Sunday 9 May 2021

யெந்தை பெருந்துயர் பொய்தானோ - சிறுகதை

புகை மண்டிய சுடுகாட்டில் மயான சுடலை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தவண்ணம் கையில் மணிக்கம்புடன் நின்றது. அதன் காலடியில் சுப்பிரமணி விழித்துக்கொண்டபோது பின்னிரவாகியிருந்தது. விழித்திருந்த அவன் மனம் மீண்டும் புகைத்தாலென்ன என்று எண்ணியது. உடல் அசதியுடன் இருந்ததால் அந்த நினைப்பை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தான். மயிலின் அகவலொன்று அவனை எழுந்து அமரச்செய்தது. அங்கு எரியும் பிணம் அவன் குழந்தை கண்ணம்மாவினுடையது. கைகளில் ஏந்த பயந்தான் அவள் பிறந்த கணத்தில். அவன் முரட்டு கைகள் பிஞ்சை துன்புறுத்திவிடக்கூடாது என்பதில் கருத்தோடிருந்தான். கைகளில் வந்ததும் அசையாமல் அவன் சிவந்த கண்களையே பார்த்துக்கொண்டொருந்தாள். அந்த கண்கள் களைத்திருந்ததை அவள் அறிவாள். தொடர்ந்த உழைப்பு மற்றும் அலைச்சலால் அவன் உடல் சரிவர இயங்காமல் துவண்டிருந்தது. ஆனால் மனம் விழிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. செல்வி வீட்டிலேயே பிரசவம் பார்த்துவிட்டிருந்தாள். மருத்துவச்சி வரவில்லை. நின்று உலக்கையில் மாவிடிக்கையில் கண்ணம்மா முன்னுக்கூட்டி இறங்கி வந்து விட்டிருந்தாள். சேலையில் தாங்கிப்பிடித்தவாறு அப்படியே கால்நீட்டி சாய்ந்து பெற்றெடுத்தாள். அந்த அலறலில் அருகிலிருப்பவர்கள் வந்திருந்தனர்.


பிணம் எரிந்து எலும்பு புடைத்திருந்தது. வெட்டியானை காணவில்லை. அடித்து கீழே தள்ளி மீண்டும் தூங்க வைக்க வேண்டும். நினைத்துக்கொண்டான் "நான் இங்கு வராமல் வேறொங்கோ சென்றிருக்கலாம். இல்லை இதனை நான் பார்க்க வேண்டும் அவள் எரிவதை. கரங்கள் துடிப்பதை எலும்பு புடைப்பதை அதற்காகத்தான் செல்வி சொல்லியும் நான் இங்கோயே தங்கிவிட்டேன்" கைகால்கள் நடுக்க அவன் பொட்டலத்திலிருந்த துகள்களை எடுத்து சிலும்பியில் வைத்தான். சிதைச்சுவாலையே அதனை பற்ற வைக்க எம்பி வருவது போலிருந்தது. அவன் எழுந்து அதனை நோக்கிச்செல்லும் பொழுது அதுவரை தூங்கிக்கொண்டிருந்த வெட்டியான் எழுந்து சுப்பிரமணியை பிடித்து சுடலை கோவிலின் திண்டின் அமர்த்தினான்.


சிலும்பி பற்றி எரியவும் மீண்டும் அவளின் நினைவுகள் இறந்த அழுகிய உடலின் எழும் புழுக்கள் போல எழுந்து வந்தன. தக்குத்தானே வாய்விட்டு பேசுவது போல புலம்ப ஆரபித்தான்.


"நான் தந்தை , கொடுக்க வேண்டியவன். இங்கிருந்து அவளை அணைத்து அணிவித்து உணவளித்து கைப்பிடித்து கொடுத்து மார்பில் கண்ணீர் சொட்ட வாசலில் நின்று அழ வேண்டியவன். ஆனால் இதோ இந்த பிணம் இங்கு கிடந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது. கையாலாகத ஓர் அப்பன். நீ இருப்பதும் இறப்பதும் ஒன்றெனச்சொல்கிறது. உண்மைதான். நான் இழி பிறப்பே. எழுத்தென்றும் , சமூகமென்றும் , இலட்சியமென்றும் கற்பனையில் உன்னை விட்டுவிட்டேன். சுத்த சாமானியன் நான் என்பதை மறந்து விட்டேனடி கண்ணம்மா. என் மறதிக்கு யார் காரணம். நானே. பொருளீட்ட வழியில்லா ஈனன். பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. சீ...வெட்கங்கெட்ட பேச்சு. இதோ இதுவே ஸ்தூல உலகம். என் கண்களுக்கு தெரிவது." என்று சிதையை சுட்டி எழுந்து நின்றான். படுத்திருந்த வெட்டியான் தலை தூக்கிப்பார்த்து மீண்டும் படுத்தான். சுப்பிரபணி அமர்ந்து பின் தொடர்ந்தான் "சுற்றமும் நண்பும் போ...போ..என்றன....புகழ்ந்தவன் கதவடைத்தான்...இங்கு நான் பாவியல்லவா கண்ணம்மா...உங்கள் உயிரெடுக்கும் பாவி....நிறைவென்று மகிழ்வென்று சொல்ல என்னவிருக்கிறது உங்களுக்கு....பொன்னில்லை பொருளில்லை சோறில்லை....பசியில் விட்டுவிட்டு என்ன கவிதை எழுத்து...அசிங்கம்....நான் கடமை தவறியவன்...இதோ இங்கு ஓர் இழிந்த அப்பனாய் உன் முன் நிற்கும் இந்த சுப்பிரமணியாகிய நான் சாகத்தகுதியுள்ளவன். காலா உனை காலால் உதைப்பேனென்று சொல்லகூடியன் தான். ஆனால் காலன் வரும்பொழுது பயந்து ஒடுங்கிக்கொள்வேன். எல்லாம் கவிதை எழுத்து பொய் அபத்தம். அந்த கணம் வாழும் நான் வெளிவந்ததும் வெறும் சக்கை புழுத்த மரம்" என்று திண்ணையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான். மாடன் அமைதியாக நின்றான் வருத்தப்பட்டது போல தெரியவில்லை. சிதைக்கு பின்புறம் ஓடிய ஆற்றில் நீர் நிறைந்திருந்திருந்தது. காலை பெய்த மழையால் தவளைகள் சத்தமிட்டுக்கொண்டேயிருந்தன. வானம் வெறித்து மேகமில்லாமல் கிடந்தது. நிலவு முழுதாய் நிரம்பியிருந்த தருணம் "கிறுக்கு பிடித்த தவளைகள். குழந்தை பெற்றுக்கொள்ள துடிக்கின்றன. இந்த அசுர இயற்கை குழந்தைகளை தின்று விடும். நாம் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். செய்வதற்கொன்றுமில்லாமல்." என்று சிலும்பியை கைமூடி இழுத்துக்கொண்டான். 


நிலவு மேலெழும்பியிருந்தது. பிதற்றில் அடங்கிப்போய் அவன் படுத்திருந்தான். சிதை எரிந்து அடங்கி கங்கெழுந்து புகைந்து கொண்டிருந்தது. இரவின் சப்தம் மட்டுமேயிருந்தது. எழுந்திருக்க முடியாமல் தூங்கிப்போனவனின் கனவில் அவள் எழுந்து வந்தாள். வீட்டின் முற்றத்தில் சட்டையில்லாமல் விலா எலும்புகள் தென்னித்தெரிய அவன் கால்நீட்டி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான். எதிரில் கண்ணம்மா தும்பிலையின் முன் செல்வி சுடு சோறு வடித்து கொட்ட அதில் மொத்த புலனும் முனைந்து நிற்க அமர்ந்திருந்தாள். பச்சை பாவாடை சட்டையும் கழுத்தில் சின்ன தாமரை பதித்த அட்டிகை அணிந்திருந்தாள். பொலிந்த முகத்தில் நிறைந்த குங்குமத்துடன் செல்வி "என்ன" என்பதைப்போல புன்சிரிப்புடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். நிறைவு மேலெழ ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்து மொத்த உடலும் மகிழ்வில் முற்றத்திலிருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கிருந்த திண்ணையில் புத்தகங்கள் குவிக்கப்பட்டு நடுவில் மரமேசையொன்று இருந்தது. யோசனை வந்ததும் திரும்பி பார்க்கையில் கதவு முடிவிட்டது. அவன் வீடு மட்டுமிருந்த அந்த வெளி பாலைவனமாகியிருந்தது. கதவை திறக்கவோ உடைக்கவோ முடியவில்லை. சோற்று வாசனை நின்று சிதையெரியும் வாசனை வரவும் விழித்துக்கொண்டான். விடிந்திருந்தது. காலை இரவை விட இன்னும் அசிங்கமாயிருப்பதாக உணர்ந்தான். அழுக்கடைந்த வெள்ளை சட்டையை அணிந்து ஆற்றில் இறங்கி முகம் கழுவி மேலேழும்பொழுத சிதை முற்றிலும் எரிந்து அனேக எலும்புகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அருகில் சென்று பார்த்தான்.


