Sunday, 3 October 2021

அமிர்தம் - சிறுகதை

நான் இன்று மாலை நடை சென்றிருக்கக்கூடாது. சிவந்த சூரியன் அழகர் மலையின் பின் பதுங்கி நின்று சாத்தானின் உதடுகளுடன் சிரித்ததை நான் உண்மையாகவே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த காலம் என்னை அங்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டது. இப்பொழுது எனக்கு தேவை உடனடியான மூளை அறுவை சிகிச்சை. அதன் மூலம் நான் கடந்த காலத்தை முற்றிலுமாக மறக்கடித்துவிடலாம் என்பதை முன்பே அறிந்திருந்தேன். சுவர்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி வரிசையாக இருபக்கங்களிலும் இருந்த சின்னச்சின்ன வீடுகளின் வாசலில் பெண்கள் அமர்ந்து என்ன கதைகளையெல்லாமோ வாய் வலி தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகம் ஒரே கணத்தில் நவரசங்களையும் புரியும் என்பது எனக்கு வியப்பாகவே இருந்தது. தினமும் காணும் ஓர் காட்சி தினமும் நம்மை குஷிப்படுத்தும் என்பதை நான் அங்கேயே கண்டேன். அந்த குழந்தைகள் அவை ஏன் அப்படி இருக்கவேண்டும்.


******


எங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கண்களை விரித்து இமை மூடாமல் சுற்றும் ஃபேனை பார்த்துக்கொண்டு கழுத்தின் வழி பால் வழிவது தெரியாமல் வாயால் சப்புக்கொட்டிக்கொண்டிருக்கும். அதன் கண்களில் ஒளிவட்டம் தெரிவதாக பக்கத்துவீட்டு அம்மா சொன்னாள். அவள் தெய்வத்துடன் பேசுவதாக என் மனைவியும் ஒத்துக்கொண்டதால் நானும் அதனி ஒத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால் உண்மையாகவே அவன் கண்களி ஒளிவட்டம் தெரிந்தது. எனக்குள் சொல்லிக்கொண்டேன் “தெய்வக்குழந்தை”.என் மனைவி அவனுக்கு பெயர் தெரிவு செய்துகொண்டிருந்தாள். ஆதியும் அந்தமும் அற்ற சிவனுக்கு வைப்பதைவிட அதிக பெயர்களை வசம் வைத்து அதிலொன்றை தேர்வு செய்யும் இலகுவான வேலைடை எனக்குக்கொடுத்து ஒதுங்கிக்கொண்டாள். அப்பொழுது அவனுக்கு ஒருமாதம் முடிந்திருக்கவில்லை. அவனைத்தவிர மற்ற உயிர்கள் இல்லை என்ற உணர்வுடனேயே அவன் முன்பிருந்த உலகிலிருந்து வெளியே வந்து இப்பொழுதும் அதே நினைப்பிலிருந்தான். நாங்கள் நடப்பதும் அவன் முகத்தின் முன் எங்கள் பூதாகர முகத்திய காண்பிப்பதும் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவனுக்கான உலகில் அவன் ஓர் இசைக்கு இயங்க்குவது போல அழுவதும் உறங்குவதுமாக களித்தான். நாங்கள் வெறும் பணிவிடை செய்யும் இயந்திரங்களேன நினைத்துக்கொண்டான் போல.


******


அந்த மாலை இனிதாகவே ஆரம்பித்தது. குழந்தையை கைகளில் எடுத்து தலையைத்தாங்கி கால்களில் அமர்த்திக்கொண்டேன். அவன் என் விரலொன்றை பற்றிக்கொண்டான். அவன் சூட்டுடம்பு ஒருவிதமான போதை தருவதாக இருந்தது. அதில் பூமியிலிருந்து எடுத்து எதையும் கலக்கி உருவாக்காமல் வேறெங்கோ உருவாக்கிய மதுவொன்று வழிந்துகொண்டிருந்தது. அதனை சூடாக நான் உணர்ந்து கனிந்திருந்த கணத்தில் செந்நீலம் நிறைந்த வானில் சிறகின்றி தென்றல் மட்டும் வீச பறந்துகொண்டிருக்கையில் மேகங்களுக்கிடையில் ஒளிந்த திறப்பொன்றில் தொற்றிக்கொள்ள ஏதுவாக ஏணிபோன்ற அமைப்பொன்று நீண்டு கிடந்தது. அதில் தொற்றி ஏறி உள்நுளைந்து எழுகையில் முன் நின்ற அதியுயர வெண் தோரணவாயிலில் உச்சியில் என்னமோ எழுதியிருந்தது. ஆனால் அதனை உற்று அறிந்துகொள்ளும் முன் என் மனைவி அவனை எடுத்து அள்ளி அணைத்து என்னை அனியாயமாக அங்கிருந்து கீழிறக்கிவிட்ட்டாள். கோபமின்றி அவளுக்கு விடைசொல்லி வெளிவரும்போது வானம் நான் கண்ட அதே நிறத்திலிருந்தது என் அடிநாக்கில் அமிர்ந்தமாக இனித்தது. 


******


குழந்தை பிறக்கும் முன் நான் அவள் வயிற்றில் காதுவைக்கும் போது தவறாமல் தன் காதுகளின் இடத்தை சரியாக அறிந்து அதில் ஓர் உதைவிடுவான். “செரியான ஆளுதான் கேட்டியா” என்று மனைவியிடம் சொல்லும் போது அவள் உறங்கியிருந்தாள். இதனை இறக்கி வைத்தால் போதும் என்றிருந்தது அந்த பெண்ணுக்கு. மனம் திருந்தி குழந்தையாக சொன்னான் அவன். நான் மீண்டும் ஆக முடியாது ஆனால் குழந்தை ஒன்றுடன் வளரலாம் அது என்னை மனம் திரும்பியது போல் நடிக்கவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால் அவனுடம் இன்னும் நெருக்கமாக என் வயிற்றினுள்ளூம் உணர்ந்தேன். அவன் துடிப்பதை ஒருமுறை மனைவியிடம் சொன்ன போது அவள் சிரிக்கவில்லை. என்னை ஓர் திருடனைப்போல பாவனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டு அந்த நாள் முழுவதும் பேசாமல் இருந்தாள். 


******


வானை வெறித்தவாறு எங்கள் தெருவை கடந்து சென்றேன். அடுத்த தெருவையும் கடந்து செல்லும் வழியில் தெரு மாற்றம் கண்டு ஒற்றையடி பாதையாக மாறியது. இருபக்கம் நாணற்புற்கள் என்னுயரத்திற்கு வளர்ந்து நின்றன. அதன் இருமுறமும் ஏரியின் நீ ததும்பி மென் அலைகளுடனும் அதன் சத்தத்துடமுன் வானை பிரதிபலித்து கிடந்தது. அந்த பாதை ஓர் பூங்க்காவின் வாசலில் போய் நின்றுவிட்டது. அதனுள் அரளியும் தெங்கும் நெட்டிலிங்கமும் பாதையின் இருபுறகும் வளர்ந்து நின்றது அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதர்கள் என்னமோ விளையாடியும் பேசியும் சிரித்தும் இருந்தது எனக்கு அப்போது மனதில் மதியவில்லை என்று நினைத்து முற்றிலும் தவறானது என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன். அங்குதான் அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். மனம் திரும்பி நான் குழந்தையாக வேண்டுமா என்று நினைத்தும் அங்குதான்.


******


அவன் அதிகாலை மூன்று மணிக்கு பிறந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதில் என்றுமே நாம் நம்பச்சாத்தியமற்ற விசயமே அரங்கியிருக்கிறது. அவன் கைகளில் ஓர் எலிக்குஞ்சு போல் இருப்பதாக சொல்லியே அந்த நர்ஸ் சென்ற போது அவளை அறைந்து சென்னியை பேத்தாலென்ன என்றிருந்தது. ஆனால் அவன் மனித உயிர் போலில்லை என்பது அவன் அழுகையில் தெளிவாகவே தெரிந்தது. அழுகை நின்று அவன் என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான் வாய் ஒரமாக நெளிந்து சிரிப்பைபோன்ற ஓர் முகபாவனையை காட்டி அமைதியானான். அவனிடமிருந்து ஓர் கேள்வி வந்ததாகவே நான் அன்று எடுத்துக்கொண்டேன் “நான் உன்னை காப்பாற்ற வந்தவன். என்னில் நீ கரைவாயாக. செய்வாய் அல்லவா?”. அந்த கேள்விக்கு “ஆம்...ஆம்” என்று பதிலளிக்கும் போது அவ்வளவு சத்தமாக மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அடுத்த அறையிலிருந்தவர்கள் “மண்டைக்கு வழியில்லாத கேசாருக்குமோ” என்றது கேட்கவும் அமையாக நாங்கள் இருந்த அறைக்குள் சென்று விட்டேன். அவளை ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்ததும் “ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய்” என்று கேட்க நினைத்து கேட்காமல் “வலிக்கா?” என்றதும் அவள் பதில்சொல்லாமல் கண்மூடி உறங்க முயன்றாள். அந்த சமயத்தில் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. புண்ணியம் செய்யாதவள். தொட்டிலில் துணியை விரித்து அவனை கிடத்தும் முன் தூங்கிப்போய்விட்டான். அப்பொழுதும் என் நாக்கில் அமிர்ந்தம் இனித்தது. 


