Friday 29 October 2021

ஒரு கதை - சிறுகதை

ஜான் சர்ச்சுக்கு செல்லும் வழியை அந்த குளிர்ந்த தட்டையான் கற்கள் இடைவெளியற்று பதிக்கப்பட்ட நடைபாதையில் நடந்தவாறு அவனைக்கடந்து சென்ற ஒவ்வரிடமும் கேட்டு இடுங்கிய விரிந்த பாதையில் வலதும் இடமும் திரும்பி நடந்து சர்ச்சுக்கு வந்து சேர்ந்த போது மாலைச்சூரியன் அதன் மஞ்சள் படலத்தை தட்டையான கற்கோபுரத்தில் உருவாக்கியிருந்தது. அதில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி சாரளம் எதிர் சூரியனாக பிரதிபலித்தது. 


சர்ச்சைச்சுற்றி இருந்த பசும் புற்கள் நிரம்பிய கல்லறைகளில் பெரிதும் சிறிதுமாக கற்பலைகள் நிறுத்தப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் கண்களை இறுக்க மூடி உள்ளெ செய்ய வேண்டியவற்றை ஒருமுறை தனக்குள் நிகழ்த்திக்கொண்டான். தான் செய்ய போவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் தெளிவாக பெரிய கருத்த மேல்கோட்டை இறுக்கி அணைத்து தன்னை தனக்குள் மறைத்துக்கொண்டான். 


மென் ஒளி நிரம்பிய கூடத்தினுள் புகுந்து அவனெதிரில் இடது , வலது மற்றும் மேலே கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட சிலுவையில் ஏசு மாட்டிக்கொண்டிருந்தார். கீழே வலப்புற மூலையில் பாவ மன்னிப்பு தரும் பெட்டி போன்ற அறை தனியாக இருந்தது. 


ஆட்களற்ற கூடத்தில் மெழுகுவர்த்தி சுடர் அசைவுகள் பேசிக்கொண்டன. அதன் முன்னிருந்த பொன்னிற மேரி மாதாவின் கைகளில் குழந்தை ஏசு நிதானமான சிந்தனை ஒன்றில் லயித்திருந்தார். அங்கே சில நொடிகள் அவன் நின்றுவிட்டு பாவ மன்னிப்பு தரும் அறையினருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து வழுவழுப்பான மரத்தரையை தலைகுனிந்து பார்த்துக்கொண்டிருந்தான். கூரையில் பறவைகளின் பழைய கூடுகள் தெரிந்தன. ஏசுவின் சிலுவைப்பாடுகள் வரையப்பட்ட கண்ணாடி சாளரங்கள் வழி வெளிச்சம் சாய்வான ஏணியைபோல தரையோடு சாய்ந்து நின்றன. நீண்ட வரிசையாக பெரிதும் சிறிதுமான குழாய்கள் கொண்ட பைப் ஆர்கன் துடைக்கப்ப்ட்டு சுத்தமாக இருந்தது. 


கைகளை பிசைந்தவாறு சாரளம் வழி வந்த ஒளியை நிமிர்ந்து பார்த்தான். அடர்ந்து வளர்ந்த தலைமுடி கற்றையொன்று முகத்தில் படிந்துபோயிருந்தது. உதடுகள் பிரார்த்தனை செய்வது போல  முணுமுணுத்தன. யாரும் தான் இங்கிருப்பதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் எழுந்து ஓடிவிடலாமென்று எழுந்தான். அதற்குள் பாதிரியார் சாதாரண சட்டையும் பேண்டும் அணிந்து கட்டையாக வெட்டப்பட்ட பொன்னிற தலை முடியுடன் சர்ச்சுக்குள் வந்தது சரியாக இருக்கவும் தன் உடலை சாதாரணமாக்கி அதே பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.   


பாதிரியார் உள்ளெ சென்று நீண்ட வெள்ளை அங்கி அணிந்து கைகளை இரு பக்கமும் விரித்து உடையை சரி செய்யவும் , சிறகு முளைத்த பறவை போலிருந்தார்.


அவனருகே வந்து புன்னகையுடன் "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சாதாரண தினங்களில் இந்த நேரத்தில் மக்கள் வருவது குறைவு. இன்று குளிர் குறைவுதான். நீங்கள் இந்த கனத்த கோட்டை கழட்டிக்கொள்ளலாம்" 


"எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும்?"


"கண்டிப்பாக , கடவுள் எல்லோரையும் மன்னிப்பார். இதோ வருகிறேன்" என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தவர் நின்று "நீங்கள் கிறிஸ்துவை நம்புகிரீர்களா ?" என்றார்.


ஜான் பதில்சொல்லாமல் அமைதியாக இருக்கவும். அவர் மீண்டும் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றார். அறை வெப்பமாக இருந்தாலும் அவனுக்கு குளிருவதைப்போல் இருந்தது. பற்கள் நடுங்குவதை முயற்சி செய்து நிப்பாட்டினான். 


"இங்கு வந்து உட்கார்ந்துகொள்ளுங்கள்" எனும் குரல் அந்த சவப்பெட்டி போன்ற அறையின் மறுபுறத்திலிருந்து வந்தது. அதன் சிறு துளைகள் வழி ஜானை பாதிரியாரால் தெளிவாக பார்க்க முடியும் ஆனால் அவனால் அவரை பார்க்க முடியாது. துளைகளின் முன் முகத்தை வைத்து மண்டி போட்டு அமரும்படி இருந்தது அந்த அமைப்பு. அவன் அமர்ந்த பின் பாதிரிதார் "உம்" என்றார். கண்களை மூடிக்கொண்டு கதை போன்ற ஒன்றை வேகமாக்ச்சொல்ல  ஆரம்பித்தான். 


*


நான் இந்த வடகோடி நாட்டிற்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வார காலம் ஒரு மனிதனுடன் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அதோர் வெப்ப மண்டல நாட்டின் தென் கோடியில் கடல் அலைகளின் துமி தெறிக்கும் ஜன்னல்கள் கொண்ட  தனிமை படுத்தப்படும் சுவர்கள் பெயர்ந்த வெளிர் பச்சை அறை. பெருந்தொற்று ஆரம்பிக்கும் முன் கோவில் சிலைகளை பார்க்கச்சென்ற நான் அவனுடன் அடைக்கப்பட்டேன். 


பார்வை மட்டுமே தாண்டும் இரும்பு கம்பிகளால் ஆன பெரிய ஜன்னல்களுக்கு இந்தப்பக்கம் நான் அமைதியாக அடுத்த நாவலுக்கான தகவல்களை இணையம் வழி சேர்த்துக்கொண்டிருந்தேன். அலறும் ஊளையிடும் சத்ததுடன் அவனை நானிறுந்த அறையினுள் பிடித்து மூவர் தள்ளினர். வெண்மை அல்லது சிவப்பு என்பதை முற்றிலும் அறியாத கருந்தோல். முப்பது வயதுக்குள்ளிருக்கும். மொட்டையடிக்கப்பட்ட நீண்ட தலையில் ஒரு வாரத்திற்கான முடி இளம் புற்களென வளர்ந்திருந்தது. வளைந்த நீண்ட மூக்கும் பெரிய நீண்ட சலவைக்கல் போன்ற பற்கள் வாயிலிருந்து தென்னி எச்சில் வடிந்தது. உள்ளங்கையை இறுக்க மூடி எதையோ உடைக்கும் பாவனையில் ஆட்டிக்கொண்டிருந்தான். முதுகு வளைந்து கூன் விழ ஆரம்பித்திருந்தது.

கட்டமைப்பட்ட மொழியென்றறிய முடியாத சொற்களை திணறி கண்கள் வெளியே விழுந்துவிடும் வேகத்தில் இரைந்தான். ஒரு கணம் என்னைப்பார்த்து முறைத்ததும் நான் புன்னகைக்க முயன்றேன். என்னைக்கட்டிக்கொண்டு நிற்காத கண்ணீருடன் அழ ஆரம்பித்தான். புலம்பல் போல என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. விலகி நின்று "என்ன விடச்சொல்லு" என்ற சொற்களின் ஒலிக்கேர்வை மட்டுமே புரிந்தது. கைகளை விரித்து புரியவில்லை என்றது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும் , திரும்பி அந்த அறையின் வாசலைப்பார்த்து அமர்ந்து கத்தி முடித்து அப்படியே கருவறை குழந்தை போன்ற முகத்துடன் சுருண்டு படுத்து தூங்கிப்போனான். மேரியின் கைகளிலிருக்கும் குழந்தை ஏசுவை நினைத்துக்கொண்டேன். 


சரியாக அவன் விட்ட மூச்சை மீண்டும் எடுக்க முடியாமல் பிணமாக எடுத்துச்செல்லப்படும் போது தூரமாய் நின்று உயிர் வெறும் ஓர் நீலப்பொட்டலமாக மாறிப்போனதை பார்த்துக்கொண்டிருந்தேன்.  நாங்கள் இருவரும் அங்கிருந்த நாட்களில் எனக்கு வேலையிருந்தது, அமைதியாக அமர்ந்து கற்பனை செய்ய ஏதுவான ஓர் வேலை. அவன் என்னிடம் பேச நினைத்தான். கடந்த காலத்தை , எதிர் கால கனவுகளை , வெற்றிகளை , தோல்விகளை , மரங்களை , பறவைகளை என்னிடம் சொல்லி சந்தோசப்படுத்தவும் சந்தோசப்படவும் முயன்றான். ஆங்கிலம் அவனுக்கு விளங்கவில்லை. நான் வாய் குவிப்பதை இமைக்காமல் கவனித்து புரிந்து கொள்வது போல தலையாட்டி மீண்டும் அவன் கதைகளை என்னிடம் சொல்ல ஆரம்பிப்பான். இது நாள் முழுவதும் நடந்தது. எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன். அவனை ஒதுக்கினேன். முகம் கொடுக்காமல் மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் நாளுக்கு பிறகு அவன் என்னை புரிந்து கொண்டான். பேசாமல் ஜன்னலில் தெரியும் தென்னைமரமொன்றின் அசைவை பார்த்துக்கொண்டிருப்பான். 


நான் புன்னகைப்பதையும் நிறுத்திக்கொண்ட போது தள்ளித்தள்ளி அமர்வதையும் ஓர் அரவணைப்பாக எடுத்துக்கொண்டு என்னை பார்த்தக்கொண்டிருந்தான். நாளொன்றுக்கு நாற்பது தடவை என்னுடைய செல்போன் அலறிக்கொண்டிருக்க அச்சமயங்களில் கையை காதில் வைத்து சத்தமாக காற்றுடன் பேசிக்கொண்டிர்ந்தான். விளக்குள் அணைப்பதை அவன் விரும்பவில்லை. நான் விளக்கை அணைத்த பிறகு அவன் தூங்காமல் பயந்து விழித்தே கிடந்தது அடுத்த நாள் காலையில் கண்களில் தெரிந்தது


தவறுதலாக அறைக்குள் வந்துவிட்ட குஞ்சு வௌவாலைப்போல அந்த அறைக்குள் சுற்றிக்கொண்டேயிருந்தான் வெளியேறும் வழி தெரியாமல். சாப்பிடும் போதும் நான் தனியாகவே சாப்பிட்டேன்.  ஆறாவது நாள்  இரவன்று நான் தூங்கச்செல்லும் முன் என் கைகளிலிருந்த ஃபோன காட்டி "அம்மா அம்மா" என்றான். "மாமி , டு யூ வாண்ட் டு கால் யுவர் மாமி ?" என்றதற்கு "அம்மா அம்மா" என்றான். ஆனால் பேசவில்லை. அவன் கையை காதில் வைத்து என்னமோ பேச ஆரம்பித்தான். கண்ணீர் வழிந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் போய் அந்த மரத்தை பார்த்தபடி அமர்ந்துவிட்டான். 


அடுத்த நாள் காலையில் நான் விழிக்கும் போது அன்னையின் அரவணைப்பில் குழந்தை தூங்குவதைப்போல அமைதியாக கிடந்தான். ஒற்றைக்கை காதில் ஃபோன் பேசும் பாவனையில் இருந்தது. நெஞ்சு ஏறி இறங்கவில்லை. உடல் அசைவின்றி உறைந்த ஏரியின் மேற்பரப்பை ஒத்திருந்தது. தொட்டுப்பார்த்தேன் தாங்க முடியாத குளிர்.



*


ஜானின் உடல் நடுங்கியது. அமர்ந்திருக்க முடியாமல் அப்படியே சரிந்து மரத்தரையில் தலை மோத விழுந்தான். பாதிரியார் அமைதியாக அவனை எழுப்பி உடகார வைத்து தட்டிக்கொடுத்து "இதில் நீங்கள் பாவமென்று எதும் செய்யவில்லையே ஜான். எதற்கு மன்னிப்பு ?" என்றார்


"செய்திருக்கிறேன். எனக்கு தண்டனை அல்லது மன்னிப்பு ஒரண்டிலொன்று வேண்டும்"


"இதையொரு பாவமாக நானும் ,  நீங்களும் கருதவில்லை அல்லவா?"


