அவர்கள் நண்பர்களாய் இருக்க வேண்டிய காரணங்கள் முடிந்து போய் ஓர் வெறுமையான சூழலில் நின்ற தருணமது. சதீஸின் கண்கள் குஞ்சுள்ள கோழிகளின் சிவந்த கோபக்கண்களுடன் ஹரியை நோக்கி நகரும் கணம் , அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தின் ஹரியும் கண்களை அகலவிரித்து கழுத்தை நொடித்து கன்னங்களில் குழிவிழ சிரித்து சமாளிக்க முயன்றான். இருவருக்குமிடையில் அப்படி பெரிய நட்பொன்று முன்பிருந்தே இல்லை என்பது இருவரும் அறிந்து ஒத்துக்கொண்டதே. ஆனால் இந்த தருணம் அவர்களை மேலும் விலக்கி தூரமாக்கி வைத்துவிடும் சக்தி படைத்தது. பெஞ்சின் கீழ் பத்திரமாக வைத்துசென்ற செருப்பை பகுமானமாய் எடுத்து திருடி மறைத்து வைத்ததே ஹரியின் ஆகப்பெரிய குற்றம். திருட்டு எதுவாகிலும் திருட்டு திடுட்டே என்ற திருட்டு அப்பன் சொல் கேட்டு வளர்ந்த சதீஸ் இந்த செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முகாந்தரம் ஒன்றுமேயில்லை என்ற நிலையில்தான் ஹரியை முறைத்து கேள்விகளை கேட்க தொடங்கினான். அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு 'பி' பிரிவில் இந்த மகா சம்பவம் நடந்து கொண்டிருப்பது சுற்றியுள்ள ஒருவருக்கும் தெரியாது. பள்ளியே கூச்சல்களால் நிரம்பியிருந்த மதிய இடைவேளையில் இவர்களின் சத்தம் கேட்பது கஷ்டம்தான் என்பதும் நாம் புரிந்து கொள்ளக்கூடியதே.
கேள்விகள் ஆரம்பமாயிற்று , "லேய்...எனக்க செருப்ப நீ களவாண்டு வச்சிருக்க...தராலண்ணா டீச்சர்ட்ட போவேன் பாத்துக்க" இது ஓர் தொடக்க நிலை மிரட்டல் மட்டுமே. போலீஸ்காரர்களை அழைக்கலாம் என்பதும் அவனின் மறைக்கப்பட்ட பிரம்மாஸ்திரம்.
"மக்கா...இது எனக்குள்ள செருப்பு....நேத்தைக்கு சாயிங்காலம் அம்மா முக்கு கடையில வாங்கிதந்தா..உனக்குள்ளது எங்கண்ணு க்ரௌண்டல போய் தேடி பாப்பப்பமா?" இது ஓர் உத்தி தன்னை அவன் புறம் உதவிக்காக நிறுத்தி பரிந்து பேசி காரியத்தை கச்சிதமாக முடிப்பது.
"அத கழத்தித்தா....அதுல அடையாளம் வச்சிருக்கேன்." என்று எக்காளப்பார்வையில் சிரித்தான். தன் களவு போன பொருள் திரும்ப வந்துவிடும் என்பதில் நம்பிக்கை குறைவில்லை என்பதன் வெற்றி வெளிப்பாடு.
"இந்தா பாத்துக்கோ" கையில் குடுத்தால் அது பொருள் கைவிட்டு போனதற்கு சமானம் என்பதை ஹரி அறிவான் அதனால் தள்ளி நின்று கைகளில் செருப்பை ஏந்தி காட்டினான். அதன் பின்புறம் ஒட்டியிருந்த என்னமோ நாற்றமெடுக்கவே முகத்திலிருந்து விலக்கிக்கொண்டான். ஆனால் பிடி மணரபிடியாக இருந்தது.