******


அந்த பூங்காவின் இடது மூலையில் நின்ற செம்பருத்டியின் பின்னால் ஐந்தாது சிறுவர்களின் தலைகள் தெரிந்தன.அவர்கள் மணலில் குத்தவைத்து வட்டமாக சுற்றி அமர்ந்திருந்தனர். பாம்புகளின் சத்தம் போலிருந்தது அவர்களின் பேச்சு. என்னால் நான் நின்ற இடத்திலிருந்து அவர்கள் பேசுவதை கேட்கமுடியவில்லை. மெல்ல அவர்களில் அருகில் சென்று அங்க்கிருந்த சாய்வு பெஞ்சில் அமர்ந்து எதிரில் தெரிந்த பூத்த பனையின் உச்சியை பார்த்து அமர்திருந்தாலும் காதுகள் அவர்கள் திசையிலிருந்தது.


“அவன கொன்றலாம் மக்கா” என்ற சிறுவனின் மழலை முதலில் விழுந்தது. நான் நகர்ந்து அவர்களருகில் செல்லாமல் சென்றேன்.


“கொல்லணும்….மண்டைல கல்ல போட்டு கண்ணு வெளீல வரணும்” என்றது இன்னொரு குரல்.


“நீ சொல்லு , உன்னையத்தான அடிச்சான்” 


“ஆமா அடிச்சான். இன்னா இங்கதான் ஆடிச்சான். வலிக்கி” என்று ஏனோ அழ ஆர்ரம்பித்தான்.


“பொட்ட மாரி அழாதலா” என்ற குரல் என்னை பயமுறுத்தியது


“இல்ல அழல” என்றவன் கண்களை சட்டையால் துடைத்துக்கொள்ளும் மொருமொருப்பு சத்தம் கேட்டது.


“இந்த கம்பு போதுமா” என்று கையில் எடுத்த குச்சியால் அடித்தால் வலிக்கும் என்பது கற்பனை கதைகளில் மட்டுமே நடக்கும். எனக்கு மூச்சை அடைப்பது போலிருந்தது. என் மகனை நினைத்துக்கொண்டேன். அவன் யார்? என்பது பயம் தரும் புரியாத கேள்வியாயிருந்தது இப்போது. எழுந்து சென்றுவிடமால் என்று நினைக்கும் கணம் அவர்களிலொருவன் என்ன கவனித்துவிட்டான். அவன் கண்கள் விரிந்து என்னைப்பார்த்தன. அது கடவுளால் படைக்கப்பட்ட நான் அறிந்த ஆனால் வெறுத்த ஒன்றைப்போல் இருந்தது. அழுகிய சிவந்த பழம் போல. கைகள் வியர்த்து பெஞ்சில் வழுக்கவும் நான் எழுந்து திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டேன். வானம் ரத்தச்சிவப்பாக மாறிக்கொண்டிருந்தது காற்று வேகமாக வீச என்னால் நடக்க முடியவில்லை. சீக்கிரம் சீக்கிரம் என்ற குரல் பின்னாலிருந்து தள்ளியது. ஓடினேன். 


தெருக்களைத்தாண்டி வீட்டை அடையும் போது மனைவி வாசலில் என்னமோ விற்றுக்கொண்டிருந்த ஒருத்தியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் “பிள்ள தனியாருக்கு” என்று மன்னிப்பை வேண்டுவது போலவும் அதே சமயம் கண்டிப்புடனும் சொன்னாள். ஆனால் அச்சமயம் எனக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. முன்னாலிருந்த அறைக்குள் அவன் தொட்டிலில் தொங்கிக்கொண்டிருந்தான். துணியை விலக்கிப்பார்க்க பயமாக இருந்தது, ஆனால் அதை தெரிந்து கொள்ளும் அவசரமும் என்னை நீரில் அமுக்கியது. பெருமூச்சொன்று விட்டுவிட்டு தொட்டிலைவிலக்கி பார்த்தேன். அதே அழுகிய சிவந்த கண்கள். உதடுகள் நெளிந்த சிரிப்பு. நடக்க முடியாததை நினைத்து அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை.  சேபா மெத்தையில் சாய்ந்து படுத்து உறங்க ஆரம்பிக்கும் கணம் நாக்கு கசந்தது அமிர்தம் என்பது உறைத்தது. 

No comments:

Post a Comment