Saturday, 22 May 2021

அஞ்ஞாடி - வாசிப்பு

 பெருங்கதைகளை கேட்டு முடித்த பிறகு நமக்கு  தோன்றுவது "யம்மாடி என்னவெல்லாமோ நடந்திருக்கு" என்று மூக்கின் மேல் விரல் வைக்கவோ , அதிசயித்து நிற்கவோ , சோகம் பீடித்துக்கொள்ளவோ என பல வாய்ப்புகள் உள்ளன. பூமணியின் பெருங்கதையான அஞ்ஞாடி நாவலிலில் முடிவில் நமக்கு தோன்றுவதும் அதுவே. அத்தனை கதைகள் அத்தனை கதாபாத்திரங்கள். அஞ்ஞாடி என்று சொல்லிக்கொண்டே இந்நாவலை பல வழிகளில் அணுகி வாசிப்பதற்கான சாத்தியங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதனை பின்வறுமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

  • கோவில்பட்டி , விருதுநகர் , தூத்துக்குடி போன்ற ஊர்களின் சாதிரீதியான ஓர் வம்சாவளியின் தொடர்ச்சியை அளித்தல்
  • சாதிகளின் உருமாற்றம் அதன் தொன்மம் , தொடக்கம் , பல்வெறு சாதிகளுக்கிடையான உள் உறவுகள்
  • சாதிகளின் வரலாற்று மறு உருவாக்கம்
  • கைகளிலடங்கா கரிசல் நிலத்தின் தகவல்கள்
  • இவற்றிற்கெல்லாம் மேலே மனிதர்கள் , ரத்தமும் சதையுமான மனிதர்களின் கதைகள்.

நமக்கு கைகளில் கிடைக்கும் வரலாற்றெழுத்தைக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அரசரின் வம்சாவளியை இந்தியாவில் தகவல்களுடன் உருவாக்க முடியாது என்கிறார் டி டி கோசாம்பி. பூமணியின் இந்த நாவலானாது தாழ்த்தப்பட்ட சாதிகளின் , இடைநிலை சாதிகளின் வம்சாவளி ஒன்றை உருவாக்க முயல்கிறது. அதே நேரத்தில் மொத்தமும் அறிவிய பூர்வமான தகவல்களையே நம்பி நகராமல் தன்னைபோல் நாவல் செல்கிறது. அந்த வகையில் இது ஓர் முன்னோடி தமிழ் நாவல் என்றுகூட சொல்லலாம். ஆண்டி பள்ளர் இனத்திலும் , மாரி வண்ணான் இனத்திலும் என்று சொல்லி நாவல் அவர்களின் சின்ன வயசுப்பழக்கம் முதல் சொகமாக ஆரம்பிக்கிறது. அப்படியே அவர்களின் கொள்ளுப்பேரனுக்கு பேரன் பிறந்த கதை வரை காட்டிச்செல்கிறார். அந்த வகையில் இதனை தான் வளர்ந்த ஊரின் குறிப்பிட்ட கால அளவின் வரலாற்று ஆவணம் என்று சொல்லி பிற்காலத்தில் நாம் அதிலிருந்து தகவல்களை மேற்கோள் கூட காட்டலாம். நாயக்கர் நாடார் சாதிகளையும் அவர்களின் வம்சாவளியினை உருவாக்கிக்காட்டுகிறார். பரதவர் பற்றி ஓர் இடத்தில் தொன்மமாக வரும் பதிவைத்தவிர வேறெதும் இருப்பதாக தெரியவில்லை

சாதரணமாக ஓர் இனக்குழு தான் ஆரம்பித்த இடத்தில் அப்படியே தங்கி விடுவதில்லை. காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு கால்ந்தள்ள முயற்சிக்கின்றனர். அப்படி சாதிகள் ஒவ்வொன்றும் மாறும் அமைப்பானது ஓர் தனிப்பட்ட வரலாற்றையே உருவாக்கிவிடுகிறது. அந்த வகையில் பள்ளர் இன மக்கள் குத்தகையெடுத்து , நிலங்களை விலைக்கு வாங்கி , நிலங்களுடனிருந்து பின் தாது வருச பஞ்சத்தில் ஊரில் பாதிக்குமேல் பலிகொடுத்து ,  தீப்பட்டியாபீசில் வேலை சேர்ந்து நிலத்தில் கால் ஊன்ற முடியாத நிலைவரை சொல்லிச்செல்கிறார். நாடார்களை நாம் முதாளிகளாகவே பார்த்த நமக்கு அவர்களின் பனையேறி வாழ்க்கையும் திருவிதாங்கூரில் பதிவாளாயிருந்து இங்குவந்து வியாபாரம் செய்து பொருள் சேர்த்து , மறவர்கள்களுக்கு பயந்து , பணமிருந்துகோவில் நடையேற  உரிமையில்லாமல இருக்கும் கதை நமக்கு பெரிய கதையே. 

எட்டயபுரம் ராஜாக்களின் நாயக்க வரலாறு தொன்மக்கதையிலிருந்து ஆரம்பித்து அப்படியே தகவல்களாக ஓர் வம்சாவழியினை உருவாக்கி விடுகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி நாயக்கர்களின் வரலாற்று இணைப்பாக மங்கம்மாவின் வரலாறும் வருகிறது. ஆரம்பக்கட்ட இந்திய வரி எதிர்ப்பு போராடட்டங்களை சுட்டி அதன் மூலம் நமக்கு தெரிந்த எட்டப்பனின் தெரியாத வரலாறும் கட்டபொம்மு , ஊமைத்துரையின் வரலாறும் வருகிறது. இவை அனைத்தும் நிலப்பரப்பின் வரலாறும் கூட. சைவம் வளர்ந்த தொன்மம்  சமணர்களை கழுவேற்றியதையும் அங்கு முருகன் கோவில் வருவது வரை நீழ்கிறது. பூமணி வரலாற்றை அணுகுவது தொன்மத்தில் ஆர்மபித்து தகவல்களுடன் நவீன வரலாற்றில் வந்து நிற்கிறார். உதாரணமாக , பள்ளர்கள் தேவெந்திரனிலிருந்து வந்தவர்கள் என்பதில் தொடங்கி தீப்பட்டியாபீஸ் போவதில் முடிகிறது. நாடார்களுக்கு வரும் தொழில் சார்ந்த அல்லது கிண்டல் சார்ந்த பெயர்கள் கூட புதிய கிளைகளாக  சாதியை உருவாக்கிறது.

சாதிகள் தனித்தியாக வாழ்ந்தாலும் அவர்களுக்குள் சுமூகமான இரு தரப்பினரும் புரிந்து கொள்ளத்தக்க அன்பான உறவுகள் இருப்பது தெரிகிறது. ஆண்டி , மாரி ; ஆண்டி , பெரிய நாடார் ; சுந்தர நாயக்கர் , மாடப்பன் ; ஆண்டாள் , வேலம்மாள் ; கருப்பி , அனந்தி. ஒருவர் மற்றவரை ஒருமையில் அழைப்பது இன்னொருவரால் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது அதேபோல 'சாமீக' என்பதும் மரியாதைய் நிமித்தமாக இல்லாமல் சாதாரணமாகவே வருகிறது. அவர்களுக்குள் அன்பு காட்டுதல் மாறி மாறி நக்கலடித்துக்கொல்ளுதல் இருந்தாலும் அந்த எல்லைகள் அவர்களின் கண்காணாமலேயே வகுப்பட்டுள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறை என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.

இந்த உறவானது ஓர் தாழ்ந்த தரப்பு மற்ற உயர்ந்த தரப்பின் பொருளாதார நிலைமைக்கு மேல் செல்லும் பொழுது வேறுமாதிரி உருவீடுக்கிறது. பொருளாதார நிலை அவர்களை உயர்ந்தவர்கள் என்ற நிலையில் வைத்து தங்களை தாங்களே யோசிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி கொடுக்கிறது. நாடார்களுக்கும் மற்ற உயர்சாதி மறவர் , பிராமணர்களுக்கு இடையில் உருவாகும் பிரச்சனைகளை இந்த இடத்தில் வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. நாடார்களுக்கு பட்டண பிரவேசமும் , கோவில் நுளைவும் இதன் பொருட்டே. அவர்களுக்கு எந்த விதத்தில் நான் குறைந்தவன் என்னும் கேள்வி கையில் பணம் வந்த பிறகே வருகிறது. இதன் பொருட்டு தங்களுக்கான கோவிலை கர்த்தரின் மூலம் கண்டுகொள்ளும் நாடார்களின் குருத்தோலை திருநாளில் கழுகுமலை முருகனின் தேரில் முட்டி நிற்க வெட்டு குத்து கொலை வீடெரிப்பு. இத்தனைக்கும் சர்க்காரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது கோர்ட்டுக்கு சென்று முற்றவே , பிராமணர் தவிர மற்றவர் அனைவரும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். இதுவும் அவர்களின் உயர்ந்த பொருளாதாரத்தின் விளைவே. நாடார்களை தவிர மற்ற அனைத்து சாதியினரையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டி வருகின்றனர் மேலக சாதியினர். பசியில் அகப்பட்ட இரு பகடைகள் தாங்கள் கைக்கு அகப்பட்டதை எடுத்து ஓடவே வந்தோம் , நாடார்களுக்கும் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையென்பதே அவர்களின் பதில். அரசின் இதனை அணுகும் மோசமான முறையானது பிரச்சனையை புரிந்து கொள்ள தகுதியில்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதே. கோவிலகளில் நுளைய நாடார்கள் தோரயமாக முப்பது வருடங்களுக்கு மேல் போராடியுள்ளனர். 

ஒரு கதை அல்லது நாவல் நம்மில் ஓர் உலகை கட்டியெழுப்ப அத்தியாவசியாமாது அதனுள்ளே நிரம்பியிருக்க வேண்டிய நுண்தகவல்கள். அஞ்ஞாடி ஒவ்வொரு அத்தியாத்திலும் அதுபோன்ற தகவல்களை கொண்டிருக்கிறது. தானியங்கள் தூவுதல் , ஏரடித்த மேட்டை சமன் செய்தல் , தட்டிவைத்து , துளை வைத்து மீன் பிடித்தல் , பனைநாரில் வடிகட்டி செய்தல் போன்ற நூற்றுக்கணக்கான தவல்களை சொல்லிக்கொண்டே செல்கிறார். இது அவருடைய மற்ற நாவல்களான பிறகு , வெக்கை போன்றவற்றிலும் இருப்பதே.

மேல் சொன்ன அனைத்தும் அறிந்து கொள்ளும் ரீதியிலானது அதாவது நாம் படித்து முடித்தவுடன் நாவலை அறிவார்ந்த ரீதியில் அணுகி தொகுத்துக்கொள்வது. ஆனால் இவற்றை உணர்ந்து கண்ணீர் விட நமக்கு மனிதர்கள் வேண்டும். அவர்களின் வாழ்க்கை வேண்டும். ஆண்டியும் மாரியும் சிறுவயதில் சந்தித்து பேச்சுப்பழக்கம் பேட ஆரம்பித்தது அவர்களின் இறப்பில் நம்மை அறியாமல் ஓர் ஏக்கம் வருத்தம் வந்து விடுகிறது. அது 'நான் பார்த்து வளந்த பய , இப்ப நம்ம கூட இல்லையே என்னும் எண்ணமே. ஒவ்வொரு இறப்பும் ஓர் தடத்தை விட்டுச்செல்கிறது. வீரம்மா , கருத்தையன் நொண்டியன் , ஆண்டி , கருப்பி , வள்ளி இறந்து இடுகாட்டு மேட்டிலமர்ந்து பேச்சுப்பழக்கம் போட்டு மீண்டும் குழிக்குள் போய்விடுகின்றனர். செத்தும் குடும்பத்தை வம்சத்தை நினைத்து ஏங்கி மீண்டும் குழிக்குள் சென்று படுத்துக்கொள்கின்றனர். பொத்தி பொத்தி வளர்த்த வீரம்மா கருத்தையனை மணந்து கொள்வதும் அவன் இறந்து போவதும் ஆண்டிக்கும் கருப்பிக்கும் தாளாத்தாய் அமைகிறது. என் அண்னின் நண்பன் அவன் பசுபிக் கடலுக்கு போனதியயும் அங்கிருந்த வேலியையும் பார்த்த கதைய வீராவேசமாக சொன்ன கதை எனக்கு தெரியும். மாரி இறந்த பின்னும் ஆண்டிக்கும் அந்த மாதிரி கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறான். ஆனால் அவை தொன்மங்கள் கலந்துமுள்ளது. கருத்தையன் வீரம்மா கதைகளை நொண்டியன் சாமியாக மாறி அங்குவரும் விடலைகளுக்கு கதையாக சொல்கிறான். மாரி ஆண்டிக்கு விட்டுச்செல்வது அவனின் பாட்டுக்களே அதற்காக ஏங்கி கலிங்கலூருணி புங்கமரம் அருகில் அமர்ந்து காற்றில் அதனை தேடி அமர்ந்திருக்கிறான். சுந்தர நாயக்கர் , மங்கம்மா ; பெத்தபேடு , ஆண்டாள் ; சர்க்கரை நாடார் ; தாயம்மாள் என மனிதர்கள் அவர்களுக்குள் இருக்கும் உறவுகளின் பிரச்சனைகள் வந்துகொண்டேயிருக்கின்றது. எங்கோ பிறந்து மீண்டும் இங்கு மீண்டும் தங்கையாவின் குடும்பம் என ஒரு சக்கரம் போல வாழ்க்கை சுழன்று வருகிறது.

இவையனைத்தும் மொத்தமாக சேர்ந்து ஓர் முழுமையான நாம் அறியாத வாழ்க்கையை  உணர்வுகளுடனும் , தர்க்கங்களுடனும் பூமணி காட்டிச்செல்கிறார். நாவல் முடிந்தவுடன் ஸ்...அஞ்ஞாடி.... என்றே சொல்லத்தோன்றுகிறது. கூடவே கருப்பியையும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment