வந்துகொண்டேயிருந்தது ஆனால் அது முடிக்கற்றை அல்ல ஒற்றை முடி.. கடைசியில் அது வந்து தீர்ந்தது. என் இடுப்புக்கு பின்னால் இருபுறமும் தரையில் பெரிய நகங்களுடன் இரு பெரிய கால்கள் தெரிந்தன நான் அதனை பார்ப்பதை தவிர்க்க நினைத்தேன். நான் பார்ப்பது அதற்கு தெரியாமல் பார்த்து விட்டிருந்தேன் இல்லை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் முதுகு சிலிர்க்க முடிக்கற்றைகள் உரசுவதை உணர்ந்தேன். ஏளனச்சிரிப்புடன் பருத்த முலை அசைய கையில் குழந்தையுடன் அவள் என் முன்னாலேயே வந்துவிட்டாள் என்னால் எழுந்து ஓட முடியவில்லை. வியர்க்க எழுந்து கொண்டதும் நினைத்துக்கொண்டென். நீலியையும் என் அண்ணனையும் ஜெயமோகனையும். வாயின் ஓரம் வழிந்திருந்த  எச்சியை துடைத்துக்கொண்டு மீண்டும் புரண்டு படுத்தேன். அந்த பச்சை கண்கள்!

பேசும் பந்து




காலம் அவன் அக்குளுக்குள் அடங்கிவிட்டது
அந்த மேசையின் மீது இருந்த சக்கரம் அவன் மீது ஏறி இறங்கி கூழாக்கி அவனுக்கே காட்டியது
ஆனால் ஆட்ட மேசையின் அடியில் இருந்த அவன் போன்ற ஒரு உருவம் அவனை மீண்டும் அழைத்து உயிர்பெற்று  எழச்செய்தது. 
சட்டைப்பையில் இருந்த கடைசி கூல்டினும் கிழித்துக்கொண்டு பறந்தோட மீண்டும் சக்கரம் சுழல ஆரம்பித்தது. 
மீண்டும் அதே தற்செயல் எனும் மந்திரப்பாய் விரித்து மேகங்களுக்கு மேலே பறக்கலானான். கோடிக்கு அடுத்த முறையும் புதுக்குழந்தை முலைஅருந்துவது போலவே இருந்தது.
சக்கரத்தின் மையப்புள்ளியில் உட்கார்ந்து பந்தினை உற்று நோக்கும்போது தினமும் குத்தும் அதே ஊசி மூளையில் குத்தியது  "பார்க்கலாம் அது எதன் அடிப்படையில் தான்  சுழல்கிறது" .

Friday 14 December 2018

கிறிஸ்துமஸ் தாத்தா



முன்னொரு நாள் ஏசுவின் சொந்த ஊருக்கு அருகில் ஒரு தாத்தா இருந்திருந்தார்
அவர் ஏசுவை பலமுறை பார்த்து விசாரித்திருப்பதாக கேள்வி
அதன் பின்னொரு நாளில் அவரின் வீட்டு சிம்மினி வழி வானிலிருந்து தேவதூதர்கள் தங்கள் பரிசுகளை இறக்கியிருந்தர்
 அதன் பின் அவர் அங்கிருந்து தூரதேசம் சென்றதாகவும் கேள்வி
அதே தாத்தா அதே தொப்பையுடன் இன்று கை இறுகும் குளிரில் செருப்பொன்றணிந்து 
பஞ்சடைந்த தாடியும் குனிந்த தலையுமாய் மண்டிபோட்டு கைகூப்பி என்னிடம் எதாவது பரிசு இருக்குமா என்று 
நிமிராமலே என்கண்களை பார்த்து கேட்டார்.
நான் கையாட்டி நடந்து வந்துவிட்டிருந்தேன்
ஆனால் அந்த செந்நிற கூம்பு குல்லாவும் இறுதியில் தொங்கும் வெள்ளை பந்தும் அழகாகவே இருந்தது. 

இருட்டுக்களி




அன்றும் இரவு குளிர்ந்தே இருந்தது
உடம்பின் வெப்பம் அனைத்தையும் வாய் மட்டும் வெளிவிட்டுக்கொண்டிருந்தது
பிரபஞ்சமே என் தலைசுற்றிகொண்டிருந்தது
சுற்றிலும் அரவம் இல்லையென்றதும்  முதலில் எனை நிர்வாணமாக்கினேன்
பின்பு எனக்கேயான சுயஇன்பத்தை அன்று இன்னொருமுறை ஆரம்பித்தேன்
முன்னால் கருநீல வானத்தில் யாரோ நமுட்டுச்சிரிப்புடன் உற்றுநோக்குவது தெரிந்தது
நானும் சிரித்துக்கொண்டேன் , அவளுக்கு தெரியாது உச்சந்தலைமேல் ஏறி நிற்பது அவளே என்று



Thursday 13 December 2018

கனவின் மீசை





இப்போதெல்லாம் அவள் அடிக்கடி வருகிறாள்
கூடே மெத்தையில் கிடக்கிறாள் , அவளின் கால் என்கால்களுக்கடியில் புதையுண்டு கிடக்கின்றது
என் முகத்தின் முன் வந்து பெருமூச்சு விடுகிறாள் என் தாடி சிலிர்க்கின்றது.
நான் இருக்கும் போதே உடைகள் மாறுகின்றன.
களிப்பறை கதவுகள் மூடப்படுவதே இல்லை.
ஆனால் அவள் என்னிடம் பேசி நான் பார்த்ததே இல்லை
நான் அவளுடன் அவள் என்றோ மறந்த ஒரு பழைய தேவையா இல்லையா என்று தெரியாத ஒரு பொருள் போல இருந்தேன்
இப்போதுதான் ஞயாபகம் வருகிறது அவளின் நீள மூக்கின் கீழ் மேல் உதட்டின் சற்று மேலே மீசை கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்டது என்றாவது அவள் என்னை தேடிக்கண்டுபிடித்தால் சொல்லாம் அது அழகாகவே இருந்தது என்று.

