Sunday 9 May 2021

பூதம் - சிறுகதை

அந்த அறை குளிர்ந்திருந்தது. சாந்து பூசப்படாத சுவர்களில் செங்கல் சில்லுகள் சில இடங்களில் பெயர்ந்திருந்தன. மொசைக் தரையின் வெண்மை நிறம் மங்கி மஞ்சளாகியிருந்தது. இடைவெளி விட்டு வரிசையாக போடப்பட்ட கட்டில்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நோயாளிகள் படுத்திருந்தனர். விட்டத்தில் தொங்கிய மின் விசிறியின் அங்கலாய்ப்பில்லா சுழ்ற்சியை பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன்.


அது ஜெயின் சமூகத்தினர் கட்டிய மனநல காப்பகம். அனைவரும் இலவசமாகவே தங்கியிருந்தனர். தொண்ணூறு விழுக்காடு நோயாளிகள் தெருவிற்கு விடுவதற்கு பதில் அங்கு விடப்பட்டவர்களே. ஒருமுறை நோயாளி ஒருவன் அங்கு கொண்டுவரப்பட்டு கரண்டி வைத்து வளித்து எடுத்த கருத்த அழுக்கை சாக்கில் கட்டியதாக செவிலியர் பேசிக்கொண்டனர்.


சாய்ந்திருந்ததில் முதுகில் குத்திய செங்கல்களின் நெருடலில் முதுகை நகர்த்து தோதான இடத்திற்கு கொண்டு சென்றான். வெள்ளை நிற அங்கி துவைத்து சுத்தமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக காலை எழுந்ததும் தன்னை தேடிவருவதாக சொல்லியிருந்த ஊடகக்காரர்களை இன்றும் வாசலைப்பார்த்தவாறு தேடிக்கொண்டிருந்தான். "இன்று அவர்கள் வரவாய்ப்பிருக்கிறது" என்று வாய்விட்டு சொன்னான். மற்ற நோயாளிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தூக்கத்திலிருப்பது போலிருந்தது. அவன் எதிர்பார்த்தது போல அவர்கள் வராமல் அடுத்த நாளே வந்தனர். அவர்கள் வந்திருந்தது ஒரு பேட்டிக்காக. எங்கோ பல கோடி மக்கள் அதனை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக சொன்னது கிருபாகரனுக்கு வியப்பாக இருந்தது. நம்மை அவ்வளவு பேர் பார்க்க போகிறார்கள் என்பது ஆர்வமும் அந்த பேட்டியில் ஈடுபாடும் தருவதாக இருந்தது. கேளள்விகளை அவனே கற்பனை செய்து அதற்கு பதில் கூறுவது போல இயல்பாக அரைநாள் தனக்குத்தானே கட்டிலின் இருபுறமும் மாறி மாறி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை வெளிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் அங்கிருக்கும் நோயாளிக்கே சாதாரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனுக்கு அது சாதரணமானதே.


தென்னந்தோப்பிற்கு நடுவே அமைந்திருந்த அந்த விடுதியின் நீண்ட ஒற்றை நோயாளிகள் அறையை தவிர்த்து இடதுபுறம் கடைசியில் இருந்தது சமையலறை. வலது புறம் நீண்ட குளியல் மற்றும் களிப்பறை. நோயாளிகளுடன் சேர்த்து அங்கு பத்து பேர் இருந்தனர். சுற்றியிருந்த தொன்னைகள் தலை சுழற்றி ஓலை உதிர்த்து நிறைய பேசிக்கொண்டிருந்தன. வெயில் புள்ளி புள்ளியாகவே தோல் நோய் போல தரையில் விழ முடிந்தது. அதன் வாசல் முற்றத்தின் இருபுறமும் பூச்செடிகள் தொட்டிகளில் இருந்தன. அத்தனையும் வெள்ளை ரோஜா செடிகள். முற்றத்தில் வந்து நின்ற பைக்கிலிருந்து இருவர் இறங்கி வந்தனர். வண்டி நின்றது தென்னையின் பேச்சொலி மட்டுமே கேட்டது. இரு சிறிய கேமராக்களை எடுத்துக்கொண்டு முற்றத்தை தாண்டி அந்த அறைக்குள் நுளைந்தனர்.


"வாங்க இந்த பக்கம்" என்று கைகாட்டி உள்ளே அழைத்து சென்றார் வாசலில் நின்றிருந்த செவிலியர். நோயாளிகள் சந்தேகப்பார்வையுடன் வந்த இரு இளைஞர்களை கவனித்தனர். முட்டிவரை காற்சட்டையும் டீ சார்டும் அணிந்திருந்தவர்களுக்கு  புருவங்களில் ஒரே போல வெட்டிருப்பது நோயாளிகளுக்கு வித்யாசமாக இருந்தது. தலையை திருப்பி மீண்டும் அவர்களின் மேன நிலைக்கு திரும்ம்பினர். வரவேற்புக்கு எதிர் புன்னகையாக இருவரும் காட்டிக்கொண்டிருந்தனர்.


