Saturday 25 September 2021

ஒளிரும் கூழாங்கல் - சிறுகதை

மலையடிவார செக்போஸ்டில்  ஜீப் மறிக்கப்பட்டபோது முன் சீட்டில்  அமர்திருந்த கண்ணன் நெற்றியில் பெருகி வந்த வியர்வையை வடித்துவிட்டு ஜன்னலின் வெளியே  மலையின் உச்சியை பார்க்க முயன்றான். எழுந்து நின்ற மலையின் உச்சி தெரியாமல் சூரியனின் செஞ்சூட்டு கதிர்கள் முகத்தில் அறையவும் தலையை ஜீப்புக்குள் நுளைத்துக்கொண்டான். தோள் தொட்டு நெருங்கி அமர்ந்திருந்த  மெலிந்த சதையற்ற எலும்புக் கிழவர் பழுத்த உயிரற்ற கண்களை சுருக்கி "வெக்க என்னமா அடிக்கி செய்" என்று சட்டையை உதறி கழுத்துக்குள் காற்றடித்து அவனைப்பார்த்து சிரித்தார்.  வலப்பக்கமிருந்த பெண்ணிடம் பற்களில்லாமல் உள்பக்கமாய் மடிந்திருந்த உதடுகளை விரித்து என்னமோ சொல்ல வாய் திறக்கவும் அவளின் வெளித்தள்ளி முறைத்த கண்களைக் கண்டு மருண்டு வெளியே பார்ப்பதாய் பாவனை காட்டி அவளிடமிருந்து சற்றே விலகி அமர்ந்துகொண்டார்.


கண்ணன் பேருக்கு சிரித்து மீண்டும் வெளியே பார்க்க ஆரம்பித்தான்.  கிழவர் பேச்சுக்கொடுக்க நினைத்து "தம்பி நாரோயிலோ" என அவன் முகத்தையே பார்த்தபடியிருந்தார். அவன் "இல்ல வெளியூரு" என்றதும் "கள்ளம்…நாரோலியிலுன்னு மூஞ்சில எழுதி ஒட்டிருக்கே" என்று சிரித்தார். அதற்கு என்ன பதி செல்வதென தெரியாமல் வளைந்து மலையேறி செல்ல ஆரம்பித்த பாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்களை அவை காற்றில் உதிர்த்த நீள் இலைகளின் சுழிவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கிழவர் மறுபடியும் அந்த பெண்ணை இடித்தபடி நெருங்கி அமர்ந்து நெளிந்தார்.


உருளைக் கற்களை தரையில் போட்டு மேடு பள்ளமாக்கப்பட்ட சாலை வண்டியிலிருந்த அனைவரையும் குலுக்கியெடுத்து. சக்கரத்தில் பிதுங்கிய பொடிக்கற்கள் தெறித்து பக்கவாட்டு பள்ளத்தாக்கில் விழுந்து தடமின்றி மறைவதை தானே விழுவதாக கற்பனை செய்த போது அசைந்து கொடுத்த கிழவர் என்னமோ கேட்க கண்ணன் கண்மூடி பதில் சொல்லாமலிருக்கவும் அவர் அந்தக் குலுக்கத்திலும் எப்படியோ தூங்க முயல்வது போல கண்களை மூடிக்கொண்டார். சுழன்று மேலேறிச்சென்ற சாலை ஓரிடத்தில் சமதளமாகி நேராக ஓட ஆரம்பித்ததும் இருபக்கமும் அடுக்கி வைக்கப்பட்ட நெளியும் பச்சை ஆபரணமென தேயிலைச்செடிகள் வரிசையாக வெண் பனிக்குள் நீரில் அமிழ்ந்த நிலையிலிருந்தன. 


