"இவன் நம்ம அப்பாப்போலதான இருக்கான்" என்று சித்தியைப்பார்த்து அம்மா கேட்டாள்.
"எனக்கு அப்படி ஒண்ணும் தோணல்ல" என்றாள் சித்தி
"நீ என்னத்தட்டீ கவனிக்க , நல்ல பாரு நீள மூஞ்சி , மாநெறம் , ஒடுங்குன வயிறு , விரிஞ்ச நெஞ்சு , அந்த கண்ண பாருட்டீ" கூறிமுடித்ததும் அம்மாவின் கண்கள் விரிய தலையில் கைவைத்து திர்ஷ்டி கழித்தாள். மூன்று சொடக்குகள் விழுந்தன. "அவ்ளோ கண்ணு பட்டுருக்கு" என்றாள்.
"பாத்தா அப்புடித்தா தெரியுது. ஆனா மக்கா உனக்க அம்ம இல்லாத்த ஒண்ண உருவாக்கிருவா" என்றாள் சித்தி என்னைப்பார்த்து.
"ஆமா நான்தான் இல்லாத ஒண்ண உருவாக்குகேன். போட்டீ"
"அம்மா , உங்க கூத்துல என்ன இழுக்காதீங்க , எனக்கே நான் நம்ம யேக்கியம்ம ஆச்சி சாடைதாண்ணு தோணுகு. உங்களுக்கு மட்டும்தா உங்க அப்பா தெரியாரு" என்றேன்
அம்மா வாழைத்தண்டை அரிவாள்மனையில் நறுக்கிக்கொண்டே "நல்ல முத்துன தண்டாயிருக்கு , ஒரு வாழத்தண்ட வாங்க தெரியல உங்கொப்பனுக்கு" என்றாள் என்னிடம்.
"ஆமா....நல்ல முத்துன காயாட்டுலா இருக்கு. நல்லா அவச்சி விட்டுட்டான்" என்றாள் சித்தி.
"புக்க தூக்கிட்டு போவத்தா தெரியும் , ம்ஹும் வேற ஒண்ணுத்துக்கும் ஆகாது" சம்பந்தமேயில்லாமல் "அவன் கால் விரல பாருட்டீ. சுண்டுவிரல் அப்டியே அப்பாதா" என்றாள் அம்மா
சித்தி என் முகத்தை பார்த்தாள். அம்மா சொல்வதை மறுப்பது நான் அம்மாவையே மறுப்பது போன்றது. நான் "தாத்தாவ மாரிதானம்மா பேரனும் இருப்பான்"
"இவ என்னத்தல அவர பாத்தா , எல்லாம் ஒரு நெனப்புதா. கூட இருந்து அஞ்சி புள்ள பெத்தவ நானு எனக்கே அவருக்க முன்னும் பின்னும் முழுசா தெரியாது." என்று தூங்கிக்கொண்டிருந்த ஆச்சி எழுந்தமர்ந்தாள்.
"நீ என்னத்த எங்கப்பாவ பாத்த , நான் தான வீட்டுல மொத புள்ள அதுனாலயே அப்பாக்கு என்னதா புடிக்கும். நான் அவரு நெஞ்சில கெடந்தவளாக்கும். சின்ன பிள்ளையா இருக்கும்போ என்ன அந்த சாலிச்சி வீட்டுக்கு கூட்டிட்டுலாம் போயிருக்காரு. அவ்ளோ பிரியம்"
"சீ....இதுல உனக்கு பெரும வேறையா , அங்க போய்கிடந்து வந்தவன் தான உங்கப்பன் , அவன மாரி இன்னொருத்தன் வாராண்ணு பெரும வேற படுகியா"
"இவ ஒருத்தி , பெருமயில்ல அது ஒரு சந்தோசம், எங்கப்பா எங்கூட இருக்காருண்ணு"
"அவன் கூடயிருந்து என்ன புண்ணியம் , அஞ்சி பைசாக்கு பிரயோஜனமில்ல. ஏட்டீ இவ்ளொ சொல்லுகியே உங்கப்பன் இருந்தப்போ நீதான வேலைக்கு போயி குடும்பத்துக்கு சோறு போட்ட. பொறவு எதுக்கு அவன் வேட்டிய புடிச்சி தொங்கிட்டுருக்க."
"இருந்தாலும் எங்கப்பால்லா , அவருக்க சூழ்நில செரியில்ல , அதுக்கு அவர் என்ன செய்வாரு , கூடவே சுத்துன ஆசாரி , சாமியாடி. எல்லாவனும் சேந்துதான அப்பாவ நாசப்பொட்டயா ஆக்கிட்டானுங்க"
"ஏட்டீ , எவன் மூத்தரத்த குடிக்க சொன்ன உங்கப்பனுக்கு எங்கட்டீ போச்சி அறிவு. வீட்டுல நாலு பொம்பள பிள்ளைய இருக்குண்ணு ஒரு நினைப்பில்லாம ரோட்டுல கெடந்தவன். பழச மறந்துறாதட்டீ , உன் கல்யாணத்தணைக்கி செத்து கெடந்தவனாக்கும். நீ உங்கப்பா மாரி வா மக்கா" என்றாள் என்னைப்பர்த்து.
"நா ஒண்ணும் மறக்கல்ல , மூத்த பிள்ளைக்கு சரியா கல்யாணம் செஞ்சி வைக்க வழியில்லையேனு நினப்புலயே குடிச்சிருக்காரு. அவர மனசரிஞ்சி ஒரு வாய் ஏச கூட முடியல. செத்து போன மனுசனையாவது நிம்மதியா இருக்க விடுங்க"
அம்மாவின் அப்பா புராணத்தை எப்படி நிறுத்துவதென்பது ஆச்சிக்கு நன்றாகவே தெரியும். ஆச்சி கூறியது உண்மையே அம்மாவின் கல்யாணத்தன்று காலை கருக்கல் நேரத்தில் வில்லுக்குறி தாண்டி பத்மநாபபுரம் வரும் வயல் வழியில் ஒரு ஓடையில் கிடந்ததாக அந்த ஊர்மக்கள் தாத்தாவை தூக்கிக்கொண்டு வந்தனர். உடம்பில் எங்கேயும் ரத்தக்கறையோ வீக்கமோ இல்லை. வாய் மட்டும் ஒரு பக்கமாக இழுத்திருந்தது. உடல் நீலம் பிடித்து ஆனால் கண்கள் பறவைகளின் கண்களைப்போலைருந்ததாகவும் ஆச்சி சொன்னாள். தற்கொலை என்று ஊர் கூறி , அம்மா இன்னொரு ஜாதியில் கல்யாணம் செய்ய துணிந்ததே காரணம் என்றது. ஒரு புறம் அவளே தாத்தவை கொன்றதாகவும் வதந்திகள் ஊர் வாய்களில் மெல்லப்பட்டிருந்தை நான் இப்பொழுது கூட கலைவாணர் தெருவில் நடக்கும் பொழுது கேட்க முடியும். ஆனால் உண்மையில் அவர் குடிந்திருந்தார் அப்பொழுது அவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. ஓடையில் இருந்த கூழாங்கல் தலையில் இடித்திருக்கலாம். வெட்டு வந்து கைகால் இழுத்ததினாலேயே வாய் ஒரு பக்கமாக் இழுத்திருந்தது.
சித்திகள் மணநாளை வருடம் தோறும் கொண்டாடும் பொழுது அம்மா அமைதியாக அரங்கில் தாத்தா படத்தின் முன் நின்றிருப்பாள். எதோ மன்றாட்டு போல அவள் உடலும் தலையும் உதறிக்கொண்டேயிருக்கும் , ஒரு நாளில் பலதடவைகள் அவள் அப்பா சுடலையாண்டி பிள்ளையை பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அந்த அப்பாவைபோல நான் இருக்கிறேன் எங்கிறாள்.
முற்றிய வாழைத்தண்டை நறுக்குவது என்பது பசையை இரு கைகளால் தொட்டு ஒட்டிக்கொண்டு பின் எடுக்க முயற்சிப்பது போன்றது. வட்டமாக ஒரு சிறிய துண்டை வெட்டிய இடத்தில் வலைபோன்றதொரு பிசின் பிரிந்துவரும். அதனை சுருட்டி விரலில் மோதிரமாக்கிகொள்ள வேண்டும். அம்மா அதனை ஒரு இயந்திரத்தைப்போல வேகமாக செய்துகொண்டிருந்தாள்.
"மணி இன்னும் சாப்ட வரல்லயா ?" என்றாள் ஆச்சி
"வர நேரம்தான் , அந்த அந்தோணி முதலாளிக்கி உழச்சி போட்டே காலம் போகுது. அவன் கொடுக்க நூறு ஓவா சம்பளத்த என் கைல கொண்டு வந்து கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணு நெனப்பு. பொறவு இந்த புக்கு. வீட்டப்பத்தி ஒரு நெனப்பிருக்கா. இவன் கெட்டி ஒரு சந்தோசமுண்டா"
"ஏட்டி , இப்பொ திங்க சோறு அவனுக்க ரத்தமாக்கும் அத மரக்காண்டாம். உன்ன ஒரு பவுனில்லாம கட்டிக்கிடுதேன்னு வந்து உங்கப்பண்ட கேட்டவனாக்கும் மணி. ஆத கொஞ்மேனும் நினச்சுப்பாக்கணும் கேட்டியா. பருவத்துல நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்கும்பவே நமக்கு வெங்கன சாமான் வாங்கிக் கொடுத்தது மணியாக்கும். வெறும் மரிச்சீனிக்கெழங்கு திண்ணது மறந்து போச்சோ" ஆச்சிக்கு மூச்சு வாங்கியது எழுந்தமர்ந்து சீலையை விரித்து மார்பை மறைத்துக்கொண்டாள். "நீ மூத்த மக உன்ன கரயேத்திட்டா குடும்பம் ஒரு லெவலுக்கு வரும்ணு நெனச்சுதானட்டீ மணி உன்ன கேட்டதே. இல்லாம வேற சாதிக்கு கொடுக்க நானும் சம்மதிச்சிருப்பனா. அப்ப கூட எதும் எடுத்து சொல்லாம குடிச்சி செத்தான். அவனயைம் மணியையும் சேத்து வச்சி பேசாத சொல்லிட்டேன். ஜீவிக்கதுக்கு ஒரு வழிய கொடுத்தவன தப்பா பேசாதட்டீ. நாக்கு அழுவிறும்"
"கொள்ளாம் , பெரிய கதாநாயகன மாரி ஆக்காண்டாம். அவரு அந்தளவுக்கொண்ணும் கெடையாது. அம்மைக்கு ஊருக்கு பயந்து என்ன மூணு வருசம் கட்டாம இருந்த ஆளாக்கும். பொம்பளதான நீ , உனக்கு தெரியும்ல என்ன என்னல்லாம் ஊர்ல பேசுனானுங்கண்ணு. இருந்தும் உனக்க மருமகன்தான் பெருசு. நானாக்கும் யேக்கியம்மைக்ககூட குடும்பம் நடத்துனேன் , நீ கெடையாது. அம்மைய எயித்து பேசாம. அம்மைக்கு சப்போட் பண்ணி என்ன மட்டம் தடுதவனாக்கும் உமக்க மணி. இவ்வளவு புஸ்தகம் படிச்சா காணாது வீட்ல என்ன ஏதுண்ணு கவனிக்க தெரியணும்"
"எனக்க மணி ராமர்லா , ஒன்னத்தவுர ஒருத்திக்கு பின்னால போயிருப்பானா. உங்க தாத்தா தெருவுக்கு ஒண்ணுலா வச்சிருந்தாரு. அந்த நூஸு ஊருக்குள்ள பாதள சாக்கட மாரிலா நாறிக்கெடக்கு. தோண்டியெடுத்தா வந்துட்டேயிருக்க அட்சய பாத்துரமாக்கும்" என்றாள் என்னைப்பார்த்து.
"அந்த மூணு வருசதுத்துக்கு இடைல மொறப்பொண்ணு ஒண்ண கட்டிவக்க பூரா வேலையும் நடந்துச்சி , உமக்க மணி அப்பொ பொத்திக்கிட்டுதா நின்னாரு. நல்ல யட்சி கணக்க நாயர்ல வந்தவொடன வெள்ளாடிச்சி வேணாமுண்ணு போகபாத்தாரு உனக்க உத்தம ராமரு. எனக்க அப்பா சாலிச்சியா இருந்தாலும் வாக்கு குடுத்துட்டமேண்ணு கண்ணு கணக்கா பாத்துக்கிட்டாரு. எல்லாத்துக்கும் மேல பாஞ்சாலி ஆச்சி செஞ்ச வேல , அந்த சாலிச்சிக்கே கட்டி வச்சிருந்தா இதொண்ணும் நடந்திருக்காது. செரி இவ்வளோ பேசுகியே , அப்ப எதுக்கு எங்கப்பா கூடகிடந்து அஞ்சு பிள்ள பெத்த" என்று கூறி அம்மா மூச்சுவாங்கினாள்.
சித்தியும் நானும் அமைதியாக கேட்டுக்கொண்டேயிருந்தோம். இருவரும் மூச்சு வாங்கி பேசி முடிக்கும் பொழுது வாழைத்தண்டு நறுக்கி முடிக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டு அம்மா அடுக்களைக்குள் சென்றாள். பின்னால் எழுந்து சென்ற சித்தி "அவியலுக்கு தேங்கா அரக்கவா" என்றாள். ஆச்சி அதன் பிறகு எதும் பேசவில்லை
இரவு அனைவரும் தூங்கியபின் , வீட்டின் முன்னிருக்கும் புதர் மண்டிய களத்தைப்பார்த்த படி ஆச்சி கால்நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகில் நான் படுத்திருந்தேன். திடீரென்று "எதுக்கு அந்தாளுக்கு அஞ்சு புள்ள பெத்தேண்ணு தெரியல" அழுதிருந்தாள். நான் பதில் கூறும் முன் கண்களை துடைத்துக்கொண்டு "ஆனா ஆளு மன்மதனாக்கும். நடையும் கெம்பீரமும் , மீசையும் இப்பொ நெனைக்கும் போதே எனக்கு புல்லரிக்கி. பின்னாலயே எல்லாம் கிறங்கி வந்து விழும். பொருக்கி எடுப்பாரு உங்க தாத்தா. உங்கப்பாலாம் கிட்ட நிக்க முடியாது" என்று சிரித்தாள் அது அவள் கூறியது விளையாட்டல்ல என்பது போலிருந்தது. "ஒரு விஷயம் சொல்லுகேன் யார்ட்டையும் சொல்லபபிடாது" என்றாள். இல்லை என்பது போல தலையாட்டினேன். "தாத்தா குடிச்சி விழுந்து சாகல , ஆளு அவராவே விழுந்து செத்துருக்காரு. துண்டு சீட்டுல ஊரு பேச்ச கேக்க முடியாதுண்ணு எழுதிருந்தாரு. உங்கம்மைக்கும் தெரியும் , ஆனா எனக்கு தெரியாதுண்ணு நெனச்சிட்டுருக்கா. நீ உங்கப்பா மாரியே வா" அதன் பிறகு அவள் ஒன்றும் கூறவில்லை அப்படியே மடங்கி படுத்துக்கொண்டாள்.
Saturday, 20 June 2020
Wednesday, 17 June 2020
ரயில் - சிறுகதை
மொத்தம் மூன்று நிறுத்தங்கள் இருக்கின்றன. கடினமான காரியம். இது நிலத்துள் ஒருபுறம் புகுந்து மறுபுறம் எழுந்து இரைபிடிக்கும் பாம்பு. மொத்தம் முப்பது நிமிடங்கள். தூங்க முடியாது கண்களுக்குள் பாம்பு நெளிகிறது. நடுப்புள்ளியொன்றில் நின்று தலை கிறுகிறுக்கிறது. சுவாசிக்க முடியாத பஞ்சு இருக்கைகளின் மணம். இப்பொதே இப்போதே வாந்தி எடுத்துவிடுவது எனக்கு நல்லது. முயற்சித்தால் வராது. அந்த எண்ணத்தை முற்றிலும் தவிர்க்க நினைக்கும் கணம் மீண்டும் பழைய வீரியத்தும் மூளையை பற்றிக்கொள்ளும். அடிவயிறு அழுத்த தொடர்ந்து பெருமூச்சுகள். மூச்சு முட்டுவது போல தோன்றி பின் வியர்த்து , அதிகமாக உமிழ்நீர் சுரக்கின்றது. ஏறுவதற்கு முன் அந்த ஆப்பிள் பன்னை குத்தித்திணிக்கமல் இருந்திருக்கலாம் , பொங்கி வெளியே வருகிறது. இந்த சிவப்பு பொத்தானை அழுத்தி இறங்கிவிட்டால்தான் என்ன , வண்டி நின்றால் அதை அழுத்திய என்னிடம் ஆயிரக்கணக்கில் கேட்கலாம். ஒரு வேளை நின்றுகொண்டு சென்றால் தலை சுற்றாதோ. எழுந்து பார்ப்போம். இல்லை இன்னும் அதிகமாக , இந்த ரயிலே என்னை மையமாகக்கொண்டு சுழல்கிறது. தினமும் இதே பிரச்சனை. அலுவலகத்திலிருந்து என்னறைக்கு செல்ல இது ஒன்றே நேரவிரமில்லாத வழி.
இவர்கள் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சிறிது தள்ளி நின்றாவது போய் பேசலாம். காது மடலில் தொங்கிக்கொண்டு ஊளையிடுகிறார்கள். கண்களை இறுக்க மூடிக்கொள்வோம். வண்ணங்கள் , நீலம் அதில் கலக்கும் மஞ்சள் அதிலிருந்து பிறக்கும் பச்சை பின் இளஞ்சிவப்பு. அருகில் ஒருவன் அமர்ந்துவிட்டான். இனி கண்களை மூடமுடியாது. அவனின் பெருத்த இடுப்பு என் கைமூட்டில் தட்டி குலுங்கிறது. எப்படியிருக்கிறான் , அழுக்கடைந்த மெல்லிய குளிரங்கி , அதனை கோடைக்கால மாதங்களில் கூட சிலர் அணிந்தே திரிகின்றனர். வெள்ளை ஷூக்கள். நடுமூக்கில் சிறுவளையம். காதுகளில் என்கை நுழையும் அளவுள்ள வளையம். சுருக்கங்கள் நிறைந்த நெற்றி , பல நாள் தாடியுடன். கைகளில் காசு குறைந்த பீர் புட்டிகள். வறுமை நிரம்பிய இந்நாட்டுக்காரனின் அனைத்து உருவ லட்சணகளும் இவனிடம் உள்ளது. ஆ.....அவன் வியர்வை நெடி. வியர்வை இந்த நாட்டில் குளிரங்கிகளுடன் கலந்து புதுவிதமானதொரு வாசனையை உருவாக்குகிறது. என் மூக்கு அதனை உணரும் முதல் கணம் துணுக்குற்று அதனை விரும்பும் ஆனால் இரு நொடிகளில் குமட்ட ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது.
எதிரில் இருக்கும் பெண் நான் அவளை கவனிப்பதை பார்த்துவிட்டாள். இங்கு ரயில்களில் பேருந்துகளில் பொதுயிடங்களில் மனிதர்களை நேருக்கு நேர் பார்ப்பது கூட குற்றம். எல்லார் காதுகளிலும் புழுபோன்ற வஸ்து நெளிந்து கைப்பேசியுடன் இணைந்துள்ளது. வேறோரு உலகத்துடன் இணைக்கிறது , இங்கு இதைத்தான் பார்க்க ஆளில்லை. நான் அவளை பார்ப்பதை கவனித்த பின் அதனை கவனிக்காததாய் தன் கைப்பேசியை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் இப்பொழுது எதிலொன்றிலாவது கவனத்தை செலுத்தியாக வேண்டும். இல்லை குமட்டல் பின் வாந்தி புரண்டெழுந்து வரும். கையிலிருக்கும் புத்தகத்தை படிக்கலாம் என்றால் அதன் படங்களும் எழுத்துக்களும் விரிந்து பெருத்து பின் சுருங்கி மறைகின்றன. இடது கண்ணின் ஓரம் மங்கல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒற்றைத்தலைவலி , சீ இதற்கு நான் இன்று தயாராகவேயில்லை. கவனி எல்லவற்றையும் கவனி. வண்டி நின்றது முதல் நிறுத்தம். மடக்கியிருந்த கைவிரல்களில் ஒன்றை மட்டும் நீட்டி எண்ண ஆரம்பித்தேன்.
எதிரில் இருப்பவள் யார் , ஆம் அவள் பெண் அல்ல. மூதாட்டி. எங்களூரில் இவள் அவ்வை. சிவந்த சுருங்கிய முகம் , கண்களில் மஸ்காரா , செயற்கை இமைகள். அடிக்கும் உதட்டுச்சாயம். முன் வழுக்கை விழுந்த எலிவால் கேசத்தில் இளநீலநிறம். கால்களில் நேற்றோ இன்று காலையோ அடித்த சிவப்பு நகப்பூச்சு. நான் அதனை பார்த்துக்கொண்டிருந்த பொழுது கால்களை இருக்கையின் அடியில் இருட்டுக்குள் மறைத்துக்கொள்கிறாள். வண்டியின் குறுக்கு வெட்டு பாதியின் மறுபுறமிருக்கும் ஒருவனுக்கு கைகாட்டுகிறாள். அவன் அவளை கண்டும்காணாமல் தலையை திருப்பிக்கொள்கிறான். நான் அந்த செயலை கவனிப்பதை அவள் பார்த்துவிட்டாள். அவமானமாக உணர்ந்திருப்பாள். மிண்டும் அவள் நகங்களை பார்க்க முயல்கிறேன். இப்பொழுது ரயில் இருண்ட குகைக்குள் செல்கிறது பாதளத்திற்குள் செல்லும் பாம்பு. மூச்சு முட்டுகிறது. என்னை சுற்றிலும் காற்று இன்னும் அழுத்த மடைகிறது. அவள் எழுந்தாள். அடுத்த நிறுத்தம் வருகிறது என்று தானியங்கி ஒலிப்பான் கூறுகிறது. ஆ அவள் என்னைப்பர்த்து சிரிக்கிறாள் , இல்லை அது அவளின் வாய் அமைப்பு. வாயின் இருபுறமும் சுருங்கி மடங்கியுமிருப்பதால் இயல்பாகவே சிரிப்பது போல தோன்றுகிறது. வண்டி நின்றது அவள் இறங்கிச்சென்றுவிட்டாள். ஜன்னல் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டேயிருந்தேன் , ஒருரேயொருமுறை திரும்பிபார்த்தாள். சிரித்தாள்.
இவர்கள் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சிறிது தள்ளி நின்றாவது போய் பேசலாம். காது மடலில் தொங்கிக்கொண்டு ஊளையிடுகிறார்கள். கண்களை இறுக்க மூடிக்கொள்வோம். வண்ணங்கள் , நீலம் அதில் கலக்கும் மஞ்சள் அதிலிருந்து பிறக்கும் பச்சை பின் இளஞ்சிவப்பு. அருகில் ஒருவன் அமர்ந்துவிட்டான். இனி கண்களை மூடமுடியாது. அவனின் பெருத்த இடுப்பு என் கைமூட்டில் தட்டி குலுங்கிறது. எப்படியிருக்கிறான் , அழுக்கடைந்த மெல்லிய குளிரங்கி , அதனை கோடைக்கால மாதங்களில் கூட சிலர் அணிந்தே திரிகின்றனர். வெள்ளை ஷூக்கள். நடுமூக்கில் சிறுவளையம். காதுகளில் என்கை நுழையும் அளவுள்ள வளையம். சுருக்கங்கள் நிறைந்த நெற்றி , பல நாள் தாடியுடன். கைகளில் காசு குறைந்த பீர் புட்டிகள். வறுமை நிரம்பிய இந்நாட்டுக்காரனின் அனைத்து உருவ லட்சணகளும் இவனிடம் உள்ளது. ஆ.....அவன் வியர்வை நெடி. வியர்வை இந்த நாட்டில் குளிரங்கிகளுடன் கலந்து புதுவிதமானதொரு வாசனையை உருவாக்குகிறது. என் மூக்கு அதனை உணரும் முதல் கணம் துணுக்குற்று அதனை விரும்பும் ஆனால் இரு நொடிகளில் குமட்ட ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது.
எதிரில் இருக்கும் பெண் நான் அவளை கவனிப்பதை பார்த்துவிட்டாள். இங்கு ரயில்களில் பேருந்துகளில் பொதுயிடங்களில் மனிதர்களை நேருக்கு நேர் பார்ப்பது கூட குற்றம். எல்லார் காதுகளிலும் புழுபோன்ற வஸ்து நெளிந்து கைப்பேசியுடன் இணைந்துள்ளது. வேறோரு உலகத்துடன் இணைக்கிறது , இங்கு இதைத்தான் பார்க்க ஆளில்லை. நான் அவளை பார்ப்பதை கவனித்த பின் அதனை கவனிக்காததாய் தன் கைப்பேசியை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் இப்பொழுது எதிலொன்றிலாவது கவனத்தை செலுத்தியாக வேண்டும். இல்லை குமட்டல் பின் வாந்தி புரண்டெழுந்து வரும். கையிலிருக்கும் புத்தகத்தை படிக்கலாம் என்றால் அதன் படங்களும் எழுத்துக்களும் விரிந்து பெருத்து பின் சுருங்கி மறைகின்றன. இடது கண்ணின் ஓரம் மங்கல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒற்றைத்தலைவலி , சீ இதற்கு நான் இன்று தயாராகவேயில்லை. கவனி எல்லவற்றையும் கவனி. வண்டி நின்றது முதல் நிறுத்தம். மடக்கியிருந்த கைவிரல்களில் ஒன்றை மட்டும் நீட்டி எண்ண ஆரம்பித்தேன்.
எதிரில் இருப்பவள் யார் , ஆம் அவள் பெண் அல்ல. மூதாட்டி. எங்களூரில் இவள் அவ்வை. சிவந்த சுருங்கிய முகம் , கண்களில் மஸ்காரா , செயற்கை இமைகள். அடிக்கும் உதட்டுச்சாயம். முன் வழுக்கை விழுந்த எலிவால் கேசத்தில் இளநீலநிறம். கால்களில் நேற்றோ இன்று காலையோ அடித்த சிவப்பு நகப்பூச்சு. நான் அதனை பார்த்துக்கொண்டிருந்த பொழுது கால்களை இருக்கையின் அடியில் இருட்டுக்குள் மறைத்துக்கொள்கிறாள். வண்டியின் குறுக்கு வெட்டு பாதியின் மறுபுறமிருக்கும் ஒருவனுக்கு கைகாட்டுகிறாள். அவன் அவளை கண்டும்காணாமல் தலையை திருப்பிக்கொள்கிறான். நான் அந்த செயலை கவனிப்பதை அவள் பார்த்துவிட்டாள். அவமானமாக உணர்ந்திருப்பாள். மிண்டும் அவள் நகங்களை பார்க்க முயல்கிறேன். இப்பொழுது ரயில் இருண்ட குகைக்குள் செல்கிறது பாதளத்திற்குள் செல்லும் பாம்பு. மூச்சு முட்டுகிறது. என்னை சுற்றிலும் காற்று இன்னும் அழுத்த மடைகிறது. அவள் எழுந்தாள். அடுத்த நிறுத்தம் வருகிறது என்று தானியங்கி ஒலிப்பான் கூறுகிறது. ஆ அவள் என்னைப்பர்த்து சிரிக்கிறாள் , இல்லை அது அவளின் வாய் அமைப்பு. வாயின் இருபுறமும் சுருங்கி மடங்கியுமிருப்பதால் இயல்பாகவே சிரிப்பது போல தோன்றுகிறது. வண்டி நின்றது அவள் இறங்கிச்சென்றுவிட்டாள். ஜன்னல் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டேயிருந்தேன் , ஒருரேயொருமுறை திரும்பிபார்த்தாள். சிரித்தாள்.
கதவுகள் மூட வண்டி குலுங்குகிறது. ஆ....புளித்த ஏப்பம். வாய்வழியாக வரும் காற்று மூக்கில் மணக்கிறது. அந்த மணத்திற்கு என் உடம்பே அதிர்கிறது. மீண்டும் குமட்டல். இந்த வண்டி சீக்கிரம் என்று சேர்ந்துவிடாதா.
எனக்கு பின்னால் கம்பிக்கருவியின் இசை பயந்த புள்ளேன காற்றில் விருட்டென்று வருகிறது. திரும்பிப்பார்க்க வேண்டாம். சுருதி மீட்டப்படாத தந்திகள். அந்த இசை கீழ்த்தரமாக இருந்த போதிலும் அதை இசைப்பவன் அந்த சுருதி மாற்றத்தை தாண்டி அதன் ஆத்மாவை கடத்த முயல்கிறான். என்னருகில் வந்து விட்டான். கருத்த மேல் கோட்டு வெள்ளை உள்சட்டை , கருத்த டை மற்றும் கால் சட்டை. டையை திணித்து நேர்த்தியாக வைத்திருக்கிறான். கிராமங்களில் இருக்கும் துணிக்கடைக்கு பொம்மையாக நிற்கவைக்கும் அவ்வளவுக்கு நேர்த்தி. உருண்டையான ஆனால் கட்டான உடல். உருண்டை சிரியன் முகம். ஆங்காங்கே தெரியும் நரை ஆனால் அவன் கேசம் கருப்பல்ல , ஒரு மாதிரி செம்பழுப்பு. சிறிய உருண்டையான மூக்கு. சோகைபிடித்த ஆனால் பிரியமான கண்கள். ஒவ்வொரு செயலுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே ஒவ்வொருவராய் பார்க்கிறான். கையிலிருந்த தந்திக்கருவி செவ்வக வடிவில் மரத்தில் தட்டையாக ஒருமுறமிருந்து மறுபுறம் கம்பிகளால் இழுத்துக்கட்டப்பட்டிருந்தன. கைகளில் வைத்திருத்த குச்சியால் தட்டி தட்டி இசையை ஏவி விடுகிறான். ரயில் ஒருபுறம் செல்ல மறுபுறம் அந்த இசை மறுபுறம் தாவிச்செல்கிறது. தெரிந்த பாடல் ஆனால் நினைவில் கொண்டுவர முடியவில்லை. என்னைப்பர்த்து சிரிக்கிறான். கைகளில் ஒரு காலி காப்பிக்கோப்பை. அதிலிருக்கும் சில்லறைகளை குலுக்கி என்முன் வந்து சிரிக்கிறான். எதும் கொடுக்கப்போவதில்லை என்பது எனக்கே தெரியும். கையில் சில்லறைக்காசில்லை என்பது என் சாக்கு. என்னை தாண்டி செல்கிறான். அதே சிரிப்பு. குட்டையான உருவத்துடன் , பொம்மைப் படங்களில் வருவது போல நடந்து செல்கிறான்.
அருகில் உட்காருவதற்கு இடமிருந்தும் நின்றுகொண்டிருந்த சுவீடன் மக்கள். இதுவும் உடற்பயிற்சியென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. என் எதிரிலிருக்கும் அனைத்தையும் மறைத்துக்கொண்டு இவர்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கிறது. தீவிரமாக பேசும்பொழுதும் அவர்களின் குரல் அமைதியாக ஒலிப்பது கடவுளின் கிருபைதான். நானெல்லாம் பேசுவதேன்றாலே கத்துவதுதான். அவர்களின் பின்னொரு கருப்பன் கதவில் சாய்ந்து நிற்கிறானே. மிடுக்கான உடம்பு , உள்ளே சிவந்த வெளியில் கருத்த தடித்த கீழ் உதடு. அமைதியான முகம் , எப்பொழுதும் பதுங்குக்குழிக்குள் இருக்கும் குருவிக்குட்டி போல. என்ன பேசுகிறான் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் எங்களூர் கோலப்பனின் அச்சிவன். ஜிகு ஜிகுக்கும் உடைகள். அவனுக்கு பொருந்தவில்லை. ஆனால் அவன் விருப்பத்துடன் அணிந்திருப்பது போலிருக்கிறது.
இந்த நடுவயது சுவீடன்காரர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எவன் பேசுகிறான் என்றே தெரியவில்லை. ஒரு கூட்டம் ஒற்றை மனதாய் போசுவதுபோலிருக்கிறது.
"இவர்களை நாம் உள்ளே விட்டோம் அதும் ஒரு மனிதாபிமானத்துடன். மரியாதைக்கு பிழைப்பு நடத்த வேண்டும். வெறும் ஊளை ஜனங்கள். இந்த அகதிகளின் வரத்தை தடுக்க அரசு ஒன்றும் செய்வதில்லை. ஓரளவுக்கு இருக்கும் பொழுது நமக்கு பாதிப்பில்லை. அதுவொரு முட்டாள்தனமான செயல்"
"நாடு முழுவதும் பரவிவிட்டனர் , அவர்களின் நிலத்தப்போலவே நம் நிலத்தையும் மாற்றிவிடுவார்கள் ஒட்டுண்ணிகள்"
"தெருக்களில் , அங்காடிகளில் இவர்களே நிரம்பியுள்ளனர் , நாம் சற்று தள்ளியே நிற்க வேண்டும்"
"இந்த ரொமேனிய அகதிகள் பிச்சை எடுக்கின்றனர் கூட்டம் கூட்டமாக. கொடுக்காவிட்டால் முறைக்கிறார்கள். அதுதான் அரசு எல்லாம் கொடுக்கிறதே , அதற்கு மேல் இவர்களுக்கு என்ன பிச்சை வேண்டியிருக்கிறது"
"நம் அரசு இவர்களை அனுமதிக்கிறது , ஆனால் அவர்களுக்கு தேவயானதை கொடுக்கவில்லை. இவர்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதில் இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது"
"எது , கடைகளில் புகுந்து துப்பாக்கி காட்டி திருடுவது நல்ல குணமில்லையா!"
"நான் அப்படி சொல்லவில்லையே , அவர்கள் தவறு செய்கிறார்கள் அதற்கு நம் அரசும் ஒரு காரணம் என்றுதான் சொல்கிறேன்"
"பிச்சை எடுப்பதைகூட நான் மன்னிக்க முடியும் , எனக்கு தோன்றும் பொழுது கொடுக்கிறேன். ஆனால் திருட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது"
"ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் உனக்கு தெரியுமா அவர்கள் தெருவில் தூங்குகிறார்கள்"
" ஆதுதான் பார்க்கிறோமே. அரசை குறைகூறி என்ன புண்ணியம். அவர்களால் முடிந்ததைதான் செய்ய முடியும். ஏன் நீ உன் கைகாசு அனைத்தையும் கொடுத்துவிடேன் பிரபுவே"
"கொடுப்பேன் , காலம் வரும் பொழுது"
"இருக்கலாம். நாம் இவர்களுக்கு போரிலிருந்து சுதந்திரம் கொடுத்தோம். வாழ வழி செய்தோம். ஆனால் இங்கு கொள்ளையடிக்கிறார்கள். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை"
"நாம் சர்வதேச அளவில் முதல் பத்து இடத்திற்குள் இருக்கிறோம் தெரியுமா"
"எதில் ?"
"ஆயுதங்கள் விற்பதில் , சிரியாவிற்கு நம் சரக்கு அதிகம் போயிருக்கும். நாம் இங்கு அமைதியாக இந்த ஒட்டுண்ணிகளின் நடுவில் வாழ்வோம். நாம் சொகுசாக இருப்பதற்கு துப்பாக்கி செய்கிறோம்"
"நேற்று நாம் கால்பந்தாட்டத்தில் ஒரு இந்தியனைபோல விளையாடித்தோற்றொம். அடுத்த அடி எடுத்து வைக்க ஒவ்வொருத்தனும் பிதாவிடம் அனுமதி கேட்பார்கள் போல. சுத்த சோம்பேறிகள்"
அவர்கள் பேசியதில் ஒரு விசயத்தை விட்டுவிட்டனர். ரொமேனியா ஐரோப்பாவில் இருப்பதாலேயே அந்நாட்டு அகதிகளை கொஞ்சமும் கவனிக்காமல் அப்படியே விடுகிறது சுவீடன் அரசு. தங்கள் நாட்டினரின் வரிப்பணம் அவர்களுக்கு செலவளிக்கப்பட விருப்பமில்லை. இதனை பேசிக்கொண்டிருந்த இவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. ஆனால் அகதிகளின் மனநிலையை அறிந்து கொள்ள அவர்கள் என்னிடம் பேசியிருக்க வேண்டுமே. இவர்களிடம் நிற வெறுப்போ அகதிகளிடமான வெறுப்போ இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அது நேரடியாகயில்லை. வேலை இல்லாதவனே பிச்சை எடுக்கிறான். இவர்கள் ஐ எம் 2015 என்ற சமூக வலைதள இயக்கத்தை மறந்திருக்கலாம். ஆனால் அகதிகளாகிய நாங்கள் அதனை மறக்க முடியாதல்லவா.
ஆ....வண்டி நின்றுவிட்டது , ஓ.....அவன் விழுந்திருப்பான் அந்த இசைகருவியிலிருந்து வரும் இனிய அதிர்வொலி. தட்டுத்தடுமாறி இறங்கிவிட்டான். நீங்கள் அந்த கலைஞனை தீண்டாமல் செல்லுங்கள். அவனும் ஓர் ஒட்டுண்ணியல்லவா. எதிரில் பெட்டியின் கடைசியில் ஒரு அரேபியக்குடும்பம். செழிப்பாக உள்ளது. இந்த குழந்தைகளின் கருவிழிகள் அவர்களின் மிருதுவான மென் சிவப்பு நிறத்திற்கு துடிப்பாகத்தெரிகிறது. அருகில் இருக்கும் இளம்பெண் பேரழகி. சில அகதிகளுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. ஆனால் பலருக்கு இது கடலில் கலந்த உப்புப்பரலை கண்டுபிடித்து விடலாம் என்று காத்திருப்பது போல. வினோதம் என்னவென்றால் தேடுபவன் இவர்களில்லை.
வண்டி கிளம்பிவிட்டது , அருகில் ஒரு கருப்பின குடும்பம். ஒரு பெரிய பெண் மற்றம் ஒரு குழந்தை. மூக்கிற்கு கீழுள்ள பள்ளம் விரிந்து தட்டையாகவுள்ளது. பெரிய மூக்கு துவாரங்கள் ஆனால் சப்பையான மூக்கு. என் எதிரில் அந்த குழந்தை. மினுங்கும் கருப்பு எருமையின் பின் தசைத்தோல் சிறிய ஒளியில் ஜொலிக்கும் அது போன்றது. தலை சிறிய பல பின்னல்களாக சிலிர்த்துக்கொண்டு நின்றது. விரிந்த கண்களால் என்னை கைகாட்டி குமிழுதடுகளால் சிரிக்கின்றது . அவளின் அம்மாவாக இருக்காலம் அவளை அழைத்துக்காட்டி மீண்டும் சிரிக்கிறது. என் பையிலிருந்த கெய்ஷா சாக்லேட்டை கொடுக்கலாம். ஆனால் அவள் வாங்கிக்கொள்வாளா ? . நானும் சிரித்துக்கொண்டே அதனை அவளிடம் கொடுத்தேன். அம்மாவைப்பார்த்தது, அவள் தலையசைத்ததும் வாங்கிக்கொள்கிறாள். அந்த அம்மா என்னிடம் உதிரி ஆங்கிலத்தில் என்னவெல்லாமோ பேசுகிறாள் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் ஒரு துண்டு பிரசுரத்தைக்கொடுத்தாள். அதில் "ஜீசஸ் காலிங்" என்ற எழுத்துக்களுடன் மேலே ஏசு கைகள் விரிய நிற்கிறார். எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களை அரவணைத்துக்கொள்கிறேன்.
வண்டி நின்றவுடன் அந்த குடும்பம் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். நண்பர் கொடுத்த புத்தகம் கையிலிருக்கிறது. "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்"
அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டு. இரவு என்ன சமைக்கலாம் என்று யோசித்தால் நல்லது.
Friday, 12 June 2020
குமாஸ்தா - சிறுகதை
ஒன்று :
பதற்றமற்றிருந்தான் , அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதனை பல முறை செய்திருந்தாலும் அதற்கான திட்டமிடுதல் ஒழுங்கான முறையில் இருப்பதாக தோன்றும் , ஆனால் அதனை செயல்படுத்தும் கணம் முற்றிலும் வேறோரு தளத்தில் மனம் இயங்குகிறது என்பதை அறிந்திருந்தான். இந்த முறை அந்த செயல் நடக்கும் கணத்தில் தான் முழுவதுமாய் இருப்பதில் பயிற்சி பெற்றவனாய் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஆனால் அதொரு பாவனைதான் என்பதை உள்ளூர அறிந்திருந்தான். வெளியூரிலிருக்கும் அந்த நவீன பல்பொருள் அங்காடியின் ஒவ்வொரு பொருளாக எடுப்பதும் பின் அதன் விலையைப்பார்ப்பதுமாயிருந்தான். அவன் திருட வந்திருப்பது அவனைத்தவிர அனைவருக்கும் தெரிந்து விட்டது போலிருந்தது அவனது செய்கைகள். ஆனால் அவனை உண்மையாகவே ஒருவரும் கவனிக்கவில்லை. சூதாட்டத்தின் ஒரு முனையில் தான் இருப்பதாகவும் மறுமுனையில் கடை ஊழியர்களும் அவர்களுக்கு காசள்ளிக்கொடுப்பவனாய் முதலாளியும் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தான். இது போன்ற சூழ்நிலைகளில் அவன் அங்கில்லாமல் ஒரு அமைதியான நதிக்கரையோரமாகவோ அல்லது யாருமில்லா அறையில் நிர்வாணமாய் இருப்பதாகவும் நிதானமாக தன் கை கால்களை இயங்கவிடுவான். "என்ன சார் வேணும்" என்றான் ஒரு ஊழியன் "இல்ல அது...கருப்பா ஒரு சீப்பு" என்றான் ஸ்டாலின் "காஸ்மெடிக்ஸ் முதல் மாடி சார்" என்று கூறி அந்த ஊழியன் நகர்ந்தான். "நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் , பயம் அது மட்டுமே நீ , சீ வெட்கமாக இல்லையா உனக்கு , ஒரு சாதரண மனிதன் உன்னை பயமுறுத்தி விட முடியும் , உன்னை என்னவெல்லாமொ நினைத்தேன். உதவாக்கரை" என்று முனங்கினான். அருகில் அந்த ஊழியன் அவனைப்பார்த்தான். "என்ன ?" என்றான். அவன் கண்களில் அதிகாரமிருந்தது. "ஒண்ணுமில்ல சார்" என்று பதற்றத்துடன் பழைய பொருட்களை தூசிதட்ட ஆரம்பித்தான். அதே அதிகாரத்தொனியில் வாய்க்குள் ஏதுமில்லாமல் வெறுமென முனங்கினான். அந்த ஊழியன் அடிபணிந்தவனாய் அடிமைச்சிரிப்பு சிரித்தான். மீண்டும் அவனை திரும்பிப்பார்க்காமல் ஸ்டாலின் படியேறி முதல் மாடிக்குச்சென்றான். அங்கு யுவதிகள் மட்டுமே பணியிலமர்த்தப்பட்டிருந்தனர். அவன் படியேறி அந்த அறைக்குள் நுழைந்ததும். "வெல்கம் சார் , என்ன வேணும்" "நான் பாத்துகுறேன்" என்றான் அவள் எதும் சொல்லவில்லை. விலகிச்சென்று அங்கிருந்த தன் தோழியிடன் அவனைக்காட்டி கண்ணடித்து , "இவன்லாம் கஸ்டமரு" என்று சிரித்தாள் "நான் இங்கு வந்திருப்பது எதற்கென்று இவர்களுக்கு தெரியாது தெரிந்தால் என்னை அடித்து துவைக்கலாம் , அடித்து முடித்தவுடன் பரிதாபத்துடன் என் கையில்லாத தம்பி , புற்றுநோய் அப்பா , கல்யாணமாகாத அக்கா ஆகியவர்களை நினைத்து மனம் கனிந்து ஒரு நூறு ரூபாய் தரலாம். நான் முறைத்த அந்த ஊழியன் என்னை கால்களில் போட்டு மிதிக்கலாம் , இந்த பெண் என்னைப்பார்த்து இரண்டு மிதி கூடுதலாக கொடுக்கச்சொல்லலாம். சட்டை கிழியாலாம் , போலீஸ் வரலாம். ஆனால் மடையனே இது அனைத்தும் நடக்க நீ அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். அது வாலசலின் அருகில் தான் உள்ளது. மேல் மாடியிலிருந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய். பயந்தாங்கொள்ளி. ஆம் அவள் என் முகத்தில் வழியும் வியர்வையைப் பார்த்து சிரிக்கிறாள். சிரிக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு ஓடிய பிறகு இவர்கள் வாழ்க்கையில் நான் ஒரு திருடனாக என்றுமே இருப்பேன். மறக்கமுடியாதவன் நான். நாளை அலுவலகம் செல்ல வேண்டும் பாதியில் வைத்த கோப்புகள் அப்படியே உள்ளன மேனேஜர் கேட்கும் முன் அதனை அவர் மேசையில் வைப்பது நல்லது. முகத்தை துடைத்துக்கொள்வதும் நல்லது" என்று நினைத்தவாறு அவன் முன்பு சொல்லிய அதே கருப்பு சீப்பை எடுத்துக்கொண்டான். "இது பொண்ணுங்க யூஸ் பண்றது சார்" "தெரியுது" என்றான். மீண்டும் அவளின் முகத்தில் அதே சிரிப்பு. "நான் இவர்களின் கண்களில் கோமாளியாக தெரிகிறேனா ? , நான் எதையும் செய்பவன் , எடுத்துக்கொண்டு ஓடும் பொழுது , உங்களின் கண்படாமல் நான் மறைந்து சென்ற பிறகு நீங்கள் சொல்லலாம் 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள ஓடிட்டானே' 'சரியான திருடனா இருக்கானே' 'கைல சிக்கட்டும் பாத்துக்குவோம்' 'அவன நான் அப்பொவே பாத்தேன் முளியே சரியில்ல, அப்பவே சொல்லிருபேன் , நாம கொஞ்சம் சூதுவாது தெரியாதவனா போய்ட்டோம்' கடைசியாக சொன்னவனின் பைகளில் காப்பிப்பொடி டப்பாவோ பருப்பு பாக்கெட்டோ ஒளித்து வைத்திருப்பான் கள்ளன்." என்று நினைத்துக்கொண்டான். படிகளில் இறங்கி பில் போடப்படடும் இடத்திற்கு சென்றான். முகத்தில் முன்பிருந்த அதே அதிகாரத்தோரணையை வரவழைத்துக்கொண்டான். அவன் மார்புகள் தெளிவாகத்தெரிய அதனை பில் போடுபவன் கனவிக்க ஸ்டாலின் சுதாகரித்துக்கொண்டான். வியர்வையால் நனைந்திருந்த சட்டையை சரிசெய்துகொண்டான். "அம்பது ரூபா சார்" என்றான் பில் போடும் ஊழியன். ஸ்டாலின் வாசலில் இருந்த பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் சொன்னது இவன் காதில் விழவில்லை. "சார் அம்பது ரூபா" கைகளில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ரூபாய் தாளை கடை முதலாளியிடன் கொடுத்து பெட்டியை நெருங்கினான். பெட்டியை எடுத்துக்கொண்டு ஓட நினைக்கும் கணம். கடை முதலாளி "சார் மீதி ? " என்றார். அனைத்தையும் மறந்தவனாக "சும்மா சார் பாத்தேன் , நான் அந்த சீப்பு வாங்க வந்தேன் , காசு குடுத்துட்டேன் , பில் கூட இருக்கு" என்று கையிலிருந்த பில்லை நீட்டினான். "மிச்ச காசு சார் , அம்பது ரூபா . பெட்டி உங்களுதா" என்றார் கடை முதலாளி. "இல்ல..மறந்துட்டேன். நன்றி" என்றவாறு கடையிலிருந்து வெளியேறினான். பீதியுடனிருந்த அவன் முகம் இப்பொழுது விளரி , செம்பளுப்பாக மாறியது "சீ , இதற்கு நான் யாரையாவது வலுக்கட்டாயமாக பிடித்து கால்களை நக்கலாம் , எல்லா இடங்களிலும் பயம் , எங்கயாவது தைரியமாக எதாவது செய்திருக்கிறாயா , ஒன்றுக்கும் லாயக்கில்லை , தரையில் இருக்கும் பீ. எல்லாரும் மிதித்து செல்லலாம் அவர்களின் முகத்தில் அருவருப்புடன்" வெயில் எரித்தது. அவனும் எரிந்துகொண்டிருந்தான். அருகில் நடந்து சென்ற ஒருவன் அவனை கவனிப்பதை உணர்ந்ததும். சாதரணமாக முகத்தை மாற்றிக்கொண்டான். அருகில் சென்றவனைப்பார்த்து அவனால் சிரிக்கக்கூட முடிந்தது. ஆனால் அது ஒரு நொடிதான். மீண்டும் அதே எரிதல். " திரும்பிச்சென்றால்தான் என்ன ? , இந்த முறை கண்டிப்பாக எடுத்துவிடலாம் , தவறுகள் ஒரு முறைதான் நடக்கும். முகத்தை சாதாரணமாக்கு , சிரி , இனி போவோம்" என்றவாறு மீண்டும் அதே கடைக்குச்சென்றான். முதலாளி இருந்த இடத்தில் காலி நாற்காலியிருந்தது. அந்த ஊழியனில்லை. பில் போடுபவனுமில்லை. அவன் கடையில் முன்பு பொருள் வாங்க வந்திருந்த ஒருவன் எதோ ஒரு பொருளை இன்னும் தேடிக்கொண்டிருந்தான். மாடியில் சென்று பார்க்காலாம் என்று நினைத்தவனாக படிகளில் ஏறினான். அங்கு அந்த பெண்ணிருந்தாள். "என்ன சார்" என்றாள் "நான் பாத்துக்கிறேன்" என்றான். அவள் மீண்டும் முன்பு நின்றிருந்த அதேயிடத்தில் போய் நின்று கொண்டாள். அவன் பொருள் எடுப்பது போல பாவனையுடன் மீண்டும் தேட ஆரம்பித்தான். "நின்று கொண்டேயிருக்க வேண்டும் , கொடுமையான வேலைதான். நான் பரவாயில்லை அமர்ந்திருக்கலாம். சாதரண வாழ்வு. இதில் வரும் சம்பாத்தியத்தை வீட்டிற்கு கொடுப்பாள். காதுக்கு புதிதாக கம்மல் வாங்குவாள். அதன் குலுக்கத்தைப்பார்த்து எவனாவது காதலிப்பதாக சொல்வான். பிறகு கல்யாணம் மீண்டும் அவளைப்போன்றே ஒரு குழந்தை மீண்டும் இதே போன்றதொரு வேலை கால்கடுக்க மீண்டும் நிற்பானோ நிற்பாளோ. நாம் எல்லோரும் புராதான மரம் போன்றவர்கள் நின்றுகொண்டேயிருப்போம் மாற்றமில்லாமல்." அவளிடமிருந்து பார்வைவை விலக்கியவாறு. "அது இருக்கட்டும் இருவர் மட்டுமே கடையில் இருக்கின்றனர். இது சரியான கணமில்லை. மற்ற ஊழியர்களுமில்லை. காத்திருக்கலாம் , ஆனால் எவ்வளவு நேரம். ஜெஸ்டின் பசியோடிருப்பான். சாப்பிட வாங்கிவருவதாக சொல்லியிருக்கிறேன். நேரமானால் ஜூலி என்னை இரண்டாக பிளந்தேவிடுவாள். சீக்கிரம் செல்ல வேண்டும் ஆனால் எப்படி?. ஜூலிக்கு எதாவது ஹேர்டை வாங்கிச்செல்லலாம். ஆம் அவள் முடி நரைத்துக்கொண்டே வருகிறது, என்னுடையதும்தான். அடித்து முடித்ததும் அவள் இளமை துளிர் விடும். பழைய நினவுகளில் புணரலாம். புணர்வதும் இப்பொழுது சலிப்பாகிவிட்டது. நேரப்போகென்று வேண்டுமானல் புணரலாம்" என்று நினைத்துக்கொண்டான். "நீ சாப்புட போயிட்டுவாம்மா , சீக்கிரம் வந்துரு" கீழிருந்து கேட்டது முதலாளியின் குரல். "அவள் போகும் முன் நான் அதை செய்ய வேண்டும். என்னைப்பார்த்து சிரித்தவளல்லவா அவள்." என்று நினைத்தவாறு படியில் அவளுடன் இறங்கினான். அவளைப்பார்து சிரித்துக்கொண்டான். அது கள்ளமில்லாமலிருந்தது. "என்ன சார் எதாச்சும் மறந்துட்டீங்களா" என்றார் முதலாளி சுற்றி பார்த்தவன் அங்கு அந்த ஊழியர்களும் , முன்பிருந்த வாடிக்கையாளரும் இருந்ததைப்பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான். "இனி நான் தொடங்குவேன்" கையிலிருந்த ஹேர் டை பாக்கெட்களை பில் போடுபவனிடம் கொடுத்தான். அவன் பில்லை ஸ்டாலினிடம் கொடுத்து முதலாளியிடம் பொருளை கொடுத்தான். அவர் கைகளில் காசைக்கொடுத்து , பொருளை வாங்கியவுடன் டைல்ஸ் தரையில் ஒருமுறை வழுக்கி விழுந்து அந்த பெட்டியைப்பற்றிக்கொண்டு வேகமாக வெளியே ஓடினான். பின்னாலிருந்து குரல்கள் கேட்டன. யாரோ ஒருவன் துரத்திக்கொண்டு வரும் செருப்பு சத்தம் கேட்டது. திரும்பிப்பார்க்கவேயில்லை. சாலையில் இருவர் மீது மொதி விழாமல் சென்றுகொண்டிருந்தான். ஆனால் அந்த செருப்புச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. தொந்தி குலுங்கிக்கொண்டேயிருந்தது. மூக்குக்கண்ணாடி விழுந்து விடாமல் கைகளால் பிடித்துக்கொண்டே ஓடினான். அந்த கடையிருந்த பிரதான சாலையைத்தாண்டி இடப்பக்கம் திரும்பி பின் வலப்பக்கம் திரும்பி ஒரு சிறிய தெருவிற்குள் நுழைந்தான். அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டு மூச்சு வாங்க பலமுறை எச்சில் துப்பிக்கொண்டேயிருந்தான். ஒருமுறை துப்பியது அவன் கால்களிலேயே விழுந்தது. தெருவில் கிடந்த பேப்பர் ஒன்றினால் அதனை துடைத்துக்கொண்டு. ஜெஸ்டினுக்கு சாப்பாடு வாங்க ஒரு சாதாரண கடைக்குச்சென்றான். இரண்டு : "எதுக்கு இப்டி ஓடுறாரு" என்றார் முதலாளி "என்னனு தெரியல , கைல அந்த பெட்டி அவர் வரும் போது கொண்டு வரல" என்றாள் அந்த பெண் "அப்போ யாரோடதையோ தூக்கிட்டு போய்ட்டானா" என்றான் ஸ்டாலின் முதலில் பார்த்த ஊழியன் "மொதல்ல கேக்கும்போது அது அவரோடதில்லனு சொன்னாரு" "திருட்டுப்பய , நல்லா பிளான் பண்ணி தூக்கிட்டு போய்ட்டான் , நான் மொதல்லயே நெனச்சேன் , அவன் முளியே சரியில்ல. சும்மா பொருள தேடுறது மாதிரி பாவன காட்டிட்ருந்தான்" என்றான் உண்மையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில். "நம்ம கடைல யாரோடாதானு தெரியலயே" என்றார் முதலாளி "இல்ல அவர் கடைக்குள்ள வரும்போதே கொண்டு வந்தாரு. அவரேதான் அங்க வச்சாரு. எதுக்கு அத எடுத்துட்டு ஓடுனாருன்னு தெரியல" என்றார் பொருள் வாங்க வந்திருந்தவர். "அத எடுத்துட்டு எதுக்கு இப்டி லூசு மாதிரி ஓடுனான் அந்தாளு" என்றார் முதலாளி "இல்ல சார் , நான் பாத்தேன் அது வேற ஒரு கஸ்டமரோடது. ரெகுலர் கஸ்டமர்தான். மறந்து வச்சிட்டு போயிருக்கலாம். வந்து கேட்டா என்னத்த சொல்ல. எவனும் தொரத்தாமலேயே இந்த ஓட்டம் ஓடும் போதே தெரியல. கண்டிப்பா திருட்டுதான். அதுல என்ன இருந்துச்சோ" என்றான் அந்த ஊழியன். "இல்ல சார் அவர பாத்தா அந்த மாதிரிலாம் தெரியல. என்ன பாத்து ரொம்ப நார்மலா சிரிச்சுட்டுதான் போனாரு. வேற பிரச்சனையா கூட இருக்கலாம்." என்றாள் அந்த பெண். மூவரும் பொருள் வாங்க வந்திருந்தவரைப்பார்த்தனர். "கொண்டு வந்த மாதிரிதான் எனக்கு ஞாயபகமிருக்கு , இந்த பொருளுக்கெல்லாம் பில்ல போடுறீங்களா. எனக்கு டைம் ஆச்சு" அவசரப்படுபவரைப்போலிருந்தார்.பொருட்களை வாங்கி வெளியே வந்ததுமே அவருக்கு சமாதானம் ஆகியது. மூன்று : ஸ்டாலின் குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த விடுதிக்குச்சென்றான். வெளியூருக்கு குடும்பத்துடன் செல்லும் பொழுதெல்லாம் இதே போன்றதொரு சாதாரண அறையை எடுக்க வேண்டாமென ஜூலி சொல்லியும் அவன் கேட்பதில்லை. வியர்த்து ஈரமாகியிருந்த சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டிவிட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். சாம்பார் சாதாம் ஆறிவிட்டிருந்தது. இரண்டு உருண்டைகளில் ஜெஸ்டின் அதனை முடித்து கைகளை நக்கிக்கொண்டிருந்தான். "இன்னிக்கி இவன் செஞ்ச வேலைய நீங்க கேக்கணுமே" என்றாள் ஜூலி "அம்மா வேண்டாம்" என்றான் ஜெஸ்டின். அதற்குள் அவன் முகம் சிறுத்துவிட்டிருந்தது ஸ்டாலின் சாப்பிட்டவாறே என்ன என்றான். "கீழ தெருக்கடைல ஒரு பென்சில கடக்காரருக்கு தெரியாம எடுத்துட்டான் , அத அவரும் பாத்துட்டாரு. அவரும் சிரிச்சுட்டே அத இவன் கைல கொடுத்துருக்காரு, எங்கிட்ட வந்து குடுத்தான். எனக்கு என்ன சொல்லனு தெரியல." ஸ்டாலின் முகம் சிவந்தது. எச்சில் கையுடன் எழுந்து அவன் முகத்தில் மாறி மாறி அறைந்தான் . ஜெஸ்டின் அலற ஜூலி ஸ்டாலினை தடுக்க முயன்றாள். ஆனால் அவளால் தடுக்க முடியவில்லை. அவனை தள்ளிவிட்டு மிதித்தான். பின் சுவரின் ஓரமாய் சாய்ந்து குந்தி அமர்ந்து கைகளைக்கொண்டு தலையைத்தாங்கி அழுதான். ஜீலியும் ஜெஸ்டினும் அழுது ஓய்ந்த பின்னரும் ஸ்டாலின் அழுது கொண்டேயிருந்தான் இரவு பேருந்தில் ஊருக்கு புறப்படும் நேரம். அந்த பெட்டியைத்திறந்தான் அதில் அவனது இரு உடைகள் இருந்தன. "இந்த பெட்டிய மாத்தணும் சீக்கிரம் , எவ்வளவு நாள்தான் இதையே வச்சி ஓட்டுறது" என்றாள் ஜூலி.
Subscribe to:
Posts (Atom)