வெட்டியான் "இன்னும் வேல ஆக வேண்டியது கெடக்கு. அங்கண போய் உக்காருங்க" என்று திண்டை காட்டினான். அவன் எதும் சொல்லாமல் போய் அமர்ந்து கொண்டான். மனம் அமைதியடைந்திருந்தது அவனுக்கே வியப்பாயிருந்தது. "ஒரு பொட்டலமே போதுமாயிருக்கிறது" என்று நினைக்குபொழுது அவனால் புன்னகைக்க முடிந்தது. "ஆம் இது வெறும் மாயை , நான் அழுதது அற்பம். அல்லது சொப்பனம். அவள் பிரம்மத்தில் கலந்து விட்டாள். நானும் ஒரு நாள். இதில் அழுவதற்கோ புலம்புவதற்கோ ஒன்றுமேயில்லை. நான் சாதாரணமானவலல்ல என்பது எனக்கே சில சமயங்களில் மறந்து விடுகிறது. நான் ஓர் வேள்வி. குடும்பம் பந்தம் இதனை அறுத்தவனே தன்னை வேள்வியாக்க முடியும். நேற்று நடந்தது ஓர் விளையாட்டு நித்திய கன்னியின் விளையாட்டு. எனக்கு கடமைகள் இருக்கின்றன. அதற்கு நான் என்னை எப்பொழுதும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். உயிர் போவதும் வருவதும் இயற்கையே , மாயையே. ஆம் நான் காலனை காலால் உதைப்பேன். அவனும் பறந்து பந்தாவான். என்றும் அழியா படைப்பாளியின் முன் எதும் துச்சமே" எழுந்து சிதையின் அருகில் சென்று அனைத்தும் அமைதியாகும்படி சத்தமாக "மகளே...உன் கடமை முடிந்தது. நீ எனும் மாயை அற்று பிரமத்தினுள் வாழ்வாயாக" என்று ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நாகணவாயொன்று நீரின் விளிம்பில் தொட்டு மேலேறி அக்கரையில் இருந்த அரசின் கிளையொன்றின் அமர்ந்து சிறகை அலகால் நீவிவிட்டு ஒலியெழுப்பியது. அதனிடம் சொல்வது போல , 


காலமென்று ஒரு நினைவும்

காட்சியென்று பல நினைவும்

கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ

காண்பதலெல்லாம் மறையுமென்றால் 

மறைந்ததெல்லாம் காண்பதுவோ

நானும் பொய்தான் 

இந்த ஞாலமும் பொய்தான்" என்று முணுமுணுத்தபடியே நீரில் மூழ்கி எழுந்து சுடலையின் கால்களிலிருக்கும் திருநீறை கைகால் உடம்பு முகம் என அள்ளி அள்ளி பூசிக்கொண்டான். வெட்டியான் அதனை சட்டை செய்யாமல் அவன் வேலையை கருத்தேயென் செய்து கொண்டிருந்தான். சட்டையை அங்கேயே வைத்துவிட்டு வெறும் வேட்டியுடன் சுடுகாடு தாண்டி வயல் வரப்போறம் நடந்து வீட்டை அடைந்தான். மனம் கேள்விகளற்று விடைகளால் நிரம்பியிருந்தது. செல் செல் என்பது போல முட்டி முட்டி தள்ளியது. வீட்டிற்குள் அமங்கலம் நிறைந்திருக்க செல்வி சுவரில் சாய்ந்து குந்தி அமர்ந்திருந்தாள். காடாத்திற்கு செல்லவும் ஒருவருமில்லாத நிலையை சமாளிக்க என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள். அண்ணன் யாராவது வரலாம் அவர்களிடம் உதவி கேட்கலாம் என்பதே அவள் கடைசி எண்ணமாயிருந்தது. சுப்பிரமணி வந்ததை அவள் கவனிக்காதது போல எழுந்து உள்ளே சென்றாள். 


திண்ணையில் அமர்ந்தவாறு "நீ செல் உனக்கு என் சிந்தனைகள் புரியப்போவதில்லை. நான் அமர்ந்திருப்பது ஓர் ராட்சச பறவையின் முதுகில். பேய்க்காற்றடித்து மெலிந்து போயிருக்கும் நான் உங்கள் நிலங்களை காண்பது அதியுயரத்திலிருந்து. பறக்கும் உணர்வை நீங்கள் அறியப்போவதில்லை. அதற்காக என்ன விலை கொடுத்தாலும் சரி. கீழே வருவதாக இல்லை. எனக்கு பணியிருக்கிறது" என்றான். சமீப காலமாக ஒருவரும் அவன் சொற்களை கேட்பதில்லை. சொற்களும் பேச்சு வழக்கிலில்லாமல் உரைநடை வழக்கில் மாறியிருந்ததால் , உளறும் பைத்தியங்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுவது போல விட்டுவிட்டனர். அவனுக்கும் அது சில சமயங்களில் தெரிந்திருந்தது. 