தேயிலையின் மருந்து வாடை வந்ததும்  மூச்சை நெஞ்சுக்குள் இழுத்துவிட்டதில் உடல் சமநிலைக்கு வந்து உயிர் மீண்டதைப்போலிருந்தது. சதைகள் அடித்துக்கொள்ளும் ஓர் ஒலி அவன் பார்த்துக்கொண்டிருந்த காட்சியிலிருந்து விலக்கியது. "கிழட்டுநாயே , வயசாச்சேன்னு கிட்ட அமுந்து இருந்தா நீ பாவாடைக்குள்ளா நோண்டுவியா" என்றவள் நிறுத்தாமல் செவிட்டில் மேலும் இரண்டடி அடித்து "எலும்பெடுத்த நாயி , தூக்கி பிடிச்சிட்டு வந்துட்டான் சவம்" என்றவள் அங்கு இடம் அமைத்துக் கொடுத்த ட்ரைவரையும் அடிக்க கை ஓங்கினாள். அதிலிருந்த பொறுமை அவனை தெரிந்தவனாய் காட்டியது. வண்டி முன்னோக்கிச்செல்ல செல்ல எதுவுமே நடக்காதது போன்ற பாவனையை எல்லாரும் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


குறுகிய கிளைகள் கொண்ட சில்வர் ஓக் மரத்தில் கொண்டை குருவியொன்று வந்தமர்ந்த வேகத்தில் பறந்து மற்றொன்றில் அமர்ந்து “க்ரீட்…க்ரீட்” என்றது.  அந்த பறவையை அவன் நண்பன் ஆனந்தன் முதல் முறை அங்கு வந்திருந்த போது  “பலவட்டற பறவ , ஒழுங்கா மனுசன் வெளிக்கி போக முடியுதா” என அடையாளப்படுத்தியிருந்தான். 


வண்டி நின்றதும் எல்லோரும் இறங்கி விட கிழவர் அவனை அணுகி பற்களில்லா வாயில் எச்சில் தெறிக்க குழறி "இதே அந்த ட்ரைவர் கை வைக்கட்டும் சத்தமில்லாம கண்ணு சொருகி கெடப்பா. தேவிடிச்சி. எனக்கிட்ட ஞாயம் பேச வந்துட்டா..தூ" என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கையிலிருந்த சாக்குடன் வளைந்த முதுகை தாங்கிப்பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார். 


கண்ணன் அமைதியாக ட்ரைவரிடம் “அக்காமேடு” என்றதும் வேண்டா வெறுப்பாக வண்டி முக்கி கரும்புகையிட்டு தார் சாலையிலியிருந்து மண் சாலையிலேறியது. அந்த சாலை முட்டி நின்ற இடத்தில் முழுதாய் வளர்ந்த தனித்த மிளா, கழுத்தில் சிலிர்த்து நின்ற சாம்பல்  மயிர்ப்பிசிறுடன், இலையென நரம்புகள் புடைத்த காதுகள் துடிதுடிக்க அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு பின் கண்டுகொள்ளாமல் குறுவால் சுழல இடப்பக்க சரிவுக்குள் மறைந்தது. அவனை இறக்கிவிட்டு வண்டி சென்றதும் காட்டின் இரையும் அமைதியில் தனியாக நின்றான். வலப்பக்கமாய் மேலேறிச்சென்ற ஒற்றையடி மண் பாதையில் தனியாக நடக்க ஆரம்பித்தான். பாதையின் மேல் வளைந்து நின்ற இருபக்க மரக்கிளைகள் கவிந்து இறந்த விலங்கின் விலா எலும்புக்கூடு போலிருந்தது. மேலேறிச் செல்லச்செல்ல சுவாசம் தடைபட்டு உடலே இதயமென துடித்து மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுத்ததும் அங்கிருந்த கருத்த பெருங்கண் போன்ற குழிகொண்ட அடிமரத்தின் சாய்ந்துகொண்டான். பெருமூச்சுவிட்டு திரண்டு வந்த எச்சிலை துப்பி தலை தூக்கி பார்த்ததும் தெரிந்த மரப்புடைப்புகள் இரண்டும் , எதிரிலிருந்த நீண்ட கிளையொன்றை பார்த்து சிலிர்த்து நின்றது தெரிந்தது. அவை ஞாபகத்தட்டில் இடறிய ஓர் நினவை மேலே கொண்டு வந்தது. கண்களை மூடிக்கொண்டான்.