அந்தர ஜாலம்




அண்ட பெருவெளி தன் கருத்த திமிருடன் பார்த்தும் பார்க்காதது போல தலை திருப்பிக்கொண்டது
சாம்பல் நிற மேகங்கள் கழுத்து தூக்கி தலை நீட்டிப்பார்த்தன
கீழே நான் எனக்கேயான சொர்க்கலோகத்தில் தனியனாய் நடந்துகொடிருந்தேன்
அவர்களின் இச்செயலுக்கு அப்போதுதான் அர்த்தம் புரிந்தது
தேவன் தன் இரும்புச்சுத்தியலால் மின்னல்களை வளைத்துப்பிடித்து தூளாக்கிக்கொண்டிருந்தான்
என் மூக்கு நுனி நாயின் வால் மின்கம்பத்தின் உடல் அனைத்தும் மின்னலை தாங்கிப்பிடித்திருந்தன.
ஆனால் சுத்தியல் அடி எங்களுக்கு கேட்டதே இல்லை. அவர்களுக்கு அது மட்டும் கேட்டிருக்கலாம்.
பாவம்தான்.

Sunday 9 December 2018

தாடியை தடவ ஒரு வாய்ப்பு- சக்காரியாவின் யேசு


யாருக்கு தெரியும் : 
கனவுலகில் அவன் வென்னீர் தயாராகிவிட்டது. .அவன் தன் உடல் ஆன்மா முழுவதும் இருக்கும் அந்த ரத்தப்படலத்தை  வென்னீரால் கிழித்து எறிந்து விடலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவனுள் ஆதிமுதல் இருக்கும் ஒருவன் செதில் செதிலாய் அவனுள் வளர்ந்து வரும் ஒருவன் அதனை வெறுக்கின்றான் ஏனெனில் அவன் மனித குலத்தின் பிரதிம்ஹிதி. அவனேதான் அந்த மனித குமாரன் பிறக்கும் முன்பே அவன் பிரதிநிதி ஆனவனும்.வேசி பாவம் என்றதும் தன்னைதானே என்பது போல கேட்கும் கைவிடப்படட அநாதையா அவன்? ஒரு வேளை தன் மீட்பை நோக்கிதான் அவன் குமாரனை விட்டானோ?
எங்கும் நிறை பரப்பிரம்மம் அவள் , வேசியை ஆன மேரி பின்பு அவளே மேரி மாக்தலீனோ? இறுதியில் அந்த குமாரனிடம் படை வீரனையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பேரன்னையா? அன்னை சொன்னாலவன் தட்டாமல் கேட்பான் என்றதும் குமாரனின் கைகால்கள் அசைந்தவா ஆம் என்பது போல்? உனக்கு புரியாது அந்த அன்னைகளின் வலி என்றதும் படைவீரனை அவள் குத்தி கொன்றிக்கலாமே? அனால் அவள் பாவம் என்றதும் அவள் மடியைத்தான்  அவன் தேடி ஒடுகிறான்.
கண்ணாடி பார்க்கும் வரை :
சில சமங்களில் கண்ணாடி பார்க்கும் போது அது நான் தானா , நான் தான் இவ்வாறு இருக்கிறேனா இல்லை  வேறு ஒரு உடலில் நான் அடைக்கலம் அடைந்திருக்கின்றேனா? என்பது போன்ற கேள்விகள் என்னை சுற்றும். தன்னுள் இருக்கும் தன்னை தனக்கே காட்டும் ஒரு பருப்பொருள் அது நம் குமாரனின் கையில் கிடைக்கின்றது.சொந்த ஊருக்கு வந்த அவன் தன் எதற்கும் ஆசைப்படும் முகத்தை காண்கிறான் பயப்படுகிறான். உலக இணைப்புகள் அவன் தாடி மீசையை மழிக்க நினைக்கின்றது. ஆனால் அந்த கண்ணாடி இல்லையேல் அவனுக்கு அவனின் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலசலப்பூட்டும் நீரோ வளைந்து நெளியும் சீன பீங்கானோ வேண்டாம் சற்றும் புரட்டின்றி தன்னை காட்டும் கண்ணாடி ஆம் அதுதான் அவனுக்கு தேவைப்பட்டது அவனுக்கு தெரியாமலே அவன் விளைந்தது. தாவூல் தன் பெண்ணை அறிமுகப்படுத்துகிறான் அவன் தங்கையின் உருவத்தை நினைவூட்டி.. மரியம் முத்தமிட்டு வரவேற்றாள்.இறுதியில் ஆடியின் வேலை முடிந்தது  , அவன் அழுது புலம்பியபடியே ஆகாயத்தை நோக்க ஆரம்பித்து விட்டான் என்றே நினைக்கிறேன். 
கிறிஸ்துமஸ் தினம்: 
இன்று நாமே பிறக்கா ஒரு நிலைக்கு செல்ல போகிறோம் என்பது தெரியாமல் இருவரும் சுத்திக்கொண்டிருந்தனர். ஒரு வேளை அவளை காணாமல் இருந்திருந்தால் அதெல்லாம் நடந்திருக்காது. அம்மிணி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு கிடத்தொயிருந்தாள். அவர்களின் பாக்கியம் குமாரன் இருந்த அதெயிடத்தில் அவனின் கால்கை நடுங்கலுடன் தழுவியபடி பூமித்தொட்டிலில் கனவுகளற்ற தூக்கத்தில் அந்த தண்ணீர் சூழ்ந்த அறையில் சற்று முன் உட்புக நினைத்த அறையில் ஏதுமற்றதாய் தூங்கினர். ஆனால் அந்த பாக்கியம் அந்த ஒரு இரவுக்கு மட்டுமே. இந்த விபச்சாரத்தலைவி முதலில் சொனது போல் அல்லாமல் குமாரனையே சுமக்கின்றாள் இன்னும் சொல்லப்போனால்ல் குமாரர்களையே சுமக்கின்றாள். ஆனால் தித்தார்த்தன் அங்கே எதற்காக எல்லாம் கடந்து நதி சென்று சேரும் இடம் அந்த ஒற்றை குடம்தானா?

