Friday 24 September 2021

பனிப்பொழிவு - சிறுகதை

 வெறுமையின் தூய்மை நிரம்பிக்கிடந்த அந்த அறையின் நடுவில் ஒற்றை நாற்காலையில் கால்களை குறுக்கி நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஒற்றை வாசலுடையை அறையின் வலதும் இடமும் இரண்டென நேரெதிராக கண்ணாடி ஜன்னல்கள் திரைகளற்று ஒளியை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் அறைமுழுவதும் நிரப்பியன. அணிந்திருந்த தடித்த கோட்டை குளிருக்காக மேலும் கைகளால் இறுக்கி அணைத்து காற்று புகாதவாறு அடைக்க முயன்றபடி அறைக்குள் எங்கிருந்து குளிர் நிரம்பி வருகிறதென என்ணியவாறு மூலைமுடுக்கெல்லாம் இடிக்கு பயந்த மரப்பொந்திலிருக்கும் ஓர் ஆந்தையைப்போல  தேடிக்கொடிருந்தான். வெண்பனித்தூவல் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்பால் மெல்லிய தென்றலுக்கு ஏற்ற ஏற்ற இறக்கத்துடன் சரிந்து பொளிந்து கொண்டிருந்ததை கவனிக்கவோ ரசிக்கவோ விடாதபடி குளிர் அவனை வாட்டியெடுத்தது. அப்போது அறைக்கதவு சத்தமின்றி திறக்க உள்நுளைந்தவன் குளிருக்கான கோட்டு ஏதுமின்றி ஓர் கருப்பு நிற ஸுவட்டரும் அதுனுள் உள்சட்டையின் காலர் மட்டும் தெரியுமாறு அணிந்திருந்த சட்டையுடன் வளித்து வாரப்பட்ட பொன்னிற தலைமயிரை கலைந்து விடாமல் ஒருமுறை அழுத்தி தேய்த்துவிட்டவாறு அந்த நாற்காலியின் அருகில் வந்து நின்றான்.


“குளிர்காலத்தின் கடைசி பன்னிப்பொழிவாக இருக்க வாய்ப்பிருக்கிறது இல்லையா யோன்ஸ்” என்று ஜன்னலில் அருகில் சென்று வெளியேதெரியும் காட்சியை ரசித்தவனாக "நான் ஆபீசர் ஆண்ரியாஸ்" என்றான்


“இருக்கலாம் அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது” என்று நிறுத்திய யோனஸ் அந்த அமைதியை விரும்பாதவனைப்போல தொடர்ந்தான் “போன வருடம் மிட் சம்மர் விழாவிற்காக டைரிஸ்டா தேசியப்பூங்காவினுள் ஓர் ஏரியின் கரையோரமாக அமர்ந்து அவர்கள் நட்டுவைத்திருந்த கம்பத்தை சுற்றி பெண் குழந்தைகளும் பெண்களுமாக சுற்றிவந்து பாட்டுபாடி அதனை ஓர் நாடகம் போல நடத்திக்காட்டிக்கொண்டிருந்தனர். அது நான் பிறந்ததிலிருந்து கண்ட காட்சிதான் ஆனால் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருக்கும் வாத்துக்குஞ்சை கழுத்தைபிடித்து தூக்கி நீரில் முக்கி அதன் ஈனக்குரலை ரசித்து பின் புற்களுக்கிடையில் வளர்ந்திருந்த பாறையின் முகட்டில் ஓங்கி அடித்து அதன் சூடான குருதி மணிக்கட்டில் வழிவதை பார்த்து ரசித்தது. தூக்கி எறியப்பட்ட அந்த குஞ்சின் உடல் இறக்கைகள் பியிந்து கிடந்ததை தனக்கே காட்டி எக்காளமிட்டு மீண்டும் சிரித்தது. சகிக்க முடியாத ஓர் கொலைவெறியாட்டம் நடந்து முடிந்ததை அறிந்து ரசித்த அந்த குழந்தையின் கண்களை நான் எல்லா குழந்தைகளிடமும் காண்கிறேன். உலகிலேயே நான் பயப்படுவது அந்த மாதிரியான நீல நிறக்கண்களை மட்டுமே. அவை நஞ்சு கலந்து பிறக்கும் போதே குடுக்கபடுகிறது” என்று நிறுத்தி வரண்ட உதடுகளை நாவல் ஈரமாக்கி “எனக்கு தண்ணீர் வேண்டும்” என்றான்.