*


"கண்ணா , இந்தா மொலையும் கொலையுமா ஒண்ணு , எதுத்தால குஞ்ச புடிச்சிட்டு இன்னொண்ணு" என்று அந்த மரங்களை கருணா சுட்டிக்காட்டி இடுப்பில் கைவைத்து மூச்சு வாங்க நின்றான். மலை ஏறியதின் தடம் அவர்களின் ஒவ்வொருவரின் உடலில் தெளிவாகத் தெரிந்தது.


முலைகளெனன பெருத்து நின்ற மரத்தின் பொருமலில் ஆனந்தனும் , மாரியும் தொங்கினர் , எதிரேயிருந்த மரத்தின் கீழே புடைத்து நீண்டு நின்ற குறி போன்ற கிளையில் கருணா தொங்கி அதனை ஆட்டியபடி "இந்தா வாரார் ஐயப்பா , அந்தா வாரார் ஐயப்பா. ஆடி வாரார் ஐயப்பா.. , ஓடி வாரார் ஐயப்பா..." எனப் பற்களை காட்டி சிரித்தபடி பாடினான்.


ஈரம் தோய்ந்த வழுவழுப்பான பாதையில் நின்றிருந்த கண்ணன் இதனை பார்த்தபடி களைப்பு நீங்க சிரித்து , ஓரமாக அமர்ந்து தோள் பையை திறக்க ஆரம்பித்தான் "இங்கையே சோத்த தின்னுட்டு கெளம்பீறுவோம்" என்றதும் மற்றவர்கள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.


"ரொம்ப நாளாவே இந்த மாரி ஷோ பத்தூட்டெ சாப்புடணும்னு ஆச" என்ற கருணா இரு மரங்களையும் பார்த்தபடி ஏற்கனவே பிசைந்து வைத்திருந்த சோற்றை வாயில் திணித்து "கருத்த குஞ்சொண்ணு குலுங்குது , குலுங்குது" என்று கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி பாடினான்.


ஆனந்தன் "பெருத்த மொல ரெண்டு குகுங்குது , குலுங்குது" என்றதும் மாரி எழுந்து நின்று அவன் மார்பில் கைகளை வைத்து உடலை குலுக்கி ஆடினான்.  


"எனக்கெல்லாம் சோறு திங்குத இடத்துலையே டெய்லி ஷோதான் நடக்கு. போர்வைய போத்தி படுத்துட்டு எங்க வீட்டு அடுக்களைல பாத்துட்டுத்தான் இருக்கேன். அடுப்புத் திண்டுக்குமேல சித்தியும் சித்தப்பாவும் உருண்டு நெளியத பாக்காம இப்பொல்லாம் ஒறக்கமே வாரதில்ல. அதுக்குன்னு டெய்லியுமா யம்மா!" என்று பெருமூச்சு விட்டான் ஆனந்தன்


"உனக்க அப்பனும் அம்மையும் செய்யதையும் ஒளிஞ்சி நிண்ணு பாக்க வேண்டியதான ?" மூச்சு வாங்கியபடி கத்திய கண்ணனின் பேச்சை மாற்ற "லேய் கண்ணா , நீதாம்ல கோம்பையனா இருக்க. மாரியெல்லாம் அதுல கரகண்ட்டுட்டான். போன வாரம் கூட ஒருத்திய சைக்கிள்ள வச்சு நம்ம காலேஜ் தெர்மல் லேபுக்கு பொறத்தால இருக்க முக்குக்குள்ள கூட்டிட்டு போனான் தெரியுமா?" என்றான் கருணா.


"நீ பாத்தியாக்கும் , சும்மா படம் போடத கேட்டியா" கண்ணனின் குரல் மாறியிருந்தது.


"அவன் முஞ்ச பாரு , வெக்கமாம். சீ" என்று கையில் கிடைத்த சிறு கல்லெடுத்து மாரியின் மேலெறிந்தான்.


"அதெல்லாம் சொகம்" என்று மாரி கண்களை மூடி "சொகங்கண்ட நாயிதான் எத்தன கடி பட்டாலும் பொட்டைக்கி பொறந்தால தெருத்தெருவா அலையுமாம்" என்றான்.


கண்ணனைத் தவிர அனைவரும் அதனை ஆமோதிப்பது வாயில் திணித்திருந்த பருக்கைகள் தெறிக்க சிரித்தபடி தலையாட்டினர். மாரி நாயைப்போல தலைதூக்கி அடித்தொண்டையில் ஊளையிட்டான்.


"பத்து பொட்டைக்கி பொறத்தால போனாலும் ஒரு ஓட்ட தானே. எழுவது ஓட்டையா இருக்கு ?" என்ற கண்ணனின் முகம் சுருங்கியிருந்தது


"வெப்ராளப்படாதடே , உனக்கு எங்கன , எந்த ஓட்டைல சொருவனும்னே தெரியாது. பொறவு இங்க என்ன வியாக்கியானம் பேச வந்துட்ட. போ , போயி அந்த மரத்த பாத்து கைல புடிச்சிட்டு வா" என இளித்தான் ஆனந்தன். அவர்கள் சிரித்த ஒலி காட்டின் ஒலிகளுக்கிடையில் இலையசைவென இயல்பாக ஒலிக்க கண்ணன் அமைதியாக தலை குனிந்தவாறு அந்த இரு மரங்களையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான்.


தின்று முடித்து ஒருவருக்கொருவர்  பேசிச்சிரித்து மேடேறி நின்றதும் அவர்கள் கால்களினடியில் சுழன்ற கோரைப்புற்கள் ஈரம் தாங்கி காற்றின் இசைவுக்கு ஏற்றபடி சுழன்றாடடி , நெளிந்தலைந்தன. கீழே வளைகோடென நீண்டு கிடந்த நதியின் கரையில் ஒன்றிரண்டு வீடுகள் பறவையின் எச்சம் போல் ஒட்டியிருந்தன.


அதுவரை அமைதியாக வந்த கண்ணன் கருணாவை நெருங்கி "உண்மையாவே ஆனந்தன் நெறைய பிள்ளைகள ஓத்துட்டானா ?" என்றதும் கருணா சிரிப்பை அடக்கியபடி "அவன் கிழிச்சான். இப்புடிச்சொன்னா ஒரு இதுன்னு சொல்லிட்டு திரியான் சவம். பிள்ளைகள்ட பேசவே வழிகெடயாது நாயிக்கி , இதுல பெரிய மனுசம் மாரி பேச்சு பேசுகான்"


"அப்போ , நீ ஓத்துருக்கியா ?" என்ற கேள்விக்கு  கருணா வாய்திறக்காமல் உதட்டின் ஓரம் வளைய ஒற்றைப்புருவம் உயர்த்தி புன்னகைத்தான். 


கெண்டைச்சதைகள் வலியெடுக்க இறங்கிய பள்ளத்தாக்கில் தெளிந்து ஓடிய நதியின் கரையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் போய்ச் சேர்ந்தவுடன் மற்றவர்கள் படுத்துவிட புடைத்து நின்ற பாறை முகடுகளின் முகம் மட்டும் உயர்த்தி மூச்சுவாங்க அனுமதித்த நதியின் கரை நோக்கி காரணமற்ற எக்கத்துடன் கண்ணன் நடந்தான்.


புற்கள் செறிந்த கரையில் முட்டுமடக்கி அமர்ந்து மலையின் விளிம்புகளை பார்த்தபடி இருக்கையில் இடுப்புவரை நீரில் முங்கி எதிர் கரையில் தனியாய் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலில் ஓர் அடர்ந்த நிழலென , தன் கற்பனையென நினைத்து உற்றுப்பார்த்தான்.. 


அவள் மலைப்பெண்களை போல் கருப்பில்லாமல் சிவப்பாய் பெயர் தெரியாமல் முன்பு தின்ற பழத்தின் நடுப்பகுதியின் நிறமாயிருந்தாள். உடுத்தியிருந்த சேலையில் அப்படியே மூழ்கி ஒரு முறை எழுந்ததும் வெயில் அடையும் மஞ்சள் ஒளிக்கதிர்கள் அவளுடம்பில் படிந்த நீர்த்துளிகளில் தெறித்து சிதறி உருவாக்கியிருந்த மாயமொன்றை கண்டு நிலைதப்பி உடல் நடுங்க நின்றான். நேரடியாக இல்லாமல் மலைகளை கவனிப்பதைப்போல பாவனை செய்து ஒரு கணம் அவளைக் கண்டதும் திரும்பிக்கொண்டான்.


நீரில் இறங்கியதும்  மூச்சு முட்டுவது போல உணர்ந்தவன் , நீரில் மூழ்கி சுற்றியிருந்த நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உயர்ந்த  உடலில் வெம்மையை தணிக்க முயன்றான்.  நீரின் குழுமை தறிகொட்டுப்போன எண்ணங்களை ஒரு புள்ளியில் குவித்தது. தலைக்கு மேல் முன்னும் பின்னும் உயர்ந்து  விளிம்புகளில் மஞ்சளும் உடலில் கருநீலமும் கொண்ட மலைகள் அவர்கள் இருவரையும் கண்டும் காணதாய் இருப்பதாக உணர்ந்து வெட்கி உடலைக் குறுக்கிக் கொண்டான். அவளும் அவன் எண்ணங்களை அறிந்தவள் போல நீரையள்ளி முகத்தில் தெறித்தும் வாயிலள்ளி பீச்சியும் விளையாடினாள். பொன் கதிர்கள் விலகி இருள் சூழ்ந்ததும் எந்த கணத்தில் என தெரியாத ஓர் கணத்தில் வானில் தாரகைகள் நிரம்பி சிமிட்டி அவர்களுக்கான விண் சமைத்தன. அவள் இருளிலும் அந்த பழம் போலவே ஒளிர்ந்தாள். கால்களுக்கடியில் பெரிய பல உருவ கூழாங்கற்கள் மேடு பள்ளங்களை உருவாக்கி அவனை சருக்கி விழ வைத்தன. அவள் அசையாமல் நதிக்குள் முளைத்த ஆணிவேர் ஆழம்வரை சென்ற மரமென அசையாமல் அங்கேயே நின்றாள். மெல்ல விழுந்து எழுந்து அவளருகில் செல்லலும்பொழுதுதான் தெரிந்தது நீரில் சலசலக்கும் சிரிப்பொலி எதற்கோ கொஞ்சி அனுமதி கொடுப்பதுபோல் இருப்பது. அவன் அவளருகில் சென்று புன்னகைக்க முயன்றான் ஆனால் வாய் கோணி இளிக்கவே முடிந்தது. அவள் புதிதாக ஒருவனை குளியலில் அரையாடையுடன் காணும் பாவனையின்றி சிரித்தாள். 


அவள் அவனருகில் கிசுகிசுக்கும் ஒலியில் "இங்க எதுக்கு வந்தது" என்றாள். 


அவன் குரல் திணறியது "இல்ல சும்மா ஃப்ரெண்ட்சோட வந்தோம். இ.பி ஆபிஸுல ஆள் பழக்கம் உண்டு" என்று ஒரு முறை வழிந்து சென்ற நீரில் மூழ்கினான். அதைப்பார்த்து அவள் வாய்விட்டு சிரித்தது காரணமில்லாமல் சிரிப்பதாக தோன்றியது. நீர் அவனை ஓர் உயிர் போல தழுவி தேற்றியது. உள்ளெ அவள் கால் விரல்கள் தனித்தனியாக பிரிவுகளுடன் தெளிவாக தெரிந்தன. அவ்விரல்கள் பெரியதொரு கல்லின் மேல் சுருங்கி மடிந்து இறுகி நின்றன. அதை தொட மனம் துடிக்கவும் என்னவோ தடுத்து நீரின் மேல் வந்தான். 


"உள்ள என்ன செஞ்சது" என்றாள் ஒருவித கிளர்ச்சியுடன். 


"நா… சும்மா மூச்சு பிடிச்சி பாத்தேன். எவ்வளவு நேரம் நிக்கலான்னு" என்று இளித்தான்.


"நான் நல்லா பிடிச்சி நிக்கும்" என்று பெருமையாக சொன்னாள். அக்கணம் அவள் சிறுமியாக தெரிந்ததை பின்பு பலமுறை நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அப்பொழுது அதனை அவன் கவனிக்கவேயில்லை. சொல்லப்போனால் இவை அனைத்துமே அவன் மீண்டும் எண்ணி எண்ணி உருவாக்கிக்கொண்டதாகக்கூட இருக்கலாம். 


மேகங்கள் முயங்கி இரண்டும் எழுப்பிய ஒலியில் வெண்ணிற கீற்றாக மின்னல்கள் அவர்கள் அருகில் நிலத்தை புணர்ந்தன. இருவரும் பயத்தில் நடுங்கினர். ஆனால் மழை பெய்யவில்லை. அவள் "பயந்துட்டேன்" என்றதும் தேற்றுவதைபோல வாயைக்குவித்து ஒண்ணுமில்லை என சைகையில் காட்டினான். அவளுக்கும் அது பயமில்லாமலாக்கியது என நம்பினான்.. 


அதற்கு அடுத்தநாள் அதே போல் அவனும் அவளும் காலம் மயங்கி இரவிற்கு வழிவிடும் நேரம் சந்தித்தனர். அவர்கள் நீரினுள் இருக்கையில் அவன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தடுக்கவில்லை. இருவரும் சிரித்துக்கொண்டனர். நீரில் விண்பார்த்து விழித்து கிடக்க மேகம் மூடி நிலம் நனைத்து பொசுங்கியது. நதியில் கலக்கும் முன் சில துளிகளை தங்களுக்குள் வாங்கிக்கொண்டு அதன் சுவை குளிர் அடி நாவில் பட சிலிர்த்து விழுங்கினர்.


பெருமழை நதியில் கலந்து அதை ஒருவிதமான தன்னிலை அற்றதாய் ஆக்கிக்கொண்டிருந்தது. அனைத்தும் மறைந்து மழையின் கனத்த கால்கள் மட்டுமே தெரிந்தன. அவன் கரைமேலிருக்கும் புற்கள்  மேல் சாய அவள் அவனை அணைத்து தழுவிக்கொண்டாள். நீர்க்கோடுகள் உடல்களில் வழிய இருவரும் கற்கள் உரசி உருண்டு முயங்கி அங்கு நடந்து முடிந்த மாயமொன்றை உணர்ந்து நிமிர்ந்து கிடந்து நீர்த்துளிகளை மீண்டும் விழுங்கி சிரிக்க ஆரம்பித்தனர். பெருக்கெடுத்த நதியில் ஒற்றை கூழாங்கல் உலகின் மற்ற அனைத்தின் ஒளியையும் தன்னுள் கொண்டும் தணிந்து ஒற்றைக்கண் என ஒளிர்ந்தது. அவளை , அந்த தருணத்தை , மழையை , குளிரை முதுகில் , குறுகுறுக்கும் புல் நுனியை அந்த கூழாங்கல்லாக கற்பனை செய்தான். அவன் மனம் எதையோ அடைந்ததாக நினைத்து பொங்கி ஓடிக்கொண்டிருந்த செந்நிற ஆற்று நீரைப்போல் ஓடிக்கொண்டிருந்தது


*


வாயின் ஓரமாய் வழிந்த கோளையை துடைத்துக்கொண்டு எழும்பும் போது இருள் பரவ ஆரம்பித்திருந்தது. வரிசையாக நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் தனிமையில் உறைந்து நிற்க அதன் காலடியில் நீண்டு கிடைந்த ஒற்றையடிப்பாதையில் அவன் நடந்தான். மேகம் இறங்கி கைகளால் அதனை பிடித்து உருட்டி சட்டைக்குள் பொதிந்து வைத்துவிடலாம் என்பதைப்போல் அந்த பாதை முழுவதும் நிறைந்து கிடந்தது. பள்ளத்தாக்கின் சரிவைக்கடந்து இறங்கியதும் கற்களற்ற நதி சிமெண்ட் பாளத்தின் மேல் அழுக்கடைந்து  தன் தடத்தை விட்டு உள்ளிறங்கி வேறுருகொண்டு மெலிந்த பாம்பென ஊர்ந்தது. அவன் முன்பு நிமிர்ந்து கிடந்த புற் கரையை கண்டுபிடிக்க முயன்று கிடைக்காமல் அதுபோன்ற ஒன்றை கண்டடைந்து படுத்துக்கொண்டு விண்ணை நோக்கினான். மேகங்கள் விலக அந்நிலமும் வெளியும் மாயங்களின்றி வெகு சாதாரணாமாக நீண்டு கிடந்தது. மலையுச்சிகள் பொருளற்ற சிமெண்ட் சிற்பங்களைப்போல காட்சியளித்தன. அவனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மீண்டும் வந்த வழிக்கே கிளம்ப ஆரம்பித்தான். 


மலையிறங்கி , வடசேரி சந்தைக்கருகில் ராஜேஷ் தியேட்டருக்குப்பின் இருந்த இடுங்கிய முடுக்கின் வழி நடக்கும் போது செருப்பின் வழி சாக்கடை தெறித்து அவன் பிடரியில் அடித்தது. முதலும் கடைசியுமாக இருந்த வீட்டின் கதவை தட்டவும். வெளுத்து மெலிந்த பெண் கையில் ஓர் குழந்தையை வைத்துக்கொண்டு வெளியே ஓட தயாராய் இருக்கும் சிறுவனை கால்களால் தடுத்தபடி நின்றாள். அவன் முகத்தில் வெறுமையை கண்டதும் அவளும் முகத்தில் அதை தரித்துக்கொண்டதும் சிறுவன் அவர்களை ஏமாற்றிவிட்டு காண்காணாமல் ஓடிவிட்டான். 


அன்றிரவு பிள்ளைகள் உறங்கியபின் வெம்மையான கட்டிலில் மின் விசிறிகள் அதிரும் ஒலிக்கடியில் புழுங்கிய நாற்றமெடுக்கும் அறையில் தன்னுடலை அவளுடலுடன் எதையோ செய்து எதையோ தேடிக்கண்டடையும் வேகத்தில் தேய்த்துக்கொண்டிருந்தான். உடல் தளர்ந்து வீழ்ந்ததும் இருவரும் எதிரெதிர்ப்பக்கமாய் திரும்பி படுத்துக்கொண்டனர். தினமும் செய்வதுபோல கண்களை மூடியபடி அந்த ஒளிர் கூழாங்கல்லை எண்ணங்களில் பரவ விட்டு மெல்ல குறியை வருடினான். காட்டின் குளிரின் நீரின் மழையின் முகமாய் அவள் முகம் திரண்டு விரிந்த கண்களில் கூழாங்கல்லின் ஒளி பிரதிபலித்தது. எல்லாம் முடிந்த பின் மனம் சற்றே நிம்மதியுடன் மகிழ்ந்திருந்ததில் சீரான முச்சுடன் உறங்கினான்.


ஆழ்ந்த உறக்கத்தில் முகத்தில் பட்ட மூச்சுக்காற்றால் கண்விழித்து எதிர்நோக்கியதில் தெரிந்த அவள் முகம் அவன் முன்பு நதியின் கரையில் கண்ட முகத்தில் சாயலின் மிச்சங்கள் அனைத்தையும் இழந்து வெறுமையுடன் ஒருபக்கமாய் சூம்பி கருத்துப்போன மாதுளை போலிருந்தது. அதன் பிறகான அன்றிரவில் உறக்கமின்றி விழிக்கும்படி “எங்கே அந்த கூழாங்கல்லை தவறவிட்டோம்” என்ற கேள்வி காதுக்குள் நுளைந்த சிறுபூச்சியென பெரும் சத்தம் கொடுத்து ஊர ஆரம்பித்தது. 

No comments:

Post a Comment