மனிதன் வாழ்வது நம்பிக்கையின்பால் தான் கட்டியெளுப்பிய இந்த நிலத்தில் மீதே. அதன் அடித்தளம் நகரும்போதெல்லாம் அவன் சந்தேகங்களுக்கும் அலைச்சலுக்கும் உள்ளாகிறான். அந்த நம்பிக்கையின் உச்சக்கட்டமே கடவுள் உருவகம். நம்மை படைத்து காத்து நமக்கு கேட்டதைகொடுத்து நம்மேல் நிற்கும் ஒரு ஆற்றல். அதன் வடிவங்கள் பல. சாதரண மனிதனுக்கு கடவுளின் தேவை அவ்வளவே. அதன் நிலை பிறளும் போது ஏற்படுதே நாத்திக மனநிலை. விஞ்ஞானி கோவிந்த் நமக்கு அந்த நிலையிலேயே அறிமுகம் ஆகிறான். விஞ்ஞானி என்ற பட்சத்திலேயே எல்லா சக நிகழ்வுகளுக்கும் காரணம் மனிதன் என்று ஒத்துக்கொள் எனும் நிலைக்கு அவனை தள்ளுகிறது. அது தன் கைகளில் இல்லை என்பதை உணரும் தருணத்தில் இறுதியில் கூறுகிறான் "கடவுள் இல்லைனு யாருங்க சொன்னது இருந்தா நல்லாருக்கும்" அது அவனுடைய அவநம்பிக்கையில் இருந்து அவன் சந்தேகிக்கவே வழி இல்லாத ஒரு ஆற்றலை எதிர் நோக்கிச்சொல்லும் பாதை , அல்லது ஒரு கண நேர உணர்வெழுச்சி.
ஆம் இது தசாவதாரம் திரைப்படத்தின் அனுபவங்கள் , என்னளவில் அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருந்து வந்துள்ளது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. ஆனால் அதன் கதை சொல்லி தன் வழியில் போகுற போக்கில் சில கதாபாத்திரம் வழி சொல்லிச்சென்ற தருணங்களை மட்டும் குறிப்பிட நினைக்கிறேன். இதனை இலக்கியம் வழி பலர் சொல்லிச்சென்ற பின்னனும் அதன் கூறு முறையும் அதன் தொகுப்பு முறையும் இந்த திரைப்படத்தை முக்கியமான ஒன்றாக மாற்றுவதாக நினைக்கிறேன்.
தலித் மக்களில் ஒருவராக மண்ணிற்காக போராடும் பூவாராகன்.தலித் அரசியலை தமிழ் வெகுஜன மக்களிடம் பேசிய அல்லது அதற்கு முயன்ற முதல் திரைப்பட கதாபாத்திரம். தலித்துக்களின் சுடுகாடு இல்லாமலாக்கப்படும்பொழுதும். பட இறுதியில் பாட்டி தன் மடியில் வைத்திருக்கும் நிலையில் அவள் பெருமாளை கவனிக்க வில்லை அது ஒரு பொருட்டே அல்ல அவளுக்கு. தன் மகன் கரு நீல மணிவண்ணன் நீலக்கடலில் பள்ளி கொண்டிருக்க அங்கு தீட்டு இல்லை அவனே அவள் கடவுள். முக்கியமாக ஒரு தலித் அங்கு கடவுளாக்கப்படுகிறான். அது ஒரு குறியீடாக என்னுள் நின்றது.
உலக அரசியலைப்பற்றி வெகுஜன மக்களிடன் பேசிய முதற்படமும் அதுவே என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஜனாதிபதிக்கு உப்பின் வேதியல் பொருள் தெரியவில்லை ஆனால் அவருக்கு அணுகுண்டு போட உத்தரவிடும் அதிகாரம் இருக்கின்றது. இறுதிகாட்சியில் ஜப்பானும் அமெரிக்காவும் மோதிக்கொள்வது நாடகியலாகா திணிப்பாக இருந்தாலும் அதுவும் நம் மக்களுக்கு புதிதே. சாதரணமாக புஷ் அந்த "பயோ ஆயுதம்" இருக்கும் விமானத்தை இந்தியா செல்லட்டும் அப்படியே விட்டுவிடு என்ற தோரனையில் சொல்லும் காட்சி போகுற போக்கில் வந்து செல்கின்றது. அமெரிக்காவோ அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு அமைப்பும் எடுக்கும் சாதரண முடிவுகளே அவை போன்றவை. முஸ்லீம்கள் அனைவரும் நம் அதிகாரத்தின் தளத்தில் பொது மக்களின் தளத்தில் எங்கு நிற்கின்றனர் என்பதையே கலிஃபுல்லா கான் கதாபாத்திரம் வழி காட்டுகிறார்.
கடவுள் மூலமே தொடங்கும் இக்கதை கடவுளிலேயே முடிகின்றது. ஆண்டாள் கதாபாத்திரம் இன்னொரு பக்கம் இருந்து தீட்டு என்று பேசும் பொழுது கோவிந்த் அதனை தன் கிண்டலாக பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் அதனை சொல்லியே கடக்கிறான். ஆனால் பெரியார் அடையாத ஒரு வேளை தன்னுள் மறைத்த ஒரு நிலையாகவே படத்தில் இறுதியில் கோவிந்த் சொல்லும் வசனம் "கடவுள் இருந்தால் நால்லாருக்கும்" என்பது போல தோன்றுகிறது.
"உங்க பாட்டி மாதிரிதா உன்னோட கடவுளும் , ரெண்டு பேருக்கும் உள்ள ஒன்னும் இல்லை" கடவுளின் , தற்செயல்களின் தொடர்ச்சியை அறிய இயலா மனம் கொள்ளும் ஒரு கோபமே கடவுள் மறுப்பு. சொல்லப்போனால் நாத்திகர்களே சிறந்த ஆத்திகர்கள் ஆக வரம் பெற்றவர்கள்.
No comments:
Post a Comment