Thursday 7 October 2021

அகவல் - சிறுகதை


கல்லூரியின் வாயிலில் வண்ணக்கொடிகள் காற்றில் படபடத்தபடி இருந்ததை பார்த்தவாறு நாங்கள் அங்கு நின்றிருந்தோம். முதலையின் வாய் போலவும் அதன் பற்கள் கொடிகள் போலவும் எனக்கு மட்டும் அந்த சமயத்தில் தோன்றியது முதல் நாள் கல்லூரிக்கு சென்ற நாளிலும் தோன்றியது. நாற்பது வயதில் இந்த கல்லூரியை விட்டு வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. பார்த்து சென்றதும் அதுவே கடைசி முறை. எங்களை வரவேற்க நின்ற மாணவர்களின் கண்களில் மகிழ்ச்சியும் ஏளனம் ஒருசேர தெரிவதாக எனக்கு தோன்றியதை நண்பர்கள் யாரும் அச்சமயம் ஒத்துக்கொள்ளவில்லை. முன் மண்டையில் ஒன்றுமில்லாமல் காதுகளை சுற்றி வளைத்து ஓர் வரைபடம் போல இருந்த காய்ந்த பயிர் போன்ற மயிரை தடவி விட்டுக்கொள்ளும் போது அந்த ஏளனப்பார்வையின் காரணம் புரிவதுபோலிருந்தது. நாங்கள் நடக்க ஆரம்பித்த பாதை நீண்டு சென்றது அதன் தொடக்கத்திலேயே அமர்ந்திருந்த பைத்தியம் போன்றிருந்த பிச்சைக்காரனின் முகம் பரிட்சயமாயிருந்தது. ஆம் அவரேதான். கல்லூரிக்கு எதிரில் டீக்கடை போட்டு பொளித்த மணியண்ணன். அந்த தாடிக்குள்ளும் கடைக்கு வருபவர்களை வரவேற்கும் அந்த சிரிப்பு ஒளிந்துகொள்ள முடியாமல் அடையாளம் காட்டியது. அவர் ஏன் அப்படியானார் என்பது தெரியவில்லை. ஆனால் கல்லூரி மாறியிருந்தது மட்டும் நம்பும்படி இருந்தது. அவர் கையில் நான் வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மதிப்பை அவரால் உணரமுடியவில்லை. அதை வாயில் வைத்து சவைத்து சுவை பிடிக்காமல் மண்ணில் எறிந்துவிட்டார். 


எங்களை அது பாதித்தது ஆனால் அந்த அளவுக்கில்லை. "அது நம்ம மணியன்னன் தான?"


"ஆமா மச்சி அந்தாளுதான் , அந்த இளிப்பு தெரியலையா"


"உனக்கு முன்னாடியே தெரியுமா"


"தெரியும் , இங்க போன வருசம் வரும் போது அந்தாளொட வைஃப் இருந்தாங்க. என்னன்னு விசாரிக்க நேரமில்ல. வியாபாரம் போயி கடைசில இப்புடி ஆயிட்டாம்போல" என்று அவன் என்னைப்பார்த்தை பார்க்காதது போல தவிர்த்தேன். 


என் அமைதி அவர்களை தூண்டிவிட அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்தது. ஆனால் என்னால் அப்படி மட்டுமே இருக்க முடிந்தது. அவர்கள் என்னை சீண்ட நினைப்பது எனக்கு புரியாமலில்லை.


"உனக்க ஆள கடைசியா எப்போ பாத்த" என்ற கேள்வி கடைசியில் எனக்காய் வந்து விழுந்தது. அதற்கு அந்த சமயத்தில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயம் இல்லாத்தால் அந்த பாதை எங்களை கொண்டு சேர்த்த பழைய மாணவர்கள் கட்டிடத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட தரைத்தள அறையை விரும்பாமல் போய் சேர்ந்தோம். எங்கள் கல்லூரி அப்பொழுது இருந்ததைப்போல ஏறக்குறைய காட்டிற்குள்ளேயே இருந்தது. மான்கள் மயில்கள் அலைவதை விடுதியிலிருந்து காலையில் பார்க்கலாம். டிசம்பர் ஜனவரியில் பனியிறங்கி நிலத்தை மூடி ஒருவித போதை கொள்ளச்செய்யும். மயில்களில் அகவல் புணர்ச்சியின் கேவல் போல அந்த காலை நேரத்தில் ஒலிக்கும். அப்படியொரு காலையில் அங்கு வந்த ஆனந்தி என்னை கண்டு கொண்டாள். விளையாட்டு மைதானத்தின் மூலையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் பனி நீர் தாங்கி நிற்கும் இலைகளினடியில் மயிலின் கேவலில் மெய்யற்று இருக்கும் போது அவள் அங்கு வந்து சேர்ந்தாள்.