அன்னம்மாள் :

பொன் துகள்களை வானின் பேழையில் இருந்து அக்காவிற்காக அவன் வரவழைத்திருந்தான். வானம் எல்லைகளின்றி கொட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் வர்க்கீஸ் அன்னம்மாவைப்பார்த்து ஓடியிருக்க வேண்டும். மெலிந்த உடலும் குச்சி கை கால்களும் செடிகளுக்குள் மறைந்திருப்பதை அவ்வளவு சுலபமாக யாரும் கண்டுபிடித்திருக்க முடியாது அவன் அதை பயன்படுத்திக்கொண்டான். அவனால் நாம் சொல்வதையெல்லாம் கேட்டு உம் கொட்ட மட்டுமே முடியும். அதை அவன் தவறாமல் செய்வான் இன்றும் என்றும் அவனுக்கு வேறு சக்திகள் இருந்தது இல்லை இது நகைப்புக்குரியதும்ம் கூட. ஆறு வயது மூத்தவள் அவளை என்றோ காண உரிமையுடன் வந்திருக்கலாம் கட்டி அணைத்திருக்கலாம் அழுது புலம்பிருக்கலாம் கடைசியிலும் கூட ஒரு முத்தத்துடன் அவன் நாலு வார்த்தை பேசவே வந்திருக்கிறான் நசை. அதுவே அதுவே அவனால் முடிந்ததும் அனைவருக்கும் தேவைப்படுவதும். ஒரு வேளை அந்த குச்சி கைகால்கள் என்றுமே நாம் பார்க்க முடியாதபடி நம் கூடவே இருக்கின்றதோ. ஆனால் எப்படியும் அவன் அக்காவைக்காண புதருக்குள் இருந்து வராமல் இருக்க முடியாதல்லவா?

சிலுவை மலை மீது:

அவன் படு பயங்கராமான உச்சியில் நின்றுகொண்டு கைவிரித்து அழைகிறான். அங்கு அவனா இன்றும் எரிந்து கொண்டிருக்கிறான். கைகளில் பொன் மண்டையோடுகளுடன் அவள் அந்த கிழவனை அழைக்கிறாள். அந்த நெற்றிச்சிலுவைகள் கிழவன் ஊர் மக்களுக்கு போட்டதா. அந்த இருவரும் ஆதாமும் ஏவாளுமா , கிழவனை பாம்பின் நாக்கிற்கு தீனிபோட அழத்தனரா?.உச்சிக்கு போவதற்குள் கிழவன் செத்துவிடலாம். ஆனால் அவன் அந்த வானவில்லையும் பார்த்து விடுகிறான். அதுதான் அவனை பீதியடையச்செய்கிறது. அதன் காரணம் அவனுக்கும் எனக்கும் விழங்கவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது அவன் மேலே சென்றும் எரிந்து கொண்டே இருக்கிறான். அப்படியனால் உச்சிக்கு மேல் ஏதும் இல்லையல்லவா ?

Tuesday 3 April 2018

விட்டில்

விட்டில் பூச்சி ஒன்று தவழ்ந்து வந்து சாலை ஓரத்து விளக்கை தலை தூக்கி எட்டி பார்க்கின்றது.பல பூச்சிகள் பறந்தபடி இருக்க தன் சிறகை மெல்ல அசைத்து சிறகடித்து பறக்கின்றது விளக்கை நேக்கி.
மழை பெய்து ஓய்ந்த அந்த பின் இரவில் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்க கருப்பு நிற சாலை மஞ்சள்  விளக்கொளியில் தங்க குளம் போல காட்சியளித்ததுவாகனங்கள் ஸ்ப்தமின்றி வழியும் நீரின் சப்தமே மேலோங்கியிருந்தத்துவேகமாக வந்த ஒரு இரு சக்கர வாகனம் இடரி குளத்தில் வழுக்கி செல்ல இராக்கோழிச்சப்தமும் ஈசலின் சிறகடிப்பும் தவிர எதும் அதை அறிந்திருக்கவில்லை.மஞ்சளில் சிவப்பு ரத்தம் ஊர்ந்து சென்றது.

வானம் பார்த்த படி இருந்த டீகடை பாய்லரில் ஆவி பரலோகம் பார்த்து சென்றுகொண்டிருந்த்துபக்கத்தில் இருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் டீ கிளாசில் வாய் வைத்து உரிஞ்சியபடி “நல்லவந்தா ஆனா பொண்ணு விசயத்துல கொஞ்சம் வீக்கு கேட்டியா எனக்கு தெரிஞ்சே மூணு” என்று எதிரில் இருந்தவனை பார்த்து கண்ணடித்திக்கொண்டான் “இன்னு எத்தனயோ” அவன் மறுமொழி அளித்தான்இருவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டனர்தாழ்ந்த கூரையுடைய அந்த டீகடையின் உள்சென்று காசு கொடுத்து வெளியே வந்தனர். “அஜீ….அஜீ…..” என்று ஒப்பாரியும் சங்கும் கலந்து ஒரு அமானுசிய ஓசை கேட்டு இருவரும் பின்னால் இருந்த அந்த இடுப்புயர வாசல் கொண்ட சிறிய வீட்டை நோக்கி திரும்பினர்பாடை தயாராகிக்கொண்டிருந்தது. “திடீர்னு என்னடே சத்தம் ஓவரா கிடக்குஎன்றான் ஒருவன்
அறுத்து கொண்டுவந்துட்டானுங்க மாப்ள
அதையும் அறுத்துருப்பானுகளோ” இருவரும் வீட்டிற்கு வந்திருந்த  பிணடத்தை எதையோ தேடுவதைப்போல பார்த்தபடி ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டனர் “செரி வண்டிய எடு” “அப்பனோட புள்ளையும் சேந்துட்டானே சண்டாளெ” என்ற முணுமுணுப்பு எங்கேயோ கேட்ட்து.டீகடை ஆவியுடன் அவன் ஆன்மாவும் பரலோகம் சென்று சேர்ந்திருக்கலாம்.

பேய்க்காற்றில் விட்டில் பூச்சியின் இறகுகள் உதிர ஆரம்பித்தன.
முழுப்போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த கிழவன் சுக்குனூறாகிப்போன வண்டியயையும் ரத்தம் ஊறி விழுந்து கிடந்தவனின் கூழாகிப்போன தலையையும் வெறித்து பார்த்தபடி தன் அழுக்கு படிந்த சாறத்தால் முகத்தில் வழிந்திருந்த வியர்வையை துடைத்துகொண்டான்சட்டை இல்லாத மேலுடம்பும் சிக்குப்பிடித்த தலையுடன் இருந்த அவன் சாலையில் கிடந்தவனின் அருகில் குத்தவைத்து அமர்ந்துகொண்டான்வெகுநேரம் அமைதியாக இருந்த அவன் திடீரென்று மிருகஓலத்துடன் அழ ஆரம்பித்தான் “ஏம் புள்ள ஏம் புள்ள” என்று அரற்றியவாறே கீழே கிடந்தவனை எடுத்து நெஞ்சில் எடுத்து வைத்து அணைத்துக்கொண்டான்அவன் முழு உடம்பும் அழுவது போல இருந்த்துஒக்கரித்து வாந்தி எடுத்து அப்படியே ரோட்டில் வேரறுந்த மரம் போல சாய்ந்தான்ஈசலின் இறகு ஒன்று காற்றில் தவழ்ந்து வந்து சாலை நீரில் விழுந்த்து.

அழுது அழுது தூங்கிப்போனவள் வெளியில் காகங்கள் கூக்குரலிட விளித்தெழுந்தாள்அந்த இருண்ட வீட்டின் ஒரு மூலையில் படுத்திருந்த அவள் எதிரில் இருந்த அந்த ஒற்றை விளக்கின் சுடர் ஆட்டம் மகனின் உருவத்தை நிழலாக்கி காட்டினகாகங்கள் மீண்டும் அலற திடுக்கிட்டு எழுந்தாள்சேலை விழுந்து பின்னால் வால் போல தொற்றி வர தலை விரிகோலமாய் வெளியில் பருத்த முலை தொங்க வந்தவள் காகங்களை பார்த்து சிரித்தாள்அதில் ஒன்று அவள் முலையில் மோதி கையில் வந்து அமர்த்துபின்னால் அவள் வீட்டில் காக்கைகளுடன் பேசும் ஒலி மட்டுமே கேட்டதாக பேசிக்கொண்டனர்.

“Guys tell me about death” விசாலமான அந்த வகுப்பறையில் அந்த பேராசிரியர் சிறிது கத்தியவாறே அந்த வாக்கியத்தை சொல்லி முடித்தார், “ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா சாவுங்கறது ஒரு திறப்புஅது ஒத்ததுதா என்னோடதும். ஒரு முடிவு இல்ல அது ஒரு தொடக்கமே அப்டிங்குறது . தெரியாத விசங்கள நம்ம வாழ்கைல தெரிஞ்சுக்கிட்டே வற்றோம் அதே போலதான் நமக்கு தெரியாத சாவுங்கறது ஒரு விசயம் அத தெரிஞ்சுக்க போறொம்” என்று எழுந்து நின்று தீர்க்கமாக பதிலளித்து முடித்த ஒரு கடைசி இருக்கை மாணவன் “அஜி எங்கடா” என்று பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டவாறே உட்கார்ந்தான். “Death is not a thing to have fear, it’s just a fact. We have to face it and accept it nothing can stop it. It’s nature so why should we think against it” என்று முதல் இருக்கை மாணவி சொல்லி முடித்தாள். இருவரும் பேசி முடித்த பின் பேராசிரியர் என்ன சொல்லபோகிறார் என்று மாணவர்கள் அனைவரும் அவர் பக்கம் திரும்பினர். "சாவ நேர்ல யாராச்சும் பாத்த்ருக்கீங்களா?" வகுப்பறை கடிகாரம் கூட அமைதி காத்தது. பேராசிரியர் தொடர்ந்தார் "அந்த உயிர் போற வலி உடல் இறுகி ஒண்ணுமே செய்ய முடியாம போகும் போது கடவுள் எப்படியாவது காப்பாத்திர மாட்டானாங்குற கண்ணுல தெரியுற ஒரு ஏக்கம். கடைசி நம்பிக்கை கடைசி கோபம் காமம் செய்ய முடியாத விசயங்களொட வலி இப்படி எல்லாம் அடியழத்துல புதஞ்சு கெடக்குற அந்த பாழடஞ்ச பழுபேறிய கண்கள பார்த்ததுக்கீங்களாஅவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன நிறுத்தி நிறுத்தி மூச்சுவாங்கியபடியே பேசிக்கொண்டிருந்தார் பதற்றம் அவரை முழுதாய் ஆட்கொண்டது. "சிதைல அவங்கள குப்புற போட்டு மண்ண போடும் போது வாய் மூக்குல மண்ணு போக பல்லிளிச்சு கெடக்கும் போது நம்மள பாத்து சிரிக்கும். இந்த உலகத்துல ஒரு இருப்பு இல்லாம போகும் போது அது ஒரு இழப்பு இல்லயா?  அத எப்படி ஏத்துக்கிறது?" இவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று குழந்தை போல கேவி கேவி அழ ஆரம்பித்தார்இருக்கையில் அம்ர்ந்து உள்ளங்கையில் முகத்தை தாங்கி பிடித்தபடி. "oh God why this happened to him ajiiiii…….” என்று விசும்பினார்பதற்றம் மாணவர்களையும் பற்றிக்கொண்டது.

பிண்டத்தின் எலும்புகள் புடைத்து எழும்ப ஆள் அரவமற்ற அந்த சுடுகாட்டில் கஞ்சி குடித்துக்கொண்டிருந்த அவன் சட்டியை கீழே வைத்து விட்டு நான்கு அடி கம்பால் அடித்து பிண்டத்தை உறங்கவைத்தான்காலையில் காடாத்துக்கு வந்த சில்லறையுடன் கருத்த அந்த நெற்றிக்காசயும் எடுத்து திருப்பி திருப்பி பார்த்தபடி சிரித்தான் நெற்றியில்லாத அந்த பிண்டத்தை நினைத்து.