கைகளில் தராததே சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி சதீஸை நிலைகொள்ளாமல் தவிக்கவிட்டது. உண்மையில் அந்த அடையாளத்தை காணவில்லை, பென்சிலால் அன்று காலை எழுதிய அவன் பெயர் செருப்பின் வெள்ளைப்பரப்பிலில்லை. அச்சரியம் தாங்காமல் அவன் கண்களின் நீர் நிரம்பியது. அடையாளங்களற்ற பொருள் பொதுவானது என்பதை அவன் அம்மா மூலம் அறிந்திருந்தான். அதானல்தான் என்னமோ அவளை அப்பாவும் சித்தப்பாவும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த நினைப்பு அவனை அலைக்களித்தது."நீ அளிச்சிருப்ப.... உன்னப்பத்தி தெரியும்ல.....தந்துரு இலண்ணா டீச்சர்ட்ட சொல்லிக்குடுத்துருவேன்"
டீச்சரிடம் சென்றால் பொருள் கிடைக்காது. அவளுக்கு என்னைப்பற்றி தெரியும். "நம்ம க்ரௌண்ட்ல போய் பாப்பம்.....நீ சோறு திங்கும்போ அத களத்தி வச்சிதான் திம்ப.....அங்கதாம்ல இருக்கும்....வா போவோம்" சாதுரியமாக சதீஸை கடத்தி க்ரௌண்டிற்கு அழைத்துச்சென்றான். கையிலிருக்கும் செருப்பை தக்கவைத்துக்கொள்ளவில்லை என்றால் அம்மா இன்னொரு செருப்பு வாங்கித்தர போவதில்லை. அடி பிரித்து விடுவாள். அப்பா குடித்து வந்து கொஞ்சி தலையை தடவிக்கொடுத்து கையில் காசில்லை என்பார். இதுவே தருணம் தொலைந்தது மீண்டும் கிடைக்கப்போவதில்லை. இதுவே உன்னுடைய செருப்பு.
கீழிருந்து மேலாக விரிந்து கிடந்த க்ரௌண்டில் கொச்சங்காய் மற்றும் வளராத தேங்காய் கூடுகள் பந்தாய் உருமாற கால்பந்து விமர்சையாக பல அணிகள் பல பந்துகளேன நடந்து நிரம்பியிருந்தது. அவர்கள் இருவரும் அதனுள் நுளையும்போதே ஹரி கண்டுவிட்டான் , அவன் ஒற்றைச்செருப்பு கோல் போஸ்டினுள் நுளைந்து ஒரு கோல் ஆகியது. இன்னொறை காணவில்லை. சோறு தின்றுவிட்டு செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டான். செருப்பை கண்டதும் திருட்டு நடந்ததை மறந்து தன் உண்மையான செருப்பை எப்படியாவது கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று ஓட்டம் பிடித்தான். சதீஸ் அவன்பின்னால் போனதில் ஆச்சரியமில்லை. அந்த செருப்புக்கால்பந்தாட்ட கூட்டத்திடம் ஹரி கெஞ்சியும் அவனுக்கு கிடைக்கவில்லை. பந்தை பிடுங்க வந்தவர்களன நினைத்த விளையாட்டுக்காரர்கள் அவனை விரட்டியடித்துவிட்டனர்.
அழுதான் , கெஞ்சினான் கிடைக்கவில்லை. சதீஸுக்கு மகிழ்ச்சி , அவனே ஒத்துக்கொண்டான். திருட்டு நடந்திருக்கிறது அதனை கண்டுபிடித்தாகிவிட்டது. பொருள் கையகப்படுத்தப்பட வேண்டும். சதீஸ் "உனக்க செருப்ப தொலச்சிட்டு எனக்குள்ளத களவாண்ட்ருக்க. திருப்பி தந்துரு". மூச்சுக்காட்டாமல் ஹரி அதனை திருப்பிக்கொடுத்தான். இரக்கம் மேலெள சதீஸ் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு கைக்கு வந்ததே லாபமென்று வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.
ஹரி அமைதியாக காத்திருந்தான். எச்சில் சோற்று குவியல்களில் காகங்கள் இருந்து எழுந்தன. முழு இட்லியை காகம் தூக்கிச்செல்வதை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தான். அப்பொழுது வந்த ஞயாபகம் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. இந்த கூட்டம் விளையாடி முடித்ததும் என் ஒரு செருப்பு கிடைத்துவிடும் ஆனால் இன்னொன்று அதனை மறந்து விட்டேனே என்று அங்கலாத்தான். ஒருமுறை க்ரௌண்டை சுற்றி வந்தால் அவன் சீணித்து வீழ்ந்து விடுவான் ஆனால் அதனை சட்டை செய்யாமல் மொத்த சக்தியையும் கூட்டி இன்னொரு செருப்பை தேடி துற்றியலைந்தான் , கிடைத்த ஒன்றை கண்ணில் வைத்துக்கொண்டே...வெயில் மண்டையை பிளந்தது.
