Sunday, 11 July 2021

ரெட்டை நாக்கு - சிறுகதை



பகுதி 1


கொலைகள் நடந்த இடத்திற்கு கிரிதரன் செல்லும் பொழுது சூரியன் உச்சி மண்டையில் ஆணியடித்துக்கொண்டிருந்தது. அலைந்து வந்து சேர்ந்ததில் களைப்புடன் இருந்தான். முகம் கன்றி வெயிலுக்கு சிறுத்துப்போயிருந்தது. வெயில் சுற்றியுள்ள அனைத்தையும் வேறொரு நிலைக்கு மாற்றியிருந்தது. ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் மழை மேகம் சூழ்ந்த மலைகளை தாண்டி இங்கு வந்தது அவன் மனநிலையை மொத்தமாக மாற்றியிருந்தது. முகத்தில் வளிந்த வியர்வையை துடைத்தவாறு போலீஸ் வேனிலிருந்து இறங்கி அந்த வீட்டினுள் நுளைந்தான். வெளியிலிருந்த வெயிலுக்கு தடையமில்லாமல் இருந்த அந்த வீடு முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு குளிர்ந்திருந்தது. வாசலுக்கு நேர் எதிராக முள்ளில் சிக்கி ரத்தம் வடியும் இதயத்தை கைகளில் ஏந்தியபடி நிற்கும் கனிவான ஏசுவின் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது அதன் கீழ் வலது ஓரத்தில்  ஏசுதாஸ் என்ற கையொப்பமிருந்தது. மாடிப்படிகளும் கருங்கற்களால் கட்டப்பட்டு குளிச்சியுடன் இருந்தன. ஓட்டுக்கூரையை பனமரக்கம்புகள் உத்திரமாய் தாங்கியிருந்தன. ஹாலில் எதிர் எதிர் போடப்பட்ட இரு மரச்சோபாக்களின் நடுவில் டீபாயில் ரத்தம் வடிய சட்டையில்லாமல் கிடந்தது கோலப்பனின் உடல். வேட்டி ரத்தத்தில் ஊறி பின் காய்ந்திருந்தது. வடிந்திருந்த ரத்தம் அமைதியாக ஊர்ந்து நீண்ட தாடியுடைய ஓர் உருவத்தை உருவாக்கியிருந்தது. கிரிதரன் அதன் அருகில் அமர்ந்து கையிலிருந்த பென்னால் அதனை மெல்ல தொட்டு சுரண்ட முயற்சித்தான். மார்பிள் தரையும் ரத்தமும் ஒன்றில் மற்றொன்றை பிரிக்க முடியாதவண்ணம் உறைந்திருந்தது. அந்த ஹாலின் இருபுறமும் பெரிய ஜன்னல்கள் இருந்தன. அதன் வெளிச்சத்தில் கோலப்பன் ஒரு அரையிருள் ஓவியம் போல கிடந்தான்.


"சார் எவிடென்ஸ்லா...." என்றான் தாமஸ்


கிரிதரன் "தெரியும்" என்றான் தலை திருப்பாமல்


"இது அவனுக்க வேலக்காரன். மேல குடும்பம் மொத்தமும் சொட்டு ரத்தம் இல்லாம செத்து கெடக்கு." என்று சிரித்தான். தணிந்த குரலில் "விஷமாருக்கும். ஊருக்காரனுவளுக்கு என்ன நடக்குன்னு தெரியாது. இப்போதைக்கு பிரச்சன ஒண்ணுமில்ல. நாமளே பிரஸ்ஸுக்கு சொல்லிரலாம். அந்தால அத்தத்துல தனியா வெளியே இருக்குல்ல அது அடுக்கள அங்கதான் அந்தப்பய சோத்துல போட்ட மருந்து குப்பி  கெடந்துச்சி. மருந்து வாங்குன ரசீது எல்லாம் அங்கயே கெடக்கு. சுத்தி உடமுள் வேலி. நல்ல தெங்கு நாலு சுத்தி நிக்கி , நல்ல நெழலு. செவ்வெழனி. ஒண்ணொண்ணும் அமிர்தமா இருக்கும். ஆனா இந்த மண்ணுல தெங்கு அச்சாத்தியந்தான் சார்" என்று வெளியே கைசுட்டினான் தாமஸ். தன் தகுத்திக்கு மீறிய காரியங்களை தாம்ஸ் செய்து தன்னை கேலி செய்வதாக கிரிதான் நினைத்தான். இது எப்பொழுதும் நினைப்பதுதான். தாமஸுக்கு தன்னை நிறுவிக்கொள்வதில் மகிழ்ச்சி. கிரிதரனுக்கு வேலை நடப்பதில் நிறைவும் கூடவே வெறுப்பு.


இருவரும் கற்படியேறி மேலே சென்றனர். தாமஸ் கிரிதரனை விட பெரிதாய் உண்மையாகவே போலீசின் விறைப்புடன் இருந்தான். கான்ஸ்டபிள் உடை அவனுக்கு கச்சிதமாக பொருந்தியது. தொப்பியை கழற்றி வைத்தால் கட்டை மீசையுடன் உயர் அதிகாரியின் தோற்றம். அவனுடன் ஒப்பிடும் பொழுது கிரிதரன் மெலிதாய் சட்டைக்குள் காற்று நிறையவே புகுந்து செல்லும் அளவுக்கிருந்தான். அப்பா வேலையில் இருக்கும் போதே இறந்ததால் கிடைத்த வேலையை விருப்பமில்லாமல் தக்கவைத்துக்கொண்டான். பல சமயங்களில் அது வெறுப்பாக கீழ்நிலை ஊழியர்களிடம் வெளிப்படும். தாமஸ் அவனை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான். எங்கு எப்படி எதைமட்டும் அவனிடம் பேசி சமாளிக்க வேண்டும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.


மாடியில் இருந்த ஒற்றை அறை தட்டிவைத்து இரு அறைகளாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டுமே படுக்கை அறைகள். வெளிச்சத்திற்கு ஓடுகளின் இடையில் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. தென்னை ஓலைகள் அசைந்து அறையினுள் நிழலசைவுகளை உருவாக்கியது. ஓர் அறையில் இரு முதிய கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்க்காமல் திரும்பி முதுகு காட்டி தலைக்கு கைவைத்து தூங்கியது போல இறந்து கிடந்தனர். மற்றொன்றில் ஒரு இளைய பெண் ஒத்த உருவமுடைய மூன்று வயதுக்கு குறைவான ஆண் பெண் இரட்டை குழந்தைகளை மேலொன்று கீழொன்றென அணைத்துக்கொண்டு இறந்து கிடந்தாள். அந்த அறைகள் மலைகளில் மலரும் பூக்களின் நறுமணத்துடன் இருந்ததே சாவுவீட்டின் களையாகியது. இறந்ததற்கான அடையாளமின்றி அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலிருந்தது. தாமஸ் எதும் பேசிக்கொள்ளவில்லை. அவரெ எதாவது கேட்கட்டும் என்ற பாவனையில் இரு அறைகளிலும் இருந்த ஜன்னல் வழி கீழே மர நிழல்களை பார்த்துக்கொண்டிருந்தான்.


கிரிதரன் பேசாமல் உருவாக்கிய அமைதியை குலைத்து "ஆக மொத்தம் ஆறு பொணம். சார் கேஸு முடிஞ்சுண்ணே வச்சுக்கோங்க...கொலையாளி ஸ்டேசன்ல வந்து நாந்தான்னு ஒத்துக்கிட்டான். அந்த பயல அந்தால கேசெழுதி புடிச்சி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. ஃபோரென்சிக் வந்து நம்ம கையில ரிப்போர்ட்ட தரட்டும் சோலி முடியும்" என்றான் தாமஸ்


கிரிதரன் சட்டென "மொதல்ல அவன் தான் செஞ்சானான்னு தெரியல. நமக்கு எவிடென்ஸ் வேணும். அவனும் அத ஒத்துக்கனும். எவ்வளோ இருக்கு. சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுற காரியம் இல்லேலா. தேவையில்லாம எல்லத்தையும் ஒருத்தன் மேல திணிக்கக்கூடாது" என்றான்.  தன் அறிவாளித்தனத்தை நிறுவியதின் நிறைவு முகத்தில் தெரிந்தது. இருவரும் அமைதியாக உறக்கத்திலிருப்பவர்களை எழுப்பிவிடாமல் பேசினர். அந்த இடத்திற்கு அது பொருத்தமாகவும் இருந்தது.


படியிறங்கி கீழே வந்து கொண்டிருந்தனர். "என்ன சார்....வேலைய முடிப்பீங்களா....சும்மா சவ சவன்னு இழுத்துட்டு.." 


"தாமஸ் , நீங்க உங்க வேலைய பாருங்க"


ஹாலின் பக்காவாட்டிலிருந்த அறையினை சுட்டிக்காட்டி "இங்கதான் சார் இருந்தான். பய எட்டிசாடி ஓடுததுக்குள்ள புடிச்சு ஸ்டேசன்ல போட்டோம்" என்று பெருமையாக சொன்னான் தாமஸ். அந்த அறை சுத்தமாக பொருட்கள் அடுக்கப்ட்டு தூசிகள் இன்றி அததற்கான சரியான முறையில் இருந்தன. ஜன்னலை பார்த்தவாறு ஒரு சிறிய மேசையும் அதன் முன் நாற்காலியும் இருந்தது. மேசை இழுப்பறை திறந்திருக்க அதனுள் ஓர் டைரி மட்டுமே இருந்தது. கிரிதரன் அதனை எடுத்து புரட்டிப்பார்த்தான். மொத்தமும் கிறுக்கல்களாக இருந்தது. இடையிடையே ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. வாசித்து புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்கள். ஓவியங்களில் ஒருவன் சூரியன் முன் மலை உச்சியில் தனியாக இருப்பதாகவும். ஐந்தாறு மனிதர்கள் சூழ்ந்திருக்க நடுவில் ஆனால் தனிமையில் மகிழ்ச்சியில் அமர்ந்திருப்பதாகவும். ஓடிசெல்வது போலவும். சூரியனின் ஒளிவட்டம் சூழ்ந்த சிலுவையின் முன் தன்னுடலைக்கிழித்து  எறிவது போலவும் பிற ஓவியங்களும் இருந்தன. அனைத்தையும் கோர்வையாக புரிந்து கொள்ள முடியவைல்லை.