மூன்று ஸ்மிர்ன்ஆப் வோட்கா குவாட்டர் காலி பாட்டில்கள் அவர்கள் இருவரும் பேசுவதை செவிமடுத்து கேட்டுக்கொண்டிருந்தனதுணைக்கு ஒரு பாதி காலியான பாட்டிலும் மதுக்குவளைகழும் வறுத்த ஈரலும் அவைகளை சுற்றுயபடி ஈக்களும் இருந்தனமதுக்குவளைகள் நிரம்பிகாலியாயினஇருவரும் வோட்காவின் கார நெடியை உணர்ந்தனர்இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை.
செத்தேபோனா” விசும்பல் பொங்க அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான். “காலு அப்படியே பொளந்து பொய் கெடந்துச்சு ஒரே ரத்தம் சுத்தி சுத்தி எல்லாரும் ஆம்புலன்ஸுக்கு போன் பன்னி கூப்ட்டாங்க..வந்துச்சு குப்ப காரன் அள்ளுற மாதிரி சாக்குல அள்ளி போட்டு கொண்டு போய்ட்டான்” இன்னொருவன் ஏதும் பேசாமல் தலைகுனிந்தே இருந்தான்குட்டிபோட்ட பூனை ஒன்று குட்டிகளை தூக்கிக்கொண்டு பொந்துக்குள் சென்றுகொண்டிருந்த்து.மீண்டும் அவன் தொடர்ந்தான்  “அவனொட அம்மா….தேடுவாங்கல்ல பையன் வருவான்னு எதிர்பாத்து சோறு வச்சிட்டு இருப்பாங்க ஆனா மூட்டைல கொண்டுவந்து பொத்துனு போடுவான்விசும்பலுடன் சிரித்துக்கொண்டான்ஒரு எழவும் புரியல அவன் கொஞ்சம் மெதுவா வந்துருக்கலாம் மழ பெய்யாம இருந்துருக்கலாம் லாரி மெதுவா வந்துருக்கலாம் அவன் சீக்கிரமே போயிருக்கலாம்ஒன்னுமே நடக்கல துண்டு துண்டா கெடந்தான்இதுக்கு அந்த அம்மவுக்கு கொழந்தவயே குடுக்காம இருந்துருக்கலாம் இல்ல" என்று இன்னொருத்தனின் பதிலை எதிர்ப்பார்த்தவாறு திறக்க மறுக்கும் கண்களை திறந்து மேல் கூரையைப்பார்த்து புளித்த ஏப்பம் ஒன்றை விட்டு ஒக்கரித்தான் "விதி விதி விதி” என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். வெள்ளை மேகங்கள் ரத்த மழை பெய்ய ஆரம்பித்தன உலகமே அதில் நனைந்து கொண்டிருந்த்து விதியின் கண்கள் வானில் ரத்த சிவப்புடன் அவனை நோக்கியது அருகில் இருந்தவன் கண்விழித்து பார்க்கையில் தாய் பூனை ஒரு சுண்டெலியை துரத்திப்பிடித்து கொன்று விளையாடிக்கொண்டிருந்ததுசிகரேட் ஒன்றை பற்றவைத்துக்கொண்டான்அழுது கொண்டிருந்தவன் இன்நேரம் மனைவியுடன் புணர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தவாறு ஆழ்ந்த புகை ஒன்றை வெளியிட்டான்.

இருண்ட அந்த சிறிய அரசு ஆஸ்பத்திரியின் வாசலில் அவன் ஒரு உருவமற்ற பிண்டமாய் இருந்தான்பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்று விழுதுகளை அசைத்தபடி மழை போல இலைகளை உதிர்த்து விளையாடியதுசெத்த இலை ஒன்று பிண்டத்திற்கு துணையாக பீண்டத்தின் மேல் அமர்ந்தது. “சார் என்னோட டியூடி முடிஞ்சது நா கெளம்பனும் சும்மா டார்ச்சர் பண்ணாதிங்கஎனக்கு வீட்டுல நெறைய வேல இருக்கு” என்றபடி ஒட்டமும் நடையுமாக டாக்டர் காரை நோக்கி சென்றார்.
எனக்கு மட்டும் வேல இல்லயா சார்என்னோட கடைசி பஸ்ஸ விட்டுட்டு வந்துருக்கேன்புணத்த வீட்டுக்கா சார் எடுத்துட்டு போக முடியும்கேஸ்னு சும்மா அலையலா முடியாது நல்லது பண்லாம்னு வந்து ஆப்ப எடுத்து நானே சொருகிக்க முடியாது சார்” என்று கூறிய அவன் வேகமாக இருட்டில் இருட்டானான்.

டாக்டருக்கு வந்த போனை எடுத்து பேசயில் ”அப்பா அம்மா வயித்துல இருந்து தம்பி பாப்பா அஜீ வந்துட்டாம்பா சின்னதா கைய கால ஆட்டிடே இருக்கா சீக்கிரம் வா” அந்த ஆலமரத்தின் கீழ் சிறு புல் அரும்புகள் பனித்துளி தாங்கி வளர்ந்திருந்த்து .விட்டில் பூச்சி ஒன்று தேங்கியிருந்த நீரில் செத்து மிதந்தது

Friday 30 March 2018

வாழ்நாளுக்கும்


கடற்கரை நண்டாய் ஒரு நாள். 
நடுக்காட்டில் ஊளையிடும் நரியாய் ஒரு நாள்.
மணல் தேறிக்கும் பாலை வெளியிலே ஊரும் பாம்பாய் ஒரு நாள்.
காற்றை கிழிக்கும் சிறகுடன் ஒரு நாள்.
பிணங்களின் எலும்பை சுற்றிலும் வாலாட்டி ஒரு நாள்.
சோற்று மூட்டை தூக்கும் எறும்பாய் ஒரு நாள்.
தீராது போலும் நிறுத்திக்கொள்வோம் பட்டியல் நீள்கிறது வாழ்நாளுக்கும்.