“இதோ” என்றவாறு வெளியே சென்றவனை அவனால் கவனிக்க முடியவில்லை. அந்த கண்களை மீண்டும் மீட்டுருவாக்கி ஓர் ஓவியம் போல தன்முன் கொண்டுவந்து நிப்பாட்டினான். 


ஆண்ரியாஸ் தண்ணீர் குப்பியுடன் திரும்ப அந்த அறைக்குள் வந்தபோது யோனஸ் ஜன்னல் கண்ணாடியில் முகத்தை ஒட்டி வெளியே பார்த்தபடி குளிரால் முகம் ஒரு பக்கமாய் மறத்துப்போக அதனை விரலால் வருடியபடி நின்றான். 


"பனி படர்ந்த சூழல் நம்மை இயற்கையை தரிசிக்க வைத்துவிடுகிறது. இங்கிருக்கும் அனைத்தும் இறைவனின் வடிங்களாக காட்சிதருவது நமக்கு ஆன்மவிடுதலை அல்லவா" என்று கண்களை மூடி பிரார்த்துப்பது போல முனங்கினான்.


"இருக்கலாம். ஆனால் இதோ இந்த வெண்மையான இறைவனை பிரதிபலிக்கும் பனிப்பொருக்குகள் ஒளியை தமக்குள் பொதிந்து வைத்து இருளிலும் ஒளியை கொடுப்பதாக தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள். புகை மண்டிய வண்டிகளும் மனிதர்களும் இந்த பாதைவழியாக சென்று சென்று இதன் நிறத்தை கருப்பு சாக்கடையின் நிறமாக இன்னும் ஒரு நாளில் மாற்றிவிடுவார்கள். அங்கு நீங்கள் என்னதான் கற்பனை செயதாலும் அழுக்கைத்தவிர வேறெதும் வர முடியாது" என்று நிறுத்தி வெது வெதுப்பான நீரை உடலில் நிரப்பிக்கொண்டான். அடர்ந்த சுருள் போன்ற தாடியில் வழிந்த நீர்த்துளிகள் அதனுள் புகுந்து மறைந்து கொண்டன. நீண்ட முகம் ஒரு வாரம் கிடைக்கும் நல்ல தூக்கத்தில் பொலிவு பெற்றுவிடும் தன்மை கொண்டிருந்தது. கருமை படர்ந்த கண்களை உயர்த்தி மேலாக வளர்ந்து நின்ற ஆண்ரியாஸின் கண்களை பார்த்தவாறு "நான் தங்கியிருந்த அறை செவ்வக வடிவ ஐந்து தள கட்டிடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்தது. அறையின் வாசலில் நின்று பார்த்தால் அந்த கட்டிடம் ஒன்றுமில்லாத பெட்டி போலவும் அதன் மேல் விளிம்பொன்றில் நான் நின்று எட்டிப்பார்ப்பதைப்போல் இருக்கும். அங்கிருந்து மேல் நோக்கினால் வானம் முழுவதுமே அந்த செவ்வகவடிவ சட்டத்திற்குள் அடங்கிவிடுவாதாய் தோற்றம் தரும். இந்த நாட்டில் எல்லா வருடம் போல அந்த வருடமும் எட்டு மாத குளிர்காலாமும் மற்ற காலங்கள் மீதமிருக்கும் நாங்கு மாதங்களில் வந்து சென்றன. அந்த எட்டு மாதங்களில் வானம் மற்ற நிறங்களில்லாமல் சாம்பல் நிறம் மண்டிக்கிடப்பதும் பயந்த சூரியன் எட்டிக்கூட பார்க்காமல் பதுங்கி என்றாவது ஒரு நாள் பேருக்கு வந்து செல்லும். அப்போது ஊரே 