கிரிதரன் ஸ்டேசனுக்குள் நுளையும் போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இறுகிய முகம் மலர நனைந்து கொண்டே அறைக்குள் சென்று அமர்ந்தான். இந்த வேலை அவனுக்கு பொருந்திப்போகவில்லை. தன்னை அறைக்குள் அடைத்து சாவியை எங்கோ தூக்கி வீசி எறிந்து விட்ட உணர்வு எப்பொழுதும் அவனுக்குண்டு. பொதுவாக எந்த ஒரு கேசும் எடுக்காமல் அதனை தட்டிக்கழிக்கவே முயன்றான். அந்த ஸ்டேசனிலிருந்த மற்ற அதிகாரிகள் அதனை பயன்படுத்தி மொத்த வசூலையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அவனுக்கு அதுவும் ஓர் பொருட்டேயில்லை. திரும்பி வரும் போது பார்த்த மலைகளை நினைத்துக்கொண்டான் மேகம் சூழ்ந்து மழையால் கரும்பச்சை நிறம் கொண்ட கருவறை சிலைகளென என மலைகள் அவனை அழைத்துக்கொண்டேயிருந்தன. காட்டு இலாகா தேர்வில் தோற்று இந்த வேலை கிடைத்ததும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. நனைந்த உடையினை வருடிக்கொண்டான். நிச்சயமில்லா வாழ்க்கையில் இந்த வேலையை மட்டும் நிச்சயம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது மறுக்கவே முடியாது என்பதை அவன் மனைவி மூலமே உணர்ந்து கொண்டான். அவள் அடிக்கடி சொல்வது "இந்த வேலையை விட்டுட்டு சோத்துக்கு செரைக்க போக ஆச வந்தாச்சோ?....குடும்ப தொழிலு மறக்கதுல்லா.." அந்தகணம் அவன் எழுந்து வேறொரு அறைக்கு செல்வதை பதுவாக செய்துவந்தான். குழந்தைகள் வரிசையாக ஆண்டுக்கொன்றாய் இரண்டு பிறந்தன. அம்மா கேட்டாள் , அத்தை கேட்டாள் என்று பெத்துக்கொண்டாயிற்று. இனி வளர்த்து எடுக்க வேண்டும். தனிமனித வன்முறையை நிறைவேற்ற குடும்பங்கள் என்னும் அமைப்பை நாம் உருவாக்கி அதை நடத்தி வெற்றிபெற முயற்சிக்கிறோம். இந்த ஓட்டம் முடிய வேண்டும் சீக்கிரம் முடிய வேண்டும். சிந்தனை தொடர்ச்சியை கலைத்து தாமஸ் பேசினான் "சார்....நான் சொன்ன மாரி கேச எழுதி முடிங்க...பேப்பர்ல போட்டோ வரும். எனக்க பொண்டாட்டி வீட்டுல பேப்பர் பாத்தா இன்னும் ஒரு வருசத்துக்கு மச்சினிக்கு மாப்ளைய வச்சு பேசாம வாயடச்சி விட்ருவம்லா...கொஞ்சம் மனசு வைங்க சார்" என்றான். "எல்லாம் வேணும் அவளுக்கு ஆனா எனக்க அம்மைய பாத்துக்கணும்னா மட்டும் வலிக்கும்...போய் தொலஞ்சதே நிம்மதி....சவம்" என்று முனங்கினான்.


கிரிதரன் "அப்படியே முடிச்சுக்கலாம்....ஆனா காரணத்த கேட்டு எழுதிக்கிடுங்க அது முக்கியம்"  என்றான் பொறுப்பில்லாமல்.


"அதுஞ்செரிதான்"


இருவரும் கொலையாளி இருந்த அறைக்கு சென்றனர். அந்த சின்ன அறையின் நடுவில் விட்டத்தை பார்த்தவாறு தலைக்கு கைகளை கட்டி படுத்திருந்தான். அவர்கள் வந்தும் எழுந்து அமரவோ நிற்கவோயில்லை.


"லேய்...எந்திரிச்சி நில்லுல நாய்க்கிபொறந்த பயல....மாமியார் வீட்டுக்கு சோறு திங்க வந்துருக்கியோ....சவுட்டி பிதுக்கி எடுத்துருவென் பாத்துக்க" என்று காலை தூக்கினான் தாமஸ். அவன் சாவகாசமாக சப்பணங்காலிட்டு எழுந்தமர்ந்தான். தாமஸ் தொடர்ந்தான் "திமுர பாத்தீங்களா சார்" என்று அவன் தோளில் மிதித்தான். எழுந்து நிற்க சத்தில்லாமல் கிடந்தான்.


கிரிதரன் தாமஸை நிறுத்துமாறு கைகாட்டி அவனை தூக்கி அமரவைத்தான். இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அவனுக்கு எதிராக அமர்ந்தனர்.


"என்ன நடந்துச்சோ அத ஒண்ணுவிடாம சொல்லு...ரைட்டர் எழுதிக்கிடுவாறு....எங்க வேலை வலுசா ஒரு பிரச்சன இல்லாம முடியனும். உன்ன அடிக்கணும்னு இல்ல" என்றான் கிரிதரன்.


"அன்னைக்கு காலைய" என்று ஆரம்பித்தான் கொலையாளி


"மொதல்ல பேரச்சொல்லுல பலவட்டற" என்றான் தாமஸ். இந்த மாதிரி பேச்சுகள் கிரிதரனுக்கு பிடிப்பதில்லை. அதிகாரம் மட்டுமே தொனிக்கும் பேச்சு. கிடைத்தவனை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் அதற்கு எல்லாஉரிமைகளும் உண்டு என்பது போன்றதொர் பாவனை. எல்லா அமைப்பிலும் இந்த மனிதர்கள் வந்தமர்ந்து கொள்கின்றனர் என் மனைவியைப்போல. தாமஸ் அதற்கு "இந்த பேச்சு இல்லனா போல மயிருன்னு போயிருவானுங்க சார்... இல்லனா எதுக்கு இப்புடி வேலமெனக்கெட்டு பேசுதோம்" என்பான். ஆனால் உண்மையிலேயே அவனுக்கு அந்த பேச்சு பிடித்திருந்தது , இல்லையென்றால் வார்த்தைகள் இப்படி கோர்வையாக வந்து விழாது. என் மனைவி வீட்டில் அப்படித்தான் பேசுகிறாள். குழந்தைகள் அவளைக்கண்டால் நடுங்கும்...சில சமயம் நானும்.


"எனக்க பேரு ஏசுதாஸ். எல்லாரையும் நாந்தான் கொண்ணேன். சோத்துல சேத்தா வாசமே வராத மாரி மருந்து  கலந்து வச்சேன். எல்லாரும் சாப்பிட்டாங்க. கோலப்பன் அத பாத்துட்டான். அடிச்சி நிறுத்த வந்தான். கைல கெடச்ச பென்ன வச்சி குத்தி கிழிச்சிட்டேன். நல்ல வசமா இறங்கிருக்கனும். கொடம் கொடமா ரத்தம். பொறவு இங்க வந்து சொல்லிட்டேன். இதையே இவர்ட்ட நாலு தடவ சொல்லியாச்சு. திரும்ப திரும்ப கேக்காதீங்க" அவன் முகம் தீவிரமற்ற பாவனையை காட்டியது.


"அந்தால வச்சு சவுட்டனும்னா. பீ பிதுங்கி வந்துரும் பாத்துக்க. கேக்குத கேள்விக்கி பதில சொல்லுல நாய" என்றான் தாமஸ். அதற்கு ஏசுதாஸன் பதில் சொல்லவில்லை. அமைதியாக உத்திரத்தில் இருந்த விரிசல்களை பார்த்துக்கொண்டிருந்தான்.


"ஏசுதாஸ் , நீங்க சொல்லுங்க ஏன் எப்படி செஞ்சீங்க. எங்களுக்கு எழுதிக்கிட வசதியா இருக்கும்" என்றான் கிரிதரன்


தாமஸ் "என்ன சார் மரியாத மொடுத்து , பொண்ணு குடுக்க போறமாரி" அதிகமாக பேசியது உறுத்தவே கிரிதரனின் காதருகே மெதுவாக "மிரட்டுங்க சார்" என்றான். கிரிதரனுக்கு அந்த மாதிரி அரட்டல்கள் பழகி போயிருந்தது. ஆனால் தாமஸிடன் அதனை எதிர்பார்க்கவில்லை. அவன் காதைகடித்ததும் அமைதியானான். தாமஸ் "நீ சொல்லுகது காத்துல போயிரும். நாங்க எழுதி அத இன்னும் உண்மையாக்குவோம்" என்று கிரிதரனைப்பார்த்து கண்ணடித்தான்.


"சாப்பாட்டுல வெசம் வச்சேன். மணம் வராததால அப்டியே சாப்டுட்டாங்க. ஆரம்பத்துல அது உறக்கம் வர மாதிரி இருந்திருக்கும் அதுனால படுத்திருகாங்க. அப்படியே உயிரும் போயிருக்கும். அவங்க சாப்புடும் போது எதும் கேக்காமருந்த கோலப்பண்ணன் மருந்த பாத்ததும் சட்டைய புடிச்சி அடிக்க வந்தாரு. அவரும் ஒரு விதத்துல எனக்கு இடஞ்சல் தான் அதான் அவரையும் கொண்ணுட்டேன்." தாமஸ் எழுதிக்கொண்டிருந்தான்


"இடஞ்சல்னா ? எதுக்கு செஞ்சீங்க" என்றான் கிரிதரன்.


அந்த கேள்விக்கு பதில் சொல்வது போலல்லாமல் தாந்தோன்றித்தனமாக பேச ஆரம்பித்தான் "நாம்மள கட்டி வச்சிருக்குற ஒரு கயிறு கால்ல இருந்து தல வர ஒண்ணுமே வெளிய தெரியாம எகிப்து மம்மி மாதிரி ஆக்கிருக்கு. அதுல மூச்சு விட ஒரு ஓட்ட மட்டும்தான் இருக்கு. என்னால பாக்க முடியல கேக்க முடியல நடக்க ஓட முடியல. உள்ள காத்தோட்டம் கெடையாது. நான் அங்கதான் இருந்தேன். எல்லாரும் புடிச்சி கட்டி வச்சாங்க. அதுக்கு ஒருத்தொருத்தர் ஒரு காரணம் சொல்லிகிடுதாங்க. ஒரு கட்டம் வரதான் பொறுமையாருக்க முடியும். கயித்த அவுத்து போட போனேன். ஆனா எனக்கே அந்த கயிற அவுக்க முடியல. எனக்கு நானே அந்த கயிறுக்கு காரணம் சொல்லிக்கிட்டேன். என்னால அவுத்துட்டு ஓட முடியல. அப்போதான் தெரிஞ்சுச்சு இத அவுக்க கயிறு கட்டுனவங்களாலதான் முடியும். அவங்க கிட்ட கேட்டேன். கயிறு கட்டி ரொம்ப நாளாச்சி அதுனால அவுக்க முடியாது ,  நீ இப்புடி தான் சாகணும்னு சொல்லிட்டாங்க. நானா அவுக்கவும் முடியல அவங்க அவுத்தும் உடல. அதான் அவங்களா செய்யாதத நானே செய்ய வச்சுட்டேன். அதுல எனக்கு சந்தோசம். கொஞ்சம் கூட வருத்தமில்ல. இப்போ எங்க வேணும்னாலும் போகலாம்" என்று அவர்களை பார்க்காமல் தரையைப்பார்த்து சிரித்தான் அது சாத்தானின் வஞ்சகச்சிரிப்பை ஒத்திருந்தது. தாமஸ் பயந்திருந்தது அவன் முகத்தில் தெரிந்தது. குழிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பெருச்சாளியைப்போலிருந்தான். கிரிதரன் அவனை உலுக்கிவிட்டான்


கிரிதரனுக்கு புரிவது போலிருந்தது. அவன் நினைத்துக்கொண்டான். "குற்றங்கள் சாதாரணமாக அதனை செய்தவருள் மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. அவர்கள் செய்ய நினைக்கும் ஒன்று முடிந்த பின் எதற்காக செய்தோம் என்ற கேள்வி மேலோங்கி வந்து அதனை செய்யாமல் விட்டிருந்தால் ஆசுவாசமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய துவங்குகிறது. பின் அதனை செய்யாமல் இருந்தது போல கற்பனை செய்து அதனுள் இயங்க ஆரம்பிக்கிறது. அந்த கற்பனையிலிருந்து வெளிவரும் கணம் மீண்டும் அந்த குற்றம் மட்டுமே தெரிகிறது. கிரிதரன் வீட்டில் செய்யும் சாதாரண குற்றங்கள் பெரிதாக விஸ்வரூபமெடுக்கும் பொழுது அந்த வகையான கற்பனை உலகத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறான் , அதில் காய்கறி வாங்க மறப்பதும் அடக்கம். இவன் தன் குற்றத்தை செய்ததற்கான காரணத்தை சொல்லி அதனை தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்கிறான். கற்பனையில் மூழ்குவதில்லை. காரணங்கள் தெளிவாகவும் அதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.