நம்பமுடியாத கனவு


அந்த நடு இரவில் சைபீரிய பனி ஓலக்காற்றுடன் சுழன்றடித்துக்கொண்டிருந்தது.இலைலகளில்லாத மரங்கள் அந்த ஒற்றையடி பாதையின் இருமருகிலும் நெடுக வளர்ந்திருந்தது. கையில் ஊசலாடும் தீபத்துடன் ஒழுகும் மெழுகுவர்த்தியை பாதுகாப்பாய் பிடித்தவாறு  அந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் இருந்த ஒரு பழைய வீட்டை நோக்கி பனியில் கால் புதைய மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.அழுக்கடைந்த மேல் அங்கியும் வெளிறிப்போன உள்சட்டையும் அணிந்திருந்த அவனின் சாம்பல் நிற தாடி மார்பை தாண்டி வளர்ந்திருந்தது. அந்த வெளிச்சத்திலும் அவன் கண்கண் எதையோ தேடியவாறு அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.முன்னொரு காலத்தில் கடவுளால் பிரசவிக்கப்பட்ட வீடு இப்போது சபிக்கப்பட்டு சுவர் பெயர்ந்து அதில் புழுக்கள் நெளிந்த வண்ணம் இருந்தன. அவன் வீட்டின் அருகே வந்ததும் புழுக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை கண்டு விரிசலுக்குள் பாய்ந்தன ஆனால் விரிசலினுள் அவை சிரிக்கும் சத்தம் அவனுக்கு நன்றாகவே கேட்டது அவனும் பயத்தில் கையில் இருந்த வேட்காவை வாயில் சிறிது திணித்திக்கொண்டான் தாடியில் அவை சிந்தி துளிகளாய் வழிந்தன.வீட்டினுள் நுழைந்தவன் கையில் இருந்த கொஞ்சநஞ்ச வெளிச்சத்தால் வீட்டின் உள் வெளியை சுற்றிப்பார்த்தான். இருட்டில் நிறைய உருவங்கள் அவனுக்கு தெரிந்தன. அழுதுகொண்டு,சிரிந்துக்கொண்டு,ஓலமிட்டுக்கொண்டும், கை கால்களில் விலங்குகளுடன், இருண்ட மூலைகளைப்பார்த்து திட்டிக்கொண்டும் ஆனால் எல்லாம் அரைமுகங்களுடனும் சிதைந்த முகங்களுடனும் இருந்தன. திடீரென அனைத்து பிண்டங்களும் கத்தி அழுதவாறு அவனைச்சூழுந்துகொண்டன.கையில் இருந்த மெழுகுவத்தியை வீட்டின் கூரையைப்பார்த்து தூக்கிப்பிடிக்க ஒழியைப்பிடிக்க அனைத்து உருவங்களும் முண்டியடித்தன.கூரை வெடித்து சிதற இருண்ட வானில்  ஒரே ஒரு நட்சத்திரம் மின்னி மின்னி மறைந்தது.மீண்டும் அந்த உருவங்கள் தங்கள் இடங்களுக்கே சென்று அண்டிக்கொண்டன. சிறிது நேரம் கைகளை இறக்காமல் அந்த நட்சத்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் கையை இறக்கி அவன் முகந்தின் அருகே வைத்தான். எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவனின் முகமும் சிதைந்திருந்தது தெரிந்தது

ஓநாய்களின் நடுவே


எலும்பைத்துளைக்கும் பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவர் பார்வையிலும் அகாலத்திலும் உலகம் வெண்மையாகவே இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது.இலைகளற்ற மரங்களின் கிளைகளில் பனியடர்த்து வயதான கிழவிகள் பிதாவை வேண்டுவது போல பல கைகளை விருத்து நின்றிருந்தன. கால மாற்றம் எதுமே இல்லதவாறு அரை வெளிச்சம் அப்பிகிடந்தது. பனிக்கூடாரத்தின் திரையை அவன் விலக்கியவாறு தலையை மட்டும் வெளியே நீட்டி தெரிந்த நிலைமையை மீண்டும் தெரிந்து கொண்டான். இப்பொதைக்கு இதுதீராது என்ற வெறுப்புடன் மீண்டும் தலையை வெடுக்கென உள்ளே இழுத்துக்கொண்டான்.ஓட்டுக்குள் ஆமை புகுந்தது போல இருந்தது அவன் செய்தது.சூரியனைப்பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் தலைக்கு மேலே சாம்பல் நிற வானம் ஏளனம் செய்து நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது.

கூடாரத்துக்குள் கொஞ்சம் கதகதப்பாகவே இருந்தது. சிறிய அளவு நெருப்புமூட்டி அதி இருவரும் தேனீர் போட்டு குடித்துக்கொண்டிருந்தனர்.இருவரின் ராணுவ உடைகளும் பச்சைநிறம் மாறி வெள்ளை தோல் முளைத்தது போல இருந்தது.தலையை உள்ளெ நுழைத்ததும் கையிலிருந்த அலுமினிய டம்ளரை படார் என்று கீழேவைத் ததான் தேனீர் அவன் கையுறையிலும் டம்ளர் வைத்த மேடையிலும் சிதறியது. கையை உதறியவாற தன் மேல் அங்கியில் இருந்த பனியை தட்டியவாறே “போர் முடிந்ததும் இந்த பிணம் அணியும் நாற்றம்பிடித்த உடைகளை அவிழ்த்தெறிந்து நல்ல மிடுக்கான ஆடைகளை அணிய வேண்டும் இல்லயேல் இந்த பிணங்களுடன் குழியில் இரங்க வேண்டியது தான்” இன்னொருவன் எதும் பேசவில்லை அவன் கையில் இருந்த டம்ளரில் இருந்து ஆவி பறந்துகொண்டிருந்தது அவன் அதன்மேல் நிலை குத்திய பார்வையுடன் இருந்தான். பேசிக்கொண்டிருந்தவன் மறுமொழியை எதிர்பார்த்து  கிடைக்காமல் மீண்டும் தொடர்ந்தான்.”இந்த போர் எனக்கு சலித்து விட்டது திரும்ப திரும்ப ஒரே வேலை” என்று கூறியவாறெ தன் துப்பாக்கியை எடுத்து தன் செல்ல நாயை தடவிக்கொடுப்பது போல தடவினான் பிரித்து மீண்டும் இணைத்தான்.ஏதோ மறந்தவன் போல தன் மேல்கோட்டின் பையிலிருந்தது கசங்கிய புகைப்படம் ஒன்றை எடுத்தான் அதில் அவன் மனைவியும் குழந்தையும் குதூகல சிரிப்புடன் அகன்ற சூரிய வெளிச்சத்தில் ஒரு ஏரியின் முன் நின்றிருந்தனர். மீண்டும் அதை அங்கேயே திணித்துக்கிண்டான்.

எதிரிலிருந்த பீட்டர் வாழ்க்கையின் மொத்த பிடிப்பும் கரைந்தது போல பயத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் நீலநிறக்கண்களில் அதன் கரணங்கள் ஏதும் தெரியவில்லை. இவான் பீட்டரின் தோளைப்பிடித்து உலுக்கியவாறு “என்ன ஆயிற்று உனக்கு பேய் பிடித்து விட்டதா என்ன” என்று முழு நகைச்சுவையையும் உணர்ந்தவன் போல சிரித்துக்கொண்டிருந்தான்.

“இன்று விடியும் பொழுது நான் ஒரு கனவு கண்டேன் நிஜத்தில் நடப்பது போலவே இருந்தது. கனவுதான் என்று முயன்று தடுக்க நினைத்தும் என்னை மீறி அது அரங்கேறிக்கொண்டிருந்தது” என்று பீட்டர் முடிப்பதற்குள் “இங்குதான் சூரியனே வந்து நம்மை வரவேற்பதில்லையே எப்படி விடியல் ஹெ ஹெ ஹெ “ என்று மிருகம் போல சிரித்தான் அதை கவனிக்காதவாறு பீட்டர் தொடர்ந்தான் “முன்பு நாம் எரித்த பிணங்கள் , அதான் விஷவாயு கொடுத்து எரித்த பிணங்கள் என்னை சுற்றி கூட்டமாய் நின்றன. அதன் முகங்களை நான் கவனித்தது கூட இல்லை ஆனால் பரிட்சயமான முகங்கள். இதேபோல் சாம்பல் வெளி சுற்றிலும் பிணங்கள் வேறு ஒன்றுமே இல்லை” அவன் எதோ பிதற்றுவது போல இருந்தது “நான் கையிலிருந்த துப்பாக்கியால் சரமரியாக சுடுகிறேன் அவை பயந்து காலடியில் விழிந்து கதறுகின்றன பனிவெளி முழுவதும் அந்த கேவல் ஒலி நிரம்பியிருந்தது. இடையிடையே தலை தூக்கி அண்டம் பிளக்கும் ஓநாய்களின் ஊளை. செத்த பிணங்களை நான் மீண்டும் மீண்டும் சுடுகிறேன். என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் நான் முழு உடலாலும் குரூரமாக சிரித்துக்கொண்டிருக்கிறேன்” இவான் புன்னகையுடன் “ம்ம்ம் சுவாரஸ்சியமான கனவுதான் அதில் என்ன பிரச்சனை தோழரே” என்று அவனயே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

பீட்டர் பதில்தராமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே தலைமை அதிகாரியின் விசில் சத்தம் கேட்டது இவான் தலை தெறிக்க வெளியே வர பீட்டர் தலை குனிந்தவாறே மெதுவாக வெளியே வந்தான். சுற்றி இருந்த ராணுவ வீரர்கள் பிணம் போல அவனுக்கு கட்சியளித்தனர். தலையை தேய்த்து கண்களை கசக்கிகொண்டான். தெளிந்த நீரில் குமிழ்கள் வருவது போல ஆங்காங்கே கூடாரங்கள் பனிமூடி மௌனமாக காற்றிற்கு ஏற்றவாறு சலசலத்துக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் கிழிசல்களுடன் இருந்தது.

வீரர்கள் சட்டேன தலைமை அதிகாரியை சுற்றி கூட்டம் உருவாக்கியிருந்தர்.அனைவரின் முகங்கழும் குளிருக்கு வெடித்து ரத்தக்கசிவுடன் இருந்தது. அதிகாரி உரக்க கத்தினார் “இன்றுடன் நாம் இங்கிருந்து கிழம்பி தென் பகுதிக்கு செல்ல போகிறோம் மாஸ்கோ நமக்காக காத்திருக்கின்றது.” என்று முடித்து மூச்சு வாங்கிக்கொண்டார் அந்த இடைவெளியில் வீரர்கள் மத்தியில் ஒரு சந்தோஷ சலசலப்பு குட்டையில் வரும் அலை போல பரவியது. மீண்டும் அவர் தொடர்ந்தார் “நம்மிடம் போதுமான அளவு உணவும் எரிபொருளும் இல்லை , பிணக்கைதிகள் நம் எதிர்காலத்தின் மேல் ஏறி நிற்கின்றனர். உக்கிரமான பனிப்புயல் வரலாம் நம்மை எந்த அளவிற்கு பாதுகாத்துக்கொள்கிறோமோ அதுவரை நல்லது புரியும் என நினைக்கிறேன்"

வீரர்கள் சலசலப்புடன் கூடாரத்துக்குள் நுளைந்து துப்பாக்கிகளை எடுத்து சட்டேன ஒரு நீண்ட வரிசையை உருவாக்கியிருந்தனர். தனித்து நின்ற பீட்டர் அதிகாரியின் விறைத்த பார்வையை கணநேரம் சந்தித்து அவனும் கூடாரத்திற்குள் பதறியபடி சென்றான். சுத்தமான ஒழுங்கு அல்லது சாக்கடை போல ஒழுங்கின்மை. குளிருக்காக வீரர்கள் தலையை சாய்த்து கழுத்துடன் நாடி சேருமாறு நின்றனர்.குண்டி மணம் பிடித்த ஆடுகள் போல விரைந்து சிறிது தூரத்தில் இருந்த கிழிசல்கள் படபடத்த கூடாரத்தை அடைந்தனர். அந்த கூடாரம் பருத்து வெடிக்க காத்திருக்கும் மெல்லிய தோல் கொப்பளம் போல இருந்தது. கூடாரத்தின் போர்வையை துளைந்தவாறு பல நூறு தோட்டாக்கள் வெளியெறியவாறு இருந்தன சில நொடிகளில் உள்ளே பலத்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டேயிருந்தது.வீரர்கள் கீழே படுத்திருந்த பிணை கைதிகளை காலால் தட்டித்தட்டி பார்த்தவாறு வெடிச்சிரிப்பு சிரித்தனர். வெளியே வந்த இவான் தலைமை அதிகாரியிடம் “ஏற்கனவே அவை பிணங்களாகிவிட்டன ஒன்றும் செய்வதிற்கில்லை சில தோட்டாக்களை தான் இழந்து விட்டொம்” என்றான் அதிகாரியும் தோட்டாக்கள் முயங்குவது போலவோ விக்கல் எடுத்தவன் போலவோ சிரிக்கலானார்.

வீரர்களின் கால்கள் பனியில் புதைய பூட்ஸில் பனிநொறுங்கும் சத்தம் கேட்டவாறு கூடாரத்தை விட்டு வெளிவேறிக்கொண்டிருந்தனர். பீட்டர் மட்டும் கூடாரத்தின் உள்ளே நின்றுகொண்டிருந்தான் பீணங்கள் போல இல்லாமல் அவற்றின் முகங்கள் அயர்ந்த தூக்கத்தில் கனவுலகில் இன்றுதான் பிறந்து முலைரருந்துவது போல இருந்தது அவனுக்கு.   திடீரென்று கூடாரத்தின் பின்புறத்தில் இருந்து பனியில் வெற்று காலில் வேகமாக நகரும் காலடிச்சத்த்ம் கேட்டதை நோக்கி எல்லா வீரர்களும் தங்கள் துப்பாக்கி முனைகளை திருப்பியவாறு எதை எதற்கு சுடுகிறொம் என்ற நினைப்பேயில்லமல் சுட்டுக்கொண்டிருந்தனர். பனி ஓநாய் ஒன்று சாம்பல் நிற அடர்ந்த பிடரி சிலிர்க்க ஒரு பிணத்தின் கால்களை மூர்க்கமாக கடித்து கூடாரத்திற்கு வெளிவே இழுத்துக் கொண்டொருந்தது.துப்பாக்கிச்சத்தம் கேட்டதும் பின்னங்கால் புடதியில் பட பனியை கிழப்பி மறைந்தது.வீரர்கள் ஆசுவசத்துடன் சுடுவதை நிறித்தினர் ஒருவன் “பசியில் வந்திருக்கும் விரட்டாமல் இருந்திருக்கலாம் என்று” வருத்தப்பட்டுக்கொண்டான் மற்ற வீரர்களின் முகங்களும் அதை பிரதிபலிப்பது போல இருந்தது.

பிணக்குவியல் ஒன்று அசைவதை பீட்டர் கவனித்தான் அவை மொத்தமும் சேர்ந்து ஒரே உடலாக ஒருமாறி எழுவது போல இருந்தது. தலையை தட்டிக்கொண்டான். பிணக்குவியலின் நடுவே இரு உயிருள்ள பனிகோளங்கள் போன்ற கண்கள் அவன் கண்களை சந்தித்தன. அவன் உடல் நடுங்க பின் கழுத்து வியர்த்திருந்தது.மெதுவாக உள்ளிருந்து ஒரு இளம் பெண் மொத்த உடலும் பிணத்திற்கான அடையாளத்துடன் அதே உயிருள்ள கண்களுடன் உப்பிய வயிறுமாக சிவப்பு நிற அங்கியுடன் காற்றில் மிதப்பது போல சத்தமே இல்லாமல் அவனை நோக்கி வந்தாள். அவள் வயிறு மெல்ல தனியாக ஒரு உயிர் அசைவது போல அசைந்து அடங்கியது. அவள் மெல்ல வயிற்றை தடவிக்கொடுத்தாள். அந்த அசைவு அடங்கியது. அவள் பீட்டரின் அருகே வந்து மெல்ல அவன் காதருகே ” எங்களை காப்பாற்று தயவு செய்து நான் வாழ வேண்டும் இதற்காகவாவது நான் வாழ வேண்டும்” என்று வயிற்றை தட்டினாள் அது அவளுக்குவலியை கொடுத்திருக்கும் போல. வலிதாங்காமல் உதட்டை கடித்துக்கொண்டு கீழே விழுந்தாள் தெளிந்த நீரில் வரும் மெல்லிய சலனம் போல “நீ காப்பாற்றுவாய்” என்ற குரல் அவன் காதில் அசிரிரீ போல கேட்டது அது அவள் குரல் போலவும் அல்ல. அவன் காலடியில் அவள் வலிப்பு வந்து கால்கள் இழுத்துக்கொண்டன இரு கைகளையும் விரித்து தனித்துவிடப்பட்ட அவளின் கண்கள் சாம்பல் நிற வானத்தை நோக்கி  கண்கள் எதையோ வினவிக்கொண்டிருந்தன.

அவள் கால்கள் அசையும் ஒலி கேட்டு வீரர்கள் உள்ளே வந்து விட்டிருந்தனர். பீட்டர் அவள் முன் மண்டியிட்டு கதறிக்கொண்டிருந்தான். இவான் அவன் அருகில் வந்து தோழைக்தொட்டு “என்ன ஆயிற்று பீட்டர் அது உன் குழந்தை இல்லையா அவள் வேறுயாருடனோ” என்று கூறி முடிக்க சுற்றி இருந்த கூட்டம் வெடிச்சிரிப்பு சிரித்தது. இவான் கையிலிருந்த துப்பாக்கியை தரையில் ஒரு கையால் ஊன்றியவறு இன்னொரு கையால் வயிறை பிடித்துக்கொண்டு அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். அவள் காலிடுக்கின் வழி சூடான ரத்தம் வெள்ளை பனியில் எதையோ தேடி ஊர்ந்து சென்றது. பீட்டர் தன் கையால் ரத்தத்தை தொட்டு தன் இதயத்தை நனைத்தான். தலை குனிந்தவாறே “ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை… ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை… ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை ….என்று முனங்கிக்கொண்டே எழுந்தான். அவன் கூறியதை யாரும் கேட்டது போல தெரியவில்லை. அந்த சிரிப்பு நீடித்துக்கொண்டே இருந்தது. உள்ளே புதிதாக வந்த ஒரு வீரன் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே அவனும் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

பீட்டர் மெதுவாக நடந்து கூடாரத்தை விட்டு வெளியே வந்தான். இவான் “நாம் எல்லோரும் வேசி மகன்கள் தான் உன் மகனும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று கத்தினான். பீட்டருக்கு அது கேட்டது போல தெரியவில்லை. பனிக்காற்று அவனிடம் ஏதோ கூறிக்கொண்டே இருந்தது அதற்கு அவன் தலையாட்டிகொண்டே இருந்தான் அவன் அதை முழுவதும் ஏற்றுக்கொள்வது போல. வெளியே தலைமை அதிகாரியை வயிற்றில் அதே ஓநாய்கள் ஏதோ தேடிகொண்டிருந்தன அவனை அவை சட்டை செய்யவில்லை. அவன் கூடாரத்தை அடைந்ததும் நிமிர்ந்து படுத்து கூரையை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த உயிருள்ள பனிக்கோளங்கள் கூரையை நிறைத்தன. மீண்டும் அந்த குரல் “நீ காப்பாற்றுவாய்” ஆனால் எந்த முறை ஒரு யானையின் பிளிறல் போல இருந்தது. வெளியே வீசிய பனிக்காற்றுடன் பீட்டரின் கூடாரத்தில் இருந்து ஒரு தோட்டா துப்பாக்கியில் இருந்து எழும் சத்தம் கலந்தது அந்த சூடான ரத்தம் பனியில் ஊர்ந்தது. வீரர்கள் இன்னும் சிரித்துக்கொண்டெ இருந்தனர்