கொண்டாட்டம் கொண்டு தறிகேட்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் தெருவெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்" எண்ணங்கள் எங்கோ விலகிச்செல்வதாக உணர்ந்து மேல் கோட்டை உடலோடு அழுத்திவிட்டு தொடர்ந்தவனை ஆண்ரியாஸ் தடுத்து "நீங்கள் தங்கியிருந்த இடம் எப்படி?" என்று கேட்டான்


"என் அறையின் கீழே குடியிருந்தவர்கள் ஓர் இணை. அவர்களுக்குள் சண்டை பெருத்து தூக்கி எறியப்படும் பொருட்கள் என் அறையின் தளத்தில் வந்து மோதி எழுப்பும் சத்தத்தால் தூக்கம் கலைந்து நீண்ட ஜன்னல் வழி தெரியும் கருத்த ஒளியற்ற வானை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பேன். தூக்கம் இனிமேல் பிடிக்கப்போவதில்லை என்பது தெரிந்ததும் சாதாரணமாகவே புகைக்ககும் எண்ணம் எழுந்து வந்தது. கதவைத்திறந்ததும் குளிர்ந்த காற்று கனமான திரையைப்போல என்னை அணைத்து தள்ளியது. அந்த தளத்தின் சிவந்த மாடி கைப்பிடியை பிடித்தவாறு சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்ததும் நெடி 

திட உருவம் கொண்டு மூக்கை அடைத்ததும் அருகில் வந்து நின்றவளை கவனிப்பதற்கும் சரியாக இருந்தது. என்ன சொன்னாள் என்பதை நான் சரியாக சொல்ல முடியாது ஆனால் அதன் பொருள் இப்படித்தான் இருந்தது. என் காதலன் என்னை துன்புறுத்துகிறான் கன்னங்களில் அடித்து கன்றியிருக்கிறது. என்னை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறான். ஆனால் நான் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் நீ புகைவிடுவதை பலமுறை கவனித்துள்ளேன். கைகளில் அதன் இருப்பும் சாம்பலை தட்டும் அழகும் என்னை கவர்ந்தது. நீயும் என்னை காதலிப்பாயா ? அதை என்னுடைய பழைய காதலனிடம் சொல்லி என்னை விடுவிப்பாயா என்பதாயிருந்ததும். முழிதாய் பார்க்காத அவளை நான் காதலிப்பதாக ஒத்துக்கொண்டேன். அவள் காதலன் என்னை ஓர் உயிருள்ள ஜந்துவாகக்கூட மதிக்காமல் ரத்தம் வர அடித்து நொறுக்கும் போது அவள் ஒதுங்கி நின்று வேண்டாம் என்பது போன்ற முக பாவனையில் அழுது அவனை தடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் உதடுகளின் ஓரத்திலும் இடது கண்ணின் ஓரத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகையொன்று உதித்ததை நான் கவனிக்க தவறவில்லை. அவள் கண்களும் நீலமாய் பறவையின் கண்களைப்போல் இருந்தது இப்போது ஞாபகம் வருவது ஆச்சரியம்தான்" என்று தண்ணீருக்காக கைகாட்டினான். 


