Friday 30 March 2018

வாழ்நாளுக்கும்


கடற்கரை நண்டாய் ஒரு நாள். 
நடுக்காட்டில் ஊளையிடும் நரியாய் ஒரு நாள்.
மணல் தேறிக்கும் பாலை வெளியிலே ஊரும் பாம்பாய் ஒரு நாள்.
காற்றை கிழிக்கும் சிறகுடன் ஒரு நாள்.
பிணங்களின் எலும்பை சுற்றிலும் வாலாட்டி ஒரு நாள்.
சோற்று மூட்டை தூக்கும் எறும்பாய் ஒரு நாள்.
தீராது போலும் நிறுத்திக்கொள்வோம் பட்டியல் நீள்கிறது வாழ்நாளுக்கும்.

நம்பமுடியாத கனவு


அந்த நடு இரவில் சைபீரிய பனி ஓலக்காற்றுடன் சுழன்றடித்துக்கொண்டிருந்தது.இலைலகளில்லாத மரங்கள் அந்த ஒற்றையடி பாதையின் இருமருகிலும் நெடுக வளர்ந்திருந்தது. கையில் ஊசலாடும் தீபத்துடன் ஒழுகும் மெழுகுவர்த்தியை பாதுகாப்பாய் பிடித்தவாறு  அந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் இருந்த ஒரு பழைய வீட்டை நோக்கி பனியில் கால் புதைய மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.அழுக்கடைந்த மேல் அங்கியும் வெளிறிப்போன உள்சட்டையும் அணிந்திருந்த அவனின் சாம்பல் நிற தாடி மார்பை தாண்டி வளர்ந்திருந்தது. அந்த வெளிச்சத்திலும் அவன் கண்கண் எதையோ தேடியவாறு அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.முன்னொரு காலத்தில் கடவுளால் பிரசவிக்கப்பட்ட வீடு இப்போது சபிக்கப்பட்டு சுவர் பெயர்ந்து அதில் புழுக்கள் நெளிந்த வண்ணம் இருந்தன. அவன் வீட்டின் அருகே வந்ததும் புழுக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை கண்டு விரிசலுக்குள் பாய்ந்தன ஆனால் விரிசலினுள் அவை சிரிக்கும் சத்தம் அவனுக்கு நன்றாகவே கேட்டது அவனும் பயத்தில் கையில் இருந்த வேட்காவை வாயில் சிறிது திணித்திக்கொண்டான் தாடியில் அவை சிந்தி துளிகளாய் வழிந்தன.வீட்டினுள் நுழைந்தவன் கையில் இருந்த கொஞ்சநஞ்ச வெளிச்சத்தால் வீட்டின் உள் வெளியை சுற்றிப்பார்த்தான். இருட்டில் நிறைய உருவங்கள் அவனுக்கு தெரிந்தன. அழுதுகொண்டு,சிரிந்துக்கொண்டு,ஓலமிட்டுக்கொண்டும், கை கால்களில் விலங்குகளுடன், இருண்ட மூலைகளைப்பார்த்து திட்டிக்கொண்டும் ஆனால் எல்லாம் அரைமுகங்களுடனும் சிதைந்த முகங்களுடனும் இருந்தன. திடீரென அனைத்து பிண்டங்களும் கத்தி அழுதவாறு அவனைச்சூழுந்துகொண்டன.கையில் இருந்த மெழுகுவத்தியை வீட்டின் கூரையைப்பார்த்து தூக்கிப்பிடிக்க ஒழியைப்பிடிக்க அனைத்து உருவங்களும் முண்டியடித்தன.கூரை வெடித்து சிதற இருண்ட வானில்  ஒரே ஒரு நட்சத்திரம் மின்னி மின்னி மறைந்தது.மீண்டும் அந்த உருவங்கள் தங்கள் இடங்களுக்கே சென்று அண்டிக்கொண்டன. சிறிது நேரம் கைகளை இறக்காமல் அந்த நட்சத்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் கையை இறக்கி அவன் முகந்தின் அருகே வைத்தான். எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவனின் முகமும் சிதைந்திருந்தது தெரிந்தது

ஓநாய்களின் நடுவே


எலும்பைத்துளைக்கும் பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவர் பார்வையிலும் அகாலத்திலும் உலகம் வெண்மையாகவே இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது.இலைகளற்ற மரங்களின் கிளைகளில் பனியடர்த்து வயதான கிழவிகள் பிதாவை வேண்டுவது போல பல கைகளை விருத்து நின்றிருந்தன. கால மாற்றம் எதுமே இல்லதவாறு அரை வெளிச்சம் அப்பிகிடந்தது. பனிக்கூடாரத்தின் திரையை அவன் விலக்கியவாறு தலையை மட்டும் வெளியே நீட்டி தெரிந்த நிலைமையை மீண்டும் தெரிந்து கொண்டான். இப்பொதைக்கு இதுதீராது என்ற வெறுப்புடன் மீண்டும் தலையை வெடுக்கென உள்ளே இழுத்துக்கொண்டான்.ஓட்டுக்குள் ஆமை புகுந்தது போல இருந்தது அவன் செய்தது.சூரியனைப்பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் தலைக்கு மேலே சாம்பல் நிற வானம் ஏளனம் செய்து நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது.

கூடாரத்துக்குள் கொஞ்சம் கதகதப்பாகவே இருந்தது. சிறிய அளவு நெருப்புமூட்டி அதி இருவரும் தேனீர் போட்டு குடித்துக்கொண்டிருந்தனர்.இருவரின் ராணுவ உடைகளும் பச்சைநிறம் மாறி வெள்ளை தோல் முளைத்தது போல இருந்தது.தலையை உள்ளெ நுழைத்ததும் கையிலிருந்த அலுமினிய டம்ளரை படார் என்று கீழேவைத் ததான் தேனீர் அவன் கையுறையிலும் டம்ளர் வைத்த மேடையிலும் சிதறியது. கையை உதறியவாற தன் மேல் அங்கியில் இருந்த பனியை தட்டியவாறே “போர் முடிந்ததும் இந்த பிணம் அணியும் நாற்றம்பிடித்த உடைகளை அவிழ்த்தெறிந்து நல்ல மிடுக்கான ஆடைகளை அணிய வேண்டும் இல்லயேல் இந்த பிணங்களுடன் குழியில் இரங்க வேண்டியது தான்” இன்னொருவன் எதும் பேசவில்லை அவன் கையில் இருந்த டம்ளரில் இருந்து ஆவி பறந்துகொண்டிருந்தது அவன் அதன்மேல் நிலை குத்திய பார்வையுடன் இருந்தான். பேசிக்கொண்டிருந்தவன் மறுமொழியை எதிர்பார்த்து  கிடைக்காமல் மீண்டும் தொடர்ந்தான்.”இந்த போர் எனக்கு சலித்து விட்டது திரும்ப திரும்ப ஒரே வேலை” என்று கூறியவாறெ தன் துப்பாக்கியை எடுத்து தன் செல்ல நாயை தடவிக்கொடுப்பது போல தடவினான் பிரித்து மீண்டும் இணைத்தான்.ஏதோ மறந்தவன் போல தன் மேல்கோட்டின் பையிலிருந்தது கசங்கிய புகைப்படம் ஒன்றை எடுத்தான் அதில் அவன் மனைவியும் குழந்தையும் குதூகல சிரிப்புடன் அகன்ற சூரிய வெளிச்சத்தில் ஒரு ஏரியின் முன் நின்றிருந்தனர். மீண்டும் அதை அங்கேயே திணித்துக்கிண்டான்.

எதிரிலிருந்த பீட்டர் வாழ்க்கையின் மொத்த பிடிப்பும் கரைந்தது போல பயத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் நீலநிறக்கண்களில் அதன் கரணங்கள் ஏதும் தெரியவில்லை. இவான் பீட்டரின் தோளைப்பிடித்து உலுக்கியவாறு “என்ன ஆயிற்று உனக்கு பேய் பிடித்து விட்டதா என்ன” என்று முழு நகைச்சுவையையும் உணர்ந்தவன் போல சிரித்துக்கொண்டிருந்தான்.