வாசலைத்தாண்டி முற்றத்தின் வலதுபுறம் இருந்த படிப்பறையினுள் நுளைந்தான். ஓடுகள் அங்கங்கே பெயர்ந்து ஒளி வளையங்கள் தரையில் கிடந்தன. மேசையை இழுத்து விட்டு கை நிற்காமல் எழுத ஆரம்பித்தான். "நான் நம்புகிறேன். இவை சென்றுவிடும். அவள் அழுகையை நிறுத்திவிடுவாள். இன்னொரு குழந்தையை பெற்று கட்டிக்கொடுப்பாள். சம்பந்தியுடன் சண்டையிடுவாள். கோள் மூட்டுவாள். நானும் அங்கிருப்பேன் , சரணடைவேன் , 


நல்லது தீயது நாம் அறியோம்

நல்லது நாட்டிட தீமையை ஓட்டிவிட

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

பொன்னை உயர்வை புகழை விரும்பாதிருந்திட

சக்தியே நின்னை சரணடைவேன்

பிரம்மமே நின்னை சரணடைவேன்

நித்திய கன்னியே நின்னை சரணடைவேன்


இவை என் சொற்களில்லை. முன்பே சொல்லிச்சொல்லி என்னில் பதிந்த சொற்கள். நான் அவற்றை மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டேன். இது ஓர் பிரதியெடுத்தல். இன்னொருவராய் உருமாறுதல். புது ஆன்மா பிறப்பெடுத்தபின் இங்கிருப்பது அவன் மட்டுமே. பழையவனை கண்டுபிடிப்பது படைத்தவனாலேயே முடியாது. 


என்றுமுள்ள அரிப்பு போல அந்த எண்ணம் மேலோங்கி வருகிறது ,  நான் ஒரு போலி. இன்னொருவனின் உணர்ச்சிகளை எனதாக்கி வருந்தி அருகிலிருப்பவரின் உணர்ச்சிகளை தூக்கி எறிகிறேன். காலையில் அடைந்திருந்த நிறைவு "போலி" என்ற ஒரு வார்த்தையால் இல்லாமல் ஆகிவிட்டது. மீண்டும் கண்ணம்மா. அவள் கன்னங்கள் ஒடுங்கி உருண்ணையான முகம் நீண்டிருந்தது" அவன் பேனாவை வைத்துவிட்டு இறங்கி வெளியே வந்தான். செல்வியுடன் இருவர் ஏதோ பேசிக்கொண்டு முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அவள் முகம் பிச்சையெடுப்பதைப்போலிருந்தது. அவனை பார்த்தும் பார்க்காததை கவனித்து வெளியே வந்தான். வெயிலின் இன்னொரு உருவாய் அனைத்து தோற்றம் கொண்டு கொப்பளித்திருந்தன. நடந்து மீண்டும் சிதையை நோக்கி சென்றான் வழியெல்லாம் "போலி" என்ற சொல்லை மந்திர உச்சாடனம் போல சொல்லிக்கொண்டிருந்தான். வரப்பில் வழுக்கி வேட்டியில் சகதி வழிந்தது. சிதையை அடையும் பொழுது அங்கு அடுத்ததாக கொண்டு வந்திருந்த பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கூன் விழுந்த கிழவியின் சுருங்கிய உடல் பாடையில் கிடந்தது. உறவினர்கள் சுற்றி நின்றனர். அதன் அருகே சென்றவன் மண்டியிட்டு அமர்ந்து 


பெருந்துயர் எய்தி நிற்கிறேன், தீய வறுமையான்

ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்

நான் செய்த சதியில் இழந்தேன்

பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய

பண்டை நண்பர்கள் ஓடி ஒழிந்தனர்

வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்

வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?

இத்தந்தை பெருநதுயர் கேளாய் மகளே....

இத்தந்தை பெருநதுயர் கேளாய் மகளே....


என்று வெளிவராச்சொற்களாக திக்கி விம்மலுடன் கண்ணீர் நெஞ்சில் வழிய சொல்லி முடித்தான். சுற்றியிருந்தவர்கள் அவனை தூக்கி சுடலையின் திண்டில் ஏற்றி வைத்தனர். நேற்றிரவிருந்த அதே கைகால் நடுக்கம் மீண்டும் வந்தது. அன்று முதல் தினமும் இரவில் சிதையின் முன் தூங்கி புகை போட்டு காலையில் கிளம்புவதை பழக்கமாக்கியிருந்தான்.


ஆற்றங்கரையில் , வீட்டின் படிப்பறையில் , சிதையின் முன் மொத்தமாய் நாற்பது வருடம் இருந்து அதே சிதைக்கு கொண்டு செல்லும் பொழுது நாகணவாயொன்று நதியில் விளிம்பில் தொட்டெழுந்து மரக்கிளையில் அமர்ந்து "பொய்தானோ" என்று அவனிடம் கேட்டது.

No comments:

Post a Comment