தாமஸ் தன்னிலை இழந்திருந்தான். முகம் விகாரமாக ஆகி "லேய் மண்டைக்கு வளியில்லாம ஆக்காத. நீ சொல்லுக கதையெல்லாம் கேசுன்னு எழுத முடியாது. எந்திச்சி வந்தேண்ணு வையி.." என்று காலைதூக்கி மிரட்டினான்.


கிரிதரன் அமைதியாக "அவன பேசவிடுங்க. எல்லாத்தையும் எழுதி வையுங்க. தேவ பட்டத பிரிச்சு எடுத்துக்கிடலாம்" என்றான்


"எனக்குல்லா கைவலிக்கி...பக்கம் பக்கமா பேசாம சவத்த சீக்கிரம் முடில...." என்றான் தாமஸ். அவன் முகம் இன்னும் அதே நிலையிலேயே இருந்தது.


"எனக்கு தாடி வளக்க ஆசருந்துச்சி.... ஏசு மாதிரி...அதுக்கு குடும்பம் ஒரு பெரிய தடைய இருந்துச்சி... எனக்கு அவங்க தடையாயில்ல...எனக்கு நானே தடையா இருந்தேன்" காற்றிலிருந்து வார்த்தைகளாய் வாங்குவதைப்போல விட்டத்தைப்பார்த்திருந்தான். அந்த நிலைமையை கலைத்து "பீடி சிகரெட் பிராந்தி விஸ்கி குடிக்கத விடணும்னா அத தூக்கி எறியணும் , தீயில போட்டு எறிக்கணும் , அத ஞாயபகப்படுத்துற எல்லாத்தையும் அழிச்சிறணும். நானும் எரிச்சேன் எனக்கு போதையா இருக்குறத. அதுல நான் சந்தோசாமா இருந்தேன். ஆமா நான் சந்தோசமா இருந்தேன். உங்க எல்லாத்தையும் விட" மீண்டும் விட்டத்தைப்பார்த்து அங்கிருந்து கேட்கும் குரலுக்கு பதில் கொடுக்க விருப்பமில்லாதவனைப்போல தலையை உதறினான். அதன்பின் தொடர்ந்தான் "போய் சண்ட போடனும் ,  போய் அவ கூதிய நக்கணும். பிள்ளைகள புடிச்சி கொஞ்சணும். எல்லாமே ஆச எனக்கு. இப்போ எனக்கு எதுமில்ல. அம்மா , அப்பா ,  ஜாய் பிள்ளைங்க செத்து கெடக்கத பாக்கும் பொது சந்தோசமா இருந்துச்சி. எனக்கு உதவி  செய்யுறாங்க , உலகத்துக்கு உதவி செஞ்சிருக்காங்க , எல்லா உயிருக்கும் புல்லுக்கும் பூண்டுக்கும் எறும்புக்கும். ஏசு உயிர்த்தெழணும். என் மூலமா. நான் அப்படி ஆக முடியும். அதுக்கு இந்த புனித இறப்புகள் எல்லாம் அப்பமும் ஒயினும் போல" 


"குற்ற உணர்ச்சியில்லையா? உள்ளுக்குள்ள உறுத்தலையா. உனக்காக நீ பெரிய தப்ப பண்ணிருக்க" கிரிதரன் அப்படி கேட்டதற்கு காரணம் இருப்பதாக தாமஸுக்கு தோன்றவில்லை. அவன் "சார்...நீங்க எதுக்கு பாதிரி மாதிரி கேட்டுக்கிட்டு....உள்ளத சொல்லிப்பிட்டான். இனி என்னத்த இன்வெஸ்டிகேசனு சப்பு சவர்னுட்டு" என்று எழுதிக்கொடிருந்த புத்தகத்தை மூடினான். வேலையை முடித்து அங்கிருந்து கிழம்புவதே அவன் எண்ணமாக இருந்தது.


ஏசுதாஸன் பேச ஆரம்பித்தான் "இல்லை நான் செய்தது குற்றமற்றது. நாற்பது வருடங்களாக நீங்கள் என்னை அடக்கி வைத்தீர். எனக்கு சுதந்திரம் தராமல் மன்ணுக்குள் மூடி வைத்தீர். நான் காற்றாலானவன் , மண்ணாலானவன் , ஒளியாலானவன். அதற்குள் இணைய வேண்டியவன். என்னை குற்றம் அணுகாது. விரிந்து கிடக்கும் உலகத்திற்கு நான் சொல்வது கேட்கட்டும்." என்று கைகளை தூக்கி ஆவேசமாக தொடர்ந்தான் "நீங்கள் அனைவரும் எங்களை போன்றவர்களை பானைக்குள் போட்டு மூடி வைத்துள்ளீர். காலம் கனிந்தது நான் இதோ , இங்கே வந்துவிட்டேன். எல்லா தளைகளையும் நீக்கி. புதிய புல்லென முளைத்து பேராலமரமென வளர்ந்து நிற்கிறேன். மரியாவோ , மாக்டலீனோ , யோசப்போ அவரை தடுக்க முயற்சிக்கும் பொழுது அவரால் அவர்கள் ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்கு அவர் கொடுத்த பதில் 'நீங்கள் யார் , உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நான் பிதாவின் புதல்வன்' என்பதே" இதனை இன்னொரு மெல்லிய குரலில் நடித்துக்காட்டினான். "அந்த அவமானத்தை , வலியை காலம் முழுக்க இருக்கும் சங்கடத்தை நான் என் குடும்பத்திற்கு கொடுக்க விருப்பமில்லை. ஆதனால் கேட்டுக்கொள்ளுங்கள் நான் செல்கிறேன் ,  குடும்பத்தின் தடையின்றி....குடும்பமில்லாதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பாதியில் குடும்பம் அழிக்கப்பட்டவர்கள் வரம்பெற்றவர்கள். நான் வரம் பெற்றவன் , நானே கொடுத்து நானே பெற்றுக்கொண்டேன்" கைகளை இறக்கி மீண்டும் குறுகிக்கொண்டான். 