------
அன்று மதியம் சாவகசமாக வகுப்பில் நுளைந்து ஈரக்கையை சட்டையில் துடைக்கும்பொழுது மண்டையில் கல் விழுந்தது போல துடித்தான். கால்களில் செருப்பில்லை அறையிலுமில்லை. சரிதான் இது இந்த மாசத்தின் இரண்டாவது செருப்பு. பள்ளி முழுவதும் கால்தடம் பதியாத இடமில்லை எனுமளவுக்கு அலைந்தான் செருப்பு கிடைக்கவில்லை. அக்காக்கள் ஒன்றுக்குவிடும் இடத்தினுள் நுளைந்ததால் அடிதான் கிடைத்தது. அழுதான் வியர்த்தான் துவண்டான். கடைசியில் மீண்டும் வகுப்பிற்கு வந்து சேரும் பொழுது அவனுக்காக காத்திருந்ததைப்போல பெஞ்சுக்கு அடியில் கிடந்தது அதே அளவுள்ள அழகு வெள்ளை நிற லூணார்ஸ். போட்டுப்பார்த்தான் கச்சிதம். தன்னுடையது என நம்ப ஆரம்பித்து பத்து வினாடிக்குள் நம்பிவிட்டான். அலைச்சலுக்கும் வெயிலுக்கும் கடவுள் தந்த பரிசென்று கைகூப்பி தொழுதான். ஒரு கடவுளும் நினைப்பில் வராமல் செருப்பே வந்தது. அதையே தொழுது பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
------
இன்னொரு செருப்பு கிடைக்கவில்லை. கிடைத்தவரை சந்தோசமென்று பழைய பந்தான செருப்பை எடுக்கச்சென்றான். அம்மாவிடம் சமாளிக்க ஓர் கதையை உருவாக்கிக்கொண்டான். கழட்டி வைத்திருந்த செருப்பை காக்கா தூக்கிச்சென்று விட்டது. அனேகமாக அது இட்லி என்று நினத்திருக்க வேண்டும் என்பது மேலதிக பதிலாக வைத்துக்கொள்ளலாம். இட்லியை தூக்கும் காக்கா அதே அளவு அல்லது அதற்கும் குறைவான எடையுள்ள செருப்பை கண்டிப்பாக தூக்கும். காரணம் தயாரானதில் மகிழ்ச்சி. அதும் சில நிமிசங்கள் தான் தொடர்ந்தது , பந்து செருப்பை வார் வேறு செருப்பு வேறென்று பிய்த்து விட்டனர் பாவிகள். துக்கம் பெருந்துக்கம் , எல்லாமே இருட்டிக்கொண்டு வந்தது. நடக்க முடியாமல் நடு க்ரௌண்டில் சப்பென்று அமர்ந்தெவிட்டான். சுற்றி அலைந்த விளையாட்டுக்காரர்களின் சத்தம் அடங்கி "ஒரு பொருளு.....ஒரு பொருளு உருப்படியா வைக்க தெரியா.....உயிரெடுக்கதுக்குண்ணே அப்பனும் மகனும் பொறப்பெடுத்து வந்துருக்கு செய்ய்ய்..." என்ற அம்மாவும் குரல் மட்டுமே கேட்டது. கூட்டத்தின் ஆரவாரத்தில் அவன் அழுகை அடங்கிப்போனது. மணலின் விழுந்த விழிநீர் துளிகள் நொடி பொறுக்காமல் கரைந்து மறைந்தன. மூச்சு முட்டியது. சரியான நேரத்தில் மணி அடித்தனர். மற்ற மாணவர்கள் தேன்சிட்டுகளென விருட்டென வகுப்பு நோக்கி பறந்தனர். தன்னிலைக்கு வரவேண்டிய கட்டாயத்தை மணிச்சத்தம் நினைவுறுத்தவே தொங்கிய கைகள் கால்முட்டில் இடிக்க புழுதி படிந்த சட்டையுடன் நத்தையென நடந்தான்.
சதீஸின் அருகில் அமரும் பொழுது அவன் முகத்தை நோட்டம்விட்டான். களிப்பில் பொங்கியிருந்தது. ஆனால் உண்மையில் சதீஸ் வருத்தப்பட்டான். திருட்டு பொய் எல்லாம் நினைவுக்கு வர இரக்கத்தை துடைத்து காலுக்கடியிலிருந்த பையில் முடிந்து வைத்தான்.