“இன்று விடியும் பொழுது நான் ஒரு கனவு கண்டேன் நிஜத்தில் நடப்பது போலவே இருந்தது. கனவுதான் என்று முயன்று தடுக்க நினைத்தும் என்னை மீறி அது அரங்கேறிக்கொண்டிருந்தது” என்று பீட்டர் முடிப்பதற்குள் “இங்குதான் சூரியனே வந்து நம்மை வரவேற்பதில்லையே எப்படி விடியல் ஹெ ஹெ ஹெ “ என்று மிருகம் போல சிரித்தான் அதை கவனிக்காதவாறு பீட்டர் தொடர்ந்தான் “முன்பு நாம் எரித்த பிணங்கள் , அதான் விஷவாயு கொடுத்து எரித்த பிணங்கள் என்னை சுற்றி கூட்டமாய் நின்றன. அதன் முகங்களை நான் கவனித்தது கூட இல்லை ஆனால் பரிட்சயமான முகங்கள். இதேபோல் சாம்பல் வெளி சுற்றிலும் பிணங்கள் வேறு ஒன்றுமே இல்லை” அவன் எதோ பிதற்றுவது போல இருந்தது “நான் கையிலிருந்த துப்பாக்கியால் சரமரியாக சுடுகிறேன் அவை பயந்து காலடியில் விழிந்து கதறுகின்றன பனிவெளி முழுவதும் அந்த கேவல் ஒலி நிரம்பியிருந்தது. இடையிடையே தலை தூக்கி அண்டம் பிளக்கும் ஓநாய்களின் ஊளை. செத்த பிணங்களை நான் மீண்டும் மீண்டும் சுடுகிறேன். என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் நான் முழு உடலாலும் குரூரமாக சிரித்துக்கொண்டிருக்கிறேன்” இவான் புன்னகையுடன் “ம்ம்ம் சுவாரஸ்சியமான கனவுதான் அதில் என்ன பிரச்சனை தோழரே” என்று அவனயே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

பீட்டர் பதில்தராமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே தலைமை அதிகாரியின் விசில் சத்தம் கேட்டது இவான் தலை தெறிக்க வெளியே வர பீட்டர் தலை குனிந்தவாறே மெதுவாக வெளியே வந்தான். சுற்றி இருந்த ராணுவ வீரர்கள் பிணம் போல அவனுக்கு கட்சியளித்தனர். தலையை தேய்த்து கண்களை கசக்கிகொண்டான். தெளிந்த நீரில் குமிழ்கள் வருவது போல ஆங்காங்கே கூடாரங்கள் பனிமூடி மௌனமாக காற்றிற்கு ஏற்றவாறு சலசலத்துக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் கிழிசல்களுடன் இருந்தது.

வீரர்கள் சட்டேன தலைமை அதிகாரியை சுற்றி கூட்டம் உருவாக்கியிருந்தர்.அனைவரின் முகங்கழும் குளிருக்கு வெடித்து ரத்தக்கசிவுடன் இருந்தது. அதிகாரி உரக்க கத்தினார் “இன்றுடன் நாம் இங்கிருந்து கிழம்பி தென் பகுதிக்கு செல்ல போகிறோம் மாஸ்கோ நமக்காக காத்திருக்கின்றது.” என்று முடித்து மூச்சு வாங்கிக்கொண்டார் அந்த இடைவெளியில் வீரர்கள் மத்தியில் ஒரு சந்தோஷ சலசலப்பு குட்டையில் வரும் அலை போல பரவியது. மீண்டும் அவர் தொடர்ந்தார் “நம்மிடம் போதுமான அளவு உணவும் எரிபொருளும் இல்லை , பிணக்கைதிகள் நம் எதிர்காலத்தின் மேல் ஏறி நிற்கின்றனர். உக்கிரமான பனிப்புயல் வரலாம் நம்மை எந்த அளவிற்கு பாதுகாத்துக்கொள்கிறோமோ அதுவரை நல்லது புரியும் என நினைக்கிறேன்"

வீரர்கள் சலசலப்புடன் கூடாரத்துக்குள் நுளைந்து துப்பாக்கிகளை எடுத்து சட்டேன ஒரு நீண்ட வரிசையை உருவாக்கியிருந்தனர். தனித்து நின்ற பீட்டர் அதிகாரியின் விறைத்த பார்வையை கணநேரம் சந்தித்து அவனும் கூடாரத்திற்குள் பதறியபடி சென்றான். சுத்தமான ஒழுங்கு அல்லது சாக்கடை போல ஒழுங்கின்மை. குளிருக்காக வீரர்கள் தலையை சாய்த்து கழுத்துடன் நாடி சேருமாறு நின்றனர்.குண்டி மணம் பிடித்த ஆடுகள் போல விரைந்து சிறிது தூரத்தில் இருந்த கிழிசல்கள் படபடத்த கூடாரத்தை அடைந்தனர். அந்த கூடாரம் பருத்து வெடிக்க காத்திருக்கும் மெல்லிய தோல் கொப்பளம் போல இருந்தது. கூடாரத்தின் போர்வையை துளைந்தவாறு பல நூறு தோட்டாக்கள் வெளியெறியவாறு இருந்தன சில நொடிகளில் உள்ளே பலத்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டேயிருந்தது.வீரர்கள் கீழே படுத்திருந்த பிணை கைதிகளை காலால் தட்டித்தட்டி பார்த்தவாறு வெடிச்சிரிப்பு சிரித்தனர். வெளியே வந்த இவான் தலைமை அதிகாரியிடம் “ஏற்கனவே அவை பிணங்களாகிவிட்டன ஒன்றும் செய்வதிற்கில்லை சில தோட்டாக்களை தான் இழந்து விட்டொம்” என்றான் அதிகாரியும் தோட்டாக்கள் முயங்குவது போலவோ விக்கல் எடுத்தவன் போலவோ சிரிக்கலானார்.

வீரர்களின் கால்கள் பனியில் புதைய பூட்ஸில் பனிநொறுங்கும் சத்தம் கேட்டவாறு கூடாரத்தை விட்டு வெளிவேறிக்கொண்டிருந்தனர். பீட்டர் மட்டும் கூடாரத்தின் உள்ளே நின்றுகொண்டிருந்தான் பீணங்கள் போல இல்லாமல் அவற்றின் முகங்கள் அயர்ந்த தூக்கத்தில் கனவுலகில் இன்றுதான் பிறந்து முலைரருந்துவது போல இருந்தது அவனுக்கு.   திடீரென்று கூடாரத்தின் பின்புறத்தில் இருந்து பனியில் வெற்று காலில் வேகமாக நகரும் காலடிச்சத்த்ம் கேட்டதை நோக்கி எல்லா வீரர்களும் தங்கள் துப்பாக்கி முனைகளை திருப்பியவாறு எதை எதற்கு சுடுகிறொம் என்ற நினைப்பேயில்லமல் சுட்டுக்கொண்டிருந்தனர். பனி ஓநாய் ஒன்று சாம்பல் நிற அடர்ந்த பிடரி சிலிர்க்க ஒரு பிணத்தின் கால்களை மூர்க்கமாக கடித்து கூடாரத்திற்கு வெளிவே இழுத்துக் கொண்டொருந்தது.துப்பாக்கிச்சத்தம் கேட்டதும் பின்னங்கால் புடதியில் பட பனியை கிழப்பி மறைந்தது.வீரர்கள் ஆசுவசத்துடன் சுடுவதை நிறித்தினர் ஒருவன் “பசியில் வந்திருக்கும் விரட்டாமல் இருந்திருக்கலாம் என்று” வருத்தப்பட்டுக்கொண்டான் மற்ற வீரர்களின் முகங்களும் அதை பிரதிபலிப்பது போல இருந்தது.