"குளுரலையா?" அவள் குரல் அதே மயிலின் அகவல் போல ஒலித்தது.


அங்கு யாரையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை "இல்ல….சும்மா….இங்க நல்லாருக்கும்" குழறல் குரலில் சொன்ன போது காற்று சுழன்றடித்தலில் அவள் டென்னிஸுக்காக அணிந்திருந்த குட்டை ஆடை காற்றில் பறந்தது. அவள் குறுகி அதனை பிடித்துக்கொண்டே சிரித்தாள். என்னால் சிரிக்க முடியவில்லை. அன்று அதன் பிறகு கல்லூரி நாங்கள் நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை. 


பிறகு வந்த காலைப்பொழுதுகளில் அனேக நாட்களில் நான் அழைக்காமல் அவளே வந்தாள். அக்காலைகளை புதையல் போல என்னுள் யாருமறியாமல் நான் பதுக்கி வைத்துக்கொண்டேன். பொதுவாக கேள்விகள் இருப்பதில்லை அமைதியாக அமர்ந்திருப்போம். குளிர் காதையடைக்கும் உதடுகள் துடித்து நடுங்கும். சிரித்துக்கொள்வோம். அகவல் ஒன்றை தூரமாக கேட்டதும் பனி படர்ந்த தலையை தட்டிக்கொண்டே இருவரும் தனித்தனியாக செல்வோம். 


அன்றும் அப்படியே சென்றிருக்கலாம். ஆனால் நானோ அவளோ அந்த மயிலின் ஆகவலோ அப்படிச்செய்ய அனுமதிக்கவில்லை. எதையும் பகிர்ந்து கொள்ளாத நாங்கள் இருவரும் அதை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அன்றிலிருந்து. கேள்விகள்ற்ற புணர்தலில் மிச்சமிருப்பது அதன் இன்பம் மட்டுமே. நான் இன்புற்றேன். அவளும். ஆனால் அங்கு கேள்வி முளைத்தது. சாதரணமான கேள்விபோல நினைத்து கேட்கப்பட்டது அசுரத்தனமான விளைவுகளை அவளிடம் உருவாக்கியது "என்னை ஏன் பிடிச்சிருக்கு" என்ற போது அவள் என் மேல் அமர்ந்த நிலையில் இயங்க என் முதுகு புற்களில் படிந்த குளிரை உணர்ந்து சிலிர்த்து வளைந்து எழுந்தது. அவள் அசைவை நிறுத்தி மெல்ல இறங்கி உடைகளை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தபடி என்னுடையைதை அணிந்துகொண்டேன். என்றும் இனிமையாக நீர் நிறைந்து  இருக்கும் கண்கள் சுருங்கி யோசனைக்கான பாவனையில் எங்கோ பார்வையை நிறுத்தி நின்றது. வெயில் உறைக்க ஆரம்பிக்கும் கணத்தில் அவள் "எனக்கு தெரியல" எனும் போது கண்கள் இன்னும் கூர்மையாக அந்த பாவனையில் ஈடுபட்டன. எழுந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு அவள் காலைப்பொழுதை என்னுடன் களிக்க வரவில்லை. 


அவள் ஓர் கடிதம் போன்ற ஒன்றை எழுதி என் கையில் கல்லூரி சமயத்தில் கொடுத்தாள். அதனை மற்றவர்களும் பார்த்திருக்க வாய்ப்பிருந்தது. அப்பொழுதே அதை வாசிக்காமல் நான்காக எட்டாக பதினாறாக மடித்து ஒளித்து எடுக்க முடியாதபடி பேண்ட் பாக்கெட்டுக்குக் வைத்து விடுதிக்கு சென்றேன். அன்றிலிருந்து நண்பர்கள் அவளை என்னுடன் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர்.


அதில் அவள் என்னை ஏன் பிடிக்கவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு இனிமேல் வரப்போவதில்லை என்றும் எழுதியிருந்தாள். 


"அந்த கேள்வியை நீ கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை விரும்ப எனக்கு காரணங்கள் இல்லை. ஆனால் வெறுக்க காரணங்கள் நிறைய கைவசம் வந்தன. உன் முகம் உடல் கண்கள் தோளில் புடைத்த எலும்புகள் , தனிமை , அமைதி என எல்லாம் வெறுமையை , வெறுப்பை உண்டாக்கின. நான் இந்த அளவுக்கு உன்னை வெறுத்திருக்கிறேன் என்பது எனக்கே வினோதமாக இருந்தது. நீ அந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்கலாம்". நான் தினம் காலையில் மைதானத்தை தாண்டி செல்வதும் நின்று போனது.


அதன் பிறகு நான் அவளை பார்க்கும் போது கார்த்திக்கின் கைகள் அவள் கைகளுக்குள் பாம்புகளைப்போல பிணைந்திருந்தன. அவளை நான் துளிகூட வெறுக்கவில்லை. அவள் அழுது புலம்ப என்னிடம் வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. கற்பனையில் அவள் கண்களை துடைத்தபடி ஆழ்ந்த மயக்கத்தில் என் கால்களுக்கிடையில் கை சென்றது. நான் எண்ணியிருக்கவில்லை. கார்த்திக்குடனும் அவள் சேர்ந்திருக்கவில்லை. அந்த நான்கு வருடங்களில் இன்னும் இன்னும் என ஆண்கள் அவளுடன் அலைந்தனர். தூரத்திலிருந்து அவளை பார்ப்பதுடன் நான் விலகியிருந்தேன். என் நண்பர்கள் என்னுடன் வைத்து பேசியதை நிறுத்தி அதை மறந்தே போயினர். 


கல்லூரியின் இறுதியாண்டில் பிறகு எனக்கு வழியொன்றும் தெரியாமல்  பெண்கள் விடுதியில் மின் கம்பத்தின் கீழிருந்த சுவரில் கால்கள் விரித்து படுத்து கிடக்கும்படி வரைந்து பாகம் குறித்து தேவிடியாள் என்று அடையாளப்படுத்தி செல்லும் போது தூரமாய் அடி மரக்கிளையில் தெரிந்த இரு கண்கள் செம்புள்ளிகளென என்னை வெறித்தன. மின் கம்பத்தின் கீழ் ஓர் எறும்பைப்போல அங்கிருந்து விலகிச்செல்லும்போது அதன் அகவல் ஒலித்தது. 


அவளை அதன் பிறகு மொத்த கல்லூரியும் ஒற்றை மனித உடல் போல  தேவிடியாள் என்றது. அவளைப்பற்றிய பேச்சை நான் எங்கும் உணர்ந்தேன். கழிவறையில் அமர்ந்திருந்த இருவர் அதைப்பற்றி பேசுகையில் எனக்கு கடைசியாக அவள் என்னிடம் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கல்லூரி முடியும் முன் அவள் மணியண்ணனுடன் சென்று விட்டாள். கல்லூரியை விட்டு சென்ற பிறகு அவளை நான் மறக்காமல் எங்கோ ஓர் அடியாளத்தில் ஒளித்து வைத்திருந்தேன். 


விழா முடிந்து கிளம்பும் போது நான் வரைந்து வைத்த சுவர் கண்ணில் பட்டது அது இன்னும் அழியாமல் அதன் தடங்களை தங்கவைத்து பதிந்திருந்தது. அது என் பிரம்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவளை போன மாதம் ஓர் விடுதியில் இன்னொரு ஆணுடன் பார்த்த போது அவள் அப்பொழுதாவது என்னிடம் வந்து அழுவாளென எதிர்பார்த்தேன். என்னை அவளுக்கு ஞாபகம் கூட இருந்ததாக தெரியவில்லை. அந்த சமயத்தில் அந்த மயலின் கேவல் மண்டைக்குள் ஒலித்தது. நான் காத்திருக்கிறேன். 

No comments:

Post a Comment