"இல்லை இது பாவம். அவனை அப்படியே விட்டுவிட்டது…."


"உங்களால் முடிந்ததை செய்திருக்கறீர்கள். இதில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தோன்றுவதே உங்களுக்கான பாவம் இல்லையா?" என்று ஜானின் கண்களை நோக்கி புன்னகைபடி தொடர்ந்தார் "ஒரு மனநோயாளிக்கு உங்களால் முடிந்ததை செய்திருக்கிறீர்கள்"


"செய்யக்கூடாததையும்"


"அவன் நோய்த்தொற்றால் இறந்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை"


இருவரும் அமைதியாக கூடம் வெளிச்சம் குறைந்து வெற்றிடம் போல காட்சியளித்தது. 

மெழுகுவர்த்திகளும் அமைதியாக  வான் நோக்கி நின்றன.


பனி உடையும் சத்தம் போல ஜாம் பேச ஆரம்பித்தான் "நான் அவனை வைத்து ஓர் கதை எழுத நினைத்தேன். அவனைப்பார்த்த கணம் முதல் அவன் அடையாளங்கள கவனித்து ஓர் புனைவாக உருவாக்கிவிட எல்லா சாத்தியங்களையும் தயார் செய்து வைத்திருந்தேன். அவன் பிணம் என்னருகில் குளிர்ந்து கிடக்கும் போது நான் அதனை ஓர் உட்சபட்ச நாடகியத்தருணமாக கற்பனை செய்தேன். அதனை கண்டுகொண்டதற்காக பெருமையும் அடைந்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத அபூர்வமான தருணமல்லவா அது ? அந்த கதை இப்பொழுது வெளியாக பெரும் வரவேற்பை பெற்றது" என்றதும் ஜானின் கைகள் குளிரால் நடுங்க ஆரம்பித்தன. அவன் கைகளை பற்றிக்கொண்ட பாதிரியார் சிரித்தார். ஆனால் அவனுக்காக அனுதாபப்படவோ , சமாதானப்படுத்தவோ முயலவில்லை. 


அவர் எழுந்து பாவமன்னிப்பு அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். "வா , உன் பாவத்தை மீண்டும் இங்கிருந்து சொல். கடவுள் உன்னை மன்னிக்கட்டும்" என்றார். 


எதிர்ப்பு காட்டுவது போல எழுந்து "பாவத்தை தீர்மானிப்பதுதான் யார்?"


பாதிரியார் வாய்விட்டு சிரித்து "உங்களுக்கு என்னதான் வேண்டும்" என்றார்


"தெரியவில்லை" என்று விழித்தான். அழுதுவிடுவதைப்போல் இருந்தது அவன் முகம்.


ஜான் எழுந்து வேக வேகமாக சர்ச்சைவிட்டு வெளியேறினான். இரவு படர்ந்த சாலை அவனுக்காக மீண்டும் காத்திருந்தது. நாளை மீண்டும் வர வேண்டும் என நினைத்துக்கொண்டான்.


வீட்டின் படுக்கையறைக்குள் நுளைந்ததும் யாரோ தலையை கோடாரியால் பிளந்தது போல ஒரு காட்சி அவனுள் உருவானது. சர்ச்சில் மேரியின் கையிலிருந்த குழந்தை ஏசுவின் முக்ம் வேறொன்றாக இருந்தது.


நம்பிக்கை முற்றிலும் இழந்தவனாக மெத்தையில் படுத்து தூங்க முயற்சித்தான். அவன் கடவுளுக்கே பாவம் இழைத்திருக்கும் பட்சத்தில் கிடைக்கும் மன்னிப்பை நினைத்துக்கொண்டெ விழித்திருந்தான்.

1 comment:

  1. நாகர்கோவில் பகுதியில் இருந்து புதிது புதிதாக அற்புதமான இலக்கியவாதிகள் உருவாக்கி வருகிறார்கள்.
    அற்புதமான சிறுகதை.
    3ஆம் பத்தியிலேயே க்ளாஸிக் டச் கொண்டு வந்து விடுகிறார் - இவான் கார்த்திக்.
    ஒரு பூரணமான கதை - கிராமங்களில் நிலவும் சாதீயக் கண்ணோட்டத்தை உள்ளபடியே வரைந்து இருக்கிறார் சொற்களால். https://solvanam.com/2022/01/23/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/

    ReplyDelete