வரலாறு அதன் போக்கில் நகர்கிறது அதற்கு ஒரு சரியான வழிமுறைகளோ அல்லது முன்னே இழுத்து விடப்பட்ட ஆட்டு மந்தைகளின் நேர்க்கோட்டு பாதைகளோ இல்லை. அதன் சம்பவங்களின் தொடரானது நாம் நினைக்கும் ஓர் தனிமனிதனின் சிந்தனை ஓட்டத்தாலில்லை. அதன் ஆதி அல்லது சக்தி அறியமுடியாதது. அப்படியானால் பாதிக்குமேற்பட்ட பிரஞ்சுப்படைகளின் இறப்பிற்கும் , பிரஷ்யாவின் , ஆஸ்த்ரியாவின் தோல்விக்கு , மாஸ்கோ எரிக்கப்பட்டதற்கு காரணம் யார் ? , அந்த தனிமனிதன் இல்லையெனில் அது எங்கிருந்து பிறக்கிறது. இந்த கேள்வியை நாம் கேட்டுக்கொண்டோமானால் நாம் டால்ஸ்டாயின் நெப்போலியனை நெருங்கி மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து விலகி உணர்ந்துகொள்ளலாம்.
இந்த அணுகுமுறையிலேயே டால்ஸ்டாய் நெப்போலியனை நெருங்குகிறார். முழுமையான தன் அகங்காரம் கொண்டவன் என்றொ , புரட்சியை உருவாக்கியவன் என்றோ , குன்றாத வீரன் என்றோ , ஐரோப்பாவின் ரட்சகர் என்றோ , சத்தியத்தை நிலைநாட்டவந்தவன் என்றொ அவர் நினைக்கவில்லை. அவன் ஒரு பிரபஞ்ச ஆலமரத்தின் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு பச்சை இலை என்ற அளவில் மட்டுமே சேர்த்துக்கொள்கிறார். அவர் நாவல் முழுக்க எழுப்பும் கேள்விகள் நெப்போலியன் மீது உலகம் அப்பொழுது கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிறது. அல்லது டால்ஸ்டாயின் சித்தாந்தம் அதனை ஏற்க மறுக்கிறது.
நெப்போலியன் எனும் மாவீரன் என்ற கருத்திற்கு டால்ஸ்டாய் பின்வறுமாறு கூறுகிறார் , "போலந்திலும் பிரஷ்யாவிலும் தன் மாவீரத்தினால் வென்றவன் ஏன் ருஷ்யாவில் தோற்று பின்வாங்க வேண்டும் , எங்கே அந்த வீரம் எங்கு சென்றது மற்றும் பிரஞ்சு தேசத்தின் சமுதாய முன்னேறத்திற்காக தர்மத்தின் வழி உருவாகி வந்தவன் ஏன் மற்ற தேசங்களில் கொலைக்களங்களை உருவாக்க வேண்டும்". இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அவர் நெப்போலியனை ஒரு சாதாரண சிப்பாய்க்கும் வித்தியாசம் இல்லை என்பதை நிறுவுகிறார். இந்த தகவல்கள் அனைத்தும் ஆசிரியர் நேரடியாகவே வாசகனுடன் பகிர்கிறார். ஒரு கட்டுரை வடிவத்தில் , இது நாவலுக்கு ஒரு தடை என்ற போதிலும் அனைத்து வரலாற்று ஆசிரியர்களின் நோக்கையும் விலக்கி ஒரு முழு புதிய பாதையை நம் முன் வைக்கின்றது. (காந்தி இந்த போக்கை முற்றிலும் உணர்ந்தவர் என்றே எண்ணத்தோன்றுகிறது. வரலாற்று ஓட்டத்தில் தன் நிலை என்ன என்பதை உணர்ந்த ஒரு தீர்க்கதரிசியாக அவர் எல்லா போராட்டங்களிலும் பங்காற்றியுள்ளார்)
நெப்போலியன் கூறும் உத்தரவுகள் பாராடினோவில் போர்க்களத்தை சென்று சேரும்பொழுது அவர் கூறியதற்கு நேர்மாறாக பிரகடனப்படுத்தப்படுகிறர்து. ஆனால் அதே ஆள் ஆஸ்டர்லிஜ்ஜில் கூறிய உத்தரவுகள் மூலமாகவே அவர்கள் வெற்றிபெற்றனர் எங்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள் இந்த முரண்பாடை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதில் எங்கு நெப்போலியனின் மாவீரம் உள்ளது என்பதே அவரின் கேள்வி.
நீட்சேவின் அதிமனிதன் என்னும் கருதுகோள் அவருக்கு ஒரு நிரூபிக்கமுடியாத உண்மையே. ஒரு தனிமனிதன் மொத்த வரலாற்றின் ஓட்டத்தை கைகொள்வான் என்பது ஒரு குழந்தை வேண்டுமானால் நம்பும் ஆனால் நான் அதற்கு ஆளில்லை என்பது போல கூறுகிறார் டால்ஸ்டாய்.
தாஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிகாவை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அவன் செய்யும் குற்றம் கொலை , அதன் நோக்கம் என்று அவன் தன்னை அறிவுறுத்திக்கொள்வது "அவள் ஒன்றிற்கும் உதவாத பேன் போன்றவள். அவளால் இந்த உலகத்திற்கு தொல்லை மட்டுமே. ஒரு நல்ல செயலுக்காக அவளை நான் கொன்றேன் இதில் என்ன தவறிருக்கிறது" இதற்கு அவனுக்கு உந்து சக்தியாக இருப்பது நெப்போலியன் எனும் கருதுகோள். அவனின் மாவீரம் , செய்த போர் , கொன்றோளித்த மக்கள் எல்லாமே ஒரு நல்ல செயலை , ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவே. இதை அவன் பலமாக நம்புகிறான். அதுவே அவனை கொலை செய்ய தைரியப்படுத்துகிறது , மனசாட்சியும் அதை ஏற்றுக்கொள்கிறது.
இதை நாம் உலகின் அனைத்து மாவீரர்களின் ரத்தக்கறைக்கு சமானப்படுத்த முடியும். ஸ்டாலின் , மாவோ , ஹிட்லர் என்று அனைவரும் விரும்பியது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது என்பதுதான். ஆனால் அவர்கள் கைகள் ரத்தக்கறைகளுடன் இருக்கின்றன. ஒரு வேளை நெப்போலியன் , ஸ்டாலின் , ஹிட்லர் அனைவருக்கும் ஒரு சிறு தருணம் , தன் மனசாட்சியைத்திறக்கும் சோனியா போன்றோரு பேரொளி கைகளில் கிடைத்திருந்தால் அவர்கள் தங்கள் அகங்காரக்கண்கள் குருடாக மனம் திறந்த்திருக்குமா! என்று எத்தனிக்கிறார்.
தாஸ்தாவெஸ்கி நீட்சேயின் அதிமனிதன் என்னும் கருத்தை நம்புகிறார். ஆனால் அதன் மற்றோருபக்கத்தைப்பார்க்கும் பொழுது அது அழுக்கடைந்து பிணவாடையுடன் கிடக்கின்றது. அந்த மனிதனுக்கு நான் ஒரு ஒளியைக்கொடுத்தால் என்னவாகும் என்று எண்ணிப்பார்க்கிறார்.
No comments:
Post a Comment