காலம் மெதுவாக செல்ல வேண்டும் என்று ஹரி நினைத்தது இவ்வொரு தருணத்தில் மட்டுமே. தண்டனைகளை தள்ளிப்போடுதல். ஆனால் உள்ளூர அதற்காக மனம் ஏங்கியது. என்ன சொல்ல போகிறாள் , எதை வைத்து அடிப்பாள் , எப்படி நழுவி தப்பிக்கலாம் எனப்பல மனதில் குதியாளம் போட்டு கிடந்தன. அழகம்மாள் டீச்ரின் கம்பும் அவனை அந்த என்ணத்தொடர்ச்சியிலிருந்து விலக வழி செய்யவில்லை. அம்மாவின் ஏச்சும் பேச்சும் அடியும் சகித்துக்கொள்ளலாம் ஆனால் அழுகை , அதனை அவனால் சகித்துக்கொள்ள முடியாது. கன்னத்தில் உப்புத்தடம் அப்படியே இருக்கும். துடைக்க நேரமின்றி அப்படியே விழுந்து விடுவாள். திருடியதற்கு கிடைத்த தண்டனையாக இருக்கலாம் , ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டிருந்தால் காக்காயை வைத்து தப்பித்திருக்கலாம். எல்லாமே இப்பொழுதான் தோன்றுகிறது. அழிக்க முடியாத காலத்தில் அவன் செருப்புகள் தொலைந்ததை நினைத்து அழுதான்.
மதியம் இரண்டாம் பீரியட் முடிந்ததும் சத்துணவம்மா தங்கம் ஓர் தங்கமான செய்தியுடன் வந்தாள்.
"சத்துணவு சாப்புடுக பிள்ளேள் வரணும்.....பாயசம் குடுக்கோம்" என்றதும் பிள்ளைகள் காலமற்று . இன்றலர்ந்த பூக்களென மலர்ந்து எழுந்தனர். அனைவரது மனங்களும் உச்சாடனம் செய்தது. பேச நினைத்த அனைத்து விசயங்களும் பாயசத்தை நோக்கிச்சென்றன. விதிவிலக்கில்லை சதீஸும் ஹரியும் பாயசத்தின் இனிப்பையும் அதில் கிடக்கும் முந்திரியை எப்படி பங்கு போட்டுக்கொள்வதென்றும் பேசிச்சிரித்தனர். காலம் பாயசத்தில் வழுக்கி சென்று கொண்டிருந்தது.
எதிர் எதிர் வரிசையாக அமர்ந்த இருபதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு அலுமியப்பாத்திரத்தில் பருப்பு குறைந்த டால்டா மிதக்கும் பாயாசம் நிறைந்தது. பேச்சின்றி மூச்சின்றி ஒரு மிடறு உள்செல்ல பின் இருவருக்கொருவர் முகச்செய்களை மட்டும் காட்டி உறுஞ்சி தட்டை நக்கி துடைத்தனர். அடுத்த முறை வருமா என்று ஏங்கி நிற்கையில் இல்லை என்பது போல அண்டா பைப்படியில் தண்ணீர் குடித்து நின்றது. கைக்கழுவி சட்டையில் துடைத்து நடந்தனர். சதீஸும் ஹரியும் நெருங்கிய நண்பர்களாக உணர்ந்தனர். ஒருவர் கைக்குள் இன்னொருவரின் கையிருந்தது.
"செருப்பு கெடைக்கலையா...."
"இல்ல....என்ன செய்ய...."
"ஒண்ணு செய்வோமா....."
"என்ன....."
"எனக்குள்ள ஒரு செருப்ப நீ கொண்டு போ...."
"இன்னொரு செருப்புக்கு என்ன செய்வ..."
"எதாவது சொல்லிக்கலாம்...."
"இப்படி சொன்னா ஒரு பிரச்சனையும் வராது அடியும் நமக்கு கெடைக்காது.."
"என்ன சொல்ல...."
ஹரி கைகாட்ட சதீஸ் பார்த்தான். காக்கா ஒன்று இட்லியை கவ்விக்கொண்டு பறந்தது. இருவரும் கோரசாக "பாவம் காக்கா...." என்றனர்.
No comments:
Post a Comment