குப்பியை கொடுத்திவிட்டு ஆண்ரியாஸ் பேச ஆரம்பித்தான் "இதற்கும் உங்கள் அறையில் செத்துக்கிடக்கும் உன் அம்மாவிற்கும் என சம்பந்தம். எதற்காக அதைச்செய்தாய் அதனை நீ சொல்லலாம் அல்லவா" என்று அவன் தோளில் கைவைத்தான்


"அவளுக்கு வயது ஐம்பத்தியாறு. ஆனால் பார்ப்பவர்களுக்கு பாதி திறந்த மார்பும் குட்டைப்பாவாடையும் பெரிய கருப்புக்கண்ணாடியும் உதட்டுச்சாயமும் அவள் வயதை மறைத்து இளம் பெண்ணினுடையதைப்போல காட்சியளிக்கும். அதற்கான நடையை அவள் பயின்றிருந்தாள். காலையில் அவள் தூங்கி எழுவதற்கு முன் அவள் படுக்கைக்கு அருகில் நின்று முகத்தை அதில் வரிவரியான சுருக்கத்தை தொங்கிய கைத்தசைகளை பார்த்து நின்றிருப்பேன். புரண்டு படுக்கும் போது அவை அங்குமிங்கும் குலுங்குவது ரசமான காட்சி" என்று வாய்மூடி சிரித்தான். 


ஆண்ரியாஸ் "எதற்கு சிரிக்கிறாய்" என்றதற்கு பதில் சொல்லாமல் சிரிப்பை அடக்கி பேசத்தொடங்கினான் "அவளுக்கு ஓர் ஆண் நண்பன் சிக்கினான். அசாதாரண உடம்புடன் பார்ப்பவர்கள் பயப்படுவது போல கூர்மையான பழுப்பு கண்களுடன் எப்போதும் யாரையாவது அடிக்க தாயாராய் இருப்பது போல மோவாயைத்தூக்கி நடப்பது இவள் அதில் முத்தம் கொடுப்பதும் எனக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அவன் ஓர் வேட்டை நாயைப்போல என்னை பார்த்த இடங்களிலெல்லாம் என்னை ஆடாக பாவனை செய்து துரத்தினான். ஒரு நாள் சாம்பல் வானில் காலை என்பது தெரியாத பொழுது எங்களின் வீட்டின் முன் யாரென்றே தெரியாத ஒருவன் அவளை போட்டு அடித்து நொறுக்கினான். நான் கதவிடுக்கு வழி அவள் அலறுவதை பார்த்து நின்றிருந்தேன். அவள் காதலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தானென நினைத்த போது எங்கிருந்து வந்தான் என்று தெரியாமல் நான் மலங்க விழித்துக்கொண்டிருந்த போது அவளை விடுவித்து அடித்து நொறுக்க ஆரம்பித்தான். கீழே விழுந்து எழுந்த அவள் வீட்டுக்கதவை திறக்கவும் அது மூக்கில் அடிக்க நான் விழுந்து எழுந்தேன். அவள் என்னை எதும் சொல்லவில்லை ஆனால் அவள் பார்வை செத்த அழுகிய உடலை பார்ப்பதைப்போல் இருந்தது. அதன் பிறகு நான் அவள் வீட்டுக்கு செல்வதில்லை" யோனஸின் முகம் அவன் கடைசியாய் சொன்ன அவள் அம்மாவின் முகத்தைப்போல இருந்ததாய் ஆண்ரியாஸ் நினைத்தான்.


மஞ்சல் விளக்குகள் ஒளிர்ந்த  அறையில் இருவரும் ஜன்னல் கண்ணாடியின் முன் நின்று மறுபுறம் தெரிந்த கருத்த இறுகிப்போன பனிக்கட்டிகளை பார்த்தவண்ணம் இருவரும் நின்றனர். ஆண்ரியாஸ் "போகலாமா" என்றதும் யோனஸ் "அதற்கென்ன தாராளமாய்" என்றதும். இருவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.


"தெளிந்த வானில் முழுநிலா பொழிகிறது" என்றதனை மூச்சால் உடம்பிற்குள் நிரப்ப முயன்றவனப்போல பெருமூச்சைவிட்டான் ஆண்ரியாஸ்


"எனக்கு இருளாகவே தெரிகிறது" என்ற யோனாஸின் தலை குனிந்தேயிருந்தது.


No comments:

Post a Comment