பிணக்குவியல் ஒன்று அசைவதை பீட்டர் கவனித்தான் அவை மொத்தமும் சேர்ந்து ஒரே உடலாக ஒருமாறி எழுவது போல இருந்தது. தலையை தட்டிக்கொண்டான். பிணக்குவியலின் நடுவே இரு உயிருள்ள பனிகோளங்கள் போன்ற கண்கள் அவன் கண்களை சந்தித்தன. அவன் உடல் நடுங்க பின் கழுத்து வியர்த்திருந்தது.மெதுவாக உள்ளிருந்து ஒரு இளம் பெண் மொத்த உடலும் பிணத்திற்கான அடையாளத்துடன் அதே உயிருள்ள கண்களுடன் உப்பிய வயிறுமாக சிவப்பு நிற அங்கியுடன் காற்றில் மிதப்பது போல சத்தமே இல்லாமல் அவனை நோக்கி வந்தாள். அவள் வயிறு மெல்ல தனியாக ஒரு உயிர் அசைவது போல அசைந்து அடங்கியது. அவள் மெல்ல வயிற்றை தடவிக்கொடுத்தாள். அந்த அசைவு அடங்கியது. அவள் பீட்டரின் அருகே வந்து மெல்ல அவன் காதருகே ” எங்களை காப்பாற்று தயவு செய்து நான் வாழ வேண்டும் இதற்காகவாவது நான் வாழ வேண்டும்” என்று வயிற்றை தட்டினாள் அது அவளுக்குவலியை கொடுத்திருக்கும் போல. வலிதாங்காமல் உதட்டை கடித்துக்கொண்டு கீழே விழுந்தாள் தெளிந்த நீரில் வரும் மெல்லிய சலனம் போல “நீ காப்பாற்றுவாய்” என்ற குரல் அவன் காதில் அசிரிரீ போல கேட்டது அது அவள் குரல் போலவும் அல்ல. அவன் காலடியில் அவள் வலிப்பு வந்து கால்கள் இழுத்துக்கொண்டன இரு கைகளையும் விரித்து தனித்துவிடப்பட்ட அவளின் கண்கள் சாம்பல் நிற வானத்தை நோக்கி  கண்கள் எதையோ வினவிக்கொண்டிருந்தன.

அவள் கால்கள் அசையும் ஒலி கேட்டு வீரர்கள் உள்ளே வந்து விட்டிருந்தனர். பீட்டர் அவள் முன் மண்டியிட்டு கதறிக்கொண்டிருந்தான். இவான் அவன் அருகில் வந்து தோழைக்தொட்டு “என்ன ஆயிற்று பீட்டர் அது உன் குழந்தை இல்லையா அவள் வேறுயாருடனோ” என்று கூறி முடிக்க சுற்றி இருந்த கூட்டம் வெடிச்சிரிப்பு சிரித்தது. இவான் கையிலிருந்த துப்பாக்கியை தரையில் ஒரு கையால் ஊன்றியவறு இன்னொரு கையால் வயிறை பிடித்துக்கொண்டு அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். அவள் காலிடுக்கின் வழி சூடான ரத்தம் வெள்ளை பனியில் எதையோ தேடி ஊர்ந்து சென்றது. பீட்டர் தன் கையால் ரத்தத்தை தொட்டு தன் இதயத்தை நனைத்தான். தலை குனிந்தவாறே “ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை… ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை… ஆம் அது என் குழந்தை இல்லை அது கடவுளின் குழந்தை ….என்று முனங்கிக்கொண்டே எழுந்தான். அவன் கூறியதை யாரும் கேட்டது போல தெரியவில்லை. அந்த சிரிப்பு நீடித்துக்கொண்டே இருந்தது. உள்ளே புதிதாக வந்த ஒரு வீரன் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே அவனும் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

பீட்டர் மெதுவாக நடந்து கூடாரத்தை விட்டு வெளியே வந்தான். இவான் “நாம் எல்லோரும் வேசி மகன்கள் தான் உன் மகனும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று கத்தினான். பீட்டருக்கு அது கேட்டது போல தெரியவில்லை. பனிக்காற்று அவனிடம் ஏதோ கூறிக்கொண்டே இருந்தது அதற்கு அவன் தலையாட்டிகொண்டே இருந்தான் அவன் அதை முழுவதும் ஏற்றுக்கொள்வது போல. வெளியே தலைமை அதிகாரியை வயிற்றில் அதே ஓநாய்கள் ஏதோ தேடிகொண்டிருந்தன அவனை அவை சட்டை செய்யவில்லை. அவன் கூடாரத்தை அடைந்ததும் நிமிர்ந்து படுத்து கூரையை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த உயிருள்ள பனிக்கோளங்கள் கூரையை நிறைத்தன. மீண்டும் அந்த குரல் “நீ காப்பாற்றுவாய்” ஆனால் எந்த முறை ஒரு யானையின் பிளிறல் போல இருந்தது. வெளியே வீசிய பனிக்காற்றுடன் பீட்டரின் கூடாரத்தில் இருந்து ஒரு தோட்டா துப்பாக்கியில் இருந்து எழும் சத்தம் கலந்தது அந்த சூடான ரத்தம் பனியில் ஊர்ந்தது. வீரர்கள் இன்னும் சிரித்துக்கொண்டெ இருந்தனர்