"என்ன சார் பிரசங்கம் பண்ணிட்டுருக்கான். அல்லேலுயா சொல்லலண்ணா விடமாட்டான் போலயே" என்று தாமஸ் பீதியுடன் சிரித்துக்கொண்டே வெளியே சென்றான். அவன் கைகள் கழுத்திலிருந்த சிலுவையை பற்றிக்கொண்டிருந்ததை கிரிதரன் கவனித்தான். பிறகு பேசாமல் ஏசுதாஸன் படுத்துக்கொண்டான்.


பகுதி 2


கிரிதரன் வீட்டிற்குள் செல்லும் பொழுது மனைவி தூங்கிவிட்டிருந்தாள். குழந்தைகளும் தூங்கியிருக்க வேண்டும். அந்த அமைதி அவனுக்கு நிம்மதியைக்கொடுத்தது. இரண்டு வருடங்களாக அவன் நேரமாகி வரும் நாட்களில் பய உணர்ச்சியுடனே வருகிறான். உடை மாற்றி சாப்பிட உட்காரும் பொழுது அவன் மனைவி எழுந்து வருவது தெரிந்தது.


"மனுசாளுக்கு வேல வைக்கலன்னா பொழுதடையாது இந்தாளுக்கு...சீக்கிரம் வரச்சொல்லி வரச்சொல்லி பாத்தாச்சி....நாம கண்ணு முழிச்சி கிடக்கணும்...இவனுக பைய வருவானுங்க....சீ மனச்சாட்சி எல்லாத பயக்க. ஒரு நாள் பொழுது நிம்மதியா கண்ணடையுதா" இந்த பேச்சுகளுக்கு அவன் பதில் சொல்லி ரொம்ப நாள் ஆகிறது. சாப்பிட்டுவிட்டு படுக்கைக்கு சென்றான். அவளும் வந்து படுத்துக்கொண்டாள். 


"எல்லாத்துக்கு இந்த மனுசன புடிச்சி கெஞ்சனும். வளத்து வச்சும் ஒரு புரயோசனமும் கெடையாது" என்றாள். உடைகள் ஒவ்வொன்றாக தோலைக்கிழித்து எறிவது போல கழற்றி தூக்கி எறிந்தான். அவளும் அதேபோல செய்தாள். இயந்திரத்தனமான செயல் நமக்குள் ஒர் நிம்மதியைக் கொடுக்கிறது. இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று அறுதியாக சொல்லிவிடமுடியும் ஒன்றை நாம் எளிதாக செய்து முடித்து விட முடியும். இயந்திரங்கள் தங்களுக்கான விதிகளின் மட்டுமே இயங்குபவை அதன் கட்டுப்பாடுகளும் அதனிடத்திலில்லை. அவனே ஆரமபித்தான். கீழிருந்து மேல் சென்று முடித்ததும் அவள் திரும்பி படுத்துக்கொண்டாள். வேலை முடிந்தது.  


அவன் ஏசுதாஸின் டைரியை மங்கிய விளக்கொளியில் புறட்டிக்கொண்டிருந்தான். சில கிறுக்கல்கள் புரிவது போலிருந்தன "இந்த கண்ணாடி என்னை அடையாளம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு நான் ஓர் டாக்டர். ஆனால் உற்றுநோக்கும் பொழுது உங்களுக்கு திகைப்பூட்டும் ஓர் உருவம் தெளிந்து வரும். ஆம் வெண் அங்கியுடன் மென்னையான தாடி காற்றில் அசைய கனிந்த கண்களுடன் நிற்கும் சுதன். கைகளை தூக்கி அபய முத்திரை காட்டுகிறேன். வந்து ஏற்றுக்கொள்ளுங்கள். பாவிகளே மனந்திருந்து வாருங்கள்". அவன் ஆச்சரியப்படவில்லை. இது இப்படிதான் இருக்குமென்று யூகிக்க முடிந்தது. 


ஏசுதாஸன் பேசிய வார்த்தைகளை அசைபோட்டான். "தன்னை ஓர் புனித நிலையில் நிறுத்திக்கொள்ள முயல்கிறான். அதற்கு தடையாக இருப்பவர்களை கொல்வது சாதாரண விசயமாக இருக்கிறது. அந்த செயலுக்குள் இருக்கும் அவன் சார்ந்த பிணைப்புகளை இல்லாமலாக்க அவனுக்கு அந்த சொற்கள் தேவைப்பட்டிருக்கலாம். அதனை முடித்தவுடனே அவன் உறங்க சென்றதும் அந்த இளைப்பாறல் கிடைத்ததன் காரணமாகக்கூட இருக்கலாம். கொலைக்கான காரணம் கிடைத்துவிட்டது செய்த முறையும் கிடைத்துவிட்டது. ஆனால் மனநிலை சரியில்லாமல் செய்ததை காரணம் காட்டி அவனை வெளிக்கொண்டுவந்து விடலாம். ஆனால் என் மனம் இப்பொழுது அவனுக்கு சாதகமாக இயங்க ஆரம்பிக்கிறது. அவனை காப்பாற்ற நான் முயல்கிறேனா? அப்படித்தான் நினைக்கிறேன். இல்லை அவன் செயல் நேரடியாகவே என்மேல் ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளது. ஆம் நானும் அவன் செய்ததைப்போலவே செய்தால்தான் என்ன. என் தளைகள் அறுந்து நான் சுதந்திரமாக பறக்க முடியுமா ? நினைத்துப்பார்க்கவே நிம்மதியாகவுள்ளது. யதார்த்தத்தில் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை நான் எழுதும் கேஸின்படி அவன் ஜெயிலில் கிடந்து வாழ்க்கையை முடிப்பான். திரும்பவெல்லாம் உயிர்த்தெழுந்து வரமுடியாது" கிரிதரன் புன்னகைத்துக்கொண்டான் ,அது உண்மையானதாக இருந்தது. "ஆனால் நான் அதனை செய்ய முடியும்" அந்த எண்ணம் அவனை திகைப்படைய வைத்தது. அதனை நம்ப மறுத்தான் ஆனால் அந்த எண்ணம் மீண்டும் அதிகமான வீரியத்துடன் வந்து முட்டி நின்றது "அதே விடுதலையை நான் அடைய செய்ய வேண்டியது எந்த ஒரு பிரகடனப்படுத்தலும் இன்றி , இது போன்ற பொய் காரணங்களின் பூச்சின்றி , மூவரையும் கொல்வது. பின்பு நான் உறவினர்களின் நண்பர்களின் இரக்கத்தைப்பெற்று  போலீஸ் வேலையையும் விட்டு நிம்மதியாக காடுகளில் அலையலாம். ஆண்டவன் அருளிருந்தால்"


காலையில் எழுந்திருக்கும் பொழுது இரவு வந்த எண்ணங்கள் பதற்றமூட்டுவதாக இருந்தது. குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு கிளம்ப தயராகிக்கொண்டிருந்தனர். மனைவி அடுக்களையில் இருந்தாள். அந்த எண்ணத்தை அப்படியே போட்டு அமுக்கிவிட்டு குளிக்கச்சென்றான். கைகள் நடுங்கிக்கொண்டேயிருந்தன.


பகுதி 3


தாமஸ் அன்று இரவு வீட்டிற்கு வந்ததும் சட்டையைக்கூட கழற்றாமல் கிழக்காக மாட்டப்பட்டிருந்த சிலுவையின் முன் மண்டியிட்டு ஜெபம் சொல்ல ஆரம்பித்தான். காணக்கூடாததை கண்டபயத்தின் கைகள் நடுக்க வாய் ஜெபம் முனங்க துடித்துக்கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்து மெத்தையில் அப்படியே படுத்துக்கொண்டான். சிலுவையை பார்க்கவும் பயமாக இருந்தது. ஏசுதாஸனை வைத்து பூட்டை சரிபார்த்துக்கொண்டு கிளம்பும் பொழுது அங்கு அவன் மட்டுமே இருந்தான். தாமஸ் ஏசுதாஸனிடம் பேசவோ சீண்டவோ பயந்திருந்தான். 


கைதி அறையின் அருகில் சென்றது ஏசுதாஸன் எழுந்து வந்தான்.


"பயப்படாதே....உனக்கு பெலமாக நான் இருப்பேன்." என்றான்


கையிலிருந்த பை நழுவி கீழே விழுந்தது. தடுமாறி அதை எடுத்து திரும்ப நினைத்தவன் கைகளை ஏசுதாஸன் பற்றிக்கொண்டான். "உனக்கு புதிய ராஜ்ஜியம் வேணும்னு எனக்கு தெரியும். நான் தான் வரணும் கையில பட்டாக்கத்தியோட". பதறியடித்துக்கொண்டு வீடு வரைக்கும் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தான். உள் அறை கட்டிலில் விழுந்து கிடந்த அம்மாவின் முனங்கல் ஒலி கேட்டு கையில் அலுமினிய கோப்பையுடன் சென்றான். அவளை தூக்கி பக்கவாட்டில் கிடத்தி நரகலை அப்படியே அள்ளி அந்த பாத்திரத்தில் போட்ட விதம் , வருடக்கணக்கில் பழகிய செயலை செய்வது போலிருந்தது. அவளது முகவாய் வலப்பக்கம் கோணி எதிர்பக்க கண் சிறுத்திருந்தது. கருவிழி அசைவை வைத்து தேவையானதை செய்தான். கஞ்சி குடுத்து படுக்க வைக்கும் பொழுது அவள் சிறுநீர் கழித்திருப்பது தெரிந்தது. வேண்டா வெறுப்பாக அவளை எரித்துவிடும் படி பார்த்துக்கொண்டே துணிமாற்றி படுக்க வைத்தான். அந்த கோணல்மாணலான உடலிலும் உயிர் வாழ்வதற்கான இச்சை இருந்தது அவள் சாப்பிடும் பொழுது நன்றாகவே தெரியும். அவளை ஒரு சொல் சொல்ல வழியில்லாமல் முன்னறைக்கு வந்து பைபிளை அருகில் வைத்துக்கோண்டு கஞ்சி குடித்துக்கொண்டிருந்தான். சிலுவையின் மேல் எரிந்து கொடிருந்த சீரோ வால்ட் பல்பு அழுது கொண்டிருந்தது. வசனம் "கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்" ஒட்டப்பட்ட அழுக்கேறிய ஸ்டிக்கரை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முழுதாக நம்பும் ஓர் உன்னதமான வசனமது.


