Monday 11 October 2021

மயக்கு - சிறுகதை

 எனக்கு வெண்சிறுகுகள் மெல்ல முளைத்து வளர்ந்து நிலத்தின் மேலெழும்பி அப்பொழுதுதான் பறக்க ஆரம்பித்திருந்தேன். கால்களில் இருப்பை மறந்து அவற்றின் தனிமையையும் உணர்ந்து பறக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது உண்மைதான். ஆனால் எதிர் காற்றிற்கு இறகுகள் மென் அலைகளென எழும்பி தழுவலாய் அடங்குகையில் நிலம் அதன் உண்மைத்தன்மையை இழந்து இன்னொன்றாய் மாறியது உச்சபட்சமான போதை தருவதாய் இருந்தது. நிலத்தில் பொருட்கள் அதன் தூல வடிவத்தை இழந்து பரிதாபகரமான பாவத்தை தன்னகத்தேயிருந்து வெளிக்கொண்டுவந்தது. என்னை தாங்க விரும்பாத இந்த நிலம் இத்துணை மொக்கை எனும் உணர்வு எனக்கு சிரிப்பாக இருந்தது.



மூளை வெடித்து சிதறிவிடும் என்ற கணத்தில் நான் கண்விழித்தும் ஆழுயர புற்களின் நடுவில் குளத்தின் ஆழத்தில் உறங்கிக்கிடக்கும் மீனைப்போல நினைவற்று நிமிர்ந்துகிடந்ததை ஆழ்ந்த பெருமூச்சொன்றுவிட்டு உணர்ந்தேன். கஞ்சா செய்த வேலை. நான் அப்பொழுது உறங்கியிருக்கவில்லை அதனால் கண்மூடி கிடக்கையில் மூளை தன்னால் இயன்றதை செய்திருக்கிறது. இருண்ட மேகமற்ற வானில் முகப்பருக்களென விண்மீன்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. உடல் வலுவுடன் இருந்ததை உணரவும் பசிக்க ஆரம்பித்ததும் எழுந்து நடந்தேன். வழிகள் தெரியாத நிலம் போல ஓர் வழியை உத்தேசித்து நடந்து சலித்து முன்னகர முயற்சிக்காமல் எம்பி குதித்து பார்க்கவும் கண்ணில்பட்ட ஓர் சிறிய ஓட்டுப்பணி விட்டின் திசையப்பார்த்து நடக்க ஆரம்பித்தேன். இடைக்கிடை குதித்து பார்த்து பாதையை சரிபார்த்துச்செல்லும் போது முன்பு கண்ட கறபனை இனிமையாக இருந்தது. சட்டை பேண்ட் பையில் தடவிப்பார்த்தும் கஞ்சா பிசுறுகள் கூட இல்லாதபட்சத்தில் வெறுமையுடன் அந்த வீடு நோக்கி நடந்தேன். காற்றில்லாமல் புளுக்கமாக உணர்ந்து சட்டையை கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டதும் சுயநினைவு வந்தவனாக ராக்கோழிச்சத்தமும் சில்வண்டுகளின் சிறகடிப்பும் வெட்டுக்கிளிகளின் தாவலும் அந்த மங்கிய அமாவாசை ஒளியில் சத்தங்களாக மட்டுமே உணர முடிந்தது. 


புற்கள் சட்டையில்லாத மார்பில் தேய்த்து குருதிக்கோடுகளாக வெட்டிக்கிழித்தன. அந்த வீட்டு வாசலை அடையும் போது அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் பழைய செருப்புகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்ததன. வெளிச்சமில்லா உள்ளறையை ஜன்னல்கள் காட்டின. கதவை தட்டுவதற்கு முன் உள்ளெ ஜன்னல் வழி இரு கண்கள் மட்டும் தெரிந்தன. நான் விலகி திரும்பிக்கொண்டு கண்களை கசக்கி மீண்டும் பார்க்க ஜன்னலில் அந்த கண்கள் இல்லை. என் முன் நின்றது. சிவந்த அடர்ந்த தாடியில் மண் மடிந்து சடைபிடித்திருந்தது. நீலகருவிழியை சுற்றி செவ்வரிக்கோடுகள் நெளிந்தன. நீளமில்லாம்ல் சிரைக்கப்பட்டிருந்த தலைமுடியும் சிவப்பாக படிய வாரப்பட்டிருந்தது. அவன் சாம்பல் நிற மேல்கோட்டு கிழிந்து மண்ணிறத்தில் வெள்ளை உள்சட்டையுடன் தெரிந்தது. அவன் அங்குமிங்கும் பார்க்காமல் நேரடியாக என் கண்களை மட்டும் வெறித்தான். அவன் பேசுவான் என்பதே நம்பும்படியில்லை. உதடுகள் சாதாரணமாக பார்க்கக்கூட்டிய மாதிரியில்லாமல் தாடி மறைத்திருந்தது. நீண்ட கைகளை பேண்ட் பையில் நுளைத்தபடி நின்றான். நீண்ட விரிந்த நாசியின் கீழ் மீசை மயிர் அசைவதை வைத்தே அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அடையாளம் காணமுடிந்தது. அவன் நின்ற தொனி அங்கே ஏன் வந்தாய் என்பது போல் இருக்கவும் நானே "சும்மா வார வழிக்கி வந்துட்டேன். வழி தப்பிட்டு" என்று சிரிக்க முயன்றேன். பீதியில் என் முகம் வெளுத்து கண்கள் விரிந்து தலை ஒரு பக்கமாக நடுங்கியது. 


அவன் "உள்ளெ வாருங்கள்" என்றதும் பயம் விலகி சிரிப்பு வந்தது. ஆனால் முகம் சிரிப்பை காட்டவில்லை. 


"இங்க ஒத்தைக்கா தாமசம்" எனும் போது நான் அங்கு பார்த்தது ஒரு பழைய நாற்காலி , பெஞ்ச் , வரைவதற்கான கேன்வாஸ் போர்டு , போர்டின் தலைமேல் தொங்கிய ஒற்றை சிம்மினி விளக்கு , ஆயில் கலர்கள் , சில அழுக்கடைந்த பிரஷ்கள் , வர்ணங்கள் குழைத்து காய்ந்து போன பேலட்."நீங்க வரைவீங்களொ" என்றதும் அவன் அந்த ஒற்றையறை வீட்டில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் கைகள் இருக்க வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்தியில் கட்டப்படும் பேண்டேஜ் கட்டும் அதில் மஞ்சள் நிறத்தில் புண்ணும் மருந்தும் கலந்து புடைப்பாக இருந்தது. அந்த அறையில் பாதி அழுகிய பிணத்திலிருந்து கிளம்பும் வாடை அடித்தது. "சார் , என்னமோ மணமடிக்கே" என்றதற்கு அவன் பதில்சொல்லவில்லை. அவன் முகத்தில் சவக்களை படிந்திருந்திருப்பதாக நான் நினைக்கவும் என்னருகில் வந்து "இங்கு உட்கார்ந்து கொள்" என்று அந்த பழைய நாற்காலிய கண்களால் காட்டினான். அது போர்டிற்கு அருகில் வரைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன் அதில் ஏற்கனவே பாதி வரைந்து வைத்த ஓவியமொன்று அழுக்கும் தூசியும் அடைந்திருந்தது. 


"பாதிலையே நிக்கி. வரஞ்சி முடிக்கலையா?"


நடந்தவன் நின்று "இன்னும் வரைய வேண்டும். காலம் உதவவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி" 


"ஆளு இந்த ஊரு இல்ல போலியே"


"ஆமாம் ஸ்வீடன்"


"அது செரி , அடிச்சு விடும்வே. காசா பணமா"


"புரியவில்லை"


"உண்மையச்சொல்லும். எந்தூரு நீரு"


"ஊர்?" என்றவன் யோசித்து "சிக்டுனா"


"சிக்கனா?"


"இல்லை , சிக்டுனா"


"அப்பொ வெளி நாடுன்னு சொல்லு"


"ஆம் வடதுருவ நாடு"


"தமிழு ஒழுங்கா வராதோ?"


"வருகறதே"


"நான் பேசுத கணக்கா வராதா"


"தமிழா?"


"ஆமாடே"


"வரவில்லை"


"சாரமில்ல போட்டும். இங்க என்ன செய்யீரு. அதும் சுத்தி இடுகாடால இருக்கு"


"ஆமாம். அதுவே வசதியாக அமைந்துவிட்டது"


"சோறு திங்கதே இல்ல போல மூஞ்சிலாம் வெளுத்துபோச்சி"


"எனக்கு பசிப்பதில்லை"


"எனக்கு பசிக்கி , திங்க என்னமாம் இருக்கா?"


அவன் இல்லை என்பது புருவங்களை உயர்த்தி தலையசைத்தான். 


"எனக்கு உன் உதவி வேண்டும்"


"கடைக்கு போயி எதும் சாமானம் வாங்கிட்டு வரணுமா தொர?"  நான் துரை என்றதை  புன்னகையுடன் அனுமதித்தான்


"இதை நீ வரைந்து முடிக்க வேண்டும்" என்று அந்த பாதிவரைந்த ஓவியத்தை காட்டி "இங்கு ஆட்கள் வருவது குறைவு. நீ வந்தது நல்லதாக அமைந்தது. வா எழுந்திரு. அதை எடு" என்று தரையில் சிதறிக்கிடந்த பிரஷ்களை காண்பித்தான்


"ஆனா நீ ஆளு காலன் தொர. நானும் ஒரு பெயிண்டர்னு இந்த குண்டுவிழுந்த மூஞ்ச பாத்தே கண்டுபுடிச்சிட்ட"


"சீக்கிரம். நேரம் குறைவாக உள்ளது"


"வரஞ்சி மட்டும் என்னத்த சாதிக்க போற தொர. அமந்து இரியும்"


"நான் என் வாழ்நாளில் என் ஆன்மாவை கரைத்து வண்ணங்களாக்கி வரைய முயன்றது அதற்குள் இப்படியாகிவிட்டது"


"பயராதேயும். அதுக்கு முன்னால எனக்கு குடிக்க தண்ணியாவது எங்கருக்குண்ணு காட்டுவீரா?"


"இங்கெதுவுமில்லை. எல்லாம் செத்துவிட்டது"


"சவம் மாரி பேசாம ஒழுங்கா பேசு தொர"


"அந்த மூலையில் பானையிருக்கிறது. எடுத்துக்கொள்"


நான் போய் வந்து அமர்ந்தேன். அவன் என் கைகளை பார்த்து "பயனற்றவை ஆக்கிவிடாதெ" என்றான். கண்களில் குருதித்துளிகள் போல கண்ணீர் இரண்டு சொட்டு நிலத்தில் விழுந்து மறைந்து காணாமல் போனதும் "நிலம் உன் வெந்த குருதிக்குக்கூட காலம் குறைவாகவே கொடுக்கிறது"


"பினாத்தேயும் தொர"


"இதோ இங்கிருந்து ஆரம்பி" என்று அந்த ஓவியத்தில் வலது ஓர முனையில் தலையால் தட்டினான் 


நான் அந்த போர்டை தொட்டதும் தூசும் அழுக்கும் சிதை மேல் படிந்த சாம்பல் காற்றுக்கு பறப்பது போல அந்த பாதி ஓவியத்தை துல்லியமாக காட்டியது. 


"இங்ககையா தொர?" எனும் போது அவன் கண்கள் தூக்கில் இருக்கும் போது கைகளால் பிடிக்கப்பட்ட கயிறின் நம்பிக்கையுடனிருந்தது. 

என் கைகள் அந்த ஓவியத்தின் மேல் சரளமாக வழுக்கியது. பேலட்டில் வண்ணங்களை குளைத்து எடுக்கும் வேகம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மூலையிலிருந்து ஆரம்பித்து காட்டாறு கிடைத்த பாதைகளெல்லாம் உண்டு வளர்ந்து நீள்வது போல ஒவியம் வளர்ந்தது. அவன் அசைவற்று என் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். வலிக்க ஆரம்பித்த கையை எடுக்க நினைத்தும் முடியாமல் சன்னதம் வந்தது போல அது இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு கூட அதை என்னால் வரைய முடியும் போலிருந்தது. எவ்வளவு நேரம் சென்றிருக்கும் என்று அறியாமல் சென்ற காலம் ஓரிடத்தில் நின்றதும் என் கைகள் விடுபட்டு தொங்கின. 


"என்னவே மாயம் போட்டு விளையாடுகீரா. இந்த வீட்ட பாத்த உடனே எனக்கு உள்ள பயமுண்டு. ஆனா என்னமொ உன்ன பாத்ததும் ஒரு ஈர்ப்பு" 


அவன் சிரித்தான்.


நான் பதறி "கையி...கையி...எப்புடி உமக்கு கை மொளச்சுது." எனும் போது பயமிருந்தாதும் எழுந்து செல்ல மனமில்லை. அவன் முகம் சவக்களை நீங்கி உயிர்கொண்டிருந்தான்.


"நீ வரைந்தாய். வந்துவிட்டது" 


"தொர , நான் போட்டுமா. தல வலிக்கி"


"அங்கே பார்" என்று அந்த வீட்டின் இருண்ட பகுதியை காண்பித்தான். அங்கு அதே போல பாதி வரைந்த , வரையாத ஓவியங்கள் வரிசையாக நெருக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு அவையனைத்தும் நெருக்கமானவையாக நான் ஏற்கனவே அறிந்தவையாக தோன்றியது. 


"என்னைய வச்சி என்னதா செய்ய உத்தேசம்"


"இதையனைத்தையும் நீ வரைய வேண்டும். உதவி செய்"


"கத கொள்ளாம். வயிறு பசிக்கே கொஞ்சம் எதாச்சும் கெடைக்குமான்னு பாத்தேன். உமக்க சோலிய எனக்க தலைல கட்டிராதேயும்"


"அவற்றை அருகில் சென்று பார் , பசியடங்கும்" என்று புன்னகைத்தான்


நான் எழுந்து விளக்கை எடுத்துக்கொண்டு ஒளியுடன் நடந்து அவற்றினருகில் சென்றேன். அவை நான் வரைந்தவை , பாதி விட்டவை என எல்லவற்றையும் என்னால் அடையாளம் காண முடிந்தது. விளக்கைத்திருப்பி சற்று முன்பு வரைந்த ஓவித்தை பார்த்தேன் அது பாதி வரைந்த நிலையிலேயே இருந்தது. பதற்றமாக வீட்டை சுற்றி ஒளியை விட்டேன் அவனை காணவில்லை. சலிப்பாக இருந்தது. விளக்கை தரையில் வைத்துவிட்டு கஞ்சா இருக்கிறதா என்று மீண்டும் சட்டை பேண்டில் துளாவினேன். சட்டையின் உள் பாக்கெட்டில் ஒரு பொட்டலம் கிடைத்தது. விளக்கை மாட்டிவிட்டு அந்த ஓவியத்தை பார்த்தவண்ணம் கண்டெடுத்த காகிதத்தில் உருட்டி பற்றவைத்தேன். அவனுருவம் நான் விட்ட புகைப்படலத்தில் துலங்கி வந்தது. அவன் என்னைப்போலவே இருந்தான். ஆனால் கைகளில்லை முகம் சவக்களையுடனிருந்தது. அதன்பிறகு எப்பொழுது உறங்கிப்போனேன் என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment