நான் அந்த அறையை விட்டு வெளியே வரும் பொழுது அங்கு யாரும் இருக்கவில்லை. அந்த விடுதியின் மூன்றாவது மாடியின் வராண்டா கண்ணாடி போல என்னுருவத்தை என் இரட்டை நிழலென பிரதிபலித்தது. அறைகளளின் வெளிச்சுவர்களில் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது. நான் நடப்பதை நிறுத்தவேயில்லை எங்கு செல்கிறோம் என்ற எண்ணம் இல்லமால் காற்றடிக்கும் திசைகளில் திரும்பி தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன். தெருக்கடைகள் மூடத்தொடங்கியிருந்தன. பசியெடுத்தது இந்தத்தருணத்தில் எனக்கு பசிப்பதும் சாலையோரக்கடைகளின் குழப்புவாசனையில் மனம் செல்வதும் என்மேல் அருவருப்பை உருவாக்கியது. பின் பசி இயற்கை உபாதை நான் செய்வதற்கொன்றுமில்லை என்று எண்ணியவாறே நடந்தேன். இறுதியில் கடல் வந்தது அந்த நீண்ட கடற்கரையில் மக்கள் கடலை ரசிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் தற்சமயம் யாரும் இல்லை. முழு நிலா தலைக்குமேல் மேகங்களன்றி பளீரிட்டது. அவள் முகம் ஞாபகம் வந்தது. அதன் சிறு சிறு பருக்கள் பெரிய மூக்கு விரிந்த கண்கள் இப்பொழுது அநத அறையில் இரத்தத்துடன் இருப்பதை நினைத்துப்பார்த்தான். கைகளில் இருந்த ரத்தக்கறையை உதறிக்கொண்டெ நடந்தான். அவள் தலைக்குமேல் தன் கைகளை தூக்கும் போது அதை அவன் நிறுத்தவே நினைத்தான் , ஆனால் எங்கிருந்தோ வந்த அந்த சொற்கள் ஆம் அந்த சொற்கள் அவனை செய்! செய்! என்று அவன் மூளையின் ஒவ்வொரு நரம்பாய் சுண்டி இழுத்தது.
சொற்கள் எப்படி என்னுள் என்றுமே அசையாத , எடுத்து திரும்ப வெளியே போடப்படவே முடியாத ஒரு கனத்த இரும்பு குண்டு போல இருக்கின்றது. மாறாக அதன் எடை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது.
"இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்று மக்கா" என்று அவன் ஐந்து வருட நண்பன் தோளில் கைவைத்தவாறே அவன் "தாயோழி" என்ற வசையை மேலதிகமாக இரண்டு முறை கூறிய அடுத்த நாள் அதை சொல்லி முடித்தான். அடுத்த பதினேழு வருடங்களில் அவனைக்கண்ட போதெல்லாம் அவனுக்குத்தெரியாமல் எனக்குள் அவன் முகத்தில் காறித்துப்பியிருக்கிறேன். நான் தாயோழியா ? இல்லை. ஆனால் அந்த சொல்லை கடந்து சென்றிருக்காலாமே. ஆனால் அப்படிப்பட்ட சொற்கள் என்றூமே அணையாத சிறு கங்கு போன்றது. அதன் எரிச்சலும் கணப்பும் நெஞ்சினுள் இருந்து கொண்டேயிருக்கின்றது. நிறைய தண்ணீர் குடித்தாயிற்று.
கைகளில் இரத்த ஈரம் காய்ந்து வரண்டிருந்தது. அதனை கடற்கரை மணலில் அமர்ந்து உதிர்த்து மணலில் கலந்துகொண்டிருந்தான். மூன்று வருடங்கள் அவளை பார்த்து பேசத்தயங்கி பின் சொன்ன காதலை அவள் ஒப்புக்கொண்டிருந்தாள். அவளின் நெஞ்சில் அவன் கதைகள் எழுதும் பென்சிலால் குத்திக்கொண்டிருக்கையில் அவன் பார்த்தது அந்த கைநகங்கள். மெனக்கெடலே இல்லாமல் அவள் அழகாகிறாள். அவளை நான் அங்கு அழைத்து வந்ததே இதற்கு தானா ? நான் அவளிடம் முன்பு ஒரு அறை எடுக்காலாம் என்று கூறியதும் அவளும் தயங்கவில்லை. அவள் காதலை ஒத்துக்கொண்டு நான் அவளை கொன்ற இந்த நாளுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன.
கடல் அலைகளால் கால் நனையாமல் உட்கார்ந்திருந்தான். அலைகள் அந்த சொற்களை அவனுக்கு முன்னும் பின்னும் எதிரொலியாகா அளிந்துகொண்டிருந்தது. மனிதர்கள் ஏன் தங்கள் கோபத்தை விழிகளுள் வாயினுள் ஆன்மாவினுள் ஒளித்துவைக்கிறனர். அதொரு இயற்கை உணர்வில்லையா. நான் இப்பொழுது இயற்கையயானவன் இயற்கைக்கு அடிபணிந்தவன்.
கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். அமைதியுடன் கடல் முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டிருந்தது. இன்று காலை கோவிலுக்குள் இருக்கையில் என்னிடம் கேட்டாள் "என்ன நல்லா பாத்துக்குவியா" நான் தலையசைத்து புன்னகைத்து ஆம் என்று மறுமொழி அளித்தேன். அதும் சொற்கள் தான் அவை ஒரு இனிமையான அனுபவமாக அவள் இறந்தும் எனக்குள் இருக்கின்றதே. அன்றோரு நாள் கட்டிலில் நான் ஓய்ந்து அமர்ந்திருக்கையில் "அவ்ளோதானா தம்பி சுருங்கிட்டானா" என்று ஒரு ஏளனப்பார்வையை விடுத்து நமட்டுச்சிரிப்பொன்றை முகம் பொத்தி சிரித்தாள்.
அதற்காக ஒருவன் தன் பொறுத்திருந்து நேரம்பார்த்து காதலியைக்கொல்வானா ? என்றால் ஆம் என்பதே என் பதிலாக இருக்கும் அதற்கு நானே சாட்சி. உண்மையில் நான் அவளை கொல்லவில்லை அந்த சொற்கள் ஆம் அவைதான் அவளை கொன்றது. சைத்தான் நமக்குள் புகும் ஒற்றைக்கணத்தை நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் நூறு நூறு முறை இதனை எழுதியுமிருக்கிறேன். ஏசுவின் முன் தசாசவஸ்கியின் முன் மண்டியிட்டு கண்ணீருடன் கதறியிருக்கிறேன் ஆனால் இன்று நானும் கொலைகாரன். ஆனால் இயற்கையின் முன் யார்தான் கொலைகாரர்கள் இல்லை. தினமும் கோடி ஆடு மாடுகளை அறுக்கிறார்கள். கேப்டாரின்றி அவை செத்து மடியும் போது நாம் எதனையும் யோசிக்கவில்லையே! அதற்கொரு காரணம் இருக்கின்றது வயிறு வாய். எனக்கும் ஒரு காரணம் இருக்கின்றது சொற்கள். நான் கோடி பேரைக்கொல்லவில்லையே.
கடற்காற்று மணலை அள்ளி அவன் முகத்தில் சாரல் போல வீசிக்கொண்டிருந்தது.
சற்று தூரத்தில் இருந்த இருக்கையில் மின் விளக்கின் கீழே ஒருவர் அமைதியாக அணிந்திருந்த வெள்ளை வேட்டி சட்டை காற்றில் பறக்க அலைகளை மட்டுமே அறிந்தவராக கடலை நோக்கிக்கொண்டிருந்தார். அந்த நடு இரவில் கடற்கரையில் மக்கள் இருக்க சாத்தியமில்லை என்று எண்ணியவாறே அவர் அருகில் வந்து நின்றான்.
தன்னை "நம்பிக்கை துரோகி" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
"இப்படி ஒரு பேரா"
"நீங்கள் உதிர்ப்பவையே எங்களுக்கு பெயர்கள்"
"புரியல , என்னமோ"
"ஒரு நாள் உங்களை பணம் கொடுப்பதாக கூறி ஒருவர் ஏமாற்றிய போது நீங்கள் நினைத்த சொற்கள் அவை"
"அது எப்டி உங்களுக்கு தெரியும் , நந்தன உங்களுக்கு தெரியுமா"
"இல்லை எனக்கு யாரையும் தெரியாது உங்களின் அந்த வார்த்தைகளை தவிர"
இவன் எங்கேயோ என்னை ஒட்டுக்கேட்டுள்ளான். தெரியாதது போல நடிக்கிறான். ஆனால் அது நடந்தது சுவீடனில் வேலை செய்யும் பொழுது. ஒருவேளை நந்தனை தெரிந்திருக்கலாம்.
"இங்க என்ன செஞ்சிட்டிருக்கீங்க , அது இந்த நேரத்துல"
"உங்கள் நெஞ்சமே எங்களை போன்றவர்களின் வீடு நாங்கள் அடிக்கடி சந்திப்பதுண்டு , இந்த கடற்கரையில் நீங்கள் நிறைய பேரைச்சந்திக்கலாம்"
ஒரு வேளை மனம் பிசகியிருக்காலாம் அவனுக்கா இல்லை? எனக்கா?
பரிதாபத்துடன் நடக்க ஆரம்பித்தான். நிலா நடுவானில் இருந்து கிழக்கு நோக்கி கீழிறங்கி வந்திருந்தது. கடல் காற்று சற்று தணிந்திருந்தது. குளிருக்காக கட்டிருந்த கைகளை விடுவித்து தன்னை சகஜப்படுத்திக்கொண்டான். மின் விளைக்கை தாண்டியதும் இருள் அவனை இழுத்துக்கொண்டதென உணர்ந்தான். அந்த மனிதனிடன் இருந்து தனித்து வந்தது அமைதியைக்கொடுத்தது. ஆனால் அந்த இருட்டினுள்ளும் அவனால் ஆங்காங்கோ தனித்தனியாய் அதே மனிதனைப்போன்ற உருவமுடைய மனிதர்கள் கடற்கரையில் அமர்ந்தும் நின்றும் கடலை நோக்கியிருந்தனர். ஒரு நொடி கனவில் இருந்து உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அவர்களின் வரவு அவனுக்கு ஒவ்வாமையைக்கொடுத்தாலும் தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டு ஒருவரை அணுகினான். அவன் பேச்சை ஆரம்பிக்கும் முன்னே அவர் "நான் செத்தொழி"
"உனக்கு ஏ அந்த பேரு"
"நீங்கள் ஒரு பெண்ணை நடத்தையில் சந்தேகப்பட்டு செத்தொழி என்று கூறிய சொற்கள்"
ஆம் அவன் சொல்வது சரியே என் அம்மாவை சிறு வயதில் இன்னொருவருடன் இருக்கும் பொழுது பார்த்த நான் என் மனதிற்குள் கூறிய வார்த்தை. என்னைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பேயில்லை.இது ஏதோ விபரீதமாக இருக்கின்றது. இவர்கள் என் உருவெளிகாட்சிகளே. அந்த கொலை என்னை உலுக்கியிருக்கிறது. நிதானத்திற்கு வந்தாக வேண்டும்.
"நீ என்னோட கற்பன , நான்தா உன்ன உருவாக்கியிருக்கேன் , நா நெனச்சா உன்ன இப்பொவே இல்லமாக்க முடியும்"
"உங்களால் அது முடியாது நாங்கள் எங்களுக்குள் அதனை விவாத்திருக்கிறோம். உங்களால் நிராகரிக்கவே முடியாதவர்கள் நாங்கள்"
நான் இப்பொழுது சம நிலைக்கு வரவேண்டும் . இவை என்ன ? உண்மையிலேயே இவன் என் கண்முன்னே இருக்கிறானா இல்லையா ? வேறு யாரிடம் கேட்டால் தெளியலாம். சற்று தள்ளி நின்ற இன்னொருவரிடம்
"இவரு உங்க கண்ணுக்கு தெரியாரா ?"
"நான் கண்டாறோழி , நீங்கள் ஒரு பெண்ணை படுக்கையில் உங்களுடன் இருக்கும் பொழுது கூறியது. நானும் செத்தொழியும் நண்பர்கள்" ஒருவருக்கொருவர் மென்சிரிப்பை பகிர்ந்துகொண்டனர்.
அங்கிருந்த ஒவ்வொருவராக நான் கண்தொட்டு உணரும் கணத்தில். அந்த சம்பாசணை எங்களுக்குள் ஆரம்பமானது.
"நான் சவம்"
"அனாதை ஆசரமக்குழந்தையை நான் அழைத்தது"
"நான் முட்டாள்"
"என் எண்ணத்தில் சக எழுத்து நண்பன்"
"நான் கோம்பையன்"
"என் ஆசிரியர்"
"நான் புண்டை"
"என் கல்லூரி மாணவிகளில் பலர்"
"நான் புழுகினி"
"நான்"
"நான் கருமி"
"நான்"
"நான் இனியவள்"
"என் காதலி"
"நான் மென்மையானவள்"
"என் காதலி"
"நான் தாய்"
"என் காதலி"
"நான் நாக்குட்டி"
"என் காதலி"
"நான் சாவுட்டி நாயே"
"என் காதலி"
அவன் மயங்கிய இடத்தில் இருந்து விழிக்கையில் அங்கு யாரும் இருக்கவில்லை காதுகளில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிடும்பொழுது மீண்டும் விழித்துக்கொண்டான்.
அவர்கள் அனைவரும் அவனைச்சுற்றி நின்றிருந்தனர். அதிர்ச்சியில் உறைந்திருந்த அவனுக்கு அவர்கள் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள இரண்டு முறை கண்களை நன்றாக கசக்க வேண்டியிருந்தது.
அவர்கள் இருப்பதை அறிந்ததும். அவர்களப்பார்த்து கை நீட்டி தூஷணங்களை வீசயெறிந்தான்.
அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடற்கரையில் ஒவ்வொருவராக முளைத்துக்கொண்டேயிருந்தனர். எறும்புக்கூட்டம் ஒரு சர்க்கரைத்துளியை நோக்கிச்செல்வது போல புன்னகையுடன் அவர்கள் அவனை அணுகி பாசத்துடன் அரவணைத்துக்கொண்டனர். ஒவ்வொரு மணல் துளிக்கும் ஒருவரென கடற்கரையெங்கும் அவர்களிருந்தனர்.
அவர்கள் விலகி சென்றதும் அவன் அங்கு இல்லமலானான். அங்கு ஒரு வெற்றிடம் மட்டுமே நிரம்பியிருந்தது. அங்கிருந்து இருவர் வெளிவந்தனர்.
தன்னை இன்னொருவரிடம் "நான் தாயோழி" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மென் புன்னகையொன்றை உதிர்த்தார்.
சூரியன் உதிக்க ஆரம்பித்திருந்தது.
இன்னொருவர் தன்னை "நான் மன்னித்து விடு" என்றார்.
No comments:
Post a Comment