அவர்களின் ஒருவன் "ஸ்ரீ கிருஷ்ணா" என்றதும் கிருபாகரனிடம் அழைத்துச்சென்றனர்,


"ஆக்டர் சார். உங்கள பாக்க வந்துருக்காங்க" என்று பொய் மரியாதையுடன் குனிந்து நின்றான் ஒரு செவெலியன். கிருபாகரன் அதற்கு பதில் சொல்லவில்லை. முதுகை நகர்த்தி மற்றொரு இடத்தில் பொருத்திக்கொண்டான்.


"வணக்கம் சார். உங்கள பாத்ததுல சந்தோசம். மூவிங்க் மைண்ட்ஸ் அப்படினினு ஒரு சானல்ல இருந்து வந்திருக்கோம். உங்களோட பேட்டி ஒண்ணு கெடச்சா ரொம்ப நல்லாருக்கும்" என்று பிளந்த வாயை அப்படியே பற்களை காட்டி சிரிப்பை ஒட்டவைத்து நின்றான் ஒருவன். மற்றொருவன் கேமராவை இணைத்து பேட்டியை தொடங்க தாயாராகிக்கொண்டிருந்தான்.


"கண்டிப்பா...நானும் பேட்டி குடுத்து ரொம்ப நாள் ஆகிடிச்சு"


"நீங்க கடைசியா கொடுத்த பேட்டி எப்ப"


"நான் குடுத்து ஒரு பத்து வருசம் இருக்கும்"


"அப்போ பத்து வருசமா இங்கதான் இருக்கிங்க"


"ஆமா என்னோட கடைசி படத்துக்கு அப்பறமா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க"


"நீங்களே வந்துட்டீங்களா"


"ஆமா , நானே வந்தேன். வெளில இருக்க முடியல. எல்லா விசயங்களும் பயமுறுத்துச்சு"


"உங்ககூட தொடர்புல இருக்க யாரு இருக்காங்க"


"யாரும் இல்லதான். அப்போ இருந்தாங்க"


"அப்படி இருந்த ஒருத்தங்க இப்பொ இறந்துட்டாங்க. அது விசயமாதான் நாங்க சில கேள்விகள் உங்கள கேட்கலாம்னு இருக்கோம். பின்னாடி அத ஒரு டாகுமெண்ட்ரியா அத கொண்டுவரலாம்"


"யாரு இறந்தது"


"மேனகா. ஆக்ட்ரெஸ் மேனகா. ரெண்டு நாளைக்கு முன்னாடி தற்கொல பண்ணிக்கிடாங்க"


ஒரு கேமராக்கள் ட்ரைபாடின் மேல் நிறுத்தி எதிர் எதிர் கோணங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.


"ஆமா..அவ அப்பவே இறந்திருக்கணும். இவ்வளோ நாள் தாக்குப்பிடிச்சதே பெரிய விசயம். என்னோட கடைசி படம்தான் அவளுக்கு கடைசி. நல்லா நடிப்பாண்ணு சொல்லமுடியாது. சொல்லப்போனா டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட்தான் நடிச்சிருந்தாங்க எங்க படத்துலலாம். நாங்க வெறுமனே வருவோம் வாய என்னமாம் அசைபோம். கடைசியா அவங்க பேசி படத்த உருவாக்குவாங்க. இதுக்குண்ணே குளோஸப் சாட்ஸே கிடையாது எங்க ரெண்டு பேருக்கும்.. ஆமா எப்படி தற்கொல பண்ணிக்கிட்டா"


"தூக்கு சார். அவங்க பூர்வீக வீட்டுல. போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்ல கடைசி கொஞ்ச நாளாவே சாப்பிடனு போட்டுருக்காங்க. எழும்பி தூக்கு போட்டுக்கிட்டததுக்கு சத்து இருந்ததே ஆச்சரியம்னு சொன்னங்க"