அவன் நினைத்துக்கொண்டான் "ஒரு வேளை அவந்தான் அவரா ?" அந்த எண்ணம் பித்து பிடிக்க வைப்பதைப்போலிருந்தது. ஞாயத்தீர்ப்பு நாளன்று நான் செய்தது தவறாகக்கூடாது" வண்டியை எடுத்து கிளம்பி விட்டான். குளிர் காற்று முகத்தில் அறைய "எனக்காக அம்மைக்காக இது நடக்கட்டும். அவர் எழுந்து வரட்டும். என் கைகளால் அவர் வெளியேறட்டும்" என்று எண்ணிக்கொண்டான். துடுக்குத்துனமான எண்ணம் வந்தது "அவர்தான் வெளிநாட்டுல வெள்ளக்காரரா பொறந்தவராச்சே இப்பொ இங்க எப்படி" ஆனால் அந்த எண்ணத்தை தகர்க்க அதிக நேரம்பிடிக்கவில்லை.


அவன் ஸ்டேசனுக்குள் நுளையும் பொழுது அரவமற்று ஒரேயொரு போலீஸ் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான். ஏசுதாஸன் தூங்காமல் வாசலையே பார்த்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்ததால் உள் நுளைந்தவுடன் அவனை பார்வையை சந்திக்க நேர்ந்தது. அது நெருப்பில் எரித்துவிடும் கோவத்தில்லிருந்தது. அருகில் சென்று கம்பிக்கு இந்தப்புறம் மண்டியிட்டமர்ந்தான்.


முகத்தில் பக்தியின் பாவனை. 


"தேவனே"


"புரிந்ததா.."


"வெளிய போட்டுருந்த முகமூடி அது.....என்ன நானே அந்தி கிருஸ்துவா ஆக்கி வச்சுக்கிட்டேன்"


"நீ நம்பிக்கைவாதி என்பதை நான் அறிவேன். நீ வருவாய் என்பதையும் நான் அறிவேன்"


"எனக்க அம்ம கட்டுல்ல விழுந்த அண்ணையோட நான் சர்ச்சுக்கு வாறத விட்டுடேன். இண்ணையோட ஏழ வருசம்" என்று முசு முசுவென்று அழுதான்.


"நான் சொல்கிறேன்....ஆட்டுக்குட்டிகள் எனைச்சுற்றி நிற்க அங்கே தவறிப்போன ஓர் ஆட்டை என் கைகளில் வைத்துள்ளேன். அதற்கான வழியும் ஜீவனும் நானே"


நெஞ்சில் கைவைத்து அழுதுகொண்டேயிருந்தான். ஏசுதாஸனின் முகத்தில் காலையில் கண்ட அதே போன்றதொரு சாத்தானின் சிரிப்பு எழுந்து அமிழ்ந்தது.


"ராஜ்ஜியம் திறந்திருக்கிறது....உன்னால் அம்மையை அங்கு அழைத்துச்செல்ல முடியும்....என் வழியில் வந்து ஜீவனுக்குள் அவளை கலந்துவிடு. உனக்கும் விடுதலை"


"என்ன மன்னிச்சிருங்க....இந்த அடி போட்டி அடிச்சுட்டனே..." என்று வாயை பொத்திக்கொண்டான். கண்ணீர் வழிந்து ஏசுதாஸனின் கால்களுக்கருகில் ஊர்ந்தது.


"அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்படும்...." என்று புன்னகைத்தான்


தாமஸ் விழிவிரிய அதனை கேட்டுக்கொண்டேயிருந்தான். பின் எழுந்து வீடுநோக்கி சென்றான்.


கட்டிலில் அம்மை மூச்சற்று கிடப்பதை தாமஸ் பார்த்துக்கொண்டிருந்தான். கைகளால் நெரிக்கப்பட்ட கழுத்து குழி விழுந்து கிடந்தது. அவளின் இச்சையற்ற கண்கள் அவனை கவனித்தன.


பகுதி 4


மூன்று பேரையும் தனித்தனி அறைகளில் அடைத்து வைத்திருந்தனர். நடு அறையில் ஏசுதாஸன் , வலது புறம் கிரிதரன் இடப்புறம் தாமஸ். கிரிதரன் மொத்தமாக ரத்தத்தில் குளித்து காய்ந்திருந்தான். அவனால் தாமஸையோ மற்ற யாரையும் பார்க்க முடியவில்லை. சுவற்றைப்பார்த்து அமர்ந்திருந்தான். ஒற்றையறையில் அடைத்திருந்தால் ஒருவரையொருவர் கொன்றுவிட வாய்ப்பிருந்தது. கிரிதரன் ஏசுதாஸனை கழுத்திலேயே மிதித்து கொல்ல முயலும் போது மற்ற போலீஸ்காரர்கள் அவனை பிடித்து மற்றொன்றில் அடைத்தனர். தாமஸ் அவனாகவே வந்து ஏசுதாஸின் முன் மண்டியிட்டிருக்கும் பொழுது அவர்கள் பேசும் விசயங்களிலிருந்து புரிபட அவனையும் பிடித்து அடைத்து வீட்டில் அவன் அம்மையின் உடம்மை கைப்பற்றினர்.


கிரிதரன் அவனுடைய கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதில் மனைவி குழந்தைகளின் ரத்தத்தை தனித்தனியாக கண்டுபுடிக்க முடிந்தது. அவர்களை அவன் அடித்தே கொன்றிருந்தான். 


அதன் குற்ற உணர்ச்சி இருந்தது. அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கொன்ற காரணத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அழுது கொண்டிருந்தான். தாமஸ் அறையினுள் ஏசுதாஸனின் அறையை நோக்கி மண்டியிட்டு செபித்துக்கொண்டிருந்தான். 


ஏசுதாஸனின் வாயின் வழி வெளிவந்த ரெட்டை நாக்கு உள்செல்வதை மற்ற இருவரும் பார்க்கவில்லை. ஏன் அவனுக்கே கூட தெரியாமலிருக்கலாம்.

No comments:

Post a Comment