Monday 17 December 2018

வெப்ராளம்


எங்களூரில் பாழடைந்த தேவாலயம் ஒன்று இருந்தது.
மக்கள் இரவு நேரத்தில் அங்கு செல்வதில்லை.
பாதி திறந்த தேவாலயக்கதவு வழி அங்கி சலசலக்க பின்தொடரும் நிழல் போன்ற உருவத்தைக்கண்டு ஜன்னி கண்டவர் பலர்.
அன்றொரு நாள் பெரும் பனி பொழிந்து வானும் மண்ணும் இணைந்து தட்டையானதொரு உலகம் உருவாகியிருந்தது.
கல்லறை தோட்டத்தை தாண்டி நான் நடக்கும் பொழுது அவர்கள் சொன்ன அதே நிழல்  பனிப்பொருக்குகள் சிதற என்னை நோக்கி வந்தது. 
சிக்குபிடித்த தலையும் தாடியும் குழிவிழுந்த மார்புடன் கிழிந்த அங்கியுமாக அவன்  ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்காத குறைதான். அழுது தீர்த்தான். அழுகை நின்றதும் நான் கேட்டேன் ஏன் இந்த வெப்ராளம் என்று. எனைப்பார்க்க யாரும் வருவதில்லை எனக்கு பயமாக இருக்கின்றது என்றான்.
நானும் அவனை தோளோடு சேர்த்து அரவணைத்து என் வரவேற்பறையின் வலதுபுறம் சூரியனைப்பார்த்தவாறு வைத்து விட்டேன். பின்புதான் அவனுக்கும் சமாதானம் கிடைத்திருக்கும். 

No comments:

Post a Comment