"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு சொன்னத நெறைய பேரு தப்பா மட்டும்தான் புரிஞ்சுக்கிறாங்க. எது வருதோ அதுல முயற்சி பண்ணலாம். சும்மா கையிலெடுத்ததுல முயற்சி , இவள மாதிரி பண்ணுனா சாகத்தான் வேணும். இங்க என் கூட வந்திருந்தா சாப்பாடு கெடச்சிருக்கும். பசியில்லாம செத்துருக்கலாம். கொஞ்சம் மண்டைக்கு சரியில்லாம போகணும். கண்டிப்பா அவளுக்கு அதே நிலமதான் இருந்திருக்கும். நான் வந்துட்டேன் அவ வரல. இப்பொ பாருங்க தூக்குல தொங்கும் போது பசியா இருந்தா எவ்வளவு கஷ்டம். ரெண்டு வேதன. ரெண்டு பேரும் கடைசியா படம் சேர்ந்து நடிக்கும் போது நான் நேரடியாவே சொல்லிட்டேன். இந்த நடிப்பு உங்களுக்கு வரல. வேற எதுலயாம் போய் பொழச்சிக்கோங்கண்ணு. அந்த படத்துல நடிச்சதோட சரி. அதுக்கப்பறம் பேச்சு கிடையாது.”


“உங்களோட நடிப்பு அனுபவத்த சொல்லுங்க”


“கையில காசில்லாம மூட்ட தூக்கிட்டு இருந்தேன். உருவத்த பாத்து நடிக்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. எனக்கும் நடிப்ப பத்தி ஒண்ணும் தெரியாது. நிக்க சொன்ன நிப்பேன் ஓட சொன்னா ஓடுவேன். அதுதான் என்னோட நடிப்பு. டைரக்டர் சொல்றதுதான் வேத வாக்கு. அதோட சரி. மொதல் படத்துடல நான் நானாவே இருந்தேன் மூட்ட தூக்குனேன் சண்ட போட்டேன. எடுத்து ஒடச்சேன். அடுத்தடுத்த படங்கள்ல அந்த மாதிரி நடிக்க வாய்ப்பு கிடைக்கல. சட்ட பாண்ட் போட்டு ஸ்கூலுக்கு போகுற மாதிரி நடிக்க சொன்னங்க. காலேஜ பாத்ததேயில்ல , அங்க கொண்டு போயி காதலிக்க மாதிரி நடிக்க சொன்னாங்க. எல்லாம் செஞ்சும் வசனம் பேச வரல ரெண்டாவது படத்துலயே ரொம்ப கஸ்டப்பட்டங்க. மூணாவ்தும் கடைசி படத்துல மொத்தமும் போச்சு. என்னவிட அந்த டப்பிங்க் ஆர்ட்டிஸ் காசு நிறைய கேட்டுருக்காரு. அதுக்கு அப்பறம் படம் வர்ல. நானும் இங்க வந்துட்டேன்”


“ஊருல போய் பழைய தொழில பாத்துருக்கலாம்ல”


“அதயும் சொஞ்சி பாத்தாச்ச்சு. ஒரருத்தரும் வேல தரல. தொணக்கு அங்க யாருமில்ல. அப்படியே இங்க வந்துட்டேன்”


“உங்களுக்கும் ஆக்ட்ரஸ் மேனாகவுக்கும் தொடர்பு இருந்ததாகவும் நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் வாழ்ந்ததாகவும் சொல்லுறாங்க உண்மையா?”


“தொடர்பு இருந்துச்சு ஆனா சேர்ந்துலாம் வாழல். சும்மா திரிஞ்ச அவளையும் புடிச்சு நடிக்க வச்சாங்க. இது பெரிய வாய் பொளந்த பூதம் மாதிரி. கொசு நொளஞ்சா தெரியவா போகுது இல்ல அது செத்தாதான் தெரியவா போகுது. பூதத்த பாத்தா நமக்கு ஒரு பிரமிப்பு வரும் கூடவே ஒரு ஆச்சரியமும் வசீகரமும் வரும். அதோட நீண்ட பல்லும் பெரிய தொப்பையும் முண்ட கண்ணும் தோள்ல படர்ந்து கிடக்குற சடையும். சாதரணாம பாக்க முடியாத ஒண்ணில்லையா. அத எப்புடி விட முடியும். சினிமா பாக்குற எல்லாருக்குமே அந்த எண்ணமிருக்கும். பாரதிராஜா பாண்டியன பாத்த மாதிரி நம்மையும் பாத்துற மாட்டாங்களாண்ணு. எனக்கு அது அமஞ்சது. நடிச்சேன். அவளுக்கும் அது அமஞ்சது. எங்கள புதுசா காட்டி அவங்க பேரு வாங்குனாங்க பணம் சம்பாதிச்சாங்க. எங்களுக்கும் அந்த பூதத்த கண்ணுல காமிச்சு விட்டுட்டாங்க. அவ பாத்தது மாதிரி நான் அந்த பூதத்த பாக்கல. ஒருநாள் ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி சொன்னா “இத விட்டு நான் போறதாயில்ல. இது ஒரு பெரிய கனா மாரில்லா இருக்கு. இலங்கைல அக்தியா இருந்த கழுதைக்கு இந்த கனா எவ்வளோ பெரிசு. அத விட்டுற முடியாதுல்ல. எல்லாரும் பாக்க நான் முன்னாடி அவ்வளோ பெரிய திரைல நிக்கும் போது நான் எங்கயோலா இருக்கேன். காலுக்கு கீழ மத்த எல்லாரும்”


“என்ன மாதிரி தொடர்புனு சொல்ல முடியுமா”


“ரெண்டு பேரும் பேசிக்கிறதுக்கு நெறய விசயம் இருந்துச்சு. ரொம்பவே பயந்துட்டு இருந்தோம். வாழ்க்கை எப்புடி போகும்னு தெரியல. வருசத்துக்கு ஒரு படம்னு மூணு வருசம் சேர்ந்து இருந்த்தோம். முன்னாடி பெரிய பெரிய விசயங்கள் நடக்கும் போது நாங்க பூச்சி மாதிரி காத்துல ரெக்க அடிச்சிட்டு இருந்தோம். நிக்க இடம் இருக்க்காது. திடீர்னு வர்ர எதுமே நமக்கு ரொம்பவும் புடிச்சு போயிருது. கஷ்டமான விசயங்கள் கூட. அம்மா அப்பா செத்து போனா…நாம எதாவது வண்டில அடிபட்டு விழுந்தா கூட சந்தோசமா இருக்கும்னு தோணுது. அப்போ எங்க ரெண்டு பேரையயும் முதல் படத்துல நடிக்க வச்சாங்க எங்களொட முகம் எல்லா பக்கமும் தெரிஞ்சது. அதுல நாங்க முங்கி எழுந்தோம். எழும்பும் போது நாங்க பழைய ஆட்கள் இல்ல. திரும்பவும் பழைய இடத்துக்கு போகவும் முடியல. நான் போக முயற்சி பண்ணேன் அவ அதுக்கு எதும் பண்ணல. இதுலையெ முங்கி இருக்க நெனச்சா. மொத்தமா முக்கி அழுத்திரும்ணு சொன்னேன் கேக்கல. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே முகம். விரும்பாம எங்களுக்கு ஒட்ட வச்சது. அதுனாலேயே எங்கள மத்தவங்க சேத்துக்கல தனியானோம் அதனால நாங்க சேர்ந்தோம். அதுல ஒரு திருப்தி இருந்துச்சு நம்ம நாமே ஓத்துக்கிறது. நாம நமக்குள்ளே போய்க்கிறதுல இருக்கிற நிம்மதி. அதுதான் எங்களுக்குள்ள இருந்த தொடர்பு. நான் சினிமால இருந்து வெளியேறணும்னு சொன்னதும் விலக ஆரம்பிச்சுட்டா. எங்க முகம் மாறிடிச்சு. துண்டா வெட்டிக்கிட்டா. என்னால தொடர்பு கொள்ளவே முடியல”


“உங்களால எப்படி சினிமா விட்டு வர முடிஞ்சது. நீங்க ரெண்டு பேருமே ஒரெ நேரத்துல அறிமுகம் செய்யப்பட்டு சினிமா உங்களுக்குள்ள வந்திருக்கு” அந்த இளைஞன் பேச்சை முடிக்கும் முன் கிரபாகரன் பேச ஆரம்பித்தான்.


“கடைசி படத்துக்காக எங்க ரெண்டு பேரையும் ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிடு போனாங்க. பெரிய மலைகள ஒட்டி கடற்கரை. கடலுக்குள்ளையும் அதே மாதிரி மலைகள் ஒண்ணு ரெண்டு தனியா நின்னுட்டு இரூந்துச்சு. ரெண்டு நாள்ல அந்த பாட்டு எடுத்துட்டு தெரிஉம்ப வரணும். 12 மணிநேரம் போய் இறங்குனதும் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சூரிய உதயம் அஸ்தமனத்துல எடுக்குறதா இருந்தாங்க. எங்க ரெண்டு பேரையும் கிறிஸ்டீன் கண்லாயணா உடைல கொண்டு போனாங்க. கருப்பு கோட்டு என்னோட நெறத்துகு ஒத்துப்போய் வெள்ள உள்சட்ட மட்டும் தெரிஞ்சது”

“நான் அந்த பாட்ட பல தடவ பாத்துருக்கேன் சார். எனக்கூ ரொம்ப பிடிச்சது அதுல வர சூரிய உதயமும் அஸ்தமன்மும்”


அதனை கிருபாகரன் கண்டுகொள்ளவில்லை. தடைபட்ட பேச்சை மீண்டும் தொடர்ந்தான். 


“அவளோட வெள்ள கவுண் காத்துல பறந்தது. எங்க ஊர்ல கிருண்னன் கோவில் தெப்பகுளம் ஒண்ணு கோவிலுக்கு பின்னால இருக்கும். தணுத்த கருப்பச்சை. அது அவளோட நெறம். அந்த உடுப்பு அவளுக்கு ரொமபவே ஒத்துப்போச்சு. சாதரணமா சிரிக்க மாட்ட சினிமா ஷூட்டிங்ல அந்த மொகத்துல பல்லு தெரியும். வெள்ள மீனு துள்ளி வர்ரது மாதிரி. காலைல கடற்கரையோர மலைகள்ல ஒண்ணுல உச்சில உக்கந்துருந்தோம். சூரியன் வெளில வரும்போது மேகம் எதுமேயில்ல. அப்பொதான் அவ சொன்னா “பூதம்”. நான் என்னனு கேட்கவும். சூரியன கைகாட்டி “அது விழுங்குது உன்ன என்ன” அப்படின்னு சொன்னா. கடல் நீரோட விளிம்பு வானத்தோடு இணையுற இடத்தில் சூரியன் இளஞ்சிவப்பா நின்று எரிஞ்சது திறந்த வாய்க்கு நடுவுல. நாங்க நிண்ணு பாத்தோம். அந்த காட்சி அதுதான் காரணம்”


“அப்பறமா சினிமா வேண்டாம்னு முடிவு பண்னிட்டீங்களா”


“அந்த படம் சரியா போகல….அதுக்கு அப்பறாம ரெண்டு பேருக்கும் படம் வரல. நான் ரெண்டு வருசம் பாத்துட்டு இங்க வந்துட்டேன். அவ அனியாயமா இப்போ செத்துட்டா. என் கூட வந்துருக்கலாம்”


“இல்ல நீங்க சினிமால இருந்து வெளில வந்து அத சாதாரணாமா எடுத்துக்கிட்டீங்கனு சொன்னீங்க”


“ஆமா…அது சாதாரணமான விசயம்தான் அதுக்கு நீங்க சில விசயங்கள் செய்யனும் அத தொடர்ச்சியா பண்ணினா எல்லாமே சாதாரணம் தான்”


“உங்கள ஏன் இந்த விடுதிக்கு கொண்டு வந்தாங்க”


“சாதாரணமான விசயங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய கட்டாயமில்ல. நான் அந்த பூதத்த கொல்ல நெனச்சேன். சின்ன சின்னதா ஆக்காம அத கொல்ல முடியாது. ஒரு நாளைக்கு ஒரு சின்ன உருவம்னு சொன்னுட்டு இருக்கேன். அது வளந்துட்டே போகுது. ஒரு நாள் அத கொண்ணு முடிச்சிரலாம். அப்போ மொத்தமா அந்த பூதத்திட்ட இருந்து தப்பிச்சு வந்துரலாம்”


என்று சுவரின் பின்னால் காட்டினான். கரித்துண்டுகளால் குழந்தை கிறுக்கல் போல வரைந்திருந்த சின்ன உருவங்கள். சுவர் முழுவதும் பரவியிருந்தது. ஒரு நிமிடம் போதும் அவை ஒன்று சேர்ந்து பெருத்த உருவம் கொள்வதற்கு. அந்த கிறுக்கல் பூதத்தின் கழுத்தில் கோடு வரையப்பட்டிருந்தது. வாய் பிளந்திருக்க அதன் நடுவில் வட்டமாக கரி அடர்த்தியாக வரையப்பட்டிருந்தது.


மேனகா ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு எழுதியிருந்த அனுப்பப்டாத கடிதங்களை காட்டாமல் அப்படியே உள்ளே வைத்தான் அந்த இளைஞன். அதிலும் சுவரில் இருந்ததைப்போல சின்ன பூதங்களின் உருவங்கள் தலை வெட்டப்பட்டு வரையப்பட்டிருந்தது.


“உங்களோட நேரத்திற்கு நன்றி. ஒளிபரப்பானதும் கொண்டு வந்து காட்டுறேன்”


“நன்றி. என்ன ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன் அப்படினு அறிமுகப்படுத்துங்க”


“கண்டிப்பா”


கேமரா கருவிகள் எடுத்து பைக்குள் வைத்து திரும்பும் போது ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன் சுவரில் அடுத்த பூதத்தின் படத்தை வரைய இடம் தேடிக்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment