கிறிஸ்துவம் பிரதினிதித்துவம் பெற்ற நாடுகளில் அன்பை கருணையை அதன் மூலமான மீட்பை ஒரு கதையானது கையாளும் போது அதற்கு ஆதியாக கிறிஸ்துவும் அவர் அன்பு மற்றும் அதற்கான பாடுகளும் சிறிதளவாவது வருவது தவிர்க்க முடியாதது. ரஷ்யாவில் டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் தங்கள் படைப்புகளில் கிறிஸ்துவை அவர் அன்பை ஓர் கதாபாத்திரம் என்ற அளவிற்கு வைத்துள்ளனர். கசண்டாஸ்கி பைபிளை ஒத்து கிறிஸ்துவின் வாழ்க்கையை புனைவாக்கி வேறொரு தளம் உருவாக்கி கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் தாய் நாவலின் கதாபாத்தங்களை வைத்து அணுகும் போது வித்யாசமான அனுபவமாக அமைகிறது.
பாவேல் நாவலின் தொடக்கத்தில் செய்யும் முதல் பிரசங்கம் மக்கள் கூட்டம் முன் நடக்கிறது. ஏனோ அது கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை ஞயாபகப்படுத்தியது. உடைசல் குவியலின் மேலேறி அவர்களுக்கு புரட்சியின் விதையைப்பற்றி புரியவைக்க முயல்கிறான். ஏச்சும் பேச்சும் கேட்டு அடியிலிர்ந்து தப்பி மக்கள் அவனை புரிந்து கொள்ளவில்லையே , தான் சரியாக பேவில்லையோ என்று வருத்தத்திலேயே வீடு திரும்பிகிறாள். தாய்க்கு மகனை நினைத்து அந்தரங்கமான பெருமை இருந்த போதிலும் அவனுடல் உயிர் கொண்டு வாழ வேண்டும் என்பதை நினைத்து பயத்திலேயே வாழ்கிறாள்.
பாவெலை கிறிஸ்துவின் இடத்தில் வைத்தால் தாயை மேரி மாதாவின் இடத்தில் வைத்து பார்க்க முடியும். ஆனால் இந்த கதை கிறிஸ்துவின் பாடுகளை பற்றி பேசாமல் மேரியின் பாடுகளை முன்னிலைப்படுத்துகிறது. பாவெல் தன்னிலையில் அறிவார்ந்தவனாக இருந்த போதிலும் அவன் இயக்கம் சார்ந்த வளர்ச்சியில் தாயை தொடக்கத்தில் ஈடுபடுத்த முயலவில்லை. அவளை ஓர் பயந்த புரட்சிக்கு ஒத்துவராத ஓர் உயிராகவே காண்கிறான். அந்த நிலையிலிருந்து தாய் , பாவெலில் சிறைவாசத்திற்கு பின் தன்னை வளர்ச்சிப்படுத்தி ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தி நாவலின் இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது போல போலீஸ்காரர்களிடம் அடிபட்டு துவண்டு ஆனால் இறுதியிலும் விடாப்பிடியாக தன் கருத்தில் நிற்கிறாள். தாய் தன்னை அடிப்பவர்களை துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் எனும் போது கிறிஸ்து தன்னை துன்புறுத்திய படை வீரர்களுக்காக மன்னிப்பு கேட்பது போலவே இருக்கிறது.
கிறுஸ்துவை கொட்டாரங்களில் தங்க புதைகளில் இருந்து பிடித்திழுத்து ஆலை தொழிற்சாலையின் கொசுக்கள் நிறைந்த கோடைக்காலமும் எலும்புறையும் குளிர் காலமும் அறிந்த ஓர் மனிதாக நாவலின் கதாபாத்திரங்கள் பார்ப்பதையும் நம்மால் உணர முடிகிறது.
*************
தாய் ஆரம்பத்தில் தன்னை பிரார்த்தனையின் மூலம் சரிசெய்து கொள்ள முடியும் என்பதிலும் தன்னையும் தன்னை சார்ந்தவர்ககளையும் காப்பாற்றிக்கொள்ள முடியுமென நினைக்கிறாள். ஆனால் மகன் வழியில் செல்ல ஆரம்பித்ததும் மெல்ல அவள் அதிலிருந்து விடுபட்டு செயல் மூலம் அதனை பெற்றுக்கொள்வதாக தோன்றுகிறது.
சில இடங்களில் செயல் ஓர் வலை போல புரட்சியாளர்கள் அனைவரையும் இழுத்து கட்டி வைத்திருப்பது நாவலில் தெரிகிறது. அதில்லாமல் தாயால் இருக்க முடிவதில்லை. நிகொலாய் சிறையிலிருந்து தப்பி வந்ததும் தான் என்ன செய்ய என செய்ய என்பதே அவனுக்கு கேள்வியாக இருக்கிறது. புரட்சியின் மீது அவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்பு அவர்கள் செயல் புரிகிறார்கள் அதன் விளைவுகளை கண்முன் காண்கிறார்கள் என்பதே. கார்க்கி அதனை ஓர் கருத்தாக நாவலில் சேர்த்திருப்பார் என்பதல்ல, ஆனால் கதாபாத்திரங்களின் பேச்சு சாதாரணமாக அதனை காட்டிவிடுகிறது.
தாய் , நாவலின் ஆரம்பத்தில் பாமரத்தன்மையுடன் இருக்கும் போதே அவளுக்கு புரட்சியாளர்களிடம் இருக்கும் குறைபாடு தெரிகிறது. 'நான்' 'என் கருத்து' என்பதில் அவர்களுக்குள் இருக்கும் பிடிப்பும் அதன் மூலம் அவர்களுக்குள் எழும் வாய்ச்சண்டைகளும் தாய்க்கு வெறும் குழந்தை விளையாட்டு.
தாய் கிராமத்தில் விவசாயிகளிடம் பேசிவிட்டு திரும்பும் போது அவர்களை பற்றிய போதுமான புரிதல் நகர புரட்சியாளர்களுக்கு இல்லை என்பது தெரிகிறது. நிகலாய் ஆலைத்தொழிலாளர்களை பாமர்கள் என உதாசினப்படுத்துவதாக நினைக்கிறாள். நாவல் ரஷ்ய புரட்சியை ஆதரிப்பதாக இருந்தாலும் அதன் குறைகளை மேலோட்டமாக சில இடங்களில் சொல்லி அழுத்தம் கொடுக்காமல் சென்றுவிடுகிறது.
*************
புரட்சிகள் ஆண்களால் துடங்கப்பட்டு ஆண்களால் முடிக்கப்படும் நிலையில் இந்த நாவல் அன்னைய மையப்படுத்தி எழுதப்பட்டது. அவளை ஓர் புரட்சியின் பிம்பமாக்கும் போது அதன் வீரியம் அடுத்த தளத்திற்கு சென்றுவிடுகிறது. ஜெயமோகன் அவரது குழந்தை பிராயத்தில் அவர் அம்மா ரவுடி ஒருத்தனை செவுளில் அறையும் போது அங்கு அவளுக்கு எதிராக குரல் எழும்பாமல் அவளுக்காக மக்கள் நின்றதை ஓர் நாகரீகத்தின் அடையாளமாக சொல்கிறார். கார்க்கி அதனை இந்த நாவலில் உணர்த்தியிருக்கிறார். அவள் அன்னை என்பதாலேயே உலகத்துடன் அன்போடிருக்க , மக்களை அரவணைத்து சத்தியத்தை பகிர , சபிக்கப்பட்டவர்களுக்காக கண்னீர்விட்டு அவர்களை தன்னிடம் சேத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும்.
புரட்சி அன்னைகளிடமிருந்தே தொடங்கமுடியும் ஆண்களிடமிர்ந்தோ பெண்களிடமிருந்தோ அல்ல.
*************
No